அய்யன் திருவள்ளுவர்/அய்யன் திருவள்ளுவர்


அய்யன் திருவள்ளுவர்


ழுத்தின் வடிவத்தையும் - எழுத்தின் ஒலி வடிவத்தையும் தமிழ்ச் சான்றோர் உருவாக்கியபோது, எண்ணற்ற மேதைகள் அதற்காக உழைத்தார்கள்.

ஞாலம், ஞானத் திரட்சிக்காகக் கையேந்தி நிற்கும் காலத்தில், கோலத் தமிழ் எழுத்து ஓவியக் கூட்டங்களை அவர்கள் உருவாக் கினார்கள்.

ஓங்காரத் தமிழ் மொழியின் பயனை ஓர்ந்து, ஆங்கார ஞாயிற்றின் எரி நெருப்பை அலட்சியப் படுத்தி, பாங்கான தங் களின் பண்புக்கு வாழ்த்துக் கூறியவர்கள்-அந்தத் தமிழ் அறிஞர் கள்.

தீங்கு உளம் நடுங்கும் தீந்தமிழ் மனமுடைய அவர்கள், பரம்பரை பரம்பரையாகத் தமிழ் இலக்கிய, இலக்கணங்களை - ஒவியமாய், காவியமாய், ஜீவியமாய் இயற்றி மறைந்தார்கள்.

அழுதுகொண்டே பிறக்கின்ற மனிதப் பிஞ்சுகள் , சிரித்துக் கொண்டே சாகும்வரை, வாழ்க்கைக்குரிய மனித நெறித் தத்துவங்களை,'அகம், புறம் என்று தமிழிலே அவர்கள் வடித்துத் தந்தார்கள்.

காலம், அவர்களைக் களவாடிச் சென்றாலும், அந்தக் கன்னித் தமிழ்ச்சிந்தனையாளர்கள் தேடித்தந்த சிந்தனைச் செல்வங்கள் இன்றும் நம்மிடையே நடமாடுகின்றன.

குடல் விழுங்கும் உணவைப் போல - கபாடபுரத்துப் பைந் தமிழ்க் கருவூலங்களைக் கடல் விழுங்கிய போதும், கண்டும் கலங்காத அறிவேறுகளாக - அவர்கள் திகழ்ந்தார்கள்.

உலகமே சிந்திக்கத் திராணியற்று, காலச் சிதைவுக்கு ஆட்பட்டுக் கலங்கிக் கிடந்த நேரத்தில், 'யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற ஒரே உலகச் சமுதாயத் தத்துவத்தை தமிழ்ப் பண்பாட்டின் வாயிலாக, கொஞ்சு தமிழால் உலகுக்கு விளக்கிக் கொண்டிருந்த இனம் - தமிழ் இனம்.

காலக் கரையான்களால் அரிக்கப்படாத அந்தத் தமிழ் இனத்திலேதான் பரம்பரை பரம்பரையாகத் தமிழ் மேதைகள் தோன்றித் தெள்ளு தமிழை வளர்ப்பதற்காகச் சீரிய தொண்டாற்றி வந்தனர்.

நெடுங்குன்றம் நிமிர்ந்து நின்ற உச்சிக்கு மேல் நின்ற தமிழ் நிலவாய், ஞானச் செந்தாமரை எழிலையும் தோற்கடிக்கும் திருக்குறள் தோற்றமாய், தமிழ்ப் பண்பாட்டிற்குத் தடம் புரளா அறிவூட்டும் சிந்தனையாளராய் நிலைத்து, அவர்களில் ஒருவராக இன்றும் உயிராக நிற்பவர்தான் அய்யன் திருவள்ளுவர் பெருமான்.

வாழ்க்கை வளையத்தில் குறுக்கும் நெடுக்குமாக வெல்டு கின்ற துன்பக் கோடுகள், அழிக்கப்பட்டாக வேண்டும் என்பது திருவள்ளுவப் பெருமானின் சீரிய சிந்தனை.

அதற்காகவே, இரவு, பகலென்று பாராது, அவர் விழிப்போடு, திருவள்ளுவத்தை எழுத ஆரம்பித்தார்.

மனிதன் வாய் திறந்த உடனேயே வந்த ஒலி, முதிராத இளம் பிஞ்சின் மழலையாகத்தான் இருக்கமுடியும்!

அந்த ஒலி, அவன் வாழ்க்கையை நல்லிடத்துக்கு அழைத்துச் சென்றிருக்க வேண்டும்.

காரணத்தோடும் - காரணமில்லாமலும், கண்ணீர்க் கடலில் - கவலைக் கணவாயில் - மனிதன் விழுந்து, விழுந்து மீண்டும் மீண்டும் எழத் தடுமாறித் திணறிக் கொண்டே இருந்தான்.

கண்கண்ட இடங்களில் எல்லாம் காட்சிகளை கையெடுத்து அவன் கும்பிட்ட நேரம், இதுவரையில் அளந்தறியாத காலம்.

தொழுதலும், வணங்கலும் மனித வாழ்க்கையில் நீண்ட பெருங்கதையாக - முடிவே காணப்படாத தொடர்கதையாக வளர்ந்து வருகிறது.

மனித வாழ்க்கையின் மணி மகுடத்தைத் துன்பம் தனது காலால் இடறி விடுகின்ற நேரத்தில், கூட்டமான கடவுள்களும் - குறிப்பிட்ட இடங்களிலே காணப்படுகின்ற திருக்கோயில் களும், காலத்தைப் பார்த்துக் கொண்டேதான் இருந்தன.

குலைந்தான்! அலைந்தான்! குமுறினான்! பதறினான்! நடு நடுங்கினான்! மீண்டும் எழுந்திருப்போமா, நிலத் துரும்பைப் பிடித்து நிற்போமா என்ற அச்சம் - மனிதனுக்கு!

விழுந்த இடம் மரணமா? அல்லது உலகத்தின் துன்பமா? என்ற ஐயம் அவனுக்கு எழுந்து கொண்டே இருந்தது.

இந்த வினாக்களுக்கு அன்று வரை தகுந்த பதில் கிடைக் காமையால், மனித சமுதாயம் விடைதேடி அலைந்து கொண்டே இருந்தது.

அப்போது, அய்யன் திருவள்ளுவர் நெசவுத் தொழிலைச் செய்து கொண்டே, வாழ்க்கையையும் நெய்ய ஆரம்பித்தார்.

மனித வாழ்க்கை, தறியின் பாவைவிட - மிக வேகமாக ஒடுவதைக் கண்டார்.

குளிருக்குப் போர்த்தப்படுகின்ற துணியாக - அது நெய்யப் பட்டால் பரவாயில்லை.

பிணத்தின் மீது மூடப்படுகின்ற சல்லாத் துணியாக - அது மாறி விட்டதை உணர்ந்தார்.

அதனால்தான், அவர் வாழ்க்கையை நெய்ய ஆரம்பித்தார். இல்லையென்றால் - உண்மையைப் பெய்ய ஆரம்பித்தார் என்று காலம் கணிக்கின்றது.

முதன் முதலாக அய்யன் திருவள்ளுவர் எழுத முற்பட்டபோது, அவருடைய எழுத்தின் கழுத்தின் மேல், மதத்தின் கூரிய வாள் விழ ஆரம்பித்தது.

அதை மீறித்தான் அவர் சீறி எழுந்தார்: மதத்தின் மாயங்கள், அற்புதங்கள், அவர் முன்பு எரிபட்ட மிளகாயாக மாறின.

அன்றைய சமுதாய வளர்ச்சி, சூழ்நிலைகட்கு ஏற்ப அந்த மிளகாய், நெடியை எழுப்பி, மூச்சைத் திணறடித்ததேயன்றி, வள்ளுவர் பெருமான் நெஞ்சுரத்தின் முன்பு நீண்ட நேரம் நிற்க முடியாப் புகையென ஒடி மறைந்தது!

அவர் காலத்தில், கிறிஸ்துவம், என்ற புல், பூண்டுகள் தோன்ற -ஏசு நாதர் என்ற மழையே பெய்யவில்லை.

கால வளர்ச்சியின் பரிணாமம் புரியாத சில மத வெறியர்கள், இன்றையத் திருவள்ளுவராண்டுக் கணக்கை விளக்கொளியாக ஏந்திக் கொண்டு - 'திருவள்ளுவர் கிறித்துவரா?' என்று கேட்டு, தமது மத அரிப்புக்கு இதமாக சொறிந்து கொள்கிறார்கள்.

காலொடிந்து போன அந்த நொண்டிகள், வணிகன் ஏலேலசிங்கனையும், பாதிரி தோமாசையும் இரு மரக்கட்டைகளைக் கால்களாக்கிக் கொண்டு, மதச் சடுகுடு ஆடிப் பார்க்கிறார்கள்.

காலக் காற்றின் முன்பு ஆலாய் பறக்கும் அந்தக் கருத்துக்கு 'அமெரிக்கப் பணம்' ஆலவட்டம் வீசுகிறது.

தமிழை இலக்கண வழுவறக் கற்று, திருக்குறளை எழுத்தெண்ணி ஆழ்ந்து படித்து, அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ஜி.யு.போப் என்ற மேனாட்டுத் தமிழ் மாணவர்!

ஆங்கிலத்தில், திருக்குறள்போல் ஒரு நூல் இல்லையே, உலகப் புலவர்கள் யாரும் இன்றுவரை இப்படியொரு நூல் இயற்றிட முயற்சி கூடச் செய்யவில்லையே என்பதற்காக, திரு. போப் அவர்கள், அழுக்காற்றில் நீந்துகின்ற அரவமாக மாறவில்லை.

திரு.போப், கிறிததுவக் கூட்டுக்குள் அய்யன் திருவள்ளுவரை அடைத்துக் கோயில் கட்ட விரும்பவில்லை.

காரணம், அவர் தேர்ந்த சிந்தனையாளர்! வழுவிலா ஆய்வாளர் திறன் மிக்க எழுத்தாளர்!

நஞ்சுண்டு சேய் காக்கும் தாயைப் போல, கடும் இன்னல் தளையுண்டு உலகத் தலைமுறைகளுக்கு உயிரறிவு காக்க, பொய்யகற்றி, புதுமையேற்றி, வையகமே வாழ்த்தும் அறிவுச் செல்வங்களை அவர் வழங்கினார்.

அத்தகைய மேதைகூட, அய்யன் திருவள்ளுவரைக் கிறித்துவர் தான் என்று, உறுதியை அறுதியிட்டுக் இறுதியாகக் கூறவில்லை.

"அடக்கம், அறம், பாவ மன்னிப்பு என்பன கிறிஸ்துவ இலட்சியங்களாக இருந்தும்கூட, அவற்றைத் தத்துவமேதை அரிஸ்டோட்டில் தமது நூலிலே குறிப்பிடவில்லை.

தமிழ் அற நெறியாளரான அய்யன் திருவள்ளுவர், இந்த மூன்றையும் மிக வலிமையாக மக்கள் மனதில் பதிய வைத்துள்ளர்.

அவருடைய அருமையான செய்யுள்களுக்கு - இவை தாம், ஆய்வுப் பொருட்களாக உள்ளன. எனவே, நாம் இந்தத் தமிழ்க் கவிஞரை ஒரு கிறித்துவன் என்றே அழைக்கலாம்.

-அருட்டிரு டாக்டர் ஜி.யு.போப்.

"Humility, Charity and Forgiveness of injuries, being Christian qualities are not described by Aristotile... Now these three are forcibly inculcated by the Tamil Moralist These are the themes of his finest verses. So far, then we may call Tamil Poet a Christian”

-Rev. Dr.G.U.POPE

"கிறித்துவத்தின் தேன் சிந்தும் மலர்களெனக் கருதப்பட்ட அந்த மூன்று இலட்சியங்களையும், பல்கலை வித்தக மேதை அரிஸ்டோட்டில் என்பவராலேயே அவரது நூல்களில் குறிப்பிடப்படவில்லை.

ஆனால், ஒரு தமிழ்க் கவிஞரால் அருமையாகப் பயன்படுத்தி எழுதப்பட்டுள்ளதால், நாம் அவரை ஒரு கிறித்துவன் என்றே அழைக்கலாம்” என்றாரே தவிர, அய்யன் திருவள்ளுவர் ஒரு கிறிஸ்தவர்தான் என்று வலியுறுத்திக் கூறவில்லை.

திரு. டாக்டர் போப் அவர்கள், கிறித்துவத் திருமறைக் காவலராக இருந்ததனால்தான், May Call என்ற வார்த்தையை ஆண்டுள்ளார்.

ஒரு மத எல்லையின் காவலராகக் கருதாமல் - உலக மக்கள் மத எல்லையின் பொறுப்பாளராகத் தன்னை உயர்த்திக் கொண்டிருக்கிறார்!

அறிவை அலைக்கழித்துவிட்டு, பொருளை நாடிச் செல்லும் கிறித்துவ மதவெறியர்கள், அமைதியாக வாழும் தமிழ் மக்களிடத்திலே மதச் சர்ச்சைகளை எழுப்பி, கலங்கிய நீரிலே கயலைத் தேடி ஆதாயம் பெறப் பார்க்கிறார்கள்.

புனிதத்தினால் அச்சடிக்கப்பட்ட பைபிள் வாசகங்கள், புரையோடிய ஒரு சமுதாயத்திற்கு மருந்தாகப் பயன்படுகிறது என்பது உண்மை!

அந்த மருந்திலே, நஞ்சைக் கலப்பவர்களை எப்படி மக்கள் மன்னிப்பார்கள்.

அவர்களின் தீவிர மதவாத வெறி, நாட்டிலே மதப் பிளவு மேடு பள்ளங்களை மீண்டும் உருவாக்காதா?

அய்யன் திருவள்ளுவர் நூல் எழுதத் தொடங்கியபோது, கிறித்துவம், இசுலாம், சீக்கியம் என்ற மதங்களின் கர்த்தாக்கள், அவரவர் தாய் வயிற்றிலே சூல் பெறாத காலம்!

"யூதம், கன்பூசியம், பார்சியம் என்ற மதங்கள் திருவள்ளுவர் காலத்திற்கு முன்பே பிறந்தவை. அவை தமிழ் நாட்டிற்குள் அடியெடுத்து வைக்காத நேரம் - அதாவது கி.மு. காலம்.

இன்று நம்மிடையே ஆல் போல தழைத்துள்ள சைவம் வைணவ சமயங்கள், மிகப் பழமை வாய்ந்தனவே ஆயினும், இப்போதுள்ள நிலையில் அய்யன் திருவள்ளுவர் காலத்தில் சிறிதும் இருந்தில.

அய்யன் திருவள்ளுவருக்குப் பின்னரே, நாயன்மார்களும் - ஆழ்வார்களும் தோன்றி, இந்நாளில் நிலவும் நிலையிற், சைவ - வைணவ சமையங்களைப் பல்லாற்றானும் பரப்பி வளர்த்தருளினர்.

அய்யன் திருவள்ளுவர் காலத்தில், உலகாயுதம், வைதிகம், சமணம், பெளத்தம் எனும் சமயங்கள் மட்டுமே, தமிழகத்தில் பரவியிருந்தன எனத் தெரிகிறது"

புலவர் த. ரா. முருகவேள், எம்ஏ, எம்.ஓ.எல். - திருவள்ளுவர் உடன்படாத கொள்கைகள் சில” (திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டு )

எனவே, அய்யன் திருவள்ளுவர் நூல் எழுத முற்பட்டபோது, உலக மதங்களின் பரிணாம வளர்ச்சி இது என்றால், "திருவள்ளுவர் கிறித்துவரா?" என்று கேட்பது மதக் கிறுக்கே தவிர, அறிவுச் செருக்கென்று எப்படி ஏற்பர் அறிஞர்!

அவர் காலத்தில் இருந்த மதவாதிகளின் கூரிய வாள், அய்யன் திருவள்ளுவரது எழுத்தின் மீது விழ ஆரம்பித்தபோது, தமிழுக்குள்ள பேராண்மை அவருக்குப் பெரிதும் பயன்பட்டது.

அதனால்தான், எல்லாச் சமயங்களும் - மக்களும் ஒப்பும் வகையில் - அவரால், திருக்குறள் என்ற பொதுமறையை எழுத முடிந்தது. திருக்குறளின் ஒவ்வொரு எழுத்துகளிலும் இருக்கின்ற வீரம், அவரை வாழ்க்கைக் களத்தின் போர் வீரனாகவே மாற்றியிருக்கின்றது.

இல்லாவிட்டால், இத்தனை மதங்களையும் எதிர்த்து - அதே நேரத்தில் அவர்கள் அனைவரும் உடன் படத்தக்க வகையில் - ஒரு பொதுமறையை நூலாக எழுதியிருக்க முடியுமா?

மனித வாழ்க்கையெனும் களத்திலே, ஆசாபாசங்கள் என்ற எதிரிகளை அய்யன் திருவள்ளுவர் வினாடிக்கு வினாடி சந்தித்தார்.

ஆழியில் பிசைந்து வைக்கப்பட்ட மண், குயவன் கையால் முழுமை பெறுவதைப் போல, மனிதனுடைய உணர்ச்சிகள் - அவர் எழுதிய தத்துவங்களுக்கு வளைந்து கொடுக்க ஆரம்பித்தன.

அய்யன் திருவள்ளுவரிடமிருந்த பேரறிவு, வானத்தின் வெட்ட வெளியிலே இருந்து அவருக்குப் பரிசாக அளிக்கப்பட்டதோ, அல்லது தேவதூதன் ஒருவனாலே ஒளியாகக்கருவில் திணிக்கப்பட்டதோ அல்ல!

மதங்களின் அற்புதங்களால் - மனித வயிற்றில் புகுந்த வரலாறுகள், அதை - அப்படியே மக்கள் நம்ப வேண்டும் என்ற மதக் கட்டுப்பாடுகள் - அய்யன் திருவள்ளுவர் பெருமானுக்கு அப்போது இல்லை - அதனால், இப்போதும் - எப்போதும் - இல்லை.

உதிரச் சகதியில், நரம்புப் பந்தரின் கீழ் சூலாகி, கூன் விழுந்த உடலோடு சுருக்கமாகப் பிறந்த ஒரு சாதாரண மனிதர் அவர்! கூன் என்றாலே அறிவுதானே!

அய்யன் திருவள்ளுவருக்குக் கல்வி அறிவைப் புகட்ட, அவரது நாவை நோக்கி எந்தச் சூலமும் வந்ததில்லை.

ஓயாத சிந்தனை! ஓயாத எண்ணச் சூழல்கள்! இவற்றினிடையே சிக்கியவர், 'காலத்தைப் படைப்பவனும் - காலத்தால் படைக்கப்பட்டவனும் கவிஞன்' என்ற உண்மையை உறுதிப்படுத்தியவர்!

மக்களிடையே மண்டிக் கிடந்த மனப் போராட்டங்களை, வாழ்க்கைச் சிக்கல்களை வேரறுக்க, ஞான ஞாயிறாய் வளரலானார்.

சாயாத தமிழ்ச் சமுதாயம் சாய்ந்து விடக்கூடாதே, தன்மானத்துடன் அது தனது பண்பாட்டினை ஓம்பி, தரணிக்கு முன் தலை நிமிர்ந்து வாழவேண்டுமே, என்பதற்காக அவர் பெருமுயற்சியில் ஈடுபட்டவர் அவரது எழுத்துத்துறைக்கு அதுதான் அறிவு மூலம்.

தமிழுக்காக உழைக்க வந்த இடைக்காலக் கவிஞர்களைப் போல, விதி என்ற இரண்டு எழுத்துக்களோடு தனது வாதத்தை நிறுத்திக் கொள்ளவில்லை, அய்யன் திருவள்ளுவர்.

குறள் என்ற மூன்றெழுத்துக்களால் தனது வாதத்தை விரிவு படுத்திக் கொண்டவர்! வியப்பானது கூட அல்ல - இது!

தமிழ் என்ற அவரது தாய் மொழி - மூன்று எழுத்தாலானது. அதன் அடிப்படையிலேதான், முதற் குறளை 'அ'என்ற உயிர் எழுத்தில் துவங்கி, 1330-வது குறளை - 'ன்' என்ற மெய் எழுத்திலே முடித்தார்.

அவரது குறளுக்கு அடிப்படை உணர்ச்சிகளை வாரி வழங்கியது - தொட்டிலிலே சிரிக்கும் மழலையின் குழி விழுந்த கன்னம் முதல் - உரனெனும் தோட்டியான் வரையிலாகும்.

உவமைக்கு அடங்குகின்ற மனித இனத்திலேயிருந்து, உவமைக்கு அடங்காத ஏதோ ஒன்றுவரை - உணர்ச்சிகளை வாரி வாரி வழங்க ஆரம்பித்தன - அவருக்கு !

கொந்தளிக்கும் கடல்!
வெடிக்கின்ற நிலம்!
வீசுகின்ற புயல்!
நிமிர்ந்த நெடுங்குன்றம்!
நிமிராத வயற் கதிர்கள்!
ஓடுகின்ற மேகங்கள்!
ஓடாமல் நிற்கின்ற அடிவானம்!
காதலுக்கு ஊஞ்சலாட்டும் தென்றல்!

இவை கவிஞன் ஒருவனது சிந்தனைகளை வளரவைக்கும் ஆசான்களாகும்!

ஆனால், அவை அய்யன் திருவள்ளுவனாருக்கு ஆசான்களாக மட்டுமல்ல, அறிவின் ஆணிவேர்களாகவே அமைந்து விட்டன!

இயற்கை தரும் இந்தத் தத்துவங்களை விட்டுச் சிறிது மாறி இருந்தால், அவர் கோயில்களிலே உள்ள சிற்பங்களின் பக்கத்திலே நின்று கொண்டு பதிகங்களைப் பாடியிருப்பார்!

அவரைச் சுற்றிச் சுற்றி வளையம் போட்டது மனிதனுடைய வாழ்க்கையே தவிர, சொர்க்கமும் - நரகமும் அல்ல! புண்ணியமும்- பாவமுமல்ல! நல்வினையும்-தீவினையும்தான்.

அய்யன் திருவள்ளுவரைத் தட்டிக் கொடுத்து எழுது என்று கூறியது, அவரது நண்பர்களும், வாழ்ந்த ஊரும் - சுற்றுச் சார்பான சூழ்நிலைகளும், வாழ்க்கைத் துணைவியுமாகும்.

தேனைச் சேகரிக்க வண்டுகள் நெடுந்துாரம் ஒடுவனபோல, ஒரு மனிதன் உண்மையைச் சேகரிக்கவும் மக்கட் சமுதாயத்தில் ஒடி அலைய வேண்டி இருக்கிறது!

மனோ வேகத்தை மட்டும் சற்று அதிகமாகவே ஒட்ட ஆரம்பித்தால் அதை மிக மிக விரைவு படுத்தினால், நிலவைக் குத்தி, விண்மீனை ஊடுருவி, பரிதியைத் துளைத்து அண்டத்தில் போய் தைத்து விடும்!

கண்கள், முகத்திலே மட்டுமல்லை - அகத்திலேயும் உண்டு! அதைத் தியானம் என்று வைதீகம் கூறினால், உள்ளொளி என்று அய்யன் திருவள்ளுவர் வரம்பு கட்டுகிறார்.

தமிழ்ச் சமுதாயத்தில் இருக்க வேண்டிய இலட்சணங்கள் எப்போதாவது ஒரு முறை குறைந்துவிடுமானால், அப்போதே நாம் அழிந்து விடுவோம் என்ற அச்சம் அவரிடம் அதிகரித் திருந்தது!

அவை அழியக் கூடாது என்று அவர் கருதியதால்தான், தமிழ்ச் சமுதாயத்தை அழிக்காமல் இருக்கக் கூடிய கற்பூரத்தைத் தயாரித்தார்! அக் கற்பூரம் என்ன தெரியுமா?

அனைத்து நாடுகளுக்கும் பொதுமறையாகுந் தன்மைத்தென. தனித் தமிழ் மறையாக, நல்லார் பலராலும் நவின்றும், நவில்வித்தும் வருகின்ற உலகறி உண்மை நூல்! ஒழுக்க நூல், ஒழுகலாறுக்குரிய இலக்கண மறை! இதற்கேற்ப வாழ்வாங்கு வாழ்ந்துறைவதே சமுதாயமாகும்!

கொடுமையான புயலடிக்கின்ற நேரத்தில், கணவனோடு கோபித்துக் கொண்ட பெண்ணொருத்தி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு இருட்டிலே தாய்வீடு செல்வாளானால், அவளைக் காப்பாற்றும் பொறுப்பு இயற்கையிடமே விடப்படுகிறது அல்லவா?

அதனைப் போல, அறிவின்மீது கோபப்பட்டுத் தமிழ்ச் சமுதாயம் தனது மக்களை இருட்டிலே அழைத்துச் செல்லும் போது, அதைக் காப்பாற்றும் பொறுப்பு இயற்கையிடமே விடப்பட்டு விடுகிறது.

விழியைப் பிடுங்கக் கூடாது, வெட்டிக் கிழிக்கும் மின்னல் - வழியைக் காட்ட வேண்டும்.

அய்யன் திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில், இப்படி ஒடுகிற ஒரு சமுதாயத்தை வழி நடத்துவதற்காக, சில கொடுமையான மின்னல்கள் வீச ஆரம்பித்தன.

அகக் கண்ணையும் - புறக்கண்ணையும் சேர்த்து, அவை குருடாக்கி விட்டன.

நெறிகள் சில நேரத்தில் விழியை ஊதி அணைக்கும் மின்னல்களாகக் கூடத் தோன்றலாம்.

அவர் காலத்தில், ஒன்றிரண்டு இப்படி வழி காட்டத் தமிழ்ச் சமுதாயத்தின் முன்னே வந்தன!

எந்த மார்க்கங்கள் அவை? எந்தச் சமயங்கள் அவை? என்பதை, எந்த ஒரு குறளிலும், திருவள்ளுவர் எங்குமே குறிப்பிடவில்லை.

"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நான
நன்னயம் செய்து விடல்"

என்ற குறளை அவரே எழுதிவிட்டு, அந்த சமயக் கொடுமை களைச் செய்தவர்களையும் குறிப்பிடுவது நல்லதல்ல என்பதை எண்ணியே அவர் அதை எழுதாமல் விட்டு வட்டார்.

அறிவின் நாயகரான அய்யன் திருவள்ளுவர் எண்ணியத் தமிழ்ச் சமுதாயம், ஏன் ஒரே உலகச் சமுதாயம், அவர் எழுதிய 1330 குறட்பாக்களிலும், அது எப்படி இருக்க வேண்டும் - எவ்வாறு இயங்க வேண்டும் என்பதையும் ஒவியங்களாக வழங்கியுள்ளார்.

குழந்தை வளர்ப்பு முதல் - குடியாட்சித் தத்துவங்கள் வரை, காதல் முதல்- சாதல் வரை, தொழுதல் முதல்-தேற்றுதல் வரை, அவர் குறட்பாக்களிலே தோற்றமளிப்பதை நம்மால் காண முடிகின்றது.

'காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்தப் பையடா, -'தோலெலும்பு செந்நீரும் - வெண்ணிரும் நாறும் ஊத்தைத் தேகம்' என்று குறிப்பிட்டு மனித சமுதாய ஊற்றிலே நஞ்சைக் கலக்காத அவரின் நயத்தகு நாகரிகத்திற்குத் தமிழ்ச் சமுதாயம் என்றும் நன்றிக்காட்டத் தயங்காது!

அய்யன் திருவள்ளுவரை அடையாளம் கண்டு கொள்ள - பலர், பல வண்ணக் கண்ணாடிகளால் நோக்கினர்!

மனோரஞ்சித மலர் போல-நினைத்தவரது மனநிலைக்கேற்ப, மணத்தை விரவி- குறட்பாக்களை எழுதியுள்ளார் அவர்.

அதனால், சிலர் அவரை சைவர் என்றனர்! கொட்டை கட்டினர்! பட்டை தீட்டினர்! பூணுாலைப் போட்டுப் பூரித்து மகிழ்ந்தனர்!

மற்றொருவர் ஜைனர் என்றார்! ஆதிபகவனுக்கு விளக்கம் தந்தார்! 'மலர்மிசை ஏகினான்' என்ற அவரது வியன்மிகு சொற்றொடர்க்கு, மத அற்புதத்தைக் கொண்டு கூட்டித்தத்துவம் பேசிப் பார்த்தார்.

வேறொருவர், அவரை வைணவர் என்றார்! அதற்காக அவரது 'தாமரைக் கண்ணான் உலகு' என்ற குறளின் அடிகளிலே தெண்டனிட்டார்.

'வாலறிவன்' என்ற அவரது குறட்பா சொல்லுக்கு, வாலுடைய அனுமாரை ஒவியம் தீட்டி, தனது வீட்டிலே தொங்கவிட்டு - விளக்கம் கூறி வீழ்ந்தே போனார்!

இடையிலே ஒருவர் பெளத்தர் என்றார்! பன்றிக் கறியைத் தின்று பேதியாகிச் செத்தார் புத்தர் என்பர் மேனாட்டார்!

தனது மதத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினருக்கு, செத்த இறைச்சியைத் தின்றிட அவர் உரிமையும் தந்தார்! அதனால், புத்தர் என்று கூறியவரும், பாவம் வீழ்ந்தார்!

இசுலாமியத்தைச் சேர்ந்தவர் அவரை முஸ்லிம் என்றார். திருக்குறள் என்ற பெயரிலே உள்ள 'ள்' என்ற எழுத்தை நீக்கி, 'ன்' என்ற எழுத்தைக் கூட்டிச் சிலருக்கு விளக்கம் உரைத்து." திருக்குரான்தான் திருக்குறள்” என்று தோள் தட்டி ஆடினார்!

மேலை நாட்டு மேதைகள், திருவள்ளுவர் கருத்தைப் படித்து மெய் சிலிர்த்து, அவரை ஒரு கிறித்துவர் என்றே கூறலாம், என மன நிறைவு மட்டுமே அடைந்தனர்!

ஆனால், கிறித்துவ மத வெறியர்கள் சிலர், 'திருவள்ளுவர் கிறித்துவரா?' என்ற வினாவைத் தொடுத்து, தமிழ் அறிஞர்கள் முப்பத்தெட்டு பேரை அழைத்து, சென்னை மாநகரிலே, கருத்தாய்வு விவாதப் போட்டி மாநாட்டு விழா ஒன்றை மே, 3, 4, 1952ம் ஆண்டு நடத்தினார்கள்!

அந்த விழாவிற்குத் தலைமை வகித்த பெரும்புலவர் ஞா. தேவநேயப் பாவாணர் என்ற சிரம் பழுத்த கிறித்துவர், திருவள்ளுவர் காலம் கி.மு. மூன்றாம்.நூற்றாண்டு என்று கூறி, விழா எடுத்தவர்களின் முகத்தைத் தொங்க வைத்தார்!

மதவெறி பிடித்த ஒவ்வொருவரும், அய்யன் திருவள்ளுவரை அவரவர் மதக் கோட்பாட்டிற்குள்ளே அடக்கிட பெரு முயற்சி எடுத்துத் தோற்றார்கள் - இந்த இருபதாம் நூற்றாண்டில்!

எந்த நூற்றாண்டானாலும் சரி, தமிழ்ச் சமுதாயம, ஒன்றை மட்டும் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பொருள், ஏதாவது ஒன்றினுள் அடங்கி விட்டால், அது இன்னொரு பொருளில் அடங்காது.

அய்யன் திருவள்ளுவர், சைவ எல்லையுள் சிக்கிக் கொண்டு விட்டால், வைணவ எல்லையில் அவரைப் பார்க்க முடியாது.

பௌத்தத்தில் அவர் அடங்கி விட்டால், - பைபிள் பக்கம்கூட அவர் நிற்க மாட்டார்.

எல்லோருக்கும் அடங்கியவராகவும் - அடங்காதவராகவும் இருக்கின்ற காரணத்தால், மக்கள் அவரை என்றென்றைக்கும் கவனம் வைத்துக் கொள்ள வேண்டும்.

அய்யன் திருவள்ளுவர், பாதை - தனிப் பாதை! பொதுவான பாதை !யாரையும் எவரையும் வாழ்க்கைப் பயணத்திற்கு அழைத்துச் செல்லும் அறம் சார்ந்த பாதை!

மனிதன் என்பவன் எவனும் - அந்தப் பாதையை நம்பி, தனது வாழ்க்கைப் பயணம் போகலாம்.

அவருடைய பாதையில் - எல்லாருடைய மதச் சுவடுகளும் வந்து கலப்பதால், அவரை - அவரவர் மத உரிமையோடு கொண்டாடுகிறார்கள்!

அய்யன் திருவள்ளுவரது கருத்துக்கள் - எந்த நிலத்திலும் முளைக்கும் தரம் படைத்தவை - உரமுடையவை !

அவருடைய உருவம், எல்லாருடைய மனக் கோயிலிலும் குடியேறிடும் தகுதி பெற்றது ! தனியாக அதற்கோர் கோட்டம் தேவையில்லை - வணங்க - வாழ்த்த !

மறதியுடையவர் மக்கள் என்பதால், கலைஞர் அவருக்கு ஒர் எழுத்துக் கோட்டம் எழுப்பினார். அதைத் தமிழர் என்றும் மறவாரல்லவா?

தமிழ் மக்கள், அப்பெருமகனைத் தமிழனாக எண்ணிய பிறகே - அவர் அய்யன் திருவள்ளுவரானார்!

தமிழ்ச் சாதியிலே ஒருவராகப் பிறந்துவிட்ட அவரை, தரணி இன்று அடையாளம் கண்டு கொண்டது!

உலக மக்கட் சமுதாயத்திற்காக, அழியாத் திருக்குறட் புதையலை வழங்கியவர் அய்யன் திருவள்ளுவர் பெருமான்!

தமிழ்ப் பண்பாட்டின் உயிர் மூச்சை, திருக்குறளிலே வைத்துப் பூட்டி, பொதுமறைப் பேழையாக மக்களிடம் அவர் வழங்கி விட்டார்!

அந்தக் காலக் கருவூலத்தை, பண்பாட்டுப் புதையலை, அறிவுச்சுரங்கத்தை, தமிழ் மக்கள் எப்படியெல்லாம்' அனுபவிப்பார்களோ, அது அவரவரது அறிவுக்கு உட்பட்ட கடமையாகும் - உரிமையாகும்!

ஆனால், அந்த மனிதகுல மேதையின் காலடிக்கு, அறம் பழுத்த அவரது குறட்பாவைப் படித்துப் பயன்பெற்று, சிரம் பழுத்த மனிதர்களாக நாம் நடமாடுவதும் ஒன்றுதான்- தமிழினம், அய்யன் திருவள்ளுவருக்கு காட்டும் நன்றியாகும்.

வான் கோள்களைத் துளைக்கும் உலக அறிவு, கலைஞர் அய்யன் என்று பெயர் சூட்டிய திருவள்ளுவனாரின் வாழ்வியல் விஞ்ஞான அறிவை, திருக்குறளை, இந்தியத் தேசிய நூலாக்குமா?

கலைஞர் கருணாநிதி அவர்கள் அந்த வேண்டுகோளை தில்லி மத்திய அரசு முன்பு வைத்துள்ளார். கண் திறக்குமா - காலம்?

மத்திய அரசு மதிக்குமா? - பார்ப்போமே!