அரசாண்ட ஆண்டி/நோக்கம்

நோக்கம்

பிரான்சு!-விசித்திரமான நாடு ! விபரீதமான நிலைமைகள்!

பிரான்சு! அழகும் அவலட்சணமும், வீரமும் கோழைத்தனமும் சமரசமும் சதிச் செயலும், கலையும் கொலையும், காவியமும் கபடமும், செல்வமும் சீரழிவும், உலுத்தரின் உல்லாசமும் உழைப்போரின் பெருமூச்சும் -- ஒன்றை ஒன்று அடுத்தடுத்து இருந்து வந்த நாடு.

பிரான்சு! ஒரு மன்னனைப் பெற்றிருந்தது - அவனோ! பறவைகளை வேட்டையாடும் பொழுதுபோக்கிலும், பாவையர்களைப் பொன் வண்டுகளாகக் கருதிக் களிப்புத் தேடுவதிலும் மூழ்கிக் கிடந்தான்.

பிரான்சு நாட்டுக்கு அரசியானாள் ஆன் என்னும் அழகி! ஆட்சியிலேயும் இடம் கிடைக்கவில்லை, அழகுதனை விருந்தாகக் கொள்ள மன்னனும் முன்வரவில்லை!

பிரான்சு நாட்டைத் தமது கொலுமண்டபமாகக் கொண்டு கோலாகல வாழ்வு நடாத்தினர், பிரபுக்கள்.

பிரான்சு நாட்டில் அருளாலயங்கள் நிரம்ப ! அங்கு ஆண்டிகள் அரசோச்சினர்.

பிரான்சு நாட்டின் சுதந்திரம் பறிபோகக் கூடாது! பண்பு கெடக்கூடாது 1 மதிப்பு மங்கிடலாகாது! இந்த நோக்கத்துக்காக, மக்கள் உழைக்க, ஓடாகிப்போக!

அரசாண்ட ஆண்டி தோன்றிட என்னென்ன தேவையோ அவை யாவும் இருந்தன, அன்றைய பிரான்சில்.

அரசாண்ட ஆண்டி ஒரு வரலாற்று நிகழ்ச்சி -- கருத்தளிப்பது.

அரசாண்ட ஆண்டி என் கைவண்ணத்தைக் காட்டிடத் தீட்டியதல்ல, மக்கள் கருத்திலே தெளிவும் துணிவும் இல்லாமற் போனால், ஆட்சி எக்கேடு கெடும் என்பதை எடுத்துக்காட்டும் ஒரு எச்சரிக்கை.

அரசாண்ட ஆண்டி ஏதோ ஒரு வெளிநாட்டு விவகாரம் என்று எண்ணிவிடக் கூடாது-வரலாறு என்பது ஒரு பொதுநூல் - சூழ்நிலை விளக்கம், விளைவு பற்றிய பாடம் பெறத்தக்கஏடு, வரலாறு.

அரசாண்ட ஆண்டி எங்கும் கிளம்பலாம்! எப்போது வேண்டுமாயினும்!! மக்களின் விழிப்பற்ற நிலை எங்குஎப்போது காணப்பட்டாலும், அங்கு அவன்! ஆமாம்!

அரசாண்ட ஆண்டி இருந்த மட்டும், எதிர்த்திடக்கூட இயலவில்லை; மன்னனால்! பிரபுக்களால் ! அருளாலயத்தினர்கூட!!

அரசாண்ட ஆண்டி, செய்த கொடுமைகள் யாவற்றுக்கும்கூறிய ஒரே விளக்கம்-எதுவும் எனக்காக அல்ல ! அரசுக்காக! நாட்டுக்காக! என்பதுதான்!

அரசாண்ட ஆண்டி அரசுக்காக ; பிரான்சுக்காக; என்ற சொற்களைத் திறம்படப் பயன்படுத்தி கொடுமைகளை கூசாமல் செய்து ஆதிக்க வெறியனாய் வாழ்ந்து பெரும் பொருள் தேடிக்கொண்டான்.

அரசாண்ட ஆண்டி போல ஆளவந்தார்கள் எவராயினும், தமது போக்குக்குக் காரணமாக, அரசுக்காக; நாட்டுக்காக! என்ற சொற்களை உச்சரிக்கக் கூடும். மக்கள் எச்சரிக்கையுடன் இருந்தாக வேண்டும்.

அரசாண்ட ஆண்டி அரசுக்காக! நாட்டுக்காக! என்ற சொற்களை மந்திரமாக்கி மக்களை மயக்கினான். அரண்மனை, மாளிகை, ஆலயம் இவற்றோடு நாடு முடிந்துவிடவில்லை. வயல் இருக்கிறது, வாய்க்கால் இருக்கிறது, பாதை இருக்கிறது, பள்ளம் இருக்கிறது, தொழில் இருக்கிறது துயரம் இருக்கிறது......இந்த நாட்டுக்காக அல்ல, 'அரசாண்ட ஆண்டி' திட்டமிட்டது!

அரசாண்ட ஆண்டியின் பிரான்சு மன்னன், அவனைச் சுற்றி வட்டமிடும் வல்லூறுகள், அவனுடைய விளையாட்டுக்காகப் பறந்திடும் பொன் வண்டுகள், இவை உள்ள அரண்மனை, மாளிகை, பூம்பொழில் -- இந்த ஏற்பாட்டைப் பாதுகாக்க அமைந்துள்ள பாசறை, நீதிமன்றம், சிறைக்கூடம் இவை?

மன்னனுடைய மணிமுடி ஒளிவிட, ஏழையின் இரத்தத்தை 'அபிஷேகம் ' செய்தான் அரசாண்ட ஆண்டி.

மக்கள் பதிலளிக்க நெடுங்காலம் பிடித்தது. அவர்கள் தந்த பதிலோ, பயங்கரமானது; மன்னனின் தலையை வெட்டிக்காட்டி, முழக்கமிட்டனர் மக்களுக்காக! பிரான்சுக்காக! என்று.

இதயம் இரும்பானால் எனும் மற்றோர் ஏடு, இதனை விளக்கிடும். இது நாட்டுக்காக என்று கூறிக்கொண்டு, அரசாண்ட ஆண்டி பற்றியது.

வெளி உலகத்துடன் தொடர்புகள் துரிதமாகவும் அதிக அளவிலும் வளர்ந்துகொண்டு வரும் இந்நாட்களில் பல்வேறு நாடுகளிலே இருந்த நிலைமைகள் நடைபெற்ற நிகழ்ச்சிகள் என்பவைகளை, நமது மக்கள் அறிந்தாக வேண்டும்.

அதற்கான ஆர்வத்தை எழச்செய்யவே, இதனை வெளியிடுகிறேன்.

வரலாறு--பள்ளிக்கூடத்திலே மட்டுமே இருக்க வேண்டிய ஏடு என்று எண்ணற்க! மக்களாட்சி நடைபெறும் நாட்களில் வரலாறு ஒவ்வொருவர் கருத்திலேயும் தெளிவையும் துணிவையும் தரத் துணை செய்யும் நூலாகக் கொண்டிடல் வேண்டும்.

அரசாண்ட ஆண்டி எனும் இந்த ஏடு, அந்த நோக்கத்தின் விளைவே.

இனியும் நான் தடுத்து நிறுத்தி, நிற்கவைத்துப் பேசிக் கொண்டிருப்பது முறையல்ல அதோ அழைக்கிறான் ‘ அரசாண்ட ஆண்டி.'

அண்ணாதுரை.
"https://ta.wikisource.org/w/index.php?title=அரசாண்ட_ஆண்டி/நோக்கம்&oldid=1583421" இலிருந்து மீள்விக்கப்பட்டது