அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/306-383

302. கலைக்டர்களுக்கு மாஜிஸ்டிரேட் அதிகாரம் வேண்டாமோ

வேண்டும், வேண்டும், அஃதிருந்தே தீரவேண்டும். காரணமோவென்னில் இந்திய தேசச் சக்கிரவர்த்தியாயிருந்து செங்கோல் நடாத்திவருவோர் ஐரோப்பியதுரை மன்னரேயாகும். அவ்வதிகாரத்தைக் கொண்டு இந்தியாவில் வந்து கலைக்டர் அலுவலை நடத்துவோர் சக்கிரவர்த்தியின் அம்சங்களேயாவர். அதுகொண்டே அவர்கள் நடாத்தும் செயல்கள் யாவற்றின் முகப்பிலும் (இஸ்மாஜஸ்படிசர்விஸ்) என்னுங் குறிப்பிட்டே நடத்திவருகின்றார்கள்.

அத்தகைய அதிகாரத்தை கலைக்டர்களுக்கு இல்லாமல் எடுத்து விடுவதாயின் சக்கிரவர்த்தியின் அதிகாரம் இந்தியாவில் இல்லையென்பதற்கே ஒப்பாகும். அரசர்களுக்கு தெண்டிக்கும் அதிகாரமில்லாமற்போமாயின் வஞ்சக துஷ்டர்களுக்குக் கொண்டாட்டமும், ஆளுகை திண்டாட்டமாகவே முடியும். இஃதேது காரணத்தைக் கொண்டு இத்தேசத்திலுள்ள சிலர் கலைக்டர்களுக்குள்ள மாஜிஸ்டிரேட் அதிகாரத்தை எடுத்துவிட வேண்டுமென்னும் முயற்சியிலிருக்கின்றார்களோவென்பது விளங்கவில்லை. சில காலங்களுக்குமுன் (டிஸ்டிரிக்ட் மாஜிஸ்டிரேட்டா) இருந்தவர்கள் யாவரும் மிலிட்டேரி உத்தியோகக்கர்னல்களும் மேஜர்களுமாகவே இருந்து தங்கள் தங்கள் அதிகாரங்களை செலுத்தி வந்தார்கள் அதனால் அவர்களுடைய நீதியானது தன்னவர் அன்னியரென்னும் பட்சபாதமின்றியும் தயவு தாட்சண்யமின்றியும் மதசம்பந்தக்கோட்பாடுகளின்றியும் நடுநிலையில் நிறைவேற்றி வந்தபடியால் துஷ்டர்கள் கூட்டம் அடங்கியும் வஞ்சகர்கள் கூட்டம் ஒடிங்கியும் மற்றய தேசக்குடிகள் சுகவாழ்க்கையிலிருந்தார்கள். தற்காலமோ அவ்வகை மிலிட்டேரி உத்தியோகஸ்தர்களை நியமிக்காது இத்தேசக் குடிகளில் ஒவ்வொருவரை நியமிக்க ஆரம்பித்தது முதல் தன்மக்கள் தாட்சண்யம், இலாயர்கள் தாட்சண்யம், சாதி தாட்சண்யம், மத தாட்சண்யங்களால் துஷ்டர்கள் ஒடுங்காமலும், வஞ்சகர்கள் அடங்காமலும் பெருகி, கிராமங்கிராமங்களுக்கு மாஜிஸ்டிரேட்டுகள் வைக்கவேண்டிய கஷ்டம் மிகுதியாவதோடு நேராயக்குடிகளுக்குங் கஷ்டங்களுண்டாவதாக விளங்குகின்றது.

இவற்றிற்குப் பலமாக கலைக்டர்களுக்குள்ள மாஜிஸ்டிரேட் அதிகாரங்களையும் எடுத்துவிடுவதாயின் சகல குடிகளும் பல வகையாயக் துன்பங்களால் அல்லடைவார்களென்பதற்கு சொல்லத்தரமன்று. சில காலங்களுக்குமுன் தாசில்தாரர்களுக்கு மாஜிஸ்டிரேட் அதிகாரங் கொடுத்திருந்ததினால் கிராமக்குடிகள் யாவரும் பலவகையானத் துன்பங்களை அநுபவித்து சீர்கேடுற்று வந்தார்கள் என்பது சகலமக்களுமறிந்த விஷயமாக்கும். அவ்வகையானக் கேடுபாடுகளைக் கண்ணாறக்கண்டும் செவியாறக்கேட்டும் வந்த இச்சீர்திருத்தக்காரர்கள் தங்கள் கூட்டங்களைக் கூட்டி தாசில்தாரர்களுக்குள்ள மாஜிஸ்டிரேட் அதிகாரத்தை எடுத்து விடவேண்டுமென்று ஏதேனுமோர் வார்த்தைப் பேசியிருப்பார்களா. நீதியுங் கருணையும் நிறைந்த இராஜாங்கத்தோருக்கேனும் விளக்கியிருப்பார்களா. யாதுங்கிடையாவே. குடிகள் யாவரும் எத்தகையானத் துன்பங்களை அநுபவித்தாலும் அநுபவிக்கட்டும், தாசில்தாரர்களாயிருப்பவருள் பெரும்பாலோர் நம்மவர்கள் தானே அவர்கள் மட்டிலும் சுகமுறவாழ்ந்தால் போது மென்னுந் திருப்தியடைந்திருந்தார்கள் போலும். கிராமவாசிகளாகியக் குடிகளுக்கு மாஜிஸ்டிரேட் அதிகாரம் பெற்றுள்ள தாசில்தார்கள் இதுகாரும் அவ்வதிகாரத்திலிருந்திருப்பார்களாயின் கிராமக்குடிகள் யாவரும் அல்லோகல்லமுற்று சிதறி பல தேசங்களுக்கு ஓடிப்போவதுடன் உள்ளக் குடிகளது பெண்களின் கழுத்துகளில் கட்டித் தொங்கும் பொன்னினால் செய்துள்ள தாலிகள் யாவுமற்று மரத்தாலிகளைக் கட்டிக்கொண்டிருப்பார்கள். பிரிட்டிஷ் ராட்சிய பாரம் நீதியையும் கருணையையும் ஆதாரமாகக் கொண்டுளதால் கிராமக்குடிகள் படும் கஷ்டங்கள் அவர்களுக்கே தோன்றி தாசில்தாரர்களுக்குள்ள மாஜிஸ்டிரேட் அதிகாரங்களை அடியோடு எடுத்துவிட்டார்கள். அது கால முதல் கிராமக்குடிகள் சற்று சுகத்திலிருக்கின்றார்கள். இஃது சகலருக்கும் அநுபவமாகும். இக்கூட்டத்தோர் கூச்சலை ஆழ்ந்தாலோசிக்குங்கால் இத்தேசத்தோருக்கே கலைக்டர் உத்தியோகங் கொடுக்கலாமென்னும் உத்திரவு கொடுத்து விடுவார்களாயின், மாஜிஸ்டிரேட் அதிகாரமும் இருக்கவேண்டுமென்பார்கள். ஐரோப்பியர்களே இருக்கின்றபடியால் புலிக்குள்ள பல்லையும் நகங்களையும் பிடிங்கிவிடுவதுபோல கலைக்டர்களுக்குள்ள மாஜிஸ்டிரேட் அதிகாரத்தை எடுத்துவிடப் பார்க்கின்றார்கள். இவைகள் யாவையுங் கருணைதங்கிய ராஜாங்கத்தோர் தேற ஆலோசித்து சகல குடிகளும் முன்னேறி சகல சுகமும் அநுபவிக்கும் படியான வழிகளைக் திறந்து தங்களதிகாரமும் ஆளுகையுமே இத்தேசத்தில் நிலைபெறும் வழிவகைகளை செய்விப்பார்கள் என்று நம்புகிறோம்.

- 7:16; செப்டம்பர் 24, 1913 -