அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/364-383
35. மனிதனென்பவன் யார்
மனிதர்களை மனிதர்களாக பாவிப்பவன் எவனோ அவனே மனிதன். பர்ம்ம பாஷையினனாயினும் மனிதனே, சீனபாஷையினனாயினும் மனிதனே, ஆங்கிலபாஷையினனாயினும் மனிதனே, திராவிடபாஷையினனாயினும் மனிதனே கன்னட பாஷையினனாயினும் மனிதனே, மராஷ்டக பாஷையினனாயினும் மனிதனே, இத்தகைய மனிதன் பாஷைபேதமுடையவனாயினும் உருவத்தில் மனிதன் மனிதனேயாவன். மனிதவுருவம் அமையினும், சருவ உயிர்களையுந் தன்னுயிர்போற்காப்பவன் மனிதன், தன்னைப்போல் பிறரை நேசிப்பவன் மனிதன். தனக்கு ஓர் துன்பம் வரினும் ஏனையோர்க்கோர் துன்பம் வராமற் காப்பவன் மனிதன். தான் பசியுடனிருப்பினும் ஏனையோரை பசிதீர்த்து ரட்சிப்பவன் மனிதன். தான் சுகிக்க விரும்புவதுபோல் ஏனையோரையும் சுகிக்கவிரும்புகிறவன் மனிதன். தான் சுத்தநீரைமொண்டு குடிக்க விரும்புகிறவன் ஏனையோரையும் சுத்தநீரை மொண்டுகுடிக்க விரும்புகிறவன் மனிதன். தான் சுத்த ஆடைகளை அணைந்து ஏனையோரும் சுத்தவாடை அணைந்துக்கொள்ளவேண்டுமென்று விரும்புகிறவன் மனிதன். தான் மெத்தை மேடைகள் கட்டி வாழுங்கால் ஏனையோரும் மெத்தைமேடை கட்டி வாழவேண்டுமென விரும்புகிறவன் மனிதன். தான் அந்தஸ்தான உத்தியோகங்களைப் பெற்று வாழ்வது போல் ஏனையோரும் அந்தஸ்தான உத்தியோகங்களைப் பெற்று வாழ்கவேண்டுமென்று எண்ணுகிறவன் மனிதன். இத்தியாதி மனிதனென்னும் மானமும், சீவகாருண்யமும் அமைந்த மக்களிற் சிறந்த ஆறாவது தோற்றம் மனிதனென்று கூறப்படும். அவனே ஏழாவது தோற்ற தெய்வநிலை அடைபவனுமாவன். இவற்றிற்கு மாறாயச் செயலுடையோரை நரரென்றே தீர்க்கப்படும்.
- 5:45; ஏப்ர ல் 17, 1912 -