அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/311-383

307. கனந்தங்கிய காங்கிரஸ் கமிட்டியோருக்கும் மகாஜன சபையோருக்கும் விண்ணப்பம்

தற்காலங் காங்கிரஸ் கமிட்டியோரென்றும், மகாஜன சபையோரென்றும் வருஷா வருஷம் கூடிவருங் கூட்டத்தோருள் காங்கிரஸ் கமிட்டியோர் இராஜாங்க சம்பந்தமாய விஷயங்களைப் பேசுவோர்ரென்றும் மகாஜன சபையோர் உள் சீர்திருத்தங்களைப் பேசுவோரென்றுங் கூறுவர்.

இச்சீர்திருத்தக்காரருள் பெரும்பாலோர் மகாஜன சபையிலுள்ளோர் காங்கிரஸ் கமிட்டியிலும் காங்கிரஸ் கமிட்டியிலுள்ளோர் மகாஜனசபையிலும் சேர்ந்து உழைப்பாவர்களா யிருக்கின்றார்களன்றி வேறில்லை அதலின் எப்போது இராஜாங்க சீர்திருத்தத்தை நாடினரோ அப்போதே குடிகளின் சீர்திருத்தத்தை நாடவேண்டியதேயாம். குடிகளின் சீர்திருத்தத்தை முந்தி ஆலோசியாது இராஜாங்க சீர்திருத்தத்தை ஆலோசிப்பதால் யாது பயன். தேசம் சிறப்படையுமா, தேசமக்கள் சீர்பெறுவார்களா. தேசமக்கள் சீர் பெறுவார்களாயின் தேசஞ் சிறப்படையும் தேசஞ் சிறப்படையுமாயின் இராஜாங்கத்தோருந் தங்கட் குடிகளின் முன்னேற்றத்தைக் கண்டானந்தித்து கேட்ட விஷயங்கள் யாவையுங் கிருபா நோக்கத்தோடு அளிப்பார்கள். அங்ஙனமின்றி உள் சீர்திருத்த ஊழலும் குடிகளுக்குள்ள சாதிபேத மதபேதக் கோணலும் தேசத்துள் விவசாய முயற்சி குன்றி பஞ்சமே பெருகி வரும் தீச்சலுமாயிருக்குமாயின் சீர்திருத்தத்தின் முயற்சியும் பயனும் என்னவாம். ஏதோ கிஞ்சித்து ஆங்கிலம் பயின்றவர்களெல்லோரும் ஒன்றுகூடிக் கொண்டு தேச சீர்திருத்தத்தையும் இராஜாங்க சட்ட திட்டங்களையும் ஆலோசிக்க முயன்று பாடு படுவோர்களுக்கு இத்தேசத்தில் ஏற்பட்டுள்ள சாதிபேதம் மெய்யாயதா பொய்யாயதா வென்று ஆலோசிக்கக் காலம் நேரமில்லையோ. இராஜாங்கத்தில் மட்டிலும் அது கோணல் இது கோணலென்று கூறுவதற்கு முயற்சியுள்ளவர்கள் சாதிபேதத்திலுண்டாகும் பலக்கோணல்களை பகுத்தறிவதற்கு பாகமில்லையோ. ஐரோப்பியர்களுக்குள்ள சுகங்களை இந்துக்களுமடைய வேண்டுமென்று முயல்வோருக்கு பாப்பானுக்குள்ள சுகம் பறையனும் அடையவேண்டுமென்னுங் கருணையில்லையோ. ஐரோப்பியரை அடுத்துள்ள சில குடிகள் சுகம் பெற்றிருப்பினும் இந்துக்களை அடுத்துள்ள ஆறு கோடி மக்கள் இருக்க இடத்திற்கும் படுக்கப் பாயிற்கும் குடிக்கக் கூழுக்குமில்லாமல் பாடுபட்டு எலும்புந்தோலுமாய் கோலும் குடுவையும் ஏந்தி நிற்பதை இச்சீர்திருத்தக் கூட்டத்தார் கண்டதில்லையோ. சுத்த நீரை மொண்டு குடிக்கவிடாமலும், வண்ணார்களை வஸ்திரம் எடுக்கவிடாமலும், அம்மட்டர்களை சவரஞ்செய்ய விடாமலுஞ்செய்து வயிற்றிற்குப் போதுமான கஞ்சி வார்க்காமல் வதைத்து எலும்புந் தோலுமாக அசுத்தமடைந்திருக்கும் படியாக செய்துவிட்டு அன்னிய தேசத்தோரைக் கண்டவுடன் அவர்கள் தீண்டப்படாத சாதியார் அசுத்தமுடையவர்களென்று தாழ்த்தாமல் தாழ்த்தியும் கொல்லாமற் கொன்றும் வருவதை இச்சீர்திருத்தக்காரர்கள் அறியார்களோ. சவுத் ஆபிரிக்காவிலுள்ள வெள்ளையர்கள் கறுப்பர்களை அதிகத் துன்புறுத்துகிறார்களென்றுக் கூட்டங்கள் கூடிப் பேசுவதும், பணங்கள் சேகரித்தனுப்ப முயல்வதும் கருணினையா அன்றேல் வருணனையா. கருணினையாயின் இந்திய தேசத்தில் வாழுங் கறுப்பர்களை கறுப்பர்களே முன்னேறவிடாமல் பாழ்படுத்தி வருஞ் செய்கைகளைக் கண்ணினாற் கண்டும் செவியாரக் கேட்டும் இவர்களை சீர்திருத்தக் கருணையில்லையோ, தூர தேசத்திலுள்ளக் கறுப்பர்களுக்கு பரிந்து பரிந்து பேசுகிறவர்கள் சுயதேசத்திலுள்ளக் கறுப்பர்களுக்காகப் பரிந்து பேச மனமில்லையோ. கருணைமிகுந்த சீர்திருத்தக்காரர்களுக்கு தன்னவர் அன்னியரென்னும் பட்சபாதமும் உண்டோ. அவ்வகையுண்டாயின் அவர்கள் பொதுவாய் சீர்திருத்தக்காரர்களாவர்களோ. சாதியும் இருத்தல் வேண்டும் சாதித் தலைவர்களாகவும் விளங்கல் வேண்டும், தங்களது வஞ்சனத்தாலும் பொறாமெயாலும் தாழ்ந்த சாதியோரென்று தாழ்த்தப்பட்டுள்ளோர் தலையெடுக்காமல் நாசமடைய வேண்டும், ஆனால் நாங்களும் ஒரு சீர்திருத்தக்காரரெனக் கூச்சலிட்டு தங்கள் சுகத்தைப்பார்த்துக் கொள்ளல் வேண்டும் என்பதூஉங் கூட்டத்தார் கருத்தோ. அவ்வகையாயின் எச்சீர்திருத்தம் நிலைபெறும். ஏழைகள் அழுதக் கண்ணீர் கூறியவாளுக்கு ஒக்குமென்னும் முது மொழித்தவறுமோ, ஒருக்காலுந் தவறாவாம். அத்தகைய காலம் வருவதற்கு முன் கனந்தங்கிய காங்கிரஸ் கமிட்டியாரும் மகாஜன சபையோரும் முயன்று தாழ்த்தப்பட்டுள்ளப் பூர்வக்குடிகளை சீர்திருத்தல் வேண்டும் அவற்றுள் தென்னிந்திய ஜமீன்தாரர்களிடத்தும் மிட்டாதாரர்களிடத்தும் மிராசுதார்களிடத்தும் ஏனைய சாதித்தலைவர்களிடத்தும் பண்ணைத் தொழிற் செய்யும் உழைப்பாளிக்கு நாளொன்றுக்கு என்னக்கூலிக்கொடுக்கிறார்கள் எத்தனை மணிநேரம் வேலை செய்கின்றார்களென்றும் விசாரித்து அவர்கள் கஷ்டத்தை நீக்கல் வேண்டும்.

நகரங்களிலுள்ளக் குளங்களிலுங் குட்டைகளிலும் குழாய்களிலும் பாப்பானும் பறையனும் சேர்ந்து நீர்மொள்ளவும் குளிக்கவும் குடிக்கவும் ஏதுக்களிருக்க நாட்டுகளிலுள்ளப் பொதுவாகக் குளங்களிலுங் கிணறுகளிலும் நீர் மொண்டு குடிக்கவும் குளிக்கவும் ஏதுக்களில்லாமற் போவதென்பதை விசாரித்து அவர்களை சுகமடையச் செய்யவும் முயல்வதுடன் சீர்திருத்தத்தில் விவசாயத்திற்கும் வித்தைக்கும் உழைப்பாளிகள் யாவரோ அவர்களைக் கண்டறிந்து முந்த சீர்திருத்தும்படி வேண்டுகிறோம்.

- 7:22; நவம்பர் 5, 1913 -