அரசாண்ட ஆண்டி/ரிஷ்லு

ரிஷ்லு குடும்பத்துக்கு, மூன்றாம் ஹென்ரி எனும் பிரென்சு மன்னன், லூகான் நகர தேவாலயத்தை இனாம் தந்திருந் தான். பிரென்சு நாட்டிலே, மன்னர்கள் இப்படி, 'குரு பீடங்களை, 'தேவாலயங்களை', 'பூஜா மடங்களை' தமது இஷ்டம் போல் இனாம் தருவது வாடிக்கை.

இன்று முதல், ராமேஸ்வரம் தேவஸ்தானவட்ட அதிபராக ராமாச்சாரியார் நியமிக்கப்பட்டிருக்கிறார், அவரும் அவரது பின் சந்ததியாரும் ராமேஸ்வரம் தேவஸ்தான அதிபராக இருந்து, அதனால் கிடைக்கும் வருமானத்தை அடைந்து கொள்வர்--என்று ஒரு சர்க்கார் உத்தரவு இப்போது கிடையாது, இயலாது, ஜனநாயகம் அனுமதி அளிக்காது. புரட்சிக்கு முன்பு பிரான்சிலே இது சர்வசாதாரணமான முறை. மன்னர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு நிலங்களை, மாட மாளிதைகளை, பதவி பவிசுகளைத் தானமாகத் தருவது போலவே, குருபீடங்களையும் தேவாலயங்களையும் தருவர்! அதுமுதல் அந்த ஆலய வருமானத்தை அந்தக் குடும்பத்தார் அனுபவித்துக்கொள்வர்; அவர்களாகப்பார்த்து ஆலயகாரியங்களைக் கவனிக்க சம்பளத்துக்குப் பூஜாரியை நியமிப்பர். இந்த அலங்கோலமான முறை அமுலில் இருந்த காலம் அது. லூகான் நகர தேவாலயத்துக்கு, அந்த நகர மக்கள் செலுத்தும் காணிக்கை, அந்த நகர மக்கள் மதச் சடங்குகளுக்காகச் செலுத்தும் தட்சணை யாவும், ரிஷ்லு குடும்பத்தாருக்குச் சொந்தம். மதச் சடங்குகளை நடத்திவைக்கவும், ஆலயத்தில் தொழுகை பஜனை இவைகளை நடாத்தவும், ஒரு 'அர்ச்சகர்' வேலைக்கு அமர்த்தப்பட்டார். அவருக்குத் தந்த சம்பளம் போக. மீதமிருக்கும் தொகையைக் குடும்பம் எடுத்துக் கொண்டது.

லூகான் நகர தேவாலயம், அதிக வருமானம் தருவதல்ல--ஏழைகள் நிரம்பிய சிற்றூர். எனவே, சம்பளத்துக்கு அர்ச்சகரை வைப்பதைவிட, ரிஷ்லுவே, அந்த 'வேலை'யைப் பார்த்துக்கொண்டால் இலாபகரமாக இருக்கும் என்ற எண்ணம் பிறந்தது. சாமான்யக் குடும்பம்தானே.

ரிஷ்லு அப்போதுதான் ராணுவக் கல்லூரியில் திறம் படப் பயிற்சி பெற்றுவந்தான். அவன் நிலையிலிருந்த எந்த வாலிபனும், ராணுவ உடை தரித்துக்கொண்டு, குதிரைமீது சவாரி செய்துகொண்டு, உல்லாசமாக வாழலாம்; போர் மூண்டால், களத்திலே திறம் காட்டி, வீரத்தை விளக்கி, விருது பெறலாம், தளபதியாகலாம் என்றுதானே எண்ணுவான். காவி அணிந்து கமண்டலம் ஏந்தி, பாவிகளை ரட்சிக்கும்படி பரமனிடம் 'பூஜை' செய்யும் பண்டார வேலைக்குப்போக மனம் ஒப்புவானா? ரிஷ்லு சம்மதித்தான்! வாள் ஏந்திய கரத்தை, ஜெபமாலை ஏந்தும் கரமாக்கிக்கொள்ள இசைந்தான். வலப்புறம், இடப்புறம், எதிர்ப்புறம் என்று குதிரையைச் செலுத்தி, போர்முறை பயின்று வந்தவன், அந்தி வேளைப் பூஜை, அதிகாலைப் பூஜை, அருள் கூறல், பிரசாதம் வழங்கல்; ஆறுதலளித்தல், குற்றம் கடிதல் என்பன போன்ற காரியங்களில் ஈடுபட இசைந்தான். காரணம் என்ன? எந்தக் காரியம் செய்தாலும், திறமையை விளக்கச் சந்தர்ப்பம் கிடைக்குமல்லவா, அதுதான் தேவை, ரிஷ்லுவுக்கு. அவ்வளவு தன்னம்பிக்கை! தளபதியாவதற்கான துறையை விட்டுவிட்டு, 'சாமியார்' வேலையை மேற்கொண்ட ரிஷ்லு, லூகான் தேவாலய நிர்வாகக் காரியத்தை ஒழுங்குபடுத்துவதிலே மும்முரமாக ஈடுபட்டான். அருள் பெரும் திருமுறையை மக்களுக்கு அறிந்துரைக்கும் பணியான 'பூஜாரி வேலையை மேற்கொண்டபோது, ரிஷ்லுவுக்கு வயது, பதினேழு!

லூகான் நகருக்கு வந்து வேலையை ஒப்புக்கொள்வதற்கு முன்பு, ரிஷ்லு, தன் புதிய தொழிலுக்குத் தேவையான திறமையைப் பெற, பாரிஸ் சென்று மார்க்க சம்பந்தமான படிப்புக்காக இரண்டாண்டுகள் செலவிட்டான். எவ்வளவோ பேர், பூஜாரிகளாக உள்ளனர், கிடைக்கும் வருமானத்தோடு திருப்தி அடைந்து, கிராமத்துக் கொல்லனும் உழவனும், ஜெபமாலை உருட்டும் கிழவியும், பாவ மன்னிப்புக் கோரும் முதியவனும் தரும் பாராட்டுதலைக் கேட்டுக் களித்து இது போதும் நமக்கு என்று. ரிஷ்லு, அப்படியல்ல!' லூகான் தேவாலய அதிபர் யாராலும் பாராட்டப்பட வேண்டியவராக வேண்டும். மற்றத் தேவாலய அதிபர்களெல்லாம், இரண்டோர் ஏடுகளை மனப்பாடம் செய்துகொண்டவர்கள், ஆழ்ந்த ஆராய்ச்சி, அறிவுத் தெளிவுள்ள விளக்கவுரை தரும் ஆற்றல் இல்லாதவர்கள். லூகான் நகர தேவாலய அதிபராக, அரும்பு மீசை வாலிபன் ஒருவன் அமர்ந்திருக்கிறான். அவனுடைய அறிவே அறிவு, அவன் அளிக்கும் உபதேசமே உபதேசம் என்று அனைவரும் புகழ்ந்து பேசவேண்டும்; மக்களின் கவனத்தைக் கவரவேண்டும்: அந்தப் புகழொளி, பாரிஸ் நகரில் தெரியவேண்டும்; அழைப்பு அங்கிருந்து கிடைக்கவேண்டும்--இது ரிஷ்லுவின், எண்ணம், கிடைக்கும் வாய்ப்பை, பெரியதோர் நிலைபெற உபயோகிக்கவேண்டும் என்ற நோக்கம். எனவேதான், பரம்பரை பாத்யதையாகக் கிடைத்த பூஜாரி வேலை என்றாலும், மதவாத உலகு மதிக்கும் விதமான அறிவாற்றல் பெற்று, அந்த வேலையில் ஈடுபடவேண்டும் என்று ரிஷ்லு திட்டமிட்டான். இரண்டாண்டுகள் கடுமையாக உழைத்து, மத ஏடுகளில் பெரும் புலமை பெற்றான்.

உண்மையிலேயே மார்க்கத் துறையிலே நம்பிக்கையும் அக்கரையும் பிறந்தால், எந்தச் சந்தேகத்தையும் பஞ்சு பஞ்சாக்கவல்ல ஆதாரங்களை ஆய்ந்தறிந்துகொள்ள வேண்டும், மெஞ்ஞானத்தின் தன்மையை உணரவேண்டும், சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வத்தை தேஜோமயாநந்தத்தை அறிந்து மகிழ வேண்டும் பவப்பிணி அகலும், பற்றும் பாசமும் மாய்ந்தொழியும், அருள் கிட்டும், பரலோகத்தில் சீரியதோர் நிலை கிடைக்கும் என்பதற்காக, இரவு பகலாக, ஆண்டுக்கணக்கில், மத ஏடுகளைக் கற்றும், விதவிதமான 'ஞானாசிரியர்களை' அடுத்தும், பக்குவம் பெற முயல்வர். ரிஷ்லுவின் நோக்கம் அவ்விதமானதல்ல. உலகத்தின் மாய்ஞையை, வாழ்க்கையின் நிலையாமையை உணர அல்ல, ஏடுகளைப் படித்தது; அவைபற்றி, கேட்போர் மெச்சும் விதமாக எடுத்துரைக்க! அதன்மூலம் தன் புகழ் பரப்ப! புகழொளியைத் துணைகொண்டு, உரியதோர் பதவி பெற, பாரிஸில் அரசோச்சும் குழுவிலே அமர, அரசாள!

லூகான் நகர தேவாலய அதிபராகி, அதிலேயே மூழ்கிவிட விரும்பவில்லை. இது ஒரு கட்டம்--முக்கியமானது--கூர்த்த மதியுடன் இதனைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், வேறு பல கட்டங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பது ரிஷ்லுவின் திட்டம். யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள், அனேகருக்குத் தோன்றவே செய்யாது. ஆனால் ரிஷ்லு எல்லோரையும்போல அல்ல. அவன் மனதிலே உறங்கிக்கொண்டல்ல, உலவியபடி இருந்த ஆசைகள் அநேகம். எல்லா ஆசைகளும் அதிகம் பெறவேண்டும், ஈடில்லை எதிர்ப்பில்லை என்ற நிலை பெறவேண்டும் என்பதுதான். வாளின் கூர்மையைப் பாராட்டும் வீரன், களத்திலே வெற்றியும் கீர்த்தியும் பெறுவதற்கு வாளைத் துணையாகக்கொள்வான்; மற்றவர்களுடைய கூர்மையைவிட என் வாளின் கூர்மை நேர்த்தியானது என்று பேசிக்கொண்டா காலங் கடத்துவான்!

பாரிசில், மத ஏடுகளைக் கற்று, ரிஷ்லு, பல பரிட்சைகளில் தேறினான், திருப்தியில்லை- ரோமாபுரி சென்று, போப்பாண்டவரைக் கண்டுவர ஆவல்கொண்டான்.

கத்தோலிக்க உலகுக்கு போப்பாண்டவர் கண்கண்ட கடவுள்! அரசுகள், போப்பாண்டவரின் ஆசிபெறத் தவங்கிடந்தன. பிராடெஸ்டென்ட் புயல்வீசி, ஆதிக்கம் ஒரு அளவுக்கு அழிந்துபட்டது என்றபோதிலும், ரிஷ்லுவின் நாட்களிலே போப்பாண்டவருக்கு, பிரான்சிலேயும், கத்தோலிக்க மார்க்கத்தைக் கொண்டிருந்த வேறுபல ஐரோப்பிய நாடுகளிலேயும், அளவற்ற செல்வாக்கு. பக்திமிக்க கத்தோலிக்கர் போப்பின் தரிசனம், பாப விமோசனம் என்று எண்ணுவர் பரமண்டலத்திலே பிதா முன்னிலையிலே செல்வதுபோன்று புனிதத்தன்மை நிரம்பியதாகவே போப்பாண்டவரைத் தரிசிப்பதைக் கருதுவர். ரிஷ்லு, போப்பாண்டவரைக் காண விரும்பியது, இந்த நோக்குடன் அல்ல! இதோ ஒரு புதிய நட்சத்திரம், இதன் ஒளியின் அழகுதனைக் காணீர்! என்று போப்புக்கு எடுத்துக் காட்டவே, ரிஷ்லு ரோம் சென்றான். அங்கு புகழ்பெற வேண்டும் என்பது நோக்கம். அதற்கோர் வாய்ப்பும் கிடைத்தது. தேவாலய அதிபர் பதவிக்கு ஏற்ற வயது இல்லை, ரிஷ்லுவுக்கு. எனவே போப்பாண்டவரிடம் மனுச் செய்துகொண்டு, அவர் ஆசியும் அனுமதியும் பெற்று, வயதிற் சிறியவனாயினும் வல்லமை மிக்கோன், எனவே இவன் ஆலய அதிபனாகலாம் என்று அவர் கூறவேண்டும்--இதனைச் சாதிக்க சிபாரிசு தேவை இல்லை: நானே செல்வேன், மார்க்க சம்பந்தமான துறையிலே எனக்குள்ள புலமையையும் திறமையையும் அவரே காணட்டும், அனுமதி எளிதில் அளிப்பார், என்று கூறிவிட்டு ரிஷ்லு ரோம் சென்றான்--அனுமதியும் பெற்றான்.

ஜந்தாம்பால் என்பவர் அப்போது போப்பாண்டவர். அவர் அவையிலே, மார்க்கத்துறைத் தலைவர்களும் அரசியல் துறைத் தலைவர்களும் நிரம்பி இருந்தனர். ரிஷ்லு, அந்த அவையினர் மகிழத்தக்க மதி நுட்பத்தைக் காட்டி வெற்றிபெற்றார். ஒரேமுறை, ஒரு உபதேசியார் அருளிய உபதேசத்தைக் கேட்ட ரிஷ்லு, உடனே அப்படியே அதைத் தவறு துளியுமின்றி ஒப்புவித்தாராம் - அதிசயமடைந்த போப்பாண்டவர் ரிஷ்லுவை அழைத்து, ஒப்புவிக்கச் சொல்லிக் கேட்டு இன்புற்றாராம். அதேபோது ரிஷ்லு, உபதேசம் எப்பொருள் பற்றியதோ அதே பொருள் குறித்துத் தானே புதியதோர் உபதேசம் தயாரித்து, சொற்பொழிவாற்றினாராம்; போப், மிகவும் பாராட்டினாராம்.

"ஆசாமி பெரிய எத்தனாவான்"--என்ற பொருள்பட போப் ரிஷ்லுவைப் பற்றிக் கூறினாராம்.

போப்பாண்டவரிடம், ரிஷ்லு, தன் உண்மை வயதை மறைத்துத் தவறான சீட்டுக் காட்டி ஏய்த்தார் என்றும் வதந்தி உண்டு. ரிஷ்லுவுக்கு இது தெரியாத வித்தையல்ல! ரோம் நகரிலே புகழ் ஈட்டிக்கொண்டு, பதவிக்கான அனுமதியும் பெற்றுக்கொண்டு, ரிஷ்லு, பாரிஸ் திரும்பினார்.

ரோம், மார்க்கத்துறைக்குத் தலைநகரம்! பாரிஸ், அரசியல் உலகுக்குத் தலைநகரம்!

முன்னதில் ஜெபமாலை ஏந்திய கரத்தினர், வாளேந்திய மன்னரைச் சீடராகக்கொள்ளும் முறைபற்றிய விளக்கம் கிடைத்தது, ரிஷ்லுவுக்கு.

பாரிசில், அரசோச்சும் அதிபர்கள், ஜெபமாலையையும் தமது சுயநலத்துக்காக எப்படிப் பயன்படுத்துகின்றனர், என்ற தெளிவு கிடைத்தது.

பாரிசில், அரசியல் சம்பவங்கள் மின்னல் வேகத்தில்! ரிஷ்லு, அவைகளை எல்லாம் கூர்ந்து கவனித்தார்.

லூகான் நகர தேவாலய அதிபர் - போப்பாண்டவரின் ஆசியும் பெற்றவர்--இவருக்கு எதற்காகப் பாரிஸ் பட்டணத்துப் பகட்டுடைக்காரர்களின் அரசியல் நடவடிக்கைகளைப் பற்றிய அக்கரை என்று எண்ணுவீர்கள்--உடை மட்டும் தானே காவி! உள்ளமோ அரசியலில் ஆதிக்கம் பெற வேண்டும் என்பதல்லவா!

"ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு" இது ஏமாளிக் கொக்கு அல்ல, உறுமீன் வருமளவும் ஓடுமீன் உண்டு, காத்துக்கொண்டிருந்தது!

லூகான் நகர தேவாலயம் ஆண்டுக்கு 13000 விவர்ஸ் (பிரன்ச்சு பவுண்டு) வருமானமே உடையது. இந்த அற்பத் தொகைக்காக அல்ல, ரிஷ்லு ஆசைப்பட்டது? அவன் மனதிலே உலவிய எண்ணத்தின் முன்பு, இந்தத் தொகை வெறும் தூசு. பலருடைய கவனத்தைக் கவருவதற்கு இந்த இடம் ஒரு வாய்ப்பாக இருக்கட்டுமே என்பதற்காகவே, லூகான் தேவாலய வேலையை ஏற்றுக்கொண்டான்.

பழைய கட்டடம்--படாடோபம் கிடையாது--அதிகமான பணப் புழக்கம் இல்லை--தங்க வெள்ளி தட்டுகள் இல்லை --பட்டு விரிப்புகள் கிடையாது--சாமான்யமான நிலை, லூகான் நகர தேவாலயம். இதிலே உலவியபோது ரிஷ்லுவின் உள்ளம், அடைபட்டுக்கிடந்த சிங்கம்போன்றிருந்தது. கூண்டுக்குள் உலாவிடும்போதும், சிங்கத்தின் நடையிலே ஒரு கெம்பீரம் இருப்பதுபோல, இந்தச் சாமான்யமான தேவாலய அதிபர் எனும் சிறையிலும், ரிஷ்லு, தன் திறம் பிறர்க்கு விளங்கும் வகையிலே நடந்துகொண்டான்.

"என் வீடு சிறைபோன்றது! பூந்தோட்டம் இல்லை--உலவும் இடம் கிடையாது--எங்கும் புகைமயம்--வெள்ளித் தட்டுகள் இருந்தாலாவது பரவாயில்லை, கிடையாது"...என்று ரிஷ்லு, குறைபட்டு, நண்பருக்குக் கடிதம் எழுதினான்.

அதே ரிஷ்லு, கார்டினல் ரிஷ்லுவாகி, பிரான்சை ஆட்டிப் படைக்கும் அதிகாரம் பெற்றபிறகு, புதிதாகக் கட்டிய 'கார்டினல் மாளிகை’க்கு, நிலத்தைப் பண்படுத்தவும், மாடிகள் அமைக்கவும் மட்டும் 336,000 லிவர்ஸ் செலவிட்டான்! கட்டிடச் செலவு 410,000! அலங்கார அமைப்புகள், நீர் ஊற்றுகள், பூச்செடிக்கான தொட்டிகள் இவற்றுக்காக மட்டும் 60,000!

உலவ இடமில்லை என்று வாட்டம்--பிறகு, உலவ நேரமில்லை என்ற வருத்தம். மன்னன் கண்டு அதிசயிக்கத்தக்கதும், பிரபுக்கள் கண்டு பொறாமைப்படத்தக்கதுமான மாளிகை இரண்டு அமைத்திட முடிந்தது, புகை கப்பிக்கொண்டு, ஓதம் நிறைந்து, சோகமூட்டும் நிலையிலிருந்த தேவாலய அதிபராக வாழ்க்கையைத் துவக்கிய இந்தக் காரியவாதியால்!

ரோம் நகரில் மார்க்கத் துறையினரின் மந்திராலோசனைகளைக் கேட்டுப் பழகிய ரிஷ்லு, பாரிஸ் பட்டினத்துப் படாடோபத்தைக் கண்டு பழகிய ரிஷ்லு, சேறும் சகதியும், நிரம்பிய லூகான் நகரின் தோற்றத்தையும் அங்கு உலவிய மக்களின் எளிய வாழ்க்கையையும் கண்டு, எப்படி மன அமைதி கெடாமலிருக்கமுடியும்! பாரிசின் பகட்டு எங்கே, இந்தப் பட்டிக்காட்டிலே கிடைக்கும் சோர்வுஎங்கே! வெறுப்பும் சலிப்பும், எவருக்கும் தோன்றும். ரிஷ்லு, அதற்கு இடம் தரவில்லை. அழைப்புக்கிடைக்குமட்டும் இந்த எளிய.நிலை! இந்த எளிய நிலையிலும், உயரிய முறையைக் காட்டியாக வேண்டும் என்று எண்ணினான். அழைப்பு வந்தது! அரசாண்டு வந்த அம்மையிடமிருந்து அல்ல! அம்மையை 'ரசித்து' வந்த இத்தாலியனிடமிருந்துமல்ல! அரசியல் நிலைமை, அழைப்புவிடுத்தது! பிரான்சு, தன் பேரவையை, முப்பெருமன்றத்தைக் கூட்டிட முனைந்தது. பெரியதோர் மேகம் அரசியல் வானில் ! ரிஷ்லு, தன் சமயம் பிறந்தது என மகிழ்ந்தான்.

பிரபுக்கள்--அருளாளர்கள்--மக்கள். சமுதாயம், இப்படி முப்பெரும் பிரிவு கொண்டதாகக் கருதப்பட்டது. பிரான்சு அரசியல் அமைப்பில், பிரபுக்களின் பிரதிநிதிகள், மார்க்க அதிபர்களின் பிரதிநிதிகள், மக்களின் பிரதிநிதிகள், எனும் முப்பெரும் பிரிவும் ஒரு சேரக் கொண்ட பேரவை, பிரான்சு நாட்டு அரசியல் நெருக்கடிகளின் போது, கூட்டப்படும். கரத்திலே வலியும், கருத்திலே முறுக்கும் இருக்குமட்டும், பேரவை பற்றிச் சட்டை செய்வதில்லை, மன்னன்--மமதை ஒன்றே போதும்; அதை ஊட்டச் சில செருக்குமிக்க பிரபுக்கள் போதும், எதிர்ப்பை ஒழிக்க சிறுபடை போதும் என்று இருப்பான்--குழப்பம் நாட்டிலும் மனதிலும் மூண்டுவிட்ட சமயத்தில், என்ன செய்வது என்று திகில் பிறக்கும்போது தான் மக்களின் குரல் செவியில் சிறிதளவுவிழும்; மக்களோ "பேரவை கூடட்டும்" என்றுதான் முழக்கமிடுவர்.

எல்லா உரிமைகளையும் வழங்கவும் பாதுகாக்கவும் நாட்டின் பொதுநிலையைப் பாதுகாக்கவும், ஆற்றல் கொண்டது பேரவை, என்ற எண்ணம் பிரான்சு மக்களுக்கு, அவர்கள் எண்ணியபடியே, இந்தப் பேரவைகூடி, எடுத்த முடிவுகளின்படிதான், 'பதினாலாம் லூயி மன்னன் காலத்திலே மாபெரும் புரட்சி வெற்றிகரமாக்கப்பட்டது. அது, மன்னனின் தலையைக் கொய்த பேரவை! இது அலங்காரப் பேரவை!! இந்தப் பேரவையும் கூட்டவேண்டி நேரிட்டதற்குக் காரணம் அரசாண்டுவந்த மேரி அம்மைக்கும், அரசகுடும்பத்துடன் நெருங்கிய உறவுகொண்ட பிரபுக்கள் சிலருக்கும் மூண்ட பகை, பெரு நெருப்பாகிப் பிரான்சைப் பொசுக்கிவிடுமோ என்ற கிலி பிறந்தது தான்!

பிரான்சு நாட்டுப் பிரபுக்கள்--உலகத்துக்கே ஜனநாயகத்தை வழங்கிய வள்ளல்கள்!

இந்தப் பிரபுக்களின் அட்டகாசமும் வறட்டு ஜம்பமும் குரூரமும் மடைமையும் கொலைத் தொழிலும் சதிச் செயலும், ஏழையரை இம்சித்ததும் எளியோரை அழித்ததும், பருகிய மதுவும், பதம்பார்த்த கன்னியரின் கற்பும், இவர்களின் கோலாகலம், கிளப்பிய வெறுப்புணர்ச்சியுந்தான் பிரான்சிலே மட்டுமல்ல, ஐரோப்பா முழுவதும், உலகிலேயே என்றும் கூறலாம், மக்களை நிமிர்ந்து நின்று ஏன் என்று கேட்டு, உள்ள உயிர் ஒன்றுதான் அது பிரிவதும் ஒரு முறை தான், சாகுமுன் உன்னைச் சாய்த்திடப் போரிட்டே தீருவேன் என்று வீர முழக்கமிட்டுப் புரட்சி நடத்தி, மக்களாட்சியை ஏற்படுத்த உதவிற்று! இந்தப் பிரபுக்கள், தர்மம், தயை, தாட்சணியம், அறிவு, ஆற்றல், அன்பு, நன்றி, எனும் பண்புகளுடன் நல்வழி நடந்திருந்தால், மக்களாட்சி மலருவது மூன்று நான்கு நூற்றாண்டுகளாவது தாமதப்பட்டிருக்கும். காட்டிலிருக்கும் புலி, ஊருக்குள் நுழைந்து ஆடுமாடுகளைக் கொன்று, மேலும் கொல்ல ஊர்க் கோடிக் கொல்லையிலே பதுங்கிக் கொள்ளும் போதுதானே ஊரார் திரண்டு சென்று, உயிருக்குத் துணிந்து நின்று, புலியைக் கொன்று போடுவர். பிரான்சின் பிரபுக்கள், புலிகளாயினர்--குகைக்குள்ளேயும் இல்லை-எதிர்ப்பட்ட ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சினர்--எனவேதான், மக்களாட்சி” மலரமுடிந்தது. ஆட்சி என்பது அனைவருக்கும் பொதுவான உரிமைதானே, நாடு என்பது அனைவருக்கும் பொதுதானே, நாட்டுவளம் பெருகுவதும், எதிரிகளிடமிருந்து நாடு காப்பாற்றப்படுவதும் எல்லா மக்களின் ஒன்றுபட்ட திறமையாலும் உழைப்பாலும் தானே, எனவே மக்கள் அனைவருக்கும்தானே அரசியல் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படவேண்டும், என்ற தத்துவப் பேச்சு மட்டுமல்ல, மக்களாட்சியை மலரச்செய்தது! பிரபுக்களின் அக்ரமம், புரட்சியை மூட்டிற்று, புரட்சித் தீயிலிருந்து மக்களாட்சி மலர்ந்தது! அந்த முறையின்படி, பிரான்சின் பிரபுக்கள், உலகுக்கு ஜனநாயகத்தை வழங்கியவர்களாவர்.

1,40,000 பிரபுக்கள் இருந்தனர், பிரான்சில்! எல்லோரும் செல்வச் சீமான்களல்ல, பலர் ஆடி அழிந்ததால் கடன்பட்டுச் சொத்தை இழந்துவிட்டு, விருது மட்டும் வைத்துக்கொண்டு வெட்டிகளாகத் திரிந்தனர். இருபது முப்பது குடும்பம், செல்வமும் செல்வாக்கும் நிரம்பப் பெற்று, அரசு செலுத்துபவரும் அச்சம் கொள்ளத்தக்க ஆர்ப்பரிப்புடன் இருந்து வந்தது. அவர்களுக்குத் தனிக் கோட்டைகள், கொடி மரங்கள், படைகள், பாசறைகள்--ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொள்வர், அரசனால் தடுக்கமுடியாது, அரசனையே எதிர்ப்பர், அரசன் அவர்களை அடியோடு அழிக்க முடியாது. அவர்களுக்குத் தனி விசாரணை மன்றங்கள்! தனிச் சட்ட திட்டங்கள்! அரசுக்குள் ஓர் அரசு! பாரிசில் ஒரு பட்டத்தரசன் என்றால், பிரான்சிலே பகுதிக்குப்பகுதி, பட்டத்தரசர்களைவிடக் கொட்ட மடித்துக் கொண்டு பிரபுக்கள் வேறு கோலோச்சி வந்தனர். வரி செலுத்தமாட்டார்கள், அரசனுக்கு தமது 'பிரஜைகளிடம்' வரிவசூலிப்பார்கள் கண்டிப்புடன். மன்னன், சலுகைகள் காட்டுகிறவரையில் சல்லாபம் செய்வர், சலுகை குறைந்தால், சதியோ, சமரோ கிளம்பும்! அரச விருந்துகளிலே முதலிடம்! கேளிக்கைக் கூடங்களுக்கு அழைப்பு! உல்லாசப் பயணத்துக்கு வருவர்! நாட்டுக்குப் பேராபத்து எனில், வரிந்து கட்டிக் கொண்டு எதிரியைத் தாக்குவரோ? இஷ்டமிருந்தால்! எதற்கும் கட்டுப்படமாட்டார்கள்! ஒருசில கண்வெட்டுக்காரிகளுக்கு மட்டுமே கட்டுப்படுவர்!! உட்பகை நெளியும்! ஒரு மாளிகை பற்றி மற்றோர் மாளிகையிலே வம்புப் பேச்சுத் தாராளமாக நடைபெறும். அவள், எனக்கா, உனக்கா? என்று அமளிகிளம்பும், சிறை எடுத்தல், சிரம் அறுத்தல், இவை அன்றாட நடவடிக்கைகள். "என் பரம்பரையை இழிவாகப் பேசினாயா? நாளைக் காலை 8 மணிக்கு, வாட்போர். தயார்--திராட்சைத் தோட்டத்தருகே--8 மணி" என்று அறைகூவல் கிளம்பும், இரு பிரபுக்கள் வாட்போரிடுவர், ஒரு தலை உருளும், மற்றொரு மண்டை கனம் கொள்ளும்! பிரபுக்களின் பொதுநிலை இது. ஒரு சில பிரபுக்கள், அரசியல் அதிகாரம் தேடுவர்--திறமை இருப்பதால் அல்ல ஆசை பிறப்பதால்! கிடைக்காவிட்டால், கலகம், குழப்பம்! இப்படிப்பட்ட பிரபுக்களிடையே, மேரி சிக்கிக் கொள்ள நேரிட்டது.

இத்தாலி நாட்டு கான்சினியும் மேரியும் அவர்களின் ஆதரவாளர்களும் ஒருபுறம்.

காண்டி எனும் பிரபுவும் அவனை ஆதரிக்கும் சீமான்களும் மற்றோர்புறம்.

காண்டி சீமானுக்கு, எவ்வளவு சலுகை காட்டினாலும் திருப்தி கிடையாது--கான்சினி தொலையவேண்டும், மேரி அம்மைக்குத் துணைபுரியும் வாய்ப்புத் தனக்கே அளிக்கப்பட வேண்டும், என்பது காண்டியின் கட்டளை! மரியாதைக்காக வேண்டுகோள் என்றனர். காண்டி, கட்டளைதான் பிறப்பித்தான்.

குழப்பம் வலுத்தது--எனவே பேரவை கூட்டப்பட்டது.

பேரவை கூடுவது பெரிய திருவிழாவாயிற்று. எல்லாச் சிக்கல்களும் தொல்லைகளும் தீர்ந்துவிடும் என்பது, பாமர மக்களின் எண்ணம். எனவே அவர்கள் பேரவை கூடுவதை வரவேற்றனர்! மதத்துறையினருக்கும் மகிழ்ச்சி, தமது உரிமைகளை வலியுறுத்தவும் தமது ஆலோசனைகளை அரசினர் கேட்பதுதான் அறமுறை என்று எடுத்துரைக்கவும் வாய்ப்பு, என்ற எண்ணத்தால். பிரபுக்களுக்குப் பூரிப்பு, தமது அந்தஸ்தையும் அதிகாரத்தையும் அரசாளும் அம்மை அறிய இது பொன்னான வாய்ப்பு என்று. மக்கள் மன்றத்தினருக்கும் நம்பிக்கை, தங்கள் நலன் பற்றி நல்லவர்களெல்லாம் கூடிக் கலந்து பேசி, திட்டம் தீட்டுவர் என்று. ரிஷ்லுவுக்கு மட்டற்ற மகிழ்ச்சி, நுழைய இடம் கிடைத்தது என்று, பேரவைக்கு மதத்துறைப் பிரதிநிதியாகச் சென்று தன் திறமையைப் பிரான்சு உணரும் வண்ணம் நடந்து கொள்வது என்று தீர்மானித்தான். தான் வசித்து வந்த வட்டாரத்திற்கு, மத அலுவலர்களின் பிரதிநிதியாக, ரிஷ்லு தேர்ந்தெடுக்கப்பட்டான்! தேர்ந்தெடுக்கும்படி, ரிஷ்லு நிலைமையைச் சிரமப்பட்டு உண்டாக்கி, வெற்றி பெற்றான். அழைப்புக் கிடைத்து விட்டது! அழைப்பு, தயாரித்துக் கொண்டான்! பாரிஸ் புகலானான்!

ஊர் மக்கள் இரு மருங்கும் திரண்டு நின்றனர்--பாதுகாப்புக்கும் பகட்டு துலங்கவும். பேரவை ஊர்வலம் அழகுறக் கிளம்பிற்று. முப்பெரும் பிரிவினரும் கலந்து கொண்டனர்.

அன்பை அடிப்படையாகக் கொண்டல்லவா அரசாள வேண்டும்? அந்த அன்பு சுரக்கவேண்டும், ஆட்சிப்பொறுப்பில் உள்ளவர்களுக்கும், ஆட்சிமுறை வகுப்பவர்களுக்கும். இதற்காக ஒரு விசித்திரமான ஏற்பாடு! குருடன், காலிழந்தோன், முடமானோன், தொழு நோயான், பஞ்சை பராரி ஆகியவர்கள், முதலில் ஊர்வலம் சென்றனர். கந்தலணிந்த அந்தக் கதியற்றவரின் நிலையைக் கண்டதும் கண்களிலிருந்து நீர்சுரக்கும், கருணையும் மனதில் பிறக்கும் என்று இந்த ஏற்பாடாம்! இது நெடுங்கால வழக்கமுங்கூட!

இந்தத் 'தரித்திரர்' ஊர்வலம் முதலில், பிறகு, பேரவை கிளம்பிற்று, தேவலாயத்திலே பூஜை முடித்துக்கொண்டு!

கரங்களில் மெழுகுவர்த்தி விளக்குகளுடன், மக்கள் மன்ற உறுப்பினர்கள்!

இடையில் வாளும், மேலே பட்டுப் பட்டாடையுடனும், பிரபுக்களின் உறுப்பினர்கள்.

விதவிதமான ஆடைகளும் அங்கிகளும் அணிந்த, மத அலுவலரின் பிரதிநிதிகள்.

மன்னன், தாயும், பரிவாரமும் புடைசூழ! 1614-ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 26ம் நாள் காலை! இந்த நாள் முழுவதும், ஊர்வலமே, பெரிய நிகழ்ச்சியாக இருந்தது. ஊர் மக்களின் உள்ளத்தில் பலபுதிய நம்பிக்கை--மகிழ்ச்சி.

மறுநாள், 'போர்போன்' மாளிகையில் பேரவை கூடிற்று.

அலங்கார மேடைமீது, சிங்காதனம்--அதன்மீது வெண்பட்டாடை அணிந்து மன்னன் வீற்றிருந்தான். மேரி அம்மையும், தர்பார் பெண்களும், பரிவாரமும் மன்னருக் கருகில். மன்னன் முகத்திலே தெளிவோ, திருப்தியோ, இல்லை! இளைத்துக் களைத்து, ஏதும் புரியாத நிலையில் மன்னன் வீற்றிருந்தான்! என் செய்வான் மன்னன்1 வயது பதின்மூன்று!!

ரிஷ்லுவின் கூர்மையான கண்கள், நிலைமையைப் படம்பிடித்து விட்டன.

அறியாச் சிறுவன் அரியாசனத்தில்--அவனைக் காட்டி. அரசாளும் அம்மை, ஆனால் அதிகார மோகமிக்கவள். உல்லாசத்திற்கு அரண்மனை ஏற்ற இடம் என்பதை மட்டுமே உணர்ந்த கான்சினி, அந்த இடம் தங்களுக்கு எப்போது கிடைக்கும் என்று ஆவலுடன் இருந்த பிரபுக்கள், கருணை பிறக்கும் கஷ்டம் தீரும் என்று நம்பிக் கிடக்கும் மக்கள் மன்றத்தினர் இது பிரான்சு!-ரிஷ்லுக்குப் புரிந்துவிட்டது.

மன்னன், துவக்க உரையாற்றினான்--ஆர்வமற்று. பிறகு, இடிமுழக்கம் எழும்பின, பலரிடமிருந்து. பிரபுக்கள் சீறினர்--பாதிரிகள் பதறினர்--மக்கள் மன்றத்தினர் மன்றாடினர்- எவரும், இன்னது தேவை, இப்படி இதனை இன்னார் செய்ய வேண்டும் என்று தெளிவுபட எடுத்துக் கூறினாரில்லை. பிரபுக்களின் பேச்சிலே பதட்டம்! பூஜாரிகள் பேச்சிலே மிரட்டல்! மக்கள் குரல், தெளிவும் உறுதியும் பெறவில்லை.

முப்பெரும் பிரிவினர் ஒருவருக்கொருவர், கலந்து பேசும் நிலையிலோ ஒன்றுபட்டுத் திட்டம் தரும் திறத்திலோ இல்லை ஒருபுறம்முரசம், மற்றோர்புறம் சங்கநாதம், இன்னோர் புறம் முழவு! ரிஷ்லுவுக்கு நம்பிக்கை பலப்பட்டது. இதுதானே பிரான்ஸ், இவர்கள்தானே இதன் நடுநாயகங்கள். ஒரு கை பார்த்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை.

மன்னனைக் கூர்ந்து நோக்கினான்--கண்களிலே அறிவு ஒளியின் குறியே காணோம். எங்கேயோ நினைப்பு! மன்னனுக்கு எந்தத்துறையிலே விருப்பம் அதிகம் என்று உசாவினான். வேட்டை ஆடுவதில் என்றனர்.

காண்டி பிரபுவுக்குச் சப்பிட்டுவிட்டது. பேரவை கூடியதும், பலரும் கான்சினியைக் கண்டித்து விட்டு, அதிகாரப் பொறுப்பைக் காண்டிபிரபுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறுவர், என்று எதிர்பார்த்தான்--யாரும் அது குறித்துப் பேசவில்லை. அவரவர்களுக்கு அவரவர்களின் பிரச்னைதான் பெரிதாகத் தென்பட்டது, பொதுப் பிரச்னை எது என்பதும் புரியவில்லை. நிலைமையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் ஆற்றலும் காண்டி பிரபுவுக்கு இல்லை. ஒருவரிருவர் மேரி அம்மையின் ஆட்சிப் போக்கைக் கண்டித்தனர் பரிகாரம் கூறவில்லை. ரிஷ்லு, மேரி அம்மையைக் கண்டித்த வருக்குச் சுடச்சுடப்பதில் கொடுத்து, மேரி அம்மையின் பார்வையைப் பரிசாகப் பெற்றான்.

பொருளற்ற பேச்சுகள் ஒன்றை ஒன்று துரத்தின--பேரவை வீண் ஆரவாரமே என்பது புரியத் தொடங்கி விட்டது நாட்கள் உருண்டோடின. திங்கள் சிலவும் சென்றன். ரிஷ்லு மத அலுவலர்களின் சார்பிலே பேச அழைக்கப்பட்டார். மேரி அம்மையின் தயவே அதற்குக் காரணம், ஜனவரி 24-ம் நாள், ரிஷ்லு பேரவையில் ஆழ்ந்த பொருள் நிரம்பிய சொற்பொழிவு நிகழ்த்தி அனைவருடைய கவனத்தையும் தன்பால் திருப்பிக் கொண்டார். ஒரு மணி நேரச் சொற்பொழிவு--ஒரு துளியும் மார்க்க சம்பந்த மானதல்ல--முழுவதும் அரசாளும் முறைபற்றியது. ரிஷ்லு அந்தப் பேச்சின் மூலம், மேரி அம்மைக்குத் தன்னையும் தன் ஆற்றலையும், நோக்கத்தையும், திட்டத்தையும் விளக்கிக் காட்டினார்.

ஆண்டவன் அளித்த பிரசாதம், அரசாளும் உரிமை. எனவே அரசாள்வோருக்கு அன்பும் மரியாதையும் அப் பழுக்கின்றித் தரப்பட வேண்டும்.

ஆண்டவன் சார்பிலேயே அரசாள்வோர், பணிபுரிகின்றனர். எனவே, அரசாள்வோரின் அதிகாரம், பலம் தலைசிறந்து விளங்கவேண்டும்--அதைக் குலைப்பதோ, எதிர்ப்பதோ பாபம், கேடு, நாட்டுக்கு நாசம்.

ஆண்டவன் அளித்த உரிமையைக் கொண்டு அரசாள்கின்றனர். எனவே அரசாள்வோர், ஆண்டவனுடைய அருளைப் பெற்று, ஆட்சி முறையைச் சிறப்படையச் செய்தல் வேண்டும்.

ரிஷ்லுவின் பேச்சிலே காணக்கிடக்கும் முக்கியமான கருத்து இது! ஆள்வோரின் உரிமை, அதிகாரம்--அதை அருளாளர்களின் துணை கொண்டு அரண் செயல் வேண்டும்--என்பதுதான் தத்துவம். நான் இருக்கப் பயமேன்! என்று கேட்பதாக அமைந்தது, அந்தப் பேச்சு. பேரவையினர், முதலில் மகிழ்ந்தனர், பேச்சின் தெளிவும் திறமும் கண்டு; பிறகோ மருண்டனர், உட்பொருள் புரிந்தவர்கள். மேரி அம்மையின் மனதிலே, ரிஷ்லு நமக்குற்ற நண்பன் என்பது பதிந்து விட்டது--ரிஷ்லுவுக்கு அது புரிந்து விட்டது. பேரவை பயனற்றுப் போயிற்று என்று பலர் மனம் வாடினர். குறிப்பாகப் பேரவையைக் கூட்ட பெருமுயற்சி எடுத்துக் கொண்ட காண்டி பிரபுவுக்கு, சகிக்க முடியாத சலிப்பு. பேரவை, பெரியதோர் வெற்றி--ஆண்டு பலவாக நான் உழைத்தது வெற்றி தருகிறது, என் குரல் கேட்டு விட்டது--மேரி அம்மையாரின் மனதிலே என்பேச்சுப்பதிந்துவிட்டது--இனி அம்மைக்கு அரசியல் ஆபத்து நேரிட்டது என்ற உடன் எனக்குத்தான் அழைப்பு வரும். இனி, என் அரசியல் நுழைவு உறுதிப் படுத்தப்பட்டு விட்டது--என்று ரிஷ்லுவுக்குக்கூறிக் கொள்ள முடிந்தது. யாராலோ எதற்கோ கூட்டப்பட்ட பேரவை, ரிஷ்லுவுக்குத்தான் பெரிதும் பயன்பட்டது. பிரான்சும் புரிந்து விட்டது, அதை ஆளும் முறையும் ரிஷ்லுவுக்குப் புரிந்து விட்டது. தன் சொற்பொழிவை, ஏராளமான பிரதிகள் அச்சிட்டு வழங்கினான் ரிஷ்லு. பாராட்டினர் பலர், பூரித்தான். பயணம் சொல்லிக் கொண்டு, பாரிசை விட்டுப் புறப்பட்டு, லூகான் வந்து சேர்ந்தான்--தன் தேவாலயத்தைக் கவனிக்க!!

பேரவையால் ஆபத்து உடனடியாக ஏற்படாது, எனினும் பேரவையில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள், தத்தமது ஊர் திரும்பியதும், தீமூட்டிவிடுவர்--எனவே பேரவையைக் கூட்டாமலிருப்பதே நல்லது என்று மேரி தேவிக்கு நண்பர் ஒருவர் கூறினார்.

அவர் எச்சரித்தது உண்மையாயிற்று. பிரான்சு முழுவதிலும், கலகவாடை வீசலாயிற்று. கூடிப்பேசிக் காரிய மேதும் ஆற்றாது கலைந்த பேரவையினர், தத்தமது மனம் போன போக்கில் ஆட்சிமுறைபற்றிக் குறை கூறியும் எதிர்ப்பு மூட்டியும் வரலாயினர்.

காண்டிபிரபு நெரித்த புருவத்துடனேயே காணப்பட்டான். அவனுக்குத் தூபமிட்டுக் கொண்டும், துதிபாடிக் கொண்டும் சீமான்கள் சிலர் இருந்தனர்.

கான்சினியோ, பேரவை கூடியும் தன்னை அசைக்கவும் முடியாமற் போனதை எண்ணிப் பெருமிதமடைந்தான்.

மேரியோ பூசலும் சிக்கலும் தீராததுடன், மேலும் வளருவது கண்டு திகைத்துக் கிடக்க நேரிட்டது.

மன்னனோ, பேரவை கலைந்ததும் தொல்லை விட்டது என்று எண்ணித் தனக்குப் பிரியமான வேட்டையில் ஈடுபடலானான். நாலு நாள், ஐந்து நாள் தொடர்ந்து வேட்டையாடி. வருவதிலே மன்னனுக்கு விருப்பம். அந்த ஒரு பொழுதுபோக்கிலேதான் அவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. பல வண்ணப் பறவைகளைத் துரத்தித் துரத்திப் பிடிப்பதிலும், வேட்டையாடுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்ட பெரும் பறவைகளைக் கொண்டு வேறுபறவைகளை வளைத்துப் பிடிப்பதும், அழகான பறவைகளைக் கொண்டு வந்து அரண்மனையிலே வளர்ப்பதும் மன்னனுக்கு மகிழ்ச்சியூட்டும் விளையாட்டு. மன்னனுடைய தனி அறையே, பறவைக் காட்சிச் சாலையாக இருந்த தாம்! அங்கு முற்றத்திலும் தாழ்வாரங்களிலும், மன்னனுடைய பறவைகள், ஒன்றோடொன்று ஆடியும். கூடிப் பாடியும் வேட்டையாடியும் பொழுது போக்கும், மன்னன் இந்தக் காட்சியில் சொக்கிக் கிடப்பான்..

மாடப்புறா போன்றதோர் மங்கை நல்லாளை மணந்த பிறகும், மன்னன், பறவைகளுடன் விளையாடிப் பொழுதுபோக்குவதையே பெரிதும் விரும்பினான். ஆண்டு பதினைந்தே நிரம்பிய ஆன் அழகி, அரசிளங் குமரி--காதலின்பத்தைத் தரவல்ல அந்தக் காரிகை, தனிமையில் வாடுவாள், மஞ்சத்தில் சோர்ந்து சோர்ந்து படுத்துக் கிடப்பாள்; மன்னனோ, தன் நண்பனுடன், பறவைகளின் சிறகொலி கிளப்பும் இசையின் நேர்த்தி பற்றியும், வேட்டையாடும் திறம்பற்றியும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பான். அந்த நண்பன், பறவைகளின் சம்பந்தமான நுண்கலை நிபுணன்--வேட்டைக் கலையில் புலமை மிக்கவன்! ஊர் அங்ஙனம் கருதிற்றோ இல்லையோ, மன்னன் நம்பினான்; அதற்காக லைனிஸ் எனும் அந்த நண்பனிடம், மன்னன் அளவற்ற மதிப்பு வைத்திருந்தான். மன்னனுக்கு லைனிஸ் உயிர்த் தோழனானான். மன்னன் அவன் சொற்படி ஆடத் தொடங்கியது, மேரிக்கு மன எரிச்சலைத் தந்தது. இந்தப் 'பாதகன்' மகனைத் தனக்கு எதிராகக் கிளப்பி விடுவானோ என்று அஞ்சினாள். அரண்மனை வட்டாரமோ, மேரியை ஆட்டிப் படைக்க ஒரு கான்சினி--அரசனை ஆட்டிப் படைக்க ஒரு லைனிஸ்--நல்ல நிலைமை, நல்ல அரசு முறை என்று வெறுப்புடன் பேசிக்கொண்டனர்.

கான்சினி, செருக்குமிக்கவன், லைனிஸ் சூதுக்காரன்! ஏதுமறியாதவன் போல நடித்து வந்தான்--அழகிய பறவைகளுடன் பழகத் தெரியுமே தவிர, அரசியல் சூட்சமம் தெரியாது என்று எவரும் எண்ணும்படி நடந்து வந்தான். ஆனால் மெள்ள மெள்ள, மன்னனைத் தன் வலைக்குள் போட்டுக் கொண்டான். கான்சினியிடம் மன்னனுக்கு இருந்துவந்த வெறுப்பை அதிகமாக்கி விட்டான். ஆளும் பொறுப்பை இனி இத்தாலிய கான்சினியிடமும் மேரியிடமும் விட்டு வைப்பது கூடாது, நாமே ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்த வேண்டும், நமக்கு லைனிஸ் துணை நிற்பான் என்ற எண்ணம் மெள்ள மெள்ள மன்னன் மனதிலே உருவெடுக்கலாயிற்று.

மன்னனுடைய திருமண ஏற்பாடு மேரியின் வெற்றிகளில் ஒன்று என்று கருதப்படுகிறது.

மேரி, மெடிசி குடும்ப முறைப்படி தன் பெண்களைத் திருமணம் செய்து கொடுப்பதிலும், மருகனைத் தேடிக் கொடுப்பதிலும், திறமையைக் காட்டினாள்.

ஒரு மகள், ஸ்பெயின் நாட்டு இளவரசனை மணந்தாள். மற்றோர் மகள், இங்கிலாந்து நாட்டு மன்னன் மனைவியானாள்.

மூன்றாம் மகளை சவாய் அரச பரம்பரையில் திருமணம் முடித்தாள். ஆஸ்திரிய அரசிளங்குமரி ஆன், லூயிமன்னனுக்கு மனைவியாக வாய்த்தாள். இந்தத் திருமண காரியத்துக்கு, உடன் வரும்படி காண்டி பிரபுவுக்குக் கட்டளை பிறந்தது. பிரபு மறுத்து விட்டான், அழைத்ததும் உபசாரத்துக்காக அல்ல, மறுத்ததும் அரசியல் நோக்கு அற்று அல்ல! வெளிநாடு சென்று வருவதற்குள், காண்டி, பாரிஸ் புகுந்து கலகம் விளைவித்தால் என்ன செய்வது என்று எண்ணிய மேரி காண்டி பிரபுவை, தன் பரிவாரத்துடன் அழைத்துச் சென்றால், பயமற்றிருக்கலாம் என்ற எண்ணத்தால், அழைப்பு அனுப்பினாள்- பிரபுவும் இந்தச் சூட்சமம் அறிந்தே உடன்வர மறுத்தான். இதனால் இரு தரப்பினருக்கும் சிறு சமர் மூண்டது. வெற்றி தோல்வியின்றி, சமர் சாய்ந்தது.

இந்நிலையில் பாரிஸ் இருந்து வந்தது-ரிஷ்லு எதிர்பார்த்த நேரம் வரவில்லை.

காண்டி பிரபுவுக்குப் பல சலுகைகள் காட்டி, மேரி, சமரசம் உண்டாக்கினாள்-பிரபுவும், அரச காரியத்தை உடனிருந்து கவனிக்க அரண்மனை சென்றான்.

மேரி அம்மையின் தயவு பெற ஒருபுறம் பலமான முயற்சி, கான்சினியின் ஆதரவு தேடி வேறோர்புறம் முயற்சி, இரண்டும் போதாதோவென்று, புதிதாகச் செல்வாக்குப் பெற்றுவரும் காண்டி பிரபுவிடம் ஆதரவு நாடி, ரிஷ்லு கடிதம் தீட்டினான். எவரிடமும் உள்ளன்போ, மதிப்போ, எவர் கொள்கையிலும் திட்டத்திலும் பற்றே நம்பிக்கையோ அல்ல; யாரைப் பிடித்தால் தனக்குச் சரியான இடம் கிடைக்கும், யாரிடம் திறவுகோல் இருக்கிறது, யாருடைய புன்சிரிப்பு, அரசியல் வாய்ப்பளிக்கக் கூடியதாக இருக்கிறது என்ற இதுவே, ரிஷ்லுவின் உள்நோக்கம். எனவேதான், மேரி, கான்சினி, காண்டி எனும் எவர் நிலை எப்போது உயர்ந்து காணப்பட்டாலும், அவர்களிடம் குழைந்து கும்பிட்டுக் குறுநகை கோரி நிற்க ரிஷ்லு முனைந்தான். சொந்தக் கௌரவம், முன்பின் நடவடிக்கைகளைக் கணக்கிடும் பண்பு என்பதுபற்றி ரிஷ்லுவுக்குக் கவலை கிடையாது. எதைச் செய்தாலும், கோரிய இடத்தைப் பிடிக்க வேண்டும் - கணைவீசிப் பிடிக்கலாம்; வலை வீசியும் பிடிக்கலாம்; முறை எதுவாகவேனும் இருக்கலாம்; பலன் கிட்டவேண்டும் என்பதுதான் ரிஷ்லுவின் எண்ணம்.

இந்தச் சந்தர்ப்பத்தில், மேரி, ரிஷ்லுவை, ராணி ஆனுடைய தர்மாதிகாரியாக நியமித்தார்.

பிரான்சு அரச குடும்பத்திலும், பிரபு குடும்பங்களிலும், தர்மகாரியத்துக்கென்று அவரவர்களின் நிலைமைக்கு ஏற்ற அளவு தொகை ஒதுக்கித்தரப்படும்--இந்தத் தொகையைத் தக்க முறையில் பகிர்ந்தளிப்பதற்குத் 'தர்மாதிகாரி' நியமிக்கப்படுவதுண்டு.

ரிஷ்லுவுக்கு அந்தவேலை கிடைத்தது. சாதாரணமான வேலைதான்--அரசியல் அதிகாரம் கொண்டதல்ல--ஏழை எவர், எளியவர் யார், விதவையின் அழுகுரல் எங்கு கேட்கிறது, எந்தத் தேவாலயத்தில் அலங்கார விளக்கு இல்லை என்பன போன்றவைகளை அறிந்து, ராணி ஆன் வசம் உள்ள தர்ம பணத்தை, தரம் பார்த்துத் தருகிற வேலைதான்! உண்டிப் பெட்டிக்கு அதிகாரி, ஊராளும் வேலை அல்ல. ஆறாயிரம் பவுன் சம்பளம்!

இது அல்ல, ரிஷ்லு எதிர்பார்த்தது, எனினும் “இதுவா என் திறமைக்கு ஏற்றது” என்று வெறுத்துத் தள்ளிவிடவில்லை. அரண்மனையில் நடமாடலாம்--அனைவரையும் கவனிக்கலாம், ராணி ஆன் மனமறியலாம், மன்னனையும் சந்திக்கலாம், அரசியல் சம்பவங்கள் சுழன்றுகொண்டிருக்கும் இடத்தில் இருக்கலாம்--சமயம் கிடைக்கும் என்று எண்ணி, தர்மாதிகாரி வேலையை இசைந்து ஏற்றுக்கொண்டான்.

அரண்மனையிலோ, சூழ்ச்சியும் சதியும் நிழலுருவில் காணப்பட்டன. மேரியின் அச்சம் அதிகரித்தது-லைனிசுக்கு மன்னன் மீதிருந்த பிடி, பலப்பட்டது. கண்ணீர் பொழிந்தாள் மேரி; அந்தக் கயவனை விட்டு விலகடா கண்மணி! என்று கெஞ்சினாள்--நீ, கான்சினியை விரட்டு! என்று லூயி கூறவில்லை, ஆனால் மனதிலே அதுதான் எண்ணம். “அன்னையே! பாசம் மறையுமா! யார் என்னுடன் தோழமை கொண்டாலும், தாயின் மனம் நோக நடந்துகொள்வேனா” என்று பேசினானே தவிர லைனிசை விடவில்லை மன்னன். மேரியின் மனம் முறியலாயிற்று.

கிடைத்த சலுகை போதாது என்று கோபத்தால், காண்டிபிரபு, மீண்டும் தன் கோட்டையிலே புகுந்துகொண்டு பகை கக்கிக் கொண்டிருந்தான். அரசிளங்குமரி ஆன், கொஞ்சுமொழி பேச நானிருக்கும் போது, பறவை உலகிலே பொழுது போக்கும் மன்னன், மரக்கட்டையா, மதியற்றவனா, அல்லது மாயாவி லைனிஸ் போடும் மாயப் பொடியில் மயக்குற்று விட்டானா, என்று எண்ணி ஏங்கிக்கிடந்தாள். அரண்மனையில் வாழ்ந்தாள்--இளமையும் எழிலும் கொண்டவள்--பட்டுப் பட்டாடை, அணிமணி அலங்காரம், சேடிகள், கீதமிசைப்போர், கிண்கிணி அணிந்தோர், பானமளிப்போர், பரதம் அறிந்தோர் எனும் விதவிதமான பரிவாரம் இருந்தது- கணவன் காதலிக்கவில்லை--கல்லுருவிலும் இல்லை, காமாந்தகாரனாகவுமில்லை, தடிதாங்கியவனுமல்ல, இளைஞன், ஒத்த வயதினன், எனினும் அவன் தன்னை நாடுவதில்லை, காதல் ஒளி அவன் கண்களிலே தெரிவதில்லை, தனி அறையில் தோழன் லைனிசுடன், என்ன மர்மப்பேச்சோ, என்ன இன்பப்பேச்சோ, மணிக்கணக்கில் பேசுகிறான். மலர் இங்கே வாடுகிறது, மணம் மாய்கிறது, அவன் அங்கே நள்ளிரவு நேரத்திலும் நண்பனுடன் பேசிக் களிக்கிறான்! என் செய்வாள் ஆன், ஏங்கினாள்! அழுதாள்.

காண்டி பிரபுவின் பகையைப் போக்கிச் சமரசம் உண்டாக்க, மேரி, ரிஷ்லுவை அனுப்பிவைத்தாள். ரிஷ்லுதான், முன்பே காண்டி பிரபுவுக்கு அன்பு ததும்பும் கடிதம் அனுப்பினவனாயிற்றே--எனவே, காண்டியிடம், பேசிச் சரிப்படுத்திவிட முடிந்தது. தனக்குச் சேவை செய்வதையே கொள்கையாகக் கொண்டவன் இந்த ரிஷ்லு, எனவே இவன் பேசுவதை நம்பலாம், என்று எண்ணினான். ரிஷ்லுவும், "எதிர் காலம்' சிறப்புடன் விளங்கும்! தங்களின் ஆற்றலை எதிர்த்து நிற்க வல்லவர் யார்? மேரி என்ன இருந்தாலும் பெண்! கான்சினியோ, களியாட்டத்தில் மூழ்கிக் கிடப்பவன்! மன்னனோ, விளையாட்டுச் சிறுவன்?" என்று பலப்பல கூறி மயக்கக் கூடியவன்தானே! என்ன நோக்கம்? காண்டி பிரபுவுக்கு அதிகாரம் கிடைக்கவேண்டும் என்பதா! செச்சே! அதற்கா இவ்வளவு பாடு! மேரி அம்மை உணரவேண்டும், நீண்ட நாள்பகையை, பிடிவாதத்தை, முரட்டுத்தனத்தை எவ்வளவு திறம்பட ரிஷ்லு முறித்துவிட்டான், இவனன்றோ இனி நமக்குத் துணையாக இருக்கவேண்டும். இவனிருக்க நாம் கான்சினியை நம்பிக் கிடக்கிறோமே, என்றெல்லாம் எண்ணிக் கொள்ள வேண்டும்! இதற்காகவே ரிஷ்லு, சமரசம் ஏற்படுத்திவைத்தான்--கபடம் அறியாத காண்டிபிரபு, பாரிஸ் வந்தான், அரண்மனை நுழைந்தான், அடையவேண்டிய பெரும் பேறு கிடைத்துவிட்டது என்று எண்ணிக் களிப்புற்றான்.

காண்டியின் கோலாகலம் வேகமாகத் துவங்கி, வெறிபோல் வளர்ந்தது. யாரையும் சட்டை செய்யாத போக்கு! எவரையும் எதிர்த்துத் தள்ளும் முறை! எவர் என்னை என்ன செய்யமுடியும் என்ற இறுமாப்பு! சிரித்துப் பேசுவோர், சிரம் அசைத்துக் கரம் நீட்டிடுவோர், புகழ் வீசி இலாபம் கேட்போர், இவர்கள் காண்டியின் பரிவாரம். பகலெல்லாம் விருந்து வைபவம்! இரவெல்லாம்? விவரம் கூற இயலுமா! காண்டியின் 'காட்டு முறை' பாரிஸ் அரண்மனை வாசிகளைக் கூடப் பயப்படச் செய்தது.

"மன்னனா?. வெறும் பொம்மை! தூக்கி எறிய எந்நேரம் பிடிக்கும்? அந்த அரியாசனத்தில் அமரத்தான் எவ்வளவு நேரம் பிடிக்கும்? நான் விரும்பினால், கான்சினி கடுகி ஓட வேண்டும், மேரி மடாலயம் சேரவேண்டும், மன்னன் சிறகொடிந்த பறவையாகவேண்டும்" என்று கொக்கரிக்கலானான். உண்மையிலேயே, உயிருக்கு ஆபத்து வருமோ. என்று அஞ்சிய கான்சினி, ஓடிவிடலாமா என்று கூட எண்ணினான். மேரி திகில் கொண்டாள். ரிஷ்லு, அவள் பக்கம் நின்றான், "அஞ்சாதீர்! அட்டகாசம் செய்கிறான் காண்டி! பலம் இல்லை! துணை நிற்போர் யாவரும் துரத்தினால் ஓடிவிடும் தொடை நடுங்கிகள்! பயம் கொள்ளாமல், விளைவு என்ன ஆகுமோ என்று யோசியாமல் உத்தரவிடும், காண்டியைக் கைது செய்ய!" என்று யோசனை கூறினான். எந்தக் காண்டி பிரபுவிடம் தயவுகோரி இருந்தானோ, எந்தப் பிரபுவை அரண்மனைக்கு அழைத்து வந்தானோ, அவனிடம் துளி பரிவு காட்டினானா? இல்லை! ரிஷ்லுவுக்குக் காரியம்தான் முக்கியம், பண்புகளல்ல!

காண்டி கைது செய்யப்பட்டான்; பாஸ்ட்டிலி சிறை புகுந்தான்.

காட்டுத்தீ போலக் கிளம்பிய அவனுடைய அட்டகாசம், நொடியில் அழிக்கப்பட்டுவிட்டது.

துணை நின்றோர்கள் விரண்டோடினர்--துதிபாடகர்கள், மன்னிப்புக் கோரினர்,

ரிஷ்லுவுக்கு இலாபம் உண்டா? இல்லாமற் போகுமா? ஒவ்வொரு அரசியல் குழப்பமும், ரிஷ்லுவுக்கு இலாபமாகத் தான் முடிந்தது. தர்மாதிகாரியாக அரண்மனை நுழைந்த ரிஷ்லுவுக்கு ஆட்சி மன்றச் செயலாளர் பதவி கிடைத்தது. உறுமீனல்ல, பெருமீன்! இரை கிடைத்த இன்பத்திலே மூழ்கி விடாமல், மேலும் இரை தேடலானான் ரிஷ்லு.

காண்டிபோலவே, எதிர்ப்புணர்ச்சி கொண்டிருந்த வேறு பிரபுக்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தான்- வெளி நாடுகளுக்குத் தூதுவர்களை அனுப்பிப் பிரன்ச்சு நாட்டுக்கு ஆதரவு திரட்டிடச் செய்தான்-ரிஷ்லு தன் காரியத்தைத் திறம்படத் துவக்கினான்.

ஆட்சிக் குழுவிலே வேறு பலர், அமைச்சர்கள், செயலாளர்கள் உண்டு, எனினும், ரிஷ்லு தன் திறத்தாலும் முறையாலும் மற்றவர்களைச் சாமான்யர்களாக்கிவிட்டு, முன்னணி அமர்ந்தான். முதலமைச்சர் என்ற பட்டம் அளிக்கப்படவில்லை, ஆனால் எதிர்காலத்தில் ரிஷ்லுதான் அந்தப் பதவியில் அமரப்போகிறான் என்பது குறிப்பாகத் தெரியலாயிற்று. பயணம், நம்பிக்கையுடன் தொடங்கப்பட்டது; பாதையும் தெளிவாகிவிட்டது, ஆனால் இடையே ஓர் புயல் வீசி, பாதையை மறைத்தது, பயணத்தைத் தடுத்தது.

காண்டி சிறைப்பட்டான், கான்சினியின் வெறியாட்டம் உச்சநிலை அடைந்தது. மன்னனை மதிப்பதில்லை, ஏளனம் செய்வான், அரியாசனத்தில் அமர்ந்து கொள்வான் அரசனுக்குச் செலவுத்தொகை தர அனுமதியேன் என்று ஆர்ப்பரிப்பான். ஒரு சாதாரண பிரபு குடும்பத்தானுக்குக் காட்டுமளவுக்குக்கூட, மன்னனுக்கு மரியாதை காட்ட மாட்டான். பித்தம் முற்றிவிட்டது--முடிவுநெருங்கிவிட்டது. லைனிஸ், இந்த முடிவுக்கான திட்டம் தீட்டி விட்டான். ஒருவரும் அறியாவண்ணம் தீட்டப்பட்ட திட்டத்தின்படி, மன்னன் உத்தரவுபெற்ற ஒரு பிரபு, கான்சினியைக் கைது செய்தான்--எதிர்த்ததைச் சாக்காகக் கொண்டு கான்சினியைச் சுட்டுக் கொன்றுவிட்டான்! முகம் சுக்கு நூறாகிவிட்டது. ஆணவமும் அட்டகாசமும் அழிந்தது என்று மகிழ்ந்தனர் பலரும். கான்சினியின் கையாட்கள், இந்த எதிர்பாராத தாக்குதலாலும், விபரீதமான முடிவுகண்டதும் திகைத்துப் போயினர்--தப்பினால் போதும் என்று திக்குக்கொருவராக ஓடிவிட்டனர். ஒரு விநாடிக்கு முன்பு வரை, அவன் இட்டதுதான் சட்டம் என்ற நிலை இருந்தது. சுட்டுத் தள்ளப்பட்டான், ஏன் என்று கேட்க ஆள் எழவில்லை. வாழ்க மன்னன்! என்ற முழக்கமிட்டபடி, கான்சினியைக் கொன்ற பிரபு, மக்கள் முன், பிணத்தைப் போட்டான். மக்கள், தொலைந்தான் தூர்த்தன்! என்று மகிழ்ந்து கூறினர். கலக்க மடைந்தாள் மேர்--கான்சினிக்கு நேரிட்ட கதிகண்டு அல்ல, தனக்கு என்ன ஆபத்து வர இருக்கிறதோ என்று எண்ணி. ஆண்டு பலவாக அவனுடைய சொல்கேட்டு ஆடிவந்த மேரி, அரண்மனையில் அளவுகடந்த அதிகாரத்தை அவனுக்கு அளித்த மேரி, வெறி நாயைச் சுட்டுத்தள்ளுவதுபோல அவனைச் சுட்டுத்தள்ளியது கேட்டு, இந்த அக்ரமம் ஆகுமா? என்று கேட்கவில்லை--கதறக்கூட இல்லை. தன்னைக் காத்துக்கொள்வது எப்படி, கான்சினிமீது பாய்ந்த பகை, தன்னைத் தாக்கினால் எப்படித் தாங்குவது, என்றுதான் எண்ணம் சென்றது! பிரஞ்சு அரச குடும்பத்தில் இப்படிப்பட்ட நெஞ்சினருக்கே இடம் இருந்தது!

கான்சினியின் மனைவியின் பெயர் வியனோரா. மேரிக்கு இவள் உயிர்த் தோழி. மேரியின் செவிலித்தாயின் மகள், கான்சினி இறந்துவிட்டதை எப்படி லியனோராவிடம் கூறுவது--அவள் மனம் என்ன பாடுபடும், என்று கூறிக் கரத்தைப் பிசைந்துகொண்டு கண்ணீர் உகுத்தனர், சேடியர். மேரிக்குக் கோபம் பிறந்ததாம். "அவன் எப்படிச் செத்தான் என்பதைச் சொல்லத் தெரியாவிட்டால், அது பற்றி அவளிடம் பாடுங்கள்" என்று கூறிவிட்டுத் தன் காரியத்தைக் கவனித்தார்களாம்.

எப்படிப்பட்ட உத்தமமான மனம்! எவ்வளவு உயர்ந்த பண்பு!

கான்சினி கொல்லப்பட்டதும், மன்னன், தன் தோழன் லைனிசுடன் கூடிக்கொண்டு, புதிய பல ஏற்பாடுகள் செய்யலானான். புயல் வீசலாயிற்று! கான்சினியின் தயவால் பெரும் பதவிகளில் அமர்ந்திருந்தவர்கள், வேலையினின்றும் நீக்கப்பட்டனர். கான்சினியால் சிறை வைக்கப்பட்டவர்கள், விடுதலை செய்யப்பட்டு, பதவிகளில் அமர்த்தப்பட்டனர். பல துறைகளிலே திடீர் மாறுதல் வியனோரா சிறையில் தள்ளப்பட்டாள்.. மேரியின் அமுல் அடக்கப்பட்டுவிட்டது. எல்லாம் இப்போது லைனிஸ் கரத்தில்!

மன்னனை மக்கள் பாராட்டினர். ஏதுமறியாதவர் போலிருந்தாரே, இப்போது இவ்வளவு ஆற்றலுடன் காரிய மாற்றுகிறாரே, என்று கூறி மக்கள் மகிழ்ந்தனர். கான்சினியிடம் மக்களுக்கு அவ்வளவு வெறுப்பு. இவனது கொட்டத்தை அடக்கும் துணிவு யாருக்குமா இல்லை, என்று மக்கள் பல காலமாகக் கேட்டுவந்தனர். வேட்டை விளையாட்டில் ஈடுபட்டு,ஆட்சியிலே இருப்பவர்கள் எது செய்தாலும் அக்கரை காட்டாது இருந்து வந்த இந்த ஊமை மன்னன், மக்களின் மனப்போக்கை அறிந்து, மாபாவியைக் கொன்றானே, இதல்லவா ஆச்சரியம் என்று பேசினர்.

கான்சினியின் பிணம் பிய்த்தெறியப்பட்டது. ஆளுக்கொரு துண்டு எடுத்து அங்கும் இங்கும் போட்டுக் கொளுத்தினர்--சாம்பலை, காற்றோடு கலந்தனர், களிநடம் புரிந்தனர். கான்சினி ஒழிந்தான், மன்னன் வாழ்க! இத்தாலிய எத்தன் ஒழிந்தான், வீர இளைஞன் வாழ்க! என்று வாழ்த்தினர்.

கான்சினியுடன் தொடர்பு கொண்டோர், மேரியின் தயவுக்குப் பாத்திரமானோர், இவர்களுக்குப் பேராபத்து தாக்கியபோது, தப்பிப்பிழைத்தது. ரிஷ்லு, மட்டுந்தான்! எப்படி?

கான்சினியின் தயவைப்பெற ரிஷ்லு தவறவில்லை-மேரியின் ஆதரவால்தான், ஆட்சிக்குழுச் செயலாளராக அமர்ந்திருந்தான். எனவே மன்னனுக்கும் லைனிசுக்கும் மாற்றுக் குழுவிலே இருந்த ரிஷ்லு, ஒழித்துக் கட்டப்பட வேண்டிய புள்ளிதான், எனினும், லைனிஸ், மன்னனிடம் "ரிஷ்லு யோக்யர்! தங்களிடம் நிரம்பப் பற்று உள்ளவர்" என்று வாதாடினான். ஏன்? அவன் அவ்விதம் நம்பும்படி ரிஷ்லு, சில காலமாக, நடந்துகொண்டு வந்தான்.

கான்சினியின் நிலை, திடீரென்று சாயும் என்பதையும், லைனிஸ் மன்னனைப் பயன்படுத்தி, சூத்திரக் கயற்றினைப் பிடித்துக் கொள்ளப் போகிறான் என்பதையும், உணர்ந்த ரிஷ்லு, "கான்சினியின் போக்கே எனக்குப் பிடிக்கவில்லை, எனக்கு அவன் தயவில் பதவியில் இருக்கவே கஷ்டமாக இருக்கிறது, மேரி அம்மையின் இயல்பும் எனக்குப் பிடிக்கவில்லை, என் உள்ளம், மன்னன் சார்பாகத்தான், மன்னனிடம்தான் அதிகாரம் இருக்கவேண்டும் என்பது. என் நோக்கம் என்றெல்லாம், லைனிசிடம், அவன் நம்பும்படி பேசி வந்திருக்கிறான். எனவேதான், பலருக்குத் தலைபோன அந்த நேரத்திலும், ரிஷ்லு, சேதமின்றி இருக்க முடிந்தது.

மேரியும் கான்சினியும் அல்லவா, நமது இன்றைய உயர்வுக்குக் காரணம், அவர்களிடம் உள்ளன்பு கொள்வதும், நன்றியறிதல் காட்டுவதுந்தானே, நமது கடமை, அவர்களில் கான்சினி கொல்லப்பட்டு விட்டான், மேரியோ தாழ் நிலைக்குத் தள்ளப்படுகிறாள், அவர்கள் சார்பிலே நின்று லைனிசின் அக்ரமத்தைக் கண்டிப்பதல்லவா அறம், என்றெல்லாம் ரிஷ்லு எண்ணவில்லை. மூவர் இருந்தனர், முட்டுக் கட்டைகள்--ஒருவன் காண்டி; சிறை சென்றான்; மற்றொருவன், கான்சினி, சுட்டுச் சாம்பலாக்கி விட்டனர்-மூன்றாமவன் இந்த லைனிஸ், இவன் தொலையுமட்டும், துதிபாடித் தப்பித்திருக்கத் தான் வேண்டும்--இவனும் தொலைவான், பிறகு, நான்தானே மன்னன் பக்கத்தில், என் கரத்தில்தானே பிரான்சு!--என்று இப்படி எண்ணினான் ரிஷ்லு. அவன் படித்த மார்க்க ஏடுகளும் அறநூற்களும் இத்தகைய சுயநலத்தைத்தானா தந்தன, என்று கேட்கத் தோன்றும். அந்த ஏடுகளிலே இருந்து ரிஷ்லு இந்த குணத்தைப் பெற்றானோ இல்லையோ, நாமறியோம். ஆனால் ஒன்று அறிவோம் அவன் அந்த ஏடுகளைப் படித்ததே கூட, சொந்த ஆதிக்கத்தைப் பெற அவை தரும் அறிவு பயன்படட்டும் என்ற நோக்குடன்தான்! அறநூல் படித்தவன்! அபாரமான திறமைசாலி!--என்று புகழப்பட வேண்டும் என்பதற்காகக் கற்றானே தவிர, அறத்தைப் பரப்ப வேண்டும், காக்க வேண்டும் என்பதற்காக அல்ல! அந்த வேலையைப் புத்தகப் பூச்சிகளுக்கும் வித்தகப் பேச்சாளருக்கும் விட்டு விட்டான்!

அரண்மனை ஆச்சரியப்பட்டது பலரை வீழ்த்திய பெரும் புயலால், ரிஷ்லு சாய்ந்திடாதது கண்டு. மேரியிடமிருந்து அதிகாரம் பறிக்கப்பட்டதுடன் அம்மையைப் பாரிசை விட்டே பயணப்படும்படி மன்னன் உத்தரவிட்டான்--உத்தரவு பிறப்பிக்கும்படி லைனிஸ் கட்டளையிட்டான்!

ப்ளாயிஸ் என்ற ஊர் சென்று தங்க ஏற்பாடு செய்யப்பட்டு மேரி புறப்பட்டபோது, மன்னனுடைய அனுமதியுடன், ரிஷ்லு, மேரியின் ஆலோசகர் குழுத் தலைவராகச் சென்றான்.

மேரி, சுகத்திலும் துக்கத்திலும் வாழ்விலும் தாழ்விலும் தன்னுடன் இணைந்து இருக்க இசையும் ரிஷ்லுவின் பெருங்குணத்தைப் பாராட்டி இருக்கக் கூடும். ஆனால் ரிஷ்லு சென்றது, மேரி அம்மையுடன் இருந்துகொண்டு, மன்னனுக்கு அவ்வப்போது 'சேதி' அனுப்ப! லைனிசின் ஏற்பாட்டின் படி ஆட்சிப் பொறுப்பை மன்னன் ஏற்றுக்கொண்ட கணமே, ரிஷ்லு, மன்னனின் 'ஆள்' ஆகிவிட்டான். மேரி இனி ஒரு கருவி --அதிலும் கூர் மழுங்கிவிட்டது! உயர வழி, முன்னேற மார்க்கம் மீண்டும் உயர் பதவி பெற வழி, மன்னனுக்குத் தொண்டு புரிவதுதான் என்ற முடிவுக்கு ரிஷ்லு வந்தாகிவிட்டது. மன்னனால் நியமிக்கப்பட்ட 'ஒற்றன்' இந்த ரிஷ்லு என்று அறியாமல், இழந்ததைத் திருப்பிப்பெறத் திட்டம் என்ன வகுக்கலாம் என்று எண்ணியபடி, ரிஷ்லுவை அழைத்துக்கொண்டு, மேரி, ப்ளாயிஸ் சென்று புதுமுகாம் அமைத்துக்கொண்டாள்.

மேரியுடன் ரிஷ்லு இருந்து வந்தது லைனிசுக்குப் பிடிக்கவில்லை. எனவே ரிஷ்லு, பழையபடி லூகான் நகர் அனுப்பப்பட்டான். ஏழாண்டுகள் இதுபோல, 'வனவாசம்' செய்ய நேரிட்டது. பலர் ரிஷ்லுவின் அரசியல் வாழ்வு இனித்துலங்காது என்று எண்ணினர், ஆனால் ரிஷ்லுக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது மீண்டும் பதவிகிடைத்தே தீரும், முன்னிலும் மேலான நிலை பிறக்கும் என்று.

'நான் உண்டு என் ஏடு உண்டு' என்று ரிஷ்லு கூறிக் கொண்ட போதிலும், நாட்டு நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்த வண்ணம்தான் இருந்தான். இடையிடையே, எந்த மன்னனால் துரத்தப்பட்டானோ, அதே லூயி மன்னனுக்கு, ரிஷ்லு தன் ஆற்றலை விளக்கிக்காட்டும் வாய்ப்பும் கிடைத்தது.

லூகான் நகர் சென்றதும் ரிஷ்லு, தன் புகழ் மங்கி விடும்படி இருந்துவிடவில்லை - புகழ் துருப்பிடிக்கவும் கூடாது, அரசாள்வோர் கவனத்தைக் ஈர்க்கத்தவறவும் கூடாது என்பது ரிஷ்லுவுக்கு நன்றாகத் தெரியும்.

பிராடெஸ்ட்டென்ட் கொள்கைகளைக் கண்டித்தும், கத்தோலிக்கக் கோட்பாடுகளை ஆதரித்தும் அரியதோர் ஏடு தீட்டினான் - மார்க்கத் துறையினர் கண்டு பாராட்டும் வகையில்! புகழ் பரவலாயிற்று! மன்றம் புல பேசலாயின, ரிஷ்லுவின் நுண்ணறிவு பற்றி. கத்தோலிக்க மார்க்கத்தை உலகெங்கும் பரப்பி, எதிர்ப்புக்களை ஒழித்துக் கட்டும் பேராற்றல் படைத்தவர் இந்த ரிஷ்லு என்று கொண்டாடினர். சிலர், மார்க்கத் துறையிலே ஈடுபட்டு மானிலம் புகழும் இடம் பெறுவதை விட்டு, ஏன் இவர் சிலகாலம் அரசியல் சேற்றிலே உழன்று கிடந்தார் என்று பேசினர். ரிஷ்லுவுக்கு இந்த வெற்றி களிப்பளித்தது. நாடு நம்மை மறந்துவிடவில்லை!புகழ்கிறது! கவனத்தில் வைத்திருக்சிறது-என்று எண்ணி மகிழ்ந்தான்.

கத்தோலிக்கக் கோட்பாட்டுக்கு பிராடெஸ்ட்டென்ட் புயலால் ஏற்பட்ட ஊறுகளைப் போக்கவேண்டும் என்பதல்ல, ரிஷ்லுவின் எண்ணம். ஆட்சிப் பொறுப்பு அளிக்கப்படவில்லை, ஆற்றலைக் காட்டியபடி இருந்தால், அந்த வாய்ப்பு அளிக்கப்படும், ஆற்றலைக் காட்ட இந்த ஏடு பயன்படட்டும் என்பதற்காகவே தீட்டினான். உண்மையாகவே, மார்க்க சம்பந்தமான பணியிலே ஈடுபடவேண்டுமானால் வாய்ப்பா இல்லை! ஏராளம்!

இந்த ஏழாண்டு ஓய்வின்போது, ரிஷ்லுவுக்கு ஜோசப் பாதிரியார் உற்ற நண்பரானார்.

ஜோசப் ரிஷ்லு போன்றவரல்ல, ஆற்றல் உண்டு நிரம்ப, அதற்கேற்ற அளவு நேர்மை உண்டு. கொள்கை உண்டு அதற்காக சுயநலத்தைத் தியாகம் செய்யும் பண்பு உண்டு. கூர்மையான மதிபடைத்தவர், அதனைத் தமக்குப் புகழோ நிதியோ சேர்க்க அல்ல, தன் கொள்கையின் வெற்றிக்காகச் செலவிட்டு வந்தவர்.

கத்தோலிக்க மார்க்க வெற்றியே, ஜோசப்பின் மூலாதாரக் கொள்கை.

கிருஸ்தவ மார்க்கத்தைப் பாதிக்கும் முறையில் நடந்து கொள்கிறார்கள் என்ற காரணம் காட்டி, முஸ்லீம்களுடன் புனிதப் போர் நடாத்தி வந்தவர்களுக்கு இருந்தது போலவே ஜோசப்புக்கு, இஸ்லாமிய ஆதிக்கத்தைத் தீர்த்துக்கட்ட வேண்டுமென்ற பேரவா, தீஎனக் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது. புதியதோர் புனிதப்போர் தொடுக்கத்தூபமிட்டார், பலிக்கவில்லை. பிறகு அவர், பிரான்சுநாடு, கத்தோலிக்க மார்க்கத்துக்கு ஏற்ற திரு இடம் என்று எண்ணினார், அங்கிருந்தபடி, ஐரோப்பாவில் பல்வேறு இடங்களிலே பரவிக் கொண்டிருந்த பிராடெஸ்ட்டென்ட் மார்க்கத்தை மாய்த்தொழிக்கலாம் என்று எண்ணினார். ரிஷ்லுவுக்கு இது தெரிந்துவிட்டது! ரிஷ்லு, கத்தோலிக்க மார்க்கத்தைச் சிறப்பித்தும், பிராடெஸ்டென்ட் கண்டனங்களைச் சின்னா பின்னமாக்கியும் தீட்டிய ஏடு, ஜோசப்புக்கு ஆர்வமூட்டிற்று. இருவரும் நண்பராயினர். ரிஷ்லுவைக் கொண்டு, கத்தோலிக்க மார்க்கத்தை ஒளிவிடச் செய்யலாம் என்ற நம்பிக்கையுடன் தமது செல்வாக்கை, ரிஷ்லுவுக்குத் துணையாக்கினார். ஆர்வமும் ஆற்றலும், ஓயாது உழைக்கும் திறனும், ஒன்றையும் தனக்கெனத் தேடிக் கொள்ளாப் பண்பும், பல்வேறு நாடுகளிலே செல்வாக்கும் கொண்டிருந்தஜோசப்பைப் பயன்படுத்திக் கொண்டு ஆதிக்கபுரிபோய்ச் சேரலாம் என்று ரிஷ்லு திட்டமிட்டான். இருவருக்கும் ஏற்பட்ட கூட்டுறவு, ரிஷ்லுவுக்குப் பெரும் பயனளித்தது--ஜோசப் இறந்துபடும் வரையில், ரிஷ்லுவுக்காகவே, உழைத்தார். ரிஷ்லுவின் மனமறிந்து திறமையுடன் காரியமாற்றினார். ரிஷ்லு அரசாளும் காலத்திலே பெற்ற பல ஆச்சரியமான வெற்றிகளுக்கு ஜோசப்பின் அறிவாற்றல், பெரியதோர் காரணமாக அமைந்தது.

ஜோசப்பின் செல்வாக்கினால், அரண்மனையில் கூட, ரிஷ்லுவிடம் இருந்த அவநம்பிக்கையும் பயமும் ஓரளவு குறைந்தது.

ரிஷ்லுவுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது.

மேரி தன் நிலையில் திருப்தி பெறமுடியுமா? அரண்மனையில் எல்லா அதிகாரங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்த அம்மை, லைனிஸ் என்னும் ஊர்பேர் அறியாதான் அரசாண்டு கொண்டிருப்பது கண்டு எங்ஙனம் மனம் பொறுக்க முடியும். சூழ்ச்சிகள் மூலம் மீண்டும் இழந்த இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ஆவல் வளர்ந்த வண்ணம் இருந்தது.

மகனுக்கும் அன்னைக்கும் இடையே இயற்கையாக இருந்து வந்த பாசம், லைனிசால் கெட்டுவிட்டது.

ஆன் அரசி எப்போதும் போலவே, கண்ணீர் உகுத்துக் கொண்டுதான் இருந்தாள்.

பிரபுக்கள், இந்தப் 'புதிய நோய்' போக மருந்து உண்டா என்று ஏக்கத்துடன் கேட்டனர்.

"சரக்கு மாறவில்லை--விலாசம்தான் புதிது!" என்று ஒருவர், லைனிசின் ஆட்சியைக் குறிப்பிட்டார்.

கான்சினி, காண்டி, இவர்களிடம் காணப்பட்ட போக்கே லைனிசிடமும் இருந்தது.

உறவினர்களுக்கெல்லாம் செல்வம், செல்வாக்கு, பட்டம் பதவி ! அள்ளி அள்ளி வீசினான், லைனிஸ்; கேட்க நாதி இல்லை. எதிர்த்திடத் துணிந்தவர்கள் அழிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், மேரி அம்மை, ப்ளாயிசில் சோம்பிக்கிடந்து பயனில்லை அங்கிருந்து வெளிஏறி, பிரபுக்கள் சிலரின் உதவியைத் திரட்டிக் கொண்டு, லைனிசை எதிர்த்தொழித்து, மகனை மீட்டு அவனை மன்னனாகக் கொண்டு பழையபடி தன் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும், என்று தீர்மானித்தாள். எபர்னான் பிரபுவுக்கு அதுபோது பிரான்சிலே நல்லசெல்வாக்கு, அவருடைய உதவியைப்பெற, மேரி திட்டமிட்டு மங்கலான நிலவொளி இருந்த ஓரிரவு, சாளர வழியாக நூலேணி போட்டுக் கீழே இறங்கிப்ப்ளாயிஸ் மாளிகையை விட்டு வெளி யேறி, எபர்னான் மாளிகை வந்து சேர்ந்தாள்.

மேரி தப்பிச்சென்ற செய்தி பிரான்சிலே பெரிய பரப்பை உண்டாக்கிவிட்டது. இரவில் ! சாளரவழி! நூலேணி!!--மக்கள் இந்த நிகழ்ச்சிகளைக் கேட்டு வியப்படைந்தனர். எபர்னான் பிரபு, மேரி அம்மைக்குத் துணை புரியச் சம்மதித்தார்--லைனிசினிடம் வெறுப்புக் கொண்ட வேறு சீமான்களும் பக்கத்துணையாயினர்! மேரி அம்மையின் திட்டம் வெற்றி தந்துவிடும் என்ற நம்பிக்கை உதயமாயிற்று.

மன்னனும் லைனசும் கவலைப்பட்டனர்--எப்படி இந்த ஆபத்தைத் தவிர்ப்பது என்று யோசித்தனர்--ஜோசப் யோசனை கூறினார், "மேரி, படையுடன் பாரிஸ் வராதபடி தடுக்கக் கூடியவர் ஒருவர் தான் உண்டு- அவர்தான் ரிஷ்லு!" என்றார். ரிஷ்லு அழைக்கப்பட்டார்! என்னைப் பாரிசை விட்டுத் துரத்தினீர்களே, நான் ஏன் உங்களுக்குத் துணை புரிய வேண்டும்? நான்,மேரி அம்மைக்கே உதவி புரிவேன் மேரியின் தயவுதான் எனக்கு அரண்மனைக்கு நுழைவுச் சீட்டாக இருந்தது. எனவே நான் பாரிஸ் வாரேன்" என்றல்லவா, ரிஷ்லு நிலையில் தள்ளப்பட்ட எவரும் கூறுவர். ரிஷ்லு பாரிஸ் சென்றான், மேரி அம்மைக்கும் மன்னனுக்கும் சமரசம் உண்டாக்கி வைக்கும் பணியைச் செய்து முடிப்பதாக வாக்களித்து. எபர்னான் சென்று, மேரியிடம் பேசி போரை நிறுத்தி வைத்ததுடன் சமரச ஏற்பாட்டையும் தயாரித்துத் தந்தான்!

ஒருபுறம் மன்னன், அவனுடன் கீழே சாயப்போகும் லைனிஸ்.

மற்றோர்புறம் சூழ்ச்சித் திறமும் ஆதிக்க ஆசையும் மிகுந்த மேரி--அம்மையைச் சுற்றி அதிகாரப் போதையைப் பருகி அட்டகாசம் செய்ய வல்ல பிரபுக்கள்.

இந்த இருதரப்பிலே, மேரி தரப்பினுடைய கரம் வலுத்தால், தன் ஆதிக்க நோக்கம் ஈடேறும் வழி அடியோடு அடைபட்டுவிடும், எனவே, மேரியின் திட்டம் வெற்றிபெறக் கூடாது--வெற்றிபெற விடக்கூடாது.

மன்னன்? பரவாயில்லை ! கரத்தில் சிக்குவான்! லைனிஸ்? அசடன்! ஆடி அழிவான்!!--எனவே மன்னர். தரப்புக்கே துணைநிற்க வேண்டும், என்று ரிஷ்லு தீர்மானித்தான்.

ரிஷ்லுவின் பேச்சுக்கு மேரி, ஏன் இணங்க வேண்டும்? மேரி, அடைந்திருந்த அவமானம் சாமான்யமானதல்ல. வேட்டைக்கார வெறியன், அரண்மனையை விட்டே துரத்தினான். கீறிய கோடு தாண்டாதிருந்த மன்னனை, மகனை, பிரித்து வைத்தான், பகை மூட்டி விட்டான். எபர்னான் பிரபுவின் ஆற்றல் துணை நிற்கிறது--வெற்றி எளிது!--இது மேரிக்குப் புரியக் கூடியதுதானே! ஏன் ரிஷ்லுவின் சமரசப் பேச்சுக்கு, இணங்க நேரிட்டது?

ரிஷ்லு, தர்பார் தளுக்கனல்ல! பாவையரை மயக்கும் பாகு மொழி பேசியும், சொக்க வைக்கும் புன்சிரிப்புக் காட்டியும், கீதமிசைத்தும் நடனமாடியும், களிப்பூட்டியும், காதலைப் பொழிந்தும், காரிகையரைக் கொல்லும் உல்லாசக் கல்லூரியில் தேறியவனுமல்ல! நோயாளி! பகட்டுடை அணிந்து பரிமளம் பூசிக்கொண்டு மினுக்கும் பட்டுப் பூச்சியுமல்ல! மத அதிபர் உடை! நோயும் ஓயாத உழைப்பும், தாங்கித் தாங்கி முகத்திலே, வேதனை ரேகை நன்றாகப் படர்ந்திருந்தது. எனினும், ரிஷ்லுவுக்கு யாருடைய கவனத்தையும் தன் பக்கம் இழுக்கவல்ல முக அமைப்பு இருந்தது! கவர்ச்சி அல்ல! அளவளாவலாம், தோழமை கொள்ளலாம், என்ற ஆசை எழவில்லை, எனினும், அவனைப் பார்த்ததும், மனதிலே பதிந்து விடுகிறான். இத்தாலிய சாணக்கியன் மாக்கியவல்லி கூறினான், "மன்னன், நேசிக்கப்படத் தக்கவனாக இருப்பதைக் காட்டிலும் அச்சமூட்டத் தக்கவனாக இருப்பது நல்லது" என்று. ரிஷ்லு, அந்த ஓவியமாக விளங்கினான். நேசிக்க அல்ல; ஆவலைக் அச்சம் கொண்டிட வைத்தது, ரிஷ்லுவின் தோற்றம். அவனுடைய கண்களே, கருவூலங்கள்! ஒளி, ஆவலைக் காட்டுவதாக மட்டுமல்ல, உறுதியை, நினைத்ததைச் சாதித்தே தீருவான் என்ற உறுதியை உமிழ்ந்தது? ஆடம்பரம் இல்லை, உடையில், நடையில். ஆனால் அதிகாரத்தைத் திறம்பட நடத்தும் போக்கினன் என்பதை எடுத்துக் காட்டுவதாக இருந்தது.

இந்த ரிஷ்லுவிடம், மயக்கமா, மேரி அம்மைக்கு!

உண்டு, என்கிறார்கள்--இருக்கக்கூடும், அம்மையின் இயல்பைக் கவனித்தால்!

ரிஷ்லு, இதற்கு இணங்கினதாக ஆதாரமும் இல்லை, நடவடிக்கைகள் இவ்வகையில் ஏதும் இல்லை.

பொதுவாகவே ரிஷ்லுவுக்கு அந்தச் 'சபலம்'கிடையாது. நோயும், நோயைவிடக் கடுமையாக மனதைப் பிடித்துக் கொண்டிருந்த ஆதிக்க நோக்கமும், ரிஷ்லுவுக்கு அந்தச் சபலத்தைத் தந்திராது--மேலும் வாலிப வயது முதல் தேவாலயத்திலே அல்லவா, வேலை!! எனவே, ரிஷ்லு, விருந்து தேடிடும் வீணனாக இல்லை. ஆனால், மேரி, அம்மைக்கு ஏதோ ஒருவகையான மயக்கம் இருப்பது மட்டும் ரிஷ்லுவுக்குத் தெரிந்தது--அந்தப் பொல்லாத குணம் கூடாது என்று ரிஷ்லு உபதேசம் செய்யவில்லை, ஒதுங்கிக் கொள்ளவில்லை. அரண்மனை ஆயிரத்தெட்டுக் கேடுகள் நடமாடும் இடம் என்று மிரண்டு ஓடிவிடவில்லை. அம்மைக்கு அவ்விதமான மயக்கம் இருப்பதும் நல்லது தான், அதனை எப்படி, ஆதிக்கம் பெறப் பயன்படுத்திக் கொள்வது, என்று மட்டுமே எண்ணினான்,

"நான் இருக்கிறேன்! இதோ! உன் எதிரில்! எப்போதும்!" என்று தன்னைக் காட்டிக் கொள்வது மட்டும் போதும். இணங்கி விடுவது கூடாது, ஆவல் மட்டும் இருக்கட்டும், அது அணையா தீபமாக இருக்கட்டும், என்று எண்ணி ரிஷ்லு நடந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

ரிஷ்லுவின் போக்கைக் கவனிக்கும் போது, இது முற்றிலும் உண்மைக்கு மாறானது என்று தள்ளிவிடுவதற்கில்லை.

இப்படி ஒரு மயக்கம் இருந்தாலொழிய,மேரி அம்மை, நெருக்கடியான நேரத்தில் எல்லாம், ரிஷ்லுவின் பேச்சுக்கு ஏற்றபடி தன் திட்டத்தைத் திருத்திக் கொள்வதற்குக் காரணம் வேறும் காணக்கிடைக்கவில்லை.

எப்படியோ ஒன்று, சமரசம் ஏற்பட்டு விட்டது. தாயும் மகனும் அளவளாவினர்-நாடு ஓரளவு நிம்மதி கிடைத்தது என்று எண்ணி மகிழ்ந்தது.

ரிஷ்லுவுக்கு இதனால் என்ன இலாபம்? இல்லாமற்போகுமா? கார்டினல் எனும், உயர்தர மத அதிபர் பதவியை ரிஷ்லுவுக்கு போப்பாண்டவர் அளித்தார். இந்தப் பதவியில் ரிஷ்லுவை அமர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது!

கார்டினல் எனும் நிலைபெற, மார்க்கத் துறையிலேயே பன்னெடுங்காலம் ஈடுபட்டுக் காத்துக் கிடப்பர் பலர்; ஆனால் ரிஷ்லுவுக்கோ! ஒரு அரசியல் குழப்பம்-சமரச முயற்சி கார்டினல் பதவி!

எபர்னான் பிரபுவின் பேருதவியை நம்பித்தான் மேரி, மன்னனை எதிர்க்கத் துணிந்தது. ரிஷ்லு எப்படியோ அம்மையின் மனதை மாற்றி, மன்னனிடம் சமரசமாகி விடும்படி செய்து விட்டான். இந்தச் சம்பவம், அரண்மனையில் ரிஷ்லுவின் செல்வாக்கை வளமாக்கி விட்டது. ஒரு நாள் எபர்னான் பிரபு, மாளிகை மாடியிலிருந்து கீழே வந்து கொண்டிருக்கும் போது ரிஷ்லுவின் ஆதரவாளர் ஒருவர், படிக்கட்டில் அவரைக்கண்டு, "பிரபுவே! என்ன ஏதேனும் விசேஷம் உண்டா?” என்று கேட்க, எபர்னான், "ஏன் இல்லை!! நீங்கள் உயரப்போகிறீர்கள், நான் கீழே இறங்குகிறேன்!" என்று பதிலளித்தாராம்!! யூகம் நிரம்பி பதில்.எபர்னானுக்கு மேரி அரசி ஏதும் உதவி செய்யவில்லை; ரிஷ்லுவுக்கோ, அன்னையும் ஆதரவு தந்தார், அரியாசனத்திலிருந்த மகனும் தந்தான்!!

இது எனக்கு எம்மாத்திரம், என்றுதான் ரிஷ்லு எண்ணினார், ஆனால் பயனற்றது என்று கூறவில்லை. பயன்படுத்திக்கொள்ள முடியும்.

சமரசம் முறிந்ததும், மீண்டும் சமர் கிளம்பிற்று--மீண்டும் சமரசம். இப்படி நிகழ்ச்சிகள் ஊஞ்சலாடின--இந்நிலையில் லைனிஸ் இறந்துபட்டான்--மன்னன், யாருடைய துணை கொண்டோ துரைத்தனம் நடத்திப் பார்த்துச் சலிப்புற்று, ரிஷ்லுவுக்கு அழைப்பு அனுப்பினான், 1624-ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 29-ம் நாள், ரிஷ்லு மீண்டும் ஆட்சிக் குழுவில் இடம்பெற்றான்--நாலு திங்களில், உடனிருந்த அமைச்சர்களை மூலையில் அமரச்செய்து விட்டு, முதலமைச்சரானான்--முடி தரித்தவன் லூயி--ஆட்சி கார்டினல் ரிஷ்லுவிடம்! நீண்டகாலத் திட்டம் பலித்துவிட்டது! பிரான்சு, ரிஷ்லு கரத்தில் சிக்கிவிட்டது. லூகான் தேவாலயத்திலே பூஜாரி வேலையா பார்க்கக் சொன்னார்கள், பிரான்சை ஆளும் பெரும் பதவிக்கு ஏற்ற என்னை! என்று எண்ணினான். பெற்றதைப் பலப்படுத்தும் பெரும் பணியைத் துவக்கினான். மன்னனை மெள்ள மெள்ள வசப்படுத்திக் கொண்ட, ரிஷ்லு, பிரபுக்களின் கொட்டத்தை அடக்குவது, ஹ்யூஜீ நாட்ஸ் எனும் பெயர் படைத்த பிராடெஸ்ட்டென்ட் மக்களை ஒடுக்குவது, வெளி நாடுகளில் பிரான்சின் கீர்த்தியை நிலைநாட்டுவது எனும் மூன்று திட்டங்களை மேற்கொண்டு ஒவ்வொன்றிலும் வெற்றி கண்டான். இந்த வெற்றிகளை வரலாற்று ஆசிரியர்கள் பெரிதும் பாராட்டுகின்றனர். இந்த வெற்றிகளுக்கு ரிஷ்லு கையாண்ட முறைகளோ, மிகக் கொடுமையானவை.

ரிஷ்லுவின் ஒற்றர்கள்' நாடெங்கும் பூனைபோலுலவி, 'சேதிகளைக்' கொண்டு வந்து தருவர், தனக்குப் பிடிக்காதவர்கள், ஆற்றலை வெளிப்படுத்துபவர், அரண்மனையில் புகும் உரிமை கொண்டவர்கள் ஆகியோரை, சதி வழக்குகளில் சிக்கவைக்க, இந்தச் சேதிகள் மெத்தப் பயன்பட்டன. மாளிகைகளிலே மருட்சி! ஒவ்வொரு பிரபுவும் தனக்கு எப்போது ஆபத்து வருமோ என்ற திகிலுடனேயே உலவிட நேரிட்டது. சதி வழக்குகள் தொடுத்தால், தக்க ஆதாரங்கள் இல்லாவிட்டாலும் கடும் தண்டனை தரப்படும். காரணம் கேட்டவருக்கு ரிஷ்லு சொன்னான் "சதி வழக்குகளுக்கு ஆதாரங்கள் அப்பழுக்கின்றி கிடைக்குமா! யூகித்தறிந்த விஷயமே போதும் தண்டனை தர" என்று. இப்படிப்பட்ட விபரீத நியாயம் முறையாகி விட்டது.

மன்னனிடம், "என் கடன் தங்கள் ஆட்சியைப் பலப் படுத்துவதுதான், தங்களை எதிர்க்கத் துணிவு காட்டும் பிரபுக்களை அழித்து, அரச பலத்தை அதிகரிக்கச் செய்வதுதான்; தங்கள் ஆட்சியின்போது பிரான்சு நாடு பிற நாடுகளால் பெரிதும் மதிக்கப்பட்டது என்று நிலை இருக்க வேண்டும்; அதற்கான முறையிலே பணிபுரிகிறேன்" என்று சொல்லி, காட்டிய இடத்தில் கையொப்பமிடும் கருவியாக மன்னனை ஆக்கிக் கொண்டான்.

பல பிரபுக்கள், ரிஷ்லுவின் பகைக்கு ஆளாகி, ஈவு இரக்கமின்றி அழிக்கப்பட்டனர்--மக்களுக்குக் கேடு செய்தான் என்பற்காக அல்ல, மன்னனுக்கு நிகராகத் தம்மை எண்ணிக் கொண்டனர் என்பதற்காகவே! பிரபுக்கள் அழிக்கப் பட்டனர்.

அரசனுக்காக! பிரான்சுக்காக! என்றுதான் ரிஷ்லு, தன். நடவடிக்கைகளுக்கெல்லாம், விளக்கம் தந்தானே தவிர, மக்களுக்காக என்று ஒரு சிறு செயலையும் மேற்கொள்ளவில்லை.

மக்கள், எப்போதும் போல ஏக்கமிகுந்து. இருந்தனர்--பசி தீரவில்லை, வாழ்க்கை சிறக்கவில்லை--தொழில் வளம் பெருக வில்லை, உரிமைக் குரலுக்கு இடமே இல்லை. பிரபுக்கள் ஒரு புறத்தில் அவர்களைச் சுரண்டினர், மத அதிபர்கள் மற்றோர் புறம் அரித்தனர். இந்தக் கொடுமைகளைக் களைய ரிஷ்லுவின் ஆற்றல் பயன்படவில்லை--அடிப்படையில் வெடிப்புக் கிடந்தது, ரிஷ்லுவோ, கலசத்துக்குப் பொன் முலாம் பூசிக்கொண்டிருந்தான்.

ரிஷ்லுவை எதிர்த்து மன்னனுடைய தம்பி, காஸ்ட்டன் பன்முறை கிளம்பினான்--ஒவ்வோர் முறையும் பரிதாபகரமான தோல்வியே கண்டான்.

மன்னன் தம்பி என்பதால் அவன் தலை தப்பிற்று--உடன் இருந்தோரின் தலைகள் உருண்டன.

வேண்டுகோள், அழுகுரல், கருணைமனு, எதனையும் பொருட்படுத்துவதில்லை, பாதையிலே குறுக்கிட்டால் தீர்ந்தது, பயங்கர மரணம்தான் பரிசு!

தன்னைச் சுற்றிலும் வேவுபார்ப்போர், தகவல் திரட்டுவோர், ஆகியவர்களை அமர்த்திக் கொண்டு, ரிஷ்லு நடத்திவந்த ஆட்சி முறையின் கடுமை கண்டு, பலரும் கலங்கினர்.

மன்னனின் தம்பி, காஸ்டன், காமக்களியாட்டத்திலே காலந்தள்ளி வந்த பதினெட்டாண்டு வாலிபன், அவனை ஆதரவாக நம்பி, இரு பிரபுக்கள் எதிர்ப்பு மூட்டினர். ரிஷ்லுவுக்கு, சதி, கருவிலிருக்கும்போதே தெரிந்து விட்டது--பிரபுக்களின் முயற்சி முறியடிக்கப்பட்டது--காஸ்டன், அண்ணனிடம் மன்றாடி உயிர் தப்பினான். ஒரு பிரபு சிறையில் தள்ளப்பட்டு மாண்டான்--காய்ச்சல் என்று கூறப்பட்டது. மற்றோர் பிரபுவுக்கு நேரிட்ட கதி, பிரான்சையே நடுங்க வைத்தது. காலே எனும் அந்தப் பிரபுவின் தலை சீவப்பட்டு, கோலில்செருகப்பட்டு, சதுக்கத்தில் காட்சியாக வைக்கப்பட்டது. உடல் நாலு கூறாக்கப்பட்டு, ஊரின் நான்கு நுழைவு வாயல்களிலும் தொங்க விடப்பட்டன!

தேவாலய அதிபராக வாழ்க்கையைத் துவக்கியவரின், கருணை நிரம்பிய உள்ளம் இது! இப்படியா, என்று கேட்டால், அரசுக்காக! பிரான்சுக்காக! என்ற ஒரே பதில்!

காலே என்பவனுடைய தலை சீவப்பட்டது என்றால், எவ்வளவு காட்டுமிராண்டித் தனமான முறையில்--தலை வெட்டுவதற்கு தக்க ஆள் கிடைக்க வில்லையாம், எனவே இரு கைதிகள் இந்தக் காரியத்துக்கு அமர்த்தப்பட்டனர்--ஊதியம், விடுதலை! கோடரி கொண்டு இருபத்து ஒன்பது தடவை வெட்டிய பிறகே கழுத்துத் துண்டிக்கப்பட்டதாம். எல்லாம் அரசுக்காக! என்றான் ரிஷ்லு, 'ஆமென்!' என்றான் மன்னன்.

பயங்கரமும் கொடுமையும் நிரம்பி முறையிலே நடைபெற்ற நடவடிக்கைகள் பலப்பல. மக்களை வாட்டி வதைப்பவன், ஏழைகளை ஏய்த்தவன், சர்க்கார் பொருளைச் சூறையாடினவன், ஆலயச்சொத்தை அபகரித்தவன், போன்ற ஒரு 'குற்றவாளி' கூட ரிஷ்லுவின் கண்ணுக்குத் தெரியவில்லை! அப்படிப் பட்டவர்களை, குற்றவாளிகள் என்று கருதினால்தானே! ரிஷ்லுவின் கண்களுக்கு ஒரே ஒரு வகையான குற்றவாளி மட்டுமே தெரியும்--தன் ஆதிக்கத்துக்குக் குறுக்கே நிற்பவன்! அதுதான், பெருங் குற்றம்--மற்றவை, ரிஷ்லுவின் கவனத்துக்கு உரியன அல்ல!

லைனிஸ் இறந்துபட்ட பிறகு, மன்னன் பொழுது போக்குக்காகவேனும், தன் இல்லக்கிழத்தி ஆன் ராணியை நாடினானா! இல்லை! தன்னைச் சுற்றிலும், அழகு மங்கையரை உலவச் செய்து, ஒருவிதமான திருப்தி பெறுவான். களியாட்டம் மன்னனுக்குப் பிடிக்காது. அணங்குகள் அங்கும் இங்கும், ஆடியும் அசைந்தும், சிரித்தும் உபசரித்துக் கொண்டும் இருப்பர், இடையே மன்னன் இருப்பான்.

மன்னனுடைய பிரத்யேகமான ‘அன்பு' ஒரு அழகிக்குக் கிடைக்கும், பிறகு வேறோர் வனிதைக்கு மாறும், ஆனால் எந்த அணங்கையும், மன்னன் காமக் கருவியாக்கிக்கொள் வதில்லை, வெறும் பொழுது போக்கு!

கணவனிருந்தும் விதவையாக இருந்த ஆன், தன் அழகையும் இளமையையும் வெறுத்தபடி, ஒதுங்கியே வாழ்ந்து வந்தாள்.

சுழல் கண்ணழகியும், கீத மொழியினளும், மன்னனைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருப்பதும், ஆன் அரசியை மன்னன் அனியாயமாக ஒதுக்கி வைத்திருப்பதும் ரிஷ்லுவுக்குத் தெரியும்; தெரிந்து? அந்த நிலை நல்லது தான் என்று எண்ணிக்கொண்டாள். ஆன் அரசியுடன் காதல் வாழ்க்கை நடத்த ஆரம்பித்தால்! மன்னன் அவள் வசமாகி விட்டால் தன் நிலைக்கு என்ன ஆபத்து நேரிடுமோ, யார் கண்டார்கள்! ஆன் அரசி, மேரி போலாகி விட்டால்? ஆன் அரசிக்கு வேண்டியவர்களுக்கு ஆட்சிப் பொறுப்புத் தரப்பட்டு விட்டால்? இப்படி எல்லாம் எண்ணிய ரிஷ்லு, மன்னனின் மண வாழ்க்கை மலருவது கூடாது என்று விரும்பினான்.

கணவன் மனைவிக்கு இடையே கலகமூட்டி, பிரித்து வைத்துப் பெருங்கேடு செய்கிறான் ஆதிக்க வெறியன் என்று சிலர் குற்றமே சாட்டினார்கள்.

அணங்குகளுடன் கொஞ்சிக் குலவட்டும், மனதுக்கு மகிழ்ச்சி தேடிக்கொள்ளட்டும், ஆனால் எந்த மைவிழியாளிடமும் மன்னன் மனதைப் பறிகொடுத்து விடக்கூடாது என்பது ரிஷ்லுவின் எண்ணம். மனதுக்கு மகிழ்ச்சியே கிடைக்கா விட்டால் மன்னன், காரணமற்ற கோபம், சலிப்பு, சோகம் ஆகியவைகளுக்கு ஆட்பட்டு விடுவான்--அதுவும் தொல்லையாகி விடும், ஒருவேளை, பொழுது போக்கே இல்லாத நிலையில் ஆட்சிக் காரியங்களையே கவனிக்கத் தொடங்கிவிடக் கூடும்--அது தொல்லை மட்டுமல்ல, ஆபத்துங்கூட! எனவே மன்னன், ஆடிப்பாடி மகிழ வேண்டும், அதற்குஏற்ற அழகு மங்கையர் அவன் அருகில் இருக்க வேண்டும்--இந்த ஏற்பாடும் ரிஷ்லு கவனித்துக் கொள்ள வேண்டும், வேறு எவனாவது இந்தத் துறையில் ஈடுபட்டு, மன்னனின் தோழமையைப் பெற்று விடுவதும், பேராபத்தாகு மல்லவா!

"https://ta.wikisource.org/w/index.php?title=அரசாண்ட_ஆண்டி/ரிஷ்லு&oldid=1583419" இலிருந்து மீள்விக்கப்பட்டது