அருள்நெறி முழக்கம்/தமிழகம் காட்டும் செந்நெறி


தமிழகம் காட்டும் செந்நெறி


மிழரசுக் கழகத்தினர் ஆதரவில் நடைபெறும் இவ்விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

தமிழன் புதுமைக்கும் புதுமையானவன்; பின்னைப் பழமைக்கும் பழமையானவன். அவனது வாழ்வு எவ்வளவு உயர்ந்திருந்தது - அவன் எத்தகு பீடும் பெருமையும் சீரும் சிறப்புங் கொண்டு வாழ்ந்து வந்தான் என்பது மொழியிலக்கணத்தின் அடிப்படையில் கலாசாரத்தின் அடிப்படையில் எழுந்த நல்ல பல தமிழிலக்கியங்களை உண்மைக் கண்கொண்டு படித்துணர்ந்து சிந்தித்துப் பார்த்தால் நன்கு புலப்படும்.

தமிழரிடையே இடைக்காலத்தில் ஏற்பட்ட உறக்கத்தால் காலத்திற்கும் கருத்திற்கும் ஒவ்வாத சில மாறுதல்கள் காணப்பட்டன. அத்தகு மாறுதல்கள் தமிழினத்திற்கே இழிவு தரும் நிலையிலிருக்கின்றன. பண்டைத் தமிழ் மகன் அனைத்திலும் சீரும் சிறப்பும் பெற்று வாழ்ந்தான் என்பதைப் படித்தும் அறிந்தும் நாம் வாளாவிருக்கின்றோம்.

இமயத்திலே தமிழ்க்கொடியைப் பறக்கவிட்ட தமிழினம் - போரிலே வென்று கனகவிசயர் தலைகளில் கல் சுமக்கச் செய்து அந்தக் கல்லால் கண்ணகிக்குக் கோவில் எடுத்த தமிழினம் இன்று நம் நாட்டின் எல்லையைக் கூட இழந்து எல்லைக் குழுவினரின் தீர்ப்பை எதிர்பார்த்து நிற்கின்றது. ஏன்? இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் தனக்கே உரித்தான் தனதிருப்பிடத்தையும் வேற்று மொழிக்காரருக்கு விட்டுவிட்டு வாளாவிருக்கின்றது. புத்துலகக் கவி பாரதி பாடியபடி நாமெல்லோரும் நாமமது தமிழரென வாழ்கின்றோமேயன்றிப் பண்டைத் தமிழகங்கண்ட உண்மைத் தமிழர்களாக ஒருவருமில்லை. இத்தகு இழிவு நிலைமையைப் போக்கிச் செங்குட்டுவன் கண்ட வீரத் தமிழகத்தை - இளங்கோவடிகள் கண்ட இன்பத் தமிழகத்தைக் காண இளைஞர்கள் முன்வரல் வேண்டும்.

வாழ்ந்து பெருமைப்பட வேண்டிய தமிழினம் இன்று தாழ்ந்து கிடக்கின்றது. பெருமையின் எல்லைக்கோட்டையே தமது இலட்சியத்தின் இருப்பிடமாகக் கொண்ட தமிழினம் இன்று சிறுமையின் அடிக்கோட்டில் நின்று விளையாடுவதேன்? அங்குதான் அருளுடைப் பெருமக்கள் நன்கு சிந்தித்து பார்த்தல் வேண்டும். நமது சிந்தனை நல்லதொரு முடிவைக் காண வேண்டும். நாம் காண்கின்ற முடிவு அறிவுடைப் பெருமக்களும் - அருளுடைப் பெருமக்களும் . ஏன் படித்தோர் முதல் பாமரர் வரை ஒப்பத் தக்கதாகவும் இருக்க வேண்டும். நமது முடிவில் நல்ல பல கருத்துக்களிருப்பதால் வாழ்ந்த தமிழினம் வீழ்ந்த காரணம் நன்கு தெரியும்.

தென்றல்காற்று வீசிய பூஞ்சோலையிலே எக்காரணத்தால் வாடைக்காற்று வீசிற்று என்பதை நன்கு சிந்தித்துப் பாருங்கள். சந்தன வியாபாரம் செய்துவந்த தமிழினத்தார் சாக்கடை வியாபாரியாக மாறியதேன்? மக்கள் மனதில் - நல்லன காணவேண்டியவிடத்தில் வேண்டாதன-ஒதுக்கப்பட வேண்டியன - வளர்க்கப்பட்ட காரணத்தால் நாட்டிலும் விரும்பாதன பல உண்டாகத் தொடங்கின என்பது நாடும் நல்லன்பர்களும் நன்கறிந்த செய்தி.

மனம் பொய்த்தது - மாரியும் பொய்த்தது. மாரி பொய்த்த காரணத்தால் வளமை இருக்க வேண்டிய இடத்தில் வறுமை தலைவிரித்தாடத் தொடங்கிற்று. பண்டைத் தமிழினம் வறுமை வளமை என்ற வேறுபாடே கண்டதில்லை. கண்டிருக்கவும் முடியாது. காரணம் அன்றைய மக்களும் நாடும் வளமைக் கோட்டிலேயே வாழ்ந்து வந்தமையே.

இன்று எங்கு நோக்கினும் இந்த வேறுபாட்டுக் குரலைத்தான் கேட்க முடிகின்றது. நாட்டின் வளம் அத்தகு நிலைமைக்கு மாறி விட்டது. மக்கள் பல்வேறுபட்ட திக்கை நோக்கி ஒடிக் கொண்டிருக்கின்ற காரணத்தால் அவர்களிடம் வெறியும் வெறுப்புணர்ச்சியும் வளரத் தலைப்பட்டன.

இனவெறி மக்கட் சமுதாயத்தைக் கெடுக்கும் நஞ்சு. அதனை மக்களிடம் பரப்புதல் கூடாது. பரப்புவதும் தவறு என்பதை உணர்ந்து தக்க காலத்தில் தமிழ் மொழியின் பெயரால் தமிழினத்தின் நலங்கருதித் தோன்றியது தமிழரசுக் கழகம். வேறுபட்ட கருத்துக்களைப் பரப்பியதால் மக்கள் சிந்தனையை இழந்ததால் தவறான பாதையில் செல்லத் தலைப்பட்டனர். மக்களின் வாழ்வைப் பொருத்துத்தான் நாட்டின் போக்கும். அதனைப் போலவேதான், நமது மனம் மாறுபட்ட பல கருத்துக்களைப் பின்பற்றியதால்தான் நாட்டிலும் பல தவறான செயல்கள் நடக்கத் தொடங்கின.

தமிழ் மொழி - தமிழினம் - தமிழ் நாகரிகம் - தமிழ்க் கலாசாரம். தமிழர் பண்பாடு - அருள்நெறி - அன்பு நெறி சமரச சன்மார்க்க வழி - கடவுள் வழிபாடு முதலியவற்றிற்கெல்லாம் தமிழின் பெயராலும் தமிழ் இலக்கியத்தின் பெயராலும் ஊறு விளைவிக்க முற்பட்டார்கள் சிலர். மக்கள் மனதில் இத்தகு தவறான செயல்கள் இடம் பெறுமேயானால் நாட்டின் போக்கைச் சீர்கேடான நிலையில்தான் கொண்டுவந்து முடிக்குமென்பதை அறிந்த தமிழ்ச் செல்வர் - காலம் அறிந்த அறிஞர் ம.பொ.சி. அவர்கள் தமிழரசுக் கழகத்தை ஏற்படுத்தினார்கள்.

இன்றைய இளைஞர்கள் மொழியின்மேலுள்ள ஆர்வத்தால் தவறான சில செயல்களுக்கு ஆளாக முற்பட்டனர். அத்தகு இளமையுள்ளங்களைத் தட்டி எழுப்பி, “நீ செய்ய முனைந்திருக்கின்ற செயல் நல்லதுதான். அதே சமயத்தில் நீ செல்லுகின்ற பாதை தவறுடையது” என்பதை எடுத்துக்காட்டி அவர்கள் உள்ளத்திற்கு ஒரு புத்துணர்ச்சி கொடுத்து அவர்களை நல்ல வழியில் இட்டுச் செல்கின்ற பெருமை ம.பொ.சி அவர்களுக்கும் அவர்கள் நிறுவிய தமிழரசுக் கழகத்திற்குமே உரித்தானது என்பதை நல்லறிவு படைத்த பெருமக்கள் யாவரும் ஒப்புக் கொள்ளுவர் என்பதில் எள்ளத்தனையளவும் ஐயமில்லை.

இருண்ட தமிழகத்தில் புத்தொளி வீசத் தொடங்கிய ம.பொ.சி அவர்களும் அவர்கள் நிறுவிய தமிழரசுக்கழகமும் வாழ்கவென மனமார வாழ்த்துகின்றோம். எனது நெஞ்சங்கலந்த வாழ்த்து அவர்களுக்கு நல்லதொரு வாழ்வைக் கொடுக்குமென்ற நம்பிக்கையில் மேலே செல்ல முனைகின்றோம்.

பண்டைத் தமிழினம் தீமையினையும் ஏற்று வாழ்ந்து வந்தது. அதனைப் போலத்தான் நீங்களும் வாழ முற்பட வேண்டும். மறந்தும் நெறி பிறழ்ந்து வாழாதீர்கள். நெறியினின்றும் தவறி வாழுகின்ற வாழ்க்கை வாழ்க்கையாகாது. “மானம் போனபின் வாழ்வதுமொரு வாழ்வாமோ” என்ற குறிக்கோளில் அந்த உயரிய அடிப்படைக் கோட்டைப் பின்பற்றி வாழ்ந்தவன் தமிழன் - அவனது இலட்சியத்துக்கு எந்தவித இடையூறும் வராமல் பாதுகாப்பது அவர்களின் வழித்தோன்றலாகிய நம் கடமை.

தித்திக்கும் தேன் மொழி தமிழ் மொழி தமிழ்மொழியின் மூலம் தமிழ்நாட்டில் கடவுட் கொள்கை பரவிற்று. தித்திக்கும் தீஞ்சுவைத் தமிழை, ஊட்டி வளர்க்கின்ற தாயாகவும் உலகனத்தையும் ஆக்கிக் காக்கின்ற கடவுளாகவும் தமிழர்கள் கருதினர்; வாழ்த்தி வணங்கி வழிபட்டனர்.

எத்தனையோ மொழிகள் இன்று நாட்டில் உலவுகின்றன. அத்தனையும் படித்துப் பார்த்தால் இன்று உலகப் பொதுமொழியெனப் பேசப்படுகின்ற ஆங்கில மொழிக்குத் தனித்ததொரு சிறப்பில்லை. ஏனென்றால் தமிழ்த்தாயை வாழ்த்துகின்ற பாக்கள் - தமிழறிஞர்களை, தமிழ்ப் புலவர்களைப் பாராட்டுகின்ற பாக்கள் - தமிழில் இருப்பது போல வேறெந்த மொழியிலும் காண முடியவில்லை. தமிழைத் தாயென்றெண்ணித் தெய்வமென்று உளமார வாழ்த்தி வணங்கி வழிபட்டவன் தமிழன்.

தமிழ்நாட்டில்தான் இம்முறை தொன்று தொட்டு இருந்திருக்கின்றது. உலகினை ஒரு கொடியின்கீழ் ஆட்சி செலுத்திய ஆங்கில நாட்டிற்கூட இத்தகு பண்பாடு இருந்ததில்லை. இதிலிருந்து நமது முன்னோர்கள் அழுத்தமான தமிழ்ப் பற்றுக் கொண்டிருக்கிறார்களென்று தெரிந்து கொள்ள முடிகின்றது. அவர்கள் ஆக்கித் தந்த தமிழிலக்கியங்கள் அருள் நெறியில் அமைந்துள்ளன. பிற மொழிகளில் அவ்வாறில்லை.

கடவுள் தன்மைக்கு மாறுபட்ட எதிரான கருத்துக்கள் நமது நாட்டிலே தோன்றியிருப்பதை மக்கள் எல்லோரும் நன்கு அறிந்திருக்க முடியும். ஏனெனில் இன்றையத் தமிழகம் தமிழ் மொழியினை முற்றிலும் உணரவில்லை. வேற்று நாட்டவரின் நுழைவால் தமிழர்கள் தங்கள் மொழிப்பற்றை இழந்து விட்டார்கள். தமிழர்களின் தளர்ந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்டு வேற்று நாட்டவர்கள் தங்கள் மொழிச் சொற்களை இங்குப் புகுத்தினார்கள். இன்று தமிழர்கள் தங்கள் மொழியென்று சொல்லக்கூடிய அளவிற்கு வேற்றுமொழிகள் நம் நாட்டில் இடம் பெற்றுவிட்டன. இளைஞர்கள் ஏனைய மொழிகளைக் கற்றுக் கொள்வதால் தவறு ஒன்றுமில்லை. ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தின் தேசிய மொழியாகத் தமிழ்மொழிதான் இருத்தல் வேண்டும். தமிழ்மொழி அரசின் மொழியாக ஆதல் வேண்டும்.

நல்ல தூய தமிழ்மொழியில் எழுதினாலும் பேசினாலும் அதை இன்று பல தமிழர்கள் வரவேற்கவில்லை. தமிழ்மொழியில் பேசுவது கூட இன்று அரிதாகி விட்டது. தமிழர் தமிழ் மொழியினைக் கருத்திற்கொண்டு அதன் வளர்ச்சியிலேயே கண்ணோட்டம் கொண்டு நல்ல தூய தமிழில் பேசவும் எழுதவும் முனைந்தால் உறுதியாகத் தமிழ்மொழி ஆளுகின்ற மொழியாக மாறிவிடும். இம்முயற்சியில் ஒவ்வொரு தமிழனும் ஈடுபட வேண்டும்.

தமிழ்நாடு, தமிழ்மொழியென்று பேசுவதால் எழுதுவதால் பயனொன்றுமில்லை. அதன் வளர்ச்சி குறித்து ஆக்க வேலையின் முனைய வேண்டும். அந்தத் தாரக மந்திரச் சொற்கள் உள்ளக் கிளர்ச்சியை உண்டு பண்ண வேண்டும். கடவுள் நெறியின் அடிப்படையில் வாழுகின்ற நம்மிடம் சமயப் பற்று வளம் பெற வேண்டும். சிறந்த இலக்கியங்களும் இலக்கணங்களும் ஒருங்கே அமையப் பெற்றது தமிழ் மொழி ஒன்றுதான். இன்றைய இளைஞர்கள் அனைவரும் தமிழ்மொழிப் பற்றுடையவராய் இருப்பது போல் சமயப் பற்றுடையராயுமிருத்தல் வேண்டும்.

குறிப்பாகச் சொல்லப் போனால் தமிழர்களுக்குப் புத்துணர்ச்சி ஊட்டிய ம.பொ.சி யைப் பின்பற்றுகின்ற தமிழரசுக் கழகத்தாரிடம் சமயம் நன்கு வளம் பெற வேண்டும். அதற்கு இவர்கள் ஆவன செய்ய முனைய வேண்டும். “இந்நாட்டில் தமிழரசுக் கழகம் இருக்கும்வரை தமிழும் சமயமும் ஓங்கி வளரும். அதற்கு மாறானவர்கள் இங்கு வாழ வழியில்லை” என்ற சூழ்நிலை உண்டாதல் வேண்டும்.

இளங்கோவடிகள் நமக்கு ஒப்பில்லாத சிலப்பதிகாரத்தைத் தந்தார். அந்த உயரிய நூல் தமிழர் பண்பாட்டையும் அரசியலையும் நன்கு விளக்கிக் காட்டுகின்றது. அத்தகு இலக்கியங்களை மக்கள் படித்து நன்குணர வேண்டும்.

ஜாவா, சுமத்ரா போன்ற நாடுகளையும் தன்னகத்தே கொண்டிருந்த தமிழகம் இன்று தமிழ்நாட்டின் எல்லையைக் காக்க முடியாமல் தவிக்கின்றது. தமிழரசுக் கழகத்தார் இலக்கிய விழா எடுப்பது வரவேற்கத்தக்கதுதான். விழாக்கள் எடுப்பதுடன் சமயப் பற்றும் தமிழ்ப்பற்றும் வளம் பெற்றவர்களாக வாழ்ந்தால் நலம் பயக்கும். ஒவ்வொரு இளைஞனும் தமிழ்ப்பற்றும் தெய்வப்பற்றும் நிறைந்து நாட்டின் நலங்கருதி - சமுதாயத்தின் நலங்கருதி - சமயத்தின் நலங்கருதி நல்லதொரு தொண்டாற்ற முன்வரல் வேண்டும். நாட்டின் நலங்கருதுந் தொண்டர்கள் தமிழரசுக் கழகத்தில் அதிக இடம்பெற வேண்டுமென்று விரும்புகின்றோம்.

தமிழர்கள் பண்டொரு காலத்தில் பீடுடன் வாழ்ந்தார்கள். நாகரிகத்தின் உச்சநிலையில் வாழ்ந்து உலகிற்கு உணர்த்தியவர்கள் தமிழர்கள். இமயத்திலும் கங்கை வெளியிலும் கடாரத்திலும் கன்னித் தமிழொலியை ஒலித்து ஒப்பற்ற புகழுடன் வாழ்ந்தனர். தமிழர்கள் நாட்டின் எல்லை ஒருகால் கங்கை நாடு; மற்றொரு கால் இமயப் பனிவரை. இமயத்தின் உச்சியில் தமிழ்க்கொடி பறந்தது ஒரு காலத்தில். தமிழ்ப் பெருங்குடியினர் கருத்தெல்லை என்றும் உலக எல்லையாகவே இருந்து வந்திருக்கிறது.

இங்ஙனம் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே ஓங்குயர் கீர்த்தியுடன் வாழ்ந்த தமிழினத்தார் காலப்போக்கிலே தளர்வெய்தினர். ஒன்றுபட்டிருந்த தமிழ்க்குலம் ஜாதியின் பெயராலும், சமயத்தின் பெயராலும் சிதறுண்டது. வலியும், பொலிவும் இழந்து நாமமது தமிழரெனக் கொண்டு ஊமையராய்ச் செவிடர்களாய் வாழத் தலைப்பட்டனர். அவர்தம் நாடும் சீரழிந்தது. நாகரிகமும் நலிவெய்தியது. இன்பத் தமிழும் இருப்பிடந் தேடலாயிற்று. தேய்ந்த தமிழகத்தின் எல்லையில் வடவேங்கடத்திற்குக் கூட இல்லை இந்தச் சென்னை நகருக்குக்கூட ஆபத்து ஆந்திர சகோதரர்களால் ஏற்படுகின்ற அளவிற்குத் தமிழரது உறக்கம் நீடித்து விட்டது. உறக்கத்திற்கும் ஒரு விடிவுகாலம் வரத்தானே வேண்டும்! தமிழர்களைப் பேருறக்கத்தினின்றும் தட்டியெழுப்பி ஆக்கத்துறையில் அன்புடன் அழைத்துச் செல்லும் தமிழரசுக் கழகத்தினரை வாழ்த்துகின்றோம்.

நாட்டில் இன்றைய நிலையைப் பொறுத்துச் சில தலையான பிரச்சினைகளைப் பற்றிக் கூறத்தான் வேண்டியிருக்கின்றது. தமிழுக்காகவும் தமிழ் நாட்டிற்காகவும் வாழ்ந்து நல்ல பல செய்ய வேண்டிய ஓர் ஒப்பற்ற தலைவரை இன்று நாம் இழந்து விட்டோம். தாயை இழந்த சேய்கள் போன்று தவிக்கின்றோம். தமிழ்த் தந்தை திரு.வி.க அவர்கள் ஓர் உண்மைத் தமிழர்.

சமயம் - சமுதாயம் - சமூகம் - நாடு - பொருளாதாரம் - அரசியல் ஆகிய எல்லாத்துறைகளிலும் புதியதோர் மாற்றங்காண நினைத்துத் தொண்டாற்றினார். சாதிப் பிணக்குகள் நம்மைக் கெடுத்தொழிக்கும் என்பதை உலகிற்கு உணர்த்திய பெருமை தமிழர் தந்தை திரு.வி.க அவர்களுக்கே உரித்தாகும். பெரியார் திரு.வி.க மறைவு சமயவுலகிற்கே ஈடுசெய்ய முடியாத நட்டமாகும் என்று யாம் கருதுகின்றோம்.

திருவிக அவர்கள் சமயவுலகிற்கே மாறுபட்டவர்கள் எனச் சைவவுலகம் மதித்தது. மாற்றுக்கண் கொண்டு மதிப்பிட்ட சைவவுலகம் தமிழ்த்தந்தை திருவிக அவர்களை வெறுத்து ஒதுக்கத் தலைப்பட்டது. திரு.வி.க அவர்கள் சைவமும் தமிழும் பற்றி வரைந்த நூல்கள் தமிழன்னையின் மணிமுடிகளாக மிளிர்வன. அவர்கள் வரைந்த மடாதிபதி என்ற நூலே எம்மை இக்கோலம் பூணச் செய்தது.

அவர்கள் விதைத்த நல்லறவுணர்ச்சியில் மக்கட் சமுதாயம் விழிப்படையத் தொடங்கியது. அவர்களின் பேருணர்வால் அவர்வழி வந்த தமிழினத்தார் வாழ்வில் அவர் வாழ்ந்து வருகின்றார் என்ற சொல்லை நாம் படைத்துத் தரவேண்டும். "மீண்டும் திரு.வி.க அவர்கள் தமிழகத்தில் தோன்ற வேண்டும்” எனப் பிரார்த்தனை செய்யுங்கள். அவர்களின் எழுத்தும் சிந்தனையும் நம்மிடம் உண்டு. திரு.வி.க அவர்கள்போல் எல்லோரும் தமிழும் சைவமும் நிரம்பப் பெற்ற அன்பர்களாக வாழ ஆசை கொள்ளுங்கள். ஒவ்வொரு தமிழனும் தமிழ்நாட்டிற்குத் தன்னால் என்ன செய்ய முடிந்தது என்பதை நாளும் சிந்தியுங்கள்.

தமிழரசுக் கழகத்தாரின் குறிக்கோள் - ஏன்? தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவன் குறிக்கோளும் நாடு, மொழி, கலாசாரம் என்ற அடிப்படையில்தான் இருத்தல் வேண்டும்.

சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கும் நோயைப் போக்கத் தமிழ்த்தந்தை திரு.வி.க அவர்களின் நூலே சிறந்த மருந்தாகும்.

நிற்க. தமிழாட்சி வேண்டுமென்று கேட்பது வெறுப்பால் அன்று. அவரவர் மொழியில் அரசு நடந்தால் எதனையும் எளிதில் முடித்துக் கொள்ள முடியும் என்ற காரணத்தால்தான் தமிழரசு வேண்டும் என்று கேட்கின்றோம். நாங்கள் எல்லா மொழிகளும் வளரவேண்டும் என்றுதான் ஆசைப்படுகின்றோம். முதற்கண் எங்கள் தாய்மொழியாம் தமிழ்மொழியை வளப்படுத்திய பின்னர் தான் நாங்கள் வேறு எதனையும் கைக்கொள்வோம். எல்லாவற்றிற்கும் வாழ உளமார இடங்கொடுக்கும் நாங்கள் வேற்றாரால் எங்கள் தாய்மொழிக்கு இடையூறு ஏற்பட்டால் அதைப் பார்த்துப் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டோம். மாற்றாரின் செயல்களனைத்தும் அவர்களின் சின்னாட் பிழைப்பிற்குத்தான் என்பதை எல்லோரும் நன்கு உணர வேண்டும்.

ஒவ்வொரு மனினும் நேர்மையுடனும் தன்னம்பிக்கையுடனும் வாழ்தல் வேண்டும். எதனையும் நாம் வெறுத்து ஒதுக்குதல் ஆகாது. வெறுத்து ஒதுக்குவோமாயின் நம் வாழ்வில் போட்டியையும் பொறாமையையும் வளர்த்துக் கொண்டவராவோம்.

தமிழ்நாட்டிலே பல அருமையான இலக்கியங்கள் இருக்கின்றன. அதனைப் படித்துப் புரிந்து கொள்ளுகின்ற பயன் பெறுகின்ற நல்லுள்ளம் படைத்த பெருமக்களைத்தான் காண முடியவில்லை. வேண்டாத ஒன்றைப்பற்றி ஆராய முற்படுகின்றார்களேயன்றி “நாட்டின் நிலைமையறிந்து நாம் யாது செய்தல் கூடும்” என்று ஆராய்வாரைக் கண்டிலேம். எங்கோ தோன்றும் சிலரும் காலப் போக்கிற் சுயநலக்காரர்களாக மாறி விடுகின்றனர். நாட்டின் சூழ்நிலையும் மக்களின் போக்கும் அவர்களை மாற்றி விடுகின்றன.

இன்றைய நிலையில் எத்தனையோ தோழர்கள் அழகுபடப் பேசுவார்கள் - எழுதுவார்கள். ஆனால் அதன்வழி நடப்பாரைத் தான் காண முடியவில்லை. இலக்கிய ஏடுகளைப் படிக்கின்ற காலத்து அதன் பொருள்களை நன்கு புரிந்து கொண்டால்தான் அதனை நம் வாழ்வில் அனுபவித்தல் இயலும். அனுபவிக்கும் உள்ளத்தையிழந்த காரணத்தால்தான் இக்காலத் தமிழர்கள் பண்டையிலக்கியங்களைப் புரிந்து கொள்ளாமல் வாழ்கின்றனர்.

"நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரமென் றோர்மணி,
யாரம் படைத்த தமிழ்நாடு"

என்று பாரதி பாடுகின்றான். சிலப்பதிகாரத்தில் காணப்படும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முத்துக்கள். நம் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் வகையில் அம்முத்துக்கள் ஒளிவீசுவதை அனைவரும் படித்துணர்ந்து நம் வாழ்விற் சிலப்பதிகாரத்துக்கு முதலிடம் கொடுத்தல் வேண்டும். பொய்மை நிறைந்த புரட்டிற்கும், வேண்டாத ஆராய்ச்சிக்கும் நாம் இடம் கொடுத்தல் கூடாது. "ஆக்கவுங் காக்கவும் வல்லான் ஒருவன் இருக்கின்றான்; அவனே தலையாவான்” என்று உளமார நினைத்து வாழ்த்தி வணங்குங்கள்.

பண்டையிலக்கியங்கள் போன்று இற்றை நாளில் நந்தமிழகத்துப் புதுமையான காப்பியம் ஏதேனும் தோன்றியது உண்டா? ஒன்றிரண்டு தோன்றியிருப்பினும் அவை மாறுபட்ட கருத்துக்களையும் இடக்குச் சொற்களையும் பரப்புவனவாக இருக்குமேயன்றிப் பண்டைத் தமிழர் பண்பாட்டைச் செவ்வனம் விளக்குவனவாக இருக்க மாட்டா. பண்டையிலக்கியங்கள் இன்றுவரை அழியாதிருப்பதன் தலையாய காரணம் என்னை? அவற்றை இயற்றியருளிய ஆசிரியர்கள் தலையான அருள் உள்ளம் படைத்த பெருமக்களால் ஆக்கப்பட்ட காப்பியங்களுக்குத் தனித்ததோர் தெய்வீக சக்தியுண்டு.

நூற்புலமை மட்டும் பெற்றோர் சொல்லடுக்கு இணைத்து எழுதும் நூல்கள் சிரஞ்சீவிக் காப்பியங்கள் ஆகமாட்டா. அந்நூல்கள் புத்தக உருவில் இருக்க முடியுமல்லாது, மக்கள் வாழ்வில் நலங்காணச் சிறிதும் பயன்பட மாட்டா. வெறும் புலமையால் இயற்றப்படுவது காப்பியமாகாது. புலமையுடன் அருள் உள்ளமும் கலக்கப் பெற்றால்தான், அன்னார் காப்பியங்கள் என்றென்றும் நிலைத்து நிற்கும். இரண்டும் கலக்கப் பெறாத காப்பியங்கள் காலப்போக்கில் மறைந்தொழியும்.

சிலப்பதிகார ஆசிரியர் பெரும் புலமையும், ஆராய்ச்சியும் அனுபவமும், அருள் உள்ளமும் கனிந்து விளங்கிய பெருமகனார். இளங்கோவடிகள் தந்த சிலப்பதிகாரக் காப்பியத்தில் முத்தமிழும் நடம் புரியும். இதற்கு இணையான முத்தமிழ்க் காப்பியம் ஒன்று இன்றுவரை தமிழர் கண்டிலர். சிலப்பதிகாரப் பெயர்க் காரணத்தை ஒவ்வொரு தமிழனும் நன்குணர்தல் வேண்டும்.

ஒருநூலைப் பயிலத் தொடங்குமுன், அந்நூற் பெயர்க் காரணம், நூலின் முன்னுரையாகியவற்றை நன்கு பயின்று நூலுட் புகுந்தால்தான் உண்மைப் பொருள் விளங்கும்.

“ஊழ்வினை உருத்துவந் தூட்டும்;
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்;
அரசியல் தவறியவர்க்கு அறமே கூற்றாம்”

என்னும் கொள்கைகளை வற்புறுத்தவே சிலப்பதிகாரம் எழுந்தது என ஆசிரியர் கூறியிருக்கின்றார். சிலப்பதிகாரத்தின் உயிர்நாடி சிலம்புதான். சிலம்பொன்றைக் கொண்டு ஒரு பெருங்காப்பியம் முடித்துத்தந்த பெருமை இளங்கோவுக்கு உண்டு.

பண்டை இலக்கியங்களைப் படித்துப் பார்க்காதவர்கள் - படித்தும் உணர்ந்து கொள்ளத் திறனற்றவர்கள் உணர்ந்தும் சொல்வாதம் புரிகின்றவர்கள் ஆகிய வகையினரே அவைகளைப் பற்றிக் குறை கூறுகின்றார்கள். “அனுபவிக்கத் தெரியாதவன் குறைகூற முனைகின்றான்” என்றான் ஒரு அறிஞன். இன்றைய மக்கட் சமுதாயம் தவறான பாதையிற் செல்கின்றது. இற்றைப் பகுத்தறிவுவாதியர் கொண்டுள்ள மாற்றெண்ணத்தால் விளைகின்ற செயல்களை எண்ணும்பொழுது நம்மையும் அறியாது கண்கள் நீர் மல்கும். இத்தகு நிலையை மாற்ற வேண்டுமானால் ஒவ்வொரு மனிதனும் தத்தம் கடமையை உணர்ந்து நடக்க வேண்டும்.

கருத்துவளம் எங்கு உண்டோ அங்கு வாழ்வும் வளம் பெறும் என்பதை உணர்ந்து வாழ முற்பட்டால் விரைவில் தமிழகத்தில் நல்லதொரு மாற்றம் ஏற்படும். ஒவ்வொரு மனிதனும் தான் செய்கின்ற செயல் எத்தகையது என்பதை நன்கு சிந்தித்துப் பின் செயலில் முனைதல் வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தன் குற்றத்தைத் தான் உணர்ந்த பின்னர் வாழ்வதை விட உயிர் விடுவதே மேல். அங்ஙனம் தன் உயிரைப் போக்கிக் கொள்வதிலும், உடலிலிருந்து உயிர் தானாகப் பிரிதல் எத்துணை விழுமியது என்பதை உன்னுங்கள். இதுவே தமிழகங்காட்டும் செந்நெறி. இத்தகைய முறையில்தான் பண்டைத்தமிழகம் வாழ்ந்து வந்தது என்பதை எல்லோரும் நன்குணர வேண்டும்.

நீதிக்கு முதலிடம் கொடுத்த நாடு நம் நாடு. குற்றத்தை உணர்ந்த பின் அவனையும் அறியாமல் உடலிலிருந்து உயிர் நீங்கிய வரலாற்றை இளங்கோ, பாண்டிய மன்னன் வாயிலாக உணர்த்துகின்றார்.

"யானோ அரசன்? யானே கள்வன்!
மன்பதை காக்குத் தென்புலங் காவல்
என்முதற் பிழைத்தது கெடுகனன் ஆயுள்என
மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே.”

என்பது சிலப்பதிகார அடிகள். இதன்மூலம் “மக்கட் சமுதாயம் குற்றம் நிகழ்கின்ற இடத்தில் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் மனப்பான்மையும், குற்றங்காண்கின்றவிடத்தில் அதனை விடுத்துக் குணத்தைக் காணும் பண்பாட்டையும் பெறுதல் வேண்டும்" என்பதை உணரலாம்.

அறக்கடவுள் முன்னிலையில் மாறுபட்ட செயல்கள் செய்கின்ற கூட்டம் விரைவில் அழிந்து விடும். இதனைத்தான் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தின் மூலம் உலகிற்கு எடுத்துக் கூறினார்.

மக்கள் வாழ்வில் அறத்திற்குத்தான் முதலிடம் கொடுக்கப் பெறுதல் வேண்டும். காலப்போக்கில் நாம் அறத்தின் பெருமையை மறந்து வாழ முற்பட்டோம். நாமும் வாழ்வில் தாழ்ந்தோம் என்பதை அன்றாட உலகியல் வாழ்வில் கண்கூடாகக் காண முடிகிறது.

மனிதன் பொருளின் பின்னே செல்கின்றான். சிலவேளைகளில் அதற்கு அடிமையும் ஆகின்றான். ஆனால் பொருள் பெறுதற்குரிய நல்ல வழிகளை இளங்கோ போன்றவர் உணர்த்தியிருந்தும் அதன்வழி செல்லாமல் இடர்ப்படுகின்றான்.

மக்கள் வாய்மைநெறி தவறாது வாழ வேண்டும்; நிலைத்த உயிர்களுடன் நேசம்மிக்க அவற்றைப் பாதுகாத்தலும் வேண்டும். இங்ஙனம் ஒழுகுவாரானால் அவர்க்குப் பொருள் மட்டுமோ கிடைக்கும்? யாரும் அடைய முடியாத எல்லாப் பொருள்களும் கிடைக்கும் என்று அறுதியிட்டுக் கூறுகின்றார் இளங்கோ.

“வாய்மையின் வழாது மன்னுயிர் ஓம்புநர்க்கு
யாவதும் உண்டோ எய்தா அரும்பொருள்"

என்பது இளங்கோ கூற்று. மேலும், ஆசிரியர் அறவுரை கேண்மின்;

“தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்:
பொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
ஊனுண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
தானம் செய்மின்; தவம்பல தாங்குமின்;
செய்ந்நன்றி கொல்லன்மின்; தீநட்பு இகழ்மின்;
பொய்க்கரி போகன்மின்; பொருண்மொழி நீங்கன்மின்; அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்;
பிறவோ ரவைக்களம் பிழைத்துப் பெயர்மின்;
பிறர்மனை அஞ்சுமின்; பிழையுயர் ஒம்புமின்;
அறமனை காமின்; அல்லவை கடிமின்;

கள்ளுங் களவுங் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்;
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா
உளநாள் வரையாது ஒல்லுவது ஒழியாது
செல்லுந் தேளத்துக் குறுதுணை தேடுமின்;
மல்லன்மா ஞாலத்து வாழ்வீர் ஈங்குஎன்”

தெய்வத்தைக் காண வேண்டுமானால் நம் உள்ளம் தூய்மையாக இருத்தல் வேண்டும். குழப்பமான உள்ளத்தில் இறைவன் குடிகொள்ளான். தெய்வத்தைக் கண்டுணர்ந்த பெருமக்களின் தொண்டு பூண்டொழுகி அவர் வாழ்வைப் பின்பற்றிச் சிறப்படைவீர்களாக! பொய்மொழிகளைக் கூற அஞ்சுவீராக! புறங்கூறா அறத்தைப் போற்றுவீராக! புலால் உண்டலைத் தவிர்வீராக! உயிர்க்கொலை மறந்தும் புரியாது வாழ்க! தான்மும் தவமும் தக்கவாறு இயற்றுக! செய்ந்நன்றி மறவாச் சீலம் பெறுக கூடா நட்பைக் கோதெனத் தள்ளுக! பொய்ச்சாட்சி பகர்வதையொழித்துப் பொலிக பெரியோர் பொருள்மொழி பேணிக் கேட்க அறவோர் அவையில் அனைத்துங் கேட்க! பியர் மனையஞ்சும் பேராண்மை பெறுக! அல்லற்படும் உயிரையாதரித் துயர்க! இல்லறம் பேணி இசை நனி பெறுக! கள், களவு, காமம், பொய், வீணர்குழு இவற்றை அறவே விட்டொழிப்பீராக! மறுமைக்குரிய இன்றியமையாத் துணையைத் தேடிக்கொள்க!

உள்ளந்தொடும் இத்தகு அரும்பெரும் அறவுரைகளை இளங்கோவின் அருள் உள்ளம் வாரி வழங்குகின்றது.

"கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க
அதற்கு தக"

என்ற வள்ளுவர் வாக்கிற்கேற்ப, ஒவ்வொருவரும் இப்பொன்னான கருத்துக்களைப் படித்துணர்ந்து அவற்றைத் தம் வாழ்விற் கலக்கச் செய்தல் தலையான கடமையாகும்.

வாழி தமிழன்னை வாழி தமிழர்குலம்
வாழி சிலம்பின் வளம்.


மதுரைத் தமிழரசுக்கழகத்தில் தவத்திரு அடிகளார் ஆற்றிய உரை.