F

fabrication - கட்டுமானம்: ஆக்குதல்

fabrication temperature - ஆக்கு வெப்பநிலை. (தொ.நு)

fabrication tolerence - ஆக்கு தாங்குநிலை: (தொ.நு)

face - முகம்: தலையின் முன் பகுதி இதில் நெற்றி, காது, கண்கள், முக்கு, வாய், தாடை ஆகிய பகுதிகள் உள்ளன. முக நரம்புகளில் உண்டாகும் நரம்புவலிக்கு முகவலி (பேஸ் ஏக்) என்று பெயர்.முகப்பு

face-lifting - முகப்பு உயர்வு: முகப்பை உறுதியாக்கும் செயல். பழைய கட்டிடங்களின் முகப்பைத் திருத்தி அமைப்பது. (தொ.நு)

facet - நுண்முகம்: பூச்சிகளின் கூட்டுக்கண்களிலுள்ள விழிப்படலத்தின் சிறிய பகுதி (உயி)

facials - முகநரம்பு: முதுகெலும்பிகளின் 7ஆம் மூளை நரம்பு. இதில் உணரிழைகளும் இயக்க விழைகளும் உள்ளன. (உயி)

factor - 1. காரணி: மரபுப் பண்புடையது. நிறப்புரியில் உள்ளது. 2. மாறிலி. எ-டு. சுருக்கக் கூற்றெண். 3. ஒரு நிகழ்வு அல்லது தன்மைக்கு காரணமான பொருள். எ-டு. சூழ்நிலைக் காரணிகள், வேதிக் காரணிகள், 4. ஒரு எண்ணை மற்றொரு எண்ணால் வகுத்தல். (வகுத்தி) (ப.து)

Fahrenheit scale - பாரன்கெயிட் அளவு: வெப்பநிலை அளவுகளில் ஒன்று. நீரின் உறை நிலை 32° கொதிநிலை 212° 1714இல் ஜெர்மன் அறிவியலார் பாரன் கெயிட் (1686- 1736) என்பார் அமைத்தது.

FACTS - பேக்ட்ஸ்: (பிளக்சிபிள் ஏசி டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்ஸ்) நெகிழ் செலுத்தும் அமைப்புகள். திண்ம நிலைக்கட்டுப்படுத்திகள் அடிப்படையில் அமைந்தவை. ஆற்றல் அலைக்கழிவுகளைக் குறைக்கவல்லவை. பொதுவாக, இவை மிகுந்த விரைவு, துல்லியம், நம்புமை ஆகிய மூன்று சிறப்பியல்புகளைக் கொண்டவை. (இய)

FAD, flavin adenine dinucleotide - ஃபேடு, பிளேவின் அடினைன் இரு நியூக்ளியோடைடு: துணைநொதி, ரிபோபிளேவின் பாஸ்பேட்டு அடினிலிகக் காடிக் குறுக்கத்தினால் உண்டாவது. (உயி)

faeces - எச்சம்: விலங்குகள் வெளியேற்றும் உணவுப் பொருட்கழிவு. (உயி)

fallopian tube - பெலோப்பியன் குழல்: இத்தாலிய உள்ளமைப்பியலார் கேப்ரியல் பெலோப்பியா (1523-62) என்பவர் பெயரால் அமைந்தது. 7.5 செமீ நீளமுள்ளது. சூல்பையிலிருந்து கருப்பைக்குள் செல்வது. (உயி) fallout - வீழ்பொருள்: வீழி அணு வெடிப்புக் கூளத்தைக் கொண்ட முகில்களிலிருந்து விழும் கதிரியக்கத்துகள். (இய)

false fruit - பொய்க்கனி: இதனைப் போலிக்கனி என்றும் கூறலாம். முந்திரிப்பழத்தில் சதைப்பகுதி பொய்க்கனி. உண்மைக்கனி முந்திரிக்கொட்டை. (உயி)

false septum - பொய்த்தடுப்பு:' முதலில் ஒற்றைச் சூல்பையின் நடுவில் தோன்றிப் பின் அதை ஈரறையாக்கும் தடுப்புச் சுவர். (உயி)

family - குடும்பம்: 1. ஓர் அடிப்படைக்குழு. நெருங்கிய மரபுவழியுள்ள பெற்றோரையும் அவர் தம் குழந்தைகளையுங் கொண்டது. 2. உயிரிச் சமூகத்தின் வகையலகு பேரினத்திற்கும் வரிசைக்கும் நடுவிலுள்ளது. (உயி)

fangs - நச்சுப்பற்கள்: நச்சுப் பாம்பின் மேல் தாடையிலுள்ள வளைந்த இரு கோரைப்பற்கள். கடிக்கும்போது, நச்சைச் செலுத்த ஊசிபோல் பயன்படுவது. (உயி)

farad - பாரஃட்டு: மின்னேற்புத் திறனலகு, C = Q/v. C- மின் னேற்புத்திறன். Q- மின்னேற்ற அளவு, V- ஒல்ட் ஒரு மின்னேற்பியில், 1 ஒல்ட் மின்னழுத்தம் நாம் அளக்கும்போது, அது ஒரு கூலும் மின்னோட்டம் பெறுமாயின், அந்த மின்னேற்பியின் மின்னேற்புத்திறன் ஒரு ஃபாரட் ஆகும்.

faraday - பாரடே : f. மின்னேற்ற அலகு. ஒரு மோல் மின்னணுக்கள் கொள்ளும் மின்னேற்றம் மதிப்பு 9.648670 x 104 கூலும் மோல். வேறு பெயர் பாரடே மாறிலி. (இய)

Faraday effect - பாரடே விளைவு: காந்தப் புலத்திற்குட்பட்ட ஒரே பண்புள்ள ஊடகத்தின் வழியே, மின்காந்தக் கதிர்வீச்சு செல்லும் போது, அதன் முனைப்படு தளத்தின் சுழற்சியே பாரடே விளைவாகும். இது ஊடகத்தின் கதிர்வீச்சு வழியின் நீளத்திற்கும் காந்த ஒட்ட அடர்த்திக்கும் நேர் வீதத்தில் இருக்கும். (இய)

Faraday's laws - பாராடே விதிகள்: இவை இருவகைப்படும். முதல் வகை மின்னாற்பகுப்பு விதிகள். இரண்டாம் வகை மின்காந்தத் தூண்டல் விதிகள். (இய)

முதல்வகை 1) ஒரு மின்பகுளி வழியாக மின்னோட்டம் செல்லும்போது கரைசலிலிருந்து வெளிப்படும் உலோகத் தனிமத்தின் நிறை, மின்னோட்டம் செலுத்தப்படும் நேரத்திற்கு நேர்விகிதத்தில் இருக்கும். 2. ஒரு மின்பகுளி வழியாக மின்னோட்டஞ் செல்லும்போது, வெளித்தள்ளப்படும் உலோகத்தின் நிறை, அதில் பாயும் மின்னோட்ட வலிமைக்கு நேர் வீதத்தில் இருக்கும். 3. வெவ்வேறு மின்பகுளிகள் வழியாக ஒரே அளவு மின்னோட்டம் பாயும் போது, வெளித்தள்ளப்படும் உலோகத் தனிமங்களின் நிறை, அவற்றின் மின்வேதி இணைமாற்றுக்கு நேர்வீதத்தில் இருக்கும்.

இரண்டாம் வகை: 1) ஒரு கடத்தியைச் சூழ்ந்துள்ள காந்தப் புலம் மாறுகின்றபோது, மின்னியக்கு விசை அதில் உண்டாகிறது. 2) புல மாற்ற அளவுக்கு மின்னியக்கு விசையின் எண் மதிப்பு (மாக்னிடியுடு) நேர்வீதத் திலிருக்கும். 3) உண்டாக்கப்பட்ட மின்னியக்கு விசையின் திசை, புலத்தின் சார்புத் திசையைப் பொறுத்தது. (இய)

fashion technology - நாகரிகப் பொருள் தொழில்நுட்பவியல்: நாகரிகப் பொருளை உருவாக்குதல்.

fastfood - விரைவுணவு: உண்ணும் பொழுது விரைவாகக் கரையும் உணவு. எ-டு. பனிக்குழைவு, பனிச்சூப்பி. (உண)

fast green - விரைவுப்பச்சை: ஒளிநுண்ணோக்கியில் பயன்படும் பசுஞ்சாயம். செல்லுலோஸ், கண்ணறைக் கணியம் முதலியவற்றைச் சாயமேற்றப் பயன்படுவது. (உயி)

fatigue - சோர்வு: கழிவுகள் சிதை மாற்றத்தால் குவிவதால், தசையின் சுருங்கு தன்மை குறைதலுக்குத் தசைச்சோர்வு என்று பெயர். ஒய்வு கொள்ளலே சிறந்த வழி. (உயி)

Fats - கொழுப்புகள்: கரி, அய்டிர ஜன், ஆக்சிஜன், ஆகிய மூன்று தனிமங்களையும் கொண்ட கரிமச் சேர்மங்கள். எ-டு. ஆல்ககால், கொழுப்புக்காடி, எண்ணெய் வித்துகளில் அதிகமுள்ளது. உணவின் பகுதிகளில் ஒன்றாக அமைந்து, உடலுக்கு வெப்பத்தையும் ஆற்றலையும் அளிப்பவை. (உயி)

fatty acids - கொழுப்புக் காடிகள்: கரிமச் சேர்மங்கள். எ-டு. பால் மாட்டிகக் காடி. ஒலியக் காடி. (வேதி)

fault - 1. பிளவு: புவிஓடு நெடுகவுள்ள முறிவு 2. மின் அறுகை மின்சாரம் துண்டிக்கப்படுதல்.

fauna - திணை விலங்குகள்: மாவடை ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் வாழும் விலங்குகள். எ-டு. மான், புலி காடுகளிலேயே வாழும்.

fax - உருநகலி: தொலைநகல். உருநகல் எந்திரம், விரைந்து தகவலை அனுப்ப உதவும் கருவியமைப்பு. தகவல் தொடர்பு அமைப்பு. ஒ. pager.

feathers - இறகுகள்: பறவையின் உடல் முழுதும் அமைந்துள்ள புறத்துறுப்புகள். கெரடின் எனும் கடினப் பொருளாலானது. இவை பறவைகளுக்கே உரியவை. இவற்றின் மூதாதைகளான ஊர்வனவற்றின் செதில்களிலிருந்து இவை உண்டாயின என்று கருதப்படுகிறது. (உயி)

fecundity - இனப்பெருக்கவளம்: தன் வாழ்நாள் முழுதும், ஒரு பெண்ணுயிர் இடும் முட்டை அளவு. (உயி)

feed back - மீளூட்டல்: ஒரு தொகுதியின் வெளிப்பாட்டுப் பகுதியினை அதன் வினைத் திறனைக் கட்டுப்படுத்தப் பயன் படுத்தல். நேரிடை மீளூட்டலில் உட்பாட்டை உயர்த்தவும் எதிரிடை மீளுட்டலில் உட்பாட்டைக் குறைக்கவும் வெளிப்பாடு பயன்படுதல். (இய)

Fehling's solution - பில்லிங் கரைசல்: ஆல்டிகைடு தொகுதியைக் கண்டறியப் பயன்படும் கரைசல். (வேதி)

femto chemistry - பெமடோ வேதியியல்: பெமட்டோ வினாடிகளில் வேதிவினைகளை விரைவாக ஆராயுந்துறை. இந்த ஆய் விற்காக 1919 இல் பேரா. அகமது எச் சிவெயில் நோபல் பரிசு பெற்றார்.

femur - தொடை எலும்பு: நீண்ட எலும்பு தொண்டையில் உள்ளது. இடுப்பிலிருந்து முழங்கால் வரை நீண்டிருப்பது. (உயி)

fenestra ovalis - முட்டை வடிவத் திறப்பு: நீள்வட்டத்திறப்பு. பாலூட்டியின் எலும்புப் பொந்துகளில் காணப்படும் இடைவெளி. நடுச்செவியை இது படலப் பொந்துகளோடு இணைக்கிறது. (உயி)

fenestra rotunda - வட்டத் திறப்பு: நடுச்செவிக்கும் உட்செவிக்கும் இடையிலுள்ள படலம் சூழ்நீரில் (பெரிலிம்ப்) ஏற்படும் அழுத்த மாற்றங்களை ஈடுசெய்ய முன்னும் பின்னும் நகர்வது. முட்டை வடிவத்திறப்பின் அதிர்வுகளால் இம்மாற்றங்கள் ஏற்படுதல். (உயி)

fensulfothion - பென்சல்போதியன்: C11H17O4PS2 வெளிர்மஞ்சள் நீர்மம். பெரும்பான்மையான கரிமக் கரைப்பான்களில் கரையும். பூச்சிக் கொல்லி. (வேதி)

fercula - கவை எலும்பு: பறவைகளில் கானப்படுவது. கவை போன்ற வடிவம். முன்புறம் தோள் வளையங்களோடும் பின்புறம் மார்பெலும்போடும் இணைந்துள்ளது. (உயி)

fermentation - நொதித்தல்: வேதிச் செயல். குளுக்கோஸ் சர்க்கரைக் கரைசல் ஈஸ்ட்டு என்னும் சாறுண்ணியிலுள்ள சைமேஸ் என்னும் நொதியினால் சாராயமாகவும் கரி இரு ஆக்சைடாகவும் மாறுதல். (வேதி)

fermium - பெர்மியம்: Fm. கதிரியக்கத் தனிமம். புவியில் இயற்கையாகக் கிடைப்பதில்லை. குறுகிய நேரம் இருக்கக்கூடிய பல ஒரிமங்கள் (ஐசோடோப்புகள்) இதிலிருந்து தொகுக்கப்படுகின்றன. (வேதி)

ferms - பெரணிகள்: வெப்ப மண்டலத்தில் வாழும் செடி வகைத் தாவரங்கள். 10,000 வகைகள், இலை, தண்டு, வேர் என்னும் உடலமைப்பு வேறுபாடு உண்டு. வேர், தண்டு வேராகும் தண்டு குறுகியது. தண்டிலிருந்து இவைகளுக்கருகே வேர்கள் கிளம்பும். இவற்றின் தண்டு குறைந்து மட்டத் தண்டாகும். இலைகள் பெரியவை. இலைகளின் அடியில் சிதல்பைகள் சிதல்கள் இருக்கும். இவற்றின் YôrdâLf Nt+p தலைமுறை மாற்றம் உண்டு. (உயி)

ferrite - பைரட்: இரும்புக் காந்தமுள்ள வனைபொருள்கள். மின்கடத்திகள் அல்ல. ஆகவே, உயர் அதிர்வெண்ணுள்ள சுற்றுகளின் காப்பு உள்ளகங்களாகப் பயன்படுபவை. (இய)

ferritin - பெரிடின்: பெரிய புரத மூலக்கூறு. இதன் மின்னணுக்கள் ஒளி ஊடுருவும் தன்மை அற்றவை. ஆகவே, மின்னணு நுண் நோக்கியில் குறியிடும் பொருளாகப் பயன்படுதல். மண்ணீரலில் இரும்புச் சேமிப்புப் புரதமாக உள்ளது. (உயி)

ferro alloys - இரும்பக உலோகக் கலவைகள்: ஏனைய தனிமங்களுடன் சேர்ந்த இரும்பு உலோகக் கலவைகள். இரும்புத் தாதுவையும் உலோகத் தாதுவையும் சேர்த்து உருக்கிச் செய்யப்படுபவை. எ-டு. இரும்பக மாங்கனிஸ் இரும்பகச் சிலிக்கன், உலோகக் கலவை எஃகுகள் செய்யப் பயன்படுதல். (வேதி)

fertilization - கருவுறுதல்: ஆண் அணு (விந்தணு) பெண் அணுவோடு (சினை அணுவோடு) சேரும் நிகழ்ச்சி. கலவி இனப்பெருக்கஞ் சார்ந்தது. இதனால் உண்டாவது கருவணு. தாவரங்களில் கருவுறுதலுக்கு முந்திய நிலை மகரந்தச் சேர்க்கை. ஏனைய வளர்ந்த உயிர்களில் புணர்ச்சிக்குப் பின் கருவுறுதல் நிகழ்கிறது. எல்லா உயிர்களிலும் அடிப்படையில் நடைபெறும் முறை ஒன்றே. (உயி)

fever - காய்ச்சல்: உடல் வெப்பத் தால் இயல்பான வெப்பநிலைக்கு மேல் உணருதல். முறைக்காய்ச்சல், நச்சுக் காய்ச்சல் எனப் பலவகைப் படும். ஒரு நோயின் அறிகுறியாக வருவது. அம்மை வருவதற்கு முன் கடுங்காய்ச்சல் உண்டாகும். (மரு.)

FFA, free fatty acids - கட்டுறாக் கொழுப்புக் காடிகள்: சுழலும் கொழுப்புப் பகுதிகள். ஒருசில நிமிகளே அரைவாழ்வுக்காலம் உடையவை. (உயி)

F- factor - எஃப் காரணி: சில குச்சிய உயிரணுக்களில் காணப்படும் புறப்புரி (எபிசோம்). உயிரணுவின் ஆண்தன்மையையும் பெண் தன்மையையும் உறுதி செய்வது. (உயி)

fibre - இழை" இது செயற்கை நாராகும். ரேயான் முதன் முதலில் செய்யப்பட்டது. துணிகள் நெய்யப்படுவது. நிலக்கரியைச் சிதைத்து வடித்துப் பெறுவது நைலான். மீன்வலைகள், புடவை முதலியவை செய்யப் பயன்படுதல்.

fibre optic sensors - இழை ஒளி உணர்விகள்: ஆற்றல் நிலையங்களில் துல்லியத்தை உயர்த்திப் பேணும் செலவுகளைக் குறைப்பவை. (தொ.நு)

fibril - நுண்ணிழை: நூலிழை போன்றது. உயிரணுவினால் உண்டாக்கப்படுவது. (உயி)

fibrillar muscles - நுண் இழைத்தசைகள்: பூச்சி அசைந்து பறப்பதற்குரிய தசைகள். (உயி)

fibrin - பைபிரின்: முதுகெலும்பிகளின் குருதி உறையும் போது, வலைப்பின்னல் இழைகளாக வீழ்படியுங் கரையாப்புரதம். திராம்பினுடன் சேர்ந்து பைபிரினை உண்டாக்குதல். (உயி)

fibroblast - நார்க்கண்ணறை: இணைப்புத் திசுக் கண்ணறை. குருத்தெலும்புக் கண்ணறை (கான்ட்ரோபிளாஸ்ட்) கொல்லேஜன் கண்ணறை (கொல்லேஜன் பிளாஸ்ட்) எலும்புக் கண்ணறை (ஆஸ்டியோ பிளாஸ்ட்) என்னும் மூன்று வகைக் கண்ணறைகளாக வேறுபட்டுள்ளது. (உயி)

fibula - முழங்கால்வெளி எலும்பு: இரு முழங்கால் எலும்புகளில் ஒன்று. முழங்காற் சில்லிலிருந்து கணுக்கால்வரை நீண்டிருப்பது. (உயி)

field - புலம்: ஒரு பொருள் விசையை நுகரும் பகுதி. எ-டு. மின்புலம், காந்தப்புலம். (இய)

field coil - புலச்சுருள்: காந்தப்புலத்தை உண்டாக்கும் கம்பிச்சுருள். எந்திரத்திலுள்ளது.

filament - இழை: 1. மகரந்த இழை (உயி) 2. மின்விளக்கு இழை. (இய)

filariasis - நூற்புழுநோய், யானைக் கால் நோய்: வட்டப்புழுவினால் உண்டாகும் ஒட்டுண்ணி நோய். பெண் கொசுக்களால் பரப்பப்படுவது. இவை இழைப்புழுவிற்கு இடைப்பட்ட ஒம்புயிரிகளாக இருப்பவை. கடுங்காய்ச்சல், கொழுப்பு அழற்சி, கொழுப்பு முண்டுகள், வீங்கல் இதன் அறிகுறிகள். (உயி)

file - கோப்பு: கணிப்பொறியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தகவல் திரட்டு. (இய)

filler - நிரப்பி: இது ஒரு திண்மப் பொருள். இயற்பண்பை மாற்றவல்லது. ரப்பர், பிளாஸ்டிக் முதலியவற்றோடு சேர்க்கப்படுவது. கண்ணாடி இழை, பருத்திக் கம்பளம், காக்கைப் பொன் முதலியவை நிரப்பிகள். (வேதி)

filter - வடிகட்டி: ஒரு நீர்மத்திலுள்ள மாகடை தொங்கு பொருள்களைப் பிரிக்கப் பயன்படுங் கருவி. (இய)

filter feeding - வடிகட்டி உணவு கொள்ளல்: நீரில் வாழும் விலங்குகள் உணவு கொள்ளும் முறைகளுள் ஒன்று. திமிங்கலம். பா. ciliary feeding. (உயி)

filtrate - வடிபொருள்: வடிகட்டல் மூலம் பெறப்படுவது. இதில் தொங்கு பொருள் இல்லை. கலவையைப் பிரிக்கும் முறைகளில் ஒன்று வடிகட்டல், உப்புக் கரைசலை வடிதாள் வழியாகச் செலுத்தத் தாளின் மேல் உப்பும் முகவையில் வடிபொருளும் (நீரும்) கிடைக்கும். (வேதி)

filtration - வடிகட்டல்: கலவையைப் பிரிக்கும் முறைகளுள் ஒன்று. வடிதாள். உருக்கி இணைத்த கண்ணாடி முதலியவை வடிகட்டிகள். (வேதி)

finray - துடுப்பாரம்: கடின எலும்புமுள் குருத்தெலும்பு. எலும்பு அல்லது கொல்லேஜனாலானது. நீர் வாழ்விகளில் துடுப்பிற்குத் தாங்குதல் அளிப்பது. (உயி)

fire damp - தீவளி: மீத்தேனும் காற்றும் சேர்ந்த வெடிகலவை. நிலக்கரிச் சுரங்கங்களில் உண்டாவது. (வேதி)

fire extinguisher - தீயணைப்பான்: தீயை அணைக்க வேதிப் பொருளைப் பீச்சும் கருவியமைப்பு. பீச்சுபொருள் கரி ஈராக்சைடு நுரையாக இருக்கும். (வேதி)

firefly - மின்மினி: இரவில் ஒளி உமிழும் விட்டில். 6,7 ஆகிய வயிற்றுத் துண்டங்களில் ஒளி உறுப்புகள் அமைந்துள்ளன. இங்கு லூசிபெரின் என்னும் வேதிப் பொருள் லூசிபெரஸ் என்னும் நொதியினால் உயிர்வளி ஏற்றம் பெற்று, நிற ஒளிர்வு உண்டாகிறது. (உயி)

firstaid - முதலுதவி: சிறு விபத்தின் பொழுது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன் ஒருவருக்குச் செய்யவேண்டிய உதவி. மண்டை உடைந்து குருதி வடிந்தால், கருதியை துடைத்து விட்டு அவ்விடத்தில் பஞ்சை வைத்து அயோடின் கரைசலைத் தடவிப் பின் மருத்துவமனைக்கு அனுப்பலாம். பள்ளிகளில் சாரணர், செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர் ஆகியோருக்கு முதலுதவி பயிற்சி அளிக்கப்படுகிறது. மருத்துவர்களிடமும் முதலுதவி பயிற்சி பெறலாம். (உயி)

fish - மீன் உடல் வெப்பநிலை மாறும் நீர்வாழ்வி. செவுள்களால் மூச்சு விடுவது. துடுப்புகளால் நீந்துவது. உடல் முழுதும் செதில்கள் பரவி இருக்கும். பரந்து பலவகைகளாக உள்ளது. பெரும் பொருளாதாரச் சிறப்புடையது. (உயி)

fission - பிளவு, பிளவுபடல்: 1. இனப்பெருக்கத்தினால் ஓர் உயிரி சம பகுதியாக இரண்டாக பிரிந்து, ஒவ்வொரு பகுதியும் தனித்தனி இளவுயிர்களாதல். எ-டு. அமீபா 2. அல்லணுக்களைக் குண்டுகளாகப் பயன்படுத்தி அணுக்கருவைப் பிளந்து, ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு அணுப்பிளவு அல்லது அணுக் கருப்பிளவு என்று பெயர். இந்நெறிமுறையின் அடிப்படையில் அணுக்குண்டு செய் யப்படுதல். 3. அரும்புதல் மூலம் கலவியிலா முறையிலும், கலவி முறையில் பையகம் (ஆஸ்கஸ்) மூலமும் பிளவு ஏற்படுவதற்கு ஈஸ்ட்டுப் பிளவு (பிஷன் ஈஸ்ட்) என்று பெயர். (ப.து)

fits - வலிப்பு: பா. epilepsy. (உயி)

flagellum - நீளிழை: தசை இழை. சில கண்ணறைகளின் சாட்டை போன்ற நீட்சி. இடம் பெயர் இயக்கத்திற்குப் பயன்படுவது. எ-டு. குச்சியங்கள், அய்டிரா. ஒ. cillium.

flame - சுடர்: பா. cande flame.(வேதி)

flametest - சுடர் ஆய்வு:' உலோகங்களைக் கண்டறியும் ஆய்வு. (வேதி)

flamingo - செந்நாரை: வெப்ப மண்டலப் பறவை, பெரியது. நீரில் நடப்பது. நீண்ட கழுத்தும் கால்களுங் கொண்டது. நடுவில் கீழ்நோக்கி வளைந்த அலகும் செந்நிற வால் தோகையும் இதற்குண்டு. (உயி)

flashback - பின்னோட்டம்: பின்னோக்கிப் பார்த்தல்.

flashpoint - எரிநிலை: இது மிகக்குறைந்த வெப்பநிலை. இதில் போதியஅளவு ஆவி, எரிநீர்மத்தால் மின்பொறியில் எரியுமாறு வெளிவிடப்படுகிறது. இதைப் பற்றுநிலை என்றும் கூறலாம். (இய)

flatworm - தட்டைப்புழுக்கள்: புழுக்களில் ஒருவகை (உயி)

fleas - தெள்ளுப்பூச்சிகள்: பூலக்ஸ் இரிட்டனிஸ் என்பது மனிதத்தெள்ளுப் பூச்சி. சிறகுகள் இல்லை. குருதியை உறிஞ்சி அரிப்பையும் நச்சேற்றத்தையும் உண்டாக்குவது. (உயி)

Fleming's left hand rule - பிளமிங்கின் இடக்கைவிதி: இடக்கைக் கட்டைவிரல், ஆள்காட்டிவிரல், நடுவிரல் ஆகிய மூன்றையும் ஒன்றுக்கு மற்றொன்று செங்குத்தாக இருக்குமாறு வைத்து, ஆள்காட்டிவிரல் காந்தப்புலத் தின் திசையையும் நடுவிரல் மின்னோட்டத் திசையையும் காட்டுவதாக இருந்தால், கட்டைவிரல் விசையின் திசையையும் அதன் மூலம் கடத்தி நகரும் திசையையும் காட்டும். (இய)

flexor - மடக்குதசை: பா . biceps triceps.

flies - ஈக்கள்: நோய் உண்டாகக் காரணமாக இருப்பவை. ஈ மொய்த்த பண்டங்களை உண்ணக்கூடாது. அவற்றை வலைகளால் மூடி வைக்க வேண்டும். (உயி)

flint - தீக்கல்: மாசுள்ள இயற்கைச் சிலிகா (SiO2). விளக்கேற்றிகளில் பயன்படுத் தீக்கற்கள். செரியமும் இரும்பும் சேர்ந்து உலோகக் கலவைகளிலிருந்து செய்யப்படுதல். (வேதி)

floatation, laws of - மிதத்தல் விதிகள்: பொருளின் அடர்த்தி நீர்மத்தின் அடர்த்தியைவிடக் குறைவானால், அப்பொருள் அந்நீர்மத்தில் மிதக்கும். 2. ஒரு பொருள் ஒரு நீர்மத்தில் மிதக்கும் போது, மிதக்கும் பொருளின் நிறை, அதனால் விலக்கப்பட்ட நீர்மத்தின் நிறைக்குச் சமம். இதனடிப்படையில் கப்பலும் நீர் மூழ்கிக் கப்பலும் இயங்குதல். தவிர, நீர்மமானி, பால்மானி ஆகியவையும் இவ்விதியின் அடிப்படையில் அமைந்தவையே. (இய)

floppydisk - நெகிழ்தட்டு: பிளாஸ்டிக்காலான நெகிழ்தட்டு. இதில் காந்தப்படலம் போர்த்தப்பட்டிருக்கும். இப்படலத்தில் எண் வடிவத்தில் கணிப்பொறிச் செய்திக் கூறு சேமித்து வைக்கப்பட்டிருக்கும். கடினத்தட்டுகளை விட விலை குறைவானவை. ஆனால், நம்புமை குறைவு. பா. hard disk. (இய)

flora - திணைத்தாவரம்: மரவடை குறிப்பிட்ட சூழ்நிலையில் வாழுந் தாவரங்கள். எ.டு. நீர்வாழிகள், வறண்ட நில வாழிகள்.

floral diagram - பூப்படம்: ஒரு பூவின் அமைப்பை எளிதாக அறிவதற்குப் பயன்படுவது. இப்படம் தாயச்சிற்குச் சார்பான நிலையில் ஒரு பூவின் பலபகுதிகளின் அமைப்புமுறையைத் திட்டமாகக் காட்டுவது. வகைப் பாட்டியலில் சிறந்த இடத்தைப் பெறுவது. (உயி)

flori culture - பூத்தாவர வளர்ப்பு : பூக்குத் தாவரங்களை வளர்க்குங் கலை, எ-டு. ரோஜா வளர்த்தல்.(உயி)

flowchart, diagram - வழிவரை படம்: இஃது ஒரு விளக்கப் படம். அம்புக் குறிகளால் இணைக்கப் பெற்ற குறிகளைப் பயன்படுத்து வது குறிப்பிட்ட சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்குரிய செயல் ஒழுங்கைக் காட்டுவது. பா. algorithm.

flower - பூ: தாவரத்தின் உரு மாறிய தண்டகம். (தண்டு + இலை). இனப்பெருக்க உறுப்பு. நான்கு வட்டங்களைக் கொண்டது. பசுமையான புல்லிவிட்டம், நிறமுள்ள அல்லிவிட்டம், மகரந்தம் (ஆண்பகுதி), சூலகம் (பெண்பகுதி). (உயி)

flower parts, arrangement of - பூப்பகுதி அமைவு: 1. சுழலமைவு. பூவரசு 2. அரைச்சுழலமைவு. அனோனா. 3. சுருளமைவு. கள்ளி (உயி)

fluidisation - பாய்மமாக்கல்: பாய்மம் = நீர்மம் + வளி. இது தொழிற்சாலை வேதிநுணுக்கம். இதில் திண்மத்துகள் தொகுதி, தொங்கல் நிலைக்குக் கொண்டு வரப்படுகிறது. இதற்கு உலையில் அதன்வழியே மேல்நோக்கி வழிசெலுத்தப்படுகிறது. (வேதி)

fluorescein - ஃபுளோரோஸின்: C20H12O5. கறுப்பு செந்நிறக் கரிமச்சேர்மம். காரக் கரைசல்களில் கரைந்து, செறிவான பசிய ஒளிர்வைத் தரும் நீர்மத்தை அளித்தல். சாயங்களில் நிலைக்காட்டி (இன்டிகேட்டர்). இதனை ஒளிரி எனலாம். (வேதி)

flourescence - ஒளிர்தல்: ஆற்றலை உறிஞ்சி மின்காந்தக் கதிர்வீச்சுகளை உமிழும் பொருளின் பண்பு. எ-டு. இருட்டறையில் பச்சையக் கரைசல் வழியாக ஒளியைச் செலுத்த அக்கரைசலிலிருந்து நல்ல சிவப்புநிற ஒளி நாலாத்திசைகளிலும் உமிழப்படும். பா. (உயி)

fluorine - புளோரின்: F. வெளிறிய பசுமஞ்சள் நிறமுள்ள வளி, மிகநச்சுள்ளது. நீரற்ற அய்டிரஜன் புளோரைடு சேர்ந்த பொட்டாசியம் அய்டிரஜன் புளோரைடை மின்னாற்பகுக்க இவ்வளி கிடைக்கும். பூச்சிக் கொல்லி. (வேதி)

flux - இளக்கி: பற்றவைப்பில் உலோகப் பரப்புகளை ஆக்சைடு அண்டாமல் இருக்கச் செய்யும் பொருள். 2. உலேகங்களை அவற்றின் தாதுக்களிலிருந்து பிரிப்பதில் பயன்படும் பொருள். எ-டு. இரும்பைப் பிரிப்பதில் சுண்ணாம்புக்கல் இளக்கி. 3. பாயம் ஒட்டம், காந்தப்பாயம். (இய)

fying fish - பறக்கும் மீன்: இது ஒரு எலும்பு மீன். தன் இடுப்புத் துடுப்புக்கள் மூலம் நீரிலிருந்து தாவிக் காற்றில் சிறிது நேரம் இருக்கவல்லது. (உயி)

flying fox - பறக்கும் நரி: பெரிய பழந்தின்னி வெளவால். இதன் சிறகு 1.5 மீ அகலமுள்ளது. (உயி)

flying lizard - பறக்கும் பல்லி: தட்டார் பல்லி, சிறகுப்படலம் (பட்டாஜியம்) முன்புறத்துறுப்புகளுக்கும் பின்புறத்துறுப்புகளுக்குமிடையே இருப்பதால் இது பறக்க இயலும். (உயி)

flywheel - சுழலாழி: கனமான விளிம்புள்ள பெரிய உருளை. எந்திரங்களில் நிலையான விரைவை அளிக்க உதவுகிறது. (இய)

F-number - குவிஎண்: வில்லையின் குறுக்களவுக்கும் குவியத்தொலைவிற்குமுள்ள வீதம். இவ்வெண் குறைவாக இருந்தால், வில்லையின் துளை பெரிதாக இருக்கும். (இய)

foetus - கருஉயிரி: உடற்பகுதிகள் எல்லாம் தெளிவாகத் தோன்றிய பின், கருப்பையிலுள்ள அல்லது முட்டையிலுள்ள உயிர். (உயி)

foeticide - கரு உயிரிக்கொல்லி: கரு உயிரியைச் சிதைக்கும் மருந்து. (உயி)

fog - மூடுபனி: இதை மஞ்சு எனலாம். புழுதித்துகள்களில் நீர்த்துளிகள் சுருங்குவதால் உண்டாவது. (இய)

foliage - தழைப்பு: இலைவளர்ச்சி (உயி)

foliage leaves - தழைப்பிலைகள்: இலைத்தொகுதி. பொதுஇலைகள். (உயி)

folic acid - போலிகக்காடி: நீரில் கரையக்கூடிய வைட்டமின்களில் (உயிரியன்களில்) ஒன்று. பசுங்காய்கறிகளிலும் இலைகளிலும் உள்ளது. இது குறையுமானால் குருதிச் சோகை ஏற்படும். (உயி)

follicle - நுண்ணியம்: 1. சுரப்பைக் கொண்டுள்ள நுண்ணிய பை 2. ஒரு புறவெடிகனி, ஒரு கனிவகை (உயி)

food - உணவு: உண்டபின் செரிக்கத் தக்கதும் தன்வயமாகக் கூடியதுமான பொருள். எ-டு அரிசி. (உயி)

food canning - உணவை குவளையில் அடைத்தல்: உனவைப் பாதுகாக்கும் முறைகளில் ஒன்று. உணவுத் தொழில் நுட்ப இயல் சார்ந்தது. (உயி)

food chain - உணவுக் சங்கிலி: உணவுப்பிணைப்பு. ஓர் இயற்கைச் சமுதாயத்தில் நிலவும் உயிரிகளின் இணைப்பு. இதன் மூலம் உணவு ஆற்றல் மாற்றப்படுகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் ஒன்றை மற்றொன்று தின்று அந்நிலை பெறுதல். தாவரங்களை விலங்குகள் உண்ணல். புலி மானைக் கொன்று தின்னல். இச்சங்கிலி இரு வகைப்படும் 1. மேய் உணவுச் சங்கிலி. 2. மட்குணவுச் சங்கிலி. பா. trophic level. (உயி)

food poisoning - உணவில் நஞ்சு கலத்தல்: உணவில் தீங்குதரும் உயிரிகளின் நஞ்சு சேர்ந்து தொல்லை தருதல். (உயி)

food vacuole - உணவுக்குமிழி: அமீபா, பரமேசியம் முதலிய ஓரணு உயிரிகளில் காணப்படும் கண்ணறையின் செரித்தல் பகுதி. (உயி)

food value - உணவு மதிப்பு: திசுவில் உணவு கனற்சி அடையும்போது உண்டாகும் ஆற்றல். (உயி)

foramen - துளை: எலும்புத்துளை. இதன் வழியே குருதிக்குழாய் களும் நரம்புகளும் செல்லுதல். (உயி)

foramen magnum - பெருந்துளை: இதன் வழியாகத் தண்டு வடம் செல்லுதல், தலை எலும்புக் கூட்டின் பின்புறமுள்ளது. (உயி)

force - விசை: அசைவிலா நிலையிலோ சீரான நேர்விரைவு நிலையிலோ உள்ள ஒரு பொருளின் மீது செயற்பட்டு, அந்நிலையை மாற்ற முயலுவது விசை. அலகு நியூட்டன். (இய)

force, frictional - உராய்வு விசை: இரு பரப்புகளுக்கிடையே உராய்வினால் ஏற்படும் விசை. இது பொருளின் இயக்கத்திற்கு எதிராகச் செயற்படுவது. சொரசொரப்பான பரப்பில் உராய்வு இருக்கும் வழவழப்பான பரப்பில் அது இராது. உராய்வினால் இயங்கும் எந்திரங்களின் பகுதிகள் தேய்வுக்குட்பட்டவை. உயவுப் பொருள்களால் உராய்வைக் குறைக்கலாம். தரையில் செல்லும் ஊர்திக்கு உராய்வு தேவை. சுற்றும் உருளைக்கு உராய்வு கூடாது. (இய)

forensic science - குற்ற (தடய) அறிவியில்: குற்றம் நடந்த இடத்தில் திரட்டப்படும் தடயப் பொருள்களை ஆராய்ந்து குற்ற வாளிகளைக் கண்டறியக் காவல் துறைக்கு உதவுந் துறை. தமிழ்நாடு மாநிலக் குற்ற அறிவியல் ஆய்வகம் சென்னையில் காமராசர் சாலையில் உள்ளது. (உயி)

force ratio - விசைவிதம்: எந்திரலாபம், எந்திரத்தின் வெளிப் பாட்டு விசைக்கும் (பளு) உட்பாட்டு விசைக்கும் (முயற்சி) உள்ள வீதம். (இய)

forests - காடுகள்: சாகுபடி செய்யப்படாததும் மனிதத் தலையீடு அதிகமில்லாதவையுமே காடுகள், வெப்பம், மழையளவு, ஈரப்பதம், தேவையான அளவு இடம் ஆகியவை இவற்றை உண்டாக்குங் காரணிகள். இவை வெப்பமண்டல மழைக்காடுகள், இலையுதிர்காடுகள், ஊசியிலைக் காடுகள், மிதவெப்பமண்டலக் காடுகள் என நான்கு வகைப்படும். இயற்கையில் சமநிலையை நிலைநிறுத்துபவை. காடுகள் அழிந்து வருவதால், தற்பொழுது மர வளர்ப்புத் திட்டம் அரசால் பெரிதும் வற்புறுத்தப்படுகிறது. அதன் பெரும்பகுதியாகச் சமூக வளர்ப்புக்காடுகள் விரைவாக உருவாக்கப்பட்டு வருகின்றன. இக்காடுகளில் அதிகம் வளர்க்கப்படுவது கற்பூரத் தைல மரங்கள். (உயி)

form - வடிவம்: மாறுபடு வகைக்குக்கீழுள்ள வரிசை. கீழ்நிலையிலுள்ள டேக்சான். (உயி)

formalin - பார்மலின்: 40% பார்மல்டிகைடு 8% மீத்தைல் ஆல்ககால், 52% நீர்மம் சேர்ந்த கலவை. ஒடுக்கி, தொற்றுநீக்கி, பூஞ்சைக்கொல்லி, பாதுகாப்புப் பொருள்.(உயி)

format - வடிவமைப்பு: அமைப்பு வரை. காட்சி வெளிப்பாட்டகத்தில் (காட்சித் திரையில்) தகவல்களைத் திட்டப்படுத்தல். அச்சுச்செய்தி, சேமிப்பு ஊடகம் ஆகியவை இதில் அடங்கும். ஒ layout (இய)

formula - 1.வாய்பாடு ஒரு வேதிச் சேர்மத்தின் இயைபைத் தெரிவிக்கும் முறை. அதிலுள்ள அணு எண்ணிக்கையைக் காட்ட மேலே குறி எண்களையும் குறிகளையும் பயன்படுத்தல். எ-டு. சோடியம் குளோரைடு (NaCl) சோடியம் சல்பேட்டு (Na2SO4) 2. கலப்பு இயைபு: ஒரு மருந்திலுள்ள இயைபு 3. உறுப்புகளின் அளவு.

fornix - வளைமுடிச்சு: பாலூட்டிகளின் மூளையிலுள்ள குறுக்கு இணைப்பிக்குக் கீழுள்ள நீள்கற்றை. (உயி)

forward bias - முற்சார்பு: ஓர் இயற்பியல் பண்பு.

fossa - குழிவு: எலும்புக்குழி. ஒ.fovea.

fossils - தொல்படிவங்கள்: புதை படிவங்கள். புவிஒட்டின் படிவப்பாறைகளில் இவை பாதுகாக்கப் பட்டிருப்பவை. (உயி)

fossil fuel - தொல்படிவ எரி பொருள்: நிலக்கரி, எண்ணெய். (வேதி) fourth dimension - நாற்பருமன்: ஐன்ஸ்டின் சார்புக் கொள்கையில் காலம் நாற்பருமனாகும். இக்கொள்கையில் நாற்பரும உலகின் குறிப்பிட்ட நிலைகளாகக் காலமும் இடமும் கருதப்படுதல். (இய)

fovea - குழி: சில முதுகெலும்புகளின் விழித்திரையிலுள்ள ஆழமற்ற குழி. இது மிகக் கூரிய பார்வையிடம் ஒ. fossa. (உயி)

fraction - பகுவை: 1. ஒத்த கொதி நிலைகளைக் கொண்ட நீர்மக் கலவை 2. பின்னம். (ப.து)

fractional crystallisation - பகுத்துப் படிகமாக்கல்: ஒரு நீர்மத்தில் கரைந்துள்ள இரண்டிற்கு மேற்பட்ட பொருள்களைப் பிரிக்கும் முறை. இதில் அவற்றின் வேறுபட்ட கரைதிறன்கள் பயன்படுத்தப்படுகின்றன. எ-டு. உப்புக் கரைசலிலுள்ள உப்பைப் படிகமாக்கிப் பிரித்தல். (வேதி)

fractional distillation - பகுத்து வடித்தல்: இரண்டிற்கு மேற்பட்ட கலவாத நீர்மங்கள் சேர்ந்த கலவையை அந்நீர்மங்களின் வேறுபட்ட கொதிநிலைகளில் பகுத்துப் பிரித்தல். எ-டு. பெட்ரோலியம். (வேதி)

fractures - எலும்பு முறிவுகள்: எலும்புகள் முறிவுக்கு உட்படுதல். இது எளிய முறிவு, கூட்டுமுறிவு என இருவகைப்படும். இளமுறிவு குழந்தைகளுக்கு மட்டுமே ஏற்படுவது. மருத்துவர் உதவி நாடுதலே நல்லது. அறிகுறிகள் வீக்கம், வலி, உருக்குலைவு, வேலை இழப்பு. குறுகல். (உயி)

fragmentation - துண்டாதல்: கீழ்நிலையிலுள்ள பல கண்ணறை கொண்ட உயிர்களில் காணப்பெறும் கலவியிலா இனப்பெருக்கம் பல பகுதிகளாக உடல் பிரிந்து, ஒவ்வொரு பகுதியும் புதிய உயிராதல். எ-டு. தாவரம் - ஸ்பைரோகைரா. விலங்கு - மலேரியா ஒட்டுண்ணி. (உயி)

frame of reference - பார்வை ஆயம்: செயல்முறை நோக்கங்களுக்காக அசையா நிலையில் இருப்பதாக எடுத்துக் கொள்ளப் படும் அச்சுக்களின் தொகுதி. எந்நொடியிலும் இடத்தில் ஒரு பொருளின் நிலையை உறுதி செய்யப் பயன்படுவது. நாற்பருமத் தொடரியத்தில் பார்வை ஆயம் நான்கு ஆய அச்சுகளைக் கொண்டது. இவற்றில் முன்று இடத்தையும் ஒன்று காலத்தையுஞ் சார்ந்தவை. (இய)

francium - பிரான்சியம்: கார உலோகத் தொகுதியைச் சார்ந்த கதிரியக்கத் தனிமம். கதிரியக்கச் சிதைவின் பொழுது சிறிது நேரமே இருக்கக்கூடிய விளைபொருள். யுரேனியத் தாதுக்களில் சிறிதளவுள்ளது. இதற்கு 16 கதிரியக்க ஒரிமங்கள் (ஐசோடோப்புகள்) உண்டு. (வேதி)

Fraunhofer lines- பிரோனோஃபர் வரிகள்: கதிரவ நிறமாலையிலுள்ள இருள் வரிகள். கதிரவனின் வெப்ப உட்பகுதி பார் வைக் கதிர்வீச்சை உமிழ்கிறது. இவ்வீச்சின் சில அலை நீளங்களின் கதிரவ நிறவெளியில் தனிமங்கள் உள்ளன. இத்தனிமங்களின் உறிஞ்சலால் இவ்வரிகள் ஏற்படுதல். (இய)

free electron - கட்டவிழ் மின்னணு: எம் மூலக்கூறுடனும் (அயனி அல்லது அணுவுடனும்) சேராத மின்னணு. மின்புலக் கவர்ச்சியால் கட்டவிழ் நிலையில் இயங்குவது. (இய)

free energy - கட்டவிழ் ஆற்றல்: குறிப்பிட்ட வெப்பநிலையிலும் அழுத்தத்திலும் ஒரு தொகுதியில் வேலை நடைபெறுவதற்கு இருக்கக் கூடிய ஆற்றல். (இய)

free radical - கட்டவிழ் படிகமுலி: ஒற்றை மின்னணுவுள்ள அணு அல்லது அணுத்தொகுதி. (வேதி)

freezing mixture - உறைகலவை: இது பனிக்கட்டியும் உப்பும் சேர்ந்தது. பொருள்களைக் குளிர்விக்கப் பயன்படுவது. (இய)

freezing point - உறைநிலை: திட்ட அழுத்தத்தில், ஒரு நீர்மம் தன் திண்ம நிலையில் சமநிலையிலுள்ள வெப்பநிலை. இதற்குக் கீழ் அது உறைகிறது அல்லது கெட்டியாகிறது நீரின் உறை நிலை 0° செ. (இய)

frequency - அதிர்வெண்: ஓர் அலகுநேரத்தில் (வினாடியில்) ஏற்படும் ஒர் அலை இயக்கத்தின் சுற்றுகளின் எண்ணிக்கை அலகு ஹெர்ட்ஸ். எ-டு. அலை, ஊசல், இருதிசை மின்னோட்டம். (இய)

fresnel - அலகுச்சொல்: அதிர் வெண் அலகு (1012ஹெர்ட்ஸ்) பிரெஞ்சு அறிவியலார் பிரஸ்னல் (1788-1827) பெயரால் அமைந்தது. (இய)

Fresnel biprism - பிரஸ்னல் இரட்டை முப்பட்டகம்: தட்டையான முக்கோணப் பட்டகம். இஃது இருகுறுங்கோணங் களையும் (அக்யூட் ஆங்கிள்) ஒரு விரிகோணத்தையுங் (அப்டியூஸ் ஆங்கிள்) கொண்டது. (இய)

Fresnel lens - பிரஸ்னல் வில்லை: ஒளிவில்லை. இதன் மேற்பரப்பு சிறிய வில்லைகளைக் கொண்டது. குறுகிய குவியத் தொலைவையளிக்குமாறு, அவை அமைக்கப் பெற்றுள்ளன. தலை விளக்குகளிலும் துருவு விளக்குகளிலும் பயன்படல். (இய)

friction, angle of - உராய்வுக் கோணம்: ஒரு பொருள் எல்லாச் சமநிலைகளிலும் உள்ளபோது உராய்வு விசை F செங்குத்து எதிர்வினை R ஆகிய இரண் ஒரே விசையாகத் தொகுக்கலாம். அத்தொகுபயன் விசைக்கும் செங்குத்து எதிர் விசைக்கும் இடையே உள்ள கோணம் உராய்வுக் கோணம் (λ) ஆகும். (இய)

friction, laws of - உராய்வு விதிகள்: 1. உராய்வுவிசை எப்பொழுதும் பொருள் நகர முயலும் திசைக்கு எதிர்த்திசையிலேயே செயற்படும். 2. பொருள் எல்லாச் சமநிலைகளிலும் உள்ளபோது, உராய்வு விசை பொருளை நகராவண்ணம் சிறிதே தடுக்கும் திலையிலுள்ளது. 3. உராய்வு வரம்புக்கும் செங்குத்து எதிர்வினைக்கும் இடையே உள்ள வீதம் மாறாதது. இது தொடர்புள்ள இரு பரப்புகளின் தன்மையைப் பொறுத்தது. 4. எதிர்வினை மாறாத வரை பொருளின் உருவம், பருமன், பரப்பு ஆகியவற்றைப் பொறுத்து உராய்வு வரம்பு மாறுவதில்லை. (இய)

frond - பிரிவிலை: நன்கு பிரிந்த இலைகள். பெரணிகள், பனை ஆகியவற்றில் காணப்படுபவை. (உயி)

frontier technology - எல்லைத் தொழில்நுட்பவியல்.

fronto-parietal bone - சுவர் முன் எலும்பு: இதனை முன்பக்க எலும்பு என்றுங் கூறலாம். தவளையின் மண்டைஓட்டு மேல்பகுதியைத் தோற்றுவிக்கும் நீண்ட தட்டையான எலும்பின் சுவர். (உயி)

frost - உறைபனி: உறைந்த பனித்திவலைகள். நீரின் உறைநிலையை விடக் குளிர்ச்சியாக உள்ள பொருள்களில் நீராவி பதங்கமாவதால் உண்டாகும் பனிக்கட்டியுறை. (இய)

frost bite - பனிக்கட்டு: மிகக் குளிரினால் தோல் காயமுறுதல், சிவத்தல், வீக்கம், வலி, அழுகல் முதலியவை ஏற்படும். பனிநாடுகளில் ஏற்படுவது. (இய)

froth - நுரை: நீர்மத்தின் மேலுள்ள குமிழ்கள். நீர்மத்திலுள்ள வளித் தொங்கல். பரப்பு இழுவிசையினைக் குறைத்து, வந்து கொண்டே இருக்கும் நீண்ட குமிழிகளை உண்டாக்கும் பொருள். (இய)

froth floatation - நுரைமிதப்பு: தாதுக்கூளத்திலிருந்து தாதுக்கனிமத்தைப் பிரிக்கும் முறை. அழுத்தப்பட்ட காற்று நுரைப்பி சேர்க்கப்பட்ட தாதுக்கலவையில் நுரை உண்டாக்குமாறு செலுத்தப்படுகிறது. இச்செயலால் தாதுத் துகள்கள் நீங்குகின்றன. (இய)

fructose - பிரக்டோஸ்: பழச் சர்க்கரை. மிக இனிப்பானது. கரையக்கூடிய படிகக் கெக்டோஸ். தேனிலும் பழங்களிலும் உள்ளது. இனிப்பூட்டும் பொருள் செய்யப் பயன்படல். (உயி)

fruit - கனி: கருவுற்றுப் பழுத்த சூல்பையே கனி. இதுவே உண்மைக்கனி, கருவுறாமல் முதிர்ச்சி அடையுமானால், அக்கணி கருவுறாக் கனி (பார்த்தினோ கார்பிக்) ஆகும். விதை இராது. எ-டு. வாழை, கொய்யா. புல்லி, பூத்தளம் முதலியவை வளர்ந்து கனியின் பகுதியாகுமானால் அது பொய்க்கனி. எ-டு. முந்திரி, ஆப்பிள். தனிக்கனி, திரள்கனி, கூட்டுக்கனி என கனி மூன்று வகைப்படும்.

frustration - உளமுறிவு: இயற் பிறழ்ச்சியுள்ள உளநிலை. இலக்குகளை அடைய முயலுங்கால் எழுந்தடைகளால் தோன்றுவது. (க.உ)

frying - வறுத்தல்: உணவுப் பொருட்களை எண்ணெயில் பொரித்தலை இது குறிக்கும். சுவை இருக்கும். ஆனால், ஊட்டங்கள் குறையும். வறுத்தலைவிடச் சுடுதலும் வேகவைத் தலுமே சிறந்த முறைகள் கட்ட அப்பளம் பொரித்த அப்பளத் தைவிட மேல். (உயி)

FSH follicle stimulating hormone - காம்புகிளர்தூண்டி: முளையடிச் சுரப்பியின் சுரப் பான கொனடோடிராபின், பெண்களில் சூல்பை நுண்ணறைகள் வளர்ச்சியையும் ஆண்களில் விரைவிந்து தோற்றத்தையும் ஊக்குவிக்கின்றன. (உயி)

fuel - எரிபொருள்: எரிக்க, வெப்பம் அல்லது ஆற்றலைத் தரும் பொருள் விறகு, இஃது இயக்கி யின் ஒரு பகுதி மற்றொரு பகுதி தீயாக்கி, இயக்கி எரிபொருள், எரிய உதவும் பொருள் ஆகிய இரண்டினாலுமானது. எ.டு. உயிர்வளி, ஆல்ககால் இயக்கிகள் ஏவுகணை எரிபொருள்கள். இவற்றில் முன்னது எரிய வைக்கும் பொருள். பின்னது எரியும் பொருள். பா. propelant (வேதி)

fuel cell - எரிபொருள் மின்கலம்: மின்கலஅடுக்கு போலவே வேலை செய்வது. வேதிவினையால் மின்சாரத்தை உண்டாக்குவது. எ-டு. அய்டிரஜன் எரி பொருள் மின்கலங்கள். இம்மின் கலத்திற்கு 45-60% பயனுறுதிறன் உண்டு. (இய)

fulcrum - சுழல்புள்ளி, நெம்புகோல் திரும்பும் புள்ளி. (இய)

fulminate of mercury - பாதரசப் பல்மினேட்டு: (Hg(OCN)2) வெடிபொருள், நைட்ரிகக் காடியில் பாதரசத்தைக் கரைத்து. அதனுடன் ஆல்ககாலையும் சேர்க்க. இப்பொருள் கிடைக்கும். (வேதி)

fumigart - புகையூட்டி: புகையூட்ட வளிநிலையில் பயன்படும் வேதிப் பொருள். ஆவியாகக்கூடியது. எ.டு. கார்பன் இரு சல்பைடு. குளோரோபிக்ரின், எத்திலின், மீத்தைல் புரோமைடு, தொற்று நீக்கி.

fumigation - புகையூட்டல்: (வேதி)

fundamental constants, universal constants - அடிப்படை மாறிலிகள், அனைத்து மாறிலிகள்: முழுதும் மாறாத சுட்டளவுகள். மின்னணு ஏற்றம், ஒளி விரைவு, பிராங்க் மாறிலி, ஈர்ப்பு மாறிலி முதலியவை எடுத்துக்காட்டுகள். (இய)

fundamental interactions - அடிப்படை வினைகள்: பொருள்களுக்கிடையே ஏற்படும் நான்கு வகை வினைகளாவன: 1. புவி ஈர்ப்புவினை 2. நலிவினை 3. மின் காந்தவினை 4 வலிவினை (இய).

fundamental units - அடிப்படை அலகுகள்: பெரும்பான்மை அலகுமுறைகளின் அடிப்படையாக அமையும் நீளம், நிறை, காலம் ஆகியவற்றின் அலகுகள். எஸ்ஐ முறையில் மீட்டர், கிலோகிராம், வினாடி ஆகியவை ஆகும். (இய)

fungi - பூஞ்சைகள்: கருப்படல முள்ள உயிர்த்தொகுதி. 90,000 வகைகள், வேற்றக வாழ்விகள். அதாவது சாறுண்ணிகள் ஒட்டுண்ணிகள் ஆகும். பச்சையமில்லாததால் கூட்டு வாழ்விகள். பூஞ்சையைக் கொல்லும் வேதிப் பொருள் பூஞ்சைக்கொல்லி ஆகும். (உயி)

funicle - காம்பு: குல்காம்பு கொப் பூழுடன் இணைய உதவுவது. (உயி)

funiculus - காம்பி: விந்து வடம் அல்லது கொப்பூழ்க்கொடி. (உயி)

funpark- கேளிக்கைப் பூங்கா: விடுமுறை மகிழ்விடங்களில் உள்ளது. பல விளையாட்டுக்களைக் கொண்டது.

fuses - உருகிகள்: காரீயம் வெள்ளியம் சேர்ந்த உலோகக் கலவை. உருகுநிலை குறைவு. எனவே மின்னழுத்தம் அதிக மாகும்பொழுது இவை தாமே உருகி மின்னோட்டத்தைத் தடுக்கும். இவை அமைந்துள்ள கூடு உருகிக்கூடு (பியூஸ்கேரியர்) ஆகும். (இய)

fusible materials - உருகு பொருள்கள்: குறைந்த வெப்ப நிலையில் உருகும் உலோகக் கலவைகள். பிஸ்மத்து, காட்மியம், காரீயம், வெள்ளியம் ஆகியவற்றின் கலவை. (இய)

fusion - இணைவு: வெப்பத்தால் அணுவிலுள்ள கருக்களைச் சேர்த்து, ஆற்றலை வெளிப்படுத்தும் செயல். இந்நெறிமுறையில் அயிட்ரஜன் (நீரியக்) குண்டுகள் செய்யப்படுதல். கதிரவனில் இச்செயல் நடைபெறுகிறது. (இய)

fusion mixture - உருகுகலவை: நீரற்ற பொட்டாசியம் கார்பனேட்டு, சோடியம் கார்பனேட்டு ஆகிய இரண்டும் சேர்ந்த கலவை. (வேதி)

future Indian satellites - எதிர்கால இந்திய நிலாக்கள்: இவை ஆண்டு வரிசைப்படி பின்வருமாறு: (1) ஒஷன்சட் 2001 (2) ஐஆர்எஸ் 2ஏ 2003. 3. ஐஆர்எஸ் (3) 2004. (4) ஐஆர்எஸ் 2பி 2005. (5) அட்மாஸ் 1 2001-2002 (6) அட்மாஸ் 2 2005. 1997 பிப்ரவரி வரை 10 செயற்கை நிலாக்கள் புவியை வலம் வந்துள்ளன. 2001க்குள் 10க்கு மேற்பட்ட நிலாக்கள் வலம் வரும். 1998க்கு முன் இஸ்ரோ இந்திய வானவெளி ஆராய்ச்சியமைப்பு, காரைக்காலில் தன் முதல் டாப்ளர் வானிலை ரேடார் நிலையத்தை அமைக்கும் எனக் கூறப்பட்டது. வானிலைத் துறைக்கு இது திருத்தமாகத் தகவல்களை அளிக்கும். ஆகும் செலவு 9 கோடி. இந்திய வானவெளித்துறை வளர்ச்சியால், செய்தித் தொடர்பு, கல்வி, வாழ்நலம், பொழுது போக்கு, வானிலை, வளக் கண்காணிப்பு முதலியவற்றில் பெரும் நன்மைகள் வாணிப அளவில் ஏற்பட்டுள்ளன. நம்நாட்டுச் சிக்கல்களை நாமே முழுதும் தீர்க்குமளவுக்கு இந்திய வானவெளித் திட்டம் சீரிய முறையில் அமைந்துள்ளது. ஜாபூவா செய்தித் தொடர்பு வளர்ச்சித் திட்டத்தை இஸ்ரோ தொடங்கியுள்ளது. இது நிலாவழிச் செய்திகளை ஊரக மக்களுக்கு வழங்கும்.

மிக முன்னேறிய ரிசோர்சட் என்னும் வளங்காணும் நிலாவையும இந்தியா ஏவும். இஸ்ரோ, கனடா வானவெளி முகமையத்தோடு ஒர் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன்படி இரு நாடுகளும் வானவெளி ஆராய்ச்சியில் ஒத்துழைத்துப் பல நன்மைகள் பெறும். குறிப்பாகத் தொழில்நுட்ப நன்மைகளில் (செய்தி) நிலா, தொலையுணர் நிலா, வளங்காணும் நிலா அதிக நாட்டம் செலுத்தும்.

திருமதி கல்பனா சாவ்லா இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவில் பணியாற்றி வருபவர். இவர் 16.11.97 அன்று புவியைச் சுற்றி வரும் அமெரிக்க விண்வெளி ஒடமான கொலம்பியாவில் 16 நாள் பயணத்தை மேற்கொண்டார். இவருடன் ஐந்து வான வெளி வீரர்களும் சென்றனர். பா. Indian space efforts.

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவியல்_அகராதி/F&oldid=1039057" இலிருந்து மீள்விக்கப்பட்டது