அருள்விளக்க மாலை (21-40)
திருவருட்பிரகாச வள்ளலார்
தொகுதிருவாய் மலர்ந்தருளிய
தொகுஅருள்விளக்க மாலை (21-40)
தொகு(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்)
பாடல்: 21 (நானென்றும்)
தொகு- நானென்றும் தானென்றும் நாடாத நிலையில் ஞானவடி வாய்விளங்கும் வானநடு நிலையே
- ஊனென்றும் உயிரென்றும் குறியாமே முழுதும் ஒருவடிவாம் திருவடிவம் உவந்தளித்த பதியே
- தேனென்றும் கரும்பென்றும் செப்பரிதாய் மனமும் தேகமுமுள் ளுயிருணர்வுந் தித்திக்குஞ் சுவையே
- வானென்றும் ஒளியென்றும் வகுப்பரிதாம் பொதுவில் வயங்குநடத் தரசேயென் மாலையுமேற் றருளே! (21)
பாடல்: 22 (எட்டிரண்டும்)
தொகு- எட்டிரண்டும் என்னென்றால் மயங்கியவென் றனக்கே, எட்டாதநிலை யெல்லாம் எட்டுவித்த குருவே
- கட்டிரண்டுங் காட்டாதே துரியநிலை நடுவே, சுகமயமாய் விளங்குகின்ற சுத்தபரம் பொருளே
- மட்டிதுவென் றறிவதற்கு மாட்டாதே மறைகள் மவுனமுறப் பரம்பரத்தே வயங்குகின்ற ஒளியே
- தட்டறியாத் திருப்பொதுவில் தனிநடஞ்செய் அரசே, தாழ்மொழியென் றிகழாதே தரித்துமகிழ்ந் தருளே! (22)
பாடல்: 23 (சாதிகுலஞ்சமய)
தொகு- சாதிகுலஞ் சமய1மெலாந் தவிர்த்தெனைமேல் ஏற்றித் தனித்ததிரு வமுதளித்த தனித்தலைமைப் பொருளே
- ஆதிநடுக் கடைகாட்டா தண்டபகி ரண்டம் ஆருயிர்கள் அகம்புறம்மற் றனைத்துநிறை ஒளியே
- ஓதியுணர்ந் தவரெல்லாம் எனைக்கேட்க எனைத்தான் ஓதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச்செய் யுறவே
- சோதிமய மாய்விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும் தூயநடத் தரசேஎன் சொல்லுமணிந் தருளே! (23)
- 1. "சாதி பிறப்புப் பற்றியது; குலம் தொழில் பற்றியது; சமயம் கொள்கை பற்றியது." - உரையாசிரியர் மா.வயித்தியலிங்கன்,2013.
பாடல்: 24 (அடிக்கடியென்)
தொகு- அடிக்கடியென் அகத்தினிலும் புறத்தினிலும் சோதி அருளுருவாய்த் திரிந்துதிரிந் தருள்கின்ற பொருளே
- படிக்களவின் மறைமுடிமேல் ஆகமத்தின் முடிமேல், பதிந்தபதம் என்முடிமேல் பதித்ததனிப் பதியே
- பொடிக்கனகத் திருமேனித் திருமணங்கற் பூரப் பொடிமணத்தோ டகம்புறமும் புதுமணஞ்செய் அமுதே
- அடிக்கனக அம்பலத்தே திருச்சிற்றம் பலத்தே ஆட்புரி அரசேயென் அலங்கலணிந் தருளே. (24)
பாடல்: 25 (அறையாத)
தொகு- அறையாத பெருங்காற் றடித்தாலும் சிறிதும் அசையாதே அவியாதே அண்டபகி ரண்டத்
- துறையாவும் பிண்டவகைத் துறைமுழுதும் விளங்கத் தூண்டாதே விளங்குகின்ற சோதிமணி விளக்கே
- மறையாதே குறையாதே களங்கலும் இல்லாதே மயக்காதே பனிக்காதே வயங்குகின்ற மதியே
- இறையாயெவ் வுயிரகத்தும் அகப்புறத்தும் புறத்தும் இலங்குநடத் தரசேயென் இசையும் அணிந்தருளே! (25)
பாடல்: 26 (பார்த்தாலும்)
தொகு- பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப் பக்கநின்று கேட்டாலும் பரிந்துள்ளுணர்ந் தாலும்
- ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டியணைத் தாலும் இத்தனைக்கும் தித்திக்கு மினி்த்தசுவைக் கரும்பே
- வேர்த்தாவி மயங்காது கனி்ந்தநறுங் கனியே மெய்ம்மை அறிவானந்தம் விளக்குமருள் அமுதே
- தீர்த்தாஎன் றன்பரெலாம் தொழப்பொதுவில் நடிக்கும் தெய்வநடத் தரசேயென் சிறுமொழியேற் றருளே! (26)
பாடல்: 27 (பற்றுதலும்)
தொகு- பற்றுதலும் விடுதலுமுள் ளடங்குதலும் மீட்டும் படுதலொடு சுடுதலும்புண் படுத்தலுமில் லாதே
- உற்றொளிகொண் டோங்கியெங்கும் தன்மயமாய் ஞான உருவாகி யுயிர்க்குயிரா யோங்குகின்ற நெருப்பே
- சுற்றுதலும் தோன்றுதலும் மறைதலும்வெச் சென்றே சுடுதலுமில் லாதென்றும் துலங்குகின்ற சுடரே
- முற்றுமுணர்ந் தவருளத்தே திருச்சிற்றம் பலத்தே முயங்கும் நடத்தரசேயென் மொழியுமணிந் தருளே! (27)
பாடல்: 28 (ஐம்பூதபரங்)
தொகு- ஐம்பூத பரங்கள்முதல் நான்குமவற் றுள்ளே அடுத்திடுநந் நான்குமவை அகம்புறமேல் நடுக்கீழ்
- கம்பூத பக்கமுதல் எல்லாந்தன் மயமாய்க் காணுமவற் றப்புறமும் கலந்ததனிக் கனலே
- செம்பூத உலகங்கள் பூதா்ண்ட வகைகள் செழித்திடநற் கதிர்பரப்பித் திகழ்கின்ற சுடரே
- வெம்பூதத் தடைதவிர்ந்தார் ஏத்தமணி மன்றில் விளங்குநடத் தரசேயென் விளம்புமணிந் தருளே! (28)
பாடல்: 29 (வாதுறுமிந்திய)
தொகு- வாதுறுமிந் தியகரண பரங்கள்முதல் நான்கு்ம் வகுத்திடுநந் நான்குமகம் புறமேல்கீழ் நடுப்பால்
- ஓதுறுமற் றெல்லாந்தன் மயமாகக் கலந்தே ஓங்கவற்றின் அப்புறமும் ஒளிர்கின்ற ஒளியே
- சூதுறுமிந் தியகரண லோகாண்ட மனைத்தும் சுடர்பரப்பி விளங்குகின்ற சுயஞ்சோதிச் சுடரே
- போதுறுவார் பலர்நின்று போற்றநடம் பொதுவில் புரியும்நடத் தரசேயென் புகலுமணிந் தருளே! (29)
பாடல்: 30 (பகுதிபர)
தொகு- பகுதிபர முதல்நான்கு மவற்றுறுநந் நான்கும் பரவியெலாம் தன்மயமாம் படிநிறைந்து விளங்கித்
- தகுதிபெறும் அப்பகுதிக் கப்புறமும் சென்றே தனியொளிச்செங் கோல்நடத்தித் தழைக்கின்ற ஒளியே
- மிகுதிபெறு பகுதியுல கம்பகுதி அண்டம் விளங்கவருட் சுடர்பரப்பி விளங்குகின்ற சுடரே
- தொகுதிபெறு கடவுளர்கள் ஏத்தமன்றில் நடிக்கும் துரியநடத் தரசேயென் சொல்லுமணிந் தருளே! (30)
பாடல்: 31 (மாமாயை)
தொகு- மாமாயைப் பரமாதி நான்குமவற் றுள்ளே வயங்கியநந் நான்குந்தன் மயத்தாலே விளக்கி
- ஆமாறம் மாமாயைக் கப்புறத்தும் நிறைந்தே அறிவொன்றே வடிவாகி விளங்குகின்ற ஒளியே
- தாமாயா புவனங்கள் மாமாயை அண்டம் தழைத்துவிளங் கிடக்கதிர்செய் தனித்தபெருஞ் சுடரே
- தேமாலும் பிரமனும்நின் றேத்தமன்றில் நடிக்கும் தெய்வநடத் தரசேயென் சிறுமொழியேற் றருளே! (31)
பாடல்: 32 (சுத்தபரமுதல்)
தொகு- சுத்தபர முதல்நான்கும் அவற்றுறுநந் நான்கும் தூயஒளி வடிவாகத் துலங்குமொளி யளித்தே
- நித்தபரம் பரநடுவாய் முதலாயந் தமதாய் நீடியவோர் பெருநிலைமேல் ஆடியபே ரொளியே
- வித்தமுறும் சுத்தபர லோகாண்ட மனைத்தும் விளக்கமுறச் சுடர்பரப்பி விளங்குகின்ற சுடரே
- சத்தியஞா னானந்தச் சித்தர்புகழ் பொதுவில் தனித்தநடனத் தரசேயென் சாற்றுமணிந் தருளே! (32)
பாடல்: 33 (சாற்றுகின்ற)
தொகு- சாற்றுகின்ற கலையைந்தில் பரமாதி நான்கும் தக்கவவற் றூடிருந்த நந்நான்கும் நிறைந்தே
- ஊற்றுகின்ற அகம்புறமேல் நடுக்கீழ்மற் றனைத்தும் உற்றிடுந்தன் மயமாகி ஒளிர்கின்ற ஒளியே
- தோற்றுகின்ற கலையுலகங் கலையண்ட முழுதும் துலங்குகின்ற சுடர்பரப்பிச் சூழ்கின்ற சுடரே
- போற்றுகின்ற மெய்யடியர் களிப்பநடித் தருளும் பொதுவில்நடத் தரசேயென் புகலுமணிந் தருளே! (33)
பாடல்: 34 (நாட்டியவோங்)
தொகு- நாட்டியவோங் காரமைந்தில் பரமுதல் ஓர்நான்கும் நந்நான்கு மாறிடத்தும் நயந்துநிறைந் தருளி
- ஈட்டியசெம் பொருள்நிலையோ டிலக்கியமும் விளங்க இனிதுநின்று விளங்குகின்ற இன்பமய ஒளியே
- கூட்டியவோங் காரவுல கோங்கார வண்டம் குடிவிளங்கக் கதிர்பரப்பிக் குலவுபெருஞ் சுடரே
- பாட்டியல்கொண் டன்பரெலாம் போற்றமன்றில் நடிக்கும் பரமநடத் தரசேயென் பாட்டுமணிந் தருளே! (34)
பாடல்: 35 (மன்னுகின்ற)
தொகு- மன்னுகின்ற அபரசத்திப் பரமாதி யவற்றுள் வகுத்தநிலை யாதியெலாம் வயங்கவயி னெல்லாம்
- பன்னுகின்ற பற்பலவாம் விசித்திரசித் திரங்கள் பரவிவிளங் கிடவிளங்கிப் பதிந்தருளும் ஒளியே
- துன்னபர சத்தியுல கபரசத்தி யண்டம் சுகம்பெறவே கதிர்பரப்பித் துலங்குகின்ற சுடரே
- உன்னுமன்பர் உளங்களிக்கத் திருச்சிற்றம் பலத்தே யோங்கும்நடத் தரசேயென் னுரையுமணிந் தருளே! (35)
பாடல்: 36 (விளங்குபர)
தொகு- விளங்குபர சத்திகளின் பரமாதி யவற்றுள் விரிந்தநிலை யாதியெலாம் விளங்கியொளி வழங்கிக்
- களங்கமிலாப் பரவெளியில் அந்தமுதல் நடுத்தான் காட்டாதே நிறைந்தெங்கும் கலந்திடும்பே ரொளியே
- உளங்குலவு பரசத்தி உலகமண்ட முழுதும் ஒளிவிளங்குச் சுடர்பரப்பி ஓங்குதனிச் சுடரே
- வளங்குலவு திருப்பொதுவில் மாநடஞ்செய் அரசே மகிழ்ந்தெனது சொல்லெனுமோர் மாலையணிந் தருளே! (36)
பாடல்: 37 (தெரிந்தமகா)
தொகு- தெரிந்தமகா சுத்தபர முதலுமவற் றுள்ளே சிறந்தநிலை யாதிகளும் தெளிந்துவிளங் குறவே
- பரிந்தவொரு சிவவெளியில் நீக்கமற நிறைந்தே பரமசுக மயமாகிப் பரவியபே ரொளியே
- விரிந்தமகா சுத்தபர லோகாண்ட முழுதும் மெய்யறிவா னந்தநிலை விளக்குகின்ற சுடரே
- புரிந்ததவப் பயனாகும் பொதுவில்நடத் தரசே புன்மொழியென் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே! (37)
பாடல்: 38 (வாய்ந்தபர)
தொகு- வாய்ந்தபர நாதம் ஐந்தில் பரமுதலும் அவற்றுள் மன்னுநிலை யாதிகளும் வயங்கியிட நிறைந்தே
- ஆய்ந்தபர சிவவெளியில் வெளியுருவாய் எல்லாம் ஆகியதன் இயல்விளக்கி அலர்ந்திடும்பே ரொளியே
- தோய்ந்தபர நாதவுல கண்டமெலாம் விளங்கச் சுடர்பரப்பி விளங்குகின்ற தூயதனிச் சுடரே
- வேய்ந்தமணி மன்றிடத்தே நடம்புரியும் அரசே விளம்புறுமென் சொன்மாலை விளங்கவணிந் தருளே! (38)
பாடல்: 39 (கல்லார்க்கும்)
தொகு- கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளுங் களிப்பே காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
- வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
- நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
- எல்லார்க்கும் பொதுவில்நட மிடுகின்ற சிவமே என்னரசே யான்புகலும் இசையுமணிந் தருளே! (39)
பாடல்: 40 (காட்சியுறக்)
தொகு- காட்சியுறக் கண்களுக்குக் களிக்கும் வண்ணமுளதாய்க் கையுமெய்யும் பரிசிக்கச் சுகபரிசத் ததுவாய்ச்
- சூழ்ச்சியுற நாசிக்குச் சுகந்தஞ்செய் குவதாய்த் தூயசெவிக் கினியதொரு சுகநாதத் ததுவாய்
- மாட்சியுற வாய்க்கினிய பெருஞ்சுவை யீகுவதாய் மறைமுடிமேல் பழுத்தெனக்கு வாய்த்தபெரும் பழமே
- ஆட்சியுற அருளொளியால் திருச்சிற்றம் பலத்தே ஆடல்புரி அரசேயென் அலங்கலணிந் தருளே!
- பார்க்க