அரசியர் மூவர்/சூழ்ந்த தீவினை (கூனி)

1.சூழ்ந்த தீ வினை

படைப்பு இரு வகை

ம்ப நாடன் காப்பியமாகிய அரிய பூங்காவில் அனைத்து வகையான பூக்களையும் காணலாம். அவற்றுள், மணத்தால் சிறந்தவை சில; நிறத்தால் சிறந்தவை சில; இனிய தேனுடைமையாற் சிறந்தவை சில; மருந்தாகி நிற்பதாற் சிறந்தவை சில; பெரிய வடிவு பெற்றமையாற் சிறந்தவை சில; சிறிய வடிவு பெற்றும் சிறந்தவை சில.

இத்தொகுப்பினுள் அடங்காமல் உள்ள மலர்களும் சில உள. அவை விடத்தன்மை நிரம்பியவை; கண்டாலும் தீமை பயக்கும் இயல்பு வாய்ந்தவை. என்றலும் என்ன? ஏனையவகைகளிற் சிறந்து விளங்கும் பூங்காவில் இருப்பதாலும், ஏனைய மலர்களின் நன்மையையும் மணத்தையும் எடுத்துக் காட்ட ஏதுவாய் இருப்பதாலும் இவையும் சிறந்து விளங்குகின்றன எனலாம்.

உயர்வும் தாழ்வும் உடைய இம்மலர்கள் அனைத்தும் அக் கவிஞனுடைய படைப்புகளே என்பதைக் கண்ட பிறகு ஒரு பாத்திரத்திடத்து விருப்பும், மற்றொரு பாத்திரத்திடத்து வெறுப்பும் காட்டுதல் அறிவுடைமையாகாது. இராமனும் சீதையும் கம்பனுடைய படைப்புகள்; அப்படியே இராவணனும் கூனியும் அவனுடையவர்களே. இப்பாத்திரங்களைப் பற்றி நாம் காணும்பொழுது கவிஞனின் ஆற்றலைத்தான் காண வேண்டும்.

கவிஞன் படைப்பின் சிறப்பு

மனித மனம் ஆழங்காண முடியாத அளவு விரிந்தும், ஆழ்ந்தும் இருக்கிறது; மேலும், அதில் சுழியிட்டுத் தோன்றும் சுழற்சிகளுக்குக்  காரண காரியத் தொடர்பு கற்பித்தல் என்பது ஏறத்தாழ இயலாத காரியம். அச்சுழல்களில் சிலவற்றை எடுத்துக்கொண்டு கவிஞன் தன்னுடைய பாத்திரங்களைப் படைக்கிறான். அவனுடைய வெற்றியை அளவிடச் சுலபமான ஒரு வழி உண்டு. எவ்வளவு தூரம் நம் அனுபவத்திற்கு இப்பாத்திரம் பொருத்தமாக இருக்கிறது என்று காணும் பொழுது இவ்வுண்மை வெளிப்படும்; யாரோ நாம் அறிந்த ஒருவரிடம் இப்பண்பாடு இருப்பதுபோல ஒரு நினைவு உண்டாகிறது; ஆழ்ந்து பார்த்தால், நம்மிடங்கூடச் சில சமயங்களில் இக்குறைபாட்டைக் காண்டல் கூடும். நம்மிடமே காணப்படும் காரணத்தால், இவ்வளவு வெறுக்கத் தகுந்தது என்றோ நாம் நினைத்ததில்லை. ஆனால், இதே பண்பைப் பிறரிடம் காணும் பொழுதுதான் இதன் முழுத்தன்மையையும் நாம் அறியமுடிகிறது. இத்தகைய பண்பாடுகள் சிலவற்றை ஒன்றுசேர்த்துத்தான் கவிஞன் தன் பாத்திரங்களைப் படைக்கிறான். உதாரணமாக ஒன்றைக் காண்போம்.

காரணமின்றித் தீமை புரிவோர்

காரணமில்லாமல் பிறருக்குத் தீமை செய்பவர்களை நீங்கள் வாழ்க்கையில் கண்டதுண்டா? இல்லையானால், நீங்கள் அதிருஷ்ட சாலிகள். ஆனால், உலகில் சிலர் இவ்வாறு இருக்கின்றனர். கூடுமான வரையிற் பிறருக்குத் தீமை செய்வதே இவர்கள் தொழில். தீமை செய்யப்படுபவர் இவருக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாதவராகக்கூட இருக்கலாம். அதுபற்றித் தீமை செய்பவருக்குக் கவலை இல்லை. முடிந்த அளவு தீமையைப் பிறருக்குச் செய்வதில் பெருமகிழ்ச்சி கொள்ளும் சீலர்கள் இவர்கள். தாம் நேரே பிறருக்குத் தீமை செய்ய இயலவில்லையாயினும், கவலை இல்லை; பிறர் படும் வருத்தம் கண்டேனும் அதற்கு மகிழ்வர்; “வேணும் சார்! எனக்கு அப்பவே இவர் இவ்வாறு துன்பப்படுவார் என்பது தெரியும்” என்று கூறித் தம் மகிழ்ச்சியை வெளியிடுவர். பிறர் துன்பங்கண்டு இன்பமடையும் இப் 'பெரியோர்' உலகில் மிகச் சிலர் உண்டு. மிகச் சிலர் என்றாலும், வாழ்ந்துகொண்டிருக்கும் இக்கூட்டத்தாருக்குக் கவிஞன் ஒரு வடிவு கொடுக்க முனைகிறான். அம்முயற்சியின் பயன் தான் 'கூனி' என்னும் பாத்திரம்.

இராம காதையின் கட்டுக்கோப்புக்கு 'மந்தரை' எனப்படும் கூனி மிக இன்றியமையாதவள். அவள் இல்லையானால், இராமன் காடு செல்லப்போவதில்லை; இராவணன் கொல்லப்படப் போவதில்லை. இவை இரண்டுந்தாம் இராமாயணத்தில் உயிர் நாடிகள் என்றால், இவை நடைபெற நேரடியாகக் காரணமாக இருப்பவள் கூனிதான் என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, அவளைப் பற்றி ஆராயும்பொழுது இந்த எண்ணம் நம்முடைய மனத்தின் அடிப்படையில் இருந்தாதல் வேண்டும். ஆனால், இத்தகைய நன்மை கடைசியில் விளையப்போகிற காரணத்தால் அவள் செய்த காரியத்தைச் சிறந்தது என்று யாருங் கூறிவிட மாட்டார். தவறான வழிகளைக் கடைப்பிடித்து நற்பயன் விளைவிப்பதைச் சிறந்த வழிகளுன் ஒன்றாகச் சில'சயமவாதி'கள் கருதினும், இந்த நாட்டார் இதனை நல்ல முறை என்று ஒத்துக்கொள்வதில்லை. இறுதியில் எத்துணை நன்மை விளைவதாயினும், தவறு தவறுதான்.

கசப்பான மருந்தை உட்கொள்ளுகிறோம், பல சமயங்களில். அம்மருந்து நோயைப் போக்குவது உண்மைதான். எனினும். அக் கசப்பும் மெய்ம்மையானது என்பதை மறுக்க முடியாதே. கூனியின் செயலால் நன்மை விளையினும், அவள் செய்தது தீமைதான்.

“குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.”

என்ற குறளை அடிப்படையிற் கொண்டே ஆராய்ச்சி நடைபெற வேண்டும். இவை அனைத்தும் நம் மனத்தில் தோன்றுமாறு கவிஞன் கூனியை அரங்கத்திற்குக் கொணர்கிறான். முரண் அழகு

மந்தரையை நமக்கு அறிமுகம் செய்துவைக்கு முன் ஏறத்தாழ நாற்பது பாடல்கள் மூலம் ஒரு நிலைக்களத்தை அமைக்கிறான் கவிஞன். அயோத்தி மக்கள் இராமன்.முடி சூடப் போகிறான் என்பதைக் கேட்டு எல்லை மீறி மகிழ்கின்றார்கள். அவர்கள் மகிழ்ச்சி மிகுதியால் வழியில் கண்டவர் அனைவருக்கும் பொருளை வாரி வழங்குகின்றார்கள்; நாட்டை அலங்கரித்தார்கள்; வீட்டை அலங்கரித்தார்கள்; தம் வீடுகளில் ஏதோ விழா நடப்பது போலவே ஒவ்வொருவரும் நினைத்தனர். அயோத்தியைப் பார்த்தால்,

'பொன்னகர் இயல்பெனப் பொலியும்.'

(1445)

நகர மக்களோ எனில்,

“ஆர்த்தனர்; களித்தனர்; ஆடிப் பாடினர்;
வேர்த்தனர் ; தடித்தனர் ; சிலிர்த்து மெய்ம்மயிர்
போர்த்தனர்; மன்னனைப் புகழ்ந்து வாழ்த்தினர்."

(1433)

எல்லை மீறிய இந்த மகிழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும் நமக்கு 'இது ஏதோ ஒரு பேராபத்தின் அறிகுறி' என்ற எண்ணம் தோன்றத்தான் செய்கிறது. எல்லை மீறிய மகிழ்ச்சியில் திளைக்கும் பொழுது இன்றுங்கூட நம் மனத்தில் இத்தகைய எண்ணம் தோன்றுதல் இயல்பு. பல சமயங்களில் இவ்வச்சம் மெய்ம்மையாக நடைபெற்றும்விடுகிறது. அதே நிலைமையை உண்டாக்கவே கவிஞன், நகர மக்களின் இவ்வாரவாரத்துடன் கூடிய மகிழ்ச்சியை அறிவித்துவிட்டு, உடனே கூனியைக் கொண்டுவந்து நிறுத்துகிறான். அவளை எவ்வளவு அழகாகக் கவிஞன் அறிமுகஞ்செய்கிறான் என்று நினைக்கிறீர்கள்!

“இன்னல்செய் இராவணன் இழைத்த தீமைபோல்
துன்னருங் கொடுமனக் கூனி தோன்றினாள்.” (1445)

என்ற அடிகள் மூலம் இராவணன் செய்யப்போகும் தீமைக்கு முன்னறி விப்புச் செய்யப்படுகிறது. அதிலும் 'இழைத்த' என்ற சொல்லின் ஓசை நயம் ஆய்ந்து கோடற்குரியது. ஒரு தீமையை 'நடந்தது, நிகழ்ந்தது' என்று கூறுவது பொருத்த முடையது. ஆனால், இங்கு நடைபெறப் போகும் தீமை பிறர் அறியா வகையில், முன்னறிவிப்பு இல்லாமல், மெள்ள ஒசைப் படாமல் நடைபெறப் போகிறது. கூனியின் சூழ்ச்சியை, அவளும் அவளாற் கெடுக்கப்பட்ட கைகேயியும் தவிர வேறு யாரும் இறுதிவரை அறியவில்லை; அறியக் கூடவில்லை. ஆகலின், ஆசிரியன் 'இழைத்த' என்ற அழகிய சொல்லை இங்குப் பயன்படுத்தினான்.

காரணப் பெயர்

மேலும், ஒரு பாத்திரத்தை முதன் முதலில் அறிமுகஞ்செய்து வைக்கும்பொழுது அப்பாத்திரத்தின் இயற்பெயரையே கூற வேண்டும். அவ்வாறு கூறாமல், அம்பாத்திரம் பெற்றுள்ள காரணப் பெயரை முதன்முதலில் கூறுவதென்றால், அதற்குத் தக்க காரணம் ஒன்றிருக்க வேண்டும். அக்காரணப் பெயரைக் கூறுமுகமாகவே அப்பாத்திரத்தைப்பற்றி நம் எண்ணத்தைத் தூண்ட முயல்கிறான் கவிஞன். சாதாரணமான நிலைமையில் ஒரு பாத்திரத்தை முதன் முதலில் சந்திக்கும்பொழுது விருப்பு வெறுப்பு அற்ற நிலையில் சந்திக்கிறோம். பின்னர் அப்பாத்திரம் செய்யும் செயல்களை வைத்துத்தான் விருப்பு வெறுப்புக் கொள்கிறோம். இதுதான் முறை. ஆனால், இம்முறையை மாற்றி, எடுத்த எடுப்பிலேயே நாம் வெறுப்புக் கொள்ள வேண்டும் என்று கவிஞன் நினைப்பதாலேதான் முதலிலேயே 'கொடுமனக் கூனி' என்ற அடையடுத்த காரணப் பெயரால் அவளை நமக்கு அறிமுகஞ்செய்து வைக்கிறான். கூனி கொடுமை நினைக்கிறாள். ஆனாலும், அதனை நிறைவேற்றும் ஆற்றால் அவள்பால் இல்லை. ஆனால், அக்கொடுமையைச் சிறிதும் விட்டுக் கொடுக்காமல் நிறைவேற்றி வைப்பவளாகிய கைகேயியைக் கவிஞன் எவ்வாறு அறிமுகஞ்செய்கிறான், தெரியுமா? 

"நாற்கடல் படுமணி நளினம் பூத்ததுஓர்
பாற்கடல் படுதிரைப் பவன வல்லியே
போற்கடைக் கண் அளி பொழியப் பொங்கணை
மேற்கிடந் தாள்.” (1448}

என்று அவளை மட்டும் இவ்வாறு உயர்ந்த நிலையிற் கூறக் காரணம் யாது? இவ்விருவரும் இழைத்தது தீமையேயாயினும், இருவர்க்கும் இடையில் கடலனைய வேற்றுமையைக் காண்கிறான் கவிஞன். கைகேயியின் மனம் முதலில் மாறாமல் இருந்து, இறுதியில் மாற்றம் அடைந்தது உண்மைதான். அதற்காகவும் அவளை ஓரளவு போற்று கிறான் கவிஞன். இயற்கையாகவே அவள் மனம் தூய்மையானது என்பதையும், கூனிமிகவும் முயன்று கெடுத்த பின்னரே அவள் மனந் திரிந்தது என்பதையும் நமக்கு எடுத்துக்காட்டக் கவிஞன் பெரிதும் முயல்கிறான். “ஆழ்ந்த பேரன்பினாள்” (1454) என்றும், “தெய்வக் கற்பினாள்” (1450) என்றும், “வாய் கயப்புற மந்தரை வழங்கிய வெஞ் சொல்”(1469) கைகேயியை ஒன்றுஞ் செய்யவில்லை என்றும் கவிஞன் கூறிப் பரதன் தாயினுடைய பண்பட்ட தன்மையை நன்கு எடுத்துக் காட்டுகிறான்.

ஒப்பு நோக்குக

அவ்வாறு முதலில் தூய உள்ளத்தளாய் இருந்த கேகயன் மகள், இறுதியில் மனம் மாறினாலும், அதற்குத் தக்க காரணங்கள் உண்டு. ஆகலின், அவளை முற்றிலும் கெட்டவள் என்று கூறுவதற்கில்லை. மைந்தன்மேற் கொண்ட பாசத்தாலும் அறியாமையாலுமே அவள் தவற்றைச் செய்கிறாள். மேலும், தான் செய்யும் தவறு இத்துணைப் பெரிய இராமாயணத்திற்கு இடமாகிவிடும் என அவள் கனவிலும் கருதியவள் அல்லள்.எனவே, அவளை நல்லவளாகவே ஆசிரியன் அறிமுகஞ் செய்துவிடுகிறான். ஆனால், கூனியைப் பொறுத்த வரை, அவள் தான் செய்யும் கொடுமையை நினைந்து பார்த்து அதனால் விளையப்போகும் தீமையையும் ஆராய்ந்து வேண்டும் என்றே செய்கிறாள் ஆகலின், அவளை அறிமுகம் செய்து வைக்கும்பொழுதே கொடுமணம் உடையவளாக அறிமுகஞ்செய்து வைக்கிறான். அன்றியும், அவளால் தீமை செய்யப்படும் இராமனோ, அவளுக்கு ஒரு தீங்குஞ் செய்தவன் அல்லன். அப்படி இருக்கவும், அவனுக்குத் தீமை செய்யத் துணிந்த அவள் மன நிலையை என்னென்று கூறுவது கட்டுரையின் தொடக்கத்தில் கூறியபடி, காரணம் இன்றியும் பிறருக்குத் தீமை செய்ய முற்படும் இழிகுணம் உடையவர்களுள் தலையாயவள் கூனி. எனவே, அவளுடன் பிறந்த இந்த இழிதகைமையை நாம் நன்கு அறிந்துகொள்ள வேண்டும் என்று கருதிய கம்பநாடன்,

'கொடுமனக் கூனி' (1445)

'மூன்றுலகினுக்கும் ஓர் இறுதி மூட்டுவாள்' (1446)

'காலக்கோளனாள்'(1449)

'வெவ்விடம் அனையவள்' (1452)

‘சூழ்ந்த தீவினை' (1454)

'வேதனைக் கூனி'(1460)

‘தீய மந்தரை'    (1483)

என்ற தொடர்களால் கூனிக்கு ஓர் 'அருச்சனை' செய்துவிடுகிறான். இவ்வாறு தொடர்ந்து அவளை ஏசியது போதாதென்று கருதிப் போலும் 'உள்ளமும் கோடிய கொடியாள்' (1487) என்று இறுதியாகச் சொல்லித் தீர்த்துவிட்டான். உள்ளமும் என்ற உம்மையால், உடலும் வளைந்த கூனி என்பதைப் பெற வைத்தான்.

பல வகை முயற்சி

இக்கொடுமனக் கூனி கைகேயியின் மனத்தைத் திரிக்கப்பல வழிகளைக் கையாண்டாள்; முதன்முதலாகக் கைகேயியின் 'தாய்மைக்கு முறையிடுகிறாள்.

"மறந்திலள் கோசலை உறுதி மைந்தனும் சிறந்த நல் திருவினில் திருவும் எய்தினான் இறந்திலன் இருந்திலன் என்செய்து ஆற்றுவான் பிறந்திலன் பரதன்நீ பெறுத லால்,' என்றாள்." (1462)

என்ற முறையில் கைகேயின் தாய் மனம் இளகுமோ என்று கூறிப் பார்த்தாள்; அம்முறை பயன்படாது என்று கண்டவுடன் சகக்களத்தி யாகிய கோசலை பெறப்போகும் வாழ்வைப் பெரிதுபடுத்திக் காட்டினாள். அதனைச் சொல்லும்பொழுதே கைகேயியின் அகங்காரத் தீக்கு எண்ணெய் விடுகின்றாள். 'இராமன் முடி சூடிய பிறகு நீ வறுமை யடைவாய். நின்னை வந்து இரந்தவர்க்குக் கொடுக்கவும் நின்பால் ஒன்றும் இராது. அந்நிலையில் நீ கோசலையைச் சென்று பணிந்து, அவள் தருவதைப் பெற்றுத்தான் வாழ வேண்டும்,' என்று கூறுகிறாள். இதிலும் கைகேயி மனம் மாறுபடவில்லை. இவ்விரு வகையிலும் கேகயன் மகள் மனம் மாறவில்லை என்பதைக் கண்ட கூனி, இறுதியாக ஒரு 'பிரமாஸ்திர'த்தைப் பயன்படுத்திவிட்டாள்; என்றைக்குமே பெண்களுக்குரிய ஒரு குணத்தைப் பயன்படுத்த முடிவு செய்துவிட்டாள். எந்தப் பெண்ணும் தாய் வீட்டைப் பிறர் குறை கூறப் பொறுத்திருக்கமாட்டாள். அதிலும், சாதாரண இடத்தில் பிறந்து, உயர்ந்த இடத்தில் வாழ்க்கைப்பட்ட பெண்களுக்கு ஒரு வகையான 'தாழ்மை உணர்ச்சி' Inferiority Complex இருந்து கொண்டேயிருக்கும். அதை யாரேனும் எடுத்துக் காட்டிவிட்டால், புலிபோலச் சீறும் இயல்புடையவர்கள் பெண்கள். பெண்ணாகிய கூனிக்கு இது தெரியாதா? எனவே, இதுவரை திரியாத கைகேயியின் மனத்தைத் திரிக்க இம்முறையைக் கையாண்டுவிட்டாள்.

பிரமாஸ்திரம்

சக்கரவர்த்தியாகிய தசரதனை நோக்கக் கேகயன் சாதாரணமான சிற்றரசன்தான். தசரதன் ஒரு புறம் இருக்க, ஜனகன்கூடக் கேகயனை நோக்கப் பெரிய அரசன்தான். மேலும், ஜனகனுக்கும், கேகயனுக்கும் பகைமை வேறு உண்டு. என்றாலும், கேகயன்மேல் படையெடுத்தால் அவன் மருமகனாகிய தசரதன் மாமனாருக்கு உதவியாக வருவான் என்று அஞ்சிய ஜனகன், இதுவரை சும்மா இருந்துவிட்டான். இப்பொழுது இராமன் மன்னனாகிவிட்டால், ஜனகனுக்குக் குளிர்விட்டுவிடும். இராமன் அரசனாகி விட்ட பிறகு ஜனகன் கேகயன் மேல் படையெடுத்தால், அவனுக்கு யார் உதவிக்கு வருவார்கள்? ஆகவே, 'உன் தகப்பன் வாழ வேண்டுமானால், இராமன் அரசனாகக் கூடாது' என்று தருக்க முறைப்படி கூனி கூறுகிறாள்.

"காதல் உன்பெருங் கணவனை அஞ்சிஅக் கனிவாய்ச்
சீதை தந்தைஉன் தாதையைத் தெறுகிலன்; இராமன்
மாது லன்அவன்; உந்தைக்கு வாழ்வினி யுண்டோ?
பேதை உன்துணை யாருளர் பழிபடப் பிறந்தார்?


“மற்று நுந்தைக்கும் வான்பகை பெரிதுள மறத்தார்
செற்ற போதுஇவர் சென்றுஉத வாரெனில் செருவில்
கொற்றம் என்பதுஒன்று எவ்வழி உண்டது கூறாய்;
கற்ற முங்கெடச் சுடுதுயர்க் கடல்விழத் துணிந்தாய்”

(1480, 1481)

என்ற முறையில் விரிவாகவும் மனத்திற்பதியும் வகையிலும் கேகயன் படப்போகும் துயரத்தைக் கூனி கூறினாள். தன் தாய் வீட்டுக்கு நேரிடப் போகும் இழிவைக் கற்பனையில் காணத்தொடங்கி விட்டாள் கைகேயி. எந்தப் பெண்ணும் பொறுக்க இயலாத ஒரு காட்சியாகலின், அவள் மனம் உடனே மாறிவிட்டதாம். இதைக் கவிஞன் அழகாக,

“தீய மந்தரை இவ்வுரை செப்பலும் தேவி
தூய சிந்தையும் திரிந்தது.” (1483)

என்று கூறுகிறான். அறிவுத் திறம்

எதனை எவ்வாறு கூறினால் பயன் விளையும் என்பதை நன்கு அறிந்து கூறும் திறம் படைத்த கூனியின் அறிவுத் திறத்தை நாம் பாராட்டாமல் இருக்க இலயாது. என்றாலும், அவள், அறிவைத் தீமை புரியவே செலவிட்டாள் என்பதை நினைக்க, வருந்தாமல் இருக்கவும் முடியவில்லை. அவளுடைய ஆழ்ந்த தீமை, தனியே காணும் பொழுதும் ஆத்திரம் ஊட்டுவதாகவே உளது. என்றாலும், வஞ்சகத்தை நேர்மையின் அருகிலும் தீமையை நன்மையின் அருகிலும் வைத்துக் கண்டால் தான் உள்ளவாறு அவற்றின் கொடுமையை அறிய முடியும். எனவே, கவிஞன் கூனியின் கொடுமையைக் கைகேயியின் நன்மையின் எதிரே நிறுத்தி, இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் காட்டுகிறான்.

கைகேயியின் அரண்மனையை அடைந்த கூனி, அவள் உறங்குவதைக் கண்டு, அவள் கால்களைத் தொட்டு, அவளுக்கு விழிப்பு உண்டாகுமாறு செய்தாள். விழித்து எழுந்த கைகேயி, முற்றிலும் துயில் நீங்கப்பெறாதவளாய், கூனி எழுப்பியதன் காரணத்தை அறிய இயலாதவளாய், விழிக்கிறாள். அந்நிலையில் கூனி பேசுகிறாள். “மிகு நஞ்சு பொருந்திய பாம்பு, தன்னை விழுங்குவதற்காக அருகில் வரவும், அதுபற்றிக் கவலை கொள்ளாமல் ஒளி விட்டு விளங்குகின்ற சந்திரனை ஒத்து, பெரிய துன்பம் உன்னை வந்து அணுகவும் இப்படிக் கவலை இல்லாமல் உறங்கலாமா?” என்ற கருத்துப்பட

"அணங்குவாள் விடஅரா அணுகும் எல்லையும்
குணங்கெடாது ஒளிவிரி குளிர்வெண் திங்கள்போல்
பிணங்குவான் பேரிடர் பிணிக்க நண்ணவும்
உணங்குவாய் அல்லைநீ உறங்கு வாய்,' என்றாள்."(1451)

இதனைக் கேட்ட கைகேயி சிறிதும் பதற்றம் அடையவில்லை. "அரசரிற் பிறந்து பின் அரசரில் வளர்ந்து அரசரில் புகுந்து பேரரசி யான" கைகேயி இதற்கெல்லாம் பதற்றம் அடைவாளா? எனவே, கூனியின் இந்தக் கூப்பாட்டைச் சிறிதும் மதியாதவளாய்,

“தெவ்வடு சிலைக்கைஎன் சிறுவர் செவ்வியர் ;
அவ்வவர் துறைதொறும் அறம்தி றம்பலர் :
எவ்விடர் எனக்குவந்து அடுப்பது ஈங்கு?” (1452)

என்று கேட்கிறாள். இருவரும் நின்று பேசும் இச்சொற்களால் கவிஞன் தீமையின் பதற்றத்தையும் நன்மையின் பொறுமையையும் நமக்கு எடுத்துக் காட்டிவிடுகிறான். கைகேயியின் எதிரே கூனியை வைத்துக் காணும்பொழுது அவள் கொடுமை பன்மடங்கு அதிகரித்துக் காணப்படுகிறது. அடுத்து, 'இராமன் முடி சூடப் போகிறான்,' என்கிறாள் கூனி. இச்சொல்லைக் காதாற் கேட்டதும் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்த கைகேயி சிறந்த ஒரு நவமணிமாலையைக் கூனிக்குப் பரிசாக நல்கினாள். மகிழ்ச்சியில் திளைத்து மாலையைத் தருகின்ற கைகேயியின் எதிரே கூனி என்ன செய்கிறாள் பாருங்கள்.

“தெழித்தனள் உரப்பினள் சிறுகண் தீயுக
விழித்தனள் வைதனள் வெய்து உயிர்த்தனள்
அழித்தனள் அழுதனள் அம்பொன் மாலையால்
குழித்தனள் நிலத்தைஅக்கொடிய கூனியே." (1459)

பிறர் அடைகின்ற இன்பத்தைப்பொறாமல் அவர்கட்குத் தீங்கு செய்ய நினைக்கும் கயவர் அனைவரும் கூனியின் இனத்தைச் சேர்ந்தவர். அவர்கள் பிறர் மகிழும் பொழுது அடையும் மனவருத்தத்தைத் தான் இப்பாடல் கூறுகிறது.

இராமனுக்குப் பட்டங்கிடைத்தாலும் பரதனுக்குப் பட்டங் கிடைத்தாலும் கூனியைப் பொறுத்தவரை ஒன்றுதான். தனிப்பட்ட முறையில் அவளுக்கு ஒன்றும்பயன் ஏற்படாது என்று அறிந்திருந்தும் ஏன் இவ்வாறு சூழ்ச்சி செய்கிறாள்? கூனி செய்யும் இத்துணைப் பெரிய சூழ்ச்சிக்கு ஏதாவது ஒரு காரணம் இருத்தல் வேண்டும். ஒன்று, பரதன்மேல் கொண்ட அன்பினால் அவள் இதனைச் செய் திருத்தல் கூடும். ஆழ்ந்து நோக்கினால் இக்காரணம் நிலை பெறுமாறு இல்லை. பரதன்மேல் கொண்ட அன்பால் தூண்டப்பட்டு இதனைச் செய்தாள் எனில், இறுதிவரை பரதனுக்குப்பட்டம் கிடைக்க அவள் முயன்றிருத்தல் வேண்டும். தன் வேலை முடிந்ததும் அவள் யாதொரு முயற்சியும் செய்ததாகத் தெரியவில்லை. மேலும், பரதன்மேல் கொண்ட அன்பால் இது செய்தாள் எனில், இராமனை ஏன் காட்டிற்கு அனுப்பச் சூழ்ச்சி செய்ய வேண்டும்? பரதனுக்குப் பட்டத்தைப் பெறுவதுடன் அவள் நிறுத்தி இருக்கலாமன்றோ? இராமன் காடுசெல்வதற்கும், பரதன் பட்டம் அடைவதற்கும் தொடர்பு யாது? ஒன்றுமில்லை. எனவே, அவள் இராமனைக் காட்டுக் கனுப்பவே இப்பெருஞ் சூழ்ச்சியைச் செய்தாள் என்று நினைய வேண்டி உளது. அச்சூழ்ச்சியை நிறைவேற்றவே கைகேயியையும் பரதனையும் பயன்படுத்திக்கொண்டாள் என்றும் நினைய வேண்டியுளது.

எவ்விதமான காரணமும் இல்லாமல் இராமன் மேலும் கோசலை மேலும் கூனிக்குத் தீராப் பகை மூண்டுவிட்டது. கைகேயியின் தோழி என்பதற்காக ஒரு வேளை கோசலையாவது கூனியை இழித்துப் பேசியிருக்கலாம். ஆனால், இராமன் மறந்தும், கூனிக்குத் தவறு இழைக்காதவன். இருந்தும், இவ்விருவருக்கும் தீங்கிழைக்கவே கூனி இவ்வடாத செயலைச் செய்தாள் ஆகலின், அவள் கொடுமனம் உடையவளே.