அறிஞர் அண்ணா நினைவஞ்சலி/அண்ணா ஒரு கதிரவன்!

10. அண்ணா ஒரு கதிரவன்!


கதிரவனே, நீ வந்தாய்!

நான் முளைக்க ஆரம்பித்தேன்!

நான் காலையா? மணத்தின் மலரா? இனம் புரியாத காலமா? உனது கிரணங்களால், எனது யாழ், சோலைக்கு நடுவில் மின்னுகிறது.

உனது வரவால், என்னில் பூட்டியிருக்கிற தந்திகள் மீட்டாமலே பாடுகின்றன!

எனது ஜீவன், உனக்கு முன்பேயே கடன்பட்டிருக்கின்றது! கடன் வாங்கியவன் அதைத் திருப்பித் தரவேண்டும்.

ஏ, இளம் கதிரே, திக்கெட்டும் ஒளிப் பிழம்பை விரவிவரும் உனது திருமுகத்திற்கு முன், என்னுடைய அடிமைத்தனம் மறைந்தொழிகின்றது!

உனக்கு இருக்கும் நூறு கோடி கதிர்க் குதிரைகளைக் கருணையோடு என் சாம்ராஜ்யத்தில் புகுத்து, தாழ்ந்து போயிருக்கும் என் மானம், முளை விட்டுக் கிளம்பும் விதைக் குருத்தைப் போல கொஞ்சம் நிமிரட்டும்.

உனது வழக்கமான செம்முகத்தை எனது சிந்தனைக் கிளிகள், கொவ்வைப் பழம் என்று கடிக்க ஆரம்பிக்கின்றன!

என் நாக்கில் விளையாடும் ஒளியலைகள் எங்கோ இருந்து வந்தவையல்ல!

உன்னைக் கண்ட பிறகு - அது மகிழ்ச்சியால் தெளிந்த பிறகு, ஏற்பட்ட ஓசையாகும்!

கதிரவனே! உனது புகழின் ஆழத்தை, உலகைச் சுற்றியிருக்கின்ற கடலும் கொண்டிருக்கவில்லை.

உனது பெருமையின் உயரத்தை, உலகின்மேல் கொப்பளம் போல் குவிந்திருக்கும் மலைகள், கொண்டிருக்கவில்லை.

உனது விரிவு, திக்கை உடைத்துக் கொண்டு வெளியே செல்லுகிறது!

உன்னுடைய விரிந்த விசாலத்தில், நான் ஒரு சொட்டு இயற்கையாகவே இருக்கின்றேன்.

என்னைக் கடையேற்ற, ஆயிரம் கோயில்களைக் கட்டியவன் நீ! ஒரு நாளைக்குப் பத்தாயிரம் தடவைகள் பூசை செய்தவன் நீ!

நான் படைத்த பூக்களின் வண்ணங்களை, என் எண்ணம் ஏன் கவனம் வைக்கவில்லை? சுவையாகப் படைத்த கனிகளின் சுவையை, நான் அறிந்தவனல்லன்!

இவ்வளவையும் நீ செய்த பிறகும் நான் கடைத்தேற முடியவில்லை!

மடையுடைத்துக் கிளம்புகின்ற உன்னை, மனக் கண்ணில் கண்ட பிறகுதான், என் அகக் கண் திறக்க ஆரம்பிக்கின்றது!

ஏ, சுடரொளி! மேகம் மூடிய வானத்தின் கீர்த்தியே! உனது ஆதிக்கத்தால் கேட்பாரற்றுக் கிடக்கின்ற விதைகள் முளைக்கின்றன. வெளுத்துப்போன இலைகள் பச்சையாகின்றன!

நெளியும் புழுக்கள், கூட்டுப் புழுக்கள் ஆகின்றன!

பறவைக் குஞ்சுகளின் இறக்கைகள் முதிர ஆரம்பிக்கின்றன.

அருவியின் அலையோசை, அருகில் இருக்கும் வெட்டுக் கிளியின் காதிலே பாய்கின்றது.

பச்சைப்புல் மீதிருக்கும் ஒவ்வொரு பனித்துளியும், உன் எழிலை எழுதி எழுதிப் பழகுகின்றன.

அடிவானத்தில், நீ தொட்டில் இட்டுக் கொண்டிருக்கின்றாய்!

வானத்தின் சிம்மாசனத்தில், நீ மதியத்தில் அமருகின்றாய்!

அந்தி நேரத்தில், கண் சிவந்த வீரனைப்போல் காட்சி தருகிறாய்!

உனக்கிருக்கும் பெருந்தன்மையான பண்பால், நிலவிற்கு வழிவிட்டுப் போய் மறைகின்றாய்!

உன்னுடைய தயாள குணத்தை விவரிக்க, பைபிளின் கர்த்தா ஏசு பெருமான் வரவேண்டும்!

திருக்குரானின் மூலவர் நபிகள் நாயகம் வரவேண்டும்.

தம்ம பதத்தின் தலைவன் புத்தர் பெருமகன் வருகை தரவேண்டும்.

இருண்ட காட்டிலே நீ எட்டிப் பார்க்கும்போது, தாயைக் கண்ட சேயைப் போல, அரும்புகள் கூச்சமற்றுச் சிரிக்கின்றன!

அறிவுக் காட்டில் நீ நுழையும்போது, உனக்கு வழிவிட சந்தன மரங்கள் தயாராக இருக்கின்றன.

கதிரவனே! நீ ஒரு நகரத்தின் தலைவனா? ஒரு தேசத்தின் அரசனா? இந்தப் பூபாகத்தின் பெரும் சக்தியா? அண்டத்தின் சுழற்சிக்கு மூலமா?

உரிமையின் விளக்கே! நீ புறப்பட்ட நேரம் சரியான காலம்தான்.

அதனால்தான், என்னைப் போலிருக்கும் புழுக்கள் - பட்டாம் பூச்சிகளாய்ப் பறக்கின்றன.

நீ, கிழக்கில் வந்தவன் மட்டுமல்ல; மக்களின் மன வாழ்விலே வந்தவன்.

கடல் மீது மட்டும் நீ விளையாடவில்லை, கனவின் மீதும் விளையாடுகிறாய்! 

ஊழித் தீயே, கடையனலே! பரிதியே! உன்னுடைய குதிரைகள் எங்கே?

நீ பனிப் பகைவன்; உன்னுடைய புரவிகள் பணியிலே புரள்கின்றனவா?

நீ சுடர், அதனால்தான் சுடுகிறாயா?

நீ பதங்கன்; அதனால் தான் என்னைப் பதப்படுத்தினாயா?

மார்த்தாண்டன் நீ, உன்னைத் தாண்டி யாரும் வர முடியாது.

என்னுழ் நீ; ஆகவே, நீ என்றும் இருப்பவன்!

அருணன் நீ, அரும்பைத் தொடர்ந்து ஆகாயம் வரை விரிந்து இருக்கிறாய்!

ஆதவன் நீ; உன்னுடைய ஆதரவு எமது உரிமைக்குத் தேவை!

நீ மித்திரன்; எனவே நீ என் உறவு!

நீ ஆயிரம் சோதி; எனவே உனக்கு ஆயிரம் பகை உண்டு!

நீ தரணி! இயல்பாகவே கோடைப் பரணி உன்னிடத்திலே உண்டு!

நீ செங்கதிர்; ஆகவேதான் - நீ காலையிலே மென்மையாக இருக்கின்றாய்!

கண்டன் நீ; என்றும் எவர்க்கும் எப்போதும் தோற்றதில்லை!

தபணன் நீ; உன்னிடத்திலே வைராக்கியம் உண்டு!

ஒளி நீ; உன் உருவத்தைத் தெளிவாக யாரும் கண்டு பிடித்ததில்லை - ஒளிந்துகொண்டே இருப்பவன்!

சான்றோன் நீ; உலக அறிவாளர்கள் உன்னை நோக்கி சிரம் தாழ்த்தி வணங்குகின்றனர்!

நீ எல்; எல்லாம் நீ!

நீ பார்க்கரன்; உன்னுடைய ஒளி நிறமே அதுதான்!

நீ அனலி; கொடுமைகளைத் தீய்ப்பவன்!

நீ அறி; எல்லாம் அறிந்தவன்!

பானு நீ; அதனால் தாமரையைக்கூட மலர வைக்கின்றாய்!

அலரி நீ; யாரையும் விழிக்கச் செய்கிறாய்!

நீ அண்டயோனி! உன்னுள் அறிவுச் செல்வங்கள், எல்லாம் பிறப்பதனால்!

நீ கனலி; உன்னுடைய நிறம் கனகம்!

நீ விகர்த்தனன்; உன்னிடத்திலே பேதம் உண்டு;

தீயைத் தீய்த்து நல்லதை நாட்டிற்கு நல்குவதால்!

கதிரவன் ; வானமே உனக்குக் கழனியாவதால்!

பகலோன் நீ; நாட்களைப் பகர்வதால்!

வெய்யோன் நீ எதையும் வைத்து வளர்ப்பதால்!

தினகரன் நீ புது நாட்களைப் புதுக்குவதால்!

பகல் நீ சொற்களே உன்னிடத்திலிருந்து கிளம்புவதால்!

சோதி நீ; சோதனை உன்னிடத்தில் இருந்து எழுவதால்: ஒளியை உமிழ்வதால்!

திவாகரன் நீ; அறிவொளிப் பிரவாகம் உன்னிடமிருந்தே எடுப்பதால்!

அரியமா நீ; கீழ், அடிவானத்திலிருந்து எடுப்பதால்!

அரிமா நீ கீழ், அடிவானத்திலிருந்து மேல் வானத்திற்கு ஓடுகின்ற குதிரை, மனித இனத்தின் தந்தை நீ;

நீ உதயன்; ஜீவனின் உற்பத்தி.

நீ ஞாயிறு; சிலப்பதிகார ஆசிரியர் உன்னைப் போற்றினார்! கடவுளுக்குப் பதிலாக!

எல்லைநீ; அண்டத்தின் வரைகோடு! 

கிரணமாலி; நீ; கிரணத்தை ஆக்குபவன்! ஏழ்பரியோன்;எழுகின்ற காரணத்தால்.

வேந்தன்; உலகை நீ ஆளுவதால்.

விருச்சிகன்; சுடரவிழ்க்கும் தலைவனானதால்!

விண்மிணி, உயிர்களுக்கே நீ கண்மணி!

அருக்கன், வாழ்க்கைச் சுடரை உலகிற்கும் பெருக்குவதால்!

அப்படியானால் நான் யார்?

எங்கோ முளைத்தவனோ? எதற்கோ வந்தவனோ? நானே அதை அறிய முடியவில்லை!

பரிதி வட்டமே! என்னை உனக்காக்கிக் கொள்ள வேண்டும். இழந்த எனது உரிமைகளை மீண்டும் எனக்கு வழங்க, உனது கதிர்காமத்தில் திட்டம் தீட்டுவாயா!

சாம்பல் நிற மேகங்களுக்கு இடையில், உனது சாம்ராச்சிய அழகைப் பைத்தியம் பிடித்த மின்னல்கள் - இந்த பூமியை நேர்க் குத்தலாகக் கிழிக்கும்போது, என் தமிழ் நெஞ்சத்தை இந்தி மொழி தாக்குவதைப் போல் இருக்கிறது!

தொட்டிலிலே எனது தாய், தாலாட்டு பாடிய பாட்டுகள், நீ அறிந்தமட்டில் தமிழ்தான் என்பது தெரிந்ததல்லவா?

வரையறுக்கப்பட்டத் தமிழ்ப் பண்பாட்டில் விளையாடுகின்ற என் மூச்சை, குறை நாளுக்கு என்னை இரையாக்க வேண்டாம்.

வேதத்தின் ஒளிக்குக் கட்டுப்படாத என் மனமும் கூட, தமிழ் நாதத்தில் துவண்டுபோனதை நீ அறிந்திருப்பாய்!

என் விரோதிகளின் கூர்மையான வாள், எனது தசைகளைக் கிழித்திருக்கின்றன!

ஆனால், அதே வாட்கள், எனது தமிழைத் துளைபோட முடியாமல், தாகத்தால் தவித்தவனைப் போலத் தவித்திருப்பதை நான் கண்டேன்.

நரகத்தின் வளைகுடாவான பஞ்சத்தில், எனது வாழ்க்கைத் தெப்பம், சுழலால் பாதிக்கப்படுகின்ற நோக்கில் எனது கண்கள், தமிழென்ற நம்பிக்கை நட்சத்திரத்தை அன்றி, வேறு எதையும் காணவில்லை என்பதும் உனக்குத் தெரியும்!

அப்போதெல்லாம், நான் உன கிரணங்களால் ஒளி கண்டு, நல்ல இடத்தை நாடியே வந்திருக்கிறேன்.

எனது ஆசையும், காதலும் உனது பலிபீடத்தின் மீது துவங்கியதாகும்!

என் குழந்தைகளின் எதிர்காலத்தையும் - எனது இறுதி காலத்தையும் - நான் அந்த பலி பீடத்தின் மீதே வைத்துத் துவக்குகின்றேன்.

உனது கதிர் வட்டத்தால், என்னை எந்த உருவமாக்கினாலும் - அந்த உருவத்தை அடைகின்ற பக்குவப்பட்ட களிமண் நான்!

எனது பண்பாட்டையும் நாகரிகத்தையும், ஆயிரம் ஆண்டுகளாகத் தன்மை மாறாதிருக்கும் உனது பாதத்திலே வைக்கின்றேன்.

எனது எண்ணங்கள் அத்தனையும், உன்னிடத்திலே தான் துவங்குகின்றன.

கொஞ்சமும் தாமதமின்றி, அவை உன்னைப் பின் தொடர்கின்றன!

எனது பகற்கனவுகளும் இராக் கனவுகளும், நீ கொளுத்திய ஆயிரம் விளக்குகளால் ஆனவை.

மயத்தில் நீ தலைநிமிர்ந்து நிற்கும்போது, என்னுடைய கரம் உன்னை நோக்கி வளர்கின்றது!

அந்தியிலே நீ சாயும்போது, எனது வீரம் அதே பணிவோடு உன் காலடியிலே வீழ்கிறது!

மாலை நேரத்தில் வீடுகளில் கொளுத்துகின்ற ஒரு சாண் திரியொளிக்கு, வாய்ப்பளித்துவிட்டு, நீ பதுங்குகின்ற தன்மையைப் பார்த்தால்; உனது பெருந்தன்மை எனக்குப் புரிகின்றது.

என்னுடைய இளமைக் காலம் முழுவதும் பகலாக இருக்குமானால்... அட.... அடே.... பேராசை!

அலையின் மீது மத்தளம் தட்டும் உனது கரங்கள் - புயற்காற்றின் குடுமியைப் பிடித்து உலுக்குகின்றபோது - வீரம் விளக்குகின்ற உனது வியன் மிகு அரசியலை, நான் புரிந்து கொள்ள முடிகின்றது.

பருவ காலங்களில், நீ மலையின் மீதும் அருவியின் தோள்மீதும்

மலரின் உதட்டின் மீதும் - தும்பியின் இறக்கைகள் மீதும்-

கேட்பாரற்றுக் கிடக்கும் காளான்களின் மீதும்

செந்தூர வண்ணங்கொண்டு நீ படரும் போதும் -

எங்கோ முளைத்திருக்கின்ற எனக்கு விடுதலை கிடைத்ததைப் போல உணருகிறேன்.

பாலைவனத்திலே காய்கின்ற உனக்கு பொழிலுக்கு இடையில் வேலை என்ன?

அழிவுக்கு முன்னால் அழுதுவிட்டு, களிப்புக்கு முன்னால் களிக்கின்றாயா?

எதற்கும் அடிப்படைக் காரணம் இல்லாமல், எதையும் செய்யமாட்டாய் என்பது அனைவருக்கும் - தெரியுமா என்ன?

அவனவன் அறிவின் தட்ப வெட்பத்திற்கு ஏற்றாற்போல் அல்லவா உன்னை எடைபோடுகிறான்!

ஆனால் நீ, எல்லோருடைய இதயங்களிலே இருக்கும் இன்ப துன்பங்களையும் பகிர்ந்து கொள்கிறாய் அல்லவா?

ஏ, தத்துவ சோதியே! இயக்கத்தின் வளர்ச்சிக்காக இறந்தவர்களை தாலாட்டிவிட்டு - இருப்பவர்களையும் தாலாட்ட வருகிறாயா?

அனாதைகளுக்கு வாழ்வளித்துவிட்டு அடைய வேண்டிய செல்வத்தை அடைந்தவனையும் அருகிருந்து கவனிக்கிறாயா?

நீண்ட கிளைகளை வைத்திருக்கின்ற குள்ளமான மரமா நீ! நெடிய சாம்ராச்சியத்தை ஆளுகின்ற உருவமா நீ?

சிறிய அலகைக் கொண்டு பெரிய இசையைப் பாடிடும் குயிலா நீ!

செட்டான உருவம் கொண்ட முத்தா நீ?

அடங்கிக் கிடக்கும் பெரும் பகையா?

ஒடுங்கிக் கிடக்கும் பேராற்றலா?

கட்டுக் கடங்கிய கடலா?

உன் சக்தி எது? நீதனிமையானால், கவிதைகளுக்கு இசையா?

நீ தூய்மையானால் ஞானத்தின் ஊற்றா?

நீ அன்பானால் அடிமைப்படுத்தும் முயற்சியா?

நீ அணைப்பானால், நான் உன்னுள் அடங்குபவனா?

வித்தைகள் செய்கின்ற நீ, எங்கிருந்து வந்தாய்? இருந்தாய்?

திராட்சையின் இனிமையில் இருந்தா? பாட்டின் அடிப்படையில் இருந்தா?

என் தாயின் பாசத்தில் உலகத்தை வாழவைக்கும் உதயசூரியனே! உன்னை இன்னொன்று கேட்கிறேன்.

ஓசை விம்ம காற்றுக்கு ஒரு பாட்டு உண்டு. அப்பாட்டுக்கும் ஓர் கனவு உண்டு.

அக் கனவு எழும் இடத்தைத்தான் கவிஞனுக்கு ஏற்ற இடம் என்று சொல்வார்கள்.

என் உறவே, ரத்தத்தைச் சூடேற்றும் உணர்ச்சியே, அந்த இடத்தில் இருந்தா வந்தாய்? உன்னுடைய ரதம் அங்கேயா இருக்கிறது?

நடை தளர்ந்த நாள் செத்துவிட்டது! புதிய இரவு பூத்து விட்டது!

காட்டின் சூழ்நிலை கங்குலின் தோள்மீது தட்டியது! அப்போது இனம் புரியா பயம் ஒன்று எங்களுக்கு ஏற்பட்டது. இது இரவுக்குத் தரும் இனிதான விளக்கம்.

என் தாய்நாட்டுப் பண்பு, அனாதை ஆசிரமத்தில்ல, வாழ்கின்ற சிசுவல்ல, என்னுடைய லட்சியம் எல்லோரும் திருடி எடுத்துக் கொண்டு செல்கின்ற பொருளும் அல்ல.

என்னுடைய நரம்புகள் இயற்கையாலானது. எனது தசை இயற்கையின் ஆதிக்கத்தால் சூடுபடுகிறது.

எனது குருதி, என் தாய் கொடுத்த பால் மட்டுமல்ல, முதல் தாய் முதல் மகனுக்குக் கொடுத்த வீரப்பால் ஆகும்.

விபச்சாரியைத் தூங்கவைத்து, அவளுக்கும் ஒரு புதிய காலையைக் கொடுக்கின்ற சூரியன், எனக்கு வேண்டாம்.

கண்ணகியைத் துயில் நீக்கி, மதுரையைப் புடம் போட்டுத் தங்கமாக்கும் ஒரு புதிய நாளை உருவாக்கிடும் உன்னைப் போன்ற உதயசூரியனே தேவை.

வானமென்ற கருவிலே உற்பத்தியான குழந்தை நீ! உன்னுடைய இனத்தைப் பற்றிப் பிண்டங்களில் உற்பத்தியான குழந்தைகள் ஆராய்ச்சி செய்கின்றன.

புதிதாகப் பிறந்த காலை என்பவனின் கரம். அப்போது பூத்த ரோசா மலர் போல் இருக்கிறது. அதுதான் உனக்குக் கைகுலுக்கிறது.

காலை எழுந்தது, தூக்கம் கலைந்தன பூக்கள். பாவம் செய்யாத பறவைகள் பாடின.

ஒன்றும் அறியாத குழந்தைகள், வீட்டில் இருக்கும் சிறிய விளக்கொளியைப் பார்த்துக் கண்களை உருட்டின.

வைகறையில் தாய் முத்தமிட்டாள், முத்தத்தில் இருக்கின்ற குளிர்ச்சி மூன்று கோடி சந்திரனைத் தோற்கடிக்கும்.

தாய்மையை எடைபோட குழந்தை சிரித்தது. இரகசியமாகக் கிழக்கிலிருந்து எட்டிப் பார்த்தவனே! இதோ, என் கைகளில் பூட்டியிருக்கும் விலங்கைப் பார்த்தாயா?

சாக்ரடீஸ் போட்ட விலங்காக இருந்தாலும் சரி, ஏசுபிரான் பூட்டிய விலங்காக இருந்தாலும் சரி, உதய சூரியனே! நீ மாட்டிய விலங்காக இருந்தாலும் சரி, அது உரிமையின் வடிவமாக இருந்தால், உடைக்காமல் நான் பாதுகாப்பேன்.

மொழி ஆதிக்கத்தின் வடிவமாக அது புலப்பட்டால், சூரியனுக்குக் கீழே நான் பொடி பொடியாக்குவேன். என்னுடைய மொழி உணர்ச்சி கரைகின்ற கனவுகள் அல்ல.

உன்னை வெறுத்த இராக்கால மலர்கள்கூட, ஒளிந்திருந்து உனது அழகைப் பார்க்கின்றன.

இறந்துபோன தியாகிகளும், எல்லையற்ற பகைவர்களும் உன்னுடைய ஒளிக் கற்றையால்தான் உயிர் வாழ்கிறார்கள்.

உனது அற்புதமான முகவெட்டை - புகழ் ஒளியை பூட்டை உடைத்து வெளியே வருகின்ற அறிவு ஒளியை - சில நொண்டிக் குதிரைகள் பார்த்துக் கனைத்தன. சில கழுதைகள் பார்த்துக் கத்தின -

அவைகளை, நீ உன் பொன்னான கரங்களால் பொன்னோவியமாக மாற்றிவிட்டாய்.

அதாவது, எதிரிகளை எதிரிலியே உட்காரவைத்து நொடியிலே நண்பனாக்கி விட்டாய்!

தத்துவம், பூமியில் புறப்பட்டு வானத்தில் முடிவாகிறது. வானத்தில் முடிவான தத்துவம் வையத்தை நோக்கி மறுபடியும் வரும்போது, அது ஏறிவரும் தேர் நீதான்!

உன்னை எள்ளி நகையாடுகிறவர்களை; நீ அள்ளி எறிந்து விடுவதில்லை - மாறாகக் கிள்ளி சூட்டிக் கொள்கிறாய்.

உடம்பிலே வலுவில்லாதவன், நீ தருகின்ற வெப்பத்தை எண்ணித் திட்டுகிறான். மனதிலே சுத்தமில்லாதவன் பயப்படுகிறான்.

ஆனால், ஒளியும் - வலிவும் உன்னால் தான் வருகிறது என்பதைப் பிறகே உணருகிறேன்.

உலகம், நீ வாசிக்கும் யாழொலியை கேட்க ஆரம்பிக்கிறது. நீ காட்டும் அற்புதமான உதாரண உருவங்களைக் கண்டு ரசிக்கிறது.

ஆனால், எதிரிகள் தன் கண்களை இறுக மூடிக்கொண்டு வசைமாரி பொழிகிறார்கள்.

அவர்கள் தூக்கமில்லாத குரங்குகள் - அவர்கள் கைகள் இழிவானவை.

அவர்கள் புருவம் ஒரு முட்டாளின் புருவம். அவர்கள் வாய், பாம்பு முட்டையிடுவது போலத் தீயவைகளையே முட்டையிடும் கருவாயாகும்.

அவர்களுடைய கண்கள் இறந்தவனுடைய கண்களாகும்.

அவர்களது ஆதிக்கம் சவப் பெட்டியின் மேல் தூவப்பட்ட பூக்களின் ஆதிக்கமாகும்.

அவர்களது நடை தொழு நோய் பிடித்தவனுடைய நடையாகும்.

அவர்கள் தலையிலே சூடிக் கொள்கின்ற கிரீடம் நாடே இல்லாத ஒரு ராசாவின் கிரீடமாகும்.

இந்தக் குறைபாடுகளின் தொகுப்பாக இருக்கின்ற எதிரிகளின் கண்டத்தின் உச்சியிலே இருக்கின்ற உன்னைச் சாடும்போது, நீ வசந்த காலத்தின் மாலை நேரத்திலே இருக்கின்ற மரத்தைப் போல குளுமையாக நின்று தலையை ஆட்டுகிறாய்.

இயல்பாக அடிக்கின்ற காற்றினால் வெவ்வேறு உருவங்களைப் பெறுகின்ற மேகத்தைப் போல, அவர்களுக்குப் பல உருவங்களை நீ காட்டுகிறாய்.

உனது முகத்திற்கு முன்னால் திரையில்லை - சொல்லுக்கு எதிர்ச்சொல் இல்லை - எழுத்துக்கு முன்னால் வேறெழுத்து இல்லை - உனது ஆட்சிக்கு முன்னால் வேறொரு ஆட்சி இல்லை.

பகலவனே! உன்னை நான் இதுவரையில் இவ்வுருவத்தால்

கண்டேன். என் உருவத்தை நான் உனக்கு சொல்லி விடவேண்டும் அல்லவா?

நான் நடு வானத்திலே இருந்து நழுவிவிடும் எரி நட்சத்திர மல்ல, நெற்கதிர்களுக்கு நடுவில் மினுக்கி விழும் மின்மினி அல்ல.

உரிமைக்குக் கையேந்தி- உணர்வுக்கு அலைந்து கொண்டிருக்கும் ஓர் உயரிய உருவம். இயற்கையின் ஒழுங்கான படைப்பு - தமிழால் எழுதப்பட்ட ஓவியம் - நான் தமிழன்.