அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/328-383
324. கருணைதங்கிய இராஜாங்கத்தார் மோட்டார் விபத்துக்களை நீக்கி ஆதரித்தல் வேண்டும்
இச்சென்னையின்கண் வாழும் ஐரோப்பிய துரைமக்கள் இரண்டு பக்கமும் வீடுகளடர்ந்துள்ள வீதிகளில் தங்கள் குதிரை வண்டிகளிலேறி வீதிவலம் போகுங்கால் வண்டிகளை மெதுவிலோட்டச் சொல்லுவதுமன்றி தங்கட் குதிரைக்காரன் ஒருவனை இறங்கி முன்னோடச்செய்யும் வழக்கத்தை நாளதுவரையில் காண்கின்றோம். அவ்வகையாக ஏன் ஓடச்செய்கின்றார்கள் என்னில் இரண்டுபக்கம் வீடுகள் நிறைந்துள்ள வழியில் ஒரு வீட்டை விட்டு மறுவீட்டுக்கு சிறுபிள்ளைகள் ஓடுவதும் ஆடுவதும் இயல்பாம். பெரியோர்களில் தள்ளாடு விருத்தாப்பியரும் கண்பார்வையற்றவர்களும் காது கேளாதவர்களும், பிணியாளர்களும் அவ்வீதியில் நடப்பதியல்பாம். அவற்றைக் கண்டு தெரிந்துள்ள துரைமக்கள் தங்கள் வண்டிகளால் அத்தகைய மனுக்களுக்கு ஏதேனும் ஆபத்துண்டாமென்று எண்ணியே முன் ஜாக்கிரதையுடன் உலாவி வருகின்றார்கள். அத்தகைய அன்புங் கருணையும் இத்தேசப் பிரபுக்களுக்குக் கனவிலுங் கிடையாவாம். மற்றும் ஐரோப்பியருக்குள்ள தேகதிடமும் மனோதிடமும் சமய ஜாக்கிரதையும் இத்தேசத்தோருக்குக் கிடையாது. இதுகொண்டு மோட்டார்கார் விஷயத்தை சற்று ஆலோசிக்க வேண்டியதேயாம் மனிதன் கைக்குள் அடக்கியாளக்கூடிய மாட்டுவண்டியேனுங் குதிரை வண்டியேனும் மிரண்டோட வாரம்பிக்குமாயின் ஒட்டுவோன் அதை அடக்கியாள்வதற்கு இயலாது அவன் துன்பத்தை அடைவதன்றி எதிரில் வரும் மனுக்கள் சீவராசிகளையுந் துன்பத்திற்குள்ளாக்கி விடுகின்றான். மாட்டுவண்டிகள் குதிரைவண்டிகளாலேயே இத்தகையக் கஷ்டமும் விபத்தும் உண்டாயின் சூத்திரக்கருவிகளின் வேகத்தாலோடும் மோட்டார்கார் என்பதை எவ்வகையாய ஜாக்கிரதையில் நடத்த வேண்டுமென்பது சொல்லாமலே விளங்கும்.
அதை ஓட்டுவோனுக்கு தேக பலமும் மனோதிடமும் சமயபுத்தியும் நிதானபார்வையும் இருந்தே தீரவேண்டும். அவ்வகையில்லாவிடின் மோட்டார்காரை ஓட்டுவதற்கவனுதவான். மோட்டார்காரை ஓட்டுவோனுக்கு முக்கியமாக அவ்வியந்திரக்கருவிகளின் நுட்பா நுட்பங்கள் யாவும் நன்றாய்த் தெரிந்திருத்தல் வேண்டும். ஓடவேண்டுமானால் அவ்வகைத் திருப்பவேண்டும், நிற்கவேண்டுமானால் இவ்வகைத் திருப்பவேண்டுமென்று கற்றுக் கொடுத்துவிட்டு இவன்தான் மோட்டார் டிரைவரென நியமித்திடுவதாயின் சாதாரணமாக ஓடவேண்டிய செயல்தவறி வேகமாக ஓட ஆரம்பித்துக் கொள்ளுமாயின் அடக்கும் நிலையறியாது அவனும் மடிவதுடன் எதிரில் வருவோரையு மடித்து வண்டியையும் உடைத்து பாழ்படுத்துவதற் ஆட்சேபமில்லை. ஐரோப்பியருள் ஐந்நூறு ரூபாயில் ஓர் குதிரை வாங்குவாராயின் ஐந்து ரூபா கொடுத்து ஓர் சவுக்கும் வாங்கியே தீர்ப்பார்கள். இத்தேசப்பிரபுக்களோ நூறு ரூபாயில் ஓர் குதிரையை வாங்கிவிடுவார்களாயின் அதைவோட்டுதற்கு இரண்டணா கொடுத்து ஓர் சவுக்கு வாங்குவதற்கு மனமெழாது வேலிகளிலிருக்கும் குச்சிகளை உடைத்துக்கொண்டு வோட்டுவார். அத்தகையோர் நாலாயிரம் ஐயாயிரம் ரூபாய்க்கொடுத்து வாங்கும் மோட்டார்கார் ஓட்டுவோனுக்கு சரியான சம்பளங்கொடாது குறைந்த சம்பளத்திற்கே ஆளைத் தேடுவது சுவாபமாகும். குறைந்த சம்பளத்திற்குத் தக்க யுக்தியும் பலனுமற்றவனே சேருவது நிலையாகும். இத்தகைய ஆட்களாலும் எஜமானர்களாலுமே மனிதர்களுக்கு உயிர்ச்சேதமும் கஷ்டங்களும் உண்டாகி வருகின்றது. சென்ற வாரம் இராயப்பேட்டைகடைவீதியில் ஓர் மனிதன்மீது மோட்டார் கார் ஏறி உடனே உயிர் போய்விட்டது. அம்மனிதனோ கூடியவரையில் சற்று நிதானியும் ஜாக்கிரதையுமுடையவன் அத்தகைய மனிதனே மோட்டார் வண்டிக்கிரையாகி விடுவானாயின் மற்றுமுள்ள பேதை மனுக்களும் அறியா சிறுவர்களும், காது கேளாதவர்களும், கண் தெரியாதவர்களும், அவ்வேகமுடைய வண்டிகளுக்கு எவ்விதந் தப்பித்து நடமாடுவார்களென்னும் அச்சமுண்டாகின்றது. இத்தேசத்து பெருத்த ரோடுகளுக்கே மனிதர்கள் போகும் வசதியான பாதைகள் மிகு கிடையாது. அதிலும் சிறிய வீதிகளுக்கோ அதேனுங்கிடையாது. சொற்ப வீதியாயினும் அவ்வழியே மாட்டுவண்டிகளும் ஓடவேண்டும், குதிரை வண்டிகளும் ஒடவேண்டும், பைசிக்கல் வண்டிகளும் ஓடவேண்டும், மோட்டார்சைக்கல்களும் ஓடவேண்டும், டராம் வண்டியும் ஓடவேண்டும், மோட்டார்காரும் ஓடவேண்டும். அவ்வழியிலேயே மனிதர்களும் நடத்தல்வேண்டும். இத்தியாதி இடுக்கணமைந்த வீதிகளில் இரண்டுபக்கமும் அடர்ந்த வீடுகள் நிறைந்துள்ள வீதிகளுக்கோ உண்டாம் இடுக்கண்கள் சொல்லத்தரமன்று. இத்தகைய இடுக்கமாய வீதிகளில் வேகமாகச் செல்லும் மோட்டார் வண்டியை விடுவதினால் அனந்தப் பிராணசேதங்களும் அபாயங்களும் உண்டாகிக் கொண்டே வருகின்றது. இக்கொடிய விபத்துக்களை நமது கருணைதங்கிய ராஜாங்கத்தார் விசாரித்து மோட்டார் வண்டிகளை இருபக்கம் வீடுகள் நிறைந்துள்ள வீதிகளில் வேகமாக விடப்படாதென்றும் அவ்வகை விட்டு அபாயமாய விபத்துக்கள் நேர்ந்துவிடுமாயின் வண்டியின் எஜமானனுக்குப் பெருத்த அபராதமும் வண்டிவோட்டுவோனுக்குத் தண்டனையும் விதிக்கும்படியான விதிகளை செய்துவிடுவார்களாயின் மனிதர்கள் ஏதோராபத்துமின்றி வீதியில் நடமாடுவதுடன் மோட்டார் வண்டிகளை வைத்துள்ளோரும் எந்த வீதிகளில் வேகமாகக் கொண்டு போகலாம், எந்தெந்த வீதியில் வேகமாகக் கொண்டு போகலாகாதென்றுங் கண்டு நடத்துவார்கள் அதனால் மனிதர்களுக்கு உண்டாகிவருந் துன்பங்களும் அகன்றுபோம் என்பதேயாம்.
- 7:46; ஏப்ரல் 22, 1914 -