அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/307-383
303. இத்தேசத்தில் ஐரோப்பியர்களே கலைக்டர்களாயிருப்பது உத்தமமா? இத்தேசத்தோரே கலைக்டர்களாயிருப்பது உத்தமமா?
இத்தகையாய விசாரிணைகளை நமது பத்திரிகையில் உசாவி, விளக்கிவருங் காரியாதிகளைக் கண்ணுற்றுவரும் சிலர் தமிழன் பத்திரிக்கை இத்தேசத்தோருக்கு விரோதமாகவும் இராஜாங்கத்தோருக்கு சார்பாகவும் பேசுவதாக முறுமுறுக்கின்றார்களாம். அத்தகையோர் சுயநலப் புலிகளாய் இருப்பாரன்றி, பொதுநலப் பசுக்களாயிரார்கள் என்பதே திண்ணம்.
அதாவது யாம் எழுதிவரும் சங்கதிகள் யாவும் தேசக்குடிகளில் நூற்றிற்குத் தொண்ணூற்றியைந்து பேருக்கு சுகமும் ஐந்துபேருக்கு அருவெறுப்பாய அசுகமுமாக விளங்கும். அதனால் எமக்கோர் பங்கம் இன்மெயேயாம் “யதார்த்தவாதி வெகுஜனவிரோதி” என்னும் பழமொழிக் கிணங்க நியாயங்களை விளக்கில் அந்நியாயமுள்ளோர் தூற்றுவதும் நியாயமுள்ளோர் போற்றுவதும் இயல்பாம் ஆதலில் நாம் நியாயத்தையே கருதி சகல குடிகளின் சுகத்தை நாடியே நமதபிப்பிராயத்தை வரைந்து வருகின்றோம். அவற்றுள் இத்தேசத்துக் குடிகள் யாவரும் இராஜாங்க உத்தியோகத்திற்குப் பொருந்தியவர்களல்ல என்பதும் எமதபிப்பிராயமன்று, அவர்களுக்குள்ள சாதி சம்மந்தப்பிடிவாதமும் மதசம்மந்த வைராக்கியங்களுமே அவற்றிற்கு கேடாக முன்னிற்கின்றது.
இத்தேசத்துள்ள சாதிபேதமின்றியும் சமயபேதமின்றியும் மனிதர்களை மனிதர்களாக பாவித்து நீதி செலுத்தும் புண்ணிய புருஷர் நூற்றிற்கு ஒருவரோ இருவரோ இருப்பாரன்றி வேறில்லை. இதற்குப் பகரமாக தற்காலம் மைசூரில் திவானாக இருந்துவரும் பெரியோர் ஏழைக்குடிகளின் மீதேமிக்க இதக்கமுற்று அவர்கள் முன்னேற்றத்தையே கருதி மிக்க சீர்திருத்தங்களைச் செய்து வருகின்றார். அத்தகையப் புண்ணிய புருஷரைக்காணின் அவர்களது பாதசேவை செய்வதுடன் மேலும் மேலும் இராஜாங்க உத்தியோகம் உயரவேண்டுமென்றே கோறுவோம். அங்ஙனமின்றி நூறு குடிகள் கெட்டு பாழடைந்தாலும் அடையட்டும், நமது ஒரு குடி பிழைத்தால் போதுமென்னும் கருணையற்ற லோபிகள் மேலாய உத்தியோகங்களைப் பெறுவதாயின் அத்தேசத்திற்கும் தேசமக்களுக்குஞ் சீர்கேடே உண்டாகின்றது, அநுபவமுங் காட்சியுமாயுள்ளதால் பிரிட்டிஷ் ஆட்சியோரே அதிகார உத்தியோகங்களை நடாத்துவது நன்று, நன்று என்றே வரைய துணிவுற்றோம்.
அதாவது ஓர் டிஸ்டிரிக்டுக்கு கலைக்டராக வருவோர் இந்தியதேச சக்கிரவர்த்தியின் ஒர் அம்ஸமும் அந்த டிஸ்டிரிக்ட்டின் அரசனும் அவரேயாவர். ஆதலின் சக்கிரவர்த்தியின் சாதிபேதமற்றச் செயலும் சமயபேதமற்ற குணமும் தன்னவர் அன்னிய ரென்னும் பட்சபாதமற்ற நீதி முதலாக அக் கலைக்டர்களுக்கு இருத்தல் வேண்டும். இரண்டாவது அந்த டிஸ்டிரிக்டுக்கே அரசனாதலால் வல்லபம், தருமசிந்தை, விவேக விருத்தி, விடாமுயற்சி, அற்பநித்திரை, துணிவு, குடிகளது முன்னோக்கத்தைக் கருதி வரியிறைகொள்ளல், ஆகியச் செயல்களை உடைத்தானவர்களாயிருத்தல் வேண்டும். அத்தகைய குணமுஞ்செயலும் உள்ளோர் யாவரென்னில் ஐரோப்பியர்களே யாவர். அதாவது சக்கரவர்த்தி யாரைப்போல் அவர்களுக்குள் சாதி பேதமுங் கிடையாது மதபேதமுங் கிடையாது தன்னவரன்னிரென்னும் பாரபட்சமுங் கிடையாது. குடிகள் வாழுமிடத்தில் புலிகள் வந்து இம்சிக்கின்றது, யானைகள் வந்து அதஞ்செய்கின்றதென்று கேழ்விப்பட்டவுடன் அவ்விடஞ்சென்று அவைகளை விரட்டிக் குடிகளது பயத்தை நீக்கி ரட்சிப்பார்கள், குடிகளுக்கு வெள்ளங்களாலேனும். அக்கினி தகிப்பாலேனும், பஞ்சத்தாலேனும் துன்பமுண்டாகி வருந்துவார்களாயின், இராஜாங்கப்பணவுதவி வருவதற்குமுன் தங்கள் பணங்களை விரயஞ்செய்து அவர்கள் பசியை ஆற்றிரட்சிப்பதுடன் தங்கள் பிராணனை ஓர் பொருளாகக் கருதாது நீரினின்றும் நெருப்பினின்றும் குடிகளைக் காத்து அவர்களுக்கு நேரிடும் ஆபத்தை விலக்குவார்கள். தாங்கள் தேர்ந்துள்ள விவேக விருத்தியில் தேசக்குடிகளும் முயன்று முன்னேறச் செய்விப்பார்கள். குடிகளுக்கு நீர் வசதி, நிலவசதி வேண்டுமாயின் அவற்றை சீர்திருத்தி குடிகளுக்கு சுகமளிக்கும் வரையில் அதே ஊக்கத்தினின்று பாடுபடுவார்கள். அயர்ந்த நித்திரைவரினும் சற்றுரங்கி தேச சீர்திருத்தத்தின் பேரிலேயே விழித்திருப்பார்கள். குடிகளுக்கு வேணசுகம் பெற்றபோதே வரியிறைகளை வசூலிப்பாரன்றி குடிகளுக்கு ஏதொரு பலனுங் கிடையாவிட்டால் அவர்களைத் துன்பப்படுத்தமாட்டார்கள். ஆதலின் இத்தகைய குணநலமிகுத்த ஐரோப்பியர்களே கலைக்டர்களாக வருவார்களாயின் தேசஞ் சீர்பெறுவதுடன் தேசமக்களுஞ் சிறப்புற்று ஆனந்த நிலையை அடைவார்கள்.
இத்தேசத்தோருக்கு கலைக்டர் உத்தியோகத்தைக் கொடுப்பதாயின் சக்கிரவர்த்திக்கு ஒவ்வா சாதிபேதமும் உண்டு, மதபேதமும் உண்டு, பாரபட்சமும் உண்டு. இஃதுள்ளவர்களே அவ்வுத்தியோகத்திற்கு உரியவர்களாகார்கள். மற்றும் வல்லபத்தை நோக்கினாலோ வாயற்படியண்டை ஓர் பூனையாயினும், நாயேயாயினும் வந்து விட்டால் கதவை சாத்தடி, கதவை சாத்தடி, என்போர்கள் ஊருக்குள் புலி வந்துவிட்டது, யானை வந்துவிட்டது என்றால் கதவையுந் திறந்து வெளிவருவார்களோ, இல்லை. வெள்ளப்பெருக்கால் குடிகள் யாவரும் வீடுவாசலற்று புசிப்பின்றி கலைக்டர் வீட்டை நாடி வந்துவிடுவார்களாயின் அவர்கள் ஆயாசத்தையும் பசியையும் அறிந்து அவர்களுக்கு உதவி புரிவார்களோ, அது ஜெநநத்திலேயே கிடையாது. வந்தவர்களை தன் வீட்டண்டை வெள்ளப் பெருக்கெடுக்காது மண்ணையுங் கல்லையும் வாரி கொட்டுங்கோளென்னும் வேலை வாங்கிக் கொள்ளுவார்கள். வித்தைகளிலோ தாங்கள் கற்றுள்ள குறுக்குபூச்சு வித்தை, நெடுக்குப்பூச்சு வித்தை, கொட்டை கட்டும் வித்தை, பட்டைட்பூசும் வித்தை, அரிமந்திர வித்தை, ஆச்சாரவித்தைகளையே மேலும் மேலும் பெருக்கி நிற்பார்களன்றி தேச சீர்திருத்தத்திற்கும் மக்கள் சுகசீவன விருத்திக்காய வித்தைகளையவர்களறிவே அறியார்கள். நெருப்புப் பற்றிக்கொண்டு வீடுகள் யாவுமெரிந்துக் கொண்டு வருகின்றதென்னில் தங்கள் வீட்டண்டை நெருப்பு வராமற் பார்த்துக் கொள்ளுவார்களன்றி எரியும் வீட்டண்டை சென்று அவைகளை அவித்து குடிகளைக் காக்க முயலுமாட்டார்கள். வெள்ளப் பெருக்கால் விவசாய மக்களை அடித்துப் போகிறதென்றால், அவனென்ன சாதி, இவனென்ன சாதியெனக் கருணையற்று நிற்பார்களன்றி, பரிதவித்து அவர்களை எடுக்கும் முயற்சி செய்யமாட்டார்கள். அதன் அநுபவம் யாதென்னிலோ, விவசாயக் குடிகளை தாழ்ந்த சாதிகளென விடுத்து நல்லத் தண்ணீரை மொண்டு குடிக்க விடடாமலும், வண்ணாரை வஸ்திரமெடுக்க விடாமலும், அம்மட்டர்களை சவரஞ் செய்ய விடாமலும் கொல்லாமற் கொன்று வருகின்றவர்களாதலால் விவசாயிகள் வீடுகளையும் மக்களையும் வெள்ளமடித்துப் போகிறதை கண்ணினாற் காணினும் போகட்டும், போகட்டும் என்றிருப்பார்களன்றி அவர்களை எடுக்க முயலவே மாட்டார்கள். மற்றும் இவர்களது கேடுபாடுகளையும் கருணையற்ற செயல்களையுமுற்றும் வரைவோமாயின் வீணே விரியுமென்றஞ்சி இத்தேசத்தோருக்குக் கலைக்டர் உத்தியோகங் கொடுக்கவுமாகாது, அவர்களுக்கஃது பொருந்தவும் பொருந்தாதென்று துணிந்து கூறினோம். ஏன் கொடுக்கலாகாது ஏனவை பொருந்தாதென்று வித்தேசத்தோர் யாவராயினும் முநிந்து கேட்க வருவாராயின் முற்றும் உரைக்கக் காத்துள்ளோமாக.
- 7:17: அக்டோபர் 1, 1913 -