அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/363-383
34. கம்மாளர் பறையர், சக்கிலியர்
வினா : பூர்வபௌத்த சக்கரவர்த்திகளின் வமிஷவரிசையோரும் பௌத்த சிகாமணிகளுமாயிருந்து தற்காலம் பறையரென்று அழைக்கப்படுவோர்களுமாய ஏழை மாக்கள் விசுவபிரம்ம குலத்தாரென்னும் கம்மாளரிடம் ஜலபானஞ் செய்யாதுஞ், சாதமுதலியது உண்ணாதுந் தங்களைவிட கம்மாளர் கீழானவர்களென்றுக் கொண்டுள்ள வைராக்கியம் யாதுக்கு?
கோசிங்கிகள் என்றழைக்கப்படுஞ் சக்கிலியரை பறையரென்போர் மாமன் மைத்துனன் உறவாய் முறை கொண்டாடி, உண்பன, கொள்வன, கொடுப்பனவைகளிற் சம்பந்தப்படாமனிற்பதோ ஒருவருக்கொருவர் வீதிகளில் ஒருவர்க்கொருவர் பாதரட்சையணிந்து ஏகாது உறுதிசெய்துக்கொண்டு, இவ்விருதரத்தாருள் யாரேனுந் தெரிந்தோ அல்லது தெரியாதோ வீதிகளில் பாதரட்சை அணிந்தேகினால் இருவருப்பாரும் பஞ்சாய சபைக்கூட்டி தவறு செய்தவனிடம் அபராதம் முதலியவைகள் வாங்கிவருவதெற்றுக்கு?
பறையரென்று அழைக்கப் பெற்றோரிற் சிலர் தங்களை முத்திரை தானம் பெற்றோர்களென்று கூறி தங்களில் இறந்துபோகும் ஆண்பெண் பாலாரின் சவத்தை சப்பளித்து உட்கார வைத்து இருகைகளுங் கூப்பியபடி நிற்க இரு புறமுங் கொம்புகள் நாட்டி அதிற் பிணித்துப் பந்தினர் யாவரும் அடியேம் தாரையா சுவாமி என்று மும்முறை பிணத்தெதிர் பணியுங்கால் அவர்களுளோர் முதியவர் ஏதோ சிலமந்திரங்கட் கூறி “அடியார் கொப்பனையா, அல்லது ஆசாரியர்க் கொப்பனையா” யென்று வினவ யாவரும் ஆசாரியர்க் கொப்பனையென்று கூறியபின் ஓர்மங்கிலியமாது யாருடனும் பேசாது மெளனமாய் சமைத்த சாதமதை யாவரும் உண்டானதும் பிரேதத்தை அதற்கென்று ஏற்படுத்திய ஓர்பாடையில் ஒட்கார்ந்தபடியாகவே வைத்து அடக்கஞ் செய்து இல்லமேகும் விவரங்களையும் அடியார்கட்பேரில் மிகுந்த தயை புரிந்து விளக்குவிப்பீர் ::சி. முத்துகுமாரசுவாமி, நாதமுனி, தீர்த்தகிரி, உபாத்தியாயர், ஜோலார்பதி.
விடை: ஜோலார்பதி உபாத்தியாயர்களே! சற்றுநோக்குவீர்களாக. தாங்கள் வினவியுள்ள சங்கைகள் யாவும் மத்தியில் தோன்றி மறைந்தவைகளேயாம். அதாவது பிராமணர்களென்போருக்கும், கம்மாளரென்போருக்கும் சித்தூர் ஜில்லாவில் நேரிட்ட வழக்கில், கம்மாளர் ஜெயம்பெற்றபோது பிராமணர்களென்போர் பறையர்களென்று அழைக்கப்படுவோரை வலங்கையரெனத் தங்களுடன் சேர்த்துக்கொண்டு இவர்களுக்குக் கற்பித்த விரோதச் செயலால் அவ்வகை உண்பினையைத் தவிர்த்து வீண் விரோதிகளாகி விட்டார்களன்றி வேறில்லை. மற்றப்படி இவர்கள் அவர்களுக்குத் தாழ்ந்தவர்களல்ல அவர்கள் இவர்களுக்குத் தாழ்ந்தவர்களல்ல. பிராமணர்களென்போர் செய்த விரோதச் செயல்களேயாம்.
வசிஷ்டரைச் சக்கிலிச்சு மகனென்று கூறியுள்ள ஓர் சரித்திரத்தைக் கொண்டும் விஸ்வாமித்திரப் பரம்பரையைக்கொண்டும் மைத்துனர் முறைக் கொண்டாடிவந்த சில சரித்திரங்களை ஒட்டி பேசிவந்தபோதிலும் அவர்களது அசுத்தச் செயலை ஒட்டி உண்பினையற்றிருப்பதுடன் வாசஞ்செய்யும் வீதிகளில் பாதரட்சை அணைந்து வரப்போகாதென்றுந் தடுத்து வந்தார்கள். வைஷ்ணவ மதத்துள் சிலர் தோன்றி முத்திரை தானமென்னும் சூடுபோட்டுவிடுகின்றார்கள். அவ்வகை சூடுபோட்டுக் கொண்டவர்களுக்குள் நூதனமானச் செயல்களை அனந்தமாக ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அவைகள் யாவும் பூர்வ சாஸ்திரங்களுக்கு ஒவ்வாதவைகளேயாம். சூடுண்டப்பூனை அடுப்பங் கரையேறா தென்னும் பழமொழிக்கிணங்க இவர்கள் சூடுபோட்டு நாமமிட்டுக் கொண்டவுடன் சுயசாதியோரை நெருங்காமலும், அவர்களிடம் உண்ணாமலும் தூரவே விலகிவருவதுடன் பந்து விரோதிகளுமாகி நாலு நாளையில் கெட்டு நடுத்தெருவில் நின்றுவிடுகின்றார்கள். இதுவுமோர் நூதன வேஷக் கேடுபாடுகளேயாம்.
- 5:34, சனவரி 31, 1912 -