அறியப்படாத தமிழகம்/தைப்பூசம்

3. தைப்பூசம்

தமிழர்களின் தனிப்பெரும் திருவிழாவாகத் திகழ்வது தைப்பொங்கல் திருநாள். தேசிய இனத்துக்குரிய அடையாளம் ஒன்றைத் தமிழர்க்கு வழங்கும் திருவிழா இது. சமய எல்லைகளைக் கடந்த திருவிழாவாகவும் இது அமைகிறது.

பிறப்பு, இறப்புத் தீட்டுக்களால் பாதிக்கப்படாத திருவிழா இது என்பது பலர் அறியாத செய்தி. தைப் பொங்கல் நாளன்று ஒரு வீட்டில் இறப்பு நிகழ்ந்தாலும் மிகவிரைவாக வீட்டைச் சுத்தம் செய்து இறந்தவர் உடலை எடுத்துச் சென்றவுடன் தைப்பொங்கல் இடும் வழக்கத்தை நெல்லை மாவட்டத்தில் காணலாம். பொங்கல் திருநாளன்று, திருவிளக்கின் முன் படைக்கும் பொருள்களில் காய்கறிகளும், கிழங்கு வகைகளும் சிறப்பிடம் பெறுகின்றன. இவற்றுள் கிழங்கு வகைகள் (சேனை, சேம்பு, கருணை, சிறுகிழங்கு, பனங்கிழங்கு) பார்ப்பனர்களாலும், பெருங் கோயில்களாலும் காலங்காலமாக விலக்கப்பட்ட உணவு வகைகள் என்பது குறிப்பிடத் தகுந்தது. மேற்குறித்த இரண்டு செய்திகளாலும் தைப் பொங்கல் தமிழர்களின் திருவிழா என்பதையும் அது பார்ப்பனியப் பண்பாட்டிலிருந்து விலகி நிற்பது என் பதனையும் உணர்ந்துகொள்ளலாம்.

தைப்பொங்கலைத் தொடுத்து வரும் மற்றொரு இயற்கைத் திருவிழா சிறுவீட்டுப் பொங்கலாகும். மார்கழி மாதம் முப்பது நாளும் வைகறைப்பொழுது வாசலில் நீர் தெளித்து, கோலமிட்டு, சாண உருண்டைகளில் பூச்செருகி வைக்கும் பழக்கம் தென் மாவட்டங்களில் பரவலாகக் காணப்படுகிறது. எல்லா வீடுகளிலும் இது செய்யப்படுவதில்லை. பெண் பிள்ளைகள் இருக்கும் வீடுகளிலேயே வாசலில் பூ வைக்கும் வழக்கம் காணப்படுகிறது. பீர்க்கு, பூசணி, செம்பருத்தி, எக்காளம் ஆகியவையே பெரும்பாலும் வைக்கப்படும் பூக்களாகும். காலையில் வைக்கும் இந்தப் பூக்களை வெய்யில் விரிந்தவுடன் சாண உருண்டைகளிலேயே சேர்த்து எருவாக்கி, காயவைத்து விடுவார்கள்.

பூ வைக்கும் வீடுகளில் (பொங்கல் கழிந்து 8 இலிருந்து 15 நாள்களுக்குள் வரும்) தைப்பூசத்திற்குள் இதற்கொரு தனிப் பொங்கல் வைக்கவேண்டும். பெண்பிள்ளைகளுக்காகவே பூ வைப்பதால் அவர்களுக்கென வீட்டுக்குள் அல்லது வீட்டு முற்றத்திற்குள் களிமண்ணால் சிறுவீடு கட்டுவர். சிறுவீடு அதிக அளவு ஐந்தடிக்கு ஐந்தடி அளவில் இருக்கும். சிறு வீட்டுப் பொங்கல் நிகழ்ச்சி தலை வாசலில் நடைபெறாமல், சிறுவீட்டின் வாசலிலேயே நடைபெறும். பொங்கலிட்டுத் திருவிளக்குப் படையலும் முடிந்தவுடன் பொங்கலையும்,பூக்களாலான எருத்தட்டுக்களையும் நீர்நிலைகளுக்குப் பெண் பிள்ளைகள் எடுத்துச்சென்று நீரில் விடுவர். எருத்தட்டின் மீது வெற்றிலையில் சூடமேற்றி நீரில் விடுவதும் உண்டு.

ஆண்டாளின் திருப்பாவை காட்டும் மார்கழி நீராடலை நாம் அறிவோம். ஆனால் சங்க இலக்கியங்களில் தைந்நீராடல் குறிக்கப்படுகிறது. “தாயருகே நின்று தவத் தைந்நீராடுதல் நீயறிதி வையை நதி” என்பது பரிபாடல். தைந்நீராடல் பற்றி அறிஞர் மு. இராகவையங்கார் ஒரு நெடுங்கட்டுரை எழுதியுள்ளார். ஆனால் அவர் மார்கழி மாதம் வாசலில் பூ வைக்கும் சடங்கையும் பொங்கலையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

ஆண்டாளின் முப்பது நாள் திருப்பாவை நோன்பு மார்கழித் திங்கள் முதலாம் நாள் தொடங்கவில்லை. மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளிலேயே தொடங்குகிறது. எனவே அது தைத்திங்கள் மதி நிறைந்த நன்னாளில் (தைப்பூசத்தில்) நிறைவு பெற்றிருக்க வேண்டும். அந்நாளில் ‘பாற்சோறு மூட நெய்பெய்து' (பாற் பொங்கலிட்டு) உண்டு சுவைத்திருக்க வேண்டும். மார்கழி நீராட்டுப் போலவே தைந்நீராட்டும் பெண் பிள்ளைகளுக்கு உரியதாகவே சொல்லப் பெறுகிறது. எனவே மார்கழி நிறைமதி நாள் தொடங்கித் தை மாத நிறைமதி நாள் வரை பெண் பிள்ளைகள் நோன்பிருந்து 'சிறுவீடு' கட்டிப் பொங்கலிட்டுக் கொண்டாடிய ஒரு பழைய வழக்கத்தையே தமிழ் வைணவம் தனதாக்கிக் கொண்டு மார்கழி நீராட்டாக மாற்றியிருக்கிறது எனலாம்.

தைமாதம் காமனை (காதற்கடவுள்) நோக்கிச் செய்யப் பெற்ற மற்றொரு நோன்பினையும் ஆண்டாள் திருமொழி குறிக்கிறது. அது 'மாசி முன்னாளில்' கொண்டாடப்பெற்ற வேறொரு திருவிழாவாகும். சங்க நூல்களில் அதற்குச் சான்றுகள் இல்லை.

திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம், மாசிக்களரி போன்றவை பக்தி இயக்கத்துக்கு முந்திய காலத்தைச் சேர்ந்த திருவிழாக்கள் ஆகும். அவற்றைச் சைவ வைணவப் பெருஞ்சமயங்கள் தம்வயமாக்கிக் கொண்டிருக்கின்றன. அத்தகைய திருவிழாக்களில் தைப்பூசமும் ஒன்று.

தமிழ் வைணவத்தைப் போலவே தமிழ்ச் சைவமும் தைப் பூசம் கொண்டாடியிருக்கிறது. “நெய்ப்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம்” என்று மயிலைப் பதிகத்தில் திருஞான சம்பந்தர் தைப்பூசத்தினைப் பெண்கள் பொங்கலிட்டுக் கொண்டாடும் வழக்கத்தைக் குறிப்பிடுகிறார்.

தென் மாவட்டங்களில் தைப்பூசத் திருவிழா இன்றும் நீர்த் துறைகளிலே சிறப்பாகக் கொண்டாடப் பெறுவதும், ஆற்றங்கரைகளில் தைப்பூச மண்டபங்கள் கட்டப்பட்டிருப்பதும் தைப்பூசத் திருவிழாவின் செல்வாக்கினைக் குறிக்கும் சான்றுகளாகும்.

தீபாவளி

இன்று தமிழ்நாட்டில் விறுவிறுப்பாகக் கொண்டாடப் பெறும் திருவிழா தீபாவளி. நகர்ப்புறம் சார்ந்ததாகவும், துணி, எண்ணெய், மாவு, பட்டாசு ஆகிய பெருந்தொழில்களின் பொருளாதாரம் சார்ந்ததாகவும் இத்திருவிழா கொண்டாடப் படுகிறது. தகவல் தொடர்புச் சாதனங்கள் தரும் பகட்டான விளம்பரங்களால், இது தமிழர்களின் 'தேசியத் திருவிழா' போலக் காட்டப்படுகிறது. ஆயினும் தைப்பொங்கல் திருவிழா போல மரபுவழிப் பொருளாதாரம் சார்ந்ததாகவும் ஒரு திருவிழாவிற்குரிய உள்ளார்ந்த மகிழ்ச்சியோடும் சடங்குகளோடும் கொண்டாடப் பெறுவதாகவும் தீபாவளி அமையவில்லை. தைப்பொங்கல் சமய எல்லையினைக் கடந்து நிற்கும் திருவிழா. இது பழந்தமிழரின் அறுவடைத் திருவிழா. எனவே தான் இன்று ரோமன் கத்தோலிக்கத் தேவாலயங்களில் கூடத் தைப்பொங்கல் கொண்டாடப்பெறுகிறது. ஆனால் தீபாவளி தமிழரின் திருவிழாவாக அமையாமல் 'இந்து'க்களின் திருவிழாவாக அமைகிறது.

தமிழர் திருவிழா – இந்துக்களின் திருவிழா என்ற வேறு பாட்டினை எவ்வாறு பிரித்தறிவது? பழைய வழிபாட்டு முறைகளோடு கூடிய தொல் சமய வழிபாடுகள், இவற்றின் சாரத்தையும் உள்வாங்கிக்கொண்டு வளர்ந்த சைவம், வைணவம் ஆகியவையே தமிழர்களின் பழைய மதங்களாகும். இவை காட்டும் திருவிழாக்களான கார்த்திகைத் திருவிழா, திருவாதிரைத் திருவிழா, தைப்பூசத் திருவிழா, மாசிக்களரி எனப்படும் சிவராத்திரித் திருவிழா, பங்குனி உத்திரம், சித்திரைப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிப் பதினெட்டாம் பெருக்கு ஆகியன சைவமும் வைணவமும் பெருஞ்சமயங்களாக நிலை பெறுவதற்கு முன்னரே தமிழர்கள் கொண்டாடிய திருவிழாக்களாகும். பக்தி இயக்கத்தின் வளர்ச்சியில் இவை, சைவ வைணவ மதங்களாலும் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப் பட்டுவிட்டன.

தீபாவளி, தமிழ்நாட்டின் மரபுவழிப் பொருளாதாரத்தோடும் பருவநிலைகளோடும் சடங்குகளோடும் தொடர்பில்லாத ஒரு திருவிழா. பார்ப்பனியத்தின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் விலகி நிற்கிற சிற்றூர்களில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை. தீபாவளியின் அடையாளமான வெடி, அதன் மூலப் பொருளான வெடிமருந்து ஆகியவை தமிழ்நாட்டிற்குப் பதினைந்தாம் நூற்றாண்டுவரை அறிமுகமாகவில்லை என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். விளக்குகளின் வரிசை எனப் பொருள்படும் தீபாவளி (தீப + ஆவளி) என்னும் வட சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லும் புழக்கத்தில் இல்லை. தமிழர்களின் விளக்குத் திருவிழா என்பது திருக்கார்த்திகைத் திருவிழாவே. நரகாசுரன் என்னும் அரக்கன் கிருஷ்ணனால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் தீபாவளிக் கதை திராவிடப் பண்பாட்டோடு தொடர்புடையதன்று. மாறாக பிராமணிய மதத்தின் சார்பாக எழுந்த கதையாகும். இந்த நாளே பிராமணிய மதத்தின் எதிரியான சமண மதத்தின் இருபத்து நாலாம் தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் வீடுபேறடைந்த (இறந்த) நாளாகும். தான் இறந்த நாளை வரிசையாகத் தீபங்களை ஏற்றிக் கொண்டாடுமாறு மகாவீரர் தம் மதத்தவரைக் கேட்டுக்கொண்டார். ஆகவே, பிராமணிய மதத்தின் பழைய எதிரிகளான சமணர்களும் தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். எனவே நரகாசுரன் அழிந்ததாக பிராமணியத் தீபாவளிக் கதைகள் குறிப்பிடுவது மகாவீரர் இறந்த நாளையே ஆகும். விசயநகரப் பேரரசான, ‘இந்து சாம்ராஜ்ஜியம்', தமிழ் நாட்டில் நுழைந்த கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டு தொடங்கியே தீபாவளி இங்கு ஒரு திருநாளாகக் கொண்டாடப் படுகிறது.

இந்தக் காரணம் பற்றியே தமிழ்ப் பிராமணர்களை விட, தமிழ்நாட்டில் உள்ள தெலுங்குப் பிராமணர்களே தீபாவளியைப் ‘பக்தி சிரத்தை’யுடன் கொண்டாடுகின்றனர். வடநாட்டு இந்துக் களிடமும் சமணர்களிடமும் இல்லாதபடி தமிழ்நாட்டில் இத்திருவிழா நாளன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கின்றனர். எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்பது தமிழ்நாட்டில் நீத்தார் நினைவில் இறுதி நாளைக் குறிக்கும் சடங்காகும். தமிழ்நாட்டுப் பிராமணர்களும் இத்திரு விழாவை இறந்தார் இறுதிச் சடங்கு போல 'கங்கா ஸ்நானம்' செய்து கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது. ஆகவே உண்மையில் இத்திருவிழா பார்ப்பனிய மதத்தின் திருவிழாவேயன்றித் தமிழர் திருவிழா ஆகாது.

'நரகனைக் கொன்ற நாள் நல்ல நாள் விழாவா' என்று பாரதிதாசன் பாடுவதும் இங்கே நினைவுக்குரியது.

விநாயகர் வழிபாடு

பிள்ளையார், விநாயகர், கரிமுகன், ஆனைமுகன், கணபதி என்று பல்வேறு பெயர்களால் அறியப்படும் தெய்வமே இன்று தமிழ் நாட்டில் மிகப் பரவலாக வணங்கப்பெறும் கடவுள். ஆனை முகமுடைய இந்தக் கடவுள் கி.பி. ஆறாம் நூற்றாண்டளவில் தமிழ்நாட்டிற்கு அறிமுகமாகியுள்ளார். எனவே அதற்கு முன் பிறந்த சங்க இலக்கியங்களில் இக்கடவுளைப் பற்றிய குறிப்புக்கள் இல்லை.

எல்லாக் கடவுளருக்கும் முன்னதாக வணங்கப்பெறும் கடவுள் என்பதே இவரது சிறப்பு. பலசரக்குக் கடையில் சீட்டு எழுதுபவர்கூட ஓ என்ற குறியீட்டைப் பிள்ளையார் வணக்கமாக இட்டுத்தான் தொடங்குகிறார். திருமண அழைப்பு, தேர்வுத்தாள் என எல்லா எழுத்து உருக்களும் இக்குறியீட்டை இட்டே தொடங்குகின்றன.மிக அண்மைக்காலமாய், படித்த, நகர்ப்புறம் சார்ந்த பிராமணர் அல்லாதவர்களிடம்கூட 'கணபதி ஹோமம்' என்ற சொல்லும் சடங்கும் மேல்தட்டு மனப்பான்மையின் வெளிப்பாடாகக் காணப்படுகின்றன.

இந்தக் கடவுள் வழிபாடு மராட்டியத்தின் தென் பகுதியில் புனா நகரைச் சார்ந்த சித்பவனப் பிராமணர் இடையே தோன்றியது என ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். பின்னர் கீழைச்சாளுக்கியருடைய வாதாபி நகரத்தில் நிலைகொண்டு அங்கிருந்து தமிழ் நாட்டிற்குள் பரவி வளர்ந்தது என்றும் கூறுவர்.

தேவாரத்தில் இக்கடவுள் 'கணபதி' என்ற பெயராலேயே குறிக்கப் பெறுகிறார். 'கலமலக்கிட்டுத் திரியும் கணபதி என்னும் களிறும்' என்பது அப்பர் தேவாரம். 'உமையவள் பிடி (பெண் யானை) ஆக, சிவபெருமான் கரி (ஆண் யானை) வடிவெடுத்து, கணபதி அருளினன்’ என்று பாடுகிறார் ஞானசம்பந்தர். முற்காலப் பாண்டியர் குடைவரை, கட்டடக் கோயில்களில் கணபதி பரிவார தெய்வமாக சேட்டை (மூ)தேவியுடன் இடம்பெற்றுள்ளார். முதலாம் இராசராசன் எடுப்பித்த தஞ்சைப் பெரிய கோயிலில் பரிவார தேவதைகளில் ஒன்றாகக் கணபதியும் சேர்க்கப்பட்டிருக்கிறார். ‘பரிவார ஆலயத்துப் பிள்ளையார் கணவதியார்' எனக் கல்வெட்டு இவரைக் குறிக்கிறது. இவருக்கு வாழைப்பழம் படையலாகப் படைக்கப்பட்டதும் அக்கல்வெட்டால் தெரியவருகிறது.

காலத்தால் முந்திய பிள்ளையார் உருவமாகத் தமிழ்நாட்டில் அறியப் பெறுவது காரைக்குடிக்கு அடுத்த பிள்ளையார் பட்டியில் உள்ள பிள்ளையார் சிலையாகும். ஒரு சிறிய பாறைக் குன்றில் அமைக்கப்பட்டுள்ள குடைவரைக் கோயிலில் புடைப்புச் சிற்பமாக இது விளங்குகிறது.

மனிதச் சாயலைவிட யானையின் சாயலே இச்சிலையில் மிகுதியாகத் தோற்றமளிக்கிறது. இதன் காலத்தைக் கி.பி. ஆறாம் நூற்றாண்டு என அறிஞர்கள் கணித்துள்ளனர். இப்பொழுது கற்பக விநாயகர் என வழங்கும் இவ்விநாயகரின் பழைய பெயர் 'தேசி விநாயகர்' என்பதாகும். தமிழ்நாட்டில் பிள்ளையாருக்கு வழங்கும் பல பெயர்களில் குறிப்பிடத்தகுந்தவை தேசி விநாயகர், தேசிக விநாயகர், தாவள விநாயகர் என்பன. தேசி, தேசிகர் என்ற தமிழ்ச் சொற்கள் வியாபாரிகளைக் குறிப்பனவாம். தேசங்கள் பலவற்றிற்கும் செல்வதால் வியாபாரிகள் 'தேசிகள்' எனப்பட்டனர் போலும். 'நானா தேசிகள்' என்பது தென்னிந்தியாவில் இருந்த மிகப்பெரிய வணிகக்குழுவின் பெயர். பிள்ளையார்பட்டித் திருக்கோயில் இன்றளவும் பழைமை வாய்ந்த வணிகச் சாதியான ‘நகரத்தார்’ எனப்படும் நாட்டுக் கோட்டைச் செட்டியாருக்கே உரியது. செட்டி நாட்டு ஊர்களில் ஒன்றான பொன்னமராவதிக்கு அருகில் உள்ள சுந்தரம் என்னும் ஊரை அவ்வூர்க் கல்வெட்டு 'தென் கோனாட்டு ஒல்லையூர்க் கூற்றத்து சுந்தரசோழபுரமான தேசியுகந்த பட்டணம்' என்றே குறிக்கிறது. மற்றும் சில கல்வெட்டுக்கள் இவ்வூரை ஒரு ‘நகரம்', என்றே குறிக்கின்றன. அக்காலத்தில் நகரம் என்ற சொல் வணிகர்களின் குடியிருப்பைச் சுட்டும். எனவே நகரத்தாரால் வழிபடப்பட்ட நானாதேசி விநாயகர், தேசி விநாயகர் எனப்பட்டார். 'தேசி' என்னும் சொல் பிற்காலத்தில் வணிகர்களைக் குறிக்க, தேசிகர் என வழங்கப்பட்டது. முகமதுநபி வியாபாரம் செய்துவந்தார் என்பதைக் குறிக்கும் உமறுப்புலவர் சீறாப்புராணத்தில் அவரைத் ‘தேசிகர்' என்று குறிப்பிடுகிறார். தேசிகர் என்னும் சொல் 13ஆம் நூற்றாண்டுக்குப்பின் சைவ, வைணவ சமயங்களில் சுப்பிரமணிய தேசிகர், வேதாந்த தேசிகர் எனச் சமயக் குருமார்களை (ஆசார்யர்களை)க் குறிப்பதாகவும் வழங்கியது. தேசிக விநாயகம் என்பது கவிமணியின் இயற்பெயர்.

தாவளம் என்பது பெருவழிகளில் இருந்த வாணிகச் சத்திரங்களைக் குறிக்கும். "தாவளத்திலிருந்து தன்மம் வளர்த்த செட்டியும் செட்டி வீரப்புத்திரர்களும்” என்று பிரான்மலைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

ஆவணி மாதம் வளர்பிறை நாலாம் நாள் (சுக்லபட்ச சதுர்த்தி) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. புனா, பம்பாய் ஆகிய மேற்கு இந்திய நகரங்களில்தான் மிகச் சிறப்பாக இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் இவ் விழாவை அனைத்துச் சாதியினரும் கொண்டாடினாலும் மிகுந்த ஈடுபாட்டோடு கொண்டாடுபவர்கள் 'செட்டியார்' எனப்படும் பல்வகைப்பட்ட வியாபாரச் சாதியினைச் சேர்ந்த மக்களே.

விநாயகர் எனப்படும் பிள்ளையார் வழிபாடு, வியாபாரம் செய்த சாதியார் மூலமாகவே தமிழ்நாட்டில் பரவியிருத்தல் வேண்டும். இக்கடவுள் தாவளம் எனப்படும் நெடுவழியில் அமைந்த சத்திரங்களில் வழிபடப்பட்டவராக இருக்கிறார். எனவே தாவள விநாயகர் என்ற பெயரை இக்கடவுள் பெற்றிருக்கிறார். வியாபாரக் ‘கணங்களுக்கு’ வேண்டியவர் என்னும் பொருளிலேயே இவருக்குக் கணபதி என்னும் பெயர் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

தஞ்சைப் பெரிய கோயிலில் இப்பிள்ளையாருக்கு நாள் தோறும் 150 வாழைப்பழங்கள் நிவேதனம் செய்ய அரசன் 360 காசுகளை ஒதுக்கியுள்ளான். இக்காசுகளைப் பெற்றுக் கொண்டு வட்டிக்கு ஈடாக நாள்தோறும் வாழைப்பழம் வழங்கும் பொறுப்பு தஞ்சாவூரில் நான்கு குடியிருப்புகளில் வாழ்ந்த நகரத்தார்களிடம் (வியாபாரச் செட்டிகளிடம்) ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தஞ்சாவூர்ப் புறம்படி நித்த வினோதப் பெருந்தெருவில் நகரத்தார், மும்முடிச் சோழப் பெருந்தெருவில் நகரத்தார், வீர சிகாமணிப் பெருந்தெருவில் நகரத்தார், திரிபுவன மாதேவிப் பேரங்காடி நகரத்தார் ஆகியோர் ஆவர். மேற்குறித்த கல்வெட்டும் பிள்ளையார் வழிபாடு தமிழ் நாட்டில் வாணிகச் சாதியினரால் வளர்க்கப்பட்ட செய்தியை உறுதிப்படுத்துகின்றது.

நரசிம்ம பல்லவனின் படைத் தளபதியான சிறுத்தொண்டர் வாதாபி நகரத்திலிருந்து இந்த வழிபாட்டைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்த கதையினை முதலில் தெ.பொ.மீ.யும் பின்னர் வீரபத்திரபிள்ளை போன்ற ஆய்வாளர்களும் குறிப்பிட்டாலும் வாணிகச் சாதியினர் தெய்வமாகவே தமிழ்நாட்டுக்குப் பிள்ளையார் வழிபாடு வந்தது என்று கொள்வதே பொருத்தமாகத் தோன்றுகிறது.

துலுக்க நாச்சியார்

தமிழ்நாட்டிற்கு இசுலாம் ‘வாளோடு வந்த மதம்' என்று சிலர் குறிப்பிடுகின்றனர். பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இசுலாமியர்கள் வாளோடு நுழைந்தது வரலாற்று உண்மைதான். ஆனால் இசுலாம் அதற்கு முன்பே வணிகர்கள் வழியாக வந்திருக்க வேண்டும். பிற்காலச் சோழர் ஆட்சியின் போதே ‘அஞ்சுவண்ணம்' என்ற வணிகக்குழு இருந்திருக்கிறது. முதலாம் இராசராசன் கல்வெட்டில், 'சோனகன் சாவூர் பரஞ்சோதி’ என்பவன் குறிக்கப்பெறுகின்றான். ‘சோனகச் சிடுக்கின் கூடு' என்று காதில் அணியும் நகை ஒன்றும் அவனது கல்வெட்டில் குறிக்கப்படுகின்றது. 'சோனகர்' என்பது அரபியரைக் குறிக்கும்.

அரபியர்களும் தமிழர்களைப் போலவே ஒரு பழைய நாகரிகத்தின் வழிவந்தவராவர். எனவே இசுலாமிய சமயத்திற்குத் தமிழ்நாட்டிற்குக் கொடுப்பதற்கும் கொள்வதற்கும் சில உண்மைகளும் நெறிகளும் இருந்தன. ‘யுனானி' என்னும் மருத்துவமுறையும், அல்வா, பிரியாணி போன்ற உணவு வகைகளும் இசுலாமியர்வழித் தமிழகத்திற்கு வந்தவையாகும். படைப் போர், கிஸ்ஸா (கதை), முனாஜாத் (வாழ்க்கைச் சரிதம்), நாமா (போற்றிப் பாடல்) முதலிய இலக்கிய வகைமைகளும் தமிழுக்கு இசுலாத்தின் பங்களிப்பே.

இந்தியாவின் மிகப்பெரிய வழிபாடான திருமால் நெறியின் வளர்ச்சிக்கு இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் தன் பங்கைச் செலுத்தியுள்ளது. வங்க நாடு திருமாலோடு ராதையை இணையாகச் சேர்த்தது. தமிழ்நாட்டு வைணவம் ஆண்டாளைத் திருமாலுக்கு இணையாகச் சேர்த்தது. இசுலாத்தின் செல்வாக்கால் தமிழ் வைணவத்தில் 'துலுக்க நாச்சியார்' கதை பிறந்தது.

மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவில் அழகர் கோயில் அழகரைப் பற்றிய கதை ஒன்று வழங்கி வருகிறது. 'தன் தங்கை மீனாட்சி திருமணத்தைக் காணவரும் அழகர் கோபித்துக்கொண்டு வண்டியூர் சென்று அங்கு தன் காதலி துலுக்க நாச்சியார் வீட்டில் தங்குகிறார்' என்பது அக்கதையாகும். உண்மையில் அவ்விடத்தில் துலுக்க நாச்சியார் கோயில் என்று எதுவுமில்லை. ஆனால் கதை மட்டும் வலிமை உடையதாக விளங்குகிறது. ஐம்பதாண்டுகளுக்கு முன்பு வரை வண்டியூர்ப் பகுதியில் இசுலாமியர் வாண வேடிக்கைகள் நடத்தி அழகரை வரவேற்றிருக்கின்றனர். இந்தக் கதை தந்த நம்பிக்கையே அதற்குக் காரணமாகும். திருவரங்கத்திலும் துலுக்க நாச்சியார் கதையும் ஒரு சந்நிதியும் உண்டு.

திருமாலின் சிலை மீது ஆசைகொண்ட சுல்தான் மகளொருத்தி அந்தச் சிலையைப் பிரிந்த சோகத்திலே உயிர்விட்டாளாம். இந்தக் கதையைக் குறிப்பிடும் திருவரங்கம் கோயில் ஒழுகு, "பெருமாள் நியமனத்தினாலே ராஜமகேந்திரன் திரு வீதியில் வட டகீழ் மூலையிலே திருநடை மாளிகையிலே அறையாகத் தடுத்து அந்த டில்லீசுவரன் புத்திரியான ஸுரதாணியை சித்ரரூபமாக எழுதி வைத்து ப்ரதிஷ்டிப்பித்து” என்று கூறுகிறது. துலுக்க நாச்சியாருக்கு 'சாந்து நாச்சியார்' என்றும் பெயர்.

திருவரங்கம் கோயில் ஒழுகைப் பற்றி ஆராய்ந்த ஹரிராவ் என்ற அறிஞர் துலுக்க நாச்சியார் கதையினைக் குறிப்பிட்டு, 'நாட்டுப்புறப் பண்பாட்டியல் ஆய்வு மாணவர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி’ என்கிறார்.

இசுலாமியர் அல்லாத தமிழர்கள் நாகூருக்குச் சென்று வழிபடுவது அனைவரும் அறிந்ததே. ஆனால் விருத்தாசலத்தை அடுத்த ஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் கோயிலில் நெடுங்காலமாக இசுலாமியர்கள் வழிபட அனுமதிக்கப்படுகிறார்கள். இது பலர் அறியாத செய்தியாகும். அக்கோயில் இறைவன் கடலாடச் செல்லும்போது கிள்ளை என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு தர்க்காவுக்குக் கோயில் மரியாதையாக மாலை தருகிறார்கள்.

தமிழ்நாட்டின் சிற்றூர்ப்புறங்களில் இப்படிப் பல எடுத்துக்காட்டுக்களைச் சொல்ல முடியும். மத அடிப்படைவாதம் வன்மத்தோடு வளர்க்கப்பட்டு வரும் இந்நாளில் இத்தகைய கதைகளையும் நம்பிக்கைகளையும் வெளிச்சமிட்டுக் காட்ட வேண்டிய கடமை நமக்குண்டு.


மதமும் சாதியும்

இந்தியாவில் சமூகம் என்பது சாதியப் படிவங்களால் ஆனது. சாதியில்லாமல் ஒரு மனிதன் பிறப்பதுமில்லை, வாழ்வது மில்லை. இந்திய அரசியல் சட்டப்படிகூட ஒரு மனிதன் மதம்மாறத்தான் முடியும். சாதி மாற முடியாது.

வேறு வகையில் சொல்வதானால் மதத்தைவிடச் சாதி என்னும் நிறுவனம் பல நூற்றாண்டுகள் மூத்தது. ஆழமாக வேரோடிப் போனது. இந்த விண்வெளியுகத்தில்கூட ஒரு தனிமனிதன் கடுமையான முயற்சிகளுக்குப் பிறகே தன் சாதியின் எல்லைகளை மீறி வாழ முடியும். சாதியம் என்பது ஒரு கொடுமையான சமூக நெறி.

மூன்று நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிற்குள் நுழைந்த வெளிநாட்டார் வைதிக நெறிகள், சைவம், வைணவம், எளிய மக்களின் வழிபாட்டு நெறிகள் ஆகிய எல்லாவற்றிற்கும் சேர்த்து 'இந்து' எனப் பெயர் வைத்தனர். சாதியப் படிவங்களால் ஆனதே இந்து மதம் என்பது அவர்களது கணிப்பு.

வணிகர்களாகவும் துறவிகளாகவும் வந்த வெளிநாட்டா ரோடு, கிறித்தவ மதமும் இங்கே வந்தது. தொடக்கக் காலத்தில் ஒரு வட்டாரத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட சாதியார் முழுவதும் மதம் மாறியபோது சிக்கல்கள் உருவாகவில்லை. 16ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் தென் தமிழ்நாட்டுக் கடற்கரையோர மீனவ மக்கள் நூற்றுக்கு நூறு கத்தோலிக்கக் கிறித்தவர்களாய் மாறினர். அரசியல் நெருக்கடியும், தொழிற் களத்தில் பிறந்த நெருக்கடியும் அவர்கள் மதம் மாறக் காரணங்களாயின.

பின்னர், ஒரே பகுதியைச் சேர்ந்த இரண்டு சாதியார் மதம் மாறியதனால் தேவாலயத்திற்குள்ளேயே சாதிய நெருக்கடி ஏற்பட்டது. 18ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் புதுச்சேரி தூய பால் தேவாலயத்தில் (சம்பா சர்ச்) தாழ்த்தப்பட்டோருக்கும் மேல்சாதியினருக்கும் தனித்தனி இடங்கள் ஒதுக்கப்பட்டன. வெளிநாட்டுக் கிறித்தவப் பாதிரிமார்கள் இதனை எதிர்க்க முயற்சி செய்து தோற்றுப்போனதாக ஆவணங்கள் காட்டுகின்றன. 19ஆம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் பாளையங்கோட்டை புரொட்டஸ்டண்ட் திரித்துவ தேவாலயத்தில் வேளாளருக்கும், நாடார்களுக்கும் மோதல் ஏற்பட்டது. தங்கள் சாதி மேலாண்மையைக் காப்பாற்றுவதற்கு வேளாளர்கள் தங்களுக்கென்று தனித் தேவாலயத்தையே கட்டினர். தங்கள் சாதி ஆசாரங்களில் கிறித்தவம் தலையிடக்கூடாதென்று புத்தகங்கள் எழுதி வெளியிட்டனர்.

தேவாலயத்திற்குள் தொடங்கிய சாதி மோதல் கல்லறைத் தோட்டம் வரை நீடித்தது. இரட்சணிய யாத்ரிகமும், இரட்சணிய சமய நிர்ணயமும் எழுதிய கிறித்தவக் கம்பர் எச்.ஏ. கிருட்டிணப் பிள்ளையின் உறவினர்கள் இதில் முன்னணியில் நின்றனர். கல்லறைத் தோட்டச் சாதி மோதல்கள் மிக அண்மைக் காலத்தில்கூட திருச்சி, திருவில்லிபுத்தூர் ஆகிய டங்களில் நிகழ்ந்துள்ளன. கடந்த நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் தேவாலயத்திற்குள் வேளாளருக்கும் மற்ற சாதியார்க்கும் திசைநோக்கி இடங்கள் எல்லை பிரிக்கப்பட்டன. பூசை செய்யும் பாதிரியார் தேவலாயத்திற்குள் நுழைய ‘நடுவு நிலைமையோடு' தனிப்பாதை அமைக்கப்பட்டது. இது பற்றி ஆ. சிவசுப்பிரமணியன் ஒரு நெடுங்கட்டுரை எழுதியுள்ளார்.

அண்மைக் காலமாகக் கிறித்தவத் திருச்சபைகளில் தலித் மக்களின் எழுச்சி சில பொறிகளை உருவாக்கி இருக்கிறது. கிறித்தவத் துறவிகளின் மனநிலையிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வட மாவட்டம் ஒன்றில் மேல்சாதி ரெட்டியார் கிறித்தவர்களுக்கும் தலித் மக்களுக்கும் இடையில் நடந்த மோதலை மாற்கு அடிகளார் என்னும் துறவி அண்மையில் 'யாத்திரை' என்னும் நாவலாக எழுதியுள்ளார்.

மத எல்லைகளை மீறித் தமிழ்நாட்டைச் சாதித் தீ வாட்டிக் கொண்டிருக்கிறது. மத ஒற்றுமைக்கான அணுகுமுறைகளும் தீர்வுகளும் சாதியத்திற்குப் பயன்படவில்லை. சாதியம் பற்றிய நுட்பமான ஆழமான பார்வை நமக்குக் கிடைக்கும்போது தீர்வுகளும் நம் கண்ணில் புலப்படும்.

பறையரும் மத்தியானப் பறையரும்

பறையர் எனப்படுவோர் தமிழகத்தின் தொல்குடிகளுள் ஒரு பிரிவினர் ஆவர். பறை என்னும் தோற்கருவியின் அடையாளமாக இச்சொல் பிறந்திருக்கிறது. உழவுத் தொழில் செய்தல், இறந்த விலங்குகளை அப்புறப்படுத்துதல், அவற்றின் தோலை உரித்துப் பதப்படுத்துதல் - இவையெல்லாம் பறையர் செய்த தொழில்களாக இருந்தன. பின்னர், பதப்படுத்திய தோலையும் வாரையும் கொண்டு இசைக் கருவிகள் செய்தல், அவற்றை வாசித்தல், பழுது நீக்குதல் ஆகியனவும் பறையர்கள் ஏற்று வளர்த்த தொழில்களாக இருந்தன.

தோலைப் பதப்படுத்தத் தேவைப்படும் மூலப்பொருள் சுண்ணாம்பு ஆகும். சுண்ணாம்பு சேகரித்துக் காளவாசலில் இட்டுச் சுடுகின்ற பறையர் 'சுண்ணாம்புப் பறையர்' எனப்பட்டனர். நந்தனார் (திருநாளைப் போவார் நாயனார்) இசைக் கருவிகளுக்கு உரிய 'போர்வைத் தோலும் விசிவாரும்' செய்தவர். எனவே அவர் இசைப் பயிற்சி உடையவராகவே இருத்தல் வேண்டும். பசுவின் வயிற்றில் இருந்து பெறப்படும் கோரோ சனையை எடுத்து மருந்து செய்த மருத்துவப் பறையரும் இருந்தனர். பிற்காலச் சோழப் பேரரசில் பறையர்கள் சிலர் உயர்ந்த பதவிகளில் இருந்தது, கல்வெட்டுக்களால் அறியப்படும் செய்தி. மான் தோல் தவிர்ந்த ஏனைய தோல்கள் தீட்டுக்குக் காரணமாகும் என்பது பார்ப்பனரின் வருணக்கோட்பாட்டில் உள்ள வழக்கமாகும்.

வருணக் கோட்பாடு காரணமாகத் தோலைப்பதப்படுத்தும் பறையர், ‘இழிந்த' சாதியினர் ஆக்கப்பட்டனர். ஆனால் பறையர்கள் சில சாதியினருக்குச் சமய குருவாக இருந்து பல சடங்குகளையும் நடத்தியுள்ளனர். எனவே சில பழங் கோயில்களில் அவர்களுக்குத் தனித்த மரியாதையும் அளிக்கப்பட்டிருந்தது. 'பார்ப்பானுக்கு மூப்பு பறையன், கேட்பார் இல்லாமல் கீழ்ச் சாதியானான்' என்னும் சொல்லடை இன்றும் தென் தமிழ்நாட்டில் வழங்கி வருகிறது.

திருவாரூர்க் கோயில் திருவிழாவின்போது, பறையர் ஒருவர் யானைமீது அமர்ந்து கொடிபிடித்துச் செல்லும் வழக்கம் அண்மைக் காலம்வரை நடைமுறையில் இருந்திருக்கிறது. பார்ப்பாரையும் பறையரையும் தொடர்புபடுத்தும் கதையும் நடைமுறையும் இக்கோயிலில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வழக்கில் இருந்துள்ளது.

ஒருநாள் திருவாரூர்க் கோயிலுக்குள் பார்ப்பனர்கள் யாகம் செய்துகொண்டிருந்தனர். அந்த வேள்வியின் பயனாகச் சிவபெருமான் ஒரு பறை மகன் வேடத்தில் செத்த கன்றுக் குட்டியைத் தோளில் போட்டுக்கொண்டு வேள்விக் கூடத்திற்குள் வந்துவிட்டார். வந்தவர் சிவபெருமான் என்பதை உணராத பார்ப்பனர், "பறையன் உள்ளே வந்துவிட்டான்; யாகம் தீட்டுப்பட்டுவிட்டது" என்று கத்திக்கொண்டே வெளியே ஓடிவிட்டனர். சினங்கொண்ட சிவபெருமான், “நீங்களும் பறையன் ஆகுங்கள்” என்று சாபம் கொடுத்துவிட்டார். சாபத்திலிருந்து விமோசனம் தருமாறு பார்ப்பனர்கள் கெஞ்சினர். மனம் இரங்கிய சிவபெருமான், நிரந்தரமாகப் பறையனாவதற்குப் பதில் 'நாள்தோறும் நண்பகல் முதல் ஒரு நாழிகை நேரம் மட்டும் பறையனாய் இருப்பீர்களாக' என்று சாப விமோசனம் தந்தார். அதன்படியே திருவாரூர்க் கோயில் பார்ப்பனர்கள் நண்பகலில் (மத்தியானம்) ஒரு நாழிகை நேரம் பறையர்களாகி விடுகிறார்கள் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை. இதனால் திருவாரூர்க் கோயில் பார்ப்பனர்களுக்கு 'மத்தியானப் பறையர்கள்' என்ற பெயர் ஏற்பட்டது.

பறையரானவர் மீண்டும் பார்ப்பனராக வேண்டுமென்றால் தீட்டுக் கழிக்க வேண்டும். எனவே திருவாரூர்க் கோயில் பார்ப்பனர்கள் மத்தியானம் ஒரு முறை குளிக்கும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தனர். இந்த வழக்கமும் அண்மைக் காலம் வரை நீடித்திருந்தது.


பண்டாரம்

பண்டாரம், பரதேசி ஆகிய இரண்டு சொற்களும் ஒரே பொருளில் இக்காலத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பொழுதைய நடைமுறையில் இச்சொற்கள் உணவிற்குக் கூட வழியில்லாத ஏழைகளையே குறிக்கும்.

பண்டாரம் என்ற சொல்லுக்கு முதற்பொருள் 'பொன், வெள்ளி, முத்து போன்ற உயர் மதிப்பு உடைய பொருள்களைச் சேர்த்து வைக்கும் கருவூலம்' என்பதாகும். கி.பி. 13ஆம் நூற்றாண்டு வரை அரசுப் பண்டாரங்களைப் போலவே கோயில்களிலும் பண்டாரங்கள் இருந்தன. இப்பண்டாரங்களில் உயர் மதிப்புடைய தங்கம், வெள்ளியாலான சிலைகளும் நகைகளும் பாதுகாக்கப்பட்டன. கோயிலில் சமய நூல்களைச் சேர்த்துப் பேணி வைக்கும் இடம் ‘சரஸ்வதி பண்டாரம்' என்றழைக்கப்பட்டதனைச் சுந்தர பாண்டியன் கல்வெட்டு மூலம் அறிகிறோம். இப்பண்டாரங்களின் வாசலில் நின்று காவல்பணி செய்து வந்தவர்களே இக்காலத்தில் ‘பண்டாரம்' என்னும் சைவ மதம் சார்ந்த சாதியாராவர்.

இக்காலத்துக் காவலாளிகளைப்போல இவர்கள் நின்று கொண்டே காவல்பணி செய்யவில்லை. பண்டாரத்தின் வாசலில் அமர்ந்து கோயிலுக்குப் பூத்தொடுக்கும் வேலையில் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் பூத்தொடுப்பதற்காகத் தரப்பட்ட நீண்ட கற்பலகைகளை இன்றும்கூடப் பெரிய கோயில்களில் காணலாம். இவற்றுள் சிலவற்றில் கல்வெட்டுக்களும் உள்ளன. பூச்செடிகளையும் மரங்களையும் உடைய கோயில் நந்தவனங்களைப் பேணும் பொறுப்பும் பண்டாரக் காவலர்களிடமே விடப்பட்டன. இன்றைக்குக் கோயில் பண்டாரக் காவலர்களாக இவர்கள் இல்லை. ஆனால் பூத்தொடுக்கும் வேலை மட்டும் இந்தச் சாதியாரோடு பிணைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குள் நின்று கொண்டு காப்பதற்குப் பதிலாக இவர்களைக் கற்பலகைகளின் முன் அமரவைத்துப் பூத்தொடுக்கும் வேலையினையும் கொடுத்ததனை அழகுணர்ச்சி நிறைந்த வேலைப் பங்கீடு எனச் சொல்லலாம். (கல்வெட்டுக்களோடு கூடிய பூப்பலகைகள் தமிழகக் கோயில்களில் நிறையவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.)

இக்காலத்தில் தமிழ்பேசும் பண்டாரங்களோடு கன்னட மொழி பேசும் பண்டாரங்களும் தமிழ்நாட்டில் வாழ்கின்றனர். விசயநகரப் பேரரசின் காலத்தில் இவர்கள் தமிழகம் வந்துள்ளனர். இவர்கள் பெரும்பாலும் வீர சைவப் பிரிவினர். எனவே தங்கள் சாதிக்கு ‘யோகீஸ்வரர்' எனப் பெயரிட்டுக் கொள்கின்றனர்.

வைணவக் கோயில்களில் பண்டாரத்தின் காவலர்கள் பூத்தொடுக்கும் வேலையோடு மடைப்பள்ளியிலும் சமையலறையிலும்) பணிபுரிந்தனர். எனவே, வைணவக் கோயில்களில் இக்காலத்தில் 'பண்டாரி' என்ற சொல் சமையல்காரர்களைக் குறிக்கிறது. வீட்டு விழாக்களில் சமையல் செய்பவர்களைத் தென் மாவட்ட முசுலிம்கள் சிலர் இன்றும் ‘பண்டாரி’ என்றே அழைக்கின்றனர்.

பண்டாரம் என்பது செல்வக் குவியலைக் குறிக்கும் சொல் என்பதனால் அருட்செல்வத்தை அள்ளி வழங்கும் இறைவனை ‘மூலபண்டாரம் வழங்குகிறான் வந்து முந்துமினே' என்று மாணிக்க வாசகர் பாடுகிறார். இந்த வழக்கம் பற்றியே இறைவனின் அருட்செல்வத்தை நிரம்பப் பெற்றவர் என்ற பொருளில், சைவசமயத் துறவிகளும் மடாதிபதிகளும் 'பண்டார சந்நிதிகள்' எனப்பட்டனர். இந்த மரபை அடியொற்றித்தான் தம் ஆசிரியர் மீது குமரகுருபரர் 'பண்டார மும்மணிக்கோவை' பாடினார்.

பண்டாரம் பரதேசி என்ற தொடர் மேடு பள்ளம், ஏற்றத் தாழ்வு என்பதுபோல 'இருப்பவர் இல்லாதவர்' என்பதைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டதாகும். பின்னர் 'இல்லாதவர்' என்ற பொருளை மட்டும் பெற்று நின்றிருக்கிறது. பரதேசி என்ற சொல்லுக்குப் பிறநாட்டான் என்பது பொருள். வறுமை காரணமாகவும், வேறு காரணமாகவும் கையில் ஏதுமில்லாமல் பயணம் செய்பவர்களைப் பரதேசி என்ற சொல்லால் குறித்துள்ளனர். ‘தேசாந்திரிகள்' என்ற பெயராலும் இவர்கள் அழைக்கப்பட்டு, நெடுவழிகளில் அமைந்த சத்திரங்களில் இவர்களுக்கு உணவு வழங்கப்பட்டிருக்கிறது.

பழைய குருமார்கள்

பார்ப்பனர்கள் வருவதற்கு முன்னர் தமிழ்நாட்டில் 'புரோகிதம்’ என்னும் தொழில் இருந்ததா? புரோகிதம் செய்யும் சாதியார் இருந்தார்களா? இருந்தால் அவர்கள் யார்? என்பவை அடிக்கடி விவாதிக்கப்பட்டுவரும் கேள்விகளாகும்.

'புரோகிதம்' என்ற சொல்லைக் கேட்டவுடன் அறிஞர் சிலர், பார்ப்பனப் புரோகிதத்தையும், அரசு அதிகார மையங்களோடு அவர்கள் கொண்டிருந்த நெருக்கத்தையும், அதன் விளைவாகப் பிறந்த பண்பாட்டு ஒடுக்குமுறையினையும் மட்டுமே கணக்கில் கொள்கின்றனர்.

தமிழ்நாட்டில் பார்ப்பனர் வருகைக்கு முன்னர் ‘சடங்குத் தலைமை’ ஏற்ற சாதியார் சிலர் இருந்தனர். பார்ப்பனரைப் போலச் சமூகத் தலைமையை அவர்கள் கைப்பற்றிக் கொள்ளவுமில்லை; அரசர்கள் அவர்களுக்கு ஆதரவு அளிக்கவுமில்லை. மாறாக, சடங்கு செய்யும் சாதியாருக்குத் தாங்கள் சமூகப் படிநிலையில் கீழ்ப்பட்டவர்களாகவே இருந்தார்கள். இவர்களைப் புரோகிதர்கள் என்று கூற முடியாது. சடங்குத் தலைமை ஏற்ற ‘குருமார்கள்' என்று வேண்டுமானால் குறிப்பிடலாம்.

பார்ப்பனர் அளவுக்குத் தமிழ்க் குருமார் சாதிகள் இங்குச் சமூக மரியாதை பெறவில்லை என்றாலும் அவர்களது நேற்றைய வாழ்வின் தொல்லெச்சங்களைச் சடங்குகளில் இன்றும் காண முடிகிறது. மருத்துவர் (நாவிதர், குடிமகன்), வண்ணார், வள்ளுவர், வேளார் (மட்பாண்டம் செய்வோர்), தமிழ்ப் பண்டாரம் (நந்தவனம் வைத்துப் பூத்தொடுப்பவர்), பறையர் ஆகிய சாதிகளைக் குருமார் சாதிகளாகக் குறிப்பிடலாம்.

சிறுதெய்வக் கோயில்களிலும், சமாதிக் கோயில்களிலும் மேற்குறிப்பிட்ட சாதியாரே இன்றுவரை பூசாரியாக இருந்து வருகின்றனர். இவருள் பண்டாரம் எனப்படும் சாதியார் பழனி, ராமேசுவரம்போன்ற பெருங்கோயில்களில் பூசாரிகளாக இருந்திருக்கின்றனர் என்பதற்குச் சான்றுகள் கிடைக்கின்றன. நாயக்கர் ஆட்சிக்காலத்தின் கடைசிப் பகுதியில் இவர்களது உரிமை பறிக்கப்பட்டு அது பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதுபோலவே மேற்குறித்த சாதியார் அங்கங்கே சில சாதியாருக்குத் திருமணச் சடங்கு செய்து வைத்துள்ளனர். அந்த உரிமையும் காலப்போக்கில் பார்ப்பனர்களால் பறிக்கப்பட்டிருக்கின்றது.

கட்டுரையாளர் நெல்லை மாவட்டத்தில் கள ஆய்வு செய்தபோது பிற்படுத்தப்பட்ட சாதி ஒன்றின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கிழக்கு நோக்கிய சிறிய மணமேடையும், மணமக்களோடு பார்ப்பனப் புரோகிதரும், அவருக்கு எதிர்ப்புறமாகச் சாதித் தலைவரும் (அம்பலம்) அமர்ந்திருந்தனர். அம்பலக்காரர் பக்கத்தில் மணமேடையின் பந்தற்காலை வலது கையில் பிடித்துக்கொண்டு, தலையிலே தலைப்பாகையுடன் ஊர்க்குடிமகன் (அந்த சாதிக்குரிய நாவிதர்) சடங்கு முடியும் வரை சபையினை நோக்கி நின்று கொண்டிருந்தார்.

திருமணம் முடிந்த மறுநாள் காலையில் மணமேடையில் மணமக்களுக்குக் 'காப்பு அறுக்கும்’ சடங்கு நடைபெற்றது. மணமேடையில் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு நெல் நிறைநாழி வெற்றிலை பாக்கு, சந்தனம் ஆகியவை வைக்கப்பட்டிருந்தன. முதல் நாள் பார்ப்பனப் புரோகிதர் அமர்ந்திருந்த இடத்தில் குடிமகன் அமர்ந்துகொண்டார். அவர் தலைமையில் மண மக்கள் சில சடங்குகளைச் செய்தனர். மணமகன் கையில் அவர் கொடுக்கும் குழந்தைப் பொம்மையை, அவன் மணமகள் கையில் கொடுத்தான். அதன் பின்னர் மணமக்களுக்குத் திருமண நாளில் பார்ப்பனப் புரோகிதர் கட்டிய காப்புக் கயிற்றை அறுத்தார். பின்னர் தனக்குரிய மரியாதைகளுடன் காணிக்கை பெற்றுக்கொண்டார்.

மணமேடையில் ஏறிக் காப்பறுக்கும் உரிமைபெற்ற குடிமகனே ஒரு காலத்தில் காப்புக் கட்டும் உரிமையினையும் பெற்றிருக்க வேண்டும் என்பதை இந்தச் சடங்கிலிருந்து அறியலாம். காப்புக் கட்டும் உரிமையினைப் பார்ப்பனர்களிடம் இழந்துவிட்டு, காப்பினை அறுக்கும் உரிமையினை மட்டும் அவரது சாதி தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. அதன் விளைவாகவே திருமணம் நடைபெறும் பொழுது பந்தற்காலைப் பிடித்துக்கொண்டு முன்னிலை வகிக்கும் உரிமை அவருக்குத் தரப்பட்டுள்ளது. "குடிமகன் பந்தக்காலைப் பிடிக்காமல் திருமணம் நடைபெறாது' என்று ஒரு தகவலாளி குறிப்பிடுகிறார். மேற்குறிப்பிட்ட சாதியாரின் இழவுச் சடங்குகளையும் குடிமகனே நடத்திவைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

இதைப்போன்றே வேறு சில சாதிகட்குப் பண்டாரமும், வள்ளுவரும், வேளாரும், பறையரும் சடங்கில் தலைமை ஏற்கின்றனர் என்பது கள ஆய்விலிருந்து தெரியவருகிறது.

இசுலாமியப் பாணர்

ஒல்லியான உருவம். முழங்காலுக்குக் கீழே தொங்கும் வெள்ளை ஜிப்பா. வேட்டிக்குப் பதிலாகக் ‘கைலி’ எனப்படும் 'சாரம்', முக்கோண வடிவில் மடித்து இரண்டு தோளிலுமாகத் தொங்கும் துண்டு. தலையிலே பெரிய பச்சைத் தலைப்பாகை. கழுத்தில் நெல்லிக்காய் அளவிலான மணிகள் கோத்த குறுமத்தங்காய் மாலை (பெரும்பாலும் இசுலாமிய மூதாட்டிகள் அதனை அணிந்திருப்பார்கள்), சின்ன தாடி, கையிலே 'டேப்' என்னும் இசைக் கருவி. தோளிலே அரிசி வாங்குவதற்கு ஒரு ஜோல்னா பை. காலிலே செருப்பு கிடையாது. டேப்பைக் காதுக்கு நேராக உயர்த்தி அடித்துக்கொண்டு பாட்டு. பெரும்பாலும் ‘வரவேணும் எனதாசை மகமூதரே அல்லது 'நம்பினதற்குக் குணங்குடியான் செய்த ஞாயத்தை என்ன சொல்வேன்.'

சின்ன வயதில் கேட்ட அந்தப் பாட்டுகளின் முடிவுகள் மட்டும் இன்னும் நினைவிலிருக்கின்றன. 'டேப்பை' அடிக்கும் பொழுதைவிட முத்தாய்ப்பு வைத்து நிறுத்தும்போது கேட்கிற ஒலி சின்னவயதில் நிரம்பக் கவர்ச்சியாக இருக்கும். வீட்டுப் பெண்கள் இவரை 'பக்கிரிசா' என்பார்கள். இசுலாமியர் அல்லாதார் வீட்டுக்கும் வந்து அரிசி வாங்கிப்போவதுதான் இவரது தனிச் சிறப்பு. கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டளவில் பாக்தாத் நகரத்தில் தோன்றிய ஃபகீர் ஷா மரபு தென் தமிழ்நாட்டின் கடைக்கோடிவரை எட்டிப் பார்த்திருக்கிறது. இறைவன் புகழையும் இறைத்தூதராகிய முகம்மது நபியின் புகழையும் இறையடியார்களின் வாழ்க்கைக் கதைகளையும் பாடுவதற்கென்றே தம் பிறவியினை நேர்ந்து கொண்டவர்கள் இவர்கள். இவர்களிலே ஐந்து பிரிவினர் உண்டென்றும், 'ரிப்பாய்’ என்ற பிரிவினர் மட்டுமே தமிழகத்தில் உள்ளனர் என்றும் இசுலாமிய அறிஞர்கள் கூறுகின்றனர். ஏனென்றால், வடநாட்டில் பெருக வழங்குவது ‘ஷியா' முசுலிம் பிரிவு. தமிழ்நாட்டில் உருது மொழி பேசும் சிறு பிரிவினரைத் தவிர ஏனையோரெல்லாம் 'சன்னி' பிரிவைச் சேர்ந்தவர்.

கள ஆய்விலிருந்து இவர்களைப் பற்றிச் சில செய்திகளைத் திரட்ட முடிந்தது. எளிய குடும்பங்களிலிருந்தே பெரும்பாலும் பக்கிரிசாக்கள் வருகின்றனர். எல்லோரும் பக்கிரிசா ஆக முடியாது. அதற்கென்று தனியே சடங்கு உண்டு. மதுரையை அடுத்த மேலக்கால் (பல்கலைக் கழக வளாகத்துக்கு மேற்கே உள்ளது) கணவாயில் உள்ள தர்காவில் இச்சடங்கு நடத்தப்படுகின்றது. இச்சடங்கு 'முரீஅத்' எனப்படும். அங்கு இது போன்ற துறவிகளின் தலைவரான ‘உஸ்தாத்' ஒருவரும் அவருக்கு அமைச்சரைப்போல் ‘குத்பால்' என்று ஒருவரும் பணியாளர் ஒருவரும் இருக்கின்றனர். சற்றே மறைவாகச் செய்யப்படுகிறது இச்சடங்கு. பக்கிரிசா ஆக விரும்புகிறவர்.
தன்னுடைய உடம்பில் உள்ள அவ்வளவு மயிரையும் களைந்துவிட்டு உஸ்தாத் முன் அமர்கிறார். தலைவர் ஒரு இரும்புக் கம்பியில் பாலைத் தொட்டு பக்கீர் ஆக விரும்புகிறவர் முதுகிலே 'ஹலம்' என்ற அரபு எழுத்தை எழுதுகிறார். பின்னர், கொஞ்சம் பாலையும் பழத்தையும் தான் சாப்பிட்டுவிட்டு முன் அமர்ந்திருப்பவருக்குப் புகட்டுகிறார். பிறகு, பால், சருக்கரை, எலுமிச்சை மூன்றும் கலந்த கலவையை இசுலாமிய வேத மந்திரங்களை ஓதிக் கொண்டே சிறுகச் சிறுகப் பக்கீராக இருப்பவரின் வாயில் ஊட்டுகிறார். சடங்கு இவ்வளவுதான். இதன் பின்னர் பக்கீராக இருப்பவர் நாற்பது நாள் பிறர் கண்ணில் படாதவாறு விதவையான முசுலிம் பெண்களைப்போல் 'இத்தா' ருக்க வேண்டும். இறந்தவருக்குச் செய்யப்படுவதுபோல மூன்றாம் நாள் சடங்கும் நாற்பதாம் நாள் சடங்கும் அவருக்கும் செய்யப்படுகின்றன.

இதன் பின்னர் அவர் ‘தாயிரா' என்ற டேப்பைக் கையில் பிடித்துக்கொண்டு,பச்சைத் தலைப்பாகை, தோளில் பையோடு இறைவன் புகழையும் இசுலாமிய வரலாற்றுக் கதைகளையும் பாடிக்கொண்டு வீடு வீடாக அரிசியோ பணமோ காணிக்கையாகப் பெறுகின்றார். வாசலில் வந்து நின்று இவர்கள் பிச்சை யென்று கேட்பதில்லை. 'தாயிரா' ஓசை கேட்டவுடன் பெண்கள் அரிசியுடன் வாசலுக்கு வருகின்றனர். நோயுற்ற குழந்தைகளுக்கு மந்திரம் சொல்லி ஜோல்னா பையில் வைத்திருக்கும் மயிலிறகைக் கொண்டு அவர்கள் முகத்தை வருடுவர். அதனால் குழந்தைகளைப் பிடித்துள்ள தோஷம் நீங்கும் என்பது இசுலாமியப் பெண்களின் நம்பிக்கை. (இசுலாமியரல்லாத வீட்டுப் பெண்கள் சருக்கரைப் பொடியோடு பள்ளி வாசலுக்குச் சென்று ‘பாத்தியா' (பாத்திஹா) ஓதச்சொல்லி தண்ணீர் எறிவது மரபு. அவர்கள் பக்கிரிசாவிடம் இதைச் செய்வதில்லை.)

பக்கிரிசாக்கள் பாடும் பாட்டு பெரும்பாலும் குணங்குடி மஸ்தான் பாடல்களாகவோ, தக்கலை பீர்முகம்மது வாப்பா பாடல்களாகவோ இருகின்றன. கள் ஆய்விலிருந்து அவர்கள் பாடும் கதைப் பாடல்களின் பகுதிகள் ‘சைத்தூன் கிஸ்ஸா' எனப்படும் கதைப்பாடலிலிருந்து எடுக்கப்பட்டவை என்று தெரிகிறது. இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்களில் ‘கிஸ்ஸா'க்களும் (கதைகள்), 'முனாஜாத்'களும் (வாழ்க்கை வரலாற்றுப் பாடல்கள்) நிறைய இருக்கின்றன.

மத அடிப்படைவாதம் பெருகிவரும் இந்நாளில் பக்கிரி சாக்களைப் புரப்பவர்கள் இல்லை. அதன் விளைவாக இந்த இசுலாமியத் தமிழ்ப் பாணர் மரபு அழிந்து வருகின்றது.

இந்தச் சடங்கின் பொருள் என்ன? பக்கீர் ஆகின்றவர் மயிர்களையும் சடங்கின்மூலம் தன்னுடைய பழம் பிறப்பை இழந்தவராகிறார். இழந்துபோன பிறப்பிற்காக முசுலிம் விதவைப் பெண்களைப்போல நாற்பது நாள் ஆண்கள் கண்களில் படாதவாறு 'இத்தா' இருக்கின்றார். இறந்தவரின் ஆன்ம ஈடேற்றத்திற்காகச் செய்யப்படும் மூன்றாம் நாள் தொழுகையும் (கத்தம்) நாற்பதாம் நாள் தொழுகையும் நடத்தப்படுகின்றன. நாற்பது நாள் முடிந்ததும் அவர் பக்கீராகப் ‘புதுப்பிறப்பு' எடுக்கிறார். புதுப்பிறப்பின் அடையாளமாக அவருக்குப் பச்சைத் தலைப்பாகையும் குறுமத்தங்காய் மாலையும் தரப்படுகின்றன. அவருடைய முதுகில் முத்திரையிடப்படுகிறது. முதுகில் முத்திரை என்பது இசுலாமிய சமயத்தில் புனிதமானதாகும். ஏனென்றால் இறுதித் தூதராகிய முகம்மது நபி அவர்களுக்கு முதுகிலிருந்த பெரிய மச்சத்தை இறைவன், தூதர்க்காக இட்டு அனுப்பிய முத்திரை என்றே இசுலாமியர் நம்புகின்றனர்.

வடநாட்டுப் பக்கீர்களிடத்திலே அவரைக் காட்டும் அடையாளங்களாக பக்கீர்களின் கண்டாமணி உள்பட எட்டுவகைப் பொருள்களில் ஏதேனும் ஒன்று தரப்படுமாம். தமிழ்நாட்டுப் குறுமத்தங்காய் மாலை ஐம்பதாண்டுகளுக்கு அணிந்ததாகும். முன்புவரை இசுலாமியப் பெண்கள் அப்படியென்றால் பக்கீர்கள் பெண் பிறப்பு அடைந்து விட்டனரா? இந்தக் கேள்விக்கான விடையை இசுலாமிய மரபுகளில் தேட இயலவில்லை. மேலும் மறுபிறப்புக் கோட்பாட்டை சுலாமிய இறையியல் ஏற்றுக்கொள்வதில்லை.

தென்னிந்தியப் பக்தி இயக்க மரபு நாயகி பாவனை என்ற ஒன்றை உருவாக்கியது. இறைவன் ஒருவனே ஆண் என்றும், மனித உயிர்கள் எல்லாம் பெண் என்றும் இந்த மரபு கூறும். மரபுவழிக் கற்புக் கோட்பாட்டின்படி கணவனுக்காகவே உயிர்வாழும் பத்தினியைப் போல இறைவனின் புகழ்பாடுவதற்கே உருவானவர்கள் நாயகிபாவ அடியார்கள். இந்தியாவில் எல்லா மொழிகளிலும் கவிதைகளையும் பாட்டினையும் வளர்த்ததில் நாயகி பாவனைக்குப் பெரும் பங்கு உண்டு. இறைவனிடம் மனிதன் அறிவு நிலையில் ஆணாக நின்று பேசுகின்றான்; அன்பு நிலையில் பெண்ணாக நின்று பேசுகிறான் என்று தமிழ் வைணவம் கூறும்.

பக்கீர்சா தொடர்பான சடங்கும் வாழ்வியலும் தென்னிந்திய நாயகி பாவனையின் செல்வாக்கால் எழுந்தனவாக இருக்கலாம்.