அய்யன் திருவள்ளுவர்/காந்தி அண்ணல்

,

மனிதப் புனிதன்
காந்தியண்ணல்


ன்பில் கவர்ச்சி
உண்மையில் பற்று,
பண்பில் நேர்மை,
ஒழுக்கத்தில் கட்டுப்பாடு,

இன்றைய சரித்திர உலகம் - இத்தகைய ஒரு மாமனிதரைக் காந்தியடிகள் என்று இயம்புகிறது.

மனித வர்க்கம், எப்படியோ பிறந்து, எப்படியோ வளர்ந்து, இயற்கையின் விளைவுகளால் தேய்வுற்று, அணுக்களாகப் போகட்டுமே என்று எண்ணுகின்ற நெஞ்சத்தின் பெயர் கயமையாகும்.

ஆனால், இனி பிறக்கும் கருவிற்கு மனித வர்க்கம் நீங்காத் துணையாக நிற்க வேண்டுமென்று, ஓங்கிய எண்ணத்தினால் கடனாற்றப் புறப்பட்ட சில புனிதர்கள், கல்லறைக்குப் பின், சடங்காக அல்ல - சத்தியமாக நிற்கிறார்கள்.

அரசியலில் அடிமைப்பட்ட இந்தியா-கலாச்சாரத்தால் கண் திறந்து, ஒருமைப் பாட்டால் உணர்வைப் பெற்று நாகரிகத்தால் நடமாடிடும் சக்தி இருந்தும், எண்ணெயில் போட்ட கரிவேப்பி லையாகச் சுருங்கி இருப்பது - ஏன், என்று காந்தி அடிகள் கண்டார் கேட்டார்!

தோலின் நிறத்தைக் கொண்டுள்ள ஒரு மனிதனுடைய ஆத்மத்தை எடை போடுகின்ற கீழான பண்பு - வெள்ளையனிடம் இருந்தது.

முள்ளம்பன்றியைப் போன்றிருக்கும் பலாப்பழம் - நல்ல சுவை மிக்க சுளைகளை உள்ளே கொண்டிருக்கிறது.

கரிய நிறமும்-வெள்ளை நிறமும்-மஞ்சள் நிறமும், பேரொளியின் சிதறல்களே தவிர, வேற்றுமைக்கென்றே விதைக்கப்பட்ட வண்ணங்கள் அல்ல.

முப்பட்டைக் கண்ணாடியின் வழியாக சூரியனை பார்க்காமல் இருந்தால், சூரியன் நிறம் வெள்ளைதான். பெருக்கெடுத்து ஒடி வருகின்றபேரொளி, தட்ப-வெட்ப நிலையினால் உயிரினத்தைப் பாதுகாக்கும் தோலை நிறமாக்கி மகிழ்கிறது.

எல்லா மலர்களும் - ஒரே நிறமாக இருந்தால் - பூக்களின் பலவீனம் தெரியும்.

மஞ்சள் நிறம் மட்டும் இல்லையென்றால் - கண்நோய் தீருவது கிடையாது.

பச்சைநிறம் மட்டும் இல்லையென்றால்-இரத்தச் சுரப்பிகள் வேலை செய்யாது.

சிவப்பு நிறம் எப்போதுமே இருந்தால் மிரட்சி எப்போதுமே இருந்து கொண்டே இருக்கும்.

ஊதாநிறம் ஒன்றாலேதான்-இந்த உலகம் வாழ்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

கருமை நிறம் - மிகத் தேவையானது என்று - வைதீகன் சொல்லுகிறான் - பார்வையுடன், நேர்க்குத்தலை ஒடுக்கி மடக்குவதற்காக.

ஆகவே, நிறத்துக்குள் இருக்கின்ற நிரந்தரமான வரலாற்றை விஞ்ஞானத்தோடு விளையாடுகின்ற வெள்ளைக்காரனின், கந்தலான இதயத்தைக் கொண்டு கணக்கிடும்போது - கறுப்பர்கள், சாத்தானின் படைப்பாக அவன் கண்கட்குத் தெரிந்தார்கள்.

காந்தியடிகளின் ஞான விழி, வெள்ளையனை அக்கக்காய் ஆராய ஆரம்பித்தது.

ஒரு கோடி முத்தத்தால் உருவான ஓர் உயிரை, துப்பாக்கி யால் துளைத்து ஆளலாம் என்று நினைத்தான்- வெள்ளைக்காரன்.

முத்தம் - பயங்கரமான ஒலியல்ல. மென்மையான அந்த மெல்லோசையால் - பைபிளை அருள் வீழ்ச்சியால் பொழிந்த- இயேசுவே உருவானார்.

வெள்ளையன் பக்கத்திலே இருக்கின்ற சொர்க்கம் - அவன் கண்கட்கு இலையுதிர் காலமாகவே தெரிந்தது.

கீழை நாட்டுத் தத்துவத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட காந்தியடிகள், மேலைநாட்டுத் தத்துவத்தில் புதைந்திருக்கும் பூதாகார உருவத்தைக் கற்பனை செய்ய முடியாத ஒரு குழந்தையைப் போலப் பார்த்துக் களித்தார்.

அதனால், தென்னாப்பிரிக்காவில் அவர் மனித உரிமைக்காகத் தன்னுடைய போராட்டத்தைத் துவக்கினார்.

கருப்பு மனிதனுக்கு வீரமுண்டா? இது வெள்ளையன் அன்று கேட்ட அகந்தைக் கேள்வி.

வீரமுண்டு என்பதனை காந்தி பெருமான், தமது அறம் சார்ந்த அகிம்சை செயல்களால் நிலை நிறுத்திக் காட்டினார்.

இல்லையென்றால், தென்னாப்பிரிக்காவிலும், இந்தியாவிலும் பதினொன்று முறை சிறை சென்று, ஆறு ஆண்டுகள் பத்துத் திங்கள்கள் சிறையில் இருந்திருக்க முடியுமா?

காராக்கிரகத்தில் காலம் தள்ளிய அவரது சிறை வாழ்வுக்கு என்ன பொருள்?

சிறையில் இருந்தாலும், வெளியே நடமாடினாலும், நான் நாட்டுக்கும் மக்களுக்கும் எப்போதும் எறும்பாகவே உழைப்பேன் என்பதல்லவா?

காந்தியடிகள் 'நைடதம்' என்ற நூலில் வரும் மன்னன் நளனைப் போல சமையல் பணியாளராக இருந்தார்.

இத்தாலி நாட்டு, நோயாளிகளது சிகைகளை காந்தியண்ணல் சிங்காரம் செய்தார். தனக்குத் தானே முடி வெட்டிக் கொண்டார். சிறையிலே தன்னுடன் இருந்தவர்களுக்கும் முடி வெட்டினார்.

கூலி வாங்கும் அளவும் நில்லாய் நெடுஞ்சுவரே என்று பாடிய கம்பர் பெருமானைப் போல, கூலிக்காரனாகவும் வேலை செய்தார்.

'ஒரு கடப்பாரையைக் கொடுங்கள் உலகக் கோலத்தின் இருசை மாற்றிக் காட்டுகிறேன் என்று, உலகப் போர் மூலம் உலகை உலுக்கிக் குலுக்கிய மாவீரன் இட்லரைப் போல, செருப்புத் தைக்கும் தொழிலையும் செய்தார். ஒவியப் புலவன்ாகவும் இருந்தார்.

மாண்பு பெறப்போகும் மாணவர்கள் மனதின் ஆசுகளை அகற்றிய டாக்டர் ராதா கிருஷ்ணனைப் போல ஆசிரியராகவும் பணியாற்றினார்.

வீராங்கனை ப்ளாரன்ஸ் நைட்டிங்கேலைப் போல, நலிந்த நோயாளிகளுக்கு உரிய பணிவிடைகளைச் செய்யும் நர்ஸாகவும், செவிலியாகவும் - பணிபுரிந்தார்.

தனது துணைவியான அன்னை கஸ்தூரிபாயின் துணிகளைத் தைத்துத் தந்தார். அதே போல சர்தார் வல்லபபாய் படேலுக்கும் - இந்திய சுதந்திரத்துக்கும் - எதிரியான வெள்ளை இனத்தைச் சேர்ந்து ஜெனரல் ஸ்மட்ஸுக்கும் செருப்புகளைத் தைத்துக் கொடுத்தார்.

இத்துடனா இருந்தார்? தான் செய்த காலணிகளுக்கு 'அகிம்சா காலணிகள் என்று பெயர் சூட்டி - விற்பனைக்கும் அனுப்பினார் காந்தியடிகள்.

பள்ளிகளின் பாடத் திட்டத்தில், சமையல் செய்வதை, கழிவறைகளைக் கழுவுவதை, டாய்லெட் சுத்தம் செய்வதைப் பாடமாகச் சேர்ப்பதுடன், பிள்ளைகளுக்குப் பயிற்சியும் தர வேண்டும் என்று வாதாடினார்.

ஏனென்றால், பரிசுத்தம் இறைத் தொண்டுக்கு ஈடானது என்று நம்பினார். அதனால், தென்னாப்பிரிக்காவிலே இருந்து காங்கிரஸ் மாநாட்டிற்கு வந்த காந்தியடிகள், மாநாட்டின் கழிவறைகளை எல்லாம் சுத்தம் செய்தார்.

காந்தியடிகளின் இந்தத் தொண்டு, செயல், மாநாட்டை மட்டும் அல்ல, இந்தியாவையே, ஏன், உலகத்தையே பரபரப்பாக்கி விட்டது.

கழிவறைகளை ஏன் சுத்தம் செய்கிறேன் தெரியுமா? செருப்புகளைத்தைக்கிறேனே. ஏன் புரியுமா? முடிவெட்டியாகப் பணி செய்தேனே - எதற்கென அறிவீரா? சமையல் வேலைகளைச் செய்தது வேலையற்றவன் என்பதற்காகவா? சிந்தனை செய்தால் எனது உண்மை புரியும் - என்றார் காந்தியடிகள்.

சுயராஜ்ஜியம் பெறுவதற்கு என்னை நான் தகுதியாக்கிக் கொள்கிறேன் என்பதற்காகத்தான்!

ஒவ்வொரு சுயராஜ்ஜியக் குடிமகனுக்கும் தன் கையே தனக்குதவியாக இருக்கவேண்டும் என்பதற்குச் சான்றாக, நான் அந்தப் பணிகளை எல்லாம் செய்கிறேன்! புரிகிறதா இப்போது? என்று காந்தியண்ணல் விளக்கினார்.

இந்தியத் திருநாட்டில் ஒரு தூய்மையான, சுத்தமான, சமுதாயம் உருவாக வேண்டும் என்பது என் ஆசை ! அதற்குக் கழிவறைச் சுத்தம் ஓர் ஆரம்பப் பாடம் என்று கருதுகிறேன் என்றார்!

பத்திரிகை நிருபர் ஒருவர், ஒருமுறை காந்தியடிகளை, "இந்தியாவின் வைஸ்யராயாக நீங்கள் ஆக்கப்பட்டால் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டார்

அதற்கு அந்தப் பெருமான், "நான் தோட்டி வேலை செய்வேன்” என்று நறுக்கென்று பதில் அளித்தார்.

என்ன காரணத்தாலோ மருத்துவராக வேண்டிய மகாத்மா, வழக்கறிஞராக ஆகிவிட்டார்.

காந்தியடிகளாருக்கு அருகிலேயே ஒருவன் இருக்க விரும்பினால், அவனுக்கு ஏதாவது ஒரு நோய் வர வேண்டும் என்று அவரது சபர்மதி நண்பர்கள் பேசிக் கொள்வார்களாம்!

தென்னாப்பிரிக்காவில் காந்தி இருந்தபோது, ஒரு கர்ப்பிணிப் பெண் பிரசவ வேதனைப்பட்டாள்.

இங்கே நர்சு யாருமில்லை. வெள்ளைக்கார நர்சு ஒருத்தி கறுப்பு நிற கர்ப்பிணிக்கு மருத்துவம் பார்க்க மறுத்தாள்.

இப்போது என்ன செய்தார் கருணாமூர்த்தி காந்தி?

தன்னிடமுள்ள ஒரு பிரசவம் பார்ப்பது பற்றிய நூலகப் புத்தகத்தை மீண்டும் படித்துவிட்டு, அந்தப் பெண்ணுக்கு காந்தியடிகளே பிரசவம் பார்த்தார்-தாயும் ஆனவரைப் போல!

காந்தியடிகளுக்கு தன்னம்பிக்கை அதிகம். அதனால்தான் எல்லாவிதமான சோதனைகளையும் ஏற்கும் உள்ள உரமும் மனத் திறமும் இயற்கையாகவே அவரிடம் அமைந்து விட்டது.

ஜோகன்ஸ் பர்க்கிலிருந்து அவர் டர்பன் நகர் சென்ற போது மார்டிஜ் பர்க் நகர் நிலையத்தின் ரயிலிலிருந்த காந்தியடிகள், வெள்ளையர்களால் வெளியே தூக்கி எறியப்பட்டார்.

'இந்த அவமானத்தை அப்போது எப்படி தாங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்று ஒரு நிருபர் அவரைக் கேட்டார்.

எதையும் தாங்கும் இதயம் எனக்கு இல்லையென்றால், நான் அப்போதே தற்கொலை செய்து கொண்டிருப்பேன் என்று பதில் கூறிச் சிரித்தார் காந்தியடிகள்!

காந்தியடிகளார், அரசியல் துறைக்குக் கற்றுத் தந்த நாகரிகங்களிலே ஒன்று, என்ன தெரியுமா?

காந்தியடிகளின் கால்களை மக்கள் யாரும் தொட்டுக் கும்பிடக் கூடாது என்பது ஆகும்.

அதுபோலவே, காந்தியடிகளது படத்தை ஒரு மனிதன் கழுத்தில் அல்லது கரத்தில் அணிந்து கொள்வதை அவர் அறவே வெறுத்தார்!

வடலூர் வள்ளல் பெருமான் உயிருடன் உலா வந்தபோது, அவரது மாணவர் தொழுவூர் வேலாயுத முதலியார், இராமலிங்க சுவாமிகளது திருவுருவத்தை மண்ணால் செய்து வந்து அவரிடம் காட்டினார் - சிலை அமைப்பைப் பற்றிக் கருத்துக் கேட்க !

வள்ளல் பெருமானுக்கு வாராது சினம்! அன்று என்னமோ குன்றேறி நின்றார்!

"வேலாயுதம், இந்த நாட்டிலே இருக்கும் சிலைகள் போதாஇோ, இதில் என்னையும் ஒரு சிலையாக்கி விட்டீரே" என்று சிவ்ந்த கண்களோடு அவரை நோக்கி, சிலையை வாங்கி கீழே போட்டு உடைத்தாராம்.

காந்தி பெருமானும் வள்ளல். பெருமானைப் போல, தனது படத்தை வணங்க, அது நினைவுச் சின்னமாக ஆவதை வெறுத்தார். இன்று, அவரது படம் கேவலம் ஒட்டு வேட்டை ஈனங்கட்கே பயன்படுகிறது - பாவம்!

கல்கத்தாவிலே இருந்து வந்த ஒருவர். காந்தியடிகளது படத்தைக் கழுத்திலே மாட்டிக் கொண்டு, அவரது பெயரை நூற்றெட்டு முறை உச்சாடனம் செய்து முடித்தார்.

அடிகளாரைப் பார்த்து,"உமது பெயரை உச்சரித்த்தால் தான் எனது முடக்குவாதநோய் போயிற்று" என்று வந்தவர்.அவரிடம் விளக்கிக் கூறினார்.

"இறைவன்தான் உங்களுக்கு சுகம் தந்தார்! காந்தி இல்லை” என்று கூறிய காந்தியார், 'தயவு செய்து உங்களுடைய கழுத்திலே தொங்கும் எனது படத்தை அகற்றி விடுங்கள்' என்றார்.

காங்கிரஸ்காரர்கள், இன்று இந்தியாவின் மாநிலங்களிலே எல்லாம் காந்தியின் கொள்கைகளைக் காற்றிலே பறக்க விட்டு விட்டார்கள்.

ஆனால், கேவலம் ஓட்டு வேட்டைக்காக ஒரு மனிதப் புனிதனின் பெயரை கூறிக் கெடுத்து வாழ்கிறார்கள்.

தேர்தல் என்று ஒன்று இல்லையானால், காந்தியார் படத்தை அறவே கை விட்டு விட்டிருப்பார்கள்! அல்லது மறந்து விட்டிருப்பார்கள்! எல்லாம் காலம் காட்டும் கோலம்!

- The unknown
- "The Hindustan Times" 1.10.1998


இத்தகைய ஒரு வெள்ளுவாவை,அதாவது மனித இனப் பண்பின் முழு நிலாவை, வெள்ளையன் அரை நிர்வாணப் பக்கிரி என்றான்! அது மட்டுமா? அடிகளாரை சட்டத்தால் மிரட்டிச் சதிராடினான்!

காந்தியடிகளுக்கு சத்தியம்தான் தாய் தந்தை! - ஞானம்! உடன் பிறப்பு -அறம் கருணைதான் நண்பர்கள், சாந்திதான் மனைவி! பொறுமைதான் மக்கள்.

இந்த உறவுகளைப் பெற்ற ஒரு மனிதனை, புனிதனை, தூயனை, மக்கள் நேயனை, ஒழுக்கசீலனை, தொழுத கையுள்ளும் பகை ஒடுங்கும் என்ற ஒரு துப்பாக்கிதான் கொல்ல முடியுமே தவிர, ஆணவ, அகம்பாவ, அதிகார துப்பாக்கிகளால் கொல்ல முடியுமா?

அதனைத் தடுக்க அவரிடம் தான் 'அகிம்சை' என்ற கேடயம் இருக்கிறதே. ஆனாலும் ஆங்கிலேயன் சட்டங்களைக் காட்டி ஆர்ப்பரித்தான்

துப்பாக்கி குண்டுகள் - இந்த அரை நிர்வாணப் பக்கிரியைத் துளைத்துவிடும். இது வெள்ளையனின் ஆதிக்க வெறி, நிறத் திமிர்ப்பேச்சு.

காந்திபிரான் இதயம் - கண்ணாடிப் பாறையல்ல, நான் - மரத்தின் வைரம் என்று கூறி, அவர் பிறரை ஏமாற்றவும் தயாராக இல்லை. வைரம் வீழ்ந்தால் பொடிப்பொடியாகி விடும் அல்லவா, அதனால்?

காந்தியடிகளின் நெஞ்சம், இயல்பாக வளர்ந்ததல்ல! மாற்றார் தாக்குதலைத் தாய்ப் பாலாகக் குடித்து வளர்ந்த சக்தி பெற்றது.

காந்தியடிகள், தாக்காமல் விடப்பட்டால், அவர் குழந்தை! தாக்கப்பட்டால், அந்த இதயம் வீரனின் வன்மையைப் பெறும்!

"என்னை ஏற்றுக் கொண்டவன் இருளில் நடப்பதில்லை. ஏனெனில், நானே சத்தியமும் - ஜீவனுமாய் இருக்கிறேன் என்றார் இயேசு.

இதிலே இருக்கின்ற 'என்னை' என்ற சொல்லின் பொருள் என்ன?

அந்த ‘என்னை என்பது, துப்பாக்கி... துந்துபி முழங்கத் துவங்குவதற்கு முன்னால், வெடிகுண்டு கண்டுபிடிப்பதற்கு முன்னால் - தொடங்கிய ஒன்று:

அதனை- இயேசுவும் தேடினார்-பெற்றார். காந்தியடிகளும் தேடினார் - பெற்றார். -

மனிதனால் கொடுத்துப் பெறாத சக்தியை, ஞானத் திரைக்கு அப்பால் கண்டெடுத்த காரணத்தால், வெள்ளையனின் பிடிவாதத்தைப் பள்ளத்தாக்கில் போட்டுப் புதைத்தார்- வார்தா முனிவர்!

அவரது தென்னாப்பிரிக்காவின் எரிமலை நிறப் புரட்சி, இந்தியாவிலே இருக்கிற எண்ணற்ற இதயங்களைத் தொடர ஆரம்பித்தது.

கருத்தவன் கர்த்தாவானான்:சிறுத்தவன் பெருத்தவனானான் காந்தியடிகளை அவன் தேடிக் கொண்டான்.

இங்கிலாந்து நாடு, இந்தக் கோடைக் காலத்தின் காரணமாய், இறகுகள் உதிர்ந்துபோன இந்தியக் கிளியைப் பார்த்து கிண்டல் செய்தது.

காராக்கிரகம் என்ற காராமான மிளகாயை, இங்கிலாந்து அதற்குக் கொடுக்க ஆரம்பித்தது.

அது அக்கக்கா என்று பேசுகிறதா? அல்லது, வெள்ளையனை அக்கக்காய் பிய்க்கிறதா என்று அவனுக்கே புரியவில்லை !

'சுக்கா, மிளகா சுதந்திரம்? சுதந்திரம் என்பது எனது பிறப்புரிமை - இது எனது தாய் நாடு என்றது, விடுதலையின் புரட்சிக் குரல் அதே குரலோடு கிளியும் பேச ஆரம்பித்தது.

காந்தியடிகள், தென் ஆப்பிரிக்காவில் முதலில் செய்த பூகம்ப பிரச்சாரங்கள்-கருப்பனை இந்தியனாக்கியது. பிறகு-அவனை மனிதனாக்கியது.

வெள்ளையனை எதிர்த்தபோது - இந்தியன், இந்தியனாக எதிர்த்தான். போராட்டத்தில், மென்மையை - அகிம்சையைக் கட்டுப்பாட்டைக் கண்ணியத்தைக் - கடமையைக் கடைபிடிக்க வேண்டும் என்று காந்தியடிகள் கூறியபோது இந்தியன் மனிதனான்.

இவ்வாறு, கறுப்பனை இந்தியனாக்கி, இந்தியனை மனிதனாக்கியப் பெருமை அந்த பல்லில்லாத கிழவனையே சாரும்.

காந்தியடிகள்-தியாக வயலின் முதல் விதை, மக்கள் நெஞ்சத்தில், அன்பை-அகிம்சையை நளினத்தோடு கொளுத்திய முதல் தீ என்றும் கூறலாம்!

எளிமை பிறந்த இடம் எங்கோ - நமக்குத் தெரியாது, காந்தியடிகளைப் பார்த்தப் பிறகு அது இங்குதான் பிறந்தது என்பதை நாம் உறுதி செய்து கொண்டோம்.

உலகம் உலகம் என்று கூறுகின்றோமே, இது அழியாமல் இருப்பதற்குரிய காரணமே, தொடர் கதையாகச் சில தலைவர்கள் தோன்றுவதால்தான் என்ற அய்யன் திருவள்ளுவன் கருத்தை நாம் சிந்தித்துப் பார்க்கின்றோம். அந்தப் புனிதத் தலைவர்கள் வேளை வரும் போது மண்ணில் கால் எடுத்து வைக்கிறார்கள். தன்னலமற்றத் தன்மையில் நாள் பார்த்துத் திரும்பி விடுகிறார்கள்.

சூடு பிடித்த அரசியலைத் துவங்குவதற்குரிய அரசியல்வாதிகள் நம் நாட்டில் குப்பைகளாகக் குவிந்து கிடப்பதைக் காண்கிறோம்.

அந்த அரசியல் மீது அன்பைக் காட்டி, பண்பை வளர்க்கும் தலைவர்கள், அறிஞர்கள், விலை மதிப்பிலாச் சொல்லழகன் கவிஞர் வோர்ட்ஸ் வொர்த் கூறுவதைப் போல, மலையடிவாரத்தை விட்டு வெகுதூரம் வந்துவிட்ட ஒரு பாராங்கல்லின் அருகிலே முளைக்கின்ற பூவாக - அந்தப் புனிதர்கள் இருப்பார்கள்.

அவர்களைப் பற்றிப் பாடிய கவிதைகள் - இன்னும் சாக வில்லை என்பதற்கேற்ப- ஒரு சிலர்தான் வருவார்கள் போவார்கள்.

காந்தியடிகளின் இந்தப் பண்பு, வெள்ளைக்காரனுக்கு பிற்காலத்தில் ஒரு பயங்கர அரசியலாக மாறும் என்று அவனுக்கு அன்று தெரியவில்லை.

அவர் இறந்த பிறகு, இந்த வெள்ளையனே விக்கி விக்கி அழும் அளவிற்குக் கண்ணீரை வரவழைக்கும் கதாநாயகனாகிவிட்டார் காந்தியடிகள்.

தலைவர்கள், தங்களது தொடக்கக் காலத்தை ஒரு கட்சியையோ - ஓர் இயக்கத்தையோ பற்றுக் கோடாகக் கொண்டே உழைக்கிறார்கள்.

இறுதிக் கட்டத்தில் அவர்கள் கட்சிக்கு அப்பாற்பட்ட தலைவர்களாக மாறி - தலை உள்ளவர்களுக்கு எல்லாம் ஆசி கூறுகிறார்கள். வாழ்த்துகிறார்கள்.

காந்தியடிகள், அந்தக் கட்டத்துக்கு தனது இறுதிக் காலத்தை ஒட்டிக் கொண்டு சென்றார்.

அவர் எண்ணிய சுதந்திர உணர்ச்சி - ஓயாமல் பாடுகின்ற வீணையாக இன்றுவரைக் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

சங்கீதத்தில் நம்பிக்கை உண்டானவன் - ஒப்பாரியையும், மடைப் புனலோசையையும், நல்ல கலைஞரின் இசையையும் ஒன்றாகவே எடை போடுகிறான்.

படித்தவனின் உணர்ச்சியையும் - பாமரனின் திகிலையும் ஒரே ஒசையில் இழைத்துக் கேட்டு காந்தியடிகள் பழகினார்.

இந்த இருவர் உடைகளை, இவர்கள் இரண்டு பேர்களில் எவன் ஒருவன் தயாரித்தானோ, அவனாலேயே அதைப் பறிக்க முடியாது என்ற ஆவேசம், காந்தியடிகளின் பரம்பரைச் சொத்தாக இருந்தது.

நான் தனித்துப் பிறந்தேன்.

என் உயிர் தானாகவே போகிறது.

ஆனால், உரிமை மட்டும் எனக்குப் பிச்சையாக வரக் கூடாது.காற்றைத் தடை செய்ய முடியாது.

ஒளியை வழி மறிக்க இயலாது. ஆனால், உரிமையின் குறுக்கே மட்டும் செங்கோல் நிற்பதா?

எனது சுதந்திர ஆசைகள் ஒழுக்கத்தின் வேலிக்குள் இருப்பதா?

எனது உணர்ச்சிகள் கட்டுக்குள் அடங்கிக் காலம் எல்லாம் வாழ்வதா?

எனது உரிமைகளும் ஆசைகளும் உணர்வுகளும் என் வாழ்க்கையில் இருக்க வேண்டாமா?

வாழ மட்டும் எனக்கு அனுமதி அளித்த ஆண்டவன் உரிமையை மட்டும் இங்கிலாந்து நோக்கி அனுப்பிட அவன் என்ன முட்டாளா?

அதோ, வேலி ஓரம் பூத்திருக்கும் பூ என் வீட்டுக்குள்ளேயே இருக்கிறது.

அதோ, ஏற்றமடித்துப் பாடுகிறானே பாட்டு அது என் காதுக்கு அருகேயே கேட்கிறது.

அதோ, ஏற்றம் இறைக்கும் சாலில் அள்ளி மொண்டு கீழே சாய்த்தானே தண்ணீர், அது என் விழி வாசலுக்கு முன்னாலேயே ஓடுகின்றது.

ஆனால், எனது உரிமையை எவனோ கொடுத்து வாங்குகின்ற, கிடைக்க முடியாத பொருளாகப் படைத்துவிட்டு கோயிலுக்குள் தூங்குபவன் யார்? எவன்?

இந்தச் சிந்தனைச் சுழல்கள் அத்தனையும், காந்தியடிகளின் உள்ளத்திலே ரங்க ராட்டினமாகச் சுழன்று கொண்டே யிருந்தன.

கருப்பனுக்கு இவ்வளவு தெளிவு ஏற்பட்டு விட்டதே என்று 1947 -லேயும், அதற்கு முன்பும், வெள்ளையன், சிந்திக்க ஆரம்பித்தான்.

இந்தியர்களை இனி ஏமாற்ற முடியாது. அவர்கள் தங்கள் உயிர்களை, இங்கிலாந்து நாட்டுப் பாராளுமன்றத்தில் அலட்சியமாக வைத்துவிட்டு விளையாடுகிறார்கள்'

"நமது பூட்சு காலால் அந்த உயிர்களை நசுக்கும் போது கூட அவர்களுடைய உணர்ச்சி புதுத் தண்ணீரினால் வந்த ஜூரத்தால் பாதிக்கப்படுவானே மனிதன், அதனைப் போலக் கூடப் பாதிக்கப்படவில்லை"

வெள்ளையனுடைய ராஜதந்திரங்கள் - சாகசங்கள் - பிரித்தாலும் சூழ்ச்சிகள்-அடக்குமுறைகள்-துப்பாக்கித் துந்துபிகள் -இவையத்தனையும் கருப்பனுடைய கண்கள் முன்னால், மிகச் சிறியனவைகளாகவே தெரிந்தன.

இறுதியில், சாசனம் எழுதுவதற்காக - அதுவும் விடுதலை சாசனம் எழுதுவதற்காக - வெள்ளையனே துணிந்தான்.

"சுதந்திரத்தைத் தருகிறேன்" என்று வெள்ளையன் கூறினான்

"தராதே. நானே எடுத்துக் கொள்கிறேன்” என்று இந்தியன் சொன்னான்.

பிறப்பின் கட்டம், காந்தியடிகளைப் பொறுத்தவரை சிறிது சிறிதாக நெருங்கிக் கொண்டே இருந்தது. பிரச்சனைகளும் அதற்கேற்ப விளையாடின.

மணம் வீசிய பிறகு மலருக்கு வேலையில்லை, சுதந்திரம் வந்த பிறகு காந்தியடிகளுக்கும் இந்த மண்ணில் என்ன வேலை?

எப்படிக்காந்தியடிகளைக்கொடுத்ததோ-அப்படியே நாட்டு விடுதலைக்காக வாழ்வாங்கு வாழ்ந்து போராடிய அந்த மனித குல மாமேதையை எடுத்துக் கொண்டது - காலம்.

ஆனால், காந்தியடிகளின் தத்துவங்கள்-இந்த நூற்றாண்டில் எத்தனை உள்ளனவோ- அத்தனை ஆண்டுகளிலும் காற்றோட்டமான ஒரு மாளிகையாகவே இன்றும் இருக்கின்றது.

அந்த விடுதலைப் போராட்ட தத்துவ மண்டபத்தில், சில இடங்கள்-அவரவர் விருப்பு-வெறுப்புகளுக்கு ஏற்ப, சிலருக்குப் பிடிக்காமலும் இருக்கலாம்.

ஆனால், சுதந்திரவாயில், எந்த நாட்டுக்கும்-யார் வந்தாலும் திறந்தே காத்துக் கொண்டிருக்கும் சங்கப்பலகையொத்ததாகும்!

காந்தியடிகள் என்பவர் யார்?
கேள்விக் குறியாக விளங்கிய
அந்தச் சத்திய மனிதர்,
இப்போது பிறக்கின்ற குழந்தைகளுக்குப்
போதனையாகவும் -
பிறக்காதவனுக்கு வேதனையாகவும்
வாழ்பவனுக்குச் சாதனையாகவும்- இருக்கின்றார்!
கடந்த தலைமுறையில் தலைவர்களைப் பயிரிட்டவர் -
தற்காலத் தலைமுறையில் விதைகளுக்காக விடப்பட்டவர்-
அடுத்த தலைமுறைக்கு யாரும் கேட்காமலேயே
முளைக்கக் கூடியவர் காந்தியடிகள்!
இந்திய நாடு - அவரை இப்போது பார்த்தது -
சாக்காடு பிறகு பார்த்தது -
மனித உரிமை என்ற கொள்கை நாடு,
எப்போதும் அவரைப் பார்த்துக் கொண்டே இருக்கின்றது!
அவர் சிந்தித்து தீண்டிய ஒவ்வொன்றும்
துலங்காமல் போனதில்லை.
அன்பால் முகம் பார்த்தார் -
அகிம்சையால் அகம் பார்த்தார் -

ஒழுக்கத்தால் அறத்தை ஓம்பினார் -
ஏழ்மைக்கே அழுதார்! அடிமைக்கே கூற்றமானார்!
ஏற்றத்திற்காகவே இறைவனைத் தொழுதார்.
அவர் ஒரு பேருரு!
உருவத்திற்கு நிழல் வேண்டாமா?
நிழலிலே உருவம் வேண்டாமா?

ஒரு செடியினுடைய வேர், பூமியிலே எங்கெங்கு ஓடுகின்றது என்று யாருக்குத் தெரியும்?

பிறகு அந்த வேரே, மற்றொரு செடிக்கும்
விதையாக மாறுகிறது அல்லவா?

காந்தியடிகளுடைய அன்பு, பண்பு, அடக்கம், அகிம்சை, எளிமை, தெளிவு, மனிதத் தன்மை, மாண்பு, சிந்தனை, சீரிய செயற்றிறம் அத்தனையும் உலகத்தில் விதைகளாகச் சிதறியிருக்கின்றன.

பண்பட்ட மண்ணில் விழுந்தவை முளைக்க ஆரம்பித்தன. அதுதானே இயற்கையின் இயல்பு காலத்தின் சுரப்பு!

அவரை நாம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே - மற்றொருவர் அவரைப் போலவே பிறக்க ஆரம்பிக்கின்றார்! இனமான விருத்தியுள்ள விதைகள் இவர்கள்.

தன்னைப் போலவே, ஓர் இனத்தையே படைக்க - விதைகளாகவே விளங்குபவர்கள்.

அவரைப் போல பிறந்தவர்கள் - அவரைப் போலவே இருக்கிறார்கள்.

அவரைப் போலவே மனித நேயத்தில் நடப்பவர்கள் - மண்ணாக மறைந்தபின் - எல்லாருடைய கால்களிலும் அடிபடுகிறார்கள்.

ஏற்கனவே, 1948-ல் மறைந்து ஒளிவிடும் விண்மீனோடு, அதோ, புதிதாக ஒரு விண்மீன் 1969-ல்வானத்தில் கைகோர்த்து உலா வருகின்றது.

அதனுடைய கூடு புதைக்கப்பட்ட இடம் வங்க கடற்கரை சதுக்கம்!
அந்த இரண்டு விண்மீன்களும் -
எழுத்தால், பேச்சால்,
சிந்தனையால், எண்ணத்தால்,
உழைப்பால், உரிமை பெறலால்,
இனத்தால், பண்பால்,
அன்பால், செயலால்,
மக்களிடையே சேகரித்துக்
கொண்ட செல்வாக்கால்
வருங்கால மக்களை
உருவாக்கும் விதையால் ஒன்றே என்பது.
நாடு அறிந்த ஒன்று.
அந்த நட்சத்திரங்கள் ஒளியுதறி நடமாடும் இடம் வானம்!
மனிதம் வென்றிட - அவை
புரட்சிக்கொடி ஏந்திய ஒளிச்சுடர்கள்!
அதோ-அந்த மீன்கள் மின்னலிடுகின்றன நோக்குக!