அறிஞர் அண்ணா நினைவஞ்சலி/அண்ணா ஒரு தென்றல்!
தமிழெனும் கன்னிப் பெண் தோன்றிய பொதிகையிலே பிறந்த தென்றலே!
அறிவெனும் மணத்தைத் தமிழ் அவனியிலே கமழவைக்க மழலை நடைபோட்டு வரும் வசந்தனே!
பொருப்பை விட்டெழுந்து, பொறுப்போடு விருப்பு வெறுப்பற்று, நீ தமிழகத்தில் உலா வருகிறாய்!
உனக்கிருக்கும் கடமை உள்ளம், அரசுக் கட்டிலிலே ஆரோகணித்திருப்போருக்கும் இல்லையே, என்று நகை புரிகிறாயா? செய்! செய்!
மலர்த் தோழா! நீ வந்து விட்டாய் என்பதைத் தாமரை பூத்துத் தண்ணழகு பெறும் தடாகங்கள் மூலம், நான் நோக்குகிறேன்!
மனம் நிறைந்த காற்றாக - இளம் வேனிலாக, நீ, சில்லென்று என்னை விசிறி விடுகிறாய்!
மனதை மயக்கும் மாலைப் பொழுது: உனைக் கண்டு மகிழ்வுறுவதைப் பார்க்கிறேன்.
காதல் கனிந்த காரிகையர்கட்கு; உன் வரவு சர்க்கரைப் பந்தலிலே தேன்மாரிப் பொழிந்ததைப் போன்றதாகிவிடுகிறது.
தேன் வெறி பிடித்த வண்டுகள், அப்போது எழில் மலர்களை முத்தமிடுகின்றன.
சிரிக்கும் பொழுது பற்களை பீறிக் கிளம்பும் வெண்மை நிற ஒளியொத்தக் ‘குருக்கத்திப் பூ'; மலர்ந்து மணம் பெறுகிறது.
பண்தேரே! காதல் என்ற மன்னன் உன்னைக் கண்ணுற்ற பின்தான், நீ கன்னிப் பெண்களை வேட்டையாடப் புறப்படுவதாகத் தமிழ் இலக்கியங்களிலே படித்திருக்கிறேன். நான்.
வெண்ணிலா உனது குடை! வசந்தம் அமைச்சன்! உன் புகழேற்றும் இசைவாணர்கள் குயில்களாமே!
பலாச மலர்கள் உனது வில்லா? வட்டமிட்டொலிக்கும் வண்டினங்கள் நாணா? மாந்தளிர்கள், அம்புகளா உனக்கு?
ஆகா! உன் பெருமையை எப்படிச் சாற்றுவேன் இளங்காற்றே!
தென்னலே! காதல் மன்னன் உன்னைக் குஞ்சரமாக ஊர்ந்து பவனி வருகிறானாமே!
சபாஷ்! யானையின் பலம் உனக்குண்டோ! அப்போது உன் மதிப்பு உரைக்கவொணாததன்றோ.
தென்றலே! நீ பிறந்த இடத்தை விட்டு வருகிறபோது மலர்க் காடுகளைக் காண்கிறாய்!
காவைக் கண்டிருப்பாய்! கன்னல் - செந்நெல் காடுகளையும் பார்த்திருப்பாய்!
அல்லி உன்னைக் கண்டு சிரிக்குமாம்! தாமரை என்ற அரசியல் நோயாளிகள் அச்சத்தால் கூம்பி விடுவார்களாம்! ரோஜா ஆலவட்டம் வீசுமாம்! மல்லி மஞ்சம் விரித்திருக்குமாமே - உனக்காக. இது உண்மைதானே இன்பக் காற்றே!
ஆஹா.... ஹா! உன் அழகே அழகு! அழகு சிரித்தாடும் மலர்களையே, நீ தன் வயப்படுத்திக் கொள்ளும் சக்தி படைத்திருக்கிறாயே! என்னே உன் ஆற்றல்! அன்பு! பண்பு!
வரும் வழியில் இத்தனை இயற்கை அழகுகளைக் கண்டு புளகாங்கிதமுற்ற நீ, அதோ இருக்கும் அந்த இருண்ட காட்டில் நுழைந்தாயா?புகுந்திருப்பாய், புகுந்திருப்பாய்! உன்னைத் தடுப்பவன் யார்? நீதான் எங்கும் நுழைபவனாயிற்றே!
அந்த இருண்ட காடு தான், எனது சமுதாயம்!
என் சமுதாயம் காடாகத் திகழ்ந்ததால், அங்கே சேறும் சகதியும், காணப்படுகிறது.
அந்த நாற்றத்தை உமது சீர்திருத்தக் கொள்கையால் சீர்படுத்துகிறாய் நீ!
மேடு பள்ளங்களைக் கொண்ட சமுதாயத்தை, நீ சமத்துவச் சமன்படுத்துவதை நான் உணர்கிறேன்.
இல்லாவிட்டால் கருங்காலி மரத்தை யொத்த சில மக்கள் மீது, சந்தன மரத்தின் நறுமணத்தை தவழ விடுவாயா?
சந்தன மரத்திலே நீ தவழும்போது, அந்த மரத்திலே தேன்கூடு ஒன்று கட்டப்பட்டிருந்தது.
தேன், இனிப்பைத்தான் தரும். சுவைக்கப்படும் பொழுது நீ அந்தத் தேன்கூட்டிலே தவழ்ந்ததால், அது மனத்தையும் தருகிறது. என்னே உன் சேவை!
காட்டிலே, நீ உலவப் புறப்பட்டபோது, புன்னை, தேக்கு, ஒதியம், வேம்பு, பூவரசு, மூங்கில், தூங்குமூஞ்சி, கொங்கு போன்ற பல மரங்களையும் பார்த்திருப்பாய்.
இருண்ட கானகத்திலே மட்டுமா அவை உள்ளன இருண்ட என் சமுதாயத்திலே அவை மலிந்து கிடப்பதையும் கண்டிருக்கிறாய்!
அதனால்தான் அவற்றைத் திருத்த, சந்தன மரம்போன்ற உயர்ந்த பண்புகளைப் பரப்பி, நீ சமுதாயத்தை மணம் கமழச் செய்கிறாய் என்று எண்ணுகிறேன்.
இந்த உன் செயலும் ஒரு சமுதாய சீர்திருத்தந்தானே!
இன்றேல், 'தூங்குமூஞ்சி'களைத் தட்டி எழுப்பி, வேம்பு மூலம் சித்த வைத்தியம் செய்திருப்பாயா?
புன்னைப் பூ அழகானது. என்றாலும், சிறு காற்றையும் தாங்க முடியாமல் தலை கவிழ்ந்து கீழே உதிர்வதைப் போன்ற என் சமுதாய பலவீனர்கட்கு, வைரம் பாய்ந்த தேக்கின் பலத்தையும் வளத்தையும் வழங்கிட நினைப்பாயா நீ?
அவற்றின் உடல்களை ஆரோக்கிய முறையிலே வளர்க்க - சந்தனக் காற்றை நீ, ஊட்டுவது ஏன், என்பதை அறிந்தேன்.
மூங்கில் மூலமாக இசையை எழுப்பி, அவர்களுக்கு ஆறுதலையும் தேறுதலையும் அளிக்கிறாய்.
இவையும் சீர்திருத்தமல்லவா? பொதுநலத்தொண்டல்லவா? தென்றலே: இந்த உதவிகளை இருண்ட காட்டுக்கு மட்டுமா செய்கிறாய்? நோய்வாய்ப்பட்ட நம் சமுதாயத்திற்குமன்றோ கூலிபெறாமல் புரிகிறாய்!
நீயன்றோ நீனிலம் புகழும் சீர்திருத்தவாதி! உன் சேவை நீடு புகழ் வாழ்க! வளர்க நின் கடமை உள்ளம்.
சிறுகாலே! சந்தனக் காட்டிலே நீ தவழ்ந்து வரும்போது 'பூ'வை அணைக்கிறாய்!
'பூ' என்றால், பூ, உலகம்தானே! பூவான பூமியை - உலகத்தை, நீ கட்டி அணைக்கின்றாய்.
பூவை நீ அணைக்கும்போது, அதனுள்ளிருக்கும் தாதுவான மகரந்தத்தையும் அன்றோ - மகிழ வைக்கிறாய்!
அந்த தாதுக்களும், உன்னை உளமார சிரித்து, வாழ்த்தியன்றோ, இனிமையாக வரவேற்கின்றன!
பூவான பூமியை, நீ அணைத்து உலா வரும்போது, அந்தப் பூமியில் வதியும் மகரந்தம் போன்ற மக்களும் - உன்னைக் கண்டு இதயப்பூர்வமாக சிரித்து, வாழ்த்தி, வரவேற்கிறார்கள்.
தென்றலே! நீயும் மனித இனத்தின் உள்ளங்களை ஆட்கொண்டு அவர்களை அகமகிழ வைக்கின்றாய்!
மக்கள் உள்ளமும் மலரைப் போன்று மென்மையானது அல்லவா!
அதனாலன்றோ, அவர்கள் உன்னைக் கட்டித் தழுவி ஆர அணைத்துப் பூரிக்கிறார்கள்.
தென்றலே! நீ யார்? ஏனென்றால், உன் பெயரை மட்டும் தான், நான் கேட்டிருக்கிறேன்.
உன் ஊர், தாய் தந்தையர் பெயர் தெரியவில்லை! ஏதோ அருவமாக மாலை நேரங்களில் வருகிறாய்!
குறிப்பிட்ட வசந்த காலத்தில்தான் - என் அகக் கண்ணால், உணர்வால், நான் உன்னைக் காண்கின்றேன். நேரில் பார்க்கலா மென்றால்தான் முடியவில்லையே!
நீ ஆணா பெண்ணா என்று, என்னால் அறிய முடிய வில்லை! புலவர்கள் உன்னைப் பெண் என்று கூறுகிறார்கள்.
'தென்னன்’ என்ற பெயரும் உனக்கு உண்டல்லவா? அதனால் நீ, ஆணாக இருப்பாயென்று நம்புகிறேன்.
ஆணாக இருந்தால் நீ பெண்ணைக் காதலிக்க உரிமையுண்டு.
பெண்ணென்றாலும் சரி; நீ ஆணைக் காதலிக்க முடியும். ஆனால், நீதான் ஆணையும் பெண்ணையும் காதலிக்கின்றாயே!
அதனாலன்றோ உன்னைக் கண்டதும், ஆண் - பெண் இருபாலருக்குமே காதல் நோய் முகிழ்த்து விடுகிறது:
இது என்னே உன் கோலக் கூத்து! உன்னை நம்ப முடியவில்லை தென்றலே! ஏனென்றால், நீ இருவரையும் கிள்ளி மோத விட்டு வேடிக்கைப் பார்க்கின்றாய்!
எப்படியானாலும், நீ மக்கட்கு உதவியைச் செய்கிறாய்
தென்னனே! எனது இதயம் கவர்ந்த இன்பமே! நான் அரசியல்வாதி!
இந்தக் கண்ணோட்டத்திலே உன்னைக் காணமாட்டேன்!
நீ, ஆண் பெண், இருபாலரையும் மகிழ்வூட்டுகிறாய்! - கவருகிறாய்!
இன்ப ஒற்றுமையை ஊட்டி வளர்க்கிறாய்! வருங்கால வாரீசுகட்கு வழி காட்டுகிறாய்.
அதைத்தான் நான் எனது இதய அரங்கிலே எழிலோவிய மாகக் காண்கிறேன்.
நீ வந்ததும் நாடு உவகை பூக்கிறது; மகிழ்ச்சிதானே மனதுக்கு விருந்து! வாழ்க நீ!
பூவை அணைத்துத் தாதென்ற உள்ளங்களைப் பறித்துக் கொண்டு; காலமெனும் நதியிலே நீ தவழ்கிறாய்!
காலமெனும் நதி வற்றாது ஒடும் ஒரு ஜீவ ஆறு.
அந்த ஆறு எத்தனையோ வரலாறுகளைச் சுமந்திருக்கிறது.
எத்தனை யெத்தனையோ வரலாறுகட்கு கல்லறையும் கட்டியிருக்கிறதே!
சாக்ரடீசுக்கு நஞ்சு தந்து சாகடித்தது யார்?
ஜோன் ஆஃப் ஆர்க்கை எரியவிட்டது யார்?
ஏசுவைத் துடிக்கத் துடிக்க அறைய விட்டது எது?
காந்தியாரின் சாகாகப் புகழ், புத்தனின் அறப் புனிதம், இந்த வரலாறுகளைக் கணக்குத் தவறாமல் எழுதி முடிப்பதும் இந்தக் காலம் அல்லவா?
அந்தக் கால நதியிலேதான் பிறந்தவனும் நீராடுகிறான். இறந்தவன் எலும்புகளும் கரைக்கப்படுகின்றன!
மலர்களை மலர வைப்பதும், மடிய வைப்பதும் அதே காலம்தானே!
புதுமணத் தம்பதிகளை நீராட அனுமதிப்பதும், கணவனை இழந்தவர்களின் தாலியை ஏற்றுக் கொள்வதும். இதே கால நதி தான். இதைப் பல இடங்களிலே பார்த்திருக்கிறேன் தென்றலே!
அது, காலத்திற்கேற்ற நிலைமைகளைத் தழுவிக் காலக் கர்த்தாவாக நடமாடுகிறது.
அப்படிப்பட்டக் கால நதியையும், நீ தழுவிக் கொண்டாயே! என்னே உன் சக்தி வீரம்: ஆற்றல்!
காலத்தையும் உன் பக்கம் இழுக்கும் சக்தி உனக்குண்டு என்பதை நிரூபிக்கத்தானே, காலத்தைப் பல பிரிவாக வகுத்துக் குறிப்பிட்ட ஒரு காலமான - வசந்தத்தின் போது மட்டும்; நீ வருகிறாய்! போகிறாய்!
இத்தகைய சக்தி படைத்த என் அருமைத் தென்றலே! உன்னை உளமாற நான் போற்றுகின்றேன்.
உன் வீரம் நம் தமிழ் இனத்திற்கும் தேவை! என்பதால்!
வாழ்க நீ, தென்றலே வாழ்க நீ, வையம் உள்ளளவும்!
தென்றலே! இவ்வாறு நீ ஓடி வரும்போது, வழியில்; அருவியின் தோளிலே உந்தி உந்தித் தாண்டவமாடுகிறாய்.
அந்த அருவிகள் யார் என்று உனக்கும் தெரியும்!
துடிப்பான உள்ளம் படைத்த தமிழகத்து வாலிபர்கள்தான் என்பதை நானும் அறிவேன்.
வாலிபப் பருவத்தின் வனப்பையும் - வலிமையையும், நீ நன்றாக உணர்ந்திருக்கிறாய்.
இமைப் பொழுதில் எதையும் சாதிக்கும் திறன் பெற்றவர்கள் வாலிபர்கள்.
அதைப் போலவே எதையும் அழிக்கவும் வல்லமை பெற்றவர்கள்.
நீ வரும்போது வாலிபர்கட்கு காதல் உணர்வை ஊட்டி ஒன்றுபடுத்துவாய்!
இப்போது, அவர்கள் காதல் களியாட்டத்தில் இருந்தாலும் பிரித்து, கடமை வீரர்களாக மாற்றும் சக்தியை, ஊட்டி விட்டாய்! வாழ்க நின் செயல்! வளர்க பொதிகை புகழ் போல்:
அவர்கள் பருவயிரத் தோள்கள் மீதும், பொங்கு மணி மார்பகத்தின் மீதும், நீ தவழ்ந்து, உலுக்கிப் புறநானுற்று வீரர்களாக்கி விட்டாய்.
வாலிபர்கட்கும் உன்மீது வரையிலா பற்றை உண்டு பண்ணிவிட்டாய்.
மலரை நாடி வரும் வண்டினத்தைப்போல் - அவர்கள் உன்னை நாடுகிறார்கள்!
பல அருவிகள், எவ்வாறு ஒன்று திரண்டு நதியில் கூடுகின்றனவோ, அதைப்போல!
வாலிபர்கள் என்ற அருவிகள், காலமெனும் நதியோடு கலக்க ஓடி வருகின்றபோது, தென்றலே, அந்தக் கால நதியினையே நான் ஆட்கொண்டுவிட்டேன்;
நீங்கள் ஏன் அங்கு போய் கூடுகிறீர்கள் என்று கூறி, அந்த அருவிகள் தோள் மீதே உந்தி உந்தி ஆனந்தத் தாண்டவம் புரிகிறாய் போலும்.
அருவிகளின் தோள்களையே ஆட்கொண்டு, வீரத்தை ஊட்டிவிட்டத் தென்றலே, நீ வாழ்க! உன்னை எப்படித்தான் புகழ்வேன்! வார்த்தையிலையே வேறு கூற
சிறுகாலே! இத்தகையப் பண்புபெற்ற நீ, சும்மா இருக்கிறாயா என்றால் - அதுவுமில்லை.
முத்து முத்தான கருத்துக்களை உடைய கடலிலே போய் தவழ்கிறாயே ஏன்.
கடலலையின் உச்சிதோறும் சென்று சதிராடுகிறாய். அந்த இலக்கியக் கடலிலே ஆமையாகவா அடங்கிக் கிடக்கிறாய்?
அந்த இலக்கியக் கடலலையிலே தெப்பம்போல மிதந்து மிதந்து, மூழ்கி மூழ்கி, பல முத்துக்களையும், பவழங்களையும் சேகரித்து - இலக்கிய அறிவு பெறுகிறாயே.
இலக்கியம் என்றால் விளையாட்டா என்ன? இதை அறிவாய் நீ நன்கு அறிவாய்.
இலக்கியக் கடலுக்குள் புகுந்த ஒரு புலவன், சாகும் காலம் வரை அவன் மீண்டும் திருப்தியோடு திரும்ப முடியாதே.
திருக்குறள் ஆராய்ச்சியிலே சென்றவன் இன்றுவரை திரும்பியதில்லை!
சிலப்பதிகாரத்துள் புகுந்தவன், காலம் போதவிலையே என்று - தடுக்கி வீழ்ந்து விட்டான்!
கலிங்கத்துப் பரணிக்குள் கரை காணச் சென்றவன்
- போர்க்கள் ஓசையிலேயே, மூச்சுத் திணறி விட்டான்!
அகம், புறங்களை அலசுகிறேன் என்று சென்றவர்கள்
- அந்த எல்லையை விட்டு இதுவரை வந்ததில்லை.
தமிழ் இலக்கியத்தின் பொருள், ஆழ்கடலையும் மிஞ்சியது!
அத்தகைய கடலிலே புகுந்து, அழகழகான முத்துக்களையும் - பவழங்களையும் தேடிப் பெற்றுவிட்ட தென்றலே, உன்னை எவ்வாறு உலகிற்கு புகழ்ந்து காட்டுவேன்!
இலக்கியக் கடலினுள் மட்டுமா நீ, புகுந்தாய்? அதன் உச்சியிலேயே ஆனந்தத் தாண்டவமாடிப், புதியதொரு இலக்கியப் பரம்பரையினையே உருவாக்கிவிட்ட, உன் பெருமை வாழ்க!
கடல்மேல் பரதமாடிய தென்றலே, அத்தோடு மட்டுமா நின்றாய்?
விரிந்து பரந்து கிடக்கும் இலக்கியச் சோலைகளுள்ளும் - புகுந்து விட்டாய்! நீ போக முடியாத இடம் ஏது?
அந்தச் சோலையினுள்ளிருக்கும் பற்பல இலக்கிய உள்ளங்கள் என்ற மலர்களின் நறுமணத்தை உன்னோடு சேர்த்துக் கொண்டாய்!
மதுரைத் தமிழ்ச் சங்கங்களில், முன்பு எப்படி தமிழ் இலக்கியங்கள் வளர்ந்தனவோ, அதைப் போன்ற நிலையை மீண்டும் நாட்டிலே உருவாக்கி விட்டாயே!
உன் செயற்கரிய செயலால் நாவலர்களும், பாவலர்களும், கலைஞர்களும், கவிஞர்களும் இலக்கிய உணர்வு பெற்று நாட்டை இலக்கியப் பூக்காடாக்கி விட்டார்கள்.
அந்த அகமகிழ்வோடு, சோலையிலே புகுந்த தென்றலே, நீ கத்தி போன்ற தாழை மடல்களையெல்லாம் சுற்றிச் சுழற்றச் செய்து அறப்போர் வீரர்களாக ஆக்கிவிட்டாய்.
சாதாரண தாழை மடல்கள் - கத்திபோல் கூர்மையானதாக இருப்பினும், அவற்றை வீரர்களாக நடமாடச் செய்து விட்ட பெருமை, உன்னையல்லால் வேறு எவருக்குண்டு?
அத்தகைய வீரர்களைப் போல நடித்த நாணற் பூக்களை - பூ உருவிலே புகுந்துவிட்ட பயனற்றவைகள் என்று, அவற்றைக் காட்சிப் பொருளாக்கி விட்டாயே.
தென்றலை அனுபவிக்க முடியாத அவை, புயலிலே சிக்கிச் சிக்கிச் சுழன்று வருகின்ற நிலையை; அவை தேடிக் கொண்டன.
நீ போகும் இடமெல்லாம் உனக்கு வரவேற்பு! வாழ்த்து! விழாக்கோலம்!
நாணற்பூக்கள், பெயருக்குப் பூவாக இருக்கின்றன! பிறவி எடுத்துவிட்டமைக்கா அலை பாய்ந்து, வளைந்து, நெளிந்து; வறண்டு சோர்ந்து விழுகின்றன!
அவற்றைக்கூட நீ மன்னித்து விடுகிறாய்; சில்லென்று வீசி! ஆனால், அவைதான் தலை குனிந்து விடுகின்றன; வெட்கத்தால்!
உன்னைக் கண்டால் மக்களுக்குப் பிடிக்கும்; மகிழ்கிறார்கள். ஆனால், சுரம் கண்டவன் மட்டும் உன்னைக் கண்டு ஓடி ஒளிகிறானே!
இதற்கு நீ எப்படிக் காரணமாவாய்? எடுத்த பிறவியின் கோல மல்லவா? மன்னிப்போம்! மறப்போம்! வாழ்க நின் நீடு புகழ்!
தாழை மடல், கத்தி போன்றது. அறப்போர் வீரர்களை மொழிப் போர்க் களத்திற்கு அனுப்பிக் கொண்டிருக்கிறாய்! எப்படி?
மூங்கிலிலே பண்ணெழுப்பி - போர்ப் பரணியைப் பாட வைத்து அனுப்புகிறாய்! இதைக் கண்டு மக்கள் வியக்கின்றார்கள்.
உன் பெருமையை, சக்தியை, அறிந்தவர்கள் போற்றுகிறார்கள்! புகழ்கிறார்கள்!
காயந்துபோன மூங்கிலில், தென்றலே, நீ தழுவி நாதத்தை எழுப்புகிறாய்!
மொழியுணர்வு மரத்துப் போனவர்கட்கு, மொழியுணர்ச்சியை உண்டு பண்ணத்தான் என்று, நான் எண்ணுகிறேன்.
"தென்றலாகிய என் இனிமையைப் பெற்று மரம் கூட தமிழிசை எழுப்புகின்றபோது, இந்த மனித மரங்கட்கு அந்த உணர்வும் இல்லையே! அவர்கட்கு இதை அறிவுறுத்தத்தான் என்பது, நான் உன்னிடம் கற்ற அரசியல் பாடமாகும்!
யானை தன் கனவில் சிங்கத்தைக் கண்டால் அலறும்!
அறப்போர் வீரர்கள் அரிமா போன்றவர்கள்.
ஆட்சியாளர் யானையை நிகர்த்தவர்கள்!
அந்த யானை, மொழிப் போர் என்ற வெம்மைக்கு உட்பட்டிருந்தாலும், தன் அடி தொண்டையிலிருந்து உமிழ் நீரை வெளியேறச் செய்து, தனது உலர்ந்த நாவை நனைக்க முயற்சிக்கிறது. ஏன்?
ஒதிய மரம் போன்ற மனிதர்களின் மொழி உணர்வற்ற பண்பால்தான்; காட்டிக் கொடுக்கும் கயமைத்தனத் துரோகத்தால்தான்.
இந்த மொழித் துரோகிகட்கு, தாய் மொழியுணர்ச்சி இல்லை என்பதை, நீ அறிந்த ஒன்றுதானே!
அதனால்தான் தாய்மைப் பண்பு பெற்ற முதிர்ந்த தென்னை மரத்தின் மீது நீ தழுவினாயா?
தாய்மைப் பண்பு தலைசிறந்த பண்பு. எல்லாரையும் பேதமற்ற நிலையில் காத்துப் பேணும் பண்பு.
அந்தப் பண்புக்குரிய தெங்கை, நீ தழுவியது ஏன்? அறிவேன் நான்!
தெங்கு, சிறு கன்றாக இருக்கும்போது உண்ட வானமுதை, என்றைக்குமே தேக்கி வைத்து, பசியெடுக்கும்போது தனது உரிமையாளனுக்கும், மற்றவர்கட்கும் பேதமின்றி இளநீரையும் தேங்காயையும் தந்து உதவுகிறது. இது தாய்மைப் பண்புகளுள் ஒன்று என்பதனை நீ உணர்ந்தாய் போலும்!
அதனால்தான், அத்தகைய முதிர்தெங்கின்மீது தவழ்ந்து, அந்தத் தாய்மை உணர்ச்சியை - பண்பைத் - இந்த துரோக உள்ளங்கட்கும் ஊட்டினாயா?
தாயான தெங்கிற்குச் சேய், சிரிக்கும் அதன் இளம்பாளை.
அந்தப் பாளையிலே வழிந்தோடும் "சேய்மை" அழகை நீ சுவைத்து, அந்த மகிழ்ச்சிக் களையை - இந்த மொழித் துரோகிகட்கும் - உணர்த்த - அன்பூட்ட விரும்பினாயோ?
தாயிற்கு ஏற்பட்ட மானத்தைத் தடுப்பது சேயின் கடமை என்பது உலகுக்கும் - இந்த துரோகிகட்கும் அறிவு உணர்த்தத்தான், அந்த இளம்பாளையை, தென்றலே நீ தழுவி - நாட்டிற்கும் தழுவ விட்டாயே!
அடடா, தென்றலே.! உன் சேவையே சேவை! மக்களுக்காக நீ ஆற்றும் தொண்டே, தொண்டு!
சமுதாயம் அறிவுபெற உணர்வுற - தன்மானத்தோடு தலை நிமிர்ந்து வாழ எங்கெங்கெல்லாம் நீதிநெறிகள் தவழ்ந்தாடு கின்றனவோ, அங்கெல்லாம் நீ சென்று, அவற்றை எமக்கு அளிக்கிறாயே!
உனக்கு என்ன கைம்மாறு செய்வோம், வாழ்க என்ற வளமான சொல் ஒன்றைத் தவிர!
தென்றலே! தமிழ்த் தரணியின் அணுவிலெல்லாம் நீ தவழ்ந்து, அற நெறிகளை ஏற்று, மாலை நேரமானதும் தமிழக வீதிகளை நோக்கி ஓடி வருகிறாயே, ஏன்?
அதை நான் உணர்கிறேன் - நாடும் அறிகிறது! இருந்தாலும் உன் புகழையன்றோ எழுத முனைந்து விட்டேன்.
என்னையும் ஆட்கொண்டு விட்டாய். அதனால் வரைகிறேன். என்னை மட்டுமா ஆட்கொண்டாய்? சிந்தையை! சிந்தையை மட்டுமா? சிந்தை அணு ஒவ்வொன்றையும் உன் வயப்படுத்திக் கொண்டதால் அதையும் கூறிவிடுகிறேன்.
மயக்கும் மாலைப் பொழுதான அந்தி நேரத்திலே, தமிழக வீதிகளிலே நடைபெறும் பொதுக் கூட்டங்கள் தோறம் நீ உலா வருகிறாயே!
கூட்டத்திலே குழுமியுள்ள மக்களது உள்ளங்களை எல்லாம், நீ சிக்கி வைக்கிறாய்! கவருகிறாய்! கொள்ளை கொள்கிறாய்.
இதற்குக் காரணம் என்ன, உன் மீதுள்ள எல்லையற்ற பற்று: நீ வாடையா என்ன - வெறுப்பதற்கு? தென்றலல்லவா?
நீயும் தமிழ் மண்ணிலே பிறந்து நடமாடுகின்ற வளல்லவா? அதனால்தான் தமிழ் உணர்வோடு, கூடியிருக்கின்ற பல லட்ச மக்களின் உள்ளங்களிலே இரண்டறக் கலக்கும் பண்பு பெற்றிருக்கிறாய்!
வளர்கின்ற செந்நெல்லுக்கு மடைப்புனல் எப்படி அவசியமோ, அதைப்போல, வளர்கின்ற ஒரு சமுதாயத்திற்கு முதியவர்களும் அவசியமாகும்.
சமுதாய வளர்ச்சி சரியானதுதானா என்பதை அறிய - கற்றோர்களும் மற்றோர்களும் தேவை!
மடைப்புனல், நீரை எப்படி முறையாக அனுப்பி செந்நெல்லுக்கு உரம் ஊட்டுகிறதோ, அதேபோல பொது மக்களும் ஒரு சமுதாய வளர்ச்சிக்கு அவசியம்.
இதைத் தெளிவுற உணர்ந்ததால், தென்றலே! நீ பொது மக்கள் உள்ளங்களிலே எல்லாம் புகுந்து, கருத்துக் குளுமையைத் தவழவிடுகிறாய்!
இளமுல்லை போன்ற வீராங்கனைகள் உள்ளத்திலும், நீ புகுந்து, உணர்ச்சிப் பிழம்பைத் தட்டி எழுப்புகிறாய்.
வீரத்தை அவர்களிடையே விளையாட விடுகிறாய்! வாழ்க நீ வாழ்க!
மக்கள் சிந்தையணு ஒவ்வொன்றும் மொழி உணர்வு கொண்டு, பொதிகையிலே உன்னுடன் பிறந்த தமிழனங்கைப் போற்றிப் பாதுகாக்க வந்த செல்வமே தென்றலே! வாழ்க நீ பல்லாண்டு!
தமிழகத்தின் பேரறிவுப் பெட்டகமே! பெரும் நிதியே! உன் புகழ் தமிழ் உணர்வு பெற்றவர்களின் வீடுதோறும் திரு விளக்காய் திகழ்கின்றது.
எந்த நாட்டிலும் தோன்ற முடியாத தென்னாட்டுத் தென்றலே! அறிவுலகசோதியே! காஞ்சி நகர் வாழ் தென்னலே!
தென்றலையொத்த உமது அரிய சேவையை நாங்கள் உணர்ந்தோம்! நாடும் கண்டு களி பேருவகை கொள்கிறது.
இயற்கையின் செல்வமே! தென்றலே! உன்னைப் பாராட்டு கிறோம்! வாழ்த்துகிறோம்! நீ பிறந்த நாட்டிலே உனக்காக, எமது மூச்சுள்ள வரை. நாங்கள் விழாவெடுக்கிறோம்.
அண்ணா! உன் சதுக்கமே எமக்கெலாம் திருக்கோயில்! தென்றலே! அன்பு தெய்வத்திற்கு ஏன்? எம் அறிவிற்கும் கவரி வீசு!