அறியப்படாத தமிழகம்/பல்லாங்குழி
4. பல்லாங்குழி
கவனித்திருக்கிறீர்களா? இந்தச் சொல்லில் பொழுதுபோக்கு என்ற பொருள் எங்காவது தொனிக்கிறதா? பொழுதுபோக்கு, பொருளற்றது, ஆழமில்லாதது என்ற பொருளிலேயே அந்தச் சொல்லை நாம் இப்போது பயன்படுத்தி வருகிறோம். ஆனால் மனிதகுல வரலாறு நமக்கு அப்படிச் சொல்லவில்லை. சமூகம் என்ற ஒன்று தான் உருவாக்கும் அல்லது தன் மீது கவியும் ஒரு கருத்தியலையே விளையாட்டுக்களின் வழியே வெளிப்படுத்துகின்றது.
தமிழ்நாட்டு விளையாட்டுக்களைப் பற்றிக் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம். குற்றுயிரும் குலையுயிருமாக நம்மிடம் இன்னும் மிஞ்சியிருக்கும் கோலியாட்டம், பாண்டியாட்டம், ஆடு புலி ஆட்டம், பல்லாங்குழி ஆகியவற்றின் தோற்றம் பற்றியெல்லாம் நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். எடுத்துக்காட்டாக இங்கு,‘பல்லாங்குழி’ ஆட்டத்தைப் பார்க்கலாம்.
பல்லாங்குழி ஆட்டம் பொதுவாகப் பெண்களால் ஆடப்படுவது. முதற் பூப்படைந்த பெண்ணின் தீட்டுக் குரிய காலத்திலும் கருவுற்ற பெண்கள் அமர்ந்து பொழுது போக்குவதற்கும் மட்டுமே இந்த விளையாட்டை இப்பொழுது ஆடிப்பார்க்கிறார்கள். நமது பண்பாட்டு மரபினில் பெண்ணுக்குரிய சீர்வரிசைப் பொருள்களில் பல்லாங்குழியும் இடம் பெறுகிறது. பல்லாங்குழி ஆட்டம் பற்றி அறிஞர் தேவநேயப் பாவாணர் 'தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்’ என்ற தம் நூலில் முதன்முதலாக எழுதினார். பின்னர் பேராசிரியர் தாயம்மாள் அறவாணன் ‘பல்லாங்குழி (திராவிட ஆப்பிரிக்க ஒப்பீடு)’ என்ற விரிவான நூலை எழுதியுள்ளார். உலகெங்கிலும் பல்லாங்குழி ஆட்டம் சிற்சில மாறுதல்களுடன் பழங்குடிகளிடம் விளங்கி வருவதை இந்த நூல் காட்டுகின்றது.
பல்லாங்குழி ஆட்டத்தினுடைய வகைகளாக நான்கினைக் குறிப்பிடுகிறார் பாவாணர். தாயம்மாள் அறவாணன் பல்லாங்குழி ஆட்டத்தின் எட்டு வகைகளைக் குறிப்பிட்டு அவற்றின் வேற்றுப் பெயர்கள், குழிகளின் எண்ணிக்கை, ஒரு குழிக் காய்களின் எண்ணிக்கை மற்றும் அவ்வகைகள் ஆடப்படும் பகுதிகள் என விரிவான அட்டவணை தந்துள்ளார். தமிழ்நாடு முழுதும் கள ஆய்வு செய்து எழுதப்பட்ட நூல் இது.
பேராசிரியர்கள் இருவரும் தரும் களஆய்வுச் செய்திகளிலிருந்தும் நம்முடைய பட்டறிவிலிருந்தும் பல்லாங்குழி ஆட்டத்தின் அடிக்கூறுகளைப் பின்வருமாறு வரையறை செய்துகொள்ள முடியும்.
• இருவர் ஆடும் பல்லாங்குழி ஆட்டத்தில் (பக்க எல்லைக் குழியாக இருந்தால் வலதுகைப்பக்க குழியையும் சேர்த்து) குழிக்கு ஐந்து காய்களாக ஆளுக்கு ஏழு குழிகளாகத் துல்லியமான சமத் தன்மையுடன் ஆட்டம் தொடங்குகிறது.
• தன்னுடைய காய்களை எடுத்து முதல் ஆள் ஆட்டம் தொடங்குகிறபொழுது முதன்முறையாகச் சமத்தன்மை குலைகின்றது.
• எடுத்தாடுபவர் குழியில் காய்கள் தற்காலிக இழப்புக்கு உள்ளாகின்றன.
• சுற்றிக் காய்களை இட்டுவந்து ஒரு வெற்றுக்குழி (இன்மை அல்லது இழப்பு)யினைத் துடைத்துவிட்டு அதற்கடுத்த குழியினை எடுக்கும்பொழுது முதலில் இட்ட ஐந்து காய்களுக்குப் பதிலாக நிறைய காய்கள் (பெருஞ்செல்வம்) ஆடுபவருக்குக் கிடைக்கின்றன; அல்லது குறைந்த காய்களையுடைய குழி கிடைக்கிறது. சில நேரங்களில் துடைத்த குழிக்கு அடுத்த குழி வெற்றுக் குழியாக இருந்தால் ஒன்றுமே கிடைக்காமல் போய்விடுகின்றது.
• ஆட்டத்தில் மற்றும் ஒரு இடைநிகழ்வும் ஏற்படுகின்றது. ஒரு வெற்றுக் குழியில் ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு காயினை இட்டு வரும்போது அது நாலாகப் பெருகிய உடன் அதனைப் 'பசு' என்ற பெயரில் அந்தக் குழிக்குரியவர் எடுத்துக் கொள்கிறார்.
• இதன் விளைவாக, ஆட்டத் தொடக்கத்தில் இருந்த ஐந்து காய்கள் (தொடக்க நேரத்து சமத்தன்மை அல்லது முழுமை) மீண்டும் ஒரு குழிக்கும் ஒருபோதும் திரும்பக் கிட்டுவதே இல்லை.• காய்களை இழந்தவர் (காட்டாக 15 காய்கள் குறைவாகக் கிடைத்தன என்றால்) தன்னுடைய பகுதியில் மூன்று குழிகளைக் காலியாக (தக்கம்) விட்டுவிட்டு ஆட்டத்தைத் தொடர வேண்டும். அந்தக் குழியில் எதிரி (வென்றவர்) சுற்றி வரும்போது காய்களைப் போடமாட்டார். சில இடங்களில் தோற்றவரும் போடமாட்டார். இப்போது தோற்றவருடைய குழி இழப்புக்கு ஒரு நிரந்தரத்தன்மை ஏற்படுகிறது.
• ஆட்ட இறுதியில் ஒருவர் தோற்றுப்போகிறபோது அவர் கையில் எஞ்சியிருக்கிற காய்கள் ஒரு குழிக்குரிய ஐந்துகூட இல்லாமல் நாலாக இருந்தால் குழிக்கு ஒவ்வொரு காயினை இட்டு ஆட்டம் தொடர்கிறது. இதற்குக் கஞ்சி காய்ச்சுதல் என்று பெயர். கஞ்சி என்ற சொல் வறுமையினை உணர்த்தும் குறியீடாகும்.
• தோற்றவர் ஒரு காய்கூட இல்லாமல் தோற்கின்ற போதே ஆட்டம் முற்றுப்பெறுகிறது.
சமத்தன்மை நிலவிவரும் பழைய சமூகத்தில் ஆட்டத்தின் (அல்லது சூதின்) பெயரால் சமத்தன்மை குலைக்கப்பட்டு ஒருவனது செல்வம் அடுத்தவன் கைக்கு நேரடி வன்முறை இல்லாமல் எளிமையாகப் போய்ச்சேர்ந்துவிடுகிறது; தோற்றவனின் இழப்பு நிரந்தரமாக்கப்படுகிறது. மறுபுறமாகச் சேர்ந்த இடத்தில் செல்வமும் நிரந்தரமாக்கப்படுகிறது. புராதனப் பொதுவுடைமைச் சமூகம் சாய்ந்து தனிச் சொத்துரிமைக்கான உணர்வுகள் அரும்புகின்ற போதே பொருளியல் சார்ந்த ஏற்றத் தாழ்வுகள் (மேடு பள்ளங்கள்) உருவாகின்றன. சிறிய அளவிலான உற்பத்தி அல்லது சிறிய அளவிலான நிலப்பகுதி வாழ்க்கையில் பள்ளத்து மண் மேட்டினை உருவாக்குகிறது. ஓரிடத்தில் குவிகின்ற செல்வம் மற்றொரு இடத்திலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டதே. பறிப்பதும் பிடுங்குவதுமான நேரிடையான வன்முறை இங்கே நிகழவில்லை. ஆனால் தோற்றவனும் தன் தோல்விக்கான காரணமாக எதிரியின் திறமையினை மட்டும் இங்கே கருதவில்லை. அதற்கும் மேலான ஏதோ ஒன்டரி (தன்னுடைய கெட்ட நேரம், தன்னுடைய தலை விதி, தனக்கு நல் ஊழ் இல்லாமை) காரணமாகத் தனக்கு இத்தோல்வி அமைந்தது என்று நினைக்கிறான்; அதனை ஏற்றுக்கொள்கிறான்.
புராதனப் பொதுவுடைமைச் சமூகத்தில் வாழ்ந்திருந்த, 'ஊழ்' அல்லது ‘முறை' என்னும் பங்கீட்டுத் தெய்வம் இந்த உணர்வின் காரணமாகவே சரிந்து விழுந்து மறைந்து போய் விடுகிறது.
அரசுகளின் வளர்ச்சியில் அடுத்த கட்டமாக அதிகார மையத்தில் உள்ளோர் ஆடும் ஆட்டம் ‘சூது' ஆகும். அரசு என்னும் நிறுவனத்தின் வளர்ச்சிப் போக்கில் சூது ஒரு பொருள் மிகுந்த இடத்தினைப் பெறுகிறது. எனவேதான் அந்த ஆட்டம் அரசர்களுக்கும் இளவரசர்களுக்கும் விலக்கப்படாமலிருந்தது. தருமரும் நளனும் சூதாடித் தோற்ற கதையினை இங்கே நினைத்துக்கொள்ளலாம். தருமன் சூதாடிய நிகழ்ச்சியை விவரிக்கும் வில்லிபாரதம் அப்பகுதிக்குச் சூது போர்ச் சருக்கம் என்றே பெயர் தருகிறது. அதாவது அதிகார மையங்கள் உருவாகும் போது போருக்குரிய மதிப்பினைச் சூதாட்டம் பெற்றிருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று எனலாம்.
செல்வமோ வறுமையோ வந்து சேர்வதற்குரிய காரணமாக மனிதனை மீறிய ஒரு சக்தி உள்ளது என்னும் கருத்தும் உணர்வும் இப்படித்தான் மனித மனங்களில் படிப்படியாக உருவாகத் தொடங்கின. தனிச்சொத்துரிமையின் தோற்றத்தினை மனித மனம் ஏற்றுக்கொண்டது.
வேதகாலத் தொன்மங்களைப் பற்றி எழுதும் நரேந்திரநாத் பட்டாச்சார்யா, ரிக்வேதத்தில் ‘அக்ஸசூக்தம்' எனும் பகுதியில் பேசப்படும் 'அக்ஸ' என்னும் தெய்வத்தினைச் சூதாட்டத்தின் கடவுளாகக் காண்கிறார். ரிக்வேத காலப் பங்கீட்டுத் தெய்வமான ‘ரித' எனும் தெய்வத்திடம் ‘அக்ஸ' தன் பத்து விரல்களையும் விரித்து நீட்டிக்காட்டிப் பேசியதாக வரும் ஒரு குறிப்பினையும் சுட்டுகிறார். ராஜசூய யாகத்தில் ஒரு பகுதியாக அரசன் சூதாடும் செய்தியும் ரிக்வேதத்தில் பேசப்பட்டுள்ளது.நிலம்,நீர், கால்நடைகள், உணவு என எல்லாவற்றையும் பொதுவாகக் கொண்டிருந்த சமூகத்தில் தனி உடைமை உணர்வு அரும்புகிற போது அம்மக்கள் கால்நடைகளையே பண்டமாற்றுப் பொருளாகவும், பிறபொருள்களின் மதிப்பை அளக்கும் கருவியாகவும், ஆட்டத்தில் பணயப் பொருளாகவும் பயன்படுத்தியிருக்க வேண்டும். எனவேதான் உலகில் தமிழ் உட்படப் பல பழைய மொழிகளில் செல்வத்தைக் குறிக்கும் சொல்லாக 'மாடு' இருந்திருக்கிறது.
பல்லாங்குழி ஆட்டத்திலும் ஆடாமலே கிடைக்கும் செல்வமான நான்கு காய்களுக்குப் பசு என்ற பெயர் இப்படியே வந்திருக்க வேண்டும்.
பல்லாங்குழி ஆட்டக் கூறுபாடுகளிலிருந்தும் சூதாட்டத்துக்குப் பழைய அரசு இயந்திரம் கொடுத்த புரிந்துகொள்ளும் செய்தி இதுதான்:
தனி உடைமை உணர்வினையும் தனிச்சொத்தின் வளர்ச்சியினையும் அதன் மறுவிளைவாகப் பிறந்த வறுமையினையும் பண்பாட்டு ரீதியாக நியாயப்படுத்தும் வெளிப்பாடே பல்லாங்குழி ஆட்டம். இந்த நியாய உணர்ச்சி மனித மனங்களில் திணிக்கப்பட்ட பிறகு தனிச் சொத்துரிமையின் வளர்ச்சி தங்குதடையற்ற மிகப்பெரிய வேகத்தினைப் பெற்றிருக்கவேண்டும்.
எல்லா வகையான விளையாட்டுகளையும் இவ்வகையாக நம்மால் பார்க்க இயலும்.
மூன்று புலிகளும் 21 ஆடுகளும் கொண்ட ஆடு புலி ஆட்டம் கால்நடை வளர்ப்புச் சமூகத்திலிருந்து பிறந்த ஆட்டமாக இருக்க வேண்டும். புலி திரியும் காடுகளில் ஆடுகளைக் காப்பாற்ற முற்பட்டவனின் முயற்சி இது. அரசு இயந்திரம் மிகப்பெரிய வளர்ச்சியினைப் பெற்ற பிறகு பிறந்த மற்றொரு ஆட்டம் சதுரங்கம். அரசன், மத குரு,குதிரைவீரன், யானை எனப் போர்ப் பயிற்சிக்கான விளையாட்டாக அது ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது. தமிழ்நாட்டு மன்னர்களும் இதனை ஆடியிருக்கிறார்கள்.
‘ராஜாக்கள் ஆனைக்கொப்பு ஆடுவாரைப்போல' என்கிறது திருவாய்மொழியின் நம்பிள்ளை ஈட்டு உரை. சதுரங்கம் என்பதனை ஆனைக்கொப்பு என்ற சொல்லால் அக்காலத் தமிழ் மக்கள் வழங்கியிருக்கிறார்கள் என்பதும் தெரிய வருகிறது. சதுரங்கத்தின் மாற்று வடிவமாகக் காணப்பெறும் வேறுசில ஆட்டங்களும் உள்ளன. தாய விளையாட்டும் பரமபத சோபானப் பட விளையாட்டும் அவற்றில் குறிப்பிடத்தகுந்தன. தாயம் என்ற சொல்லுக்குத் தமிழில் சொத்துரிமை என்றுதான் பொருள். இந்த இரண்டு ஆட்டங்களிலும் ஆடுபவனது வலிமை என்பது தாயக் கட்டை (கவறாடுகருவி, வட்டு, பகடைக்காய்) அவனுக்குத் தருகின்ற வலிமைதான்.
அரிக்கமேடு, உறையூர், அழகன்குளம், படைவீடு ஆகிய இடங்களில் நடந்த அகழ்வாய்வுகளில், பக்கங்களில் புள்ளி எண் நீள்செவ்வக வடிவத்தில் அமைந்த தாயக்கட்டைகள் கிடைத்துள்ளன. இவை சுடுமண்ணாலும் அரிய வகைக் கற்களாலும் ஆக்கப்பட்டவை. மதுரை, திருநெல்வேலிப் பகுதிகளில் வெண்கலத்தினாலான நீள்செவ்வக வடிவத்தில் அமைந்த தாயக் கட்டைகள் இன்றும் கிடைக்கின்றன.
தனிச்சொத்துரிமையின் நியாயப்பாட்டை மனித மனங்களில் பதித்து வளர்த்ததில் சூதாட்டத்திற்கும், சூதாடு கருவிகளுக்கும் கணிசமான பங்கு உண்டு. நரேந்திரநாத் பட்டாச் சார்யா தம் நூல் ஒன்றில், 'அரசனும் சூதாடு கருவியும்' என்ற இயலில் இது குறித்து விவாதித்துள்ளார். சமூக உருவாக்கம் மற்றும் மாற்றம் பற்றிச் சிந்திப்பவர்கள் விளையாட்டுக்களின் பங்கினைக் கூர்மையாக மதிப்பிட்டு அறியவேண்டும்.
சூதாட்டத்துக்கும் விளையாட்டுக்கும் தொடர்பு உண்டு என்பதை நிகழ்கால உலக அரசியலிலும் காணலாம். பன்னாட்டு வணிக நிறுவனங்கள் கவர்ச்சிகரமான பரிசுத் தொகைகளின் மூலம் விளையாட்டு வீரர்களையும் தடகள வீரர்களையும் சூதாட்ட உணர்வுடையவர்களாக மாற்றியிருக்கின்றன.
‘வெல்வதற்காக அல்ல விளையாடுவதற்காகவே விளையாட்டு’ என்ற ஒலிம்பிக் குறிக்கோள் எளிதாக முறியடிக்கப் பட்டுவிட்டது. பழைய ரோமானிய ‘கிளாடியேட்டர்கள்’ எனப்பட்ட மனித சண்டைக் கடாக்கள் விளையாட்டின் பேரால் மீண்டும் உருவாக்கப்படுவதுதான் கவலையினைத் தருகிறது.
தவிடும் தத்தும்
மகப்பேறு இல்லாமை வாழ்க்கையில் ஒருவர்க்கு ஏற்பட்ட குறைபாடு என்ற கருத்து உலகில் எல்லாச் சமூகங்களிலும் உள்ளது. மகப்பேறு என்பது கடவுளால் அருளப்படுவது என்பது பழைய சமூகங்களில் பிறந்த நம்பிக்கையாகும். விஞ்ஞான உணர்வும் விஞ்ஞானக் கல்வியும் வளர்ந்திருக்கிற இன்றும் இந்த நம்பிக்கை மக்கள் மனத்தில் வேர்கொண்டு இருக்கிறது. இன்றைய சூழ்நிலையில், ‘கடவுள் அருளுவது மகப்பேறு’ என்ற பழைய நம்பிக்கை எதிர்மறையாகவே உயிர் வாழ்கிறது. அதாவது, ‘கடவுளின் அருள் கிடைக்காததனால் மகப்பேறு இல்லை’ என்ற நம்பிக்கையே அதிகமாக இருக்கிறது. உலகத்தின் பழைய சமூகங்கள் இந்த மனக்குறையை எவ்வாறு நிறைவு செய்து கொண்டன என்பதை அறிய நமக்குச் சான்றுகள் கிடைக்கவில்லை.
குடும்பமும் தனிச் சொத்துரிமையும் வளர்ந்துவிட்ட காலச் சூழலில் மகப்பேறின்மை மட்டும் வாழ்க்கையின் குறையாகக் கருதப்படவில்லை. சொத்துக்குரிய ஆண்பிள்ளை இல்லாததும் வாழ்க்கையின் குறையாகக் கருதப்பட்டது.
தமிழ்ச் சமூகத்தில் மகப்பேறு இல்லாதவர்கள் நிறைய பிள்ளைகளைப் பெற்றிருக்கிற உறவினர்களிடமிருந்து ஒரு பிள்ளையை – பெரும்பாலும் ஆண்பிள்ளைகளில் ஒருவரை – ‘தவிட்டு விலைக்கு’ வாங்கியிருக்கின்றனர்.
குடும்பம் எவ்வளவு வறுமையுற்றிருந்தாலும் பெற்றோர் யாரும் பிள்ளைகளை விற்க முன்வர மாட்டார்கள். பிள்ளையை இரவலாகக் கொடுத்தால், கொடுத்தவன் கொடுத்த பொருளை எந்த நேரமும் திரும்பக் கேட்டுப் பெறும் உரிமை அவனுக்கு உள்ளது. 'விற்ற பொருளுக்கு விலையில்லை' என்பது ஒரு சொல்லடை. அதாவது, பொருளை விற்றவன் அந்தப் பொருளின் மீது, மீண்டும் விலைக்கு வாங்கும் உரிமையினையும் இழந்துவிடுகின்றான். எனவே, பிள்ளையைக் கொடுத்தவன் திரும்பக் கேட்காமல் இருக்கவேண்டுமென்றால் அதனை அவன் விற்றே ஆக வேண்டும். இது சமூகத்தில் எழுந்த உணர்வு ரீதியான ஒரு பண்பாட்டு நெருக்கடியாகும். இதற்குத் தீர்வு காணும் முறையில்தான் ஒரு கைப்பிடி அளவு தவிட்டை விலையாகப் பெற்றுக்கொண்டு குழந்தையை விற்றதுபோலப் பாவனை செய்திருக்கிறார்கள்.
ஒரு கைப்பிடி தவிடு என்பது மிக அற்பமான பொருளாதார மதிப்பினை உடையது. அது ஒரு மூலப்பொருள் அன்று. மூலப்பொருளாகிய நெல்லிலிருந்து கழிக்கப்பட்ட, மனிதன் உண்ணாத பொருளாகும். உப்பு, வெற்றிலை போன்ற பொருள்கள் தொல் பழைய நம்பிக்கை சார்ந்த பொருள்கள். உப்பு நன்றியுணர்வைப் புலப்படுத்தும் அடையாளம். இது போன்ற தொல் பழைய நம்பிக்கை எதுவும் தவிட்டின்மீது சாரவில்லை. எனவே தவிடு குழந்தைக்கான பண்ட மாற்றுப் பொருளாகக் கருதப்படுகிறது.
தவிட்டுக்குப் பிள்ளை கொடுத்தவர்கள் தங்கள் பொருளாசையால் பிள்ளையினை விற்கவில்லை என்று மன அமைதி கொள்ளலாம். பிள்ளையை வாங்கியவரோ விலைக்கு வாங்கிய உணர்வோடு குழந்தையின் மீது உணர்வுப்பூர்வமாக முழு உரிமை கொண்டாடலாம்.
குறைந்த விலை, அடிமட்ட விலை என்பதைக் குறிக்கக் கிராமப்புறங்களில் இன்றுங்கூடத் ‘தவிட்டு விலை' என்ற தொடரைப் பயன்படுத்துகிறார்கள். இரண்டாயிரம் ரூபாய் பெறுமானமுள்ள மாட்டினை இருநூறு ரூபாய்க்குக் கேட்டால், “தவிட்டு விலைக்குக் கேட்கிறான்” என்று சொல்லும் வழக்கம் இருக்கிறது.
தவிட்டுக்குப் பிள்ளை வாங்குவதும், பிள்ளையைத் தத்து எடுப்பதும் அடிப்படையில் வேறுபட்டவை. தவிட்டுக்குப் பிள்ளை வாங்குவது குழந்தை இல்லை என்ற மனக்குறையை நிறைவு செய்ய. தத்து எடுப்பது சொத்துரிமையைத் தக்கவைக்க.
தத்தெடுக்கும் வழக்கம் பிராமணர்களிடத்தும் நகரத்தார் (நாட்டுக் கோட்டைச் செட்டியார்) சமூகத்திலும் சடங்குரீதியாகச் செய்யப்படுகிறது. இவ்விரு சமூகத்தவரும் ஆண் பிள்ளையை மட்டுமே தத்தெடுக்கின்றனர். தான் இறந்த பின்னர் தனக்கும் தன் முன்னோர்க்கும் நீத்தார் கடன் (நீர்க்கடன்) செய்ய வேண்டிய ஆண்பிள்ளைகள் இல்லாதவர்களின் ஆன்மா தாகத்தோடு அலையும் அல்லது ‘புத்' என்னும் நரகத்தில் கிடந்து உழலும் என்பது வைதீக நம்பிக்கை. இந்தக் குறையைப் போக்கும் பொருட்டும் தங்கள் சொத்துக்கு ஆண் வாரிசு தேடியும் மேற்குறித்த இரு சமூகத்தினரும் தத்து எடுக்கிறார்கள். இவ்விரு சமூகத்திலும் பிள்ளையைத் தத்துக் கொடுக்கிறவர்கள் அதற்குப் பதிலாகச் சில மரியாதைகளையும் சிறிது பணமும் பெற்றுக் கொள்கின்றார்கள்.
ஆனால் நாட்டார் மரபுகள் நீர்க்கடன் கழிக்கவும், சொத்துக்களை ஆளவும் தத்தெடுக்கின்ற மேல் சாதி மரபினை நிராகரித்தே வந்திருக்கின்றன.
பணத்துக்குப் பிள்ளை வாங்கி
பந்தியிலே விட்டாலும்
பந்தி நெறஞ்சிருமா
பாத்த சனம் ஒப்பிடுமா
காசுக்குப் புள்ள வாங்கி
கடத் தெருவே விட்டாலும்
கடத்தெரு நெறஞ்சிருமா
கண்ட சனம் ஒப்பிடுமா
என்பது தென்மாவட்டங்களில் கேட்கப்படும் ஒப்பாரியாகும்.
தவிட்டு விலையும் தத்தும் போல அல்லாமல் ‘எடுத்து வளர்த்தல்' என்னும் மற்றொரு முறையும் இருந்திருக்கிறது. அடுத்தவர் பிள்ளையினை அவரது உரிமையினை ஒத்துக் கொண்டபடியே எடுத்து வளர்ப்பது இது.
சிவப்பிராமணரான சுந்தரமூர்த்தி நாயனாரை நரசிங்க முனைய தரையர் என்னும் குறுநில மன்னர் எடுத்து வளர்த்தார் என்பது பெரிய புராணம் தரும் செய்தி. அதுபோலவே, வைணவ ஆசாரியர்களில் ஒருவரான பராசர பட்டரை, திருவரங்கத்து இறைவனான நம்பெருமாளே ‘மஞ்சள்நீர் குடிக்கச் செய்து' தம் பிள்ளையாக ஆக்கிக்கொண்டார் என்பது ஆறாயிரப்படி குருபரம்பரைப் பிரபாவம். 'மஞ்சள் நீர் குடிக்கச் செய்தல்' என்பது வளர்த்தெடுக்கும் உரிமைக்கான சிறு சடங்காக இருந்திருக்கலாம்.
துடுப்புக் குழி
தொல்பழங்காலத்தில் மனிதனுக்கு வியப்பினை அளித்த நிகழ்வுகளில் ஒன்று மனிதன் பிறக்கும் முறை. தாயின் உடலின் சிறிய துளை வழியே குழந்தை வெளிவருவதும் அதைத் தொடர்ந்து நஞ்சும் கொடியும் வெளியே வருவதும் அவனுக்கு வியப்பையும் அச்சத்தையும் விளைவித்தன. கணத்தின் வளர்ச்சிக்குச் சூல் நிறைந்த வயிறு உயிரைத் தருவதால் அது அவனுக்கு வழிபடு பொருளாயிற்று. நிறைந்த நீர்க்குடத்தையும், சூல் கொண்ட பெண் வயிற்றின் அடையாளமாகக் கருதி அவன் வழிபட்டான். குழந்தையுடன் பிறந்த நஞ்சும் கொடியும் அவனுக்கு அச்சம் தந்த வழிபடு பொருளாயின. மகப்பேற்றுச் சடங்கு ஒன்று இதன் விளைவாகப் பிறந்தது.
நஞ்சையும் கொடியையும் மந்திரப்பொருளாகக் கருதிப் பிறர் பார்வையில் படாதவாறு குழியிலிட்டு மூடிவிடுவதே இன்றும் வழக்கமாக உள்ளது.
குறைந்த வலியுடன் தாயினையும் குழந்தையினையும் உயிர் இழப்போ பிற இழப்புக்களோ இல்லாமல் பிரித்துத் தந்ததற்காகப் பெண்ணின் பிறப்புறுப்பு (யோனி) தெய்வீக அருளுடையதாகக் கருதப்படுகிறது. நஞ்சும் கொடியும் தெய்வத்தின் பிரதிநிதியாகக் கருதப்பட்டு அவற்றைப் புதைத்த இடம் தீட்டுக் காலம் முடியும்வரை வழிபடு இடமாகிறது.
குழந்தைப் பேற்றுத் தீட்டைக் கழிக்கும் நாளன்று (பெரும்பாலும் 10 அல்லது 16ஆம் நாள்) துடுப்புக்குழி போடுதல் அல்லது தொடுப்புக் குழி போடுதல் என்னும் சடங்கு நடை பெறுகிறது.
குழந்தைப்பேறு நாள் தொடங்கித் தீட்டுக் கழிக்கும் நாள் வரை பெற்றவள் யோனித் தெய்வத்தின் ஆளுகையில் இருக்கிறாள். எனவே அந்தக் காலப்பகுதி விலக்கிற்குரிய காலமாகக் கருதப்படுகிறது. தீட்டுக் கழிக்கும் சடங்கும் ஆண் விலக்கிற்கு உரியதாகக் கருதப்படுகிறது.
கிராமப்புறங்களில் பெரும்பாலும் வீட்டின் பின்புறம் உள்ள மண் தரையில் ஆழமாகக் குழிதோண்டி நஞ்சையும் கொடியையும் புதைக்கின்றனர். பின்னர் அந்த இடத்தைச் சுற்றி ஓலை அல்லது தட்டி கொண்டு வேலியிட்டு மறைக்கின்றனர். குழந்தைபெற்ற தாய் தீட்டுக் காலம் கழியும்வரை அம்மறைப்பினுள் நின்றுகொண்டு குளிக்கிறாள். அவள் குளித்த நீர் வெளியில் வராதவண்ணம் அந்தக் குழிக்குள்ளேயே இறக்கி விடப்படுகிறது.
பதினாறாம் நாள் தீட்டுக் கழிக்கும் சடங்கு குழியின் முன்னர் நடைபெறுகிறது. மூன்று இலைகளில் உணவினைக் குழியின் முன்னால் படைக்கிறார்கள். சோற்றின்மீது கருவாட்டுக் குழம்பு ஊற்றுகிறார்கள். அவித்த முட்டையும், காயமும் கருப்பட்டியும் சுக்கும் சேர்ந்த மகப்பேற்று மருந்து உருண்டையினையும் இலைகளின்மீது வைக்கிறார்கள். பின்னர் சோற்றின்மீது ஒரு சிறிய மரக்குச்சியினை ஊன்றி வைக்கிறார்கள்; செம்பு நிறையத் தண்ணீர் வைத்து, அதன்மீது உதிரிப் பூக்களைத் தூவுகிறார்கள். பிறகு சூடத்தைப் பொருத்தி ஆரத்தி காட்டி, 'துடுப்புக்குழி நாச்சியாரே! இடுப்புக் குறுக்கு நோகாம் பிள்ளையையும் தாயையும் காப்பாத்தம்மா!' என்று சொல்லிச் சாமிகும்பிடுகிறார்கள். பிறகு மூன்று இலையில் உள்ள உணவையும் குழந்தை பெற்ற தாய், தொட்டுப்பிடித்த பெண் (மகப்பேற்று நேரத்தில் உதவியவள்), மகப்பேற்றுக்கு உதவிய மருத்துவச்சி (நாவிதர் குடும்பத்துப் பெண்) ஆகிய மூவரும் சாப்பிடுகிறார்கள். சாமிகும்பிடும்போதும் அக்குழிக்கு முன் ஒரு நிமிட நேரம் குழந்தையைக் கிடத்தி எடுத்துக்கொள்கிறார்கள்.
இந்தச் சடங்கு முழுவதும் பெண்களாலேயே நடத்தப்படுகிறது. படைக்கப்பட்ட உணவினைப் பார்க்கக்கூட ஆண்களுக்கு அனுமதி இல்லை. சைவ வேளாளர் தொடங்கி பிராமணரல்லாத எல்லாச் சாதியினரிடையேயும் இச்சடங்கு நிகழ்வதைத் தென்மாவட்டங்களில் இக்கட்டுரையாளர் கண்டிருக்கிறார். சைவ வேளாளர் வீடுகளில் மட்டும் கருவாட்டுக் குழம்பிற்குப் பதிலாகக் காரக் குழம்பு என்னும் மிளகுக் குழம்பு ஊற்றப்படுகிறது.
சாமி கும்பிடும்போது, பெண்களின் வேண்டுகோள் எதிர்காலத் தன்மையுடன் இருந்தாலும் அந்தச் சடங்கு யோனித் தெய்வத்திற்கு நன்றி தெரிவிக்கும் சடங்காகவே நடைபெறுவதைக் காணலாம். பிறந்த குழந்தை இறந்துவிட்டால் இச்சடங்கு நடைபெறுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. துடுப்புக்குழி என்பது சடங்கு நடைபெறும் நாள்வரை யோனித் தெய்வம் உறையும் இடமாகக் கருதப்படுகிறது. ஊன்றப்பட்ட குச்சி ஆண்உறுப்பைக் குறியீடாகக் காட்டி நிற்கின்றது. கருவாட்டுக் குழம்பும் மகப்பேற்று மருந்தும் மருத்துவத் தன்மையுடையனவாகவும் மந்திரத் தன்மையுடையனவாகவும் கருதப்படுகின்றன.
கும்பகோணத்திற்கு அடுத்த தாராசுரத்தில் நெடுஞ்சாலை ஓரமாக அமைந்துள்ள சக்கராயி கோயில் யோனித் தெய்வத்தின் கோயிலாகும். முகத்திற்குப் பதிலாகத் தாமரை மலரோடு, ஆடையின்றிப் பிறப்புறுப்பினை வெளிக்காட்டி, குத்துக்கால் இட்டபடி இத்தெய்வத்தின் சிலை அமைந்துள்ளது. இன்றுவரை அப்பகுதியில் வாழும் மக்கள் மகப்பேற்றுத் தீட்டுக்காலம் கழிந்தவுடன் பிறந்த மகவை இக்கோயிலுக்கு எடுத்து வருகின்றனர். இத்தெய்வத்தின் முன் ஒன்றிரண்டு நிமிடங்கள் குழந்தையைக் கிடத்தி வழிபட்டுச் செல்கின்றனர்.
சிமெண்ட் நாகரிகம் பரவிய நகர்ப்புறங்களிலும், மகப் பேறானது மருத்துவமனையில் நிகழும் இடங்களிலும் இச் சடங்கு வீட்டிற்குள் திருவிளக்கின்முன் நிகழ்த்தப் பெறுகிறது. (சமூகவியல் அறிஞரான ஜி.எஸ். குர்யே இந்தியாவின் வட பகுதி மக்களிடத்தில் நஞ்சும் கொடியும் பற்றிய நம்பிக்கைகள், சடங்குகள் குறித்து ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.) தமிழ்நாட்டில் யோனி வழிபாடு நடந்ததற்கான தொல் எச்சமாக இன்று தாராசுரம் சக்கராயி கோயிலும் இந்த வீட்டுச் சடங்குமே எஞ்சியுள்ளன. பிறவகையான சிற்பச் சான்றுகள் கோயில் தூண்கள் சிலவற்றிலும் சில தேர்ச் சிற்பங்களிலும் காணப்படுகின்றன.
பண்பாட்டு அசைவுகள்
இக்கட்டுரையாளர் சில ஆண்டுகளுக்கு முன்னர் நெல்லை மாவட்டத்தில் கண்ட நிகழ்ச்சி இது. அது ஒரு சிறிய நகரம். ஆனாலும் தெருக்கள் சாதிவாரியாகவே அமைந்திருக்கின்றன. இருபத்தெட்டு வயது உடைய இளைஞர் ஒருவர் விபத்தொன்றில் இறந்துபோனார். அவருடைய மனைவிக்கு வயது இருபத்து மூன்று. மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது.
அந்தப் பிற்பகல் நேரத்தில் பிணத்தை எடுத்துச்செல்ல ஊரே திரண்டிருந்தது. ஆண்கள் இழவு வீட்டிற்கு வெளியே பெஞ்சுகளில் அமர்ந்திருந்தனர்; வேறு சிலர் நின்று கொண்டிருந்தனர். ஒருபுறத்தில் இறுதி ஊர்வலத்திற்கான மேளச் சத்தமும் அதற்குரிய நாகசுரமும் ஒலித்துக் கொண்டிருந்தன. வீட்டிற்குள் பெண்கள் உரத்த குரலில் அழுதுகொண்டிருந்தனர்.
திடீரென்று மேளச்சத்தம் நின்றது. இழவு வீட்டிற்கு உள்ளிருந்து ஒரு மூதாட்டி வெளியில் வந்தார். பேசிக்கொண்டிருந்த ஆண்கள் பேச்சை நிறுத்தினர். அம்மூதாட்டியின் கையில் தண்ணீர் ததும்பி வழியும் செம்பொன்று இருந்தது. அந்தத் தண்ணீர்ச் செம்பை அவர் கூட்டத்தின் நடுவில் வைத்துவிட்டு நிமிர்ந்தார். அவரது வலக்கையில் ஏதோ மடக்கி வைத்திருந்தார். கூர்ந்து பார்த்ததில் அவை உதிரிப் பிச்சி (முல்லை)ப் பூக்கள் என்று தெரிந்தன. அவர் கூட்டத்தை ஒரு முறை நிதானமாகத் திரும்பிப் பார்த்தார். பின்னர் கையில் இருந்த பிச்சிப் பூக்களில் ஒன்றைச் செம்பில் நிறைந்த நீரின்மீது இட்டார். கூட்டம் மூச்சடங்கியது போல் அமர்ந் திருந்தது. பின்னர் இன்னொரு பூவைச் செம்புத் தண்ணீரின் மேலிட்டார். இரண்டு பூக்கள் செம்பு நீரில் மிதப்பது எல்லார் பார்வைக்கும் தெரிந்தது. கூட்டத்தில் இருந்த பெரியவர்கள் ச்சூ, ச்சூ... என்று அனுதாபத்தோடு ஒலி எழுப்பினர். பின்னர் அம்மூதாட்டி மூன்றாவது பூவையும் செம்பு நீரில் இட்டார். கூட்டம் மறுபடியும் அனுதாப ஒலி எழுப்பியது. ஒன்றிரண்டு நொடிகள் கழித்த பிறகு அந்தப் பெண் நீரிலிட்ட மூன்று பூக்களையும் கையில் எடுத்துக்கொண்டு செம்பு நீரைத் தரையில் கொட்டிவிட் விடுவிடென்று இழவு வீட்டிற்குள் சென்று விட்டார். கூட்டத்தில் அனுதாப ஒலியோடு பேச்சும் எழுந்தது. 'ம் பாவம். . .,' 'என்னத்தச் சொல்றது...'
கூட்டத்தில் ஒருவனாக நின்று இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த கட்டுரையாளர், கூட்டத்தில் இருந்த பெரியவரிடம் இதுபற்றிக் கேட்டபோது கிடைத்த பதில் ‘இது தெரியலையா ஒனக்கு. .. தாலி அறுக்கற பொம்பளப்புள்ள மூணு மாசமா முழுகாம இருக்கு.' விவரம் புரியாத கட்டுரையாளர் திரும்பக் கேட்டார். ‘அந்தப் பொண்ணு முழுகாம் இருக்கற விஷயத்தை ஏன் ஊருல சொல்லணும்.' கட்டுரையாளரின் கேள்வி எரிச்சலோடு அமைந்திருந்தது. ஒரு பெரியவர் இடைமறித்துச் சொன்னார். 'பேரப்புள்ள, ஏழு மாசம் கழிச்சு அவபுள்ள பெத்தா நீ கேக்க மாட்டியா, எப்படிப் புள்ள வந்திச்சுன்னு.’
கட்டுரையாளர் அதிர்ச்சியாலும் அவமானத்தாலும் குன்றிப்போனார்.'இதோ, இந்தப் பெண் இறந்து போனவனுக்காக வயிறு வாய்த்திருக்கிறாள். ஏழு மாதம் கழித்துப் பிறக்கப் போகும் குழந்தைக்குத் தந்தை இன்றைக்கு இறந்து போனவன் தான்' என்று ஊரும் உலகும் அறிய அந்தச் சடங்கு பிரகடனம் செய்திருக்கிறது. சங்க இலக்கியங்களில் பேசப்படும் ‘வரைவு கடாதல்’ துறையின் பெருமை கட்டுரையாளருக்கு அப்பொழுது தான் புரிந்தது. பிறக்கின்ற எந்த மனித உயிரும் தந்தை பெயர் அறியாமல் பூமிக்கு வரக்கூடாது என்ற சமூகக் கட்டுப்பாடு புரிந்தது.
இந்தச் சோகத்துக்கு ஊடே சிறிய மகிழ்ச்சி தந்த மற்றொரு செய்தியும் உண்டு. ஒரு பண்பாடு பேச்சே இல்லாத ஒரு சின்ன அசைவின் மூலம் எவ்வளவு நுட்பமாகவும், மென்மையாகவும் தன்னை அடையாளம் காட்டிக் கொள்கிறது!
அறையும் கல்லறையும்
உலகின் பழைய மொழிகளில் ஒன்று தமிழ் என்பதால் தொல் பழங்கால வாழ்க்கை முறையினையும் சிந்தனைகளையும் சித்திரிக்கும் சொற்கள் தமிழில் நிறைய உண்டு. அவற்றுள் ஒன்றனைப் பற்றி இப்போது சிந்திக்கலாம்.
'அறை' என்ற சொல் இக்காலத்தில் தனிநபர் வாழ்கின்ற சிறிய வாழ்விடத்தைக் குறிக்கிறது. பெரும்பாலும் 'ரூம்' என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ் மொழிபெயர்ப்பாகவே இது பயன்படுத்தப் படுகிறது. இச்சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் 'பாறை' என்ற பொருளிலேயே ஆளப்படுகின்றது. 'ஞாயிறு காயும் வெவ்வறை' (குறுந்), 'அறையும் பொறையும் ஆறிடை மயக்கமும்' (சிலம்பு) எனவரும் இலக்கியப் பகுதிகள் இதற்குச் சான்றுகள். திருவெள்ளறை, வெள்ளறைப்பட்டி எனப் பாறையால் அடையாளமிடப்பட்ட ஊர்ப்பெயர்களும் வழங்கி வருகின்றன. அறை என்பது அறுக்கப்பட்ட அல்லது குறைக்கப்பட்ட என்ற பொருளையும் குறித்திருக்கிறது. 'அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து' (சிலம்பு) எனவரும் பகுதி இதற்குச் சான்றாகும்.
இன்று, 'கல்லறை' என்பது நிலத்தில் தொட்டி போன்ற அமைப்பில் கட்டப்பட்டு உள்ளே இறந்தவர் உடலை வைக்கும் கட்டட அமைப்பைக் குறிக்கிறது. நிலத்தைக் கல்லிக் கட்டுவதால் ‘கல்லறை’ எனப் பெயர் பெற்றதாகத் தொல்லியல் ஆய்வாளர் குழந்தை வேலன் விளக்கம் தருகிறார். கல்லறை, கல்லறைத் தோட்டம் ஆகிய சொற்கள் இப்பொழுது தமிழ்க் கிறித்தவர்களின் இடுகாட்டையே குறித்து வழங்குகின்றன.
இறந்தவரைப் புதைக்கும் இடங்களும், முறைகளும் தொல்லியல் ஆராய்ச்சியாளருக்கு முக்கியமான சான்றுகளாகும். தமிழ்நாட்டில் காணப்பெறும் புதைவிடங்களை அறிஞர்கள் நான்காக வகைப்படுத்துவர். இறந்த மனிதனைப் புதைத்த இடத்தின் மேல் ஒரு பெரிய கல்லையோ அல்லது கற் குவியலையோ அமைப்பது ஒரு முறை; புதைத்த இடத்தின் மேல் ஒரு கல்லை வைத்துவிட்டு அதைச் சுற்றிலும் 15 அடி குறுக்களவில் வட்டவடிவமாகக் கற்களைத் தரையில் புதைத்து விடுவது மற்றொரு முறை; புதைத்த இடத்தின் மேல் சுமார் 8 முதல் 10 அடி வரை உயரமுள்ள கூம்பு வடிவிலான, அரைகுறையாகச் செதுக்கப்பட்ட கற்களை நடுவது இன்னொரு முறை. நான்காவது வகையே நம் ஆய்வுக்குரியது.
இவ்வகையான கல்லறைகளில் அரைகுறையான கற்பலகைகளைச் செய்து அவற்றைப் புதைக்கப்பட்ட உடலின் நாற் புறமும் நட்டுவிடுவர். இப்பலகைகள் தரைக்கு மேற்புறமாக நான்கடி உயரத்தில் அமைந்திருக்கும். இந்நான்கு கற்பலகைகளின் மேலும் பொருந்துமாறு மேலே ஒரு கற்பலகை வைக்கப்பட்டிருக்கும். பக்கவாட்டில் நிறுத்தப்பட்ட கற்பலகை ஒன்றில் சிறிய துளை இடப்பட்டிருக்கும். இந்த அமைப்பு, மொத்தத்தில் ஒரு அறைபோல இருக்கும். அதாவது இக்காலத்தில் பெரிய நிறுவனங்களில் வாயிற் காவலருக்காக அமைக்கப்பட்டுள்ள சிற்றறைபோல இருக்கும்.
முதல் வகைக் கல்லறைகள் தருமபுரி, புதுக்கோட்டை மாவட்டங்களிலும், இரண்டாம் வகை தமிழ்நாடு முழுவதிலும் காணப்படுகின்றன. புதைக்கப்பட்ட இடத்தின்மீது மிகப்பெரிய கல்லை வைக்கும் அமைப்பினைச் சங்க இலக்கியம் ‘நெடுங்கல்' என்று குறிப்பிடுகிறது. கூம்பு வடிவிலான ஒற்றைக் கற்கள் தருமபுரி மாவட்டத்தில் காணப்படுகின்றன. இவற்றை ஆங்கிலத்தில் menhirs என்பர்.
அறைபோலக் கற்பலகைகளால் செய்யப்பட்ட அமைப்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தாமலை அருகிலும், கிருஷ்ணகிரிக்கு அருகிலுள்ள மல்லசமுத்திரம் மலையிலும் காணப்படுகின்றன. இதை அவ்வூர் மக்கள், 'குரங்குப் பட்டடை' என்றும் பஞ்ச பாண்டவர் வனவாசத்தின்போது தங்கியிருந்தவை என்றும் குறிப்பிடுகின்றனர். இவ்வகையான கல்லறைகள் கொடைக்கானல் அருகில் பண்ணைக் காட்டிலும் காணப்படுவதாகச் சொல்லப்படுகின்றது. இறந்த மனிதனுக்காகக் கல்லைப் பலகைபோலச் செதுக்கிச் சிறிய வாழ்விடம் போல அமைக்கப்பட்ட இந்த அமைப்பில் இருந்தே 'கல்லறை' என்ற சொல் பிறந்திருக்க வேண்டும். 'பாறை' என்ற பொருளில் தொடங்கி, ‘அறுக்கப்பட்ட பாறை' என்ற பொருளில் விரிந்து, 'சிறிய வாழ்விடம்' என்ற பொருளில் அறை என்ற சொல் நிலைப்பட்டிருக்கிறது.
மேலே குறிப்பிட்ட அனைத்து வகைக் கல்லறை அமைப்புக்களும் கிறித்துவுக்கு முற்பட்ட காலத்திலேயே தொடங்கியவை என்று தொல்லியல் ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். ஒரு சிறிய சொல் மனித குல வரலாற்றின் பக்கங்களை நுணுக்கமாகக் கோடிட்டுக் காட்டுகிறது. இவ்வகையான சொற்கள் தமிழில் நிறைய உள்ளன.