அறியப்படாத தமிழகம்/முன்னுரை

முன்னுரை

அண்மையில் படித்த இரண்டு செய்திகளை முதலில் சொல்லியாக வேண்டும். அமெரிக்க நிறுவனம் ஒன்றின் அறிக்கை, இந்தியா போன்ற வளரும் நாடுகள் வேதி உரங்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் "உலகில் மாசுப் பெருக்கத்துக்கான பெருங்கரணங்களில் ஒன்றாகிவிட்டது'

என்று குற்றம் சாட்டியிருந்தது. மற்றொருபுறத்தில், தமிழக வேளாண்துறை உயர் அதிகாரி ஒருவர், 'இரண்டாவது பசுமைப்புரட்சிக்கு நமது நிலங்கள் ஏற்புடையதாக இல்லை. இயற்கை உரங்களைக்கொண்டு நிலத்தை மீண்டும் நாம் செழுமையாக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். 1960களின் தொடக்கப் பகுதியில் நான் சிறுவனாக இருந்த போது நெடுஞ்சாலை ஓரத்து நன்செய் வயல்களில் 'நவீன உர நிரூபண வயல்' என்றெழுதி நடப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள் நினைவுக்கு வந்தன. உயிரியல் தொழில் நுட்பத்தை எதிர்த்து வேளாண் அறிஞர் வந்தனா சிவா அண்மையில் எழுதிய புத்தகமும் என் நினைவுக்கு வந்தது.

நாற்பதாண்டுக் காலத்தில் இயற்கை நம்மைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கத் தொடங்கிவிட்டது என்றுதானே இதற்குப் பொருள்? 'உள்ளது சிறத்தல்' எனும் உயிரியல் கோட்பாட்டில் 'காலம்' பெற்றுள்ள இடத்தை புரிந்துகொள்ளத் தவறிவிட்டோமோ? 'இயற்கையோடியைந்த இன்பம் இன்பத்தோடியைந்த வாழ்வு' என்று பாடிய சுந்தரரும் திரு.வி.க.வும் இப்போது பெரியாரைப் போல நமது மறுவாசிப்புக்கு உரியவர்களாகிவிட்டார்கள்.

பயிர்த்துறையில் நடந்த மாற்றங்கள், பண்பாட்டுத் துறையிலும் நடந்தேறியுள்ளன. வேதி உரங்கள் ‘விஞ்ஞான’ப் போர்வையில் உருவாக்கிய எதிர்விளைவுகளை, பண்பாட்டுத் தளத்தில் தகவல் தொடர்புச் சாதனங்கள், பன்னாட்டு மூலதன உதவியுடன் உருவாக்கிவிட்டன. 14 செ.மீ. திரைப் பெட்டி, கிரிக்கெட் என்னும் இரண்டு நோய்கள் நம்முடைய 'கொழுந்து'களைத் தாக்கத் தொடங்கியுள்ளன. “வேரிலே வெக்கை தட்டினால் கொழுந்து முற்பட வாடுமாறுபோல” என்பது வைணவ உரை நயம். வேர்களைப் பற்றிய ஞானமில்லாமல், கல்வியில்லாமல், கொழுந்துகளைப் பற்றிக் கவலைப்பட்டு என்ன பயன்!

வாசிக்கவும், தொடர்ந்து வாசிக்கவும், சிந்திக்கவும், விவாதிக்கவும் 'வலிமை' இழந்துபோன நமது இளைஞர்களை மனத்தில் கொண்டே இந்தச் சிறுநூல் எழுதப்பட்டுள்ளது. இது சில முற்போக்காளர்கள் கருதுவதுபோலப் ‘பழமை பாராட்டுதல்' அன்று. வேர்களைப் பற்றிய அறிமுகமும் விஞ்ஞானத்தின் பகுதிதான்.

இந்த நூலில் உள்ள சிறு கட்டுரைகள் 'தம்மளவில் முழுமையானவை’ என நான் கூறவரவில்லை. இவை சிந்திப்பதற்குரிய சில களங்களை நோக்கிக் கை காட்டுகின்றன. இன்று படைப்பு உணர்வைவிட ‘விற்பனை உணர்வே' சமூகத்தை ஆட்டிப் படைக்கின்றது. கல்விச் சந்தையும் தாலிச் சந்தையும் அழுகி நாற்றமெடுக்கின்றன. தனது 'விஞ்ஞானக் கண்ணால்' திரைப்படத்துறை கிராமத்தின் மென்மையான அசைவுகளை விலைப் பொருளாக்குகிறது. மறுபுறமாக நுகர்வியம் என்னும் வாங்கும் உணர்வைத் தகவல் தொடர்புச் சாதனங்கள் தினந்தோறும் கண்காணித்து வளர்க்கின்றன. உண்மையில் எக்காலத்தும் மனிதன் வாங்கவும் விற்கவும் பிறந்தவனல்லன்; ஆக்கவும் கற்கவும் கல்விக்கு ஊடாக நுகரவும் பிறந்தவன்.

வேரைத் தாங்கும் மண்ணை இழந்த ஆற்றங்கரை அரச மரத்துக்குக்கூட மறுவாழ்வு உண்டு. நோய் தாக்கிய வேர்களுக்கு மருந்து இல்லாமல் வாழ்வில்லை. மண் எப்பொழுதும் வளமானது தான்.

கடந்த முப்பது ஆண்டுகளாக நான் கண்டும் கேட்டும் வாசித்தும் அறிந்தவை மட்டுமே இந்த நூலில் பதியப்பட்டுள்ளன. தமிழகத்தின் தென் மாவட்டங்கள்தாம் என் வளர்ப்புக்கும் கல்விக்கும் வாழ்வுக்கும் பட்டறிவுக்கும் எல்லையாகும். ஆயினும் என் தேடல் மனிதனை நோக்கியே.

கனிவும் கண்டிப்புமான தம்பி சலபதியின் அணிந்துரை இந்நூல் பெற்ற பெரும்பேறாகும்.

இந்த நூலாக்கத்தில் என்னைப் ‘பணிகொண்ட’ நன்றிக்குரியவர்கள் நிறைய. என் ஆசான் சி.சு. மணி அவர்கள், முனைவர் வெ. வேதாசலம், முனைவர் வே. மாணிக்கம், சுந்தர் காளி.

என் எழுத்துச் சோம்பலுக்கு மருந்தான மாணவ நண்பர்கள் இரா. தமிழ்க்குமரன், அழகு செல்வன், 'முரீஅத்' சடங்கு பற்றிய கள ஆய்வுச் செய்தி அளித்த வ. இரகுமத்துல்லா, 'கறுப்பு' கட்டுரையை வெளியிட்ட 'நாவாவின் ஆராய்ச்சி' இதழ்.

தம்பியர்கள் வி. மாறன், ச. நாகராசன், கு. ஞானசம்பந்தன், அன்பு அச்சகத்தார்.

...கைம்மாறு என்ன, அன்பினைத் தவிர!

25 அக்டோபர் 1997 தொ. பரமசிவன்