அயோத்தியா காண்ட ஆழ்கடல்/ஆசிரியர் முன்னுரை

முன்னுரை

1989- ஆம் ஆசிரியர் ஆண்டு புதுவையில் நடைபெற்ற கம்பன் விழாவில் வெளியிடுவதற் காகப் புதுவைக் கம்பன் கழகச் செயலாளர் உயர் திரு புலவர் கம்பவாணர் அ. அருணகிரியவர்கள் இட்ட அன்புக் கட்டளையின்படிச் சுந்தர காண்டச் சுரங்கம்' என்னும் நூல் எழுதித் தந்தேன். விழாவில் நூல் வெளியிடப் பெற்றது.

ஊக்குவிப்பு

அந்த நூலுக்கு நேரிலும் மடல் வாயிலாகவும் பெரிய பாராட்டு கிடைத்தது. சிலர் இரண்டு முறை படித்ததாகக் கூறினர். கம்பராமாயணத்தின் மற்ற ஐந்து காண்டங்கள் பற்றியும் நூல் எழுதுமாறு சிலர் பணித்தனர். இந்த ஊக்குவிப்பால், கம்பராமாயண த்தின் அயோத்தியா காண்டம் பற்றி இந்த நூலை எழுதியுள்ளேன்.

கம்பராமாயண அயோத்தியா காண்டம் ஒர் ஆழ் கடல். அந்தக் கடலில் குளித்து அனைத்து முத்துகளையும் அள்ளிக்கொண்டு வருவது அரிது. அடியேனால் இயன்றவரை ஆங்காங்கு உள்ள முத்துகளுள் சிலவற்றை இந்நூல் வாயிலாக அறிமுகப்படுத்தியுள்ளேன். கம்பராமாயணப் பதிப்புகள்

கம்ப ராமாயண ஒலைச் சுவடிகள் இருநூற்றுக்கும் மேல் உள்ளன. கம்ப ராமாயணத்தைப் பலர் பதிப்பித்துள்ளனர். பதிப்புக்குப் பதிப்பு வேறுபாடுகள் உள்ளன. அவற்றுள் எஸ். இராஜம் அவர்கள் பதிப்பாசிரியர் குழு அமைத்துப் பல படிகளையும் ஆராய்ந்து ஒப்பு நோக்கச் செய்து, மர்ரே அண்டு கம்பெனி- சென்னை' என்னும் நிறுவனத் தின் வாயிலாக வெளியிட்டுள்ள பதிப்பையே, என் நூலுக்கு அடிப்படை ஆதாரமாகக் கொண்டு எழுதியுள்ளேன்.

யான் இப் பதிப்பினைத் தேர்ந்தெடுத்ததற்கு உரிய காரணம், தமிழ் யாப்பிலக்கணம் அறியாதாரும் எளிதில் படித்துப் பொருள் புரிந்து கொள்ளும்படிச் சொற்களைப் பிரித்து அமைத்துப் பதிப்பித்திருத்தலேயாகும். மற்றும், இம்மலிவுப் பதிப்பே பலராலும் வாங்கப் பட்டிருக்கலாம்; என் நூலோடு ஒத்திட்டுப் பார்க்க உதவலாம்.

மலரை இதழ் இதழாகப் பிய்த்தும் கசக்கியும் நுகர்வது பொருந்தாது என்பது அடியேனும் அறிந்த செய்தியே. இருப்பினும், எல்லோரும் படித்து இன்புறும்படி இப்படியொரு பதிப்பும் இருக்கலாமே! யாப்பிலக்கண வல்லுநர்கள் சுவைக்கும்படியாக வேறு சில பதிப்புகள் உள்ளனவே! அவர்கட்கு அவை சாலும்.

அடியேனைத் தூண்டி நூல் எழுதச் செய்த திரு அ. அருணகிரி அவர்கட்கும் மற்ற சுவைஞர் கட்கும் மிகவும் நன்றி செலுத்துகிறேன். இந்நூலை அன்புடன் நன்முறையில் வெளியிட்ட வானதி பதிப்பகத்தார்க்கு என் பெருநன்றி உரியது. வணக்கம்.

சுந்தர சண்முகன்