அருள்விளக்க மாலை
திருவருட்பிரகாச வள்ளலார்
தொகுதிருவாய் மலர்ந்தருளிய
தொகுஅருள்விளக்க மாலை (01-20)
தொகு(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்)
பாடல்: 01 (அருள்விளக்கே)
தொகு- அருள்விளக்கே அருட்சுடரே அருட்சோதிச் சிவமே
- அருளமுதே அருள்நிறைவே அருள்வடிவப் பொருளே
- இருள்கடிந்தென் உளமுழுதும் இடங்கொண்ட பதியே
- என்னறிவே என்னுயிரே எனக்கினிய உறவே
- மருள்கடிந்த மாமணியே மாற்றறியாப் பொன்னே
- மன்றில்நடம் புரிகின்ற மணவாளா எனக்கே
- தெருளளித்த திருவாளா ஞானவுரு வாளா
- தெய்வநடத் தரசேநான் செய்மொழிஏற் றருளே! (01)
- அருஞ்சொற்பொருள்
- இருள்= அறியாமை; கடிந்து= நீக்கி; மருள்= மயக்கம்; மன்றில்= திருவம்பலம்; தெருள்= தெளிவு.
பாடல்: 02 (கோடையிலே)
தொகு- கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
-
- குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
- ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
-
- உகந்ததண்ணீ ரிடைமலர்ந்த சுகந்தமண மலரே
- மேடையிலே வீசுகின்ற மெல்லியப்பூங் காற்றே
-
- மென்காற்றில் விளைசுகமே சுகத்திலுறும் பயனே
- ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
-
- ஆடுகின்ற அரசேஎன் அலங்கலணிந் தருளே! (02)
- அருஞ்சொற்பொருள்
- தரு= மரம்; அலங்கல்= மாலை.
பாடல்: 03 (இன்புறநான்)
தொகு- இன்புறநான் எய்ப்பிடத்தே பெற்றபெரு வைப்பே
- ஏங்கியபோ தென்றன்னைத் தாங்கியநற் றுணையே
- அன்புறஎன் உட்கலந்தே அண்ணிக்கும் அமுதே
- அச்சமெலாம் தவிர்த்தென்னை ஆட்கொண்ட குருவே
- என்பருவம் குறியாதே எனைமணந்த பதியே
- இச்சையுற்ற படியெல்லாம் எனக்கருளும் துரையே
- துன்பறமெய் அன்பருக்கே பொதுநடஞ்செய் அரசே
- தூயதிரு வடிகளுக்கென் சொல்லுமணிந் தருளே! (03)
- அருஞ்சொற்பொருள்
- எய்ப்பு= இளைத்தகாலத்தில்/பொருளற்ற காலத்தில்; வைப்பு= வைப்புநிதி.
பாடல்: 04 (ஒசித்தகொடி)
தொகு- ஒசி்த்தகொடி யனையேற்குக் கிடைத்தபெரும் பற்றே
- உள்மயங்கும் போதுமயக் கொழித்தருளும் தெளிவே
- பசித்தபோது எதிர்கிடைத்த பால்சோற்றுத் திரளே
- பயந்தபொழு தெல்லாமென் பயந்தவிர்த்த துரையே
- நசித்தவரை யெழுப்பியருள் நல்கியமா மருந்தே
- நான்புணர நானாகி நண்ணியமெய்ச் சிவமே
- கசித்தமனத் தன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே
- களித்தெனது சொன்மாலை கழலிலணிந் தருளே! (04)
- அருஞ்சொற்பொருள்
- ஒசித்த= வளைந்த; கொடியனையேன்= கொடிபோன்றவன்; பற்று= கொழுகொம்பு; நசித்தவர்= இறந்தவரை;
பாடல்: 05 (மனமிளைத்து)
தொகு- மனமிளைத்து வாடியபோ தென்னெதிரே கிடைத்து
- வாட்டமெலாந் தவிர்த்தெனக்கு வாழ்வளி்த்த நிதியே
- சினமுகத்தார் தமைக்கண்டு திகைத்தபொழு தவரைச்
- சிரித்தமுகத் தவராக்கி எனக்களித்த சிவமே
- அனம்உகைத்தான் அரிமுதலோர் துருவிநிற்க எனக்கே
- அடிமுடிகள் காட்டுவித்தே அடிமைகொண்ட பதியே
- இனமெனப்பே ரன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே
- என்னுடைய சொன்மாலை யாவுமணிந் தருளே! (05)
- அருஞ்சொற்பொருள்
- சினம்= கோபம்; அனம்= அன்னப்பறவை;உகைத்தான்= பிரமன்; அரி= திருமால்;
பாடல்: 06 (கங்குலிலே)
தொகு- கங்குலிலே வருந்தியவென் வருத்தமெலாம் தவிர்த்தே
- காலையிலே எனுளத்தே கிடைத்தபெருங் களிப்பே
- செங்குவளை மாலையொடு மல்லிகைப்பூ மாலை
- சேர்த்தணிந்தென் றனைமணந்த தெய்வமண வாளா
- எங்குமொளி மயமாகி நின்றநிலை காட்டி
- என்னகத்தும் புறத்தும்நிறைந் திலங்கியமெய்ப் பொருளே
- துங்கமுறத் திருப்பொதுவில் திருநடஞ்செய் அரசே
- சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில் அணிந்தருளே!
- அருஞ்சொற்பொருள்
- கங்குல்= இரவு; துங்கமுற= மேன்மையுறும்படி;
பாடல்: 07 (கரைந்துவிடாதென்)
தொகு- கரைந்துவிடா தென்னுடைய நாவகத்தே யிருந்து
- கனத்தசுவை தருகின்ற கற்கண்டே கனிவாய்
- விரைந்துவந்தென் துன்பமெலாம் தவிர்த்தவரு ளமுதே
- மெய்யருளே மெய்யாகி விளங்குகின்ற விளக்கே
- திரைந்தஉடல் விரைந்துடனே பொன்னுடம்பே யாகித்
- திகழ்ந்தழியா தோங்கவருள் சித்தேமெய்ச் சத்தே
- வரைந்தென்னை மணம்புரிந்து பொதுநடஞ்செய் யரசே
- மகிழ்வொடுநான் புனைந்திடுஞ் சொன்மாலை யணிந்தருளே!
- அருஞ்சொற்பொருள்
- திரைந்த= சுருக்கங்கள்நிறைந்த;
பாடல்: 08 (கதிக்குவழி)
தொகு- கதிக்குவழி காட்டுகின்ற கண்ணேயென் கண்ணில்
- கலந்தமணி யேமணியில் கலந்தகதி ரொளியே
- விதிக்குமுல குயிர்க்குயிராய் விளங்குகின்ற சிவமே
- மெய்யுணர்ந்தோர் கையகத்தே விளங்கியதீங் கனியே
- மதிக்குமதிக் கப்புறம்போய் வயங்குதனி நிலையே
- மறைமுடியா கமமுடிமேல் வயங்குமின்ப நிறைவே
- துதிக்குமன்பர் தொழப்பொதுவில் நடம்புரியு மரசே
- சொன்மாலை சூட்டுகின்றேன் தோளிலணிந் தருளே!
பாடல்: 09 (அண்டவளவெவ்)
தொகு- அண்டவள வெவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
- அமைந்தசரா சரவளவெவ் வளவோவவ் வளவும்
- கண்டதுவாய் ஆங்கவைகள் தனித்தனியே அகத்தும்
- காண்புறத்தும் அகப்புறத்தும் புறப்புறத்தும் விளங்க
- விண்டகுபே ரருட்சோதிப் பெருவெளி்ககு நடுவே
- விளங்கியொரு பெருங்கருணைக் கொடிநாட்டி யருளாம்
- தண்டகுமோர் தனிச்செங்கோல் நடத்திமன்றில் நடிக்கும்
- தனியரசே என்மாலை தாளிலணிந் தருளே! (09)
பாடல்: 10 (நல்லார்சொல்)
தொகு- நல்லார்சொல் யோகாந்தப் பதிகள்பல கோடி
- நாட்டியதோர் போதாந்தப் பதிகள்பல கோடி
- வல்லார்சொல் கலாந்தநிலைப் பதிகள்பல கோடி
- வழுத்துமொரு நாதாந்தப் பதிகள்பல கோடி
- இல்லார்ந்த வேதாந்தப் பதிகள்பல கோடி
- இலங்குகின்ற சித்தாந்தப் பதிகள்பல கோடி
- எல்லாம்பே ரருட்சோதித் தனிச்செங்கோல் நடத்தும்
- என்னரசே என்மாலை இனிதுபுனைந் தருளே! (10)
பாடல்: 11 (நாட்டியதோர்)
தொகு- நாட்டியதோர் சுத்தபரா சக்தியண்டம் முதலா
- ஞானசக்தி அண்டமது கடையாக இவற்றுள்
- ஈட்டியபற் பலசத்தி சத்தர்அண்டப் பகுதி
- எத்தனையோ கோடிகளும் தன்நிழற்கீழ் விளங்கச்
- சூ்ட்டியபொன் முடியிலங்கச் சமரசமெய்ஞ் ஞான
- சுத்தசிவ சன்மார்க்கப் பெருநிலையி லமர்ந்தே
- நீட்டியபே ரருட்சோதித் தனிச்செங்கோல் நடத்தும்
- நீதிநடத் தரசேஎன் நெடுஞ்சொலணிந் தருளே!
பாடல்: 12 (தன்பெருமை)
தொகு- தன்பெருமை தானறியாத் தன்மையனே எனது
- தனித்தலைவா என்னுயிர்க்குள் இனித்ததனிச் சுவையே
- நின்பெருமை நானறியேன் நான்மட்டோ அறியேன்
- நெடுமால்நான் முகன்முதலா மூர்த்திகளு மறியார்
- அன்புறுமா கமமறைகள் அறியாவே எனினும்
- அவருமவை களும்சிலசொல் லணிகின்றார் நினக்கே
- என்பவரும் குறியாதே எனையாண்ட அரசே
- யானுமவர் போலணிகின்றேன் அணிந்திங் கருளே!
பாடல்: 13 (உண்ணவுண்ணத்)
தொகு- உண்ணவுண்ணத் தெவிட்டாதே தித்தித்தென் னுடம்போடு
- உயிருணர்வும் கலந்துகலந் துள்ளகத்தும் புறத்தும்
- தண்ணியவண் ணம்பரவப் பொங்கிநிறைந் தாங்கே
- ததும்பியென்றன் மயமெல்லாம் தன்மயமே யாக்கி
- எண்ணியவென் எண்ணமெலாம் எய்தவொளி வழங்கி
- இலங்குகின்ற பேரருளாம் இன்னமுதத் திரளே
- புண்ணியமே என்பெரிய பொருளேயென் அரசே
- புன்மொழியென் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே! (13)
பாடல்: 14 (நாட்டார்கள்)
தொகு- நாட்டார்கள் சூழ்ந்துமதித் திடமணிமே டையிலே
- நடுவிருக்க என்றனையே நாட்டியபே ரிறைவா
- பாட்டாளர் பாடுதொறும் பரிசளிக்கும் துரையே
- பன்னுமறைப் பாட்டேமெய்ப் பாட்டினது பயனே
- கூட்டாளா சிவகாமக் கொடிக்கிசைந்த கொழுநா
- கோவேயென் கணவாஎன் குரவாஎன் குணவா
- நீட்டாளர் புகழ்ந்தேத்த மணிமன்றில் நடிக்கும்
- நீதிநடத் தரசேயென் நெடுமொழிகொண் டருளே! (14)
பாடல்: 15 (கைக்கிசைந்த)
தொகு- கைக்கிசைந்த பொருளேஎன் கருத்திசைந்த கனிவே, கண்ணேயென் கண்களுக்கே கலந்திசைந்த கணவா
- மெய்க்கிசைந்த அணியேபொன் மேடையிலென் னுடனே, மெய்கலந்த தருணத்தே விளைந்தபெருஞ் சுகமே
- நெய்க்கிசைந்த உணவேஎன் நெறிக்கிசைந்த நிலையே, நித்தியமே எல்லாமாஞ் சத்தியமே உலகில்
- பொய்க்கிசைந்தார் காணாதே பொதுநடஞ்செய் அரசே, புன்மொழியென் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே! (15)
பாடல்: 16 (கொடுத்திடநான்)
தொகு- கொடுத்திடநான் எடுத்திடவும் குறையாத நிதியே, கொல்லாத நெறியேசித் தெல்லாஞ்செய் பதியே
- மடுத்திடவும் அடுத்தடுத்தே மடுப்பதற்குள் ளாசை, வைப்பதன்றி வெறுப்பறியா வண்ணநிறை அமுதே
- எடுத்தெடுத்துப் புகன்றாலும் உலவாத ஒளியே, என்னுயிரே என்னுயிருக் கிசைந்தபெருந் துணையே
- தடுத்திடவல் லவரில்லாத் தனிமுதற்பே ரரசே, தாழ்மொழியென் றிகழாதே தரித்துமகிழ்ந் தருளே! (16)
பாடல்: 17 (தனித்தனி)
தொகு- தனித்தனிமுக் கனிபிழிந்து வடித்தொன்றாக் கூட்டிச் சர்க்கரையுங் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே
- தனித்தநறுந் தேன்பெய்து பசும்பாலுந் தெங்கின் தனிப்பாலுஞ் சேர்த்தொருதீம் பருப்பிடியும் விரவி
- இனித்தநறு நெய்யளைந்தே இளஞ்சூட்டி னிறக்கி, எடுத்தசுவைக் கட்டியினும் இனித்திடுந்தெள் ளமுதே
- அனித்தமறத் திருப்பொதுவில் விளங்குநடத் தரசே, அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கலணிந் தருளே! (17)
பாடல்: 18 (மலைவறியாப்)
தொகு- மலைவறியாப் பெருஞ்சோதி வச்சிரமா மலையே, மாணிக்க மணிப்பொருப்பே மரகதப்பேர் வரையே
- விலையறியா உயராணிப் பெருமுத்துத் திரளே, விண்ணவரும் நண்ணருமோர் மெய்ப்பொருளின் விளைவே
- கொலையறியாக் குணத்தோர்தங் கூட்டுறவே அருட்செங் கோல்நடத்து கின்றதனிக் கோவேமெய் அறிவால்
- நிலையறிந்தோர் போற்றுமணி மன்றில்நடத் தரசே நின்னடிப்பொன் மலர்களுக்கென் நெடுஞ்சொல் லணிந்தருளே! (18)
பாடல்: 19 (கண்களிக்கப்)
தொகு- கண்களிக்கப் புகைசிறிதும் காட்டாதே புருவக் கலைநடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே
- பண்களிக்கப் பாடுகின்ற பாட்டில்விளை சுகமே, பத்தருளே தித்திக்கப் பழுத்ததனிப் பழமே
- மண்களிக்க வான்களிக்க மணந்தசிவ காம வல்லியென மறைகளெலாம் வாழ்த்துகின்ற வாமப்
- பெண்களிக்கப் பொதுநடஞ்செய் நடத்தரசே நினது பெரும்புகழ்ச்சே வடிகளுக்கென் அரும்புமணிந் தருளே! (19)
பாடல்: 20 (உருவெளியே)
தொகு- உருவெளியே உருவெளிக்குள் உற்றவெளி உருவே, உருநடுவும் வெளிநடுவும் ஒன்றான ஒன்றே
- பெருவெளியே பெருவெளியில் பெருஞ்சோதி மயமே, பெருஞ்சோதி மயநடுவே பிறங்குதனிப் பொருளே
- மருவொழியா மலரகத்தே வயங்கு?ஒளி மணியே மந்திரமே தந்திரமே மதிப்பரிய மருந்தே
- திருவொழியா தோங்குமணி மன்றில்நடத் தரசே, சிறுமொழியென் றிகழாதே சேர்த்துமகிழ்ந் தருளே! (20)
- பார்க்க