அரசியர் மூவர்/கேகயன் மடந்தை
2.கேகயன் மடந்தை
கம்பன் கட்டிய கலைக் கோவிலில் ஓர் இன்றியமையாத பாத்திரமாவாள் கைகேயி. அவளாலேதான் இராம காதை நடைபெறுகிறது. இராமன் உலகில் தோன்றிய பயன் விளைய, அவள் ஒருத்தியே காரணமாகிறாள்.
தேவர் துயரைப்போக்குவதற்காக இராமபிரான் தோன்றியது மட்டும் போதாது. அவன் நாடிழந்து காடு நோக்கிச் சென்றிராவிடின், அவன் அவதாரத்தால் யாதொரு பயனும் விளைந்திராதன்றோ?
கவிஞன் முறை
இவ்வளவு நன்மை செய்த ஒருத்தியைக் கெட்டவள் என்று எவ்வாறு கூறுவது? என்றாலும், உலகம் அவளைக் கெட்டவள் என் றும் பழி சூடியவள் என்றுந்தான் கூறுகிறது. உண்மையில் கைகேயி தீயவளா? காப்பியம் செய்த கவிஞனுக்கும் இக்கேள்வி பெரிய இடர்ப்பாட்டைத்தான் விளைவித்துள்ளது போலும்! ஒரு காப்பிய ஆசிரியனுக்கு இரண்டு வகைக் கடமைகள் உண்டு. ஒன்று, அவன் படைக்கும் பாத்திரங்களின் பண்பை அவனே விளக்குவது. இதில் அப்பாத்திரத்தைப்பற்றி அவன் என்ன கருதுகிறானோ, அக்கருத்தே இடம் பெறும். மற்றொரு வகையில் அவனுக்கு ஒன்றும் வேலை இல்லை. அவனால், படைக்கப்பட்ட ஏனைய பாத்திரங்கள் தம்முள் பேசுகின்றன. அங்ஙனம் பேசுகையில் ஒவ்வொரு பாத்திரம் பற்றியும் பேச நேரிடுகிறது. இவ்வகைப் பேச்சுக்களில் ஒரு பாத்திரத்தைத் தீயதென்றோ நல்லதென்றோ கூற நேரிடும். இவ்வாறு ஒரு பாத்திரம் பிறிதொரு பாத்திரத்தைத் தீயதென்று கூறிய காரணத்தால் மட்டும் அதனைத் தீயதென்று முடிவு கூறக்கூடாது. காப்பியத்தில் காணப்பெறும் ஒரு பாத்திரத்தின் குண ஆராய்ச்சி செய்வதற்கு நடுவு நிலைமை வேண்டும். ஒரே ஆசிரியன் இயற்றிய ஒரு காப்பியத்தில் சில பாத்திரங்களை விரும்பியும், சிலவற்றை வெறுத்தும் முடிவு கூறல் தவறாகும்.
தீயோர் இரு வகையினர்
கேகயன் மடந்தையாகிய கைகேயியைப்பற்றி ஆசிரியனே பலவிடங்களிற் பேசுகிறான் ; ஏனைய பாத்திரங்களும் பேசுகின்றன. இந்த இரண்டு கூற்றுக்களையும் படிக்கின்ற நாம் நடுவு நிலைமையுடன் இக்கூற்றுக்களை ஆய்ந்து, கைகேயியின் குறைவு நிறைவுகளை முடிவு கட்ட வேண்டும். குறைவு இல்லாதவர் யாரும் இல்லை. அவ்வாறே முற்றிலும் குறைவேயுடைய நிறைவு இல்லாத மாந்தரும் இல்லை. ஆதலின், கைகேயியினிடத்தும் குறைவு உண்டு. ஆனால், அக்குறைவும் இரு வகைப்படும். இயற்கையாய் அமைந்த ஒரு பண்பாட்டால் வரும் குறைவு ஒன்று ; ஏனையது, வேண்டுமென்றே தவற்றைச் செய்து குறைவடைவது. ஒரு மனிதன் குறைவடைய வேண்டுமாயின், தவறு செய்ய வேண்டும். அவ்வாறு இழைக்கப்படும் தவறும் இரு வகைப்படும் : வேண்டுமென்றே இழைக்கப்படும் தவறு ஒரு வகை; இரண்டாம் வகையில் சூழ்நிலை காரணமாகவும் சில சமயங்களில் தவறு இழைக்க நேரிடுகிறது. முதலாவது வகை மிகக் கொடியது. கருணை இன்றி இவர்கள் செயலைக் கண்டிக்க வேண்டுவது தவிர வேறு வழி இல்லை. தமக்கு ஒன்றும் நன்மை இல்லை என்பதறிந்திருந்தும் தவறு இழைக்கும் இவ்வினத்தார், மந்தரையாகிய கூனியின் இனத்தைச் சேர்ந்தவர்.
இரண்டாவது கூறப்பெற்ற இனமே, கைகேயியின் இனம். இவ்வகையினர் சூழ்நிலை அல்லது சந்தர்ப்பம்.காரணமாகவே தீங்கிழைப்பர். இதுவும் குற்றம் எனினும், மன்னிக்கக் கூடிய குற்றமாகும் என்பதை மறந்துவிடக்கூடாது. இவ்வகையினர் வேண்டுமென்று பிறர்க்குத் தீங்கு புரிபவரல்லர். எப்பொழுதும் நல்லெண்ணம் இவர் களைச் சூழ்ந்திருக்கும். பிறர்க்குத் தீதுசெய்தறியாத இவர்கள், சூழ்நிலை காரணமாகச் சில சமயங்களில் தீங்கிழைப்பார்கள். இவ்வாறு இழைக்கும் தீமையும் இவர்களே செய்ததாய் இராது; பிறர் தூண்டுதலின்மேல் தவறான செயலைச்செய்வார்கள். இவர்களிடம் குற்றங் காணவேண்டுமாயின், தவறுடையார் நட்பைப் பெரிதாக மதித்துப் போற்றுகின்றவரே என்றுதான் கூற வேண்டும். கேகயன் புதல்வியும் தசரதன் மனையாட்டியுமாகிய கைகேயி இந்த இனத் தாருக்கு ஒர் எடுத்துக்காட்டாவாள்.
இயற்கையிலேயே பல நற்பண்புகளும் உடைய பெருமாட்டி அவள். 'தெய்வக் கற்பினாள்', 'ஆழ்ந்த பேரன்பினாள்', 'கேகயர்க்கிறை திருமகள்', 'தேவி', என்பன அவளுக்குக் கவிஞன் தரும் சில பட்டங்கள். இவை அனைத்தும் அவளது நற்பண்பை நமக்கு அறிவிக்கக் கவிஞன் கையாண்ட சொற்கள். ஏன்? தான் ஆக்கும் ஒவ்வொரு பாத்திரத்தையும் நாம் நன்கு அறிய வேண்டும் என்பதும், அப்பாத்திரத்தின் குணநலன்களையும் நன்கு அறிய வேண்டும் என்பதும் அவனுடைய குறிக்கோளாகும். இம்மட்டோடல்லாமலும், சில சந்தர்ப்பங்களில் சில பாத்திரங்களைப் பற்றி நாம் தவறான முடிவைச் செய்துவிடநேரிடுகிறது. அம்மாதிரி முடிவைச் செய்யாமல் இருப்பதற்கும் கவிஞன் அதிக முயற்சி செய்ய வேண்டி உளது. கைகேயியைப் பற்றிச் சில சமயங்களில் இவ்விடர்ப்பாடு தோன்றக் கூடும். அவள் செய்த செய்கையால் ஒரு பெரிய அரசு கேடுற்றது; அரசன் உயிரை இழந்தான் ; அவளும் கணவனை இழந்தாள். ஆனாலும், இறுதியில் அவள் நினைத்த நினைவு கைகூடவில்லை. எனவே, வீண் துயரத்திற்கும் பழிக்கும் ஆளான அவளை நாம் கொடியளாக முடிவு செய்துவிடக்கூடாது.
உறங்கும் அழகி
இவ்வளவையும் மனத்தில் வைத்துக்கொண்டுதான் கவிஞன் அவளை நமக்கு அறிமுகம்செய்து வைக்கிறான். கொடுமனக் கூனி, பெரிய சூழ்ச்சி ஒன்றை மனத்தில் வைத்துக்கொண்டு, கைகேயியைத் தேடி வருகிறாள். அவள் வரவையும் அதன் கொடுமையையும் கவிஞன் பெரியவாக்கிக் காட்டுவதெல்லாம் கைகேயியை அறிமுகம் செய்வதற்கேயாம். கூனியின் தடபுடல் வருகைக்கு ஏற்ற நிலையில் கைகேயி இல்லை. அவள் உறங்கிக்கொண்டிருக்கிறாள். கூனி உள்ளே நுழையும்பொழுது. அந்த உறக்கத்தில் அவளை நமக்கு அறிமுகம் செய்யும் கவிஞன், ஒரு பெரிய பயனைப் பெற்றுவிடுகிறான். எவ்வளவு அழகில் சிறந்தவர்கள் என்று நம்மால் கருதப் பெறுகிறவர் களும் உறங்கும் பொழுது அழகுடன் விளங்க மாட்டார்கள். இதைப் பற்றிச் சந்தேகம் கொள்ளுகிறவர்கள் அனுபவத்தில் பார்த்தே தெரிந்துகொள்ளலாம். இதற்கொரு காரணம் உண்டு. நாம் விழித் திருக்கும் பொழுது மனத்தில் தோன்றும் தவறான எண்ணங்களை எல்லாம் அடக்கிவிடுகிறோம். எனவே, இந்த எண்ணங்களால் தோன்றும் முகக் குறிப்பும் மறைக்கப்பட்டுவிடுகிறது. எவ்வளவு உயர்ந்த மனப்பண்புடையவர்கட்கும் ஒரளவு தீய பண்புகளும் இருந்தே தீரும். எனினும், அறிவுடையவன் மனத்தில் தோன்றும் இத்தீய பண்புகள் வெளிப்பட வாய்ப்பு அளிப்பதில்லை. ஆனால், உறங்கும் பொழுது இவ்விதத் தடையாதும் இல்லை. எனவே, மனத்தில் விளையாடும் இவ்வெண்ணங்கள் முகக்குறிப்பிலும் வெளியாகின்றன. இதனாலேயே ஒருவர் தூங்கும் பொழுது அவரது முகத்தில் பல விதமான கோணல்கள் தோன்றக் காண்கிறோம். ஆனால், இளங்குழந்தைகள் உறங்கும் பொழுது அவர்கள் விழித்திருந்த பொழுது தவழ்ந்த அழகு குறையாமல் இலங்கக் காண்கிறோம்.
இந்நிலைக்கு மாறாக யாரேனும் ஒருவர் உறங்கும் பொழுதும் மிக்க அழகுடன் விளங்கினார் என்றால், அதனால் வெளிப்படும் ஓர் உண்மையுண்டு. அதாவது, அம்முகத்தையுடையவர் யாவராயினும், அவர் மிகச் சிறந்த எண்ணமும் பண்பும் உடையவர் என்பதே யாகும். இவ்வுண்மை மனவியலார் (Psychologists) அறிந்த ஒன்று. இது கருதியே போலும் பொதுமறை தந்த பெரியார், “அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
(706)
என்று கூறிப் போனார். இந்த அடிப்படை உண்மைகளை மறவாமல் கம்பநாடன் காட்டும் கேகயன் மடந்தையைக் காண்போம்.
அருள் வழியும் கண்கள்
“நாற்கடல் படுமணி நளினம் பூத்தது ஒர்
பாற்கடல் படுதிரைப் பவள வல்லியே
போற்கடைக் கண் அளி-அருள் பொழியப்
பொங்குஅணை
மேற்கிடந் தாள்தனை விரைவின் எய்தினாள்.”
(1448)
அழகிய பாற்கடல் நடுவில் பவளக்கொடி ஒன்று தாமரை பூத்து விளங்குவது போலக் கடைக்கண் வழியே அருள் பொழியக் கிடந்து உறங்கினாளாம் அப்பெண் கொடி போல்வாள். உறங்குகிற ஒருத்தியைக் கவிஞன் வருணிக்கிற நிலையைச் சற்றுக் கூர்ந்து கவனிக்கக்கத்தான் வேண்டும். முதல் இரண்டு அடிகள் உவமையாகலின், அவற்றை விட்டுவிட்டு, மூன்றாம் அடியின் முதற்பகுதியைச் சற்று உற்று நோக்குவோம். அவ்வழகிய முகத்திற்குப் பேரழகு செய்துகொண்டு விளங்குவன அவளுடைய கண்கள். விழித்திருக்கும் பொழுது அந்தக் கண்கள் எந்த உணர்ச்சியை மிகுதியாகக் கொண்டு விளங்கினவோ, அந்த உணர்ச்சியைத்தானே உறங்கும் பொழுதும் தாங்கி விளங்கும்? விழித்திருக்கும் பொழுது கண்களின் வழியே வெளிப்படும் உணர்ச்சி அக்கண்கள் மூடியிருக்கும் பொழுது குறைந்துதானே காணப்படும்? எனவே, குறைந்த உணர்ச்சிக்குக் கவிஞன் அளவு கூறுகிறான். கடைக்கண் அளி பொழிய என்ற சொற்களால் உறங்குகையிற்கூட அருள் வழிந்து ஓடினதாகக் கூறுகிறான். அவ்வாறாயின், அவள் விழித்திருக்கும் பொழுது எவ்வளவு அருள் உடையவளாய்த் திகழ்வாள் என்பதை நம் கற்பனைக்கு விட்டு விடுகிறான், கவிஞன். தன் கணவன், பிள்ளை கள் என்பவர்களிடம் மட்டும் அவள் அன்புடையவளாய் வாழ்ந் திருப்பின், அதனைக் கவிஞன் 'அளி' என்ற சொல்லால் குறிப்பிட்டிருக்க மாட்டான். தொடர்பில்லாதார் மாட்டுஞ் செல்லும் மன நிலையைத்தானே 'அளி' என்று பெரியோர் குறிக்கின்றனர்? எனவே, பெருங்குடிப் பிறந்து பெருவாழ்விற் புகுந்தவளாகிய இம்மாதரசி, பெருங்குடிமகளாகவே உள்ளாள் என்பதை நினைவூட்டவே போலும் 'அளி'பொழிந்தது என்று கவிஞன் கூறுவானாயினன் “கண்ணிற்கு அணிகலன் கண்ணோட்டம்”(575) என்றும் "கண்ணிற்கு என்னாம் கண்ணோட்டமில்லாத கண்?”(573) என்றும் பொதுமறை கூறியதற்கேற்ப, இவ்வரசமாதேவியின் கண்கள் அருளைப் பொழிந்தன என்றே கூறுகிறான்.
இவ்வடியால் கேகயன் மடந்தையின் மனத்தையும், முகவழகை யும் நமக்குக் காட்டிய கவிஞன், அடுத்த பாடலில் அவளுடைய கால் அழகையும் காட்டுகிறான். வேதனை விளைவிக்கும் கூனி சென்று, உறங்குகிற கைகேயியின் கால்களைத் தொட்டு எழுப்பினளாம். இந்நிலையில் கவிஞன் அக்கால்களுக்கு உவமை கூறுகிறான்.
காற்கமலம்
“எய்திஅக் கேகயன் மடந்தை ஏடுஅவிழ் நொய்துஅலர் தாமரை நோற்ற நோன்பினால் செய்தபே ருவமைசால் செம்பொன் சீறடி கைகளின் தீண்டினாள் காலக் கோள்அனாள்.” (1449)
மென்மையாக மலருந்தன்மையுடைய தாமரை பல நாள் தவஞ் செய்ததாம். ஏன் தெரியுமா? பூக்களிற் சிறந்தது தாமரை என்றுமட்டும் இருந்தது போதாதாம். அனைவர் முகங்களுக்கும் தன்னை உவமையாகக் கூறியதும் போதாதாம். ஆனால், அழகிற் சிறந்தவளான கைகேயியின் முகத்திற்குத் தான் உவமையாகாவிடினும், அவளுடைய கால்களுக்காவது (பாதம்) உவமையாகிவிட வேண்டுமே என்றுதான் தவஞ்செய்ததாம். இதனைத்தான் கவிஞன் 'நோற்ற நோன்பினால் உவமை சால் சீறடி என்று குறித்தான். அவள் கால்கள் இத்தகையன எனின், முகம் எத்தகையதாய் இருந்திருக்கும் என்பதை நம் கற்பனைக்கு விட்டுவிட்டான் கவிஞன்.
இங்ஙணம் கூனி அவள் கால்களைத் தொட்டவுடனே கைகேயி எழுந்துவிட்டாளாம். இதிலும் ஒர் அழகைக் காண்கிறான் கவிஞன். ஒருவர் காலைத் தொட்ட மாத்திரத்தில் விழித்துவிடுதல் என்பது அவ்வளவு எளிதான காரியமன்று. மேலும், உறக்கம் நீங்குகையில் ஏதோ ஒன்றை உணர்ந்துகொண்டு எழுந்தாள் என்றல்லவா கவிஞன் குறிக்கிறான்?
"தீண்டலும் உணர்ந்தஅத் தெய்வக் கற்பினாள்” (1450) என்ற அடியால் விழிக்கும் அம்மாதரசியின் மன நிலையை நமக்கு விளக்குகிறான். விழிப்பு வரும்பொழுது ஏதாவது ஒர் உணர்ச்சி வரும் என்று கூறுவதற்கில்லை. ஒரு வேளை உறக்கம் கெட்டு விட்டதே என்ற வருத்தங்கூடச் சில சமயங்களில் தோன்றலாம். அவ்வாறாயின், இங்குக் கைகேயி பெற்ற உணர்ச்சி யாது? பேரரசியான அவள் உறங்கும் பொழுது யார்தாம் அவளை எழுப்ப அதிகாரம் பெற்றவர்? அவள் அருமைக் கணவன் அவ்வாறு செய்யலாம். ஆனால் அவன் அவளுடைய கால்களைத் தொட்டு எழுப்ப வேண்டிய கட்டுப்பாடு இல்லையே! ஒரு வேளை மிக மிக இன்றியமையாத காரணத்திற்காக வேறு யாரேனும் எழுப்பினார்களோ? அவ்வாறு தான் நினைத்துக்கொண்டு அவள் எழுந்தாள். 'பிறர் ஒருவருடைய கைகள் தன்னுடம்பில் பட்ட மாத்திரத்தில் கற்புடைய மாதரசி ஒருத்திக்கு ஒரு வகைப் பயிர்ப்பு ஏற்படும். வேறு தன்னை ஒத்த பெண்கள் தொட்டாற்கூட இவ்வாறு உண்டாகுமா? எனில்,'ஆம்'என்றே கூறல் வேண்டும். ஏன் எனில், பெண்களை அல்லாமல் பிறர் தொடுதல் என்பது இல்லாத ஒன்று. எனவே, கால்களை ஒருத்தி தொட்டாள் என்பதைத்தான் கைகேயி உணர்ந்துகொண்டு எழுந்தாள் என்று கூறுகிறான் கவிஞன். அவ்வாறல்லாமல் தசரதனே ஒரு வேளை தொட்டிருக்கலாமே எனின், அவன் அவள் காலைத் தொட வேண்டிய இன்றியமையாமை இல்லை என்க. நல்ல உறக்கத்திலுங் கூடத் தன்னைத் தொட்டவர் தன் கணவனையல்லாத பிறர் என்பதை அவள் உணர்ந்துகொண்டு எழுந்தாள் என்பதை அறிவுறுத்தவே, கவிஞன் 'தீண்டலும் உணர்ந்த அத்தெய்வக் கற்பினாள்' என்று கூறினான்.
இத்துணைச் சிறப்புடைய ஒர் அரச மாதேவி உறக்கத்தில் எழுப்பப்பட்டால், அவளை எழுப்பியவர் தண்டனை அடையவுங் கூடுமன்றோ? எனவே, தன் உறக்கம் கலைக்கப்பட்டமை காரணமாக அந்நங்கை கூனியின்மேல் சீற்றங் கொண்டிருந்தால் எவ்வளவு நன்மை விளைந்திருக்கும்? அவள் சீற்றத்தை அஞ்சிய கூனி திரும்பியிருப்பின், இராமகாதையே நடைபெறாமற் போயிருக்குமன்றோ? அவ்வாறெல்லாம் நிகழ விதி இடந்தரவில்லை என்று கவிஞன் கூறுகிறான். "மூண்டு எழு பெரும்பழி முடிக்கும் வெவ்வினை, தூண்டிடக் (கூனி) கட்டுரை சொல்லலல் மேயினாள்” (1450) என்று கூனியின் பேச்சுக்கு அவன் அடைமொழி கூறுவது, பின்னர்க் கைகேயிமேல் வரப்போகும் பழியின் கொடுமையைக் குறைப்பதற்கே அன்றோ? 'பெரியதோர் இடர் உன்னை நோக்கி வந்துகொண்டிருக்கவும், நீ அது பற்றிக் கவலை கொள்ளாமல் உறங்குகிறாயே!' என்று கூனி கூறிய சொற்களுக்குக் கைகேயி கூறிய விடை அவள் மனநிலையை நன்கு எடுத்துக் காட்டுகிறது. நன்மைந்தர்ப் பெற்றவள் "வெவ்விடம் அனையவள் விளம்ப, வேற்கனாள் 'தெவ்வடு சிலைக்கை என் சிறுவர் செவ்வியர் : அவ்வவர் துறைதொறும் அறம்தி றம்பலர் ; எவ்விடர் எனக்குவந்து அடுப்பது ஈங்கு? எனா
"பராவரும் புதல்வரைப் பயந்த யாவரும் உராவரும் துயரைவிட்டு உறுதி காண்பரால் விராவரும் புவிக்குஎலாம் வேத மேயன இராமனைப் பயந்தஎற்கு இடர்உண் டோ?' என்றாள்.”
(1451,1452)
பெரியதொரு துன்பம் வருகிறதென்று அச்சுறுத்திய கூனிக்குத் தக்க விடையன்றோ இது! "பகைவரை வெல்லும் வில்லேந்திய என் மக்கள் அவரவர்கள் நெறிதவறாமல் இருக்கும்பொழுது எனக்கு எவ்வாறு இடர் வர முடியும்?” என்கிறாள் அத்தாய் இற்றை நாளில் எத்தினை தாய்மார்கட்கு இவ்வளவு துணிச்சலுடன் தம் பிள்ளைகளைப் பற்றிப் பேச வாய்ப்பு இருக்கிறது? எனவே, தக்க பிள்ளைகளைப் பெற்ற தாய் தந்தையர் கவலையின்றி வாழ்ந்து வீடு பேற்றையும் அடைவர் என்ற பழைய அகநானூற்றுப் பாடல் முற்றிலும் உண்மையாதலை அறிகிறோம்.
“இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை உலகமும் மறுஇன்று எய்துப
செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்ம லோர்.”
(அகம்.66)
பிள்ளைகள் என்று பெயரளவில் இருந்துவிட்டால் மட்டும் இத்தகைய பெருமிதத்தைத் தாய் பெறமுடியாதென்பதையும் கைகேயியின் சொற்கள் குறிக்கின்றன. "அவரவர்கள் கடமைகளில் தவறாதவர்கள்,” என்று குறிப்பதால், இக்கருத்து விளங்கும். பொதுவாக எல்லா மைந்தர்களிடத்தும் அத்தாய் கொண்டிருந்த அன்பையும் நம்பிக்கையையுமே முதற்பாடல் குறிக்கிறது. நால்வரிடத்தும் அன்பு செலுத்தும் நற்பண்பைப் பெற்றவளாயினும், கைகேயி இராமன்பால் தனியன்பு பூண்டு ஒழுகினாள் என்பதும் அறிதற்பாலது. கோசலை வயிற்றிற் பிறந்த இராமன் கைகேயியிடம் வளர்ந்ததும், இவள் வயிற்றிற்பிறந்த பரதன் கோசலையிடம் வளர்ந்ததும் அனைவரும் அறிந்தனவே. இராமன் கைகேயியிடம் வளர்ந்தது மட்டுமன்றி, அவளும் அவனைத் தான் பெற்ற மகனாகவே மதித்தாள்; பேசினாள்; அன்பும் செய்தாள். இக்கருத்தை வலியுறுத்தவே ஆசிரியன் இரண்டாம் பாடலில் “இராமனைப் பயந்த எற்கு இடருண்டோ?” என்று அவளைக் கேட்க வைக்கிறான். இத்துணைப் பெருமையும் சிறப்பும் படைத்த மகனைப் பெற்ற எந்தத் தாய்தான் வருந்த வேண்டும்? தம்மையும் உயர்த்திக்கொண்டு தம்மைப் பெற்றவர்களுக்கும் 'என்ன தவம் செய்தார்களோ இத்தகைய பிள்ளைகளைப் பெறுவதற்கு!' என்ற நற்பெயரையும் வாங்கித்தரும் இச்சீரிய மைந்தர், அவரவர் வினையால் தோன்றுபவர் அல்லரோ? இவர்களை நோக்கித்தானே பொதுமறை,
“மகன்தந்தைக் காற்றும் உதவி 'இவன்தந்தை
என்னோற்றான் கொல்!' என்னும் சொல்.”
(70)
என்று கூறுகிறது? இதுவரை கண்டவற்றிலிருந்து கைகேயியின் உயர்ந்த பண்பாடு எத்தகையது என்பதை உணர்ந்தோம். இனி அவளுடைய மனம் மாறும் வழியைக் காண்போம்.
கூனியின் சினம்
கோசலை பெற்ற இராமனிடம் எல்லையற்ற அன்பு பாராட்டித் தன் புதல்வனாகவே கருதிப் பேசிய கைகேயிக்குக் கூனி கூறும் விடை மிக அழகாய் அமைந்துள்ளது. .
எந்த இராமனைப் 'புவிக்கெலாம் வேதமேயன இராமன்' என்று கைகேயி கூறினாளோ, அந்த இராமனைப் பற்றிக் கூனி யாது கூறுகிறாள் தெரியுமா?
'ஆண்கள் வெட்கித் தலை குனியவும், ஆண்மை என்ற பண்பாடு மாசுறவும் 'தாடகை' என்ற பெயரையுடைய பெண்ணரசியைக் கொன்றவனாகிய இராமன்' என்று அவள் குறிக்கிறாள்.
"ஆடவர் நகையுற ஆண்மை மாசுறத்
தாடகை எனும்பெயர்த் தையலாள்படக்
கோடிய வரிசிலை இராமன்”
(1456)
இதில் வியப்பு என்னையெனில், கூனிக்கு இராமன்மேல் இருந்த விரோதத்தால் அவள் தாடகையைக்கூட நல்ல பெண் என்று கூறத் தொடங்கிவிட்டாள். இதுபற்றிக் கைகேயி கவலைப்படுவ தாகவே தெரியவில்லை. இராமனுக்கு மறுநாள் முடி சூட்டப் போகிறார்கள் என்ற உண்மையைக் கைகேயிக்கு முதல் முதல் அறிவித்தவள் கூனியே. இதைக் கேட்டதும் கேகயன் மடந்தையின் மனம் மகிழ்ச்சியால் எக்களிக்கிறது. உடனே இந்த நல்ல செய்தியைக் கூறியதற்காக மந்தரைக்கு 'நாயகம் அணையதோர்’ நவரத்தின மாலை நல்கினாளாம்.
புது முறை எதிர்ப்பு
அந்த மாலையை எடுத்துத் தரையில் வீசி எறிந்துவிட்டுக் கூனி, பாட்டன் வீட்டுக்குச் சென்றுள்ள பரதனை நினைத்து ஒப்பாரி வைக்கத் தொடங்கிவிட்டாள். இதனாலும் கைகேயியின் மனத்தை மாற்ற முடியாது என்பதைக் கண்ட கூனி, உடனே தனது சூழ்ச்சியை மாற்றிக்கொள்கிறாள். நேரே கைகேயியை நோக்கிப் பேசத் தொடங்கி, அப்பெண்ணரசியின் அகங்காரத்தைக் கிளறிவிடுகிறாள்.
“அரசரில் பிறந்துபின் அரச ரில்வளர்ந்து
அரசரில் புகுந்துபேரரசி யானநீ
கரைசெயற்கு அருந்துயர்க் கடலில் வீழ்கின்றாய்
உரைசெயக் கேட்கிலை! உணர்தி யோ? என்றாள்.”
(1467)
இவ்வாறு கூனி கூறுவதன் நோக்கம் யாது? தான் பிறந்து வளர்ந்த இடம் அரச குடும்பம் என்பதையும் புகுந்த இடம் பேரரசன் வீடு என்பதையும் கைகேயி அறியாதவளா? அப்படி இருக்க, இவற்றைக் கூறுவதால் யாது பயன்? அரசர் வீட்டிலேயே எப்பொழுதும் ஏவல் செய்து பழகிய கூனிக்குச் சில உண்மைகள் தெரியும். அதாவது, ஒரு பெரிய அரசனுடைய வாழ்வில் அவன் கண் எதிரிலேயே அவன் அறியாதபடி பல சூழ்ச்சிகள் நடைபெறுவதுண்டு. இதனை அவன் கவனித்துப் பரிகரிக்காவிடின், பெருந்தீங்காய் முடிவதுண்டு. தான் காண்பன அனைத்தையுமே. நம்பிக்கொண்டு ஓர் அரசன் அமைதியுடன் வாழ்வானேயாகில், அவன் நிலை வருந்தத்தக்கதாய் முடிந்துவிடும். பரம்பரையாக அரச குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்கட்கு இந்த அரண்மனைச் சூழ்ச்சி பற்றி நன்கு தெரியும். எனவே, இத்தகைய சூழ்ச்சி ஒன்று இங்கு நடைபெறுகிறதென்பதைக் கைகேயியின் நினைவுக்குக் கொணர விரும்புகிறாள் கூனி. 'ஏனையோராய் இருந்தால், குறிப்புணரும் ஆற்றல் பெற்றிருக்கவியலாது. ஆனால், இங்ஙணம் அரசவாழ்விலேயே பிறந்து அதிலேயே புகுந்துள்ள உனக்குமா இது விளங்கவில்லை? என்று அவள் அகங்காரத்தைக் குத்திக்காட்டுகிறாள். அம்மட்டோடில்லை. 'பேரரசி ஆன நீ' என்று அவள் கூறும் பொழுது கைகேயி தனது ஆற்றலால் ஏனைய மூத்த அரசிகளிடம் தசரதன் அன்பு செல்லவொட்டாமல் தடுத்துத் தன்பால் அவனை இழுத்துக்கொண்டதையும் குறிப்பிடுகிறாள். 'அத்துணைப் பேராற்றல் பெற்ற நீ, இப்பொழுது உன் நிலைமைக்கு இடையூறு வரவும் சும்மா உறங்கலாமா?' என்றுங் கூறுகிறாள்.
இந்தப் புது முறை எதிர்ப்பாலும் மந்தரை ஏதும் பயனைப் பெற்ற தாகத் தெரியவில்லை. இதனைக் கேட்ட கைகேயியின் சீற்றம் மிகுதியானது தவிர, வேறு பயன் ஒன்றும் இல்லை. மேலும், தனக்கெதிராக ஒரு சூழ்ச்சி நடைபெறுகிறதென்று கூனி கூறியதை நம்ப மறுத்துக் கூனியே சூழ்ச்சி செய்வதாகவும் குறிப்பித்தாள்.
“எனக்கு நல்லையும் அல்லை நீ ; என்மகன் பரதன்
தனக்கு நல்லையும் அல்லை; அத் தருமமே நோக்கின்
உனக்கு நல்லையும் அல்லை ; வந்து ஊழ்வினை தூண்ட
மனக்கு நல்லன சொல்லினை மதியிலா மனத்தோய்!”
(1471)
என்ற கேகயன் மடந்தை கூற்று, இன்னும் அவள் மனம் மாறவில்லை என்பதனையே அறிவிக்கிறது. “இன்னும் என் எதிர் நிற்றியேல், உன் அற்பத் தன்மையுடைய நாவைத் துண்டித்துவிடுவேன்!' (1473) என்றும் அவள் அச்சுறுத்தினாள். -
இங்ஙணம் கூனியை அச்சுறுத்திய கைகேயி வாய் தவறி மற் றொரு குறிப்பையும் கூறிவிட்டாள். ஒரு மனிதன் அடைய வேண்டு வது புகழ். முறை தவறி நடப்பவர்க்குப் புகழ் கிட்டாது. மூத்தவன் இருக்க இளையவன் பட்டம் பெறுதல் முறை கேடானது. எனவே, அவள்,
'பிறந்தி றந்துபோய்ப் பெறுவதும் இழப்பதும் புகழேல்,
நிறம்தி றம்பினும் நியாயமே திறம்பினும் நெறியின்
திறம்தி றம்பினும் செய்தவம் திறம்பினும் செயிர்தீர் மறம்திறம்பினும் வரன்முன்றை திறம்புதல் வழக்கோ?”
(1472)
(நிறம்-குணம் : மறம்-வீரம்)
எனக் கூறினள்.
அடிப்படை ஆடிவிட்டது
அரசரிற் பிறந்து வளர்ந்து அரசியான கைகேயி இதுவரை மூத்தவனுக்கே அரச உரிமை உண்டு என்பதை நம்பி வந்தாள். ஆனால், இவ்வெண்ணத்தை அடிப்படையில் தகர்த்துவிடுகின்றாள் கூனி, “அரச உரிமை மூத்தவனுக்கே உரியதென்றால், தசரதனைக் காட்டிலும் இராமன் இளையவன்தானே? அப்படி இருக்கத் தசரதன் உயிருடன் இருக்கும்பொழுது இராமனுக்கு ஏன் முடி சூட்ட வேண்டும்? அங்ஙணம் முடி சூட்ட அரசன்'முடிவு செய்ததே 'மூத்தவற்கே அரசு' என்ற சட்டத்தைப் புறக்கணித்துத்தானே? ஆகலின், ஏன் பரதனுக்கு அப்பட்டம் வரக்கூடாது?” என்பதே அவள் வாதம் தசரதனை நோக்க இராமனும் பரதனும் இளையவர்கள்தாம். இரண்டு இளையவர்களுள் இராமனுக்கு உரிய ஒன்று ஏன் பரதனுக்கு உரிமையாகக் கூடாது?
“மூத்த வற்குஉரித்து அரசெனின் முறைமையின் உலகம்
காத்த மன்னனில் இளையவன்அன் றோகடல்
வண்ணன்?” (1474)
இவ்வாதம் ஒரளவு கைகேயியை மருட்டிவிட்டது உண்மைதான். இதனால் கைகேயியின் நம்பிக்கை தளர்ந்துவிட்டதென்பதைக் கண்ட கூனி, தன் கட்சி வெற்றி பெறும் என்ற உறுதியுடன் மேலும் கூறத் தொடங்கிவிட்டாள். ஆனால், இளையவனுக்கும் முடி சூட உரிமையுண்டு என்ற அதையே திருப்பிக் கூறுவதால் பயனொன்றும் இல்லை. எனவே, இரண்டு இளையவர்களுள் இராமன் பட்டம் ஏற்பதால் ஏற்படும் கேடுகளைப்பற்றியே பேசுகிறாள். ஒரேயடியாக இராமனைக் குறைகூற இன்னம் கூனிக்கு மனத் திடம் வரவில்லை. தன் தலைவியின் மனம் எவ்வளவு தூரம் மாறிற்று என்பதை அறிய முடியவில்லையாகலின், மெள்ளப் பொது நீதி ஒன்றைக் கூறுகிறாள்.
"அறன்நி ரம்பிய அருளுடை அருந்தவர்க் கேனும்
பெறல்அ ருந்திருப் பெற்றபின் சிந்தனை பிறிதாம் ; அறம்நினைந்துமை வலிகிலர் ஆயினும், மனத்தால்
இறல்உ றும்படி இயற்றுவர் இடையறா இன்னல்.” (1476)
“எனைவகையால் தேறியக் கண்ணும் வினைவகையால்
வேறாகும் மாந்தர் பலர்."
(514)
என்ற அரிய திருக்குறளின் கருத்தே முதலிரண்டு அடிகளிற் கூறப்படுகின்றது. உமை வலிகிலர்...இயற்றுவர்....' என்று கூனி பன்மையில் குறிப்பிடுவது நோக்கற்குரியது. இப்பாடலிற் கூறப் பெற்றவர் யார்? யார் பெறுதற்கரிய செல்வத்தைப் பெற்ற பின் மனம் மாறுவர்? யார் அறத்தைக் கருதிக் கைகேயிக்குத் துன்பஞ் செய்யா விட்டாலும், சிறுசிறு தொல்லைகளாகத் தந்து உயிரை வதைப்பவர்? இந்த வினாக்களுக்கு விடை பாடலில் இல்லை. இதுவரை இராமனைப் பற்றிக் கூறிக்கொண்டு வந்த கூனி, இப்பொழுது இன்னுஞ் சிலைரையும் குறிக்கிறாள் என்பதைமட்டும் அறிய முடிகிறது. இது வரை ஒருமையில் பேசினவள் இப்பொழுது 'இயற்றுவர்' என்று பன்மையில் குறிப்பது ஒருவருக்கு மேற்பட்டவர்களை என்பது நன்கு விளங்குகிறது. புதிய கோணம்
கூனி பன்மையில் குறிப்பிட்டது யார் யாரை என்று கைகேயி எண்ணத் தொடங்கிவிட்டாள். இப்புதிய புதிருக்கு விடை கூறுபவள் போலக் கூனி கோசலையைப் பற்றிக் கூற முற்படுகிறாள். மீட்டும் மீட்டும் இராமன் பெயரைக் கூறிக்கொண்டு அவனால் இடர் விளையும் என்று கூனி கூற விரும்பவில்லை. அதற்கொரு தக்க காரணமும் உண்டு எவ்வளவு தூரம் கைகேயி மனம் மாறினாள் என்பதைச் செவ்வையாக அறிந்துகொள்ளு முன்னர்க் கூனி இதனைச் செய்ய விரும்பவில்லை. பிறந்த நாள்தொட்டு இராமன் சிற்றன்னையால் வளர்க்கப்பெற்றவன். அவள் அவன்பாற் கொண்ட தாயன்பு சாதாரணமான தன்று என்பதற்கு “இராமனைப் பயந்த எனக்கு இடருண்டோ?” என்று அவள் கூறியதே சான்று. தசரதனும் இதனை நன்கு அறிந்தவனாகலின், "வள்ளல் இராமன் உன் மைந்தன் ஆணை” (1450) என்று கூறுகிறான். எனவே, அந்தத் தாயன்பை அதிகம் கிளறிவிட்டு, அதனால் தான் வெற்றி பெறமுடியும் என்று நினைக்கவில்லை கூனி ; அது மிகுதியும் நினைவுறுத்தப்பட்டால் அதனால் என்ன தீங்கு விளையுமோ என்றும் அஞ்சினாள். ஆகலின், இராமனை விட்டுவிட்டுச் சுற்றி உள்ளவர்களால் விளையும் தீங்கு பற்றியே பேசுகிறாள் உள்ளமும் கோடிய அக்கொடியாள்.
கூனியின் பிரமாஸ்திரம்
இதனை அறியாத கேகயன் மடந்தை, மெள்ள மெள்ளக் கூனி வீசிய வலையில் வலுவாக அகப்பட்டுக்கொள்கிறாள். இறுதியாக அவள் தாய் வீட்டுக்கும் தீங்கு நேரிடும் என்று கூறினாள் கூனி. இதுவே அவள் இறுதியாக வைத்திருந்த 'பிரமாஸ்திரம்'. எந்தப் பெண்ணும் தப்ப முடியாத இந்த அம்புக்குப் பால் போன்ற பளிங்கு மனம் படைத்த கைகேயி இரையானதில் வியப்பில்லை. தன் தந்தையாகிய கேகயனுக்குத் தீங்கு நேரும் என்றதைக் கேட்டவுடன் கைகேயி மனம் முற்றிலும் மாறிவிட்டது. இந்த நிலையில் செய்யப்பட வேண்டுவது ஒரு காரியந்தான். தசரதனாகிய கணவன்மேல் அவள் கொண்டிருக்கும் எல்லையற்ற அன்பையும் நம்பிக்கையையும் தகர்க்க வேண்டுவது ஒன்றுதான் எஞ்சியுளது. அதுவும் நேரடியாகச் செய்யப்படும் செயலன்று.கணவன்மாட்டுக் கழிபெருங் காதல் கொண்ட அக்கற்புக்கரசியின் எதிரே அவள் கணவனைக் குறை கூறுவது இடையூறாகவும் முடியலாமன்றோ? ஆகலின், கூனி மறைமுகமாக அவனைத் தாக்குகிறாள். தசரதன் அன்பு பொய்யானதென்று காட்டிவிட்டால், இது எளிதில் முடிந்துவிடும், ஆனால், அவ்வளவு எளிதில் அவன் அன்பைப்பற்றிக் குறை கூறவும் இயலாது. ஏனைய மனைவியர் அனைவரையும் மறந்துவிட்டு இரவு பகல் எந்நேரத்திலும் கைகேயியின் அரண்மனையிலேயே இருக்கும் அவன் அன்பை எவ்வாறு மறுப்பது? புதியதொரு வழியை மேற்கொள்கிறாள் கூனி.
கணவன் அன்பா?
தசரதனுக்கு மைந்தர் அனைவரிடமும் அன்பு உண்டென்றும் இராமன்மேல் அதிக அன்பு செலுத்துகிறான் என்றும் நம்பியிருக் கிறாள் கைகேயி. ஆனால், தசரதன் பரதனை வெறுக்கிறான் என்று எடுத்துக்காட்டினால், அவள் தாயுள்ளம் திடுக்கிடும். எவ்வளவு தான் அவளும் இராமனிடம் அதிக அன்பு பாராட்டிச் சீராட்டினாலும், பரதனைப் பத்து மாதம் சுமந்து பெற்றவள் என்பதை மறந்துவிடக் கூடாது. மேலும், கோசலையிடம் பரதன் வளர்ந்துவருவதால் தசரதனும் கோசலையிடம் காட்டும் அன்பின் அளவு பரதனிடமும் காட்டுவான் என்று கருதினாள். இந்த நிலை மாறித் தசரதன் பரதனை ஒதுக்க முற்படுகிறான் என்று தெரிந்தால், கைகேயி என்ன நினைப்பாளோ? இம்முறையைக் கையாண்டு பார்த்துவிட உறுதி கொண்ட கூனி, குறிப்பாக இதைக் கூறுகிறாள். இந்நிலையில் கம்பனுக்கு ஒர் இடையூறு தோன்றுகிறது. வால்மீகி காட்டியபடி தசரதன் இழைத்த தீமையை முற்றுங் காட்ட விரும்பவில்லை கம்பநாடன். எனவே, அவன் குறிப்பிட விரும்பாத நிகழ்ச்சியைச் சற்று அறிய வேண்டும். நீண்ட நாள் பிள்ளைப் பேறில்லாத தசரதன் கேகயனிடம் கைகேயியைத் தனக்கு மணமுடிக்குமாறு வேண்டி னான். ஆனால், முன்னரே பல மனைவியர் உளராகலின், தன் மகள் வயிற்றில் பிறக்கும் குழந்தைக்குப் பட்டம் கிடைக்காதென்று எண்ணிய கேகயன், மகளைத் தர மறுத்துவிட்டான். எவ்வாறாயினும் கைகேயியை மணக்க விரும்பிய தசரதன், பின் விளைவை அறியாமல், கைகேயியின் வயிற்றில் பிறக்கும் மகனுக்குப் பட்டம் தருவதாக வாக்களித்துவிட்டு அவளை மணந்துகொண்டான். இராமன் முதற்பிள்ள்ையாகப் பிறந்ததிலிருந்தே தசரதனுக்கு இவ்வாக்குறுதி மனவருத்தத்தைத் தந்துவந்தது. என்றாலும், பட்டாபிடேகச் சமயத்தில் பரதன் அங்கு இல்லாமற் செய்துவிட்டால் பாதிக் கவலை குறையும் என்று நினைந்து, முடி சூட்டு விழாவுக்குச் சில காலம் முன்னர் ஒரு காரியம் செய்தான். பிறந்ததிலிருந்து பாட்டன் வீடு சென்றறியாத பரதனைக் கேகய நாட்டிற்கு அனுப்பி விட்டான் தசரதன். தாய்ப் பாட்டனாரைப் பார்க்கப் பரதனை அனுப்பியதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால், அவனை அனுப்பியவுடன் முடிசூட்டு விழாப் பற்றிய மந்திர ஆலோசனை செய்து மறு நாளே நாளும் குறித்தது கூனிக்குப் பழைய ஐயத்தைக் கிளப்பி விட்டது. மேலும், அவள் கைகேயியின் நாட்டிலிருந்து அவளுடன் சீதனமாக வந்தவள் ஆதலின், இந்தப் பழைய வரலாற்றை அறிந்திருந்தாள். அவள் அறிந்திருந்து இதனைத் தக்க சமயத்தில் பயன்படுத்த விரும்பினாள். என்றாலும், இதனை வெட்ட வெளிச்சமாகக் கூறினால் கைகேயி நம்புவாளோ என்ற ஐயம் வேறு இருந்தது அவளுக்கு ஏன் எனில், கைகேயி அறியாத ஒரு நிகழ்ச்சியன்று இது. அவள் அறிந்திருந்தும், ஏன் இதுபற்றி ஒன்றும் செய்யவில்லை என்ற ஐயம்வேறு கூனிக்கு உண்டு. ஆதலின், நேரடியாக இதனைக் கூறாமல் மறைமுகமாகவும் குறிப்பாகவும் கூறுகிறாள். பெண்களுக்கே உரிய குறிப்பு மொழியால் அவள் இதனைக் கூறுவது அறிந்து ஆராய்தற்குரியது. "அரசனுடைய ஆணையாலே, தேக்கு மரங்கள் நிறைந்ததும், கல் நிறைந்ததும், நீண்ட தூரம் உடையதுமான கேகய நாட்டுக்குப் பரதனைக் கொண்டு சென்றுவிட்டதன் கருத்து எனக்கு இப்பொழுதுதான் வெட்டவெளிச்சமாய்த் தெரிகிறது”என்ற பொருள்பட அவள் கூறுகிறாள்.
“பாக்கியம் புரிந்திலன் பரதன் தன்னைப்பண்டு
ஆக்கிய பொலங்கழல் அரசன் ஆணையால்
தேக்குஉயர் கல்அதர் கடிது சேண்இடைப்
போக்கிய பொருள்எனக்கு இன்று போந்ததால்.”
(1465)
அதாவது, "பாட்டனைப் பார்த்துவிட்டு வரட்டும் என்ற நல்ல எண்ணத்தால்தான் தசரதர் அனுப்பினார் என்று அன்று கருதினேன். ஆனால், உண்மை வேறு விதமாகவன்றோ இருக்கின்றது அவனை அப்புறப்படுத்திவிட்டுச் சூழ்ச்சி செய்வதற்கன்றோ தசரதர் அவனை அனுப்பியுள்ளார். இது எனக்குத் தெரியவில்லை. ஆனால், இன்று தெரியத் தொடங்கிவிட்டது” என்பதே இதன் பொருள்.
இமயம் சாய்ந்தது
வரிசையாகவும் அடுக்கியும் கூறப்பெற்ற இவ்வாதங்களின் முன்னர்க் கைகேயி நிலைகுலைந்துவிட்டாள். அவளுடையதாய்மை, பிறந்த வீட்டுப் பற்று எதிர்காலத்தைப் பற்றிய ஏக்கம், சகக்களத்தியின் செல்வாக்கில் ஏற்பட்ட காழ்ப்பு, கணவன் அன்பில் கொண்ட ஐயம் என்ற இத்தனையுஞ் சேர்ந்து அவள் தூய சிந்தையையும் திரித்து விட்டன.
சாயக் காரணம்
இத்துணைக் காரணங்களும் கூடிய வழியே மணந்திரிந்தாள் எனினும், ஆழ்ந்து நோக்கினால், ஓர் உண்மை விளங்காமற் போகாது. இத்துணைக் காரணங்களிலும் ஒன்றையாவது அவள் தானே நினைந்து பார்க்கவில்லை. எல்லாவற்றையும் ஒன்றுகூட விடாமல் எடுத்துக் காட்டியவள் கூனியல்லவா? எடுத்துக்காட்டியதோடல் லாமல் அவற்றின் உட்பொருளையும் கருத்தையும் விளக்கியவள் அவள் அல்லளோ? அவள் காட்டிய இக்காரணங்கள் உண்மை யானவைகளா என்று நினைந்துபார்க்கவும், ஆராயவும் அந்த அரசிக்குப் பொழுது இல்லையே அப்படியானால், அவள் கூறிய அனைத்தையும் தசரதன் தேவி அப்படியே நம்பிவிட்டாள் என்று தானே பொருளாகிறது? நம்பினதோடு மட்டுமன்றி, அந்நம்பிக்கையின்மேல் செயலாற்றவும் தொடங்கிவிட்டாளே ஆய்ந்து ஓய்ந்து பாராத இச்செயல்களால் யாது பயன் விளையும் என்று நினையாத இவள், அரசியாய் இருக்கத் தகுதியுடையவளா? கேவலம் ஒரு வேலைக்காரியாகிய கூனியின் சொற்களில் வைத்த நம்பிக்கையால் இவ்வளவு கேட்டையும் விளைக்கப்போகும் இவளை எவ்வாறு அரசியென்று கூறுவது? பேரறிவுடையவனாகிய தசரதன் கேவலம் வேலைக்காரிக்குச் செவிசாய்க்கும் ஒருத்தியை நம்பியா அரசியாக்கினான்? “அரசரில் பிறந்து, அரசரில் வளர்ந்து, அரசரில் புகுந்து பேரரசி ஆன”வள் செய்கை அல்லவே இது
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு” (குறள், 433)
என்றும்,
“எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் -
மெய்ப்பொருள் காண்பது அறிவு” (குறள், 365)
என்றும் சாதாரண மக்களுக்குக்கூட அறநூல் சட்டம் விதிக்கிறதே! அனைவருக்கும் உரிய இச்சட்டத்தை, நாட்டை ஆளும் மன்னனும், அம்மன்னன் ஏற்றுக்கொண்டமனைவியும் மறந்துவிடுவார்களாயின், இவ்வுலகம் என்ன ஆகும்? இங்ஙணம் மறந்த அவர்கள் அரசன், அரசி என்று எவ்வாறு மதிக்கப்படுவர்?
கைகேயிசெய்த செயலைநோக்கினால், அவள் இச்சட்டத்தை மறந்துவிட்டதாகவே தோன்றுகிறது. அவ்வாறாயின், இக்குற்றம் அவளை மட்டும சாராமல், அவளைப் பெற்றுவளர்த்த கேகயனையும், அவளை மணந்துகொண்ட தசரதனையும் அல்லவோ சாரும்! ஆனால், இவ்வாறு மூன்று பேரையும் தவறு செய்தவர்களாகக் காட்டக் கம்பநாடன் விரும்பவில்லை. எனவே, கைகேயியின் மனம் மாறுபட்டமைக்கு வேறு காரணங்களும் உண்டு என்று கூறுகிறான். “கேவலம் கூனியின் மொழிகளால் கைகேயி மனம் மாறினாள் என்று கருதிவிடவேண்டா. அவள் மாறுவதற்குப்பின் வரும் காரணங்களும் துணை புரிந்தன. தேவர்கள் சூழ்ச்சி, அவர்கள் பெற்றுள்ள வரங்கள், அந்தணர்கள் இயற்றிய அருந்தவம், அரக்கர் பாவம், அல்லாதவர்கள் இயற்றிய அறம் இவை யாவும் கூடியே இவ்வாறு செய்தன." எனக் கூறுகிறான்.
இங்குக் கூறப்பெற்ற காரணங்களால் கைகேயி மனம் மாறினாள் என்ற வாதத்தை விடுத்து அவள் மாற்றத்திற்கு மற்றோர் காரணத்தை ஆய்ந்து எழுதப்பட்டதே 'நாடக மயில்' என்ற கட்டுரை.
“தீய மந்தரை இவ்வுரை செப்பலும் தேவி
தூய சிந்தையும் திரிந்தது சூழ்ச்சியின் இமையோர்
மாயை யும்அவர் பெற்றுள வரம்உண்மை யாலும்
ஆய அந்தணர் இயற்றிய அருந்தவத் தாலும்
"அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும்
துரக்க நல்அறம் துறந்தனள் தூமொழி மடமான்
இரக்கம் இன்மையன் றோஇன்றுஇவ் வுலகங்கள் இராமன்
பரக்கும் தொல்புகழ் அமுதினைப் பருகுகின்றதுவே"
(1483, 1484)
பரிவுடன் காண்க
இத்துணைப்பேர்களும் கூடி இயற்றிய தவமும் அறமும் வாளா இருந்துவிடுமா? அவை அனைத்தும் பயன் தர வேண்டுமாயின், இராமன் காட்டுக்குப் போக வேண்டுமன்றோ? அவன் காடு செல்ல வேண்டுமாயின், யாராவது ஒருவர் அதற்குரிய பழியையும் சுமந்து தானே ஆகவேண்டும்? எனவே, கைகேயியின் மனம் திரியக் காரண மும் கூறி, அதன் அடிப்படையையும் கவிஞன் கூறிவிட்டான். இங்குக் கூறப்பெற்றவை அனைத்தும் இரு பிரிவினுள் அடங்கும். ஒன்று தவமும் அறமும்; ஏனையது அரக்கருடைய பாவம். அறமும் பாவமும் சேர்வதில்லை. ஆனால், இப்பொழுது இவை இரண்டும் சேர்ந்தே ஒரு தொழிலைச் செய்துவிட்டன என்கிறான் கவிஞன். இந்நிலையில் புறப்பாடல் ஒன்று நினைவிற்கு வருகிறது: குமண வள்ளலைப்பாடிய பெருஞ்சித்திரனார் என்ற புலவர்,தாம் குமணனைத் தேடிவந்தமைக்குக் காரணங் கூறுகிறார்: "என்னுடைய வறுமை பின்னே இருந்து தள்ளியது; ஆனால், அதே சமயத்தில் உன் புகழ் முன்னே இருந்து இழுத்தது. ஆதலின், இவண் வந்தேன்.” என்ற கருத்துப்பட “இன்மை துரப்ப இசைதர வந்து நின்"...(புறம் 161) என்று பாடிச் செல்கிறார். பின்னே இருந்து ஒருவர் தள்ளினால் முன்னே எங்காவது ஒரிடத்தில் போய் விழ நேரிடும். ஆனால், அதே சமயத்தில் முன்னிருக்கும் ஒருவர் இழுத்தால் உறுதியாக ஒரிடம் செல்ல முடியுமன்றோ? அதேபோலத் தேவர் சூழ்ச்சியாலும், அந்தணர் தவத்தாலும், அல்லவர் இயற்றிய அறத்தாலும் தள்ளப்பட்ட இராமன், எங்கோ சென்று பயனற்றுப்போய்விடாமல் இருப்பான் வேண்டி, அரக்கர்கள் பாவம் முன்னே இருந்து இழுத்தது என்றும் கவிஞன் கூறுவது எத்தனை சுவை பயப்பதாய் உளது இவ்வாறு முன்னும் பின்னும் உந்தப் பெற்றதால் இராமன் காடு செல்வதைக் கைகேயியின் சொற்களால் அவன் வனம் புகுந்தான்' என்று கூறுவது எவ்வளவு அறியாமை என்று கூறுவான் போலக் கூறிக் கைகேயியின் குறையை ஒரளவு குறைக்கிறான் கவிச் சக்கரவர்த்தியாகிய கம்பநாடன்.
அயோத்தி அடைந்த தவ்வை
இனி இக்கவிஞனே அத்தேவியை இழித்துப் பேசுவதையும் அதற்குரிய காரணங்களையும் காண்போம். 'தேவி' என்றும், தூய சிந்தை உடையாள்' என்றம் எந்தக் கைகேயியைக் கவிஞன் பாராட்டினானோ, அந்தக் கைகேயியையே இப்பொழுது ஏசத் தொடங்குகிறான். . மந்தரை சூழ்ச்சியால் மனந்திரிந்த அம்மங்கை நல்லாள், அரசன் வரவை எதிர்பார்த்துஅந்தப்புரத்தில் இருக்கிறாள். எவ்வாறு எதிர்பார்க்கிறாள் என்று நினைக்கிறீர்கள்? காதல் மனைவி கணவன் வரவைக் கருதிக் காத்திருப்பது போல இருப்பாள் என்றுதானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. சூழ்ச்சி என்பதை அறியாத வெள்ளை உள்ளம் படைத்த அப்பெண்ணரசி, இப்பொழுது பெரிய சூழ்ச்சிக்கு அடிகோலிவிட்டாள்.
கூனி சென்றுவிட்ட பின்னர்க் கைகேயி அருமையான மலர்ப் படுக்கையினின்றும் இறங்கிவிட்டாள். மேகம் போலத்திரனட் கரிய கூந்தலிற் சுற்றிய பூக்களைப் பிய்த்து ஏறிந்தாள்; மேகலையை அறுத்து வீசினாள் கைகளில் அழகு பெற்று விளங்கிய வளையல்களை உடைத்து எறிந்தாள். இவை அனைத்தையும் விடக் கொடுமையான ஒரு செயலையும் செய்யத் துணிந்துவிட்டாள். கணவனுடன் வாழும் அவள் நெற்றியில் மங்கலக் குறியாக வைக்கப்பட்டிருந்த அழகிய பொட்டையும் துடைத்துவிட்டாள். எந்த நேரத்தில் தன் திலகத்தை அழித்தாளோ, தெரியவில்லை! அடுத்து அதனை வைக்கக்கூடிய வாய்ப்பையே இழந்துவிட்டாள்! சீரிய கலன்கள் அனைத்தையும் சிந்திய அவள், புழுதியே பாயலாகக் கூந்தலைப் பரப்பிக் கொண்டு புரளத் தொடங்கிவிட்டாள். அவள் கிடக்கும் இந்நிலை மையைக் கவிஞன் இதோ நமக்குப் படம் எழுதிக் காட்டுகிறான்.
மான் ஒன்று கீழே விழுந்து கிடந்ததுபோலவும், கலாபம் விரித்து ஆடின மயில் ஒன்று களைத்துத் தோகை விரித்தபடியே படுத்துவிட்டது போலவும் கைகேயி கிடந்தாள்,' என்று கூறத் தொடங்கிவிட்டான். ஆனால், அவள் புறத் தோற்றத்தில் ஈடுபட்டு இங்ங்ணம் உவமைகளை அடுக்கிவிட்ட கவிஞனுக்கு, 'ஏன் இவ்வாறு இவள் வீழ்ந்து புரள்கிறாள்?' என்ற கேள்வி உடனே எழுகிறது. 'இராமனைக் காட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற கொடிய நினைவால் அல்லவா இவ்வாறு படுத்திருக்கிறாள்?' என்று அந்த வினாவிற்கு உடனே விடையும் கிடைத்துவிடுகின்றது. இந்த விடை கிடைத்தவுடன் கவிஞன் மதிப்பில் கைகேயி வீழ்ந்துவிடுகிறாள். அவள் நல்லவள் அல்லள் என்ற எண்ணம் தோன்றிவிடுகிறது. மான் என்றும் மயில் என்றும் அவளைப் புகழ்ந்த கவிஞன், அதே பாடலில் 'மூதேவி என்றும் ஏசத் தொடங்கிவிடுகின்றான். இது சற்று வியப்பாகவே இருக்கிறது. ஒரே மூச்சில் மான், மயில் என்று தொடங்கி மூதேவி என்று முடிப்பது முறையா? இவ்வாறு கவிஞன் கூற வேறு காரணம் கூறவியலாது. அவள் புறத்தோற்றத்தில் ஈடுபட்டு நின்ற கவிஞன் அடுத்து அவள் மனத்தில் கை வைத்தவுடன் தன் ஈடுபாட்டை இழந்துவிடுகிறான்.
அம்மட்டோடு நிற்கவில்லை. அவளை மூத்தவள்’ என்று பழிப்பதற்குக் காரணமும் காட்டுகிறான் அதே பாடலில். இலக்குமியாகிய சீதை வனம் புகுந்து விடப் போகிறாள் ஆகலின், அவள் இருந்த அயோத்தி வெறுமையாய் இருக்கக் கூடாது என்று நினைத்து இங்கு வந்து சேர்ந்த மூதேவி போலக் கிடந்தாள் என்றும் கூறுகிறான்.
“நவ்வி வீழ்ந்தென நாடக மயில்துயின்று என்னக்
கவ்வை கூர்தரச் சனகியாம் கடிகமழ் கமலத்து
அவ்வை நீங்குமென்று அயோத்திவந்து அடைந்தஅம் மடந்தை
தவ்வையாம்எனக் கிடந்தனள் கேகயன் தனையை” (1494)
கைகேயி இவ்வாறு படுத்திருக்கும் நிலையில் உள் நுழைந்த தசரதன், யானை ஒன்று மானைத் துதிக்கையால் அள்ளி எடுப்பது போல எடுக்கவும், அவள் அவன் கையினின்றும் வழுவி வீழ்ந்தாள். அவன் மிகுதியும் வேண்டிக்கொண்ட பின்னர் அவன் தருவதாக முன் னர்க் கூறிய ஒன்றை இப்பொழுது தர வேண்டுமென்று கேட்டாள். சாதாரணமாகக் கேட்கக்கூடிய ஒன்றைக் கேட்பதற்கு இத்துணை முகவுரை ஏன் என்பதை மன்னன் ஆராய்ந்திருந்தால், ஒருவேளை சற்றுத் தாமதித்திருப்பான். ஆனால், அவன் மனம் இன்று மகிழ்ச்சிக் கடலில் திளைத்து நிற்கிறது. நீண்ட நாளாக அவன் கொண்டிருந்த கருத்தை இன்று முடித்துவிட்டான். எவ்வித இடையூறும் இன்றி இவ்வளவு எளிதாக முடிசூட்டு விழா முடிவாகிவிடும் என்று அவன் கருதவில்லை.
தந்திடுக மன்னரே!
எனவே, பொழுது விடிந்தவுடன் தன் எண்ணம் நிறைவேறி விடும் என்று நம்பியிருக்கும் அவன் மனத்தில் மகிழ்ச்சியைத் தவிர கவலைக்கோ ஐயத்திற்கோ இடம் ஏது? தன்னிடம் என்றுமே அன்பாக நடந்துகொள்ளும் காதலி, இன்று தான் மிக்க மகிழ்ச்சியோடு இருக்கும் வேளையில் கவலையுடன் இருப்பது அவன் மனத்தைப் பிளந்துவிட்டது. என்ன காரணமோ என்று வருந்திய மன்னனுக்கு அவள் வாய் திறந்து முன்னர்த் தருவதாகக் கூறிய இரண்டை இப் பொழுது தருக என்று கேட்டவுடன் பெரிய பாரம் நீங்கினதுபோல ஆகிவிட்டது. பெரியதொரு வெடிச் சிரிப்புடன், “நீ எது வேண்டினும் தருகிறேன்! உன் மைந்தன் இராமன்மேல் ஆணை” என்றான்.
"கள்,அவிழ் பேதை கருத்துஉண ராத மன்னன்
வெள்ள நெடுஞ்சுடர் மின்னின் மின்ன நக்கான்;
'உள்ளம் உவந்துஉள செய்வேன் ஒன்றும் லோபேன்;
வள்ளல் இராமன்உன் மைந்தன் ஆணை, என்றான்.” (1501)
இவ்வாறு மன்னன் கூறியவுடன் கைகேயி மீண்டும் பெரிய தொரு முகவுரையுடனேயே பேசத் தொடங்குகிறாள். "என் கவலையை நீர் போக்குவதானால், முன்னர்த் தேவர்கள் சான்றாக இரண்டு வரங்கள் தருவதாகக் கூறினதுண்டல்லவா? அவற்றை இப்பொழுது தந்திடுக மன்னரே'
"சான்றுஇமையோர்குலம் ஆகு மன்ன நீஅன்று
ஏன்ற வரங்கள் இரண்டும் ஈதி என்றாள்.” (1502)
கணவனிடம் மனைவிகேட்கும் நிலையில் அவள் பேச விரும்ப வில்லை என்பதை இறுதியில் உள்ள மன்ன என்ற சொல் அறிவிக் கிறது. இதற்கு ஒரு காரணமும் உண்டு. மனைவி கணவனிடம் கேட்கும் அனைத்தையும் கணவன் தந்து தீரவேண்டும் என்ற இன்றி யமையாமை இல்லை.
முன்னரே தருவதாக உறுதி கூறப்பெற்ற பொருளாயினும், கணவன் மனைவி என்ற உறவுமுறை பற்றிக் கணவன் இப்பொழுது அதனைத் தர மறுத்துவிடினுந் தவறு இல்லை. ஆனால், மன்னன் நிலை வேறு. சொன்ன சொல்லை எவ்வாறாயினும் காக்க வேண்டிய கடப்பாடு அரசனுக்கே உண்டு. எனவே, கைகேயி தசரதனுக்கு இக் கடமையை நினைவூட்ட வேண்டிப்போலும் மன்ன என்று விளித் தாள் இதையும் அம்மன்னன் அறிந்து கொண்டதாகத் தெரியவில்லை. “வரங்கொள இத்துணை மம்மர் அல்லல் எய்தி இரங்கிட வேண்டுவதில்லை,”(1502) என்று அவன் கூறும் அடுத்த வார்த்தைகள் அவன் பைத்தியக்காரத் தனத்தை நன்கு விளக்குகின்றன.
சீதை கேள்வன்
இவ்வளவு நம்பிக்கையையும் அன்பையும் தன் மாட்டுக் கொண்டுள்ள அரசனுக்குப் பெரியதொரு வருத்தத்தைத் தரப் போகிறோமே என்ற கவலை கைகேயிக்கு இருந்ததாகவே தெரிய வில்லை. கவலைப்படுபவளாக இருப்பின், அவள் மெள்ளத் தயங்கித் தயங்கியே தன் கருத்தை வெளியிட்டிருப்பாள். ஆனால், அவ்வா றல்லாமல் மிக விரைவில் தன் கருத்தை ஒரே வாக்கியத்தில் முடித்து விடுகிறாள்.
'ஏய வரங்கள் இரண்டில் ஒன்றி னால்என்
சேய்உலகு ஆள்வது சீதை கேள்வன் ஒன்றின்
போய்வனம் ஆள்வது எனப்பு கன்று நின்றாள்
தீயவை யாவையினும்சிறந்த தியாள்.” (1504)
என்ற இப்பாடலில் முதல் மூன்று அடிகளே அவளுடைய சொற்கள். 'ஒரு வரத்தால் என் பிள்ளை உலகாளவும், மற்றொன்றால் சீதை கணவன் வனம் ஆளவும் வேண்டும், என்றாள். இராமனைப் பொறுத்தவரை அவள் மனம் எவ்வளவு மாறிவிட்டது என்பதற்கு இதுவும் ஒர் எடுத்துக்காட்டாகும்.
"விராவரும்புவிக்கெலாம் வேதமேயன இராமன்” என்று கூறிய அதே கைகேயியா இவள்? ஆம் அவ்விதஞ் சொல்லிய சில நாழிகைக்குள் அவன் பெயரைக் கூடக் கூற விருப்பம் இல்லாமல் 'சீதை கேள்வன்' என்று கூறும் மனநிலை ஏன் வந்தது? இவ்வாறு இவள் வெறுப்படைய இராமன் என்ன தீங்கிழைத்தான் இவளுக்கு?
அவனமாட்டுப் பரிவு காட்டும் முதல் வாக்கியம் கூறிய பிறகு இவள் இன்னும் இராமனைச் சந்திக்கக் கூட இல்லையே! ஏன் இவ்வளவு காழ்ப்பு அவன் மேல்? கூனிக்காவது இராமன்மேல் ஒரு பழைய பகைமை உண்டு. அவன் இளையனாய் இருக்கையில், விளையாட்டுத் தன்மையால் அவள் கூன் முதுகின் மேல் வில் உண்டையால் அடித்தானாம். யானையை ஒத்த கூனி இச்செயலைப் பிள்ளை விளையாட்டு என்று கருதாமல், அவன்மேல் தீராப்பகை கொண்டு விட்டாள். எனவே, வாய்ப்பு நேர்ந்த பொழுது தன் பகை முடித்துக் கொள்ள வேண்டிக் கைகேயியை ஏவி விட்டுவிட்டாள். ஆனால், இராமன் மேல் பகை கொள்ளக் கைகேயிக்கு என்ன காரணம் வந்தது? கேவலம் வேலைக்காரி கூறியதை நம்பிக்கொண்டு அவன் மேல் வைரம் கொள்வதா? அப்படித்தான் அவ்வேலைக்காரி இராமன் கெட்டவன் என்பதற்குரிய காரணம் ஏதாவது காட்டினாளா? அவனுக்குப் பட்டம் கிடைத்தால் அதனால் எற்படும் விளைவுபற்றிக் கூறிப் பரதனுக்கு அப்பட்டத்தைப் பெறுமாறு அறிவுறுத்தினாள். இதைக் கூறிவிட்டு அரசனிடம் இதற்கு உறுதி பெறும் முறையை எடுத்துக் காட்டுகையில் போகிற போக்கில் இராமனைக் காட்டுக்கு அனுப்பும் வரம் ஒன்றையும் பெறுமாறு கூறினாள்.
என்னே கொடுமை!
இவை இரண்டில் பரதனுக்கு முடி பெற வேண்டிய இன்றி யமையாமை பற்றிக் கூனி கூறிய காரணங்கள் கைகேயிக்கு ஏற்புடையனவாகப் பட்டிருப்பின், தாராளமாக அவள் தன் மகனுக்கு முடியைப் பெற்றிருக்கலாம். அதோடு இராமனைக் காட்டுக்கு அனுப்ப வரம் கேட்டது, காரணமில்லாமல் கொடுமை செய்யும் பண்பல்லவா? அதிலும், தான் போற்றி வளர்த்த மகனை இவ்வாறுசெய்யச் சொல்லுவது கலப்பற்ற கொடுமையன்றோ? அதனால் தனக்கு ஏதாவது பயன் விளைவதாக இருந்தாலும், 'தன்னலம்' என்றாவது கூறிவிடலாம். தனக்கும் நன்மை பயவாது பிறருக்கும் தீங்கு புரியும் இச்செயலை ஏனோ கைகேயி செய்யத் துணிந்தாள்! துணிந்ததைக் காட்டிலும் கொடுமை, அவன் பெயரைக் கூடக் கூற விருப்பம் இல்லாதவள் போல, 'சீதை கேள்வன்' என்று அவனைக் குறிப்பிட்டதாகும். “இராமனைப் பெற்ற எனக்கு இடருண்டோ?” என்று கேட்ட அதே கைகேயி, சில நாழிகை நேரத்துள் இப்படி மாறுவாளானால், அவளை என்னவென்று குறிப்பது? இதை நன்கு ஆய்ந்த கவிஞன், இதோ விடை கூறுகிறான்; அவளுக்கு அடைமொழிகளைப் பாட்டின் நான்காம் அடியில் தருகிறான். “தீயவை யாவையினுஞ் சிறந்த தீயாள்” என்று அவன் கூறும்பொழுது இதே கவிஞன் சென்ற படலத்தில் கைகேயியை நமக்கு அறிமுகம் செய்து வைக்கையில், அவளைப் பற்றிக் கூறிய சொற்களை நினைவில் கொண்டு பார்க்க வேண்டும். அவ்வளவு உயர்ந்த முறையில் அவளைக் கூறியவன் ஏன் இவ்வாறு கூறுகிறான்? காரணம் விளக்கப்பட்டிருக்கிறது முன்னிரண்டு பத்திகளிலும்.
மன்னிக்க முடியாது
இந்த இடத்தில் தொடங்கி வரிசையாக அவளுக்கு வசைமாரி பெய்து செல்கிறான் கவிஞன். காரணம் இந்த ஒன்று மட்டும் அன்று. ஆய்ந்து பார்த்தால், இதுவே மன்னிக்க முடியாத பெரும்பிழை. காரணமின்றி அவள் கேட்ட இரண்டாவது வரம் எத்தனை பேருக்குத் துன்பம் விளைவிக்கிறது என்பதை நினைக்கையில், அவளை எவ்வளவு பழித்தாலும் தகும் என்றே தோன்றுகிறது. ஆனால், குற்றம் இம்மட்டோடு நிற்கவில்லை. பல சமயங்களில் மனிதன் பிழை செய்ய நேரிடுகிறது. இவற் றுட்சில அறிந்தும், சில அறியாமலும் செய்யப்படுகின்றன. அறியாமல் செய்யப்படும் பிழை வேண்டுமென்று செய்யப்படுவதன்று. எனவே, அதை எடுத்துக் காட்டினால் உடனே செய்தவர்கள் அப்பிழையைப் போக்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறு போக்க முன் வரவில்லையாயின், அது இரண்டாவது பிழை. இராமனை ஒரு குற்றமும் செய்யா திருக்கையில் காட்டுக்குப் போக வேண்டும் என்று கைகேயி விரும்பியது முதலாவது பிழை. இது பிழை என்று அவள் அறிந்து செய்தாளா, அன்றி அறியாமல் செய்தாளா என்பதை நாம் அறியோம். கவிஞனும் இது பற்றி ஒன்றுங் குறிக்கவில்லை. எனவே, நமது ஐயத்தின் பயனை (Benefit of the doubt) கைகேயிக்கு தந்து அவளை மன்னித்துவிடலாம் எனில், உடனே இரண்டாவது பிழையைச் செய்துவிடுகிறாள். எவ்வளவு தாழ்ந்து பணிந்து அவள் கால்களில் வீழ்ந்து தசரதன் கெஞ்சுகிறான்! எதற்காக? அவள் கேட்டவற்றுள் ஒன்றைப் பெற்றுக்கொண்டு மற்றொன்றை விட்டுத் தருவதற்காகவே.
தசரதன் வேண்டல்
"'கண்ணே வேண்டும் என்னினும் ஈயக் கடவேன்என்
உண்னேர் ஆவி வேண்டினும் இன்றே உனதுஅன்றோ?
பெண்ணே வண்மைக் கேகயன் மாதே பெறுவாயேல்
மண்ணே கொள்நீ; மற்றையது ஒன்றும் மற,’ என்றான்.”
(1522)
இந்தப் பாடலில், கண்ணை வேண்டினும், தருவேன்; என் உயிரையே வேண்டினும், அது உன்னுடையதாகும். வள்ளலாகிய கேகயன் மகளே, இந்த அரசை வேண்டுமாயினும், பெற்றுக்கொள். ஆனால், மற்றொன்று கேட்டாயே, அதை மட்டும் மறந்துவிடு' என்று மன்றாடுகிறான் அந்த மன்னன். இராமனைக் காட்டுக்கு அனுப்புதல் என்பதுதான் 'மற்றையதொன்று' என்று குறிக்கப்பட்டது. தசரதன் தன் வாயாற்கூட இதனைக் கூற அஞ்சி 'மற்றையதொன்று' என்று குறிக்கிறான் எனில், இராமன் மாட்டு எத்தகைய அன்பு பாராட்டினான் அவன் என்பதைக் கூறவும் வேண்டுமா? தசரதனைப் பற்றிக் கூறவந்த கவிஞன், “மைந்தன் அலாது உயிர் வேறு இலாத மன்னன்” என்று குறிக்கிறான். இவ்வளவு வேண்டியும் கேகயன் மடந்தை மனம் மாறவில்லை எனில், அது, இரண்டாவது குற்றம் அன்றோ? இனி மூன்றாவது ஒரு குற்றமும் இழைக்க முற்பட்டு விட்டாள் அவள்.
எந்தக் குலப் பெண்ணுக்கும் கணவன் தெய்வமாவான் என்பது பண்டையோர் கொண்ட கொள்கை. அவனைத் தெய்வம் என்று வழிபடாவிடினும், அவளுக்குச் சிறந்தவர்கள் பட்டியலில் அவனே முதலிடம் பெறுபவன் என்பதில் ஐயமின்று. மறுமணம் செய்துகொள்ளும் பழக்கம் இல்லாத நாட்டில் அவளுடைய நல்வாழ்வின் ஆணிவேராய் அவன் இருக்கிறான் என்பதிலும் ஐயமின்று. எனவே, எந்தப் பெண்ணும் கணவனுக்குத் தீங்கு நேர விட்டுக்கொண்டிருக்கமாட்டாள். அவ்வாறு இருக்க, தானே தன் கணவன் உயிரை வாங்க ஒருத்தி முற்படுவாளா? மாட்டாள் என்பது அனைவரும் உறுதியாக ஒப்பக்கூடியதொன்று. ஏனைய பெண்களைப் பொறுத்த வரை இதுவே முறையாய் இருப்பினும், கைகேயியைப் பொறுத்த வரை இது மாறுபடுதலைக் காண்கிறோம். தான் கேட்ட இரண்டு வரங்களையும் உறுதியாகப் பெற்றுவிடுவதாயின், அதனால் தசரதன் உயிருக்குத் தீங்கு நேரும் என்று அறிந்திருந்தும், அவள் பிடிவாதம் செய்தது வெறுக்கத்தக்க செயலேயாகும். அவன் உயிருக்கு இறுதி நேரும் என்பதை அவள் அறியவில்லை என்றும் சொல்வதற்கில்லை. ஏன் எனில், அவனே பன்முறை அதைக் குறிப்பிடுகிறான்.
. . . . . . . . . . . . . . . . . .."நளினம்போல்
கையான் இன்றுஎன் கண்எதிர் நின்றுங் கழிவானேல்
உய்யேன் நங்காய்! உன்அப யம்என் உயிர்,' என்றான்."
(1527)
“ஒன்றாய் நின்ற ஆருயிரோடும் உயிர்கேள்வர்
பொன்றா முன்னம் பொன்றினர் என்னும் புகழ்அல்லால்
இன்றோர் காறும் எல்வளை யார்தம் இறையோரைக்
கொன்றார் இல்லை; கொல்லுதி யோநீ? கொடியாளே” (1531)
“நா அம்பால்என் ஆர்உயிர் உண்டாய்” (1532)
“விண்னோர் காறும் வென்ற எனக்குஎன் மனைவாழும்
பெண்ணால் வந்தது அந்தரம் என்னைப்
பெறுகேனோ?”(1534)
என்று வரும் அடிகள் அம்மன்னனே அவள் வரத்தால் விளையப் போகும் கேட்டைப்பற்றிக் கூறியதை அறிவிக்கின்றன. இவை அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தும் ஒருத்தி மனங் கலங்க வில்லை எனில், அவளை எவ்வாறு பெண் என்று கூறுவது?
உரங்கொள் மனத்தவள்
தசரதன் கூறிய இத்துணை அடைக்கல அரற்றல்களுக்கும் அவள் செவி சாய்க்கவில்லை என்பது மட்டும் அன்றி, மேலும் அவனைத் துன்புறுத்தவே தொடங்குகிறாள். தன்னை மறந்த நிலையில் அவன் தரையில் விழுந்து புரள்கின்ற அந்த நேரத்தில் சிறிதும் கருணை காட்டாமல், அவள், “இவ்வரங்களை இப்பொழுது தரப் போகிறீரா? அல்லாவிடின் யான் உயிரை விடட்டுமா?’ என்கிறாள்.
“ஊழின் பெற்றாய் என்று உரை இன்றேல் உயிர் மாய்வென்.” என்றும்,
“அரிந்தான் முன்ஒர் மன்னவன் அன்றே அருமேனி
வரிந்தார் வில்லாய் வாய்மை வளர்ப்பான் வரம்நல்கிப்
பரிந்தால் என்னை? என்றனள் பாயும் கனலேபோல்
எரிந்துன றாதே இன்னுயிர் உண்ணும் எரியன்னாள்.”(1536,1537) என்றும் கூறும் மனநிலை, எல்லாப் பெண்களுக்கும் வரக் கூடிய ஒன்றன்று. -
“தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.” (56)
என்ற குறளுக்கு முற்றும் எதிராக நடக்கத் தொடங்கிவிட்டாள் கைகேயி. இந்நிலையில் அரசன் யாது செய்வான்!
“வீந்தாளே இவ் வெய்யவள், என்னா மிடல்வேந்தன்,
'ஈந்தேன் ஈந்தேன் இவ்வரம் என்சேய் வனமாள
மாய்ந்தே நான்போய் வான்அரசு ஆள்வன், வசை வெள்ளம்
நீந்தாய் நீந்தாய் நின்மகனோடு நெடிது, என்றான்.”
“ஊறா நின்ற சிந்தையி னாளும் துயில்வுற்றாள். (1538,1539)
அரசன் வரத்தைத் தந்தேன், என்று கூறினவுடன் அவள் உறங்கிவிட்டாள். என்னே அவள் நெஞ்சின் உறுதி இருந்தவாறு எத்துணைக் கொடுமை படைத்த நெஞ்சினளாய் இருப்பினும், அரசன் படும் பாட்டைப் பார்த்து எவ்வாறு கவலையற்று இருக்க முடியும்? அதனினும் மேலாக, எவ்வாறு உறங்க முடியும்?
தீர்ந்த கொலையாளருங்கூடத் தம்மால் அன்பு செய்யப்பட்டா ரிடத்தும், தமக்கு வேண்டியவர்களிடத்தும் அன்பு பாராட்டுகின்றனர் என்று கூறுவார்களே இயற்கையிலேயே இத்தகைய மனப் பண்பு உடையவர் அல்லளே இவள் சேர்க்கையால் வந்த குணக்கேடா? ஆம்: மந்தரை கூறிய சொற்களால் மனந்திரிந்துவிட்டாள் என்றால், இவ்வளவு எதிர்ப்பையும் தாங்கிநிற்கக் கூடிய பண்பாட்டையாண்டுப் பெற்றாள் இவள்? இது ஒரு புதிராகவே இருக்கிறது. எனவே, முற் கூறியபடி மூன்று குற்றங்களை இழைத்துவிட்டாள் இம்மாதரசி, சிந்தை கலங்கியவள்
அடுத்து நாம் கைகேயியைச் சந்திக்கின்ற இடம், கணவன் இறந்து, இராமன் காடு சென்ற பிறகு, பரதன் மீண்ட நிலையிலே தான். பாட்டன் வீட்டிலிருந்து வந்த பரதன் நேரே தாயைச் சென்று வணங்குகிறான். அவனைத் தழுவிய அவள், தன் தந்தை, தாய், சோதரிமார் அனைவரும் நலமா என வினவுகிறாள். அக்கேள்விகள் அனைத்திற்கும் ஒரே மொழியில் விடை தந்துவிட்டுத் 'தந்தையார் எங்கே இருக்கிறார்? என்று கேட்கிறான் அவன். அதற்கு அவள் தரும் விடை நமக்குக்கூட வெறுப்பைத் தருகிறது.
"'தானவர் வலிதவ நிமிர்ந்த தானை அத்
தேனமர் தெரியலான் தேவர் கைதொழ
வானகம் எய்தினான்;வருந்தல் நீ,'
இவ்விடையால் நடுங்கி மயக்குற்று வீழ்ந்த பரதன், ஒருவாறு மனந்தேறிய பின்னர், "அம்மா, நீயலது பிறர் இவ்வாறு உரை செய நினைப்பரோ” என்று கூறக் கேட்டுவிட்டான். இந்நிலையில் கைகேயின் மனம் கல்லாகிவிட்டதையும், அது எந்த உணர்ச்சியையும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுகிற நிலையையுங் காண்கிறோம். தான் விளைத்த செயலின் எதிர்பார்த்ததும் எதிர்பாராததுமான பயன்களைக் கண்டு அவளே நடுங்கிவிட்டாள். அந்நடுக்கத்தால் ஒரளவு உணர்ச்சியைக்கூட அவள் இழந்துவிட்டாள் என்றே எண்ண வேண்டியுள்ளது. அன்றேல், கணவன் இறந்துவிட்ட செய்தியை இவ்வாறு கூற எந்தப் பெண்ணுக்குத்தான் மனம் வரும்! பரதனுடன் பேசுகிற நிலையிலும், அடுத்து அவளை இன்னார் என்று பரதன் குகனிடம் அறிமுகம் செய்து வைக்கும் நிலையிலும் கைகேயி நிற்கும் நிலை நம்முடைய பரிவையே தூண்டுகிறது. தன் செயலின் விளைவறியாமல் குடி இருந்த வீட்டிற்குத் தீ வைத்துவிட்ட குழந்தை போலச் செயலற்று நிற்கிறாள் அவள். அனைவரும் அவளை ஏசுகின்றனரே தவிர, அவள் அடையுந் துயரத்தில் பங்கு கொள்வார் எவரும் இலர். அவளே தேடிக்கொண்ட துன்பந்தானே இது என்று மட்டும் கூறிவிடுவதால் பயன் இல்லை. தவற்றை இழைத்தவளாயினும், இப்பொழுது நெஞ்சு கலங்கி நிற்கிறாள். தனக்கு முடி வேண்டா என்று மறுக்கும் பரதனைக்கூட அவள் வலியுறுத்தி முடியைப் பெற்றுக் கொள்ளுமாறு துண்டவில்லை. ஏன்? அவள் கதிகலங்கி அறியாமல் நிற்கிறாள் என்பதற்கு அதுவே எடுத்துக்காட்டாகும். மூன்றாம் மனிதனைப்பற்றிக் கூறுவதுபோல, வானகம் எய்தினான்; வருந்தல் நீ என்றுதசரதன் இறந்ததைப்பற்றிக் கூறும்பொழுது கைகேயியின் தன்னை மறந்த நிலையைக் காண்கிறோம்.
தந்தைக்காகப் பெரிதும் வருந்திய பரதன், அடுத்தபடியாகக் கேட்கும் வினா, “அண்ணன் எங்கு உளான்?” என்பதேயாகும். இவ்வாறு வினாவாக அவன் அவளை நோக்கிக் கேட்கக்கூட வில்லை. தானே தனக்குக் கூறிக்கொள்பவன்போல, அண்ணனைப் பார்த்தால் ஒழியச் “சிந்தை வெங்கொடுந்துயர் தீர்கலாது.” என்றான். இவ்வாறு அவன் கூறிக்கொண்ட சொற்களைக் கேட்ட அவள் கூறுகிறாள்.
"அவ்வுரை கேட்டலும் அசளி ஏறுஎன
வெவ்வுரை வல்லவள் மீட்டுங் கூறுவாள்;
"தெவ்வடு சிலையினாய் தேவி தம்பிஎன்று
இவ்விரு வோரொடுங் கானத் தான், என்றாள்.”
கைகேயி கூறிய இவ்வார்த்தைகள் பரதனைப்பெரிதும்மருட்டி விட்டன. இப்பொழுதுதான் அவன், அவளையே ஐயங்கொள்ளத் தொடங்கினான். கிழவனான தந்தை இறந்தான் என்றால் இதில் அவளை ஐயுறக்காரணம்யாதுமில்லை. ஆனால், இராமன் ஏன் காடு செல்ல வேண்டும்? ஒரு வேளை அவன் பெருங்குற்றம் இழைத்து அதற்காக அரச தண்டனையாகக் காட்டுக்கு அனுப்பப் பெற்றானா? "தீயவை இராமனே செய்யும்?” என்று கூறி, "அப்பெருமகன் செய்யு மேல், அவை, தாய் செயல் அல்லவோ தலத்துளோர்கட்கு எலாம்?” என்று கூறும் பொழுது தாய்மீது குற்றஞ்சாட்டுவது வெளிப்படை இப்பொழுது வெளிப்படையாகவே கைகேயி,
“வாக்கினால் வரந்தரக் கொண்டு மைந்தனைப்
போக்கினேன் வனத்திடை ; போக்கிப் பார்உனக்க
ஆக்கினேன்; அவன்.அது பொறுக்க லாமையால்
நீக்கினான் தன்னுயிர் நேமி வேந்து, என்றாள்.”
(2166)
இப்பாடலில் அவள் இராமனைப்பற்றி மைந்தனை என்றும், பரதனைப்பற்றி உனக்கு என்றும் கூறுதல் அறிதற்குரியது. இராமன், பரதன் என்ற இருவருமே அவளுடைய செயலை அறிந்தவர்களே. நெஞ்சு அறிந்து அவள் இராமனுக்குத் தீமை புரிந்தாள். பரதனுக்கு நன்மை புரிய வேண்டும் என்று வரம் கொண்டது ஒன்று. ஆனால், அதற்காக இராமனைக் காட்டிற்கு அனுப்பியிருக்க வேண்டியதில்லை. அவ்வாறு இருந்தும், அவளால் கொடுமை செய்யப்பட்டவனான இராமன் சிறிதும் அவள்பால் வருத்தம் கொள்ளவில்லை; அதற்கு மறுதலையாகப் பணிவுடனும் அன்புடனும்'எந்தையே ஏவ, நீரே அருள் செய, (1600) என்றும் மன்னவன் பணியன்று ஆகில் நும்பணி மறுப்பனோ? (1604) என்றும் கூறிவிட்டுக்காடு சென்றுவிட்டான். ஆனால், யாருக்காகக் கைகேயி இத்தனை பாடுகளும் பட்டாளோ, அந்தப் பரதன் இப்பொழுது அவளைக் கொன்று விடுகிறேன். என்கிறான். இதைவிட அவள் மனத்தை ஒடிக்கக்கூடியசெயல்வேறு யாது? எனவே, காடு சென்றவனும் தன்னால் தீங்கிழைக்கப் பெற்றவனும் ஆன இராமனையும், வீட்டில் இருப்பவனும் தன்னால் முடிவாங்கித் தரப்பட்டவனும் ஆனபரதனையும் அவள் ஒப்பிட்டு பார்க்கிறாள். பழைய மனநிலையை அடைந்தவளாய், இராமனை மீட்டும் தன் மைந்தன் என்று பேககிறாள். தசரதனிடம் அஞ்சாமல் “உரங்கொள்மனத்துடன்” வரங்கேட்டகைகேயி, இப்பொழுதுதான் பெற்ற பிள்ளையிடம் அஞ்சுவதைக் காண்கிறோம். ஏன்? தசரதன் தானும் ஒரு தீமை அவளுக்குப் புரிந்துவிட்டானாகலின், அவளை எதிர்த்துப் போராட அவனால் இயலவில்லை. அவளும் அவன் எதிரே அஞ்சவில்லை. ஆனால், தூய்மையே வடிவான பரதன் முன் அவள் இப்பொழுது நடுங்குகிறாள். வாய் பேசாது நிற்பதைத் தவிர அவள் செய்யத்தக்க செயல் ஒன்றும் இல்லை. பரதன் தன் பிழைக்காகத்தன்னைக் கொன்றாலும் கொன்றுவிடுவான் என்று எதிர்பார்த்தே அவள் நிற்கிறாள். அவளைக் கொல்லத் துணிந்துவிட்ட அவன்கூட, “தாய் என்ற பாசத்தால் நான் உன்னைக் கொல்லாமல் விடவில்லை. ஆனால், நெடியவன் முனியும்" என்று அஞ்சி நின்றனன், (2171) என்றே கூறுகிறான். ஒரு வேளை பரதனே அவளைக் கொன்றிருந் தாலும், அவள் துன்பத்திற்கு ஒர் அமைதிகிட்டி இருக்கும். ஆனால், இன்னும் இருந்து பெரிய தண்டனையை அடைவாள் வேண்டிப் போலும் அவனும் அவளை விட்டுவிட்டான். எனவே, இதுவரை கைகேயியை மூன்று நிலைகளிற் கண்டோம் தூய்மையே வடிவான கைகேயி, தீயினும் கொடிய கைகேயி, தன் செயலிழந்து நிற்கும் கைகேயி என மூன்று நிலைகளில் ஒருத்தியைக்காட்டிக் கவிஞன் மனிதன் தன் செயல்களால் எவ்வாறு உயர்வையும் தாழ்வையும் தானே தேடிக்கொள்ள முடியும் என்பதை அழகுற எடுத்துக் காட்டுகிறான்.
口