அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்/போராட்டம் போதும்

8.போராட்டம் போதும்


உண்ண உணவு, உடுக்க உடை ,இருக்க உறையுள். இந்த மூன்றும் தான் ஒவ்வொரு மனிதருக்கும் எதிரே தின்று, புதிர் கிளப்பியும் சதிராடியும் பிரச்சினைகளை விளைவித்துப் போராடச் செய்வனவாகும்.

இந்த மூன்றும் எதிர்பார்ப்பது போல ஒருவருக்குக் கிடைத்து விட்டால், மகிழ்ச்சியோ மகிழ்ச்சிதான், ஆனால் வாழ்க்கை என்பதற்குப் பொருள் அப்படி இல்லையே!

ஒன்றை நினைக்கின், அது ஒழிந்திட்டு வேறு ஒன்று நடக்கும். நாம் விரும்பாதது எதுவோ, நடக்க வேண்டாம் என்று எதை அதிகம் நினைக்கிறோமோ, அதுவே முதலில் நடக்கும். இப்படி நடந்தால் எப்படி வாழ்வு இனிக்கும்? சிறக்கும்?

பணம் என்று ஒன்று நிறைய வந்து விட்டால், சிந்து பாடும் தொந்தரவுகள், சஞ்சலங்கள் எல்லாம், சொல்லிக் கொள்ளாமல் வாலை சுருட்டிக் கொண்டு ஓடிவிடும் என்று சொல்லி மகிழ்பவர்கள், நிலைமையும் . அவர்கள் நினைத்தது போல் நடக்கவில்லையே ஏன்? பணமே ஒரு பிரச்சினை தான.

பணத்தை சம்பாதிக்க ஒரு போராட்டம். வந்த பணம் போய்விடக் கூடாதே என்று மறு போராட்டம். பணம் வந்த

பிறகு, ஏற்படுகின்ற பிரச்சனைகளைப் போக்கிவிட புதுப் போராட்டம்,

எனவே, ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

வாழ்க்கை என்பதே ஒரு போராட்டம் தான். அதை சந்திக்கவும், சந்தோஷமாக வெற்றிபெறச் செய்ய சிந்திக்கவும் கூடிய ஒரு பெரிய பணியைத்தான் நாம் தினந்தோறும் செய்து கொண்டிருக்கிறோம்.

எளிதாக எண்ணி செயல்படுகின்றவர்களின் வாழ்வு ஏற்றமாக இருக்கிறது. அரிது என்று அரற்றிக்கொண்டே துடிப்பவர்கள் வாழ்வு இரக்கமாகவே போய் விடுகிறது.

காரணம் என்ன?

பல நோய்களுக்குக் காரணம் மனம் தான் என்ற முடிவுக்கு மருத்துவர்களும், மனோ ஆராய்ச்சி வல்லுநர்களும் வந்திருக் கின்றர்கள். உதாரணத்திற்கு ஒன்று. மன உலைச்சல் அதிகம் உள்ளவர்களுக்கு மூச்சடைப்பு நோய் அதாவது ஆஸ்த்மா, அல்சர், முதுகுவலி மற்றும் எதிர்பாராத நோய்கள் எல்லாம்மே வந்து தொலைக்கின்றன.

அதிக மன உலைச்சல், இயற்கையான சுவாசத்தை மாற்றி விடுகிறது. அதனால் சுவாச கோசங்கள் சிறிது சிறிதாகப் பாதிக்கப்படுகின்றன. அதிகமான படபடப்பும், எரிச்சலும், பயத்தை உண்டு பண்ணுகின்றன. ஆங்காரமான கோபத்தை உண்டு பண்ணுகின்றன. பலன்?

உடலில் உள்ள ஹார்மோன்கள் அதிகமான அளவிலே சுரந்து விடுகின்றன. அதனால் இரத்தத்தில் சர்க்கரை அதிகமாகி விடுகின்றன. இப்படி படபடப்பும் உலைச்சலும் தொடரத் தொடர, சர்க்கரைப் பொருட்கள் இரத்தத்தில் தங்கி விட , அதுவே நீரிழிவு நோயாக மாறி விடுகின்றன. அதிகமான போராட்ட நினைவுகள், புதுப்புது யோசனைகள், மன உலைச்சல்களையும் உணர்வுகளையும் உண்டாக்கி விடுகின்றன. அவை இருதயத்தை வெகு வேகமாக இயக்கி விடுகின்றன. இதன் தொடர்ச்சியே இரத்த அழுத்த நோய். அதனை அடுத்து வருவது மாரடைப்பாகும்.


புகழ்பெற்ற மருத்துவர்களின் கூற்றுப்படி, உடலில் தோன்றும் நோய்களுக்கு 50 விழுக்காடு காரணம் மன உலைச்சகள் தான், [Stress and Strain]. அவை நரம்பு மண்டலங்களை நிலை கொள்ளாமல் செய்து, விறைப்பினை ஏற்படுத்தி, இறுதியில் நரம்புத் தளர்ச்சியை உண்டாக்கி விடுகின்றன.


ஒரே வயது, ஒரே இனம், ஒரே மாதிரியான சூழ்நிலையில் வாழும் பலரை ஆராய்ச்சி செய்த பின், மேற்கொண்ட முடிவானது, மன உலைச்சல் உள்ளவர்களே விரைவில் வயோதிகர்களாகின்றார்கள்.

வசதிகள் இருந்தும், வளமாக வாழும் வாய்ப்பும் சூழ்நிலை இருந்தும், மனதினை அடக்கத் தெரியாத மக்கள் வாழ்வு. இன்றுத் தேரோட்டமாக அமையவில்லை. துன்பப்போராட்டமாகத் தான் அமைந்து கிடக்கிறது.

வாழ்க்கையில் எதிர்பார்ப்பு' என்று இருக்கிறதே, அது அதன் அனைத்துத் துன்பங்களுக்கும் ஆதிகரித்தாவாக அமைந்திருக்கிறது. எதிர்பார்ப்புத் தொடங்கிய உடனேயே, எல்லா உறுப்புக்களும் உசுப்பி விடப்படுகின்றன.

உணவை எதிர்பார்க்கும் பொழுது, ஜீரண உறுப்புக்கள் உமிழ் நீருடன், ஜீரண சுரப்பிகளின் ஊற்றுக்களால், காத்துக் கிடக்கின்றன. எதிர்பார்ப்பு ஏமாற்றமடையும்போது, ஜீரண உறுப்புக்கள் பாதிப்புக்கு ஆளாகின்றன. அங்கே மனமும் பாதிக்கப்படுகிறது. ஆமாம். அல்சரின் ஆரம்பம் அங்கே தானே!

மனதுக்கும் உடலுக்கும் அதிக இணைப்பு இருப்பதை நாம் அறிந்திருக்கிறோம். எதையாவது எதிர்பார்த்து ஏங்கிக் கிடக்கின்ற மனத்தின் அவதி, எத்தனை எத்தனை மாற்றங்களை உடலுக்குள் உண்டு பண்ணி விடுகின்றன தெரியுமா!

ஆகவே, படபடப்பும் பதைபதைப்பும் நிறைந்த ஒரு மனிதன், பாதி உயிர் உள்ள ஜீவனாகவே வாழ்ந்து தொலைக்கிறான்.

இப்படி தொலைந்தும் நலிந்தும் ஏன் மனிதன் நலிய வேண்டும்? நாம் நன்றாகத்தானே இருக்கிறோம் என்ற நம்பிக்கை முதலில் மனிதனுக்கு வேண்டும். தமக்கு இருப்பது இன்றைக்குப் போதுமானதாக இருக்கிறது என்ற திருப்தி வேண்டும். நமக்கு இறைவன் எந்தக் குறையும் வைக்க வில்லையே என்ற சரணாகதி பண்புகள் வேண்டும். தனது உடமைகளைப் பற்றிய பாராட்டினை பெரிது படுத்திக் கொள்ள வேண்டும். இல்லாததற்காக ஏங்கக் கூடாது.

இப்படியெல்லாம் வாழ்க்கைப் பிரச்சினைகளை நாம் எளிதாக்கிக் கொண்டு விடலாம். எப்படி? பிரச்சனைகளை முதலில் மறக்கக் கற்றுக் கொள்ளலாம்! எப்படி? அந்த நினைவுகளிலிருந்து சற்று விலகிக் கொண்டு விடுவதுதான். புத்தகங்கள் எதாவது படிக்கலாம் திரைப்படம், நாடகம் எதாவது பார்க்கலாம்.

இவையெல்லாம் மனதை மாற்றலாம். இருந்தாலும் இவைகள் சுற்றிச் சுற்றி மனித வாழ்க்கைப் பிரச்சினைகள் பற்றித் தானே பெரிது படுத்திக் காட்டுகின்றன! மீண்டும் பழைய படபடப்புதான்.

ஓடிவரும் பிரச்சினைகளை மறக்க ஒரு எளிய வழி. இயற்கையுடன் இதயத்தை இணைத்துக் கொள்வது தான். காலாற நடக்கும் முறை. பிறரோடு சேர்ந்து விளையாட்டு மைதானங்களில் உலாவும் நடை. சிறு சிறு

விளையாட்டுக்களில் ஆட சேர்ந்து கொள்ளும் நிலை. வாழ்க்கை வசதிக்கேற்ப தான் நிறைய விளையாட்டுக்கள் இருக்கின்றனவே!

விளையாட்டுகளைப் பற்றி ஒரு முக்கிய கருத்தைப் புரிந்து கொண்டால், வாழ்க்கைப் பிரச்சினைகள் எல்லாம் ஒடியே விடும். குழந்தைகளுக்கு விளையாட்டுக்களே வாழ்க்கையாகும். வாலிபர்களுக்கு விளையாட்டுக்கள் விருந்து போன்றதாகும். வியாதியஸ்தர்களுக்கு மருந்து போன்றதாகும் , வயோதிகர்களுக்குகோ டானிக் போன்றதாகும்.

விளையாட்டுக்களைப் பார்ப்பவர்களுக்கோ மகிழ்ச்சிடயோ மகிழ்ச்சி என்றால், முடிந்த வரை விளையாட்டில் பங்கு பெற்றால் எத்தனை எத்தனை மகிழ்ச்சி ஏற்படும்! இந்த வாழ்க்கைப் போராட்டமும் நினைவுகளின் பேயாட்டமும், என்ன செய்துவிடும்?

வாழ்க்கைக்கு ஒர் அர்த்தம் உண்டு என்றால் விளையாட்டுக்களுக்கும் ஓர் அர்த்தம் இருக்கிறது! அது தான் மனிதர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்குவது தான்.

படிக்கும் பொழுது உங்களுக்கு கோபம் கூட வரலாம். கொஞ்சம் பெரிய மனது பண்ணி, பங்கு பெற்றுத்தான் பாருங்கள். உண்மை புரியும். விளையாட்டுக்கள் எல்லாம் அர்த்தம் உள்ளவைதான். ஆமாம் மனிதர்களுக்கு பொருத்த மான மாண்புமிகு துணையாக இருப்பது தான்.