அருள்நெறி முழக்கம்/முன்னோர்கள் வாழ்ந்த நெறி

முன்னோர்கள் வாழ்ந்த நெறி


கண்ணார் நுதலோர் கழலிணைகள்
கண்டேன் கண்கள் களிகூர
எண்ணா திரவும் பகலும்நாள்
நவையே எண்ணும் அதுவல்லால்
மண்மேல் யாக்கை விடுமாறும்
வந்துன் கழற்கே புகுமாறும்
அண்ணா எண்ணக் கடவேனோ
அடிமை சால அழகுடைத்தே.

அன்புடைப் பெருமக்களே!

நாட்டில் நல்லன பெருகி இன்பம் காண வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ள இளைஞர் உள்ளங்கள் முதலில் பழங்காலத் தமிழகம் எப்படி வாழ்ந்தது? இற்றைத் தமிழகம் எப்படி வாழ்கின்றது? நாளைத் தமிழகம் எப்படி வாழும்? என்ற மூன்று வினாக்களை எழுப்பி அந்த வினாக்களுக்கு நல்லதொரு முடிவைக் காண முற்பட வேண்டும். உங்கள் முடிவு நல்லதொரு முடிவாக இருக்குமேயானால், அறிஞர் பெருமக்களும், அருளுடைப் பெருமக்களும் ஒப்பத்தக்க முடிவாக இருக்குமேயானால் புனிதமான தமிழகத்தை - அன்பும் அறமும் கூடிய தமிழகத்தைக் காண முடியும்.

இன்றுள்ள வறுமைக்காட்சியைப் பார்க்கின்றபொழுது - நலிந்த தமிழகத்தைப் பார்க்கின்றபொழுது நம் கருத்து தடுமாற்றம் காண்கின்றது; நெஞ்சம் நெகிழ்கின்றது. பாரதி கண்ட பாரதநாடு இலக்கியம் கண்ட இன்பப் பெருநாடு இதுதானா என்ற சந்தேகம் உண்டாகின்றது. வேறு ஒரு தமிழகம் - பாரதி கண்ட தமிழ்நாடு எங்கேனும் இருக்கின்றதா என்ற ஐயப்பாடு உண்டாகின்றது. அற்றைத் தமிழகத்தில் வான் வற்றாத மழையைப் பொழிந்த காரணத்தால் எங்கும் வளமான ஆட்சியைக் காண முடிந்தது. இன்று அதற்கு நேர்மாறாக ஆறுகள் எல்லாம் பாலைவனமாகக் காட்சி அளிக்கின்ற, பழந்தமிழகத்தைப் படித்தும் இற்றைத் தமிழகத்தின் நிலையைக் கண்கூடாகக் கண்டும் அதனை மாற்றி அமைக்க முடியவில்லை. வாழ்ந்த தமிழகம் வீழ்ந்ததன் காரணம் என்ன? ஏன் இந்த நிலை? சிந்தித்துப் பாருங்கள்!

ஆழ்ந்ததொரு சிந்தனைக்குப் பின் இத்தகைய நிலை ஏற்பட்டதன் காரணம் நாட்டில் கல்வி நிலையங்கள் நல்லனவாகக் காட்சி அளிக்காதிருப்பதுதான் என்று நன்கு தெரியும். அறிவியல் வளரத் தொடங்கிற்றே அன்றி, அருளியல் வளரவில்லை. அறிவும் ஆராய்ச்சியும் எந்தவிதப் பயனையும் தர முடியாது. அறிவியலில் அருளியல் கலக்க வேண்டும். அருளியல் கலவாத அறிவியல் அழிவைத்தான் தரும். விவசாய முறையிலும் எத்தனையோ அறிவியல், கலக்கப்பட்டு விட்டது - புகுத்தப்பட்டு விட்டது. எனினும் பழந்தமிழகம் கண்ட விளைச்சல் இல்லை. பழந்தமிழ் உழவர் கையாண்ட- கையாண்டு பலன்கண்ட தழைகளுக்குப் பதில் அமோனியம் சல்பேட் உபயோகப்படுத்தியும், ஜப்பானிய விவசாய முறையைக் கையாண்டும் சமுதாயத்திற்கு வேண்டிய உணவு கிடைத்தபாடில்லை. மக்களின் அறிவு பெருகிற்றே ஒழிய தேவை பூர்த்தியானபாடில்லை. ஆராய்ச்சி பெருகிற்றே ஒழிய அதனால் பலன் ஒன்றுமில்லை.

இன்றைய சமுதாயத்தில் அருளியலைத் தவிர எல்லாம் பெருகின. உடம்பில் உறுப்புக்கள் அனைத்தும் இருந்தும் உயிர் இல்லை என்பது போலத்தான் இருக்கிறது. உயிர் இல்லாத உடம்பினால் என்ன பயன்? அறிவும் ஆராய்ச்சியும் பயன்தர முடியாது. அறிவிற்கு ஒர் எல்லை உண்டு என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. அருளியல் கலவாத அறிவியல் அழிவைத்தான் தரமுடியும் என்று முன்னர்க் கூறியது எல்லோர் உள்ளத்திலும் அழியாத இடத்தைப் பெறுதல் வேண்டும்.

அன்பியலும் அருளியலும் இல்லாத காரணத்தால் நாடு காலப்போக்கில் வறண்டு பிற்போக்கான நிலைக்கு வந்து விட்டது. அறத்தின் அடிப்படையில் - அன்பின் அடிப்படையில் - அருளியலின் துணைகொண்டு நாட்டிற்கும் நமக்கும் நல்லன காண முடியும். அணுகுண்டு சகாப்தத்தில் அன்பினாலும் பிரார்த்தனையினாலும் இந்தியா சுதந்திரம் பெற்றதை எல்லோரும் கண்கூடாகக் கண்டோம். பழமை அனைத்தும் பொய் என்று கூறுகின்றவர்கள் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். "அணுகுண்டு உலகிலேயே உலகம் எங்கும் ஒரு கொடிகட்டி அரசு செலுத்திய ஆங்கில ஆட்சியாளரிடம் பிரார்த்தனையின் துணை கொண்டு காந்தியடிகள் சுதந்திரம் பெற்றார்” என்ற செய்தியை அடுத்த நூற்றாண்டில் நம்ப முடியாது என்று சொல்லுவார்கள் என்று கருதுகின்றேன்.

கண்கூடாகக் கண்டு பயன் அடைந்த காந்தியத் தத்துவத்தை இன்று மறந்து வாழ்கின்றோம். அதனை இழந்து கொண்டே வருகின்றோம். இந்த நிலையை மாற்றி அமைத்துக் காந்தியடிகள் கண்ட நாடாக இருக்க வேண்டுமானால் அருளியலும் அறிவியலும் ஒருங்கே தரும் கல்வி நிலையங்கள் எங்கும் எழுப்பப் பெறுதல் வேண்டும். அத்தகு கல்வி நிலையங்கள் என்று எழுப்பப்படுகின்றனவோ அன்றுதான் நாம் அண்ணல் காந்தியடிகள் கண்ட இன்பப் பெருநாட்டைக் காண முற்பட்டவர்களாவோம் - அடிகோலியவர்களாவோம். அந்தநாள் தான் தமிழகத்தின் நன்னாளாகும். ஏன்? பொன்னாள் என்று கூடச் சொல்ல வேண்டும்.

கல்வி நிலையங்களில் சமயப் பாடம் கற்பிக்கப் பெறுதல் வேண்டும். சமயம் வளர்ந்தால்தான் சமுதாயம் வளம் பெறும் என்ற உறுதிப்பாடு எல்லோர் உள்ளத்திலும் எழும்ப வேண்டும். இன்றைய இளைஞர்கள்தாம் நாளைய நாட்டின் தலைவர்கள் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. இன்றைய இளைஞர்கள் தாம் நாளைய தமிழகத்தை - நல்லதொரு நாட்டை - உருவாக்கப் போகின்றவர்கள். அவர்களை நல்லவர்களாக ஆக்கும் பொறுப்பு கல்வி நிலையங்களுக்குத்தான் உண்டு. சமயக் கல்வி இல்லாத கல்வி மக்கட் சமுதாயத்தில் தீமை பெருகவே துணை செய்யும். நம் எண்ணத்தின் எதிரொலியின் வழிதான் நம் வாழ்வு. நாம் நல்லனவற்றை எண்ணினால் நாம் நலமுடன் வாழ முடியும். நமது எதிர்காலச் சமுதாயம் இன்பமுடன் வாழவேண்டுமானால் வான் வற்றாத மழையைப் பொழிந்து வளம்பெருகி வாழவேண்டும் என்று ஆசைப்படுவோமானால் 'பகைவனுக்கருள்வாய் நன்நெஞ்சே' என்ற உயரிய கொள்கையைப் பின்பற்றி வாழ்ந்தால்தான் நலம் காண முடியும்.

“இனவெறி மக்கட் சமுதாயத்தைக் கெடுக்கும் நஞ்சு"; “ஒன்றே குலமும், ஒருவனே தேவனும்” என்று உலகிற்கு உணர்த்தியது யார்? தமிழ்நாட்டுச் சமயப் பெரியார்கள்தான். “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்று உலகம் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை - உயரிய கொள்கையைப் பரப்பியது யார்? தமிழ்நாட்டுச் சமயப் பெரியார்கள்தான் என்றால் யாரும் அதனை மறுக்கவோ மறக்கவோ முடியாது. இன்றல்ல - நேற்றல்ல - மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த உயரிய கொள்கையைச் சமயம் கண்டது. அன்றைய மக்கட் சமுதாயம் அதன்வழி வாழ்ந்து இன்பம் பெருக்கெடுத்தோடக் கண்டார்கள்.

இன்று நாம் பழமையைப் புறக்கணித்துப் புதுமையை வளர்க்க முற்படுகின்றோம். பழமையின்றிப் புதுமை இயங்க முடியாது. இயங்கினாலும் நல்லதொரு காரியத்தைச் சாதிக்க முடியாது. இதுவரை அப்படிச் சாதித்ததாகத் தெரியவில்லை. சாதித்தவை ஒன்று இரண்டு இருக்குமேயானால் அவை அழிவான முடிவைத்தான் தந்திருக்குமே அல்லாது நல்லனவாக இருக்க முடியாது. புதுமையை வளர்க்கும் காலத்து அதன் தாயகமான பழமையை மறந்து விடக்கூடாது. அதன் துணைகொண்டுதான் புதுமையை வளர்க்க வேண்டும். அதுதான் பயனைத் தரும்.

தமிழ்நாட்டுக் கோயில்களில் பார்ப்பனர்களை வாகனம் தூக்கவும் - தமிழனை நைவேத்திய சாலைகளில் வேலை செய்யவும் சொன்னால் என்ன என்று பகுத்தறிவாளர் பத்திரிகை கேட்கிறது. செய்தால் தவறு ஒன்றுமில்லை. உள்ளம் தூய்மை உடையவனாக ஒழுக்கம் உடையவனாக இருந்தால் ஆண்டவன் முன்னர் வித்தியாசம் கிடையாது. பார்ப்பன அன்பர்களையும் வாகனம் தூக்க முன்வாருங்கள் என்று அழைப்போம். நிச்சயமாக அவர்களும் வருவார்கள். மக்கட் சமுதாயத்தின் நலம் கருதி ஆண்டவனே மண் சுமந்திருக்கும் பொழுது இவர்கள் வாகனம் தூக்க மறுப்பார்களா? ஆனால் இன்னும் ஒரு நூற்றாண்டு கழித்து இதைப்போல மாற்ற உணர்ச்சி வந்தால் திரும்பவும் மாற்றி அமைக்கத்தான் வேண்டும். அடிக்கடி ஏற்படும் மாற்றம் பண்பட்ட அனுபவத்தைக் கெடுத்துவிடும். தொழிலில் உயர்வு தாழ்வு கற்பிப்பது விரும்பத்தக்கதன்று. வீதி கூட்டுகின்ற தோட்டியும் சமுதாயத்தில் ஒத்த உரிமையும் - பெருமையும் பெற்ற தகுதியுடையவனாக இருத்தல் வேண்டும். யார் எத்தொழில் செய்தாலும் அவன் சமுதாயத்தில் பெருமையாகவே நடத்தப் பெறுதல் வேண்டும். தொழில்களும் நடக்க வேண்டும். தொழிலை நோக்காது மனிதனுக்கு மதிப்பு நல்கும் உணர்ச்சி பெருக வேண்டும். தொழில் வளர்ந்தோங்க வேண்டுமேயானால் மனிதன் தொழிலால் மதிப்புக் கருதுவது கூடாது.

இந்தக் காரியத்தை இன்று செய்து செயலிலும் கொண்டு வந்து விடலாம். இன்று இருக்கின்ற கிளர்ச்சி நாளையும் ஏற்படாதா? என்று சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். கடமை வேறு உரிமை வேறு என்பதை உணர்ந்து நாம் எல்லோரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும். இன்றைய சமுதாயத்தில் முக்கியமாக மக்களினத்திற்கு ஒன்றுபட்டு வாழும் உணர்ச்சி வேண்டும். ஒற்றுமையின் பெருமையை விளக்கும் புரட்சிக்கவி பாரதி,

“ஒன்று பட்டால் உண்டு வாழ்வே, நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே"

என்று அழகுபடவும் ஆணித்தரமாகவும் அதே நேரத்தில் கண்ணியமாகவும் எடுத்துக் கூறுகின்றார்.

ஒன்றுபட்டு இயங்குகின்ற நல்ல உள்ளங்கள் இல்லாதவரை நாம் நலங்காண முடியாது. தொழில் துறையில்தான் சமுதாயம் பிரிந்தியங்குகிறது. கடமையை உணர்ந்து நடக்கும் நல்லதொரு பண்பாடு நம்மிடம் வளரவேண்டும். வெறுப்பும் - வெறியும் சமுதாயத்தினின்றும் ஒதுக்கப்பட வேண்டியவை. அன்பும் அருளும்தான் நலம் பயப்பன. அன்றுதொட்டு இன்றுவரை மக்கட் சமுதாயத்தில் அன்பும் அருளுந்தான் நலம் தந்திருக்கின்றன. இதனை அறிவியல் காணவில்லை. அருளே காணும்.

நாய்கள் வாழ்கின்ற வாழ்க்கை வெறிவாழ்க்கை, காக்கைக் கூட்டங்கள் வாழ்கின்ற வாழ்வு அன்பு வாழ்வு - கூட்டுறவு வாழ்வு. மனித சமுதாயமும் அத்தகைய வாழ்க்கையையே மேற்கொள்ள வேண்டும். இத்தகு உயரிய பண்பாட்டைப் பின்பற்றிச் சமுதாயத்தைக் காப்போம். அந்த உயரிய கொள்கையை ஒவ்வொருவரும் உறுதிப்பாடாக எடுத்துக் கொள்ளல் வேண்டும்.

அன்று காந்திஅடிகள் அருள் நெறியின் அடிப்படையில் அரசியல் புரட்சியை நடத்தி வெற்றி பெற்றார். இன்று வினோபாஜி அருள்நெறியின் அடிப்படையில் பொருளாதாரப் புரட்சி செய்து வருகின்றார். சமுதாயத்தின் தேவை அனைத்தும் அருள்நெறியின் அடிப்படையில் சரிசெய்ய முடியும். இந்தத் தத்துவம் உலகப் பெருமக்கள் கண்ட முடிவு. துன்பமும் தொல்லையும் வருவது உலக இயற்கை. அதற்காக நாம் மனந்தளரக்கூடாது. "துன்பத்தைக் கண்டு அஞ்சுபவன் மனிதனல்லன்” என்கிறார் சுவாமி விவேகாநந்தர். அருள்நெறி காட்டும் பாதையைப் பின்பற்றி வாழ்ந்தால் எல்லாம் இன்பமாக முடியும். இந்த எண்ணம் எல்லோர் உள்ளத்திலும் குடிகொள்ள வேண்டும். இதனைத் துணையாகக் கொண்டு உழைக்க முற்பட்டால் ஆண்டவன் நமக்கு நிச்சயமாக வெற்றியைத் தருவான். "கடவுளை நம்பினோர் கைவிடப்படார்” என்ற பழந்தமிழ்ப் பழமொழியும் உண்டு. “அவனன்றி ஒர் அணுவும் அசையாது” என்பதும் எல்லோரும் படித்த ஒன்றேதான். நாம் நம்பிக்கையுடன் அவன்தாள் பணிந்து வாழ்த்தி வணங்கி வழிபட்டால் அவன் நிச்சயமாக நமக்கு உதவி புரிவான் என்பதில் சந்தேகம் இல்லை.

சந்தேகம் இன்றி வாழ்வதுதான் மனித வாழ்வு. "சந்தேகம் மனிதர்களுடன் பிறந்த ஒரு தொற்றுநோய். சந்தேகம் தங்குகின்ற நெஞ்சு தவறுடை நெஞ்சு" என்று ஒரு மேல்நாட்டு அறிஞன் கூறுகின்றான். ஆதலால் நாம் நமது வாழ்க்கையில் சந்தேகத்திற்கு இடங்கொடுத்தல் கூடாது. சந்தேகத்திற்கு நாம் இடங்கொடுத்தால் நாம் முன்னேற முடியாது. அதனின்றும் தப்பி வாழ வழியும் கிடையாது.

கடவுள் நெறி வாழ்க என்பது நாம் வாழத்தான் என்பதை எல்லோரும் நன்கு உணர வேண்டும். வெள்ளம் ஆற்றில் சென்றாலும் அது தானாக நம்முடைய வீட்டிற்கு வாராது. அன்பான கடவுள் எங்கும் பரந்து இருப்பினும் நாம் உள்ளத் தூய்மையுடன் அவன்தாள் பணிந்து வழிபட்டாலன்றி அவனருள் கிடைக்காது.

கடவுள் வழிபாடு எப்பொழுது தோன்றியது? ஏன் தோன்றியது? என்ற வினாக்களைக் கண்டு, அதற்கு அறிவின் துணைகொண்டு - அருளின் துணை கொண்டு விடையைக் காணுங்கள். நீங்கள் காணுகின்ற முடிவு அறிஞர் பெருமக்களும், அறிவுடைப் பெருமக்களும் ஒப்பத்தக்கதாக இருக்க வேண்டும். அந்த ஒப்பற்ற முடிவில் உயரிய கருத்துக்கள் இருப்பதால் கடவுள் வழிபாடு தோன்றிய காலமும் காரணமும் நன்கு தெரியவரும். காலமும் காரணமும் கண்டபின்னர் எவரும் அதனைப் பற்றித் தவறாகக் கருத முடியாது. தவறாகக் கருதுகின்ற தோழர்கள் திருந்திவாழ வழி கிடையாது.

“மனிதன் இயற்கையை வென்று விட்டான்” என்று கூறுவது சரியன்று. மனிதன் இயற்கையை வென்று விடவில்லை. அவன் இயற்கையைக் கண்டு மகிழ்ந்து அதை அனுபவிக்கின்றான். இயற்கையின் அடிப்படையில் வாழ்கின்றான். உலகம் ஆண்டவனின் திருமேனி அந்தத் திருமேனியின் முழுஉருவத்தையும் கண்டு அனுபவித்தது யார்? உலகம் கண்ட நாள்முதல் இதுவரை அவனுடைய திருமேனியைக் கண்டு அனுபவித்தவர்கள் எங்கும் எவரும் கிடையாது. டென்சிங் இயற்கையை வென்றான் என்றால் அவன் பிறிதொரு இமயத்தை உண்டாக்கியிருக்க வேண்டும். அப்படி உண்டாக்கியிருந்தால் அவன் இயற்கையை வென்றவன் என்பதை அறிஞர் உலகமும் - அருளியல் உலகமும் ஒப்பும். டென்சிங் இயற்கையை வென்றான் என்பதைவிட இயற்கையை அனுபவித்தான் - அறிவித்தான் என்று கூறுவதுதான் பொருந்தும்.

மனிதன் ஒரு அறிவுப் பிண்டமே அன்றி அருளியல் பிண்டமல்லன். அறிவின் துணைகொண்டோ - ஆராய்ச்சியின் துணை கொண்டோ - உரிமையின் துணைகொண்டோ இந்த உலகம் எந்தக் காரியத்தையும் சாதித்து விடமுடியாது. இதுவரை அப்படிச் சாதித்ததாகத் தெரியவில்லை. அப்படி ஒன்று - இரண்டு இருக்குமேயானால் அதன் முடிவு அழிவாக இருக்கமுடியுமே அல்லாது நல்லதாக இருக்கமுடியாது. இது உலகம் காட்டும் உண்மை. ஒருகாரியத்தைச் சாதித்து நன்மையாக முடிக்க வேண்டுமேயானால் அருளியலின் துணை வேண்டும். அறிவியலில் அருளியல் கலக்க வேண்டும்.

மனிதன் இயற்கையை ஒட்டித்தான் வாழ்கின்றான். செயற்கையில் இயந்திரத்தின் உதவிகொண்டு மழையைப் பெய்விக்கலாம் என்பது ஒரிரு இடங்களில்தான் முடிகின்றது. ஆண்டவனின் நியதிப்படி உலகம் முமுவதும் செய்ய முடியவில்லை. இயந்திரத்தின் உதவிகொண்டு செய்வதும் இயற்கையின் நியதியை ஒட்டித்தான் செய்ய முடிகின்றதே அன்றி மனிதனின் அறிவு தானாக ஒன்றைச் செய்யவில்லை. நியூட்டன் ஆகர்ஷண சக்தியைக் கண்டான் என்றால் அதுவும் இயற்கையின் நியதியை ஒட்டித்தான் என்பதை யாரும் மறுக்கவும்-மறக்கவும் முடியாது. இயற்கையின் நியதிகளுள் ஒன்றான ஆகர்ஷண சக்திக்கு நியூட்டனின் அறிவு பெயர் கொடுத்தது. நியூட்டனின் அறிவு புதிதாக ஒன்றைக் கண்டுபிடித்ததில்லை.

கடவுள் நெறியை ஒதுக்கி - அருள்நெறியை அகற்றி மனிதன் வாழலாம். எப்பொழுது என்றால் மனிதனின் அறிவு உயிருள்ள ஒன்றை உண்டாக்கினால்தான். அப்படி இல்லாது போனால் மனிதன் இயற்கைக்குக் கட்டுப்பட்டான் என்பதை எல்லோரும் உணர வேண்டும். அறிவுக்கு ஒர் எல்லையுண்டு. அது எல்லையைக் கடக்குமானால் அழிவுப்பாதையில்தான் கொண்டுபோய் முடிக்கும். ஒன்றின் கழிவை, ஒன்றின் உணவாக்கியவன் ஆண்டவன். எல்லாம் ஒரே நியதியில் இருந்தால் உலகம் எப்படி வாழ முடியும்? ஆதலால்தான் ஆண்டவன் கூட்டுறவு வாழ்வை அமைத்துக் கொடுத்தான்.

மனிதனால் - மனிதனின் அறிவால் - ஆராய்ச்சியால் செய்யமுடியாத ஒன்றைச் செய்யும் ஆற்றல் அருளியலுக்குத்தான் உண்டு. அந்த அருளியலின் திறமையைக்கான வேண்டுமானால் திருவுருவங்களை வாழ்த்தி வணங்கி வழிபட வேண்டும். நமக்கு அப்பாற்பட்ட கடவுளைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை என்று சிலர் கூறுகின்றார்கள். அவனைப் பற்றிக் கவலைப்படாமலிருக்க முடியுமா? கவலைப்படாமலிருப்பது நன்றி மறந்த செயலாகும். மனித உணர்ச்சி இருக்குமானால் அருளியலைக் கண்டு வணங்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். அவனைக் கண்டவர்கள் - அவனது நியதியை அறிந்தவர்கள் அவன் மறுக்கக் கூடிய பொருள் அல்லன் என்பதை நன்குணர்வார்கள். அவனை மறக்காமலிருப்பது மனிதனின் கடமை. ஏ! மனிதனே, உனக்கு வேண்டிய அனைத்தும் ஆக்கித்தந்த கடவுளுக்கு நீ நன்றி செலுத்தக் கடமைப்பட்டவன் என்பதை மறவாதே.

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு”

என்ற குறளை நினைவுறுத்திக் கொள்வாயாக. நன்றியை மறவாதே! மறந்தால் வாழ்வு இல்லை என்பன ஆன்றோர் அருள்மொழிகள், உலகமே தலைகீழாக மாறினாலும் ஒருவன் செய்த நன்றியை மறவக்கூடாது. நன்றியை மறந்து வாழ்பவன் மனித உருவில் வாழ்கின்ற மற்றொன்று தான் கண்ட கடவுளை ஒன்றில் கண்டு மகிழ்ந்து , வாழ்த்தி, வணங்கி வழிபட்டு நின்று நன்றி செலுத்த நினைத்தான் பழங்காலத் தமிழன். இது அறிவியல் கூறவில்லை; அருளியல் கூறுகின்றது. பரிபூரணமாகப் பயன்தர உருவகத்தை உண்டு பண்ணினான். கோவில்களில் இருக்கின்ற காணப்படுகின்ற அனைத்தும் விஞ்ஞானத்தைக் காட்டுகின்றன.

மனித சமுதாயம் கடவுளைக் காண வேண்டுமேயானால் மக்களினத்திற்கு அருளியல் கலந்த அறிவியல் வேண்டும். கடவுளைக் கல்லில் கண்டு வணங்க மறுக்கின்றவர்கள் ஒரு கொடிக்கு மதிப்புக் கொடுத்து வணக்கம் செலுத்துகின்றார்கள். அதனை ஒப்புக்கொள்ளும் அவர்கள், உலகம் கண்ட முழுமுதற் கடவுளை உருவங்களில் கண்டு வணங்குவதை மறுக்கின்றனர். சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்! அப்பொழுதுதான் எது பகுத்தறிவு? எது பைத்தியக்காரத்தனம்? என்பது நன்கு தெரியும். அரிச்சுவடி படிக்காதவரிடம் வித்வான் படிப்பைப் பற்றிக் கூறினால் என்ன தெரியும்?

அதனைப் போலவேதான் அருளியல் கலவாத வெறும் அறிவியற் பிண்டமானவர்களின் கடவுட் கொள்கையைப் பற்றிக் கூறுவதுமாகும். இந்த உலகில் ஒரே கடவுள்தான் உண்டு. சமயப் பெரியவர்கள் காலத்திற்கும், கருத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப வெவ்வேறு பெயர் கொடுத்து அதன் வழியில் மக்களைப் பழக்கி நல்வழியில் இட்டுச் செல்கின்றார்கள். உடல் வியாதிக்கு ஏற்ப மருந்துகளைக் கொடுத்து வியாதியைப் போக்க கடவுள் நெறியென்னும் மருந்தைப் பல்வேறு பெயர்களால் பயன்படுத்தினார்கள் சமயப் பெரியார்கள்.

அறம் மக்களிடம் குடிகொள்ள வேண்டும் என்ற காரணத்தால் தென்முகக் கடவுளைக் காட்டினார்கள். மக்கட் சமுதாயத்திற்கு வீரத்தை முருகக்கடவுள் மூலம் உணர்த்தினார்கள். தடையற்ற நல்வாழ்வு வேண்டுமானால் விநாயக மூர்த்தியை வழிபடு என்று கூறினார்கள். இன்பமும் துன்பமும் இன்றி நடுநிலை வேண்டுமானால் சிவபெருமானை வழிபடு என்றார்கள். எல்லோரிடத்தும் அன்பாக இருக்கவேண்டும் என்பதற்காக அன்பின் உருவமான அம்மையைக் காட்டினார்கள். மக்கள் உள்ளத்தில் நல்லனவற்றைக் கற்பிக்கப் பல்வேறுபட்ட உருவங்களை உண்டாக்கினார்கள். மனிதனின் அறிவுதான் தனது உபயோகத்திற்கு ஏற்றவாறு கடவுளுக்குப் பெயர் கொடுத்தது. இதனைத்தான், மாணிக்கவாசகர் “ஒரு நாமம் ஒர் உருவம் ஒன்றுமில்லார்க்கு” என்று பாடியருளினார். சமயம் அப்பழுக்கில்லாதது. தீமையும் பொய்மையும் இல்லாத ஒன்று எது . என்றால் அது "சமயம்" தவிர வேறு இல்லை. அது சமயப் பெரியோர்களால் அன்பின் உருவமான அடியவர்களால் - பணிமேற்கொண்ட தொண்டர் குழாத்தால் உருவாக்கப்பட்டது. அது பலருக்குச் சொந்தமானது. ஒரு சாராருக்கென்று கருதுவது சரியன்று.

சமயக் கொள்கைகள் பெட்டியினுள் அடைக்கப்பட்டிருந்தால் மக்களுக்கோ அவர்கள் வாழ்கின்ற அவர்கள் வாழ்கின்ற நாட்டிற்கோ பயன்தர முடியாது, அவற்றால் நாடும் மக்களும் பயன்பெற வேண்டுமேயானால் சமயக் கொள்கைகளை ஒரு இலட்சியத்தின் அடிப்படையில் நின்று உலக மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் கொள்கையும் லட்சியமும் மிக மிக முக்கியம் என்பதை எல்லோரும் உணர வேண்டும். நம்முடைய கொள்கைகள் எல்லாம் அன்பின் அடிப்படையில்-அறத்தின் அடிப்படையில் பரவவேண்டும்.அந்தக் கொள்கைகளைப் பரப்புகின்ற தொண்டர்களும் தலைவர்களும் அன்பின் உருவமாகத்தான் மக்களிடங் கலந்து உறவாட வேண்டும்.

நம்முடைய வழிபாடு நெஞ்சம் கலந்த வழிபாடாக இருக்க வேண்டும். நம்முடைய இருதயம் பரிசுத்தமானதாக இருந்தால்தான்் ஆண்டவன் நமக்குக் காட்சி கொடுப்பான். நமது இருதயம் பரிசுத்தமாக இருந்தாலன்றி ஆண்டவனின் காதுகள் செவிடாக மாட்டா. பிரார்த்தனைதான் நம்மை எல்லாம் வாழ்விக்கும். இது வரலாற்றின் தத்துவம். நாம் எல்லோரும் பிரார்த்தனையைப் பின்பற்றி வாழ்வோமாக.

இளம் உள்ளங்கள் என்றென்றும் நல்லனவற்றைப் படித்துக் கேட்டு மகிழ்ந்தால்தான் தூய உள்ளமுடையவர்களாக வாழ முடியும். வருங்காலத் தமிழகத்தை உருவாக்கப் போகின்ற பொறுப்பும் கடமையும் உள்ள இளம் உள்ளங்கள் சமயத்தின் அடிப்படையில் வாழ வேண்டும். சமயம் வாழ்ந்தால்தான் மக்கட் சமுதாயமும், நாடு - நகரங்களும் நலங்காண முடியும். துள்ளித் திரிகின்ற பருவத்தில் கேட்கின்ற - படிக்கின்ற அனைத்தையும் அள்ளிப் பருகுகின்ற உள்ளம் படைத்த நீங்கள் நல்லனவற்றையே கேட்க வேண்டும். நாளைய சமுதாயத்தை உருவாக்கப் போகின்ற நீங்கள் நல்ல முறையில் பழக்கப் பெற வேண்டும். நீங்கள் எல்லோரும் எக்காலத்தும் உங்களது வருமானத்தை அறிந்து செலவு செய்தல் வேண்டும். எல்லோரும் தங்களது வருமானத்தில் சேமிப்பு நிதி என்று சிறிதளவு ஒதுக்கி வாழ்ந்தால்தான் நலம். அத்தகு வாழ்வினை வாழ நாம் எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டும். மக்கள் எல்லோரும் ஒன்றுபட்டு நன்முறையில் வாழ வேண்டும்.

அண்ணல் காந்தி அடிகள் ஹரிஜன சேரியை - தாழ்த்தப்பட்ட மக்களின் காலணியைத் திருத்தப் பாடுபட்டார். அண்ணல் காந்தி அடிகள் செய்த அந்த அரும்பெரும் பணியை மேற்கொண்டு நடத்தி வெற்றி காணவேண்டியது நமது தலையாய கடமையாகும். எந்தக் காரியத்தையும் நீங்களாகச் செய்து முடித்து வெற்றியைத் கண்டு அதன் பயனை உலகம் பெற்றுவாழ ஒற்றுமை அவசியம் என்பதை எல்லோர்க்கும் உணர்த்தி ஒற்றுமையை வளர்க்கப் பாடுபட வேண்டும். ஒற்றுமை இல்லாத நாடு எக்காலத்தும் முன்னேற்றம் காண முடியாது. கூட்டுறவு வாழ்வு வெற்றியைத் தரப் பிரார்த்தனையின் உதவியை நாடுங்கள். அது நிச்சயமாக வெற்றியைத் தரும். அதற்கு ஆண்டவன் நிச்சயமாகத் துணை செய்வான் என்று நம்புங்கள். அந்த நம்பிக்கைதான் நம்மையும்- நானிலத்தையும் வாழ்விக்கும்.

அண்ணல் காந்தி அடிகள் காட்டிய-கையாண்ட நூற்புப் பயிற்சி ஒவ்வொரு மனிதனின் சுயதேவையையும் பூர்த்தி செய்கிறது. வேலையில்லாத் திண்டாட்டத்தை அகற்றி உடலுக்கும் உயிருக்கும் வழிகாட்டுகிறது. உடலுக்கு உணவு வேண்டியது போலத்தான் உயிருக்கும் பிரார்த்தனை வேண்டும் என்பதை அண்ணல் காந்தி அடிகள் நமக்கு நன்கு போதிக்கின்றார். அண்ணலின் வாழ்வினைப் பின்பற்றி வாழ்ந்து அவர்கள் கையாண்ட பிரார்த்தனையை வளம்பெறச் செய்ய வேண்டியது நமது கடமையாகும். நூற்பில் கவனம் இருப்பதால் சிந்தனை ஒருநிலைப்பட்டதாக இருக்கிறது. சமயப் பெரியார் - சமூகப் பெரியார்களின் பெயரால் ஆங்காங்கு இயங்குகின்ற கழகங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு நாட்டின் நலம் கருதி நாட்டு மக்களின் நலம் கருதி- சமய வளர்ச்சி குறித்துத் தொண்டாற்ற வேண்டும்.

ஒர் இலட்சியத்தை நாடிச் சென்று பணியாற்றும் நாம் எல்லோரும் தனித்துத் தனித்து நின்று செயலாற்றுகின்ற காரணத்தால் நமது செயல்கள் எல்லாம் பிரிவுபட்டுப் போகின்றன. ஆதலால்தான் குறிப்பிட்டவெற்றியைக் காண முடியவில்லை.நல்ல வெற்றியைக் காண வேண்டுமானால் நம்முள் ஒற்றுமை வேண்டும். சமயத் தொண்டு வீடுகளில் இருந்து கிளம்பி எங்கும் பரவிப் பணியாற்ற வேண்டும். சிறுகச் சிறுகச் சேர்க்கின்ற பண்பை நாமும் மறக்கத் தலைப்பட்டோம். சமுதாயமும் மறந்தது. இந்த உயரிய கொள்கையை உலகிற்கு உணர்த்தியது சமயப் பெரியார்தான். அதனைப் பின்பற்றி பிடி அரிசித் தொண்டை மேற்கொண்டு சமுதாய நலத்திட்டத்தைப் பின்பற்றி பிரார்த்தனையின் வழிநின்று அருள்நெறியின் துணைகொண்டு வாழ்வோமாக.

கலை வேறு கடவுள் வேறு அல்ல. கலை கலைக்காகவும் அல்ல, கலை வாழ்க்கைக்காகத்தான். கலை வேறு கடவுள் வேறு என்று என்றும் இருந்ததில்லை. இன்றும் இல்லை. நாளையும் இருக்க முடியாது. தமிழ்மொழியைப் பழமை என்று கருதுவதுபோல கலையும் பழமைதான் என்பதை யாரும் மறக்கவோ - மறுக்கவோ முடியாது. பரந்து கிடக்கின்ற மக்கள் வாழ்க்கையிலும் கலை உண்டு.

இன்று கலை பொழுதுபோக்காக வந்துவிட்ட காரணத்தால் நாம் கலையை அனுபவிக்கின்ற உணர்ச்சியை இழந்து விட்டோம். கலை கலைக்காகத்தான் என்று மேல்நாட்டு அறிஞன் கூறினான். அவனது சொல் தமிழர்களது கலையின்முன் ஆட்டம் கண்டுவிட்டது. சிற்பத்தைச் சிற்பம் என்று கருதியது மேல்நாடு. சிற்பத்துடன் கலந்து வாழ்க்கையை நடத்தியது தமிழ்நாடு. இதனை உணர்த்துவதுதான் உருவ வழிபாடு, திருக்கோவில்களில்தான் கலையும் - இசையும் ஒன்றுபட்டு வளர்ந்தன. சிற்ப விழாவிற்கு எதுவும் இணையில்லை என்பதை திருக்கோயில்களில் காணப்படும் சிற்பங்கள் நமக்கு உணர்த்துகின்றன. கலை தமிழ்நாட்டில்தான் தோன்றியது - வளர்ந்தது - வளம்பெற்றது என்பதையும் அவை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

நாம் புதிதாகக் கலையை உண்டாக்க வேண்டியதில்லை. இருக்கின்ற கலையைக் காப்பதுதான் நமது கடமை. சமயத்தின் அடிப்படையில் எழுந்தது கலை. கலையுடன் வாழ்ந்தனர் அன்றைய தமிழர். அவர்களின் வாழ்வைப் பின்பற்றி வாழ்ந்தால்தான் பண்டைய நாகரிகத்தைக் காக்க முடியும். நமது முன்னோர்களின் வாழ்வும் தாழ்வும் கலையில்தான் இருந்தன. நன்றாகக் கலைக்கண் கொண்டு உருவாக்கப்பட்ட சிற்பத்தில் கடவுளைக் கண்டனர். கலையை வாழ்க்கையில் கண்ட தமிழினம் கடவுள் நெறியில் வாழ்ந்து கலையைக் காக்க வேண்டுமேயானால் பழம்பெரும் மன்னர்களால் எழுப்பப்பெற்ற திருக்கோயில்களில் இருக்கின்ற காணப்படுகின்ற சிற்பங்களையும் சித்திரங்களையும் காக்க வேண்டும்.

கலை இரண்டு விதம். கலையில் அழகை மட்டும் காண்பது ஒருவிதம், அழகுடன் இன்பமும் பயனும் பெறுவது ஒருவிதம். கலை பொழுது போக்கிற்கல்ல; வாழ்விற்குத்தான். அவர்கள் வாழ்த்தியதும் - வணங்கி வழிபட்டதும் கலையில் கண்ட கடவுளைத்தான். நாம் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையையும் மறந்தோம் - அவர்கள் வாழ்த்திய வணங்கிய கடவுளையும் மறக்கத் தலைப்பட்டோம் அதனால் வாழ்வும் இழந்தோம். இன்னும் எஞ்சி இருக்கின்ற பண்பாட்டையும் இழந்து கொண்டே வருகின்றோம். மொழி - கலை - எல்லை - நாகரிகம் - பண்பாடு - அனைத்திலும் பின்னேதான் நிற்கின்றோம். அத்தகு நிலையை மாற்றி அமைக்க வேண்டுமானால் நமது முன்னோர்கள் வாழ்ந்த நெறியில் நின்று கடவுளை வழிபட்டுக் கலையைக் காக்க வேண்டும்.

இந்த முயற்சியின் சின்னம்தான் தமிழ்நாடு அருள்நெறித் திருக்கூட்டம், திருக்கூட்டத்தின் அருள் முழக்கம் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கேட்கிறது. நூற்றுக்கணக்கான அன்பர்கள் தம்மையும் தம் வாழ்வையும் மறந்து இத்திருத்தொண்டில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்களுக்கு நம் இதயங்கலந்த வாழ்த்து. இது நன்முறையில் வளர்ந்து தமிழ்நாட்டின் நலங்கருதித் தொண்டாற்றும் என்ற நம்பிக்கை நமக்கு உண்டு. இன்றைய சூழ்நிலையில் தமிழ்நாடு அருள்நெறித் திருக்கூட்டம் மேற்கொண்டிருக்கிற பெரும் பணிகளுக்கு, சமய வாழ்வு கருதித் தொண்டாற்றும் கழகங்களும் பக்கபலமாக இருந்து வருகின்றன. தொண்டர் குலம் அனைத்தும் ஒன்று என்ற உண்மையை அருள்நெறித் திருக்கூட்டமும், அதனுடன் இணைந்து நின்று தொண்டாற்றுகின்ற கழகங்களும் மெய்ப்பித்து வருகின்றன. இத்தகு பேரன்பு படைத்த கழகங்களுக்கு நமது உளங்கலந்த வாழ்த்து. மீண்டும் ஒருமுறை சமயவாழ்வுடையார் அனைவரும் ஒன்றுபட்டுத் திருத்தொண்டின் நெறி பேணி வளர்க்கத் துணைசெய்யும் வண்ணம் எல்லாம்வல்ல இறைவனை வாழ்த்தி வணங்கி வழிபட்டு நிற்கின்றோம். அவனது இணையடிகளை நோக்கி இதயம் கலந்த பிரார்த்தனையைச் செய்கின்றோம். அன்பர்களது அன்பு பொருந்திய ஆர்வம் நிறைந்த ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றோம். பணியைத் தலைமேற்கொண்டு தொண்டு செய்யும் தொண்டர்களுக்கு எமது உளம் கலந்த நன்றியும் வாழ்த்தும்.

வாழ்க தமிழ்!

வளர்க அருள்நெறி!


“என்றும் வேண்டும் இன்ப அன்பு”தூத்துக்குடியில் தவத்திரு அடிகளார் ஆற்றிய உரை