அருள்நெறி முழக்கம்/இலக்கியமும் கடவுள் நெறியும்

இலக்கியமும் கடவுள் நெறியும்


பேரன்புடையீர்!

மிழர் பண்டொரு காலத்துப் பீடுடன் வாழ்ந்தனர். நாகரிகத்தின் உச்ச நிலையில் உவகையோடு வாழ்ந்தனர். இமயத்திலும் - கங்கை வெளியிலும் - கடாரத்திலும் கன்னித் தமிலொழியை ஒலித்து, ஒப்பற்ற புகழோடு வாழ்ந்தனர். தமிழர் நாட்டின் வட எல்லை ஒருகால் கங்கை நாடு - மற்றொருகால் இமயப்பனிவரை இமயத்தின் உச்சியில் தமிழர் கொடி பறந்தது ஒருகாலத்தில். தமிழ்ப் பெருங்குடியினரது கருத்தெல்லை என்றுமே உலக எல்லையாகவே இருந்து வந்திருக்கின்றது. இங்ஙனம் கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்தே தோன்றி - ஓங்குயர் சீர்த்தியுடன் வாழ்ந்த தமிழினத்தார் காலப்போக்கிலே தளர்வெய்தினர். ஒன்றுபட்டிருந்த தமிழ்க்குலம் சாதியின் பெயராலும் சமயத்தின் பெயராலும் சிதறுண்டது. வலிவும், பொலிவும் இழந்து நாமமதே தமிழரெனக் கொண்டு, ஊமையராய் - செவிடராய் வாழத் தலைப்பட்டனர். அவர்தம் நாடும் சீரழிந்தது. நாகரிகமும் நலிவெய்தியது. இன்பத் தமிழும் இருப்பிடம் தேடலாயிற்று. தேய்ந்த தமிழகத்தின் எல்லையாம் வடவேங்கடத்திற்குக் கூட இல்லை - இந்தச் சென்னை நகருக்குக் கூட ஆபத்து ஆந்திர சகோதரர்களால் ஏற்படுகின்ற அளவுக்குத் தமிழரது உறக்கம் நீடித்து விட்டது. உறக்கத்திற்கும் ஒரு விடிவுக்காலம் வரத்தானே வேண்டும். தமிழரைப் பேருறக்கத்தினின்றும் எழுப்பி, ஆக்கத்துறையில் அழைத்துச் செல்லும் தமிழரசுக் கழகத்தினரை வாழ்த்துகின்றோம். தமிழர் வாழ்வே தமது வாழ்வெனக் கருதி, தளராது தொண்டாற்றும் கழகத் தலைவர் ம.பொ.சி அவர்களை நெஞ்சங்கலந்த அன்போடு வாழ்த்துகின்றோம். கழகத்தின் சார்பில் நடைபெறும் இந்தத் தமிழ் இலக்கிய மாநாட்டில் கலந்துகொள்ளும் வாய்ப்பை நல்கிய திருவருளை நினைந்து வந்தித்து வாழ்த்திப் பணியில் மேற்செல்ல விழைகின்றோம்.

தமிழகத்தின் சிறப்பியல்புகள்

தமிழ் தன்னேரில்லாத தனிமொழி. தொன்மை நலஞ் செறிந்த தொன்மொழி. புதுமை நலம் பலவும் பூத்துப் பொலியும் புதுமொழி. பழமையும் புதுமையும் கலந்து களிநடம் பயிலும் ஒரே மொழி. இனிமைப் பண்பிற் சிறந்து விளங்கும் சீர்சான்ற மொழி. தண்ணளியின் தவைவெலாம் பெற்றொளிரும் பெருமொழி. கடவுட்சார்பு பெற்று, காலத்தொடுபடாத கன்னித் தமிழாகக் காட்சியளிக்கும் ஒரு தனிமொழி. இன்பத் தமிழில் இலக்கியங்கள் நிறைய உண்டு. தமிழ் வளர்த்த சங்கங்களுக்கு முன்னும் பின்னும் தமிழ்ப்பெருமக்களின் உணர்வுத் திறனிலிருந்து உருவெடுத்த இலக்கியங்கள் பல. தமிழகத்தில் தோன்றிய இலக்கியங்களிற் பல கிடைக்கவில்லை. அவ்வப்பொழுது எழுந்த கடல்கோள்களால் பல இலக்கியங்கள் கொள்ளப்பட்டன. தமிழர் பெட்புறப் பேணாமையின் காரணத்தால் கறையான்கள் ஒரு சிலவற்றைச் சுவை கண்டழித்தன, என்றாலும் நல்லூழின் காரணத்தால் ஒருசில இலக்கியங்கள் இருந்தன - இருந்து கொண்டிருக்கின்ற வளர்ந்து கொண்டுமிருக்கின்றன.

எது இலக்கியம்

அன்றாட வாழ்க்கை அல்லல் நிறைந்த வாழ்க்கை. துன்பச்சூழல் கவ்விடும் இடும்பையே நிறைந்த வாழ்க்கை. இவ்வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் தளர்வு தலைகாட்டும். தளர்வாலும், துன்பத்தின் சூழலாலும் - இன்பத்தின் நிலைக்களனாய வாழ்க்கை, வெறுப்பு நிறைந்ததாக மாறிவிடும். வெறுப்புணர்ச்சியின் காரணமாக நேர்மை என்ற நேர்க்கோட்டிலேயே - செம்மை நலஞ்சிறந்த செந்நெறியிலே செல்ல வேண்டிய மக்கள் வழிதவறிச் செல்ல நேரிடும். அப்பொழுது, நல்ல நினைவையும் அறிவையும் உணர்வையும் ஊட்டித் தளர்ச்சியை நீக்கி நேர்மை பொருந்திய நெறியிலே அழைத்துச் செல்லுந் திறமுடையனவே நல்ல இலக்கியங்கள். நல்லனவே எண்ணும், புலனழுக்கற்ற அந்தணாளர்களின் உணர்ச்சிகளே நல்ல இலக்கியங்கள். நல்லெண்ணங்களின் தொகுப்பே இலக்கிம் என்று கூறுவர் எமர்சன். மக்களுக்கு நல்லொழுக்கத்தைக் கற்றுக் கொடுத்து, வாழ்வாங்கு வாழச் சொல்லிக் கொடுப்பதே நல்ல இலக்கியத்திற்குரிய சான்று. இலட்சியம் நிறைந்த வாழ்க்கை நெறியில் அழைத்துச் செல்லும் ஒப்பற்ற தொண்டைத் திறம்படச் செய்வதே பேரிலக்கியமெனக் கருதினர் தமிழ்மக்கள். அதனால்தான் தமிழர்கள் "இலக்கு" என்ற சொல்லிலிருந்து தொடங்கி வளர்த்துள்ளனர்.

தமிழிலக்கியங்கள்

தமிழ்ப் பெருமக்களது அன்பு பொருந்திய - அறந்தழுவிய-அருள்நலங்கனிந்த வாழ்க்கை அடிப்படையிலிருந்து எழுந்த இலக்கியங்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய சங்க நூல்கள். பின்னர் தமிழ் இலக்கியப் பூஞ்சோலையில் பல இலக்கிய மலர்கள் பூத்தன. தமிழ் இலக்கிய வளர்ச்சியில் இனம் - மதம் முதலிய மாறுபாடுகளையெல்லாம் கடந்து பல பெருமக்கள் பணி செய்துள்ளனர். திருவள்ளுவர், திருத்தக்கத்தேவர், சேக்கிழார், கம்பர், இளங்கோவடிகள், உமர்ப்புலவர், தேவாரம் பாடிய மூவர், மாணிக்கவாசகர், ஆழ்வார்பெருமக்கள், தாயுமானார், வள்ளலார், பாரதியார் முதலிய பல பெரும் புலவர்கள் - சமுதாயச் சிற்பிகள் எல்லோருக்கும் தெரிந்தவர்கள், தெரிந்து கொள்ள வேண்டியவர்கள். வையகமும் வானகமும் வாழும்வரை இவர்களுடைய கருத்தோவியங்கள் வாழும் தகுதியுடையன.

தமிழிலக்கியம் காட்டும் நெறி

முன்னுரையில் குறித்தோம், தமிழர் இனம் அனைத்தும் ஒரு குலம் என்று. இந்தப் பரந்துபட்ட எண்ணம் தமிழினத்திற்கேயுரிய தனித்த இயல்பு. "யாதும் ஊரே யாவருங் கேளிர்” என்ற உயரிய நாகரிகம் தமிழர் நாகரிகம். இத்தகு புனித நாகரிக வாழ்க்கையினின்று தமிழர் நழுவினர். அதிலும் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று கூறி, "மகவெனப் பல்லுயிரையும் ஒக்கவே பார்க்கும்” பண்பினை நல்கும் சமயத்தின் போரால் குறுகிய பல சாதிப் பிரிவுணர்ச்சிகளையும், வகுப்புவாத உணர்ச்சிகளையும் கற்பித்துக் கொண்டனர். சமயநெறிக்குச் சாதிப்புன்மை உடன் பட்டதல்ல. மக்களினம் அனைத்தும் ஓரினம். அந்த இனத்தில் தமிழர் ஓர் குலம் என்ற பேருண்மையை வலியுறுத்துகின்றன தமிழ் இலக்கியங்கள்.

“பெரியோரை வியத்தலும் இலலே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே”

என்று கூறி, உயர்வு தாழ்வுப் புன்மைகளைப் புறக்கணிக்கிறது தமிழிலக்கியம். ஒரு நாட்டு மக்களது வாழ்க்கையில் இன்பமே பொருந்தி விளங்க அமைதி நிலவும் சூழ்நிலை தேவை. அமைதியும் ஓரிடத்திலிருந்து பூரண இன்பத்தைக் காண முடியாது.

மக்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இன்பம் பொலிவதற்கு, வீடு, ஊர், நாடு முதலிய மூன்றிடங்களிலும் அமைதி நிலவ வேண்டும். நிறைந்த அறிவும், ஒப்புரவுப் பண்பாடும், கடமையாற்றும் உணர்ச்சியும் உள்ள மக்களினம் வாழ்தலே அமைதிக்குக் காரணம். இல்லத்தில் அமைதி நிலவ, வாழ்க்கைத் துணைவியும், மக்களும், ஏவலாளர்களும், அறிவுநலம் நிறையப் பெற்றவராய், குறிப்பறிந்து செயலாற்றும் திறமுடையராயிருத்தல் வேண்டும்.

ஊரில் அல்லது நகரத்தில் அமைதிநிலவ ஆன்றவிந்தடங்கிய சால்புடைப் பெருமக்கள் பலர் வாழ்தல் வேண்டும். நாட்டில் அமைதி நில அரசியல், அறத்திற்கு மாறுபட்டன செய்யாத நிலையிலே அமைந்திருத்தல் வேண்டும். இங்ஙனம் இருக்கும் நாட்டில், கவலையற்ற இன்ப வாழ்வும் பூரண அமைதியும் நிலவும் என்பதை, “யாண்டு பலவாக நரையிலவாகுதல்” என்று தொடங்குகின்ற புறப்பாட்டு விளக்குகின்றது. தமிழிலக்கியம் காட்டுகின்ற மற்றொரு பண்புநெறி இன்னாதன செய்தாருக்கும் இனியவே செய்தலாம். கேளிர்போல பயின்றோர் நஞ்சு கொடுப்பினும், உண்பர் நனிநாகரிகர் என்று பேசுகிறது தமிழ் இலக்கியம். இப்பண்பாட்டிதைதான் நமது திருவள்ளுவனார்,

“பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்”

என்று கூறி விளக்குகின்றார். உலகம் ஒன்றையே சார்ந்திருக்கின்றது. அந்தச் சார்பு பற்றியே நிலைபெற்றும் இருக்கிறது. அந்த ஒன்றுதான் பண்பாடு. பண்பாடற்ற நிலையில் மக்கள் வாழும் உலகு இருப்பதைவிட அழிவதே நல்லது என்பது திருவள்ளுவர் கருத்து.

“பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன்”

என்பது திருக்குறள். இங்ஙனம் தமிழிலக்கியங்கள், பரந்துபட்ட - விரிந்த நோக்கத்தையும் - ஒப்புரவுப் பண்பையும் வளர்த்து மக்களினத்தையும் அமைதியும் இன்பமும் நிறைந்த - பண்பாட்டிற் சிறந்த பெருவாழ்வு வாழத் துணை செய்து நிற்கின்றன.

இலக்கியமும் கடவுள் நெறியும்

தமிழ்ப் பெருமக்களது அறிவு, உணர்ச்சி, தெளிவு முதலியன குறைவறப் பொருந்திய வாழ்க்கையின் அனுபவத்தினின்று எழுந்ததுதான் கடவுட் கொள்கை.

தமிழ்க்குடியினர் மிகப் பழங்காலந் தொட்டே, நெஞ்சம் தோய்ந்த சமயவாழ்க்கை வாழ்ந்து, கடவுள் வழிபாட்டில் ஈடுபட்டிருக்கின்றனர். தாம் கண்ட கலைகள் அனைத்தையும், இசை கூத்து, ஒவியம், சிற்பம், இலக்கியம்) கடவுள் நெறியின் சார்பில் நின்று, வளர்த்து, வளம்படுத்தி, இறையருட்பணிக்கே பயன்படுத்தினர். தமிழிலக்கியங்கள் அனைத்திலும், கடவுள் நெறியும், வழிபாட்டுணர்ச்சியும் உயிர்நிலையாக அமைந்து கிடக்கின்றன.

பழங்காலத் தமிழ்ப்பெருமக்கள் நகரமனைய பெருங்கோயில்களை மூவா முழுமுதற்பொருளுக்கு எடுத்திருக்கின்றனர். ஏறக்குறைய இற்றைக்குப் பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே, கடல் தென்குமரி நாட்டிலே, நகரமனைய திருக்கோயில் இருந்ததாகத் தெரிகிறது. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பானைக் காரிக்கிழார் என்னும் தமிழ்ப்புலவர் பாடுகின்றார். தமது பாடலின்மூலம் அம்மன்னனுக்கு நல்லுணர்வு கொளுத்துகின்றார். யாருக்கும் தாழாத கொற்றக்குடை தாழ்க என்று கூறுகின்றார். ஆம். மன்னவனுக்கெல்லாம் மன்னவனாக, பிறவா யாக்கைப் பெரியோனாக விளங்கும் முக்கட்செல்வரின் திருக்கோயிலை வலம் வருவதற்காகக் கொற்றக்குடை தாழ்க என்று செவியறிவுறுத்துகின்றார்.

“பணியிய ரத்தை நின் குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே”

என்பன புறநானூற்று அடிகள். திருக்கோயில்கள் நகரமென்று நவிலப்பெறுகின்ற அளவுக்குப் பரந்து, விரிந்து அகன்றதாக அமைந்திருந்திருக்கின்றன.

கற்றவர்கள் போற்றும் கலித்தொகையிலும் “கடவுட் கடிநகர் என்று திருக்கோயில்கள் பேசப்பெற்றுள்ளன. இன்பமும், துன்பமும் கலந்த வாழ்க்கையிலே, நல்லனவே நாடிக் கைக்கொள்ளச் சாதனமாய் இருப்பது கடவுள் நெறியேயாம். கடவுள் நெறியும், வழிபாட்டுணர்ச்சியும் நல்ல தெளிவினின்று உருவாக்கும் உயர்ந்த நெறிகள். அதனால்தான்் முத்தமிழ்க் காப்பியம் ஆக்கித் தந்த இளங்கோவடிகள் "தெய்வந் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்” என்று அறவுரை கூறி நம்மையெல்லாம் அருள்நெறியிலே ஆற்றுப்படுத்துகின்றார்.

இன்றைய நிலை

இன்று தமிழன்பும், தமிழார்வமும் மக்களிடையே அரும்பி மலர்ந்திருக்கிறது. ஆனால், பழந்தமிழ்க் கொள்கைக்கு முரண்பட்ட நிலையில் ஒரு சாரார் தமிழை வளர்க்க, தமிழர் நிலையை உயர்த்தப்பாடுபடுகின்றனர். தமிழ்வேறு, சமய நெறிவேறு என்று கருதுகின்றனர். வாழ்க்கை வேறு, சமயநெறிவேறு என்று கருதுகின்றனர். தமிழருக்கே உரிய சமய நெறியினைப் பிறருடையது என்று தவறாகக் கருதுகின்றனர். தமிழினத்தின் குருதியிலே கலந்து படிந்திருக்கின்ற சமயப் பண்பினை வேண்டாதன என்று கருதுகின்றனர். சமுதாயத்தின் பொது நிலையங்களாக, உணர்வூட்டும் நிலையங்களாக, கலைவளர்சுடங்களாகக் காட்சியளிக்கும் திருக்கோயில்களைப் புறக்கணிக்கின்றனர். புலவர் பெருமக்களது இலக்கியங்களையெல்லாம், தமது அறிவின் திறத்திலேயே நின்று, ஒவ்வாமை கண்டு இழித்துப் பேசுகின்றனர். திருவள்ளுவரது திருக்குறளிலும் கூட முழுதும் கொள்ளத்தக்கது இல்லை, அதிலும் வேண்டாதன உண்டு என்று சொல்லுகின்ற அளவுக்கு ஒரு சில தமிழர்கள் வந்துவிட்டதை என்னென்று கூறுவது? இதுவா தமிழன் நிலை? இந்த நிலை வளருமானால் தமிழ் வளருமா? தமிழினம் தலைநிமிர்ந்து வாழ முடியுமா? “நல்ல புத்தகத்தை அழித்தல் கொடுமையிலும் கொடுமை" என்று மகாகவி மில்டன் கூறுகின்றான். எனவே, பண்டைத் தமிழ் இலக்கியங்களைப் பாங்குறப் படித்து, வாழ்க்கையில் அமைத்துக் கொள்ள வேண்டியது தமிழரின் கடமை; தலையாய கடமை.

{[larger|நமது கடமை}}

தமிழ்நாடு தனிநாடாக ஆகும் காலம் விரைவில் வருகிறது. தமிழர் தனித்த நாடு பெறுவதோடு அமைதி கொள்வது கூடாது. தனி வாழ்வு, பொதுவாழ்வு இரண்டிலும் தமிழ்மொழி சிறந்த இடம் பெறச் செய்ய வேண்டும். தமிழர்களது வீட்டிலே, மன்றங்களிலே, அரசியலிலே ஆலயங்களிலே எங்கும் தமிழ் முழக்கம் கேட்கப் பெற வேண்டும்.

 "வினையே ஆடவர்க்கு உயிரே" என்ற தத்துவ வழிநின்று, உழைப்பால் தமிழகத்தை செல்வங்கொழிக்கும் திருநாடாக ஆக்குதல் வேண்டும். தமிழகத்து மக்கள் அனைவரும், பண்டைத் தமிழ் இலக்கியங்கள் காட்டும் நல்லற நெறிகளைத் தெரிந்து கொண்டு, வாழ்க்கையில் அமைத்துக் கொள்ள வேண்டுவன எல்லாம் செய்ய வேண்டும். அதாவது, நகரங்களிலும், கிராமங்களிலும், நல்ல தொண்டர்களைக் கொண்டு, தமிழ் நாகரிக வாழ்க்கையினைப் பரப்பி வளர்க்க வேண்டும்.

கலை, கலைக்காக என்னும் கொள்கை தமிழர்க்கு உடன்பாடற்றது. கலை வாழ்க்கைக்கே என்பது தமிழர் கொள்கை. ஆதலால், இன்பத் தமிழிலக்கியங்கள்காட்டுகின்ற ஒப்பற்ற அறப்பெருவாழ்வு நெறியில் வாழ்வோமாக, தமிழர் தன் மொழியை வளர்க்கும் முயற்சியில் ஈடுபடுகின்றபொழுது, குறுகிய நோக்கத்தில் தளைப்படா வண்ணம், பிறமொழிகளையும் பேணி, அவற்றின் பண்புகளையும் தழுவிக் கைக் கொண்டு தன் மொழி வளர்ச்சிக்குப் பயன்படுத்துவார்களாக.

அதுபோலவே, சமுதாய உணர்ச்சியோடு, உலக மக்கள் அனைவரையும் உடன்பிறந்தாராகக் கருதிப் பேரன்பு செய்வார்களாக.

தொகுப்புரை

இதுவரையில் இனிமை நலம் மிகப் பெற்றும் இலக்கிய வளம் நிறையப்பெற்றும் சிறந்து விளங்குகிறது. செந்தமிழ் மொழி என்பதையும், மக்களை அன்பு நெறியிலும், அறநெறியிலும் அழைத்துச் சென்று இன்பம் பயக்கின்ற திறமுடையனவே நல்ல இலக்கியங்கள் என்பதையும், தமிழ் இலக்கியங்கள் பரந்துபட்ட விரிந்த மனப்பான்மையையும், அமைதியும், இன்பமும் அளிக்கக் கூடிய நெறிமுறைகளையும், இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யும் பண்பாட்டினையும் கூறி விளக்கி, ஒழுக்கத்திற்கும், நல்லின்பத்திற்கும் பெருந்துணையாக இருக்கும் சமய நெறியினையும், வழிபாட்டுணர்வினையும் வளர்க்கின்றன என்பதையும், இன்றைய தமிழகத்திலே, பண்டைத் தமிழ் இலக்கியங்களுக்குப் புறம்பான கருத்துக்கள் பேசப்பெறுவது தனித் தமிழ் நாகரிகத்திற்கு மாறுபட்ட செயல் என்பதையும் நினைவிற்குக் கொண்டுவந்து, தமிழர் தமது இயல்பு தெரிந்து பண்டைப் பெருமக்கள் வாழ்ந்த பெருவாழ்வினை வாழ வேண்டும் என்பதையும், தமிழர் குறுகிய பல வெறுப்புணர்ச்சிகளுக்கும், சாதிப் பிணக்குகளுக்கும் ஆளாகக் கூடாது என்பதையும் கூறி வந்தோம்.


முடிப்புரை

பேரன்புடையீர்!

பண்டு தமிழர் வாழ்ந்த நிலை, இடையில் வாழ்ந்த நிலை, இன்று வாழும் நிலை ஆகியவற்றைச் சிந்தித்துப் பார்ப்போம். சிந்தனையின் பயனாக, தளர்ந்துள்ள தமிழ்க்குடியினர் பீடுடைப் பெருவாழ்வு வாழ வேண்டுவன செய்வோமாக. தமிழ்நாடு வாழ, தமிழர் நிலை உயர, தமிழ்மொழி சிறப்புற, தமிழ்ப் பண்பாடு மலர, பல துறைகளிலும் பணியாற்றி வருகின்ற தமிழரசுக் கழகத்தினரைப் பாராட்டுகின்றோம். தமிழ்த் தொண்டே தவத்தொண்டு என்று எண்ணி, இலக்கியத் துறையில் பணியாற்றும் அன்பர் திரு. ராபி. சேதுப்பிள்ளை அவர்கள் இவ்விலக்கிய மாநாட்டின் தலைவராக இருப்பது மிகவும் பொருத்தமானதொன்று.

இந்த வாழ்த்துரை வழங்குகின்ற உணர்விற்கு இளமைக் காலத்திலேயே வித்திட்ட பெருமை திரு.பிள்ளை அவர்களுக்கு உரியது. மாநாட்டைத் தொடங்கி வைக்கும், கலை வளர்க்கும் செல்வர் செட்டிநாட்டரசர் அவர்களுக்கு நமது வாழ்த்து. பன்மொழிப் புலமையோடு அன்றி, பண்பிற் சிறந்த பேருள்ளம் படைத்து, நாளும் நல்லனவே நாடிச் செய்யும் திருத்தொண்டர் திரு. தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் அவர்கள் முன்னிற்கக் கூட்டப் பெற்றுள்ள இம்மாநாடு, தமிழ் மக்களிடையே நல்ல ஒரு புத்துணர்ச்சியை ஊட்டுவிக்கும் என்று நம்புகின்றோம்.



சென்னையில் தமிழரசுக் கழகத்தினர் நடத்திய தமிழிலக்கிய மாநாட்டில் தவத்திரு அடிகளார் ஆற்றிய வாழ்த்துரை.