அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/325-383

321. உள்சீர்திருத்தங்களை வரையறுத்துச் செய்ய வகையற்றக் கூட்டத்தோர் இராஜாங்க சீர்திருத்தத்திற்குச் செல்லுவது அழகாமோ?

ஓர் கிராம அதிகாரி வாசஞ்செய்யும் வீதிகளிற் குப்பை கூளங்கள் நிறைந்திருக்கவும், மல மூத்திராதிகள் அங்கங்கு எடுபடாமல் நிற்கவும், குளத்து நீர் குட்டை நீர்கள் யாவற்றிலும் பட்சிகளின் எச்சம், மனுக்களின் மலம், உதிர்சருகுகள் படிந்திருக்கவும், அக்கால் மழை பெய்துவிடுமாயின் நீர் புரண்டு வீதிகளில் நிறம்பவும் அதன் வசதியான போக்கின்றி புரண்டோடு நீருடன், மல மூத்திரங்களுடன், குப்பைக் கூளங்களும் புரண்டு வீடுகளில் நுழையவும் குடிகள் யாவரும் துற்கந்தங்களால் பீடிக்கப்பட்டு அல்லோகல்லோமடையவுமாய வாழ்க்கையில் விடுத்துள்ள கிராம அதிகாரியானவனை ஓர் தேசத்திற்கே அதிகாரியாகவும் சுகாதாரத் தலைவனாகவும் நியமிப்பதாயின் அத்தேசமும் தேசமக்களும் என்ன சீர்கேட்டை அடைவார்கள் என்பதை சொல்ல வேண்டியதில்லை. ஏனென்பீரேல் ஓர் சொற்பகிராமத்தை சீர் திருத்தியாளுவதற்கு வழிவகையற்ற கிராமதிகாரி ஓர் தேசத்தை சீர்திருத்த இயலாதென்பதே திண்ணம்.

அவைபோல் தங்கள் தங்கள் குடும்பங்களையே சரிவர சீர்திருத்தி சுகாதாரமளிக்க வழிவகை அறியாதவர்களும் அவர்களை அடக்கியாளத் திடமற்றவர்களுமானோர் பெருங்கூட்டங்களைக் கூடிக்கொண்டு இராஜாங்க சீர்திருத்தத்தில் முயல்வது வீணேயாம். அதாவது ஐந்து வயது முதல் முப்பது வயதளவும் விதைவையாயுள்ளப் பெண்களை மறுவிவாகஞ் செய்யவிடாது வீடுகள் தோரும் அவர்கள் கண்கலங்கி உண்ண உணவும் உடுக்கவுடையும் சரிவரக்கொள்ளாது தங்களை ஒத்தப்பெண்கள் சுகவாழ்க்கையுற்று ஆனந்தத்திலிருப்பதைக் கண்டு மீளாக் கவலையுற்றிடியவும் தங்களால் அடக்கொணா இச்சையால் பரபுருஷரை இச்சித்துப்பிள்ளை வேறுண்டாகிக் குடும்பத்தோருக்கு பயந்து அவற்றைக் கொல்லவும் அவற்றை அதிகாரிகள் அறிந்து பலரறிய வெளிக்கு வந்துவிட்ட பெற்றோர் பிறந்தோர் உற்றாருரவினர் யாவரும் நாணமுற்று திகைக்கவும் ஆவலுடனீன்று சீராட்டி தாராட்டி ஆடையாபரணம் பூட்டி அன்புபாராட்டி வளர்த்தப் பெண் குழந்தைகள் அவதியுற்று நிற்பதைக்காண்போர் சகலருந்துக்கிக்க சாதிகட்டு ஜமாத்துக்கட்டு சாஸ்திரக்கட்டு சமயக்கட்டென்னும் பாழுங்குழியில் வீழ்ந்து பெண்மணிகளை பரிதவிக்க விட்டிருக்குங் கூட்டத்தோர் தங்களுக்குள்ள உட்சீர்திருத்தக் கேடுபாடுகளை ஆலோசியாது விட்டு இராஜாங்க சீர்திருத்தக் கூட்டங்கள் கூடுவதும் படாடம்பங் காட்டுவதும் படித்த இங்கிலீஷை பரக்கப் பரக்கப் பேசுவதுமாய முயற்சிகளேனோ, விளங்கவில்லை. வீடுகள்தோருங் கைம்பெண்களாய சிறுமிகள் கண்கலங்கி கவலையுற்றிடிய அவர்க்காய ஆனந்த நிலையைத் தேட முயலாதவர்கள் இராஜாங்க சுகத்தை நாடுவது வீணேயாம். சீர்திருத்தக் கூட்டத்தோர் வேண்டிய முயற்சி செய்து விதவா விவாகத்தை முடிக்கும் வழிகளைத் தேடியும் குடிகள் யாவரும் ஒத்து வருவதில்லை என்பாராயின் குடிகள் பெருந்தொகையினரும் இக்கூட்டத்தோர் சிறுந்தொகையினரும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்குகின்றது. அவரவர்கள் உள் சீர்திருத்தங்களுக்கே உட்படாத பெருந்தொகையாயக் குடிகள் இச்சிறுந் தொகைக் கூட்டத்தோருக்கு இராஜாங்க சட்ட சீர்திருத்தங்களைச் செய்யுங்கோளென்னும் அதிகாரங்களைக் கொடுத்திருப்பரோ, இல்லை. நாலைந்து வாசித்தவர்கள் முயன்று நானூறு வைந்நூறு பெயரைச் சேர்த்துக் கொண்டு வீண்பிரளி செய்து வருவதாக விளக்குகின்றதேயன்றி பல குடிகளின் சம்மந்தமல்லவென்பது இவர்கள் உள்சீர்திருத்த ஊழல்களாலேயே விளங்குகின்றதன்றோ. கலியாணஞ் செய்து விதைவைகளாயுள்ள இலட்சக் கணக்கானப் பெண்களின் கண்ணீர்வடியும் கனக்குறைவு ஒருபுறமிருக்க கலியாணஞ் செய்யாப் பெண்களின் பரிதாப மரணங்களை என்னென்று கூறுவாம். அந்தோ ஒரு பொண்ணைக் கலியாணஞ் செய்யவேண்டுமானால் பெற்றோர் பெண்ணையுங் கொடுத்து பணத்தையும் வெகுவாகக் கொடுக்க வேண்டுமென்று விதியுண்டாமே, ஈதென்ன மதியோ, அன்று பேராசை சதியோ விளங்கவில்லை. உலகத்தில் பெண்ணைப் பெற்றோரும் பிள்ளையைப் பெற்றோரும் அவர்கள் சுகவாழ்க்கையைக் கருதுவதே அழகன்றி பெண்ணைக் கொடுத்து பணத்தையுங் கொடுக்க வேண்டுமென்பது அழகாமோ. உள்ளவன் கொடுத்து விடுகிறான் இல்லாதவனோ அவன் பெண்கள் யாவரையும் பரிதவிக்க விடுவதுடன் நியமிக்கப்பட்டவன் அக்கினிக்கிரையாவது அநுபவமுங் காட்சியன்றோ. இத்தகைய உள் சீர்திருத்தக் கேடுபாடுகளை அகற்றி சுகவழிக்குக் கொண்டுவரவேண்டியது வாசித்துள்ளக் கனவான்களின் செயலன்றோ. தேசத்துப் பெண்மக்களின் பெருங் கேடுபாடுகளை அகற்றி மனைகள் தோரும் மகிழ்வாழ்க்கையாம் உள் சீர்திருத்தஞ் செய்ய வழிற்றவர்களும் வகையற்றவர்களும் ஒற்றுமெற்றவர்களும் செயலற்ற வருமாவோர் இராஜாங்க சீர்திருத்தங்களைச் செய்ய அருகராரோ, ஒருக்காலு மாகாரென்பதே திண்ணம்.

இத்தேசத்துப் பெரும்பாலோரின் வித்தியாவிருத்தியும் புத்தியின் விருத்தியும் யாதென்னிலோ பெருஞ்சோம்பேறிகளாய் டாலருக்கும் இடுக்கண் புரிந்து பிச்சையிரந்துண்போரைப் பெரியசாதிகளென்றும் பூமியை உழுது பண்படுத்தி தானிய விருத்திச்செய்து சகலருக்கும் உபகாரிகளாக விளங்குவோரை சிறிய சாதிகளென்று வகுத்துக்கூறி வல்லபம் பேசித்திரிவதே வித்தியாவிருத்தியும் விவேக விருத்தியுமாதலின் அவர்களுக்கு உள் சீர்திருத்தமீதீதென்றும், இராஜாங்க சீர்திருத்த மீதீதென்றும் விளங்குமோ, ஏதும் விளங்காவாம். ஆகலின் உள் சீர்திருத்தங்களை சரிவர நோக்காதோர் இராஜாங்க சீர்திருத்தங்களை நாடி நிற்பது அழகன்று என்றே துணிந்து கூறுவோம்.

- 7:43; ஏப்ரல் 1, 1914 -