அய்யன் திருவள்ளுவர்/அய்யனுக்கு அஞ்சலி
அய்யனுக்கு அஞ்சலி
கவிதை, காவியம், அறிவு, ஆய்வு, வாழ்க்கை, வரலாறு, புதினம், போதனை, என்று எத்துறையை அடிதட தளமாகக் கொண்ட நூலாக இருப்பினும், அதனைப் படிக்கத் தொடங்கு கின்றபோது, அதில் உள்ள இன்றியமையாத வரிகளை எழுதுகோலால் கோடிட்டுச் செல்வது சிலர் வழக்கம்.
ஆனால், அன்புச் சகோதரர் என்.வி. கலைமணி அவர்களின் தமிழஞ்சலி என்ற இந்த நூல், அந்த மரபிற்கு முற்றிலும் மாறுபட்டதாக விளங்குகின்றது.
இந்த நூலில் எந்த இடத்தில் கோடு போடுவது, எதை விடுவது என்று நோக்கினால், முதல் பக்கம் தொடங்கி, முற்றும் என்று நிறைவு பெறுகின்ற பக்கம் வரை கோடு போட்டுக் கொண்டே போக வேண்டிய, அதி அற்புதமான, ஒரு வகை விசித்திரமான உள்ளடக்கத்தை உடையதாகவே இது திகழ்கிறது.
இவர் எழுதுபொருளாகக் கொண்டது அறிஞர் அண்ணா எனும் இமயம் என்றால், இவர் பக்கத்திற்குப் பக்கம் பல சிகரங்களை அல்லவா தொட்டுச் செல்கிறார்.
விந்தையான வித்தகமான, சத்தியமான, சந்தம் மிகுந்த பல நடைகளை நான் பார்த்திருக்கிறேன். இவர் எந்த நடைக்கும் அப்பாற்பட்ட சொந்த நடை உடைய சூட்சுமக்காரராக விளங்குகிறார்.
இவருடைய கூறிய சொற்களைப் பார்க்கின்ற பொழுது ராமனுடைய வில்லிலிருந்து புறப்படும் அம்புகளே நினைவிற்கு வருகின்றன.
அதோடு, சகோதரர் கலைமணியை நினைத்தால், கம்பர் பெருமான்தான் நினைவிற்கு வருகிறார்.
அவர் ஆயிரம் ஆயிரம் பாடல்களைத் தந்து எண்ணற்ற கதாபாத்திரங்களைக் காட்டினார் என்றாலும், அவருடைய காவியத்தில் நீக்கமற நிறைந்திருப்பவர் ராமபிரான் மட்டுமே! அதனால்தான் அது ராம காவியமாக விளங்குகிறது.
கலைமணி அவர்களும் நூலில் பல உத்திகளைக் கையாளுகிறார்.
அதில், பல சக்திகளையும் - சித்திகளையும் காண முடிகிறது. என்றாலும், நீக்கமற நிறைந்திருப்பவர் அறிஞர் அண்ணா மட்டுமே.
தமிழ் வசன நடைக்குப் புதியதொரு வாழ்வைத் தந்தவர் அண்ணா.
அவரைப் பற்றிய இவருடைய நூல், ஒரு புதியவராக, இன்னும் சொல்லப் போனால், தமிழ் உலகிற்கு ஒரு வரமாகத் திகழ்கிறது.
இவர் அஞ்சலிக்கு எடுத்துக்கொண்ட அத்துணை மலர்களும் காயா மலர்கள், மண மலர்கள், தேயா மணிகள், தெவிட்டா நறுங்கனிகள்.
இந்த நூலில் புலவர் என்.வி. கலைமணி ஓர் எழுத்தாளனாக, கட்டுரையாளனாக, கதாசிரியனாக, கவிஞனாக, ஞானாசிரிய னாக, வரலாற்று வல்லுநனாக, ஆன்மிகவாதியாக, நாத்திகனாக, சித்தனாக, இன்னும் சொல்லுவதற்கு அரிய பல அவதாரங்களை எடுத்துள்ளார்.
இவற்றோடு, அவர் ஒரு ரச வாதியாகவும் திகழ்கிறார். இந்த நூலில், பலர் கவிதைகளை வசமாக்கிவிடும் வல்லமையாளர்களாக உலா வரும்போது, இவர் வசனத்தைக் கவிதையாக்கித் தந்துள்ளார்.
அன்புச் சகோதரர் கலைமணி அவர்கள், என்னை நோக்கி, இந்நூலுக்கு ஒரு கருத்துரை தாருங்கள் என்றார்.
இந்த ஒப்பரிய நூலுக்கு நான் கருத்துரை தருவதை விட அய்யனுக்கு அஞ்சலி செலுத்துவதே பொருத்தம் எனக் கருதுகிறேன்,
வணக்கம்
அன்பன்,
புலவர் நாகசண்முகம்