அறியப்படாத தமிழகம்/அணிந்துரை
அணிந்துரை
தமிழியல் ஆய்வின்
புதிய களங்கள்
முனைவர் தொ. பரமசிவன் அவர்களது ‘அழகர் கோயில்’ நூல் வெளிவந்து பத்தாண்டுகளுக்கு மேலாகின்றன. நூலின் தலைப்பு ஒருவகையில் துரதிருஷ்டவசமானது; அதன் இலக்கு வாசகர்களைத் திசைதிருப்பி விடக்கூடியது. கோயில் ஆய்வுகளுக்கு என்று ஒரு செக்குமாட்டுத் தடம் உண்டு. தல புராணத்திலிருந்து தொடங்கி, சில ஐதீகங்களைப் பட்டியலிட்டு, கோயில் கட்டடத்தின் அமைப்பை விவரிப்பது என்ற சட்டகத்தில் அமைந்துள்ள ஏராளமான கோயில் ஆய்வுகள் அந்தந்தக் கோயிலைப் பற்றி அறியும் நாட்டமுடைய பக்தர்களுக்கு மட்டுமே ஆர்வமூட்டக் கூடியவை.
'அழகர் கோயில்' நூலோ, தலைப்பு ஏற்படுத்தும் எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கக் கூடியது. இலக்கியச் சான்றுகள், கல்வெட்டுகள் மட்டுமல்லாமல், நாட்டார் வழக்காறுகள், கள ஆய்வுச் செய்திகள் முதலானவற்றின் அடிப்படையில், குடியிருப்புகளுக்கு வெளியே தனித்து நிற்குமொரு சமூகப் பண்பாட்டு நிறுவனத்திற்கும் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுக்கும் (சாதிகள்) இடையிலான உறவைப் புதிய கோணத்தில் ஆராய்கின்றது. நூலின் மைய இழைக்கு அரணாகவும் இடைப்பிறவரலாகவும் ஆங்காங்கே இறைந்து கிடக்கும் நுட்பங்களும் இடை வெட்டுகளும் நூலுக்குப் புதிய பரிமாணங்களைச் சேர்க்கின்றன. தற்பொழுது அந்நூல் பெற்றிருக்கும் கவனத்தை விட மேலதிகமான கவனத்தைப் பெறும் தகுதியுடையது என்பதோடல்லாமல், அதே சட்டகத்தை ஒட்டியும் வெட்டியும் பிற கோயில்களை ஆய்வு செய்வதற்கும் அதனை முன் மாதிரியாகக் கொள்ளலாம்.
இளமையில், ஏறத்தாழ முப்பது வயதிற்குள் இப்படிப்பட்ட தொரு ஆய்வை நிகழ்த்திக் காட்டியவர் அதன்பின், இந்தப் பதினைந்து இருபது ஆண்டுகளில் எழுதியுள்ளவை, 'அழகர் கோயில்' தூண்டிவிட்ட பெரும் ஆவலுக்கு நிகராக இல்லை. சிட்டி, சிவபாதசுந்தரம் எழுதிய 'தமிழ்ச் சிறுகதை: வரலாறும் வளர்ச்சியும்', 'க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’ எழுதிய கூர்மையான மதிப்புரைகள் சலசலப்புடன் கூடிய கவனத்தைப் பெற்றன. அவ்வப்போது 'ஆராய்ச்சி' முதலான இதழ்களில் எழுதிய கட்டுரைகள் தஞ்சை எட்டாம் உலகத்தமிழ் மாநாட்டையொட்டி 'தெய்வங்களும் சமூக மரபுகளும்' என்ற பெயரில் நூலாக்கம் பெற்றன.
தொ.பரமசிவனின் ஆர்வங்களையும் அக்கறைகளையும் ஆய்வு நெறியினையும் ஓரளவுக்குக் காட்டும் கட்டுரைகள் - குறிப்பாகத் தமிழ் வைணவம், மாற்று மரபுகள், மதுரைக் கோயில் நுழைவு - அதில் உண்டெனினும் அவரது முழு வீச்சினையும் அவை பிரதிநிதித்துவப் படுத்துகின்றன என்று சொல்ல முடியாது.
தொ.ப.வின் எழுத்துகளை மட்டும் படித்தவர்களின் மதிப்பீட்டிற்கும் அவருடன் நேர்ப்பழக்கம் உள்ளவர்களின் கொண்டாட்டத்திற்கும் உள்ள இயைபின்மை எனக்கு உறைத்ததுண்டு. நேராக அவருடன் பழகத் தொடங்கிய பிறகே நண்பர்களின் உற்சாகத்தை என்னால் புரிந்துகொள்ளவும் பகிர்ந்துகொள்ளவும் முடிந்தது. உரையாடும்போது அவரிடமிருந்து தெறிக்கும் கருத்துகளும் சான்று மேற்கோள்களும் வாழ்ந்து பெற்ற பட்டறிவும் உடனுரையாடுபவரை மலைப்பில் ஆழ்த்தக் கூடியவை. நாம் நன்கு அறிந்தது என்று நினைக்கும் விஷயத்தில் புதிய ஒளி பாய்ச்சுவதும் பழகிப்பழகிப் பொருளிழந்துவிட்டது என்று நாம் உணர்வற்று நோக்கும் ஒரு சொல்/தொடர்/பழமொழியிலிருந்து ஒரு சமூகப் புரிதலைச் சற்றும் எதிர்பாராத சமயத்தில் வழங்குவதும் தொ.ப.வின் கருத்துப் புலப்பாட்டு முறை. வானிலும் மண்ணிலுமாக மாய ஜாலங்களைக் காட்டும் இந்திரசித்தின் போர்முறையுடன் ஒப்பிடத்தகுந்தது இது. நட்பையும் பொறாமையினையும் அவருக்கு ஒருங்கே ஈட்டித் தருவதும் இதுதான்.
எழுத்து முறையினும் வாய்மொழி மரபில் வந்த தமிழ்ப் புலமை நெறியின் வழி இது. கேட்பவரின் எதிர்வினைக்கு ஏற்பக் களைகட்டும் இசைக் கச்சேரி போன்ற இப்புலப்பாட்டு முறை எழுத்து வடிவில் மிளிர்வதில்லை. நெடுங்கட்டுரை வடிவமும் நூல் உருவமும் இதற்குத் தோதாக இருப்பதில்லை. ‘அறியப்படாத தமிழகம் நூலில் கையாளப் பட்டிருக்கும் சிறுகட்டுரைத் தொடர் வடிவம் தொ.ப.வின் ஆளுமையை அதன் பலங்களோடும் பலவீனங்களோடும் பெருமளவுக்கு உருக்காட்டுவதாக அமைந்துள்ளது.
ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக் கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாகப் படிந்துள்ளன என்பதை ஒவ்வொரு கட்டுரையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. உப்பு, எண்ணெய், தேங்காய், வழிபாடு, விழாக்கள், உடை, உறவுமுறை, உறவுப் பெயர்கள் என அன்றாட வாழ்வின் பகட்டில்லாத பல்வேறு கூறுகளைக் கொண்டு தமிழ்ச் சமூகத்தின் ஈராயிரம், மூவாயிரமாண்டு வரலாற்று அசைவியக்கம் கோடிட்டுக் காட்டப்பெறுகின்றது.
பழையனவற்றை அறிய இயல்பிலேயே நமக்குள்ள ஆர்வம், வாசகரைச் சிக்கவைக்கும் தூண்டில். முதலாளியமும் உலகமயமாக்கமும் நிகழ்த்திக் காட்டும் விரைவான சமூக மாற்றத்தால் இழந்து வருகின்ற பண்பாட்டுக் கூறுகளைப் பற்றிய ஏக்கம் – இது தொ.ப.விடம் நிறையவே உள்ளது; அவ்வகையில்
தொ. பரமசிவன் பழைய பரமசிவம் – நூலுக்கு ஓர் உணர்ச்சிப்பாங்கான ஈர்ப்பைத் தருகின்றது. புறநானூறு, குறுந்தொகை, தொல்காப்பியம் என்று நன்கறியப்பட்ட இலக்கிய இலக்கணங்கள் மட்டுமல்லாமல், பல்சந்தமாலை, பாய்ச்சலூர்ப் பதிகம் போன்ற அரிய நூல்களும் கட்டுரைகளுக்குச் சான்றரணாகத் தாமாகவே முன்வந்து நிற்கின்றன. கல்வெட்டுச் சான்றுகளை இலாவகமாக இவர் கையாளும் முறையினை மதிப்பிடும் தகுதி எனக்கில்லை. சொல்லாய்வுகள் வலிந்து செய்யப்பட்டனவாக இல்லாமல், ‘அட, வெள்ளிடை இருந்ததை இத்தனை நாளாய்க் கவனிக்காமல் போய்விட்டோமே!’ என்ற உணர்வையே ஏற்படுத்துகின்றன. கள ஆய்வு எது, வாழ்ந்து பெற்ற பட்டறிவு எது என்று பிரித்து அறிய முடியாதபடி தொ.ப.வின் அவதானிப்புகள் உள்ளன. உ.வே. சாமிநாதையர் தேடித்தேடிக் கண்டுபிடித்த ‘கும்மாய’த்தை இவர் நாளும் காலை உணவுக்குத் தின்கிறாரோ என்றும் தோன்றுகிறது! தமிழ்நாட்டுத் தென் மாவட்டங்களின் பண்பாட்டு வரைபடம் இவர் உள்ளங்கையில். பழமொழிகள், வழக்குத் தொடர்களோடு திரைப்படங்களையும் இலங்கை வானொலி அறிவிப்புகளையும் சான்றுகளாகப் பயன்படுத்தும் பாங்கு பிரெஞ்சு ‘அனால்ஸ்’ (Annales) வரலாற்று நெறியினை –
இதைத் தொ.ப. படித்திருக்க வாய்ப்பில்லை என்றாலுங்கூட நினைவுபடுத்துகிறது.
‘அறியப்படாத தமிழகம்’ – உண்மையில் இது நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் – நுவல்கின்றவற்றின் சில மையஇழைகளை இனங்காண முயல்வோம். இடையறாத நெடிய வரலாற்றையுடைய ஒரு சமூகத்தின் மீது மின்னல் வெட்டுகளாகப் பளீரென ஒளிபாய்ச்சுவதே நூலின் அமைதி. விரிவான ஆராய்ச்சி என்ற ஒளிவெள்ளத்திலே முழுக் காட்சியும் விளக்கம் பெறவேண்டும் என்ற பொருளும் இந்த உருவகத்திலிருந்து பெறப்படும்.
'தமிழ்' என்பது முதல் கட்டுரையாக அமைந்திருப்பது தற்செயலானதன்று. தமிழ்ப் பண்பாட்டின் உருவாக்கம் பற்றிய புரிதல் நூல் நெடுகவும் இழையோடுகின்றது. புறச்சமயங்களாகத் திரித்துக் காட்டப்படும் சமண, பௌத்த மதங்கள் தமிழ்ப் பண்பாட்டைச் சமைத்ததில் ஆற்றிய பங்கு அழுத்தமாகக் காட்டப்பட்டுள்ளது. சைவ,வைணவம் பற்றிப் பேசும் அதே வேளையில், சிறு தெய்வங்கள் பற்றியும், இப்பெருஞ் சமயங்கள் நாட்டார் சமயக் கூறுகளை எவ்வாறு கைவயப்படுத்திக்கொண்டன என்பதும் தெளிவுபடுத்தப்படுகின்றன. தொ. பரமசிவன் கட்டமைக்கும் தமிழ்ப் பண்பாட்டில் இசுலாமும் கிறித்தவமும் பிரிக்க முடியாத வகையிலேயே பிணைந்துள்ளன. சாதியைச் சமூகத்தின் முக்கிய அலகாக இனங்காணும் அதே வேளையில், சாதிக் கட்டுமானமும் கருத்தியலும், ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் அடிப்படை என்ற ஓர்மையும் ஐயத்திற்கிடமில்லாமல் வெளிப்படுகிறது. 'கீழோர்' மரபுகளைக் கணக்கிலெடுக்காமல் தமிழ்ப் பண்பாடு இல்லை என்பதும் மொத்தத்தில், உறுதிப்படுத்தப்படுகின்றது. அடிப்படைவாதங்களுக்கு எதிரான ஜனநாயகக் கூறுகளோடு தான் தொ.ப. முன்வைக்கும் தமிழ்ப் பண்பாடு விளங்குகின்றது. நுவலப்படுகின்ற பொருள்களின் சமகாலப் பொருத்தப்பாட்டையும் ஆங்காங்கே சுட்டிக்காட்ட, தொ.ப. தவறவில்லை.
பொருண்மைப் பண்பாடு (material culture) எனப்படும் துறையில் தமிழியல் ஆய்வாளர்களின் கவனம் போதுமான அளவு குவியவில்லை. மிக அடிப்படை நிலையில், தொல்லியலாளர் மட்டுமே அக்கறை கொள்வதாக அமைந்துவிட்ட இத்துறையில் உரல், உலக்கை, உணவு, உடை என்று முதற்படிகளை இந்நூல் எடுத்துவைத்துள்ளது. தாம் புழங்கும் சமூகம் பற்றி வாயில்லாப் பொருள்களுக்குச் சொல்வதற்கு நிறைய உண்டு. தொ.ப. அவற்றுக்குச் செவிமடுக்கத் தொடங்கியுள்ளார்.
எடுத்துக்கொண்ட ஆய்வுப்பொருள் என்பதோடன்றி, அதன் மீது எய்யப்படும் ஆய்வுக் கேள்விகள், பயன்படுத்தும் சான்றுகள் ஆகியவற்றிலும் தமிழியல் ஆய்வுக்கான புதிய களங்களை இந்நூல் காட்டுவதாகவே நான் கொள்கின்றேன்.
மொத்தத்தில், மலைப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் இந்நூலில் எனக்குச் சில நெருடல்களும் உண்டு. தமிழக வரலாற்றில் விசயநகரப் பேரரசை ஒரு பெரும் திருப்புமுனையாகவும் தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்ட பல சரிவுகளுக்குக் காரணமாகச் சுட்டக்கூடியவகையிலும் பொருள் தரக்கூடிய குறிப்புகள் நூலில் விரவியிருக்கின்றன. இக்கருதுகோளை வரலாற்றுப்பூர்வமாக நிறுவுவது எந்த அளவுக்கு இயலும் என்பது ஒரு புறமிருக்க, தமிழ்த் தேசியத்தைப் பாசிசப் போக்குக்கு இட்டுச் செல்லும் முயற்சிகளுக்குத் துணை போகிவிடக்கூடாது என்றும் அஞ்சுகிறேன்.
பண்பாட்டு நிகழ்வுகளை மிக நுணுக்கமாக அவதானித்து இனங்காணும் தொ. ப., அவற்றுக்கு விளக்கமளிக்கும்போது, ஒருவகையான செயல்பாட்டுவாதத்திற்குள் (Functionalism) வழுவிவிடுகிறாரோ என்றும் தோன்றுகிறது. சாயத் தொழிலில் ‘பறையர்’ ஈடுபடுவதற்கு அவர் தரும் விளக்கம் இதில் அடங்கும். கருத்தியல் பெறவேண்டிய முக்கியத்துவம் இதனால் குன்றிவிடுகின்றது.
மற்றபடி, இத்தகையதொரு நூல் தமிழ் ஆசிரியர் ஒருவரால் எழுதப்பட்டு வெளிவருவதன் பின்னணியைப் புரிந்துகொள்ளும் முயற்சியோடு, சற்று நீண்டுவிட்ட இம்முன்னுரையை முடிப்பது பொருந்தும். இலக்கியமும், நாட்டார் வழக்காற்றியலும், வரலாறும், சமூகவியலும் குவிகின்ற களத்தில் இந்நூல் இயங்குகின்றது. மயிலை சீனி. வேங்கடசாமி, சாத்தன்குளம் அ. இராகவன், மா. இராசமாணிக்கம் என்று தொடங்கி நா. வானமாமலை, க. கைலாசபதி, கா. சிவத்தம்பி,
ஆ. சிவசுப்பிரமணியன் எனத் தமிழ் இலக்கிய உலகத்தினரே இக்களத்தில் தொழிற்பட்டிருக்கின்றனர். நிறுவனஞ் சார்ந்த சமூக அறிவியல் துறையினர் இக்கருத்தாடலில் பேச்சற்று இருக்கின்றனர் என்பது மட்டுமன்றி, இப்படியொரு கருத்தாடல் நிகழ்வதே அறியாமலும் இருக்கிறார்கள். (தங்கள் துறைசார்ந்த ஒழுங்கில் நடக்கும் விவாதங்களிலும் இதே நிலைதான். இது வேறு.) சோ. இலக்குமிரதன் பாரதி, பிலோ இருதயநாத் என்ற பெயர்களையே கேள்விப்பட்டிராத சமூகவியலாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள்
இம்மரபிலிருந்து பயில் வேண்டிய பாடங்கள் பல. தமிழ்ச் சிந்தனையுலகத்தை ஏதேனும் ஒரு வகையில் பாதிக்க விழைவோர் தமிழுலகத்தின் ஊடேதான் தொழிற்படவேண்டும் என்பது தமிழ்ச் சாதியின் விதி. அதன் செயல்பாடுகளில் ஒன்று தொ.ப.
எவரின் முழு ஆற்றலையும் முழு வீச்சோடு மலரவிடுவதில்லை என்பது தமிழ்ச் சமூகத்தின் மற்றொரு விதி. அதனைத் தொ. பரமசிவன் உப்பக்கம் காண்பார் என்றும் அதற்குரிய நிறுவனப் பின்புலமும் அமையும் என்றும் எதிர்பார்க்கிறேன்.
30 செப்டம்பர் 1997 ஆ. இரா. வேங்கடாசலபதி
திருநெல்வேலி