அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/327-383
323. தேசம் எவற்றால் சிறப்படையும் மநுக்கள் எவற்றால் சுகமடைவார்கள்
மனிதன் உலகத்தில் தோன்றி வியவகாரதிசைக்கு வந்தபோது அவன் பூமியையே முதலாவது நோக்கவேண்டியவனாகின்றான் எனென்பரேல் அவன் கண்ணினாற் காணும் சகலவகையான தோற்றங்களுக்கும் காரண பூதமாயுள்ளது பூமியென்றே கண்டறிவான். அவ்வகைக் கண்டறிந்தபோது அவற்றில் தாபர வர்க்கத் தோற்றங்களே தம்மெய்யும் மற்றய சீவராசிகளையும் போஷித்து வளர்க்க கூடியவைகள் என்று உணர்வான். அவ்வகைவுணர்வின் மிகுதியால் பூமியை நன்கு திருத்தி பண்படுத்தி வேண விதைகளை விதைத்து பயிறுகளை ஒங்கச்செய்து தானியங்களை அறுத்துப் போரடித்துப் பண்டிகளில் நிறப்பித் தாமும் தங்கள் குடும்பங்களும் புசித்து வளர்ச்சி பெறுவதுடன் ஏனய மனித கூட்டங்களுக்கும் மற்றும் சீவராசிகளுக்கும் உபகாரியாக விளங்குவான். இவ்வகையாக அங்கங்கு வாசஞ்செய்யும் மக்களுக்குள் உழைப்பாளிகள் யாவரும் முயன்று பூமியின் விருத்தியையே முன்னோக்கி தானிய வர்க்க பலனையும் கனிகள் வர்க்க பலன்களையும் மென்மேலும் பெருகச்செய்யும் வழிவகைகளைத் தேடி தங்கள் கண்ணையுங் கருத்தையும் பூமியின் விருத்தியையே நாடி உழைத்து வருவார்களாயின் தேச சிறப்பிற்கு இதுவே முதற்படியாகும்.
இவ்வகை போஷிப்பிற்கு ஆதாரமாய உணவு பொருட்களை விருத்தி செய்வோர் நீங்கலாக ஏனைய மனிதன் அந்தந்த தொழில்களை சீர்திருத்தி பலனடையச் செய்தற்கு வித்தையை விருத்தி செய்வதே கண்ணுங் கருத்துமாயிருந்து கைத்தொழிலை பெருக்கி வேணக்கருவிகளைக் கண்டுபிடித்து மனிதர்களின் போக்குவருத்தின் வசதிகளுக்கும் தானிய விருத்தியின் வசதிகளுக்கும் சுகாதார வசதிகளுக்கும் உபகாரியாக விளங்குவான். இவ்வகையாக அங்கங்கு வாசஞ்செய்யும் மனித கூட்டங்களில் வித்தியாவிருத்தியை விரும்புவோர் ஒவ்வொருவரும் தங்கள் கண்களையும் கருத்தையும் வித்தியாவிருத்தியில் ஊன்றி மேலும் மேலும் அரிய வித்தைகளைப் பரவச்செய்து சருவ சீவர்களுக்கும் உபகாரிகளும் ஆதரணைக் கர்த்தர்களுமாக விளங்குவார்கள். இதுவே தேச சிறப்பிற்கு இரண்டாம் படியாகும்.
இத்தகைய விவசாய விருத்திக்கும் வித்தியா விருத்திக்கும் விவேக விருத்தியை வளர்த்து மேலும் மேலும் சிறப்பிப்பதற்குக் கல்வியின் விருத்தியே காரணமாதலின் அக்கல்வியின் விருத்தியைக் கலை நூற்களைக் கண்டு படித்து அறிவை விருத்திபெறச் செய்துக்கொள்ளுவதுடன் ஏனைய சிறுவர்களுக்கும் கலை நூற்களையே கற்பித்து விவசாயத்தையும் வித்தையையும் விருத்திபெறச் செய்வான். இதை ஒற்றே ஏனைய மக்களும் அங்கங்குள்ள சிறுவர்களுக்குக் கலை நூற்களையே கற்பித்து அவர்களை நற்சீரிலும் நல்லொழுக்கத்திலும் நிலைபெறச்செய்து அறிவை பெருக்கும் உபாயங்களைத் தேடல் வேண்டும். இதுவே தேச சிறப்பிற்கு மூன்றாம் படியாகும்.
இத்தகையாய மூவகை விருத்திகளையும் ஆராய்ந்துவரும் மனிதன், மனித கூட்டங்களில் தோற்றுந் துக்கங்களை ஆராய்வான். அவற்றுள் பிறப்பினாலாய துக்கமொன்று, பிணியினாலாய துக்கமொன்று, மூப்பினாலாய துக்கமொன்று, மரணத்தினாலாய துக்கமொன்று ஆக இன்னான்கு வகை துக்கங்களே பெருகி நிற்கின்றதென்று கண்டு அவ்வகை துக்கங்களுக்கும் பீடங்கள் எவை எவையெனக்கண்டு அவற்றை நீக்கிக்கொள்ளும் வழிவகைகளை உய்த்துணர்ந்து பிறப்பிற்கு மூலம் அவாவென்றும், பிணிக்குமூலம் துற்செயலென்றும் மூப்பிற்கு மூலம் மூச்சினது விரிவும் மனத்தினது விரிவென்றும், மரணத்திற்கு மூலம் மனமாசு மூடுதலேயென்று கண்டுணர்ந்து, அவாவை அறுக்குஞ் சாதனங்களையும் துற்செயலை அகற்றுஞ் சாதனங்களையும் மூச்சு மனமும் விரியாமல் ஒடுங்குஞ் சாதனங்களையும் மனமாசுகளை முற்றும் அறுக்குஞ் சாதனங்களையும் இடைவிடாது சாதித்து மனமணியாம் சுயஞ்சோதியைத் தன்னிற்றானே கண்டு பற்றற்ற நிருவாண நிலையடைந்த போது மனிதனென்னும் பெயரற்று தெய்வமென்னும் பெயர் பெற்று ஏழாவது தோற்றம் உண்டாகி பிறப்புப் பிணி மூப்புச் சாக்காடென்னும் நான்கு வகையாய துக்கங்களும் ஒழிந்து சாதானந்தத்தினின்றபோது உலகத்திலுள்ள சருவ சீவர்களுக்கும் உதவியாகும் நல்லோனாகி உயர்ந்தோர் மாட்டே உலகென விளங்கி உலகமுடிவை நோக்கி பரிநிருவாணமுற்று அகண்டத்துலாவுவன். நிருவாணமுற்று பற்றறுத்து உள்ளோரையே தேவரென்றுங் கடவுளரென்றும், ஈசனென்றும், பகவனென்றும், பாரா அபரமென்றுங் கொண்டாடுவர். இன்னிலையே தேச சிறப்பிற்கு நான்காம் படியாகும், இப்படி துறையறிந்து பாடுபடுந் தேசமே சிறப்படைவதுடன் மனித கூட்டங்களும் சுகச்சீர் பெற்ற வாழ்க்கையோடு நித்தியானந்த சுகவாரி நிலையையுமடைவார்கள் இதுவே சத்தியதன்ம சீர்திருத்தமாகும். இவற்றிற்கு மாறுபட்டச் செயல்கள் யாவும் அசத்திய கேட்டுக்காயவழிகளேயாம். மனித கூட்டங்களில் பாசபந்த பற்றுக்களிற் சிக்கி மாளாபிறவியுற்று தீராதுக்கத்தில் உழன்று வருவோரை உலகத்தோரென்றும் பாசபந்த பற்றுக்களற்று பிறவியை செயித்து சதானந்தத்தில் நிற்போரை உலக முடிந்தோரென்றுங் கூறப்படும். இத்தகைய உலக முடிவடைதற்கு வித்தை புத்தி யீகை சன்மார்க்கமே காரணமாதலின் ஒவ்வோர் சீர்திருத்தக்காரரும் தேச சிறப்பையும் மனிதகூட்டங்களின் சுகத்தையுங் கருதி உழைக்க வேண்டியதே அழகாம்.
- 7:45; ஏப்ரல் 15, 1914 -