அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/324-383

320. வித்தை விருத்தி புத்தி விருத்தியால் தேசம் சீர்பெறுமா? சாதி விருத்தி மதவிருத்தியால் தேசம் சீர்பெறுமா?

இவற்றிற்கு உலகின் கண்ணுள்ள சகலதேச விருத்திகளையும் சகல தேச மக்களின் முன்னேற்றங்களையும் அவரவர்கள் மிக்க தனவந்தராகி அந்தந்த தேசத்தோர்களுக்கு, உபகாரிகளாக விளங்குவதையும் ஆதியாய் உசாவுவோமாயின் வித்தைபுத்தியின் விருத்தியால் தேசம்சீர் பெறுமா சாதி மத விருத்தியால் தேசம் சீர்பெறுமா என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கும்.

அதாவது ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சைனா, ஜப்பான் முதலிய தேசங்களின் சிறப்பையும் தேசமக்கள் முன்னேற்றங்களையும் முதலாவதாராய்வோம். ஒற்றுமெக்கேட்டிற்கே மூலமாக விளங்கும் கசிமல நாற்றத்திற்கு ஒப்பாய சாதி விருத்தியும், சோம்பேறி சோற்றைத் தின்று மடிவதற்கே மூலமாகப் பொய் சாமிகளையும் பொய் வேதங்களையும், பொய் வேதாந்தங்களையும், பொய் புராணங்களையும் பிதற்றித்திரியும் மதவிருத்திகளும் அவர்களிடம் கிடையாவாம். உள்ளவை யாதெனில் மனித கூட்டங்களை மனித கூட்டங்களாக பாவிக்கும் நீதியுங் கருணையும் அமைந்துள்ளதுடன் காலையில் எழுந்திருக்கும் போதே வித்தியாவிருத்தியில் தங்கள் தங்கள் மனதை செலுத்தி புத்தியின் விருத்தியை விசாலப்படுத்தி வருகின்றார்கள். அதன் அனுபவத்தை அவர்கள் செய்துவரும் வித்தையின் விருத்திகளினால் தெள்ளறத் தெரிந்துக் கொள்ளலாம். முதலாவது இஸ்டீமர்களென்னும் கப்பல்களின் விருத்தியை ஆலோசிப்போமாயின் எத்தனையோ கணக்கற்ற மனுமக்கள் தூரதேசஞ் செல்லவும் வியாபார விருத்தி உத்தியோக விருத்திக்களைச் செய்யவும் திரவிய விருத்தி அடையவுமாகின்றார்கள். இரயில்வேக்களெனும் இருப்பு பாதை வண்டிகளை ஆலோசிக்கில் எத்தனையோ கணக்கற்ற மனுக்கள் தேசசஞ்சாரஞ் செய்யவும் வியாபார விருத்திகளை செய்யவும் ஒரு மாதத்திய இரண்டு மாதத்திய தூரதேச பிரையாணங்களை ஒருநாள் இரண்டு நாளைக்குள் சேரவுமாகிய மேலாய் சுகங்களை அளித்து வருகின்றது.

டெல்லகிராப்பென்னும் தந்தி செய்தியின் வித்தை விருத்தியோ ஆயிரகாதமுள்ள தேசச்செய்தியை அரைமணி நேரம் ஒருமணி நேரத்தில் அறிந்துக் கொள்ளக்கூடியதாய் இருக்கின்றது. மற்றும் போட்டோகிராப், லெத்தகிராப், போனகிராப் முதலிய வித்தைகளும் இன்னும் அனந்தமாய் அரிய வித்தைகளை மேலும் மேலுங் கண்டுபிடித்து நாளுக்குநாள் வித்தியா விருத்தியையும் புத்தியின் விருத்தியையே வளர்த்து வருகின்றார்கள்.

அவ்வகையாய வித்தை விருத்தி புத்தி விருத்தியை செய்துவரும் விவேகிகளது கம்பனிகளுக்குப் பொருளுதவி செய்யும் புண்ணிய புருஷர்களும் முயன்று பொருளுதவி செய்வதில் வித்தியா விருத்தியோர் மேலாய தனசம்பத்தை அடைவதுடன் அவர்களுக்கு பணவுதவி செய்யும் பெரியோர்களோ மேலும் மேலுந் தன்சம்பத்தையடைந்து மேடமாளிகைக் கூட கோபுரங்களைக்கட்டி கோட்டீஸ்வரரென வழங்கப்பெறுவதுடன் அவர்கள் மரிக்குங்கால் அவர்கள் தேடியப் பொருளை வித்தியாபோதக சாலைகளுக்கும் வைத்தியசாலைகளுக்கும் எழுதிவைத்து அதேதேச மக்களை மேலும் மேலும் சீர்பெறச் செய்து வருகின்றார்கள். அத்தகைய வித்தை புத்திமிகுந்த மேன்மக்களால் நடத்திவரும் இராட்சியபார அரசாட்சியோ நீதியும் நெறியுங் கருணையுங் கொண்டு நிறைவேறி வருகின்றது. அதனால் அவிவேக மிகுத்தக் குடும்பத்தோரும் சுகச்சீர் பெற்று நல்வாழ்க்கை அடைகின்றார்கள். இவைகளே வித்தை புத்தியால் உண்டாய பயன்களென்னப்படும்.

இனி சாதிபேத விருத்தியாலும் மதபேத விருத்தியாலும் உண்டாம் பயனை ஆராய்வோமாக. இவற்றுள் சாதிபேத விருத்தியோ தங்கள் தங்கள் சுயநலத்தையும் மேம்பாடையுங் கருதி ஏற்படுத்திக் கொண்ட நூதனச் செயல்களாகும். இதனால் தேசமும் தேசமக்களும் சீர்கெட்டுவரும் ஒவ்வோர் விஷயங்களை விளக்குவதாயின் உலகமக்களே நகைப்புறுவதற்கு ஏதுண்டாகிப்போம். இச்சாதிபேதமாயக் கட்டுக்கதைகளும் அதன் செயல்களும் தென்னிந்தியாவில் மட்டும் விருத்தியேயன்றி உலகெங்குங்கிடையாவாம்.

இச்சாதிபேத விருத்தியே தென்னிந்திய விவசாய விருத்திக்கு முதற்கேடாயிற்று, வைத்திய விருத்திக்கு இரண்டாங் கேடாயிற்று, வித்தியா விருத்திக்கு மூன்றாங்கேடாயிற்று, ஒற்றுமெ விருத்திக்கு நான்காங் கேடாயிற்று. மற்றும் விருத்தி கேடுகளை அவரவர்களே உணர்ந்துக் கொள்ளலாம். மத விருத்தியோ அவரவர்கள் சுயப்பிரயோசனங்களுக்காய பொய் சாமிகளையும் பொய் வேதங்களையும் பொய் வேதாந்தங்களையும் பொய்ப் புராணங்களையும் அவரவர் தேவப்பெயர்களுக்குத் தக்கவாறு எழுதி வைத்துக்கொண்டு மதக்கடைகளை பரப்பி அதனால் வயிறு பிழைக்கும் பெருஞ்சோம்பேறிகளே மலியும் விருத்தி பெற்று நாளுக்குநாள் தென்னிந்தியம் சீர்கெட்டுவருவதுடன் மக்களும் அறிவுமயங்கி பாழடைந்து போகின்றார்கள்.

இத்தகைய வித்தையும் புத்தியுமற்றதேசத்தோருக்கு சுயராட்சியமளித்து விடுவதாயின் தேசமும் தேச மக்களும் என்ன சீர்கெட்டுப் போவார்களென்பதை விவேகிகளே தெரிந்துக்கொள்ளுவார்கள்.

- 7:42; மார்ச் 25, 1914 -