அருட்பெருஞ்ஜோதி!/அருட்பெருஞ்ஜோதி

அருட்பெருஞ்ஜோதி

“தம்பி! விளக்கிலே எண்ணெயைத்‌ தாராளமாக ஊற்று. திரியை நன்றாக முறுக்கிவிடு, தீபம்‌ நன்றாகப்‌ பிரகாசிக்கட்டும்‌.

வேட்டியை நன்றாக வெளுக்கச்‌ சொல்லு. தூய வெண்‌ உடைய அணியவேண்டும்‌.

விபூதி மடலிலே நீறு நிறையப்‌ போட்டுவை. மேனியெலாம்‌ பூசவேண்டும்‌. நீறு பூசவேண்டும். சந்தனம்‌ இருக்கிறதா பார்‌.

சமையல்‌ வேலைகளை ஜாக்கிரதையாகக்‌ கவனி.

பாலை பக்குவமாகக்‌ காய்ச்சச்‌ சொல்‌. பழங்கள்‌ கெடாதபடி இருக்கட்டும்‌.

தனித்தனிமுக்‌ கனிபிழிந்து வடித்தொன்றாக்‌
         கூட்டிச்‌ சர்க்கரையுங்‌ கற்கண்டின்‌ பொடியு
மிகக்கலந்‌தே, தனித்தநறுந்‌ தேன்பெய்து பசும்‌
         பாலுந்‌ தேங்கின்‌, தனிப்பாலுஞ்‌ சேர்த்தொரு
தீம்பருப்‌ பிடியும்‌ விரவி இனித்தநறு நெய்யனைந்தே
         இளஞ்சூட்டி னிறக்கி எடுத்த சுவைக்
கட்டியினு மினித்திடுந்‌ தெள்ளமுதே அனித்த
         மறத்‌ திருப்பொதுவில்‌ விளங்குநடத்‌ தரசே
   அடிமலர்க்கென்‌ சொல்லணியாம்‌ அலங்கலணிந்தருளே

ஆஹா! எனது ஐயன்‌ எவ்வளவு அருமையாக இந்‌தச்‌ சிறு விஷயத்தையும்‌ கூறியுள்ளார்‌.

தனித்தனி முக்கனி பிழிந்து வடித்தொன்றாகக்‌ கூட்டி முக்கணி பிழிந்து அதிலே சக்கை ஏதுன்‌றி, வடித்து பிறகு ஒன்றாகச்‌ சேர்த்து,

என்ன அருமை ! என்ன தெளிவு !

எதைத்தான்‌ அவர்‌ சரிவரக்‌ கூறாது போனார்‌, பழச்‌சாறு முதல், பரமன்‌ அருட்சாறு வரை, எங்ஙனம்‌ பெறுதல் என்பதனை எடுத்துரைத்தார்‌ எம்மான்‌, செந்தமிழ்க்‌ கவி செய்த பெம்மான்‌. “அருட்‌ பெருஞ்‌ சோதி, தனிப்‌பெருங்‌ கருணை”

என்று வடலூர்‌ ராமலிங்க அடிகளாரின்‌ பக்கதர்களில்‌ சிலரும்‌ கூறிக்கொண்டு, பயபக்தியுடன்‌ தூய உடையும்‌ வெண்ணீறும்‌ அணிந்து அடிகளார்‌ விழாவை அன்புடன்‌ கொண்டாடி அருட்பா பாடி அதன்‌ சுவை பருகி ஆனந்தங்கொண்டு “என்‌ அரசே, என்‌ துரையே என்‌ இறையே” என்று இறைஞ்சி நின்று நெஞ்சு நெக்குருக பூத உடல்‌ புளகாங்கிதமடைந்து பூஜைகள்‌ பல புரிகின்றனர்‌. வீதி வலம்‌ வருகின்றனர்‌. விழா கொண்டாடி சுத்த சமரச சன்மார்க்க போதனை செய்‌தும்‌, கேட்டும்‌, பாடல்கள் படித்தும்‌, படித்தோர்‌ பொருள்‌ கூறக்‌ கேட்டும்‌ பரமானந்தம்‌ அடையக்‌ காண்கிறோம்‌.

பக்தியுடன்‌ சற்று பணவசதியும்‌ இருப்‌பின்‌, பல்லக்கிலோ, ரதத்திலோ அடிகளின்‌ திருஉருவப்‌ படத்தினை அமைத்து பவனி வருகின்றனர்‌. பக்தி, பணம்‌ இருந்து அத்துடன்‌ யூகமும்‌ இருப்போர்‌, ஏழைகளுக்குச்‌ சோறிடுகின்றனர்‌. பாடல் தெரிந்ததுடன்‌, பண்ணின்‌ பண்பும், பயிற்சியும்‌, குரல்‌ இனிமையும்‌ உடையார்‌ அருட்பாவைப்‌ பாடி, இசை இன்‌பத்தையும்‌ தருகின்‌றனர். எல்லாம்‌ சரி!

ஆனால்‌, ‘பக்தர்கள்‌’ செய்யும்‌ விழாவினுக்கும்‌, அவர் தம்‌ மற்றை நாள்‌ செயலுக்கும்‌ உள்ள பேதம்‌, எத்துணை என்பதைத்தான்‌ நாம்‌ கண்டு மனம்‌ நோகிறோம்‌. விழா, நாளன்று அருட்பாவும்‌ மற்றைய நாட்களிலே மருட்பாவுமாகவன்றோ பக்தகோடி உள்ளனர்‌. அருட்‌பெருஞ்ஜோதி ஓர்‌ நாள்‌ தோன்றி மறைந்ததும்‌ மறுகணம்‌ இருண்ட இடத்திலேயே தானே இராமலிங்கரின்‌ இணையடி தொழுபவர்‌ தாமும்‌ புகுந்து மற்றையோர் புகவும்‌ கண்டு வாழ்கின்றனர்‌, இஃதா அருட்பா அருளிய அண்ணலுக்கு அவர்‌ அடியார்கள்‌ காட்டும்‌ நன்றி

வேடம்‌ கலைமின்‌! வீணாட்டம்‌ தவிர்மின்‌! விரைந்து சென்று உலகினுக்கும்‌ உள்ளத்துக்கும்‌ உரைமின் உத்‌தமர்‌ இராமலிங்கர்‌ உரைத்தவற்றுள்‌ உள்ள சத்துள்ள பொருளை எல்லாம்‌ சகலரும்‌ உணரட்டும் என்றுதான்‌, நாம்‌ யோசனை கூறுகிறோம்‌.

இராமலிங்க அடிகளார்‌ தமது சொல்மூலம்‌ உலனுக்கு உரைத்துள்ள உண்மைகளை உலகினுக்கு எடுத்‌துரைத்து அவை காட்டும்‌ வழி செல்லும்படி மக்களை நடாத்துவதை விட அவருக்கு ‘பக்தர்கள்‌’ செய்யக்‌ கூடிய, செய்யவேண்டிய நன்‌றி வேறொன்றுமில்லை.

தான்‌ பெற்ற மகவு தவழ்ந்து விளையாடி மழலை மொழி புகன்று, தன்‌ முன்‌ விளையாடுதல கண்டு தாய்‌ இன்புறுதல்‌ போலவும்‌, தான்‌ ஆளும்‌ நாடு தக்கோர் நாடாகி, பஞ்சமும்‌ பிணியும்‌ நீங்கி பாலும்‌ தேனும் பருகினோர்போல, மக்கள்‌ இன்ப வாழ்வு வாழக்காணும்‌ கொற்றவன்‌ களித்தல்‌ போலவும்‌, தாம்‌ உரைத்தமொழி கேட்டு அதன்வழி நின்று, மற்றையோரையும்‌ நிற்க வைக்கும்‌ ‘நோன்பு’ கொண்டோரைக்‌ கண்டே அடிகள்‌ களிப்பரேயன்றி, விழாவும்‌ வேடிக்கையும்‌ வெட்டிப்‌ பேச்சும்‌ வீண்‌ கூத்தும்‌ செய்துவரின்‌, மகிழார்‌, மனம்‌ மிகவாடி, ‘மதியிலீர்‌ உமக்கோ நான்‌ அருட்பா தந்தேன்‌ ஆடல்‌ பாடலுக்கும்‌, ஆர்பாட்டத்துக்கும்‌ இஃதோ நாள்‌? இதுவோ, நீவிர்‌ எனை அறிந்ததன் அழகு’ என்று கூறுவார்‌ என்பது திண்ணம்‌. தான் திறம்பட இரவு பகலாக உழைத்து வரைந்ததோர்‌ சித்திரத்தை சிறுகுழந்தை சிறுசிறு துண்டுகளாகக்‌ கிழிக்கக் கண்டால், சித்திரக்காரன்‌ அது தன்னைச்‌ சித்திரவதை செய்வதென்றே ௧ருதிக்‌ கலங்குவான்‌.

அதுபோன்றே தோற்றுகிறது, இராமலிங்கர்‌ விழாவை ரசம்பட நடத்திவிட்டு, சமூகத்திலே அந்த ரசம்‌ புக மார்க்கம்‌ செய்யாது விடுத்து சீர்திருத்தச்செய ஊருக்கும்‌ ஊக்கமோ உதவியோ தராமலுமிருக்கும்‌ “உத்தமர்களைக்‌” கண்டால்‌ !

எற்றுக்கு இவர்கள்‌ இராமலிங்க அடிகளைப் போற்றுகின்றனர்‌? மோட்சலோகக்‌ கதவின்‌ சாவியை அவர்‌ தந்துவிடுவார்‌ என்றா, அன்றி மோசமான ௧ருத்துக்களை மதத்தின்‌ பேரால்‌ மக்களிடை புகுத்திக்‌ கெடுத்த மந்தமதியீனர்களைக்‌ கடிந்துரைத்து, “இதோ இது தீது, இது மோசம்‌, இது தவறு” என எடுத்துக்‌ காட்டி, சன்மார்க்கம்‌ வகுத்துக்‌ காட்டினார்‌, என்பதனுக்கா! தோலுக்கா, சுளைக்கா? சக்கைக்கா ? நரம்புக்கா ? அது இசைக்கும்‌ தொனிக்கா? எதில்‌ ஐயன்மீர் உமது நாட்டம்‌ செல்லவேண்டும்‌.

அருட்பெருஞ்ஜோதி என்பதனுக்கு ஆயிரம்‌ காண்டில்‌ விளக்கு போட்டு அழகு காண்பது என்றா பொருள்‌. அருட்பாவின்‌ அழகினை உணர்தல்‌ எனின்‌ அதனைப்‌ பாடிப்‌ பொருள்‌ கூறிப்‌ பரவசமடைவதா? அன்றி அக்‌கருத்துகளின்படி நடப்பதுமா? நடத்துவிப்பதுமா? எது தேவை? எது விழா? எது செய்ய வேண்டும்‌ என்றே கேட்கிறோம்‌ இராமலிங்கரின்‌ பக்தர்களை.

யாருக்கு எதை, ஏன்‌, எவ்விதத்திலே அவர்‌ உரைத்‌தார்‌ எண்பதை எண்ணிப்‌ பார்க்க வேண்டுகிறோம்‌.


பேருற்ற உலகிலுறு சமயமத நெறியெலாம்
         பேய்ப் பிடிப்புற்ற பிச்சுப்
பிள்ளை விளையாட்டென உணர்ந்திடாது உயிர்
         கள் பல பேதமுற்று அங்குமிங்கும்
போறுற்று இறந்து வீண் போயினர் இன்னும் வீண்
         போகாத படிவிரைந்தே
புனிதமுறு சுத்த சன்மார்க்க நெறிகாட்டி
        மெய்ப் பொருளினை உணர்த்தி எல்லாம்

ஏருற்ற சுகநிலை யடைந்திடப் புரிதி நீ
        என்பிள்ளை யாத லாலே
இவ்வேலை புரிக வென் றிட்டனம் மனத்தில்வே
       றெண்ணற்க என்ற குருவே
நீருற்ற வொள்ளிய நெருப்பே நெருப்பினுள்
       நிறைந்திரு ளகற்றும் ஒளியே
நிர்க்குணா னந்தபர நாதாந்த வரை யோங்கும்
       நீதி நடராஜ பதியே .

சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
          சாத்திரச்‌ சந்தடிகளிலே கோத்திரச்‌ சண்டை
யிலே, ஆதியிலே யபிமானித்‌ தலைகின்ற வுலகீர்‌
          அலைந்தலைந்து வீணேநீ ரழிதலழகலவே


நிதியிலே சன்மார்க்க நிலைதனிலே ஞான
          நிருத்தமிடுந்‌ தனித்தலைவ ரொருத்தரவர்தாமே
விதியிலே அருட்ஜோதி விளையாடல்‌ புரிய
          மேவுகின்ற தருணமிது கூவுகின்றேன்‌ உமையே.
 
இருட்சாதி தத்துவச்‌ சாத்திரக்‌ குப்பை
          இருவாய்ப்‌ புன்செயி லெருவாக்கிப்‌ போட்டு
மருட்சாதி சமயங்கள்‌ மதங்களாச்‌ சிரம
          வழக்கெலாங்‌ குழிக்கொட்டி மண்‌ மூடிப்‌ போட்டுத்‌
தெருட்சாருஞ்‌ சுத்த சன்மார்க்க நன்னீதி
          சிறந்து விளங்கவோர் சிற்சபை காட்டும்‌
அருட்‌ ஜோதி வீதியிலாடச்‌ செய்தீரே
          அருட்பெருஞ்‌ ஜோதியென்‌ னாண்டவர்‌ நீரே.

வேதா கமங்களென்று வீண்வாதம்‌ ஆடுகின்றிர்‌
          வேதா கமத்தின் வினைவறியீர் சூதாகச்‌
சொன்னவலால்‌ உண்மை வெளிதோன்ற உரைத்த
          என்ன பயனோ இவை (லீலை)

          சாதியு மதமுஞ்‌ சமயமுந்‌ தவிர்ந்தேன்‌
                    சரித்திரக்‌ குப்பையுந்‌ தணந்தேன்‌
          நீதியு நிலையுஞ்‌ சாத்தியப்‌ பொருளும்
                    நித்திய வாழ்க்கையுஞ்‌ சுகமும்
         ஆதியு நடுவு மந்தமு மெல்லா
                    அருட்பெருஞ் ஜோதியென்‌ றறிந்தேன்‌
          ஓதிய வனைத்து நீயறிந்‌ ததுநா
                    னுரைப்பதென்‌ னடிக்கடி யுனக்கே}}
பன்னெறிச்‌ சமயங்கள்‌ மதங்களென்‌ றிடுமோர்‌
         பவநெறி யிதுவரை பரவியதிதனால்‌
சென்னெறி யறிந்தில ரிறந்திறந்‌ துலகோர்‌
          செறியிரு ளடைந்தன ராதலி னினி நீ


புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி யெனும்‌ வான்‌
           புத்தமு தருள்கின்ற சுத்தசன்‌ மார்க்கத்‌
தன்னெறி செலுத்துக வென்ற வென்னரசே
           தனிநடராஜ வென்‌ சற்குரு மணியே.

நால்வருண மாச்சிரம மாசார முதலா
      நவின்றகலைச்‌ சரிதமெலாம்‌ பிள்ளை விளையாட்டே
மேல்வருணந்‌ தோல்வருணங்‌ கண்டறிவா ரிலைநீ
      விழித்ததுபா ரென்‌றெனக்கு விளம்பிய சற்குருவே
கால்வருணங்‌ கலையாதே வீணிலலை யாதே
      காண்பனவெல்‌ லாமெனக்குக்‌ காட்டியமெய்ப்‌ பொருளே
மால்வருணங்‌ கடந்தவரை மேல்வருணத்‌ தேற்ற
      வயங்கு நடத்தரசே யென்மாலை யணிந்‌ தருளே

சாத்திரங்க ளெல்லாந்‌ தடுமாற்றஞ்‌ சொல்வதன்றி
நேத்திரங்கள்‌ போற்காட்ட நேராவே—நேத்திரங்கள்‌
சிற்றம்பல வன்றிருவருள்‌ சீர்வண்ண மென்றே
உற்றிங்‌ கறிந்தே னுவந்து


“மதமெனும்‌ பேய்‌ பிடித்தாட்ட ஆடுகின்றோர்‌” தம்மை நோக்கி,

“பேருற்ற உலகில்‌ உறுசமய மதநெறி எனும்‌ பேய்ப்‌ பிடிப்பற்ற பிச்சுப்பிள்ளை விளையாட்‌டென” உணர்ந்திடுவீர்‌ என்றும்‌, “பன்னெறிச்‌ சமயங்‌கள் மதங்கள்‌ என்றிடும் ஓர்‌ பவநெறி இதுவரை பரவியது, இதனால்‌ சென்னெறி அறிந்திலர்‌ இறந்திறந்து உலகோர்‌ செறி இருள்‌ அடைந்தனர்‌ ஆதலின்‌” “திரு அருள் நெறி” கூறுகிறேன்‌ கேண்மின்‌:

“சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே சாத்திரச்‌ சந்தடிகளிலே கோத்திரச்‌ சண்டையிலே ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்‌” “சாத்திரங்கள்‌ எல்‌லாம்‌ தடுமாற்றம்‌ சொல்வதன்றி நேத்திரங்கள்‌ போற்‌காட்ட நேராவே”.

“வேதாகமங்கள்‌ என்று வீண்வாதம்‌ ஆடுகின்‌றீர், வேதாகமத்தின்‌ விளைவறியீர்‌, சூதாகச்‌ சொன்னதலால்‌ உண்மை வெளி தோன்ற உரைத்தல் இலை, என்ன பயனோ இவை” என்று கேட்டு “இருட்சாதித்‌ தத்துவச்‌ சாத்திரக்‌ குப்பை இருவாய்ப்புப்‌ புன்‌ செயில் எருவாக்கிப்‌ போட்டு, மருட்சாதி சமயங்கள்‌ மதங்கள்‌ ஆச்‌சிரம் வழக்கம்‌ எலாம்‌ குழிக்கொட்டி மண்மூடிப்‌ போட்டு” விடுங்கள்‌, ஏனெனில்‌ “நால்வருணம்‌ ஆச்‌சிரம் ஆசாரம்‌ முதலாம்‌ நவின்ற கலைச்சரிதம்‌ எலாம்‌ பிள்ளை விளையாட்டே” யாகும்‌, நானும்‌ “சாதியும்‌ மதமும்‌ சமயமும் தவிர்த்தேனே சாத்திரக்‌ குப்பையும்‌ தணந்தேன்‌” என்று தமது அனுபவத்தையும்‌ எடுத்து கூறி “கண்மூடி வழக்கமெலாம்‌ மண்மூடிப்‌ போக”

என்றுமுரைத்து சமரச சன்மார்க்க நெறிக்கு வருக என்று இராமலிங்கனார்‌ மக்களை அழைத்தார்‌.

அந்த அழைப்புக்‌ கேட்டு அகங்குழைந்த அன்பர்‌கள்‌ என்‌ செய்கின்றனர்‌. வீடு மெழுகி விளக்‌கேற்‌றி, ஏடு திருப்பி இரைந்து கூவி, ஏதேதோ விளையாட்டு விளையாடி விழாக்‌ கொண்டாடுகின்றனர்‌.

சாதி மத பேதம்‌ பித்துப்பிள்ளை விளையாட்டு என்‌றார்‌ அவர்‌. இவர்‌ அந்த பித்தம்‌ போக்கினரோ?

இல்லை!

சாத்திரக்‌ குப்பையிலே புரளாதீர்‌ என்றுரைத்தாரே அவர்‌, இவர்‌ புரளாது விட்டனரோ!

இல்லை!

வேதாகமங்கள்‌ சூதான மொழிகள்‌ என எச்சரித்‌தாரே அடிகள்‌, பக்தர்கள்‌ விடுத்தனரோ அவைகளை?

இல்லை!

நால்வருணம்‌ கூடாது என்று நவின்றாரே அவர்‌, இவர்‌ அதனை நீக்கினரோ?

இல்லை!

மருட்சாதி சமயங்கள்‌ முதலியனவற்றை குழிக்‌கொட்டி மண்‌ மூடிப்போட்டு விடுங்கள்‌ என்று கூறினாரே, அது செய்தனரோ?

இல்லை!

வேறு என்‌ செய்தனர்‌? விழா கொண்டாடினர்‌, விளக்கேற்றினர்‌, வீதிவலம்‌ வந்தனர்‌. தனித்தனி முக்‌கனி பிழிந்தனர்‌! பக்குவம்‌ செய்து பருகினர்‌.

வாழையும்‌ கத்தரிப்‌ பிஞ்சும்‌ முருங்கையும்‌ பிறவும்‌ நறுக்கிக்‌ கொட்டிச்‌ சமைத்தனர்‌, காய்கறிக்‌ குழம்‌பெலாம்‌ கடுக ஒழிக என்று கூறி உண்டனர்‌. அருட்‌பெருஞ்ஜோதி தனிப்பெருங்‌ கருணை என்று மூழ்கினர்‌, அருட்பா படித்தனர்‌, அயர்ந்தனர்‌, துயின்றனர்‌?

ஜாதியும்‌ போலிச்‌ சமயமும்‌ நால்வருணமும்‌ அதன்‌ ஆச்சார அனுஷ்டானங்களும்‌, சாத்திரமும்‌, வேதமும்‌, ஆகமும்‌, அடிகள்‌ எவை எவை தவிர்மின்‌ என்று எடுத்‌துரைத்தாரோ அவைகள்‌ எல்லாம்‌ விழா கொண்டாடுபவரை நோக்கி, சிரித்துவிட்டு, வீணர்‌ விழா இன்று. எமது வெற்றிவிழா என்றும்‌ உளது. இன்று அவர்கள்‌ அருட்பா படிப்பர்‌, நாளைமுதல்‌ எமதடி பணிவர்‌, இன்று இராமலிங்கரின் பக்தர்களாயினர்‌ நாளைமுதல்‌ எமது அடிமைகள்‌” என்றுரைத்து இடிக்கும்!

அந்தோ! அந்தோ! எத்தனை எத்தனை நன்னெறிகள்‌ இந்நாட்டிலே நாவாரப்‌ பேசிப்‌ பேசியே மங்கி மடித்தன! எத்துணை பெரியார்கள்‌. அடியார்கள்‌ இங்கு பூஜிக்கப்பட்டே கொல்லப்பட்டனர்‌! எந்தெந்த அருள்‌ மொழிகள்‌ புகழப்பட்டு மறைக்கப்பட்டன ஏன்‌ பிறந்தனர்‌ இந்நாட்டில்‌! ஏன்‌!

வள்ளலாரின்‌ வாய்மொழிகள்‌

தயவுக்குத்‌ தடைகள்‌ - ஜாதி, சமயங்கள்‌

தத்துவ ஒழுக்கம்‌ பற்றிச்‌ சமயங்கள்‌ ஏற்படுத்‌தப்பட்டிருக்கின்றன. தொழில்‌ ஒழுக்கம்‌ பற்றிச்‌ ஜாதிகள்‌ ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. தயவை விருத்தி செய்வதற்குத்‌ தடையாயிருப்பன - சமய ஏற்பாடு, ஜாதி ஏற்பாடு முதலிய கட்டுப்பாடு ஆசாரங்கள்‌. அவையாவன:

ஜாதியாசாரம்‌, குலாசாரம்‌, ஆசிரமாசாரம்‌, லோகாசாரம்‌, தேசாசாரம்‌, கிரியாசாரம்‌, சமயாசாரம்‌, மதாசாரம்‌, மரபாசாரம்‌, கலாசாரம்‌, சாதனாசாரம், அந்தாசாரம்‌, சாஸ்திராசாரம்‌ முதலிய ஆசாரங்கள்‌.

ஆதலால், மேற்குறித்த ஆசாரங்கள்‌ ஒழிந்து, சுத்த சிவ சன்மார்க்க சத்திய ஞான ஆசாரத்தை வழங்கிப்‌ பொதுநோக்கம்‌ வந்தால்‌, மேற்படி காருண்யம்‌ விருத்‌தியாகிக்‌ கடவுளருளைப்‌ பெற்று, அனந்த சித்தி முத்திகளைப்‌ பெறக்கூடுமேயல்லது, இல்லாவிடில்‌ கூடாது.

சமய நூல்களில்‌ பிழை

சமய மத சாத்திரங்களில்‌ அநேக இடங்களில்‌ பிழைகள் இருக்கின்றன. அதற்குக்‌ காரணம்‌ அவற்றை இயற்றியவர்கள்‌ மாயையின்‌ சம்பந்தத்தை அடைந்திருந்தவர்கள்‌. ஆகையால்‌, முன்னுக்குப்‌ பின்‌ மறைப்புண்டு தப்புகள்‌ நேரிட்டிருக்கின்றன. மாயையை வென்ற சுத்த ஞானிகளுக்கல்லது மற்றவற்குப்‌ பிழையற இயற்ற முடியாது. அந்தப்‌ பிழைகள் சுத்த சன்மார்க்கம்‌ விளங்குகிற காலத்தில்‌ வெளிப்படும்‌.

தென்மொழி

இடம்பத்தையும்‌, ஆரவாரத்தையும்‌, பிரயாசத்தையும்‌, பெருமறைப்பையும்‌, போதுபோக்கையும் உண்டுபண்ணுகின்ற ஆரிய முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்லவொட்டாது, பயிலுவதற்கும் அறிதற்கும்‌ மிகவும்‌ இலேசுடையதாய் பாடுதற்கும் துதித்தற்‌கும் மிகவும்‌ இனிமையுடையதாய்‌ சாகாக்‌கல்வியை இலேசில்‌ அறிவிப்பதாய்த்‌ திருவருள்‌ வலத்தாற்‌ கிடைத்த தென்மொழியொன்றனிடத்தே மனம் பற்றச்செய்து, அத்‌தென்‌மொழிகளாற்‌ பல்வகை தோத்திரப்‌ பாட்டுகளைப்‌ பாடுவித்தருளினீர்‌.

சுத்த சன்மார்க்கப்‌ பிரார்த்தனை

ஒருவன்‌ பிரார்த்தனை செய்வதில்‌ அவனுக்கு மட்டும்‌ செய்வது சரியல்ல. இந்த உலகமெல்லாம் வாழும்படி பிரார்த்தனை செய்‌யவேண்டும்‌. அப்படி செய்வதால்‌, ஒருவனுக்கு வேண்டியவையெல்லாம் அடங்கிவிடுகின்றன. பிரார்த்தனை செய்யவேண்டுமெனில்‌, இப்படித்தான்‌ செய்யவேண்டும்‌.


கு. காமராஜ்‌

சிறப்புரையுடன்‌

அழகிய நான்கு வண்ண மேல்‌ அட்டை

(வெள்ளைத்தாள்‌ 96 பக்கம்‌)

நேருஜி நினைவும்‌ நிகழ்ச்சியும்‌

விலை. ரூ. 1.00

விபரங்கட்கு
தூயமலர்‌ பதிப்பகம்‌
9, தருமராஜா கோவில்‌ தெரு,
சென்னை-2.