அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/344-383
15. ஏழைகளின் எக்காளத்தொனி
உலகின்கண் பற்பல காண்டங்களிலுள்ள மக்களுள் ஏழைகள் யாரென்பீரேல் சோம்பேரிகளும், விவேக மற்றவர்களும் யாதொரு வித்தையும் விரும்பா வீணர்களுமே ஏழைகளாக உலாவுவார்கள்.
இந்திரரென்னும் புத்தரது தர்மம் வளர்ந்தோங்கிய வித்தேசத்திலோ இந்திரதன்மத்தைப் பின்பற்றி இந்தியர்களென்றழைக்கப்பெற்றப் பூர்வக்குடிகள் யாவரும் வித்தையிலும், புத்தியிலும், சுறுசுறுப்பாலும் மிக்க முயற்சியுள்ளவர்களா யிருந்தும் இவர்களே மிக்க எளிய நிலையை அடைந்திருக்கிறார்கள்.
காரணம் யாதென்பீரேல் நூதனமாக இத்தேசத்துள் குடியேறி நூதன பிராமணவேஷமிட்டு நூதனவேதங்களை ஏற்படுத்திக்கொண்டு வயிறுபிழைக்க ஆரம்பித்தவர்கள் தங்களது நூதனபிராமணவேஷத்திற்கும், நூதன பொய் வேதங்களுக்கும், எதிரடையாயிருந்து கண்டித்து வந்த பௌத்தர்களாம் இந்தியர்களை பறையர்களென்னும் தாழ்ந்த சாதியாக வகுத்துக் கொண்டதுமன்றி பௌத்தர்களை இன்னுந் தலையெடுக்கவிடாமல் கெடுப்பதற்கு மநுதர்ம்ம சாஸ்திரமென்னும் நூதன சாதி நூலையும் ஏற்படுத்திக்கொண்டார்கள்.
பாம்பாட்டி சித்தர்
பொய் மதங்கள் போதனைசெய் பொய்க்குருக்களை
புத்திசொல்லி நல்வழியில் போகவிடுக்கும்
மெய்ம்மதந்தா னின்னதென்று மேவவிளம்பும்
மெய்க்குருவின் பாதம்போற்றி யாடாய் பாம்பே.
ஞானவெட்டி
ஓதுகின்ற வேதமது பிறந்ததெங்கே / வுன்னியநீ ரிரைக்குமிட முயிருமெங்கே
வாதுகள்செய் மந்திரமும் பிறந்ததெங்கே / மறைவேத சைவர்களும் பிறந்ததெங்கே
சூதுகள விலையறிந்தால் குருக்களாகுந் / தொல்லுலகி லறியாதார் நம்மிலொன்று
எதுமில்லா பொய்களவு சொல்வார்தானும் / இவைராஜ யோகியென்றுமியம்பலாமே.
வேஷப்பிராமணர்களால் பறையர்களென்று தாழ்த்தப்பட்ட பௌத்தர் பொய்க் குருக்களையும், பொய்மதங்களையும், பொய் வேதங்களையும் கண்டித்துவந்ததுமல்லாமல் பொய்சாதிகளையுங் கண்டித்த விவரம்.
சிவவாக்கியர்
சாதியாவதேதடா சலந்திரண்ட நீரலோ
போதுவாசமொன்றலோ பூதமைந்து மென்றவோ
ஒதுவேதகீதமு மூணுரக்க மொன்றாலோ
சாதியாவதென்பதேது சாவுவாழ்வுதிண்ணமே
பறைச்சியாவதேதடா பாணத்தியாவதேதடா
விறைச்சி தோலெலும்பிலே லக்ககிட்டிருக்குதோ
பறைச்சி போகம் வேறதோ பாணத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பாணத்தியும் பரிந்துபாரு மும்முளே.
வேஷபிராமணர்கள் பௌத்தர்களைப் பறையர்களென்றும், தாழ்ந்த சாதி என்றுங் கூறிவந்ததின்பேரில் பௌத்தர்கள் சாதியேதடாவென்றும், பறையர் யாரடாவென்றுங் கண்டித்துவந்ததின்பேரில் சாதிக்கு ஆதாரமாகும் மநுதன்ம சாஸ்திரம் என்னும் நூதனசாதி நூல் ஒன்றை ஏற்படுத்தி அதனுள் சகல சாதிகளிலும் உயர்ந்த சாதி பிராமணசாதியென்றும், சகல சாதிகளுக்குத் தாழ்ந்தசாதி பறையர் சாதிபென்றும் வகுத்து எழுதிவைத்துக்கொண்டார்கள்.
பிராமணன் சிறப்பை முதலத்தியாயம் 92, 93, 94 - ம் சுலோகங்களில் காண்க. பறையனின் இழிவை 5-வது அத்தியாயம் 85, 86 ம் சுலோகங்களில் காண்க.
பறையன், தூமையானவள், பதிதன், பிரசவித்தவள், பிணம் இவர்களைத்
தெரியாமல் தொட்டு விட்டால் ஸ்னானஞ் செய்தால் பரிசுத்தனாகின்றான்
என்றும் ஸ்னானாதி காலத்தில் பறையன் முதலிய அபரிசுத்தம்
உடையவர்களைக் காணில் ஆசமனஞ்செய்து காயத்திரி மந்திரம்
முதலியவைகளைச் செபிக்கவேண்டும்.
அப்போதுதான் பறையனைக் கண்ணினாற் பார்த்ததோஷம் நீங்கிவிடுமென்று எழுதிவைத்திருக்கின்றார்கள்.
இத்தகைய மநுதன்ம சாஸ்திரத்தில் தற்காலம் வழங்கிவரும் முதலியார், நாயுடு, செட்டி, நாயடு, ஐயங்கார், சிங்கு முதலியவர்களின் பெயர்கள் யாதொன்றுமின்றி உயர்ந்தசாதி பிராமணனென்பவனையும் காமந்தசாதி பறையனென்பவனையும் மட்டிலும் குறித்து எழுதியுள்ளபடியால் பூர்வ பௌத்தர்களை பறையர்களென்று தாழ்த்தித் தலையெடுக்காமல் அவர்களை நசிப்பதற்கே இம்மனு தன்மசாஸ்திர மென்னும் நூலை ஏற்படுத்திக் கொண்டார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல விளங்கும்.
ஆதலின் இவ்விந்தியதேசத்தில் சாதிவைத்திருப்பவர்களெல்லாம் கனவான்களாகவும், பூர்வ பௌத்தன்மத்தை அநுசரித்து சாதியில்லாமல் உழைப்பாளிகளாய் இருப்பவர்களெல்லாம் ஏழைகளாகவும், நாளுக்குநாள் நசிந்துவருவது காரணம் பொய்சாதிவேஷமும், பொய்ம்மதகோஷமுமேயாகும்.
இச்சாதிபேத எக்காளதொனியைக்கேட்கும் விவேகிகளும், கனவான் களும், மற்றகாண்டங்களிலுள்ள ஏழைகளைப்போல் இந்து தேசத்திலுள்ள ஏழைகளைக் கவனிக்காமல் இவர்கள் யாவரால் நசுக்கப்பட்டு எழியநிலையை அடைந்து வருகின்றார்கள். அவர்களுக்கும் இவர்களுக்குமுள்ள விரோத மென்னையென்று விசாரிப்பீர்களாயின் விஷயம் விளங்கும்.
- 3:8; ஆகஸ்டு 4, 1909 -
பூர்வத் தமிழர்களே, திராவிட பௌத்தர்களென்னும் பெயர்பெற்று சாதிபேதமென்னுங் களங்கமற்று சகலரும் ஒற்றுமெயுற்று வாழ்ந்து வந்ததுபோல் நாளதுவரையில் சாதிபேதமற்று வாழ்ந்துவருகின்றார்கள்.
பூர்வத்தமிழ்க்குடிகள் சாதிபேதமற்று வாழ்ந்து வந்ததற்கு ஆதாரம் யாதென்பீரேல், ஓர் திராவிட அரசன் புத்திரிக்கு சுய அரமென்னும் வில்வளைப்பேனும், மாலை சூடலேனும் ஒன்றைக் குறித்து சீனராஜன், சிங்களராஜன், வங்களாராஜன்,காம்போஜ ராஜனென்னும் ஐன்பத்தாறு தேசத்து அரசர்களையும் வரவழைத்து சீனராஜன் என்ன சாதி, சிங்களராஜன் என்ன சாதி என்னும் விசாரிணையின்றி யாருக்கு மாலை சூட்டப்படுகிறதோ, யாவர் வில்லை வளைப்பவர்களோ அவர்களுக்கே விவாகம் நிறைவேறிவந்தது வழக்கமாகும்.
அரசர்கள் யாவரும் சாதிபேதமென்னுங் களங்கமின்றி வாழ்ந்து வந்ததுபோலவே குடிகளும் சாதிபேதமென்னுங் களங்கமின்றி சுகசீவிகளாக வாழ்ந்து வந்தார்கள்.
அத்தகைய சுகசீவ வாழ்க்கைக்குக் காரணம் யாதென்பீரேல், மெய்வேதங்களென்னும் புத்த தன்மத்தைத் தழுவி வித்தையிலும், புத்தியிலும் விருத்தியைக் கருதி சகலபாஷையோரும் ஒற்றுமெயுற்று ஒருவருக்கொருவர் உபகாரிகளாய் இருந்தபடியால் சகல மக்களும் சுகசீவ வாழ்க்கை பெற்றிருந்தார்கள்.
அத்தகைய சுகவாழ்க்கைப் பெற்றிருந்தவர்கள் தற்காலம் பறையர்களென்று தாழ்த்தப்பட்டு அசுகவாழ்க்கைப்பெற்ற காரணங்கள் யாதென்பீரேல், மிலேச்சரென்றும், ஆரியரென்றும், பூர்வம் வழங்கிய ஓர் கூட்டத்தார் இவ்விடம் வந்து குடியேறி யாசகசீவனஞ் செய்துகொண்டே சகடபாஷையிற் சிலதைக் கற்று அறஹத்துக்களைப்போல் பிராமணவேஷமிட்டு பௌத்தர்களால் வகுத்திருந்த தொழிற்பெயர்கள் யாவையும் மேற்சாதி கீழ்ச்சாதியென ஏற்படுத்திக் கொண்டு தங்களது பொய் வேதத்திற்கும், பொய் மதத்திற்கும், பொய்ச்சாதி கட்டிற்கும், உட்பட்டவர்கள் யாவரையுந் தங்களை ஒத்த உயர்ந்த சாதிகளெனச் சேர்த்துக் கொண்டு தங்களது பொய்வேதங்களுக்கும், பொய் மதங்களுக்கும், பொய்ச்சாதி கட்டுகளுக்கும், அடங்காது அப்புறப்பட்டு சத்தியதன்மத்தில் நிலைத்திருந்த விவேகிகள் யாவரையும் தாழ்ந்த சாதிகளென வகுத்து தலையெடுக்கவிடாமற் செய்துவந்தார்கள், நாளதுவரையில் செய்தும் வருகின்றார்கள்.
இந்துதேசத்திலுள்ள சருவபாஷைக் குடிகளையும், தாழ்ந்த சாதியென எவ்வகையால் வகுத்தார்கள். அவர்கள் யாவரென்பீரேல், வடயிந்தி (சில வரிகள் தெளிவில்லை )
- 3:9: ஆகஸ்டு 11, 1909 -
புத்ததன்மத்தை அநுசரித்து வந்த விவேகிகள் யாவரும் அபுத்ததன்மத்தோர்களாகிய பொய்ப் பிராமணம், பொய் வேதம், பொய்ச் சாதி, பொய் மதங்களைக் கண்டித்து அவர்களது வேஷபிராமணத்தையும் விளக்கிக்கொண்டு வந்தார்கள்.
பௌத்தர்களுக்குள்ள விவேகிகள் யாவரும் பொய்ப்பிராமண மதத் தோரைக் கண்டித்து அவர்களது சாதிவேஷத்திற்கும், மதவேஷத்திற்கும் உட்படாமல் விலகினின்றபடியால் அரசர்களையும், கல்வியற்றப் பெருங்குடிகளையும் தங்கள் வசப்படுத்திக்கொண்டு வட நாட்டிலுள்ள பௌத்த விவேகிகளை சண்டாளர்களென்றும், தென்னாட்டிலுள்ள கொடுந்தமிழ் வாசிகளைத் தீயர்களென்றும், செந்தமிழ் வாசிகளை பறையரென்றும், தாழ்ந்தசாதிகளென்றும் வகுத்து அவற்றிற்கு உதவியாய் சாதி நூலையும் ஏற்படுத்திக் கொண்டு பௌத்தர்களின் மடங்களையும், அவர்களது சுயாதீன நிலைகளையும் மாறுபடுத்திவிட்டு, பௌத்தர்களை தாழ்ந்த சாதிகளென்றும் வகுத்து தலையெடுக்கவிடாமல் செய்துவந்ததுமன்றி நாளதுவரையிலுந் தலையெடுக்கவிடாமற் செய்தும் வருகின்றார்கள். ஈதன்றி பௌத்தர்களை கழுவிலுங் கற்காணங்களிலும் வதைத்துக்கொன்றதாக கொலைபாதகர்கள் புராணங்களே கூறுகின்றது.
இத்தகையக் கஷ்டங்களை பூர்வ பௌத்தர்கள் இதுவரையிலும் அநுபவித்து வந்திருப்பார்களாயின் இவர்கள் உருதோன்றியுள்ள இடங்களில் எலும்புங் காணாமல் மறைந்துபோயிருக்கும்.
புத்ததன்மச் செயல்கொண்டு இவர்கள் அடைந்திருந்த பூர்வபுண்ணிய பலத்தால் பிரிட்டிஷ் துரைத்தனம் வந்து தோன்றி உயிர்ப்பிச்சைபெற்றார்கள்.
பூர்வம் புத்ததன்மத்தைத் தழுவி விவேகவிருத்தியிலிருந்தவர்களாதலின் வேஷபிராமண சத்துருக்களின் மித்திரபேதங்களால் பலவகையானும் நசிந்திருந்தபோதிலும் கருணைதங்கிய மிஷநெரிமார்கள் கலாசாலை வகுத்து கல்வி கற்பிக்க ஆரம்பித்தபோது சத்துருக்கள் தாழ்ந்த சாதியென்று கூறிவந்தபோதினும் தங்கள் பூர்வ விவேகவிருத்தியால் B.A., M.A., முதலிய கெளரதாபட்டங்களைப் பெற்றார்கள், பெற்றும் வருகின்றார்கள்.
இவற்றுள் கருணைக்கடலாய் விளங்கும் பிரிட்டிஷ் மிஷநெரிமார்கள் வடநாட்டில் சண்டாளரென்று வகுக்கப்பெற்றோர் மத்தியிலும், தென்னாட்டில் தீயரென்று வகுக்கப்பெற்றோர் மத்தியிலும் நிலையாக நின்று கல்வியை விருத்தி செய்து வந்தபடியால் மேலுமேலும் கலாவிருத்தி பெற்று சத்துருக்களை மேற்கொண்டு விட்டார்கள்.
தென்னிந்தியாவிலுள்ளப் பறையர்களென்போர் மத்தியில் நிலையாக நின்று கல்வியின் விருத்தியை செய்யாமல் சாதிக் கிறீஸ்தவர்களென்னும் டம்ப விருத்தியைக் கருதியபடியால் கிறீஸ்துமத விருத்தியுங் குறைந்து இவர்கள் கல்வி விருத்தியுமில்லாமல் திகைத்து நிற்கின்றார்கள்.
இத்தகைய திகைப்போர் அறுபது லட்சத்திற்கு மேற்பட்டக் குடிகளாதலின் இவர்கள் யாவரும் சாதிவிரோதத்திலும், சமய விரோதத்திலும் எழியநிலையடைந்து முன்னேறும் வழியற்றிருக்கின்றபடியால் புருஷோத்தம் தயாநிதிகள் யாவரேனும் இவர்களின் எழிய எக்காள தொனிக்கிறங்கி கல்வியின் விருத்தியையுங் கைத்தொழில் விருத்தியையும் அளித்து ஆதரிக்க வேண்டுகிறோம்.
- 3:10: ஆகஸ்டு 18. 1909 -