அரசாண்ட ஆண்டி/அரசாண்டஆண்டி

அரசாண்ட ஆண்டி

“லாரோகேல். கோட்டைக் கோமகள், கோமளவல்லி, இளமையும் எழிலும் ததும்பும் இன்பவல்லி.........தெரியுமே, மன்னா! தங்கட்கு......... நினைவில்லையோ?”

“அவளா அமைச்சரே ! அழகி. ஆமாம், நினைவிலிருக்கிறது- எவர் நெஞ்சிலும் பதியும் ஓவியம்! விதவை, அல்லவா?”

“ஆமாம் அரசே? விதவை! விருந்தாக வேண்டியவள்.”

"கோலாகல வாழ்க்கையை வெறுப்பவள் போலும் அந்த வனிதாமணி. நமது கொலுமண்டபத்துக்கு வரத் தயங்கும் காரணம், வேறென்னவாக இருக்கமுடியும்,'”

"விழிமட்டுமல்ல, மன்னா! மங்கையின் சுபாவமே. மானுக்குள்ளது போன்றதே. ஒரு வகையான கூச்சம், அத்தகு ஆரணங்குகளிடம், பழகிவிட்டால், தொட்டால் துவள்வதுகளிடம் கிடைக்கொணாத இன்பம் பிறக்கும். அவள் தங்கள் அவைக்குத் தேவையான உயிரோவியம். இந்த இடத்தின் அழகு, அவளால் வளரும், மிளிரும். பூந்தோட்டத் தில்தானே பூபதி! புள்ளிக்கலாப மயில் தோகையை விரித்தாடிட வேண்டும், பொட்டலிலா! லாரோகேல் கோட்டையின் ரமணி, தங்கள் பார்வையில் இருக்க வேண்டிய பாவை. மேலும், இங்கு இளித்துக் கிடக்கும் நங்கைகள் தங்கள் மனதிலே ஓர் சோர்வை உண்டாக்கி விட்டனர். உணர்கிறேன் மன்னா, உணர்கிறேன். அந்த உல்லாசி இங்கு உலவினாலே போதும், தென்றலின் இனிமை கிடைக்கும்.

"அமைச்சரே! அவள்தான் இங்கு வர மறுக்கிறாளே!

"மறுத்தால் என்ன! அவள் இங்கு வராவிட்டால் நாம், அங்கு போவது!!"

"நாமா!"

"ஆமாம்! இப்படி அல்ல; மாறுவேடத்தில்"

"வேடிக்கையாக இருக்கும்"

"மனதுக்குப் புதுவிதமான இன்பம் இறையே!"

"எனக்கும் கூட ஒரே சலிப்புத்தான்! கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன கீதங்கள்! கண்டு சலித்துப் போன நடனங்கள்! ஒய்யாரிகளின் சிரிப்பு. காதைக் குடைகிறது, புன்னகை பூத்த முகத்தழகி இல்லை - எங்கும் ஒரே சாயப் பூச்சு........"

"அதை உணர்ந்துதான், அரசே! லாரோகேல் கோட்டைக் கோமகளைத் தங்களுக்குக் காணிக்கையாக்கியே தீருவது என்று தீர்மானித்தேன்--திட்டமும் தயாராகிவிட்டது"

"திட்டம் தீட்டுவதிலே, உமக்குள்ள திறமையை அறியாத அரசுகள் உண்டோ, அமைச்சரே! ஆனால் நமக்குள் பேசிக்கொள்வோம். இந்த ரசவல்லிகளின் சம்பந்தமான திட்டம் தீட்டுவதிலும் வல்லமை மிக்கவர் தாங்கள், என்பது எவருக்கும் தெரியாதல்லவா! நம்பக்கூட மாட்டார்கள்!!"

"ஆண்டிதானே, மன்னவா! ஆண்டிக்கு என்ன தெரியும், அழகிகளைப்பற்றி என்றுதான் கூறுவர்" "சூட்சமம் தெரியாதவர்கள்!"

"சென்று, சில ஏற்பாடுகள் செய்துவிட்டு வருகிறேன். நாளை, பயணம்"

"புதிய போர்! அமைச்சரே! பொற்கொடியைப் பெற நடத்தப்பட இருக்கும் புனிதப் போர்!"

"எத்தலைய போர் எனினும், மன்னன் வெற்றிக்கே பாடுபடுவேன்"

"உம் உதவி இருக்குமட்டும், வெற்றிக்கு, என்ன குறை!! சென்று வாரும்! என் மனம், இப்போதே கோட்டையில் இருக்கிறது"

"கோமள வல்லியின் கொஞ்சு மொழி என் செவியில் கேட்கிறது, மன்னவா! சென்று வருகிறேன்

ரண்மனையில், அந்தரங்க அறையில், அரசனுக்கும் அமைச்சருக்கும் இங்ஙனம் உரையாடல்! மன்னன் காமாந்தகாரனல்ல - அமைச்சரோ ஆண்டிக்கோலத்தில் இருக்கிறார்- காமக் களியாட்டத்திலே துளியும் ஈடுபாடற்றவர்; எனினும், மன்னன் மனதுக்கு மகிழ்ச்சி தரத்தக்க மங்கை நல்லாளைக் கண்டறிந்து கூறுகிறார், கண்ட கண்ட கட்டழகிகளுடன், காமக் கூத்தாடித் திரியும் மன்னனுமல்ல-வண்டு மொய்க்கா மலர்கள் மணத்தைப் பரப்பிக் கொண்டிருக்க, பசுமைநிரம்பிய தோட்டத்திலே, அந்த பலவண்ண மலர்கள் உள்ள நேர்த்தியைக் கண்டு களிப்படையும் ரசிகன்போல், மன்னன் ஆடிடும் அணங்குகளையும், பாடிடும்பதுமைகளையும், நடைகாட்டி, இடைஅசைத்து, நடையை நாட்டியமாக்கிடும் நாரிமணிகளையும், கண்டுகளிப்பதன் -- ஆடி அலையும் ஆசைமிக்கோனுமல்ல. மன்னனுடைய சபலம், அமைச்சருக்குத் தெரியும் - அதனைப் போக்கும் 'மாமருந்து' தேடிடும் முறையும், கடமையிலே ஒன்றெனக்கொண்டார். திருத்தலாகாதோ, மன்னனை? திருத்தலாம் -- திருந்தவும்கூடும்--எனினும், திருந்திப் பயன்? மன்னனுக்குப் பொழுதுபோக்கு இருக்கவேண்டும் -அப்போதுதான், அரசகாரியங்களைக் கவனித்துக்கொள்ளும் நிலை அமைச்சருக்குக் கிடைக்கும். ஆகவே, 'சபலம்' இருந்தால் தவறில்லை! ஆனால், அதை அறிந்து, வேறு தர்பார் தளுக்கன் எவனாவது, அரசனுக்குத் துணை நின்று ‘கைக்குள் போட்டுக்கொண்டால்? அமைச்சரின் ஆதிக்கத்துக்கேகூட ஆபத்து எழக்கூடுமல்லவா! எனவே, மன்னனுக்குத் தேவையான 'பொன்வண்டு' சேகரிக்கும் காரியத்தையும் தானே கவனித்துக்கொள்ளத்தான் வேண்டும்.

அமைச்சனின் எண்ணம் இது. அப்பழுக்கற்றவர், பெண்கள் விஷயத்தில். பக்தர்! சித்தத்தில் சத்தற்ற விஷயங்களுக்குச் சிறிதளவும் இடம் தராதவர்! அமைச்சராக மட்டுமல்ல, ஆண்டவன் அருளைப் பாமரருக்குப் பெற்றுத்தரும் திருக்கூட்டத்தவரிலே, முன்னணிப் படையிலே, முக்கியமானவராகவும் உள்ளவர். எனினும், மன்னனிடம் தமக்கு உள்ள தொடர்பும் செல்வாக்கும், எவராலும் சிதைந்திடாதபடி பாதுகாத்துக்கொள்வதற்காக, 'முறையற்ற' செயலையும், மனமுவந்து மேற்கொண்டார்! எந்த நாட்டில் என்கிறீர்களா? வேல்விழி மாதரிடம், கோலோச்சும் மன்னர்கள் அடிமைப்பட்டுக் கிடந்த போக பூமியில்! பாருக்குள்ளே ஒரு நாடு, பல ரசங்கள் பெருகிய நாடு. பிரான்சு.

"நடிப்பா இது"!

"ரசிகர்கள் ஏராளம், எனக்கு"

"அவர்கள் ரசிகர்களா! அப்பா நடிகா! அதிகம் பேசுவானேன். நாகரிக நகரங்களில் நமது நாடகக் குழுபோன்ற உயர்தர மேடையில், உன் போன்றவர்களுக்கு இடம் கிடைக்காது--வருந்திப் பயனில்லை--கோபம் என்றால், பற்களை நற நறவெனக் கடிக்கிறாய்--கிராம மக்கள் 'கரகோஷம்' செய்வர். நிச்சயமாக! இது, பாரிஸ்/ நாகரீக நளினிகளும், அவர்களின் நகைமுகம் காண நவநிதியும் தரச் சித்தமாக உள்ள பிரபுக்களும் கலையை வளர்க்கும் கூடம். கோபம் என்றால், பற்களை நறநறவெனக் கடித்துக்காட்டினால், பட்டிக்காட்டான் என்று கூறிக் கேலி செய்வர். புருவத்தை நெறிப்பது, அதேபோது, புன்சிரிப்பை இழந்திடாமல் இருப்பது-அது பாரிஸ் போற்றும் கலை. போ! போ! ஆண்டுபல பயிற்சி பெற்றபின், வா, பார்ப்போம்'"

"சிறு பாகமும் ஏற்று நடிக்கத் தயார்..."

"நீ தயாரப்பா, நீ தயார்; ஆனால், நான்? என் கலா ரசிகர்கள்? சிறு பாகம் எனினும், இங்கு, என் அரங்கில், நடிப்பிலே நேர்த்தியான திறமை உள்ளவருக்கே அளிக்கப்படும். விவாதம் கூடாது, என்னிடம்! சென்று வா"

வேலை தேடிவந்த ஆர்வமுள்ள நடிகனை, நாடகக்கலை வியாபாரி விரட்டிவிட்டு, உயர்ரகப் பானத்தைப் பருகிக்கொண்டிருந்தான்; உள்ளே நுழைந்தார், ஓர் முதியவர்.

"வருக, அமருக! ஊர் பேர் விவரம் கூறுக" என்றான் கலைவாணிபன்--முதியவர் நகைத்தார்--கூர்ந்து நோக்கினான் கலைக்கூடக் கள்ளன் கண்டுகொண்டான் அவர் யார் என்பதை, குழைந்தான்; நெளிந்தான்; கரம் கூப்பினான். பெரியவர், அவனை அமரச் சொல்லிவிட்டு, அருகே ஓர் ஆசனத்திலமர்ந்து, "அச்சம் கண்களில் தெரியவேண்டும், ஆனால் ஒரு கணம்தான்-அடுத்த கணமோ பாசத்தைப் பொழியவேண்டும்; சிங்காரம் சிறப்புற இருக்கவேண்டும். எனினும் செருக்குத் தெரிதல் கூடாது; வழுக்கி விழுபவளாகத் தெரியக்கூடாது, எனினும் காதலை ரசிக்கவே தெரியாத கற்சிலைபோன்றும் இருந்துவிடக்கூடாது; பேச்சிலே 'லலிதம்' இருக்கவேண்டும், ஆள்மயக்கி என்று தெரிந்து விடக்கூடாது; மன்னர்களை மகிழ்விக்க இயலும் என்ற முறையில் உபசாரம் செய்யு ஆற்றலிருக்கவேண்டும், ஆனால், இப்படிப்பட்ட வாய்ப்புக் கிட்டிவிட்டதே, என் பாக்கியமே பாக்கியம் என்று களிப்புடன் குளறிடுதல் கூடாது; மணிமண்டபத்திலே, சிற்பி சமைத்த ஓவியம் உயிர்பெற்று எழுந்து வந்து, தன்னைக் கண்டு பூரித்து நிற்கும் ரசிகனிடம், காதலைப் பொழிவதைப்போல்! இத்தகைய நடிப்புத் திறன் உள்ள பெண், உண்டா; இங்கு; இப்போது; உம்மிடம்?

"அமைச்சர் பெருமானே! பயிற்சி தந்திருக்கிறேன், எத்தகைய பாகமும் ஏற்று நடிக்கப் பாவை ஒருவள், பக்குவமானவள், இதுபோது இருக்கிறாள். தாங்கள் கூறும் பாகத்தை நடிக்கும் திறம் படைத்தவள். எங்கு நாடகம்? எப்போது?"

"நாளை மறுநாள்! மன்னன் முன்! கொட்டகையில் அல்ல, கோட்டை மாளிகையில்'

"மன்னன் முன்னிலையிலா! மெத்த மகிழ்ச்சி! அமைச்சர் பெரும! மெத்த மகிழ்ச்சி! அரசரின் அருமை நண்பர்கள் அனைவரும் பாராட்டும் வண்ணம் அமைத்துக் காட்டுகிறேன். என் திறத்தை விளக்கிட நல்லதோர் வாய்ப்பு, நல்லதோர் வாய்ப்பு"

"ஆசிரிய! கோட்டை மாளிகையில் என்றேன், நாடகம் என்று கூறவில்லை. லாரோகேல் கோட்டைக் கோமகளாக மாறுவேடம் அணிந்து, சில நாட்கள், மன்னனுடன், அந்த நடிகை அளவளாவி இருக்கவேண்டும். கோட்டை மாளிகையில், ஆள் அம்பு, ஆடம்பரம் அலங்காரம் யாவும் இன்று தயாராகிவிடும்; அவர்கள் அனைவரும், உன் நடிகையை கோட்டைக் கோமகளாகவே வரவேற்பர்--பணிபுரிபவர், மன்னன் வருவார்-உடன் நான் வருவேன்--இருவரும் மாறு வேடத்தில்!"

"புதுமையாக இருக்கிறது"

"பொருள் உண்டு--உனக்கு அது தெரியவேண்டியதில்லை. இதோ இப்பேழையில், கோட்டைக் கோமகளுக்குரிய ஆபரண வகைகள்--மற்றோர் பேழையில் ஆடை வகைகள். இதோ அவள் ஓவியம். இன்றே உன் நடிகையைத் தயார் செய்து, இரவு அங்கு சென்றுவிட ஏற்பாடு செய். என் ஆட்கள் அங்கு தயாராக இருப்பர். மன்னன், லாரோகேல் கோட்டைக் கோமகளிடம் பழகுவதாகவே, கருத வேண்டும்--துளியும் சந்தேகம் ஏற்படலாகாது-குட்டு. வெளிப்பட்டால், தலைதப்பாது, உனக்கு."

"கஷ்டமும் ஆபத்தும் நிரம்பிய திட்டம்"

"மன்னனுக்காக ! அரசுக்காக! நாட்டுக்காக! காமவேட்டைக்கு அல்ல! கருத்தற்ற களியாட்டமுமல்ல!"

"முயல்கிறேன்........."

வெற்றி கிட்டும், அஞ்சாதே! மன்னர் தாமாகத் தம்மை. இன்னார் என்று தெரிவிக்காமுன்னம், கோட்டைக் கோமகள் அவர்தான் மன்னர் என்று அறிந்துகொண்டதாகக் காட்டிக்கொள்ளக்கூடாது."

"அப்படியா? ஏன்?”

"எப்படி இதைச் சாதிப்பது என்று யோசி--ஏனென்ற கேள்வி எதற்கு!

"உத்தரவு"

"இதோ செலவுத் தொகை..... லாரோகேல் மாளிகையில் கோட்டைக் கோமகளை, நாளை மறுநாள் சந்திக்கிறேன்."

"நாம் யார் என்று அறிந்ததும் பேதைப்பெண் பிரமித்துப் போய் விடுவாள்! மன்னா! மன்னித்துவிடு--குற்றம் ஏதேனும் செய்திருந்தால், பொறுத்திடுக! என்றெல்லாம், குளறிக் கொட்டுவாள்.

"ஆமாம், அரசே! மாறுவேடம் தங்களுக்குப் பொருத்தமாக அமைந்து விட்டது. நடிப்பது தங்கட்குத் தெரியாதா--சீமாட்டி அறிய முடியுமா தங்கள் திறமையை’"

"வேடிக்கையாக இருக்கும். யாரோ, காதலில் கட்டுண்ட வாலிபன், என்று எண்ணிக்கொள்வாள்-- இன்னுயிரே! ஆரமுதே! என்று நான் கொஞ்சுமொழி பேசுவது கேட்டு, யாரோ, சிங்காரத் தோட்டத்தில் நள்ளிரவுகளைக் கழித்த வாலிபச் சீமான் என்று எண்ணிக் கொள்வாள்......" "ரோப்பா மெச்சும் பிரான்சு நாட்டுப்பூபதி தாங்கள் என்பதை பிறகு அறிந்ததும்....."

அப்போதுதானே, வேடிக்கையின் உச்சக்கட்டம். அமைச்சரே, ஒரு திங்களுக்கு மேலாக எனக்கு இருந்து வந்த சோர்வு, சலிப்பு, பறந்தே போய் விட்டது--புதியதோர் மன எழுச்சி இப்போது. அடுத்த விநாடி என்ன, அதற்கு அடுத்தபடி என்ன நேரிட இருக்கிறது, என்று எண்ணி எண்ணி, பரபரப்படையும் நிலை; இதைத் தான் நான் விரும்புகிறேன்."

"நான் அறிவேனே மன்னா, அதனை! அறிந்துதானே இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்தேன். பிரான்சு நாட்டு உயர்தர பிரபு குடும்பத்து வாலிப ரசிகன் உல்லாசப் பயணமாக வந்துள்ளார். தங்கள் மாளிகையில் சில நாட்கள் தங்க விழைகிறார் என்றுதான், செய்தி தந்திருக்கிறேன், கோமகளுக்கு. வேட்டையில் இலேசாகப் பிரியும்- வேடிக்கையாகப் பேசுவதைப் பெரிதும் விரும்புவார்--கீதத்திலே அளவுகடந்த விருப்பம்- நாட்டியமாடுவதிலே நேர்த்தியான முறை தெரிந்தவர்--என்று குறிப்பும் எழுதி இருக்கிறேன். அதோ பாரும், கோட்டை மாளிகை மாடி- தீபாலங்காரம்...."

"வரவேற்கத் தயாராக இருக்கிறாள், வனிதை!"

"உள்ளே ஒரே பரபரப்பாக இருக்கும், பணியாட்கள் ஓடி ஆடி வேலை செய்தவண்ணம் இருப்பர். அதோ, கீதம் கேட்கிறதே, இனிமையான நாதம்......"

கோட்டை மாளிகை வாயல்வந்தடைந்தனர். மாறு வேடமணிந்திருந்த மன்னனும் அமைச்சனும், உள்ளே கீதம் மும்முரமாகக் கேட்டப்படி இருந்தது. காவலாட்கள், தடுத்து நிறுத்தினர். உள்ளே செல்லக் கூடாது என்று. மன்னன் அமைச்சனைப் பார்த்தான்--அமைச்சன், காவலாளைப் பார்த்தான். அவன், "உள்ளே, சீமாட்டி இன்று இருவிருந்தினர்களை, உபசரித்துக் கொண்டிருக்கிறார்கள். வேறு யாரும் நுழையலாகாது--அனுமதி கிடையாது" என்று கூறி, கதவைத் தாளிட்டுக் கொண்டு சென்றே விட்டான். உள்ளேகீதம்! மன்னன் மனதிலே, கோபம்! அமைச்சருக்கோ திகைப்பு! என் ஏற்பாடு என் ஏற்பாடு!!- என்று முணுமுணுத்துக் கொண்டார். உள்ளேயோ, மானே! தேனே! மாங்குயிலே! என்று காதல் கீதம், சாகசச் சிரிப்பொலி! வந்த வழியே திரும்பிச் சென்றனர், மன்னரும் அமைச்சரும்...

நடைபெற்ற தென்னவெனில், அமைச்சரும், நாடகக் குழுத் தலைவனும் பேசிக் கொண்டிருந்ததை அவர்கள் அறியாமல் கேட்டுக் கொண்டிருந்த வேலை தேடி வந்த நடிகன், வேறோர் எத்தனுடன் கூடிக்கொண்டு, கோட்டைக்கோமகளை ஏய்த்து விட்டான்--அவள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சீமான் போல நடித்து?

இலக்கியமல்ல, வரலாறும் அல்ல, கட்டிவிடப்பட்ட கதைதான் இது. எனினும் இது போன்றதும் இதனினும் மோசமானதுமான பல செயல்களைச் செய்து வந்தவர், ரிஷ்லு என்று, பல கதைகளைப் பலர் கட்டினர்--மக்கள் இவ்விதமான கதைகளை, உண்மை என்று நம்பியது மட்டுமல்ல, ரிஷ்லு இதுவும் செய்வான், இதைவிடக் கேவலமான காரியமும் செய்வான்--ஆதிக்க வெறிபிடித்தலையும் அந்த ஆண்டி, எதையும் செய்வான், என்றுதான் பேசுவர். மக்கள், அந்த அளவுக்கு, ரிஷ்லுவைப்பற்றி மனக் கொதிப்பு அடைந்திருந்தனர். ஆனால், வெளிப்படையாக எதிர்க்கவோ இயலாது, ரிஷ்லுவின் பழி தீர்த்துக் கொள்ளும் திட்டம் பயங்கரமானது. எதிர்ப்பவர், தப்புவதில்லை-- சித்ரவதையையே பரிசாகப்பெறுவர்.


கார்டினல் ரிஷ்லு, பிரான்சு நாட்டை ஆட்டிப்படைத்த ஆதிக்கக்காரன்--மன்னனே அவனுடைய சதுரங்கக் காயானான் பிரபுக்களுக்கு, அவன் பெயர் கேட்டாலே அச்சம், பிறநாட்டு மன்னர்களோ, அவனுடைய திட்டம் இப்போது யாதோ, நாளை எங்ஙனம் உருவெடுக்குமோ என்று எண்ணித் திகைப்பர். அவன் ஆதிக்கத்தை எதிர்க்கும் ஆற்றல் எவருக்கும் ஏற்படவில்லை. முணுமுணுப்போர் மூலைக்குத் துரத்தப்படுவர்! சதிபுரிவோர், சிரம் கொய்யப்படும். புரட்சி முளைத்தால் பொசுக்கித் தள்ளப்படும். மன்னனே, உற்றார் உறவினர், உடன்பிறந்தார், பெற்றதாய், எனும் எவருக்கும் கட்டுப்படமாட்டான்; ரிஷ்லு, கீறிடும் கோட்டினை மட்டும் தாண்டமாட்டான். பற்று, பாசம், நட்பு, நன்றியறிதல், தயை தாட்சணியம், அச்சம், எனும் எதனையும் பொருட்படுத்தாமல், தான் இட்டதே சட்டமென்றாக்கி, ஈடு எதிர்ப்பு இன்றி, முடி தரித்த மன்னனையும் பிடிவாதம் நிரம்பிய பிரபுக்களையும், சதி புரிந்து புரிந்து பழக்கப்பட்டவர்களையும், ஒருசேர, அடக்கிஆண்டவன், கார்டினல் ரிஷ்லு. படைத் தலைவர்கள் அவனிடம் பணிந்தனர். பூஜ்யர்கள் அவனிடம் சரண் புகுந்தனர். பிரான்சுநாட்டு ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது முதல் இறந்துபடும் வரையில், பிரான்சிலும், அதனுடன் எவ்வகையாலேனும் தொடர்பு கொண்ட எந்த நாட்டிலும், கார்டினல் ரிஷ்லுவைப் பற்றித்தான் பேச்சு. மன்னர்கள் மாறுவர், மண்டலங்களிலே மகத்தான சம்பவங்கள் உருண்டோடும், ஆனால் எவரும் அஞ்சும் ஒரே மகத்தான சம்பவமாக, ரிஷ்லுவின் ஆதிக்கம்தான் நிலவிற்று.

பதின்மூன்றாம் லூயி மன்னன் பட்டத்துக்கு வருகிற போது, கார்டினல் ரிஷ்லு அரண்மனையில் இல்லை, ஆதிக்கத்தில் இல்லை, துவக்கம் கூட இல்லை. கார்டினல் ரிஷ்லு, இறக்கும் போது "எனக்குப் பிறகு, இதோ இந்த மாஜிரின் என் இடம் பெறட்டும்" என்று பதின்மூன்றாம் லூயி மன்னனிடம் கூறினான் -மன்னன் மறுக்கவில்லை -மறக்கவுமில்லை--மாஜிரின் ரிஷ்லுவாக்கப்பட்டான். இந்த வகையான செல்வாக்கைப் பெற்ற கார்டினல் ரிஷ்லு, 'நானுனக்கு மகன் அலனோ, நீ எனக்கு வாய்த்த தந்தை அலவோ' என்று ஆண்டவனிடம் நெஞ்சு நெக்குருக இறைஞ்சி, அருள் பெற்று, பெற்ற அருளைப் பாமரருக்குந் தந்து அவர்களைப் பரமபத நாதனின் பார்வையில் கொண்டுபோய் வைக்கும் பணியில் ஈடுபடும் பாதிரிமார் வேலைக்குத்தான், தன்னைத்தானே முதலில் ஒப்படைத்து விட்டவர். கடைசி வரையில், கார்டினல் ரிஷ்லுவாகத்தான் பெயர்--சூரன், வீரன், மகாகனம் மன்னன்--என்ற விருதுகளை விரும்ப வில்லை. ஏன் விரும்ப வேண்டும், விருதுபல பெற்றவர்கள் எல்லாம் தன்முன் கட்டியம் கூறி நிற்கக் காணும்போது, விருது வேறு தேவை என்ற எண்ணமா பிறக்கும்! பிரான்சு நாட்டின், எந்தப் பெரும் பதவியையும், எடுத்து எவர் முன்பும் வீசும் ஆதிக்கம் இருந்தது கார்டினல் ரிஷ்லுவுக்கு, 'தேவப் பிரசாதத்தைத்' தந்து, மக்களின் 'ஜென்ம சாபல்ய' த்துக்காக தொழுகை நடத்தி, துதிப்பாடல்களைப் பாடி, ஏசுவின் சுவிசேஷத்தை எங்கும் பரப்பும் பணிபுரிவதற்காக என்று வாழ்க்கைப் பாதைப் பயணத்தின் துவக்கம் இருந்தது--பாதையோ, பிறகு வளைந்தது, குறுக்கே கிடைத்த மற்றோர் பாதை, அரண்மனைக்கு ரிஷ்லுவை அழைத்துச் சென்றது. மண்டலம் காலடியில் கிடந்தது.

பிரான்சு! விசித்திரமான நாடு: விபரீதமான நிலைமைகள்! அங்கு, அழகும் அவலட்சணமும், வீரமும் கோழைத் தனமும், சமரசமும் சதிச் செயலும், கலையும் கொலையும், காவியமும் கபடமும், செல்வமும் சீரழிவும், உலுத்தரின் உல்லாசமும் உழைப்போரின் பெருமூச்சும் ஒன்றோடொன்று மோதிக் கொள்ளவில்லை, ஒன்றை ஒன்று அடுத்தடுத்து இருந்து வந்தன--மேகங்கள், அங்கும் இங்கும், கருநிறமாக ஒன்றும் வெண் கருமுகிலாக மற்றொன்றும் உள்ளது போல்! ஒன்றேடொன்று மோதி, பேரிடியாக மாறியதுதான், பிரன்சுப் புரட்சி. ரிஷ்லுகாலத்துப் பிரான்சிலே, மேகங்கள் சூல் கொண்டன. அந்தப் பிரான்சில், மன்னனுடைய அட்டகாசம் சிறந்ததா, பிரபுக்களின் கோலாகலம் சிறந்ததா என்று கண்டு பிடிக்க முடியாத நிலை. அரண்மனையில் மட்டும்தான் அரசோச்சுபவர் இருப்பார் என்பது பொது நிலை. பிரான்சிலே அரண்மனையிலே மன்னர் இருப்பார்; ஆனால் அரசோச்சும் ஆற்றல்கொண்ட பிரபு ஒருவன், வேறோர் கோட்டையிலே கொலுவீற்றிருப்பான்! பாதிரிகள் பலர்; பாபச் செயலோ அமோகம்! படை பல உண்டு, தோல்வியே அதிகம்! பசும் வயல் உண்டு. பட்டினி உலவும்! வாணிபம் நடைபெற்றது. வணிகர் கொழுக்க! வரி வாங்குவார் மன்னர், வறியவர்களிடம் மட்டும்! மது உண்டு, மாதரின் அதரம் உண்டு, அதனினும் போதை தரும் நிலை தர கீதம் உண்டு, ஏழையின் சோகக் குரலுடன் போட்டியிட்ட வண்ணம். பிரான்சு! தாமரைத் தடாகத்துக்கு எருமைபோல், மக்கள் வாழ்வுக்கு ஒரு ஆட்சிமுறை இருந்து வந்தது. இந்தப் பிரான்சில் தானே ஒரு ரிஷ்லு தோன்ற முடியும். இங்குதானே, ஆண்டியாக வேண்டியவன், அரசனை ஆட்டிப் படைக்கும் இடம் பெற முடியும்.

இத்தகைய பிரான்சுக்கு மன்னனாக வந்தமர்ந்த பதின மூன்றாம் லூயிக்கு, வயது 9! சொல்ல வேண்டுமா நிலைமையை! லூயி மன்னன், சிறு பாலகன். நிழலைக் கண்டால் பயந்தோடியும், நீரைக் கண்டால் அஞ்சியும், மலர்ச் செடி அருகே சென்றால் வண்டு கொட்டுமோ, மானைத் தொட்டால் முட்டித் தள்ளுமோ என்று திகில் கொள்ளத்தக்க மனநிலை உள்ள வயது, ஒன்பது வயதுப் பாலகன், பிரான்சின் மன்னன்! கடிவாளம் அறுந்து போய், உடலிலே முள் தைத்து, வெறி உணர்ச்சியுடன் உள்ள காட்டுக் குதிரையை அடக்கி ஓட்டிச் செல்ல ஒன்பது வயதுச் சிறுவன். மன்னன் மகன் மன்னன் தானே! வயதா முக்கியம்! முடமானாலும், குருடானாலும், சித்தம் குழம்பிப் போயிருப்பினும், சீரழிவான குணம் கொண்டோனாயினும், மன்னன் மகன் மன்னனாதல்தானே முறை! தேவகட்டளை அல்லவா அது! பண்டைப் பெருமையின் சின்னம்! எனவே, ஒன்பது வயதுப் பாலகன் ஆட்சிப் பீடத்தமர்ந்தான். அவன் பெயரால், அவன் அன்னை ஆட்சிப் பொறுப்பைப் பார்த்து வந்தார்கள். அந்த அன்னையோ!

மெடிசி குடும்பம் என்பது, பிளாரன்ஸ் நாட்டிலே கீர்த்தி வாய்ந்தது. செல்வத்தாலும் பல நாட்டுடன் மணவினை காரணமாக ஏற்பட்ட தொடர்பாலும், மெடிசி குடும்பம், மிகுந்த செல்வாக்கடைந்திருந்தது. மேரி எனும் அம்மை, இந்த மெடிசி குடும்பம்--மாண்ட மன்னனின் மனைவி--பதின் மூன்றாம் லூயிக்கு அன்னை; இத்தாலிய வம்சம். இயல்போ!

மேரி டி மெடிசி, தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட, எதையும் துணிந்து செய்யும் இயல்பு கொண்டிருந்தார். மன்னன் மனைவியாக இருந்தவர்கள் தான் எனினும், கான்சினி எனும் இத்தாலியன், அம்மையின் அபிமானத்தை அளவு கடந்து பெற்றிருந்தான். இத்தாலியிலிருந்து மேரி அழைத்துக்கொண்டு வந்த பரிவாரத்தில், லியனாரா டோரி என்றோர் தோழி இருந்தாள்; தச்சு வேலைக்காரன் மகள். அவளுடைய கணவன், இந்த கான்சினி.

ஊரிலே, பலர் பலவிதமாகப் பேசினர்--அரண்மனை சட்டை செய்யுமா! கான்சினிதான், மேரிக்கு உற்ற துணை, நல்ல தோழன், யோசனை கூறுவோன், எல்லாம். கான்சினியின் சொல்தான், அரண்மனையிலே, முத்திரையில்லா உத்தரவு. பலருக்கு இது பிடிக்கவில்லை, சிறுமொழி புகன்றனர், கான்சினி சிரித்தான்! என் யோகம் அது--இதுகள் வீணாக வயிற்றெரிச்சல் பட்டுப் பலன் என்ன, என்பான்.

"கான்சினி, கான்சினி!" என்று எதற்கும், எப்போதும் மேரிதேவியார், அவனைத்தான் அழைப்பார்கள். இந்த உத்யோகம் யாருக்கு அளிக்கலாம்? கான்சினிதான் கூறவேண்டும். இந்தச் சட்டத்தை எப்படித் திருத்தலாம்? கான்சினி சொல்கிறபடி! இதுதான் ஆட்சிமுறை. இவ்வளவு செல்வாக்கைப் பெற, கான்சினி. பேரறிவாளனா? இல்லை. மேரி அம்மையின் மனதை மகிழ்விக்கும் துறை ஒன்றுக்கே அவன் அறிவு அனைத்தும் செலவழிந்து விட்டது--மற்றத் துறைகளை அவன் அறியான். போரில் வல்லவனோ? போரா! அரண்மனையில், அரசாளும் அம்மைக்கு அந்தரங்க நண்பனாக இருக்கும் கான்சினிக்குக் களம் செல்ல நேரம் ஏது! பிரான்சு நாட்டுப் பெருங் கீர்த்திக் குடும்பத்தில் உதித்தவனோ? இல்லை. இத்தாலி நாட்டவன்! அவன் பெற்ற செல்வாக்குக்காக, அவன் கற்றிருந்த ஒரே வித்தை, மேரியின் மனப்பக்குவத்தை அறிந்து நடப்பதுதான். சாமான்யமான கலையா, அது! அதிலும், பிரான்சில், அந்த நாட்களில்! பெற்ற செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு கான்சினி ஆட்சி முறையிலே ஒரு விறுவிறுப்பு, ஏற்படுத்தினானா? இல்லை! பட்டமும் பதவியும் பரிசும் வாரி வழங்குவான் நண்பர்களுக்கு. மேரி அம்மைக்கு எதிராகப் பகைக்கூட்டம் கிளம்பிற்று, அதனை அறிந்து அழிக்கும் ஆற்றலுமற்றிருந்தான் கான்சினி. உரித்த பழத்தைச் சாப்பிட்டுவிட்டு உயர்தரப் பானம் பருகி, உல்லாச ஓடம் ஏறிச்செல்லும் போக்கினன், கான்சினி. அவ்னிடம், மேரிதேவி காட்டிய பரிவு, எதிர்ப்புச் சக்தியை உருவாக்கிற்று--மேரி அதை உணர்ந்து அஞ்சினாள். கான்சினி ஏதும் செய்ய இயலாதிருந்தான்! அரண்மனைக்குள்ளேயும் வெளியேயும், சீமான்களின் சிங்கார மாளிகைகளிலே, பிரபுக்களின் பாசறைகளிலே, கான்சினி--மேரி தொடர்புபற்றி கோபப் பேச்சுக் கிளம்பும், சூளுரைப்பர் சிலர், சிரத்தை அறுத்தெறிய வேண்டுமென்பர் சிலர். ஏன் இந்த மேரி தேவியின் புத்தி இவ்வளவு கெட்டுக்கிடக்கிறது என்பார் ஒருவர், எதற்கும் ஒரு அளவு இருக்கவேண்டாமா, என்பார் மற்றெருவர்; எதிர்ப்புப் பல இடங்களிலிருந்தும், உருவெடுத்த வண்ணம் இருந்தது.

ரிஷ்லு, அப்போதெல்லாம் பரமனுடைய நாமத்தை ஜெபித்துக்கொண்டு, தேவாலயப் பூஜாரியாய், திவ்யப் பிரபந்தங்களின் தேன்மொழியை ரசித்துக்கொண்டு, நாத்தீகர்களைத் திருத்திடும் நற்றொண்டிலும், சந்தேகிகளைச் சன்மார்க்கிகளாக்கும் பணிபுரிந்து கொண்டும், மத தத்துவ விளக்க ஏடு தீட்டிக்கொண்டும் இருந்தான்--ஆனால் உள் எண்ணமோ, உடைக்கு ஏற்றது அல்ல. தேவாலயத்திலே தான் உலவினான்; ஆனால், நோக்கமோ, அரசியல் ஆதிக்கம் பெறவேண்டும், எப்படியேனும், பாரிஸ் பட்டணம் சென்று, புகழ்க்கொடியை நிலைநாட்டவேண்டும் என்பது தான். உடைகாவி, உள்ளமோ பதவி மோகத்தில், நாளை, மறுநாள், அடுத்த திங்கள், இன்னும் சில திங்களில் என்று, இவ்வண்ணம் ஆவலுடன் எதிர்பார்த்தபடி இருந்தான், அழைப்பு வரும் வரும் என்று. அருளாலயத்துக்கு அனைவரும் வாரீர், அவன் புகழ் கேளீர் என்று பக்தர்களை அழைக்கவேண்டிய ரிஷ்லு, பாரிஸ் பட்டணத்திலிருந்து, ஆட்சியாளர்களிடமிருந்து, தனக்கு நமது அழைப்புவரும் நாளே திருநாள், பெருநாள் என்றெண்ணிக் கிடந்தான். அந்த அழைப்புக் கிடைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தான். நமது தேவாலய அதிபர், நமக்காகத் திருப்புகழைத் தொகுத்துத் தருவார், ஐயன் குணங்களை அழகுபட எடுத்துரைப்பார், பாவத்தைத் துடைக்கும் பணியினைப் பக்குவப்படுத்துவார், என்றுதான், அந்த ஊர் மக்கள் எண்ணிக்கொண்டனர். ஆனால், லூகான் நகரதேவாலய அதிபராக இருந்துவந்த ரிஷ்லு, மேரி அம்மையிடமிருந்து அழைப்புவரவேண்டுமென்று எதிர்பார்த்தவண்ணம் இருந்தார். உள்ளே புக இடம் கிடைத்துவிட்டால் போதும், பிறகு உயர்வைத் தடுக்க யாராலும் முடியாது என்று நம்பிக்கை பலமாகக் கொண்டான். ரிஷ்லு. பிரான்சு நாட்டு நிலையும், ஆளும் அம்மையின் நிலையும், ஆட்டிப் படைக்கும் கான்சினியின் குணமும், பிரபுக்களின் வலிமையும், திகைத்துக் கிடக்கும் மக்களின் குமுறலும், ரிஷ்லுவுக்குத் தெளிவாகத் தெரியும். ஜெபமாலைதான் கரத்தில். ஆனால், நினைப்பு முழுவதும், நாதன்மீதல்ல, நாடாள்வோர்மீது, ஆட்சிபீடத்தருகே செல்லும் பாதையின்மீது. தேவாலய அதிபருக்குவேண்டிய அறிவாற்றல் இல்லையோ-நிரம்ப-நிரம்ப தத்துவம் தெரியும், தர்க்கம் அறிவார்; ஏடு தீட்டினார், வாதம் புரிந்தார் - ஆனால் திருப்தி இல்லை; இதுதானா, இவ்வளவு தானா, பிரான்சு நாட்டை அல்லவா ஆளவேண்டும், மந்தையிலிருந்து விலகிவிட்ட ஆடுகளைத் திருப்பிக்கொண்டுவந்து சேர்க்கும் வேலைதானா எனக்கு? நான் ஆளப் பிறந்தவன், ஆளும் ஆற்றல் படைத்தவன், கான்சினியின் கரத்திலே பம்பரமாக உள்ள பிரான்சுமட்டும், என் கரத்திலே ஒப்படைக்கப் பட்டால்......! எண்ணும்போதே எதிர்காலக் காட்சிகள் மனதிலே தோன்றின. அழைப்போ, வந்தபாடில்லை. ரிஷ்லுவின் அண்ணன் ஹென்ரி ரிஷ்லு, பாரிசில், மேரி அம்மையின் கருணைக்குப் பாத்திரமானவனாகத்தான் இருந்தான். தம்பியின் உருக்கமான வேண்டுகோள் கிடைத்தது. சமயம்வரவில்லை. வேறு பல நண்பர்களுக்கும் எழுதியிருந்தான் ரிஷ்லு. வாய்ப்புக் கிடைக்கவில்லை. மேரி தேவியாருக்கே எழுதினான், "அடியேன் என்றும் தங்களுக்குச் சேவை செய்யச் சித்தமாக இருக்கிறேன். உத்தரவுக்கு எதிர்பார்க்கிறேன்" என்று. உத்தரவு கிடைக்கவில்லை. கான்சினிக்கும் எழுதினான்--கட்டளைக்குக் காத்திருப்பதாக. கட்டளை கிடைக்கவில்லை. அதுவரையில் கர்த்தர் தொண்டு செய்துவருவோம் என்று இருந்துவந்தான். அதிலேயும் இலாபம் இல்லாமற் போகவில்லை.

கார்டினல் ரிஷ்லு. வேண்டாவெறுப்புடனோ, எதிர்பாராத நிலையிலோ, பதவி பெறவில்லை. அதற்காக, அவன் எடுத்துக்கொண்ட முயற்சி கொஞ்சமல்ல--பூஜாரியாக இருந்து கொண்டே இந்த முயற்சியில் ஈடுபட்டது, அறமா, அழகா, என்பீர்கள், அந்நாளில் அது அறமா, அழகா என்பதல்ல பிரச்னை, அதுதான் முறை! கார்டினல் ரிஷ்லு, செந்நெல் வயலிலே பதுங்கிக் கிடந்த புலி! இரை வேண்டும்--இருட்ட வேண்டும்--அதுவரை, வயலில்! மாடா, கதிர் தின்று பசி தீர்த்துக்கொள்ள? ரிஷ்லுவும், பாரிஸ்மீது பாய்வதற்குத் தக்க சமயம் வருகிறவரையில், இங்கு இருப்போம், என்றுதான், லூகான் நகரைத் தங்குமிடமாகக் கொண்டான்--தேவபூஜையின் மேன்மையை உணர்ந்து அல்ல!

ரிஷ்லு, எளிய குடியில்தான் பிறந்தான். 1558ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் நாள், பாரிஸ் பட்டிணத்தில் ரிஷ்லு பிறந்தான். உடன் பிறந்த ஆடவர் மூவர், இரு பெண்கள். ஆரிமாண்டு ஜீன், என்ற பெயர், ரிஷ்லுவுக்கு! ரிஷ்லு என்பது ஊரின் பெயர், அதுவே அந்தக் குடும்பத்தினரின் பொதுப் பெயருமாயிற்று, ஐந்து வயதுப் பாலகனாக ஆர்மாண்டு ஜீன் இருக்கும்போதே, தந்தை காலமானார்-ஜீன், தாயாரால் வளர்க்கப்பட்டுவந்த செல்லப்பிள்ளை. சுசானே என்பது தாயின் பெயர். ஜீன் சிறு பிராய முதலே, நோயாளி--துள்ளித் திரிவதில்லை, சோர்ந்து காணப்படுவான். தாயார் அவனை மிகவும் பக்குவமாக வளர்க்க வேண்டி இருந்தது. அடிக்கடி வடுமையான காய்ச்சல். சிறுவன், ஓங்கி வளருவதற்கு முடியாத நிலை. குன்றிக் கிடப்பான். உடல்தான் அவ்விதம். உள்ளமோ சுறுசுறுப்பானது - இளமை முதலே! பிரான்சு நாட்டு நிலை, பொருளாதார நெருக்கடி, கத்தோலிக்கருக்கும் பிராடெஸ்ட்டெண்ட் பிரிவினருக்கும் ஏற்படும் போராட்டங்கள், அரச குடும்ப அலங்கோல நடவடிக்கைகள், இவைபற்றி எல்லாம் ஊரார் பேசிக்கொள்வர், சிறுவன் கூர்ந்து கவனித்துக் கேட்பான். மனதிலே, எண்ணங்கள் தெளிவாகப் பதியலாயின சிறு வயது முதல் இறந்துபடும் வரையில், ரிஷ்லு, சதா நோயுடன் போராடிக்கொண்டுதான் இருக்கநேரிட்டது. எனினும் ஓயாத உழைப்புக்குத் தன்னை உட்படுத்திக்கொண்டான். பள்ளியிலே முதல் மாணவனாக, ஆசிரியர் பாராட்டும் திறம்படைத்தவனாக விளங்கவேண்டும் என்று ஆசை. படிப்பதிலே ஆர்வம். எந்தத் துறை சம்பந்தமான ஏடானாலும், அதனைத் தெளிவாகக் கற்றுணருவதிலே கவலை. ஆசிரியர்கள் ரிஷ்லுவின் அறிவுத் தெளிவு கண்டு ஆச்சரியப்பட்டனர். எப்போதும் நோய்வாய்ப்பட்டு, மெலிந்து சோர்ந்து காணப்பட்ட இந்த வாலிபனுக்கு அறிவுக் கூர்மை எப்படி ஒளிவிடுகிறது காணீர், என்று பலரும் பாராட்டுவர்-ரிஷ்லுவுக்கு இதனைக் கேட்பதிலே மிக்க மகிழ்ச்சி. துவக்க முதலே ரிஷ்லுவிடம் இந்தக் குணம் இருந்து வந்தது - தனக்கு ஈடு எதிர்ப்பு எவரும் இருத்தலாகாது, என்ற எண்ணம், அதிகாரத்தில் அமர்ந்ததும், இதே எண்ணம்தான், ரிஷ்லுவை, ஈவு இரக்கமற்ற செயல்களையும் செய்யத் தூண்டிற்று. இலக்கியத்துறைப் படிப்பை முடித்துக்கொண்டு, ரிஷ்லு, ராணுவக் கல்லூரியில் சேர்ந்தான். குதிரை ஏற்றம், வாட்போர், ஆகிய கலைகளை நேர்த்தியான முறையிலே பயிற்றுவிக்கும், உயர்தரக் கல்லூரியில் ரிஷ்லுவுக்கு இடம் கிடைத்தது. இலக்கியக் கல்வி பயில்கையில் எத்தகைய திறமையும் ஆர்வமும் காட்டினானோ, அதேபோலவே, ராணுவத் துறைப் படிப்பிலேயும் ரிஷ்லு திறமையைக் காட்டி ஆசிரியர்களின் பாராட்டுதலைப் பெற்றான்.

இலக்கியம் பயின்றான், ஆனால் இலக்கிய ஆசிரியனாகவில்லை போர்க்கலை பயின்றான்; ஆனால் படையிலே தளபதியாகவில்லை.

இவைகளை எல்லாம் ஆர்வத்துடனும் திறமை நிரம்பும் முறையிலும் கற்றானே யொழிய, ரிஷ்லு, இந்தத் துறைகள் தரும் இடமும் வாய்ப்பும் போதுமானவை என்று திருப்தி அடையவில்லை. வேறு ஓர் இடம் தனக்கு வேண்டும், இவைகள் யாவும், வெறும் 'முதற்படிகளே' என்று எண்ணினான். ஆனால் அவன் இலக்கிய அறிவைக் கண்டவர், அவன் பெரிய இலக்கிய கர்த்தாவாகிவிடுவான் என்று எண்ணிக்கொள்வர்--ராணுவக் கல்லூரியிலே அவனைக் கண்டவர்களோ, இவன் படையில் சிறந்த தளபதியாகத் திகழ்வான் என்று எண்ணிக் கொள்வர். ரிஷ்லுவோ, இலக்கிய அறிவும், ராணுவக்கலை அறிவும், தனக்குக் கிடைக்க இருக்கும் பெரியதோர் வாய்ப்புக்குத் துணைபுரியும், என்று மட்டுமே எண்ணிக்கொண்டான். சிறுவயது முதற்கொண்டே ரிஷ்லுவின் மனம் அப்படிப்பட்டதாக இருந்தது. வேறு யாருக்கும் கிட்டாத கிடைக்காத இடம் தனக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணுவான்-அதற்கான முழுப் பயிற்சியும் பெற்றாக வேண்டும், என்ற ஆர்வம், நோயையும் பொருட்படுத்தாமல், உழைக்கச்செய்தது. இவன் 'தாங்குவானா' இவ்வளவு கடுமையான உழைப்பை என்று தாயார் கவலைப்படுவார்கள்--ரிஷ்லுவோ, கனி பறிக்கச் செல்பவன் மரத்தின்மீது ஏறிவிட்டால், கால்கடுக்குமே என்றா எண்ணுவது, இடையில் கிடைக்கும் செங்காய் கொண்டா திருப்தி அடைவது? மேலே மேலே ஏறத்தான் வேண்டும், கனி கரத்தில்படும் வரையில். என்ற முறையிலே உழைத்து வந்தான்.

இலக்கியம் தீட்டுவான் என்று எதிர்பார்த்தவர்களை ஏமாற்றிவிட்டு, இராணுவக் கல்லூரி சென்றான்; தளபதியாவான் என்று எதிர்பார்த்தனர்; ஆனால், ரிஷ்லுவோ, சாமியார் ஆனான்!