N

NACO, National AIDS Control Organization. நேக்கோ: தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு. இந்திய நிறுவனம்.

nacre-முத்துக்கரு:முத்தைத்தரும் தாய்க்கரு (உயி)

macrolepsy - நாட்துயில்: ஒரு நோய் அல்லது குறைபாடு. பகலில் தூங்க விரும்பும் உந்தல், அடக்க இயலாதது. (உயி)

nadir - சிறுமம்: விண்கோளத்தில் உச்சிக்கு நேர் எதிராக அமையும் புள்ளி. ஆகவே எதிர்நிலைப் புள்ளி. (வானி)

naiad - முற்றிளரி: நீரில் வாழ்ந்து செவுள்களால் உயிர்க்கும் நிறையிளரி. பொதுவாகப் பல பூச்சி வகைகளில் காணப்படுவது. பா.nymph. ஒ. larva (உயி)

nails - நகங்கள்: உயரிய முதுகெலும்புகளின் விரல் நுனியில் காணப்படும் தட்டையான கடினத் தட்டுகள். தேயத்தேய அல்லது நறுக்க நறுக்க வளரக் கூடியவை. (உயி)

nanandry - குருளிகள்: பெண்களை காட்டிலும் ஆண்கள் குட்டையாக இருக்கும் உயிரி வகைகள். எ-டு. சில பசும்பாசிகள். (உயி)

nanometre - நேனோமீட்டர்: அலகுச்சொல். ஒரு மைக்ரோ மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு 106 மீட்டருக்குச் சமம். மில்லி மைக்ரான். நீள அலகு. பழைய சொல் மில்லிமைக்ரான். (இய)

nanotechnology - நேனோ தொழில்நுட்பவியல்: பயனுள்ள நோக்கங்களுக்காக நேனோ துகள்களைச் சேர்க்கும் தொழில் நுட்பம். எ-டு டிஎன்ஏ. இறுதி நேனோ செய்திப் பொருள் மூலக்கூறுகளை தேவைப்பட்ட வடிவங்களில் சேர்ப்பது இந்நுட்பத்தின் சிறப்பு.

napalm bomb - கொடுந்தீக் குண்டு: தீ உண்டாக்கும் குண்டு. அதிகம் தீப்பற்றக் கூடிய பெட்ரோலியப் பசையைக் கொண்டது. இஃது உண்டாக்கும் தீயை அணைப்பது கடினம். ஒரு போர்க்கருவி. (இய)

naptha - நாப்தா: பல தகவுகளில் அய்ட்ரோ கார்பன்கள் சேர்ந்த கலவை. பாரபின் எண்ணெய், நிலக்கரித்தார் ஆகியவற்றிலிருந்து செய்யப்படுவது. (வேதி)

napthalene - நாப்தலீன்: (C10H8). நிறமற்ற பளபளப்பான தகடுகள், நீரில் கரையா. சூடான எத்தனால், குளிர் ஈத்தர், பென்சீன் முதலிய வற்றில் கரையும். பூச்சிக் கொல்லிகள். (வேதி)

narcotics - மரமரப்பிகள்: வலியை நீக்கும் அல்லது தூக்கத்தை உண்டாக்கும் மருந்துகள். மயக்க நிலை அல்லது தூக்கம் அளவுக்கு மீறின், இறப்பை உண்டாக்க வல்லவை. (வேதி)

nares, nostrils - மூக்குத் துளைகள்: மூக்கு குழியிலுள்ள ஓரிணைத் துளைகள், காற்று உள் வர வெளிச் செல்லப் பயன்படுபவை. புற முக்குத் துளைகள் வெளியிலும் உள்மூக்குத் துளைகள் உள்ளும் (வாய்க்குழியிலும்) திறப்பவை. பா, nasal cavity (உயி)

naris - மூக்குத்துளை: பா. nares,

nasal cavity - மூக்குக்குழி: மண மறி உறுப்புகள் உள்ள குழி, புற, மூக்குத் துளைகளால் வாயோடும் தலை மேற்பரப் போடும் தொடர்பு கொள்பவை. மென்படலத்தால் சூழப்பட்டவை. (உயி)

nascent hydrogen - பிறவிநிலை நீர்வளி: புதிதாகத் தோன்றிய நீர்வளி (நீரகம்). நீரை மின்னாற் பகுத்து அல்லது உலோகங்களுடன் காடிகளைச் சேர்த்துப் பெறலாம். அதிக அளவு உள்ளாற்றல் பெற்றது. ஆண்டிமனி, சவ்வீரம், பாசுவரம் ஆகியவற்றின் அய்டிரைடுகளை உண்டாக்கப் பயன்படுதல். (வேதி)

nastic movements, nasties - தூண்டல் இயக்கங்கள்: தாவரத் திசைச்சாரா அசைவுகள். இது ஒளி இயக்கம், வெப்ப இயக்கம் எனப் பலவகை.

natural balance - இயற்கைச் சமநிலை: எலிகள் அதிகமாகும் பொழுது அவை பாம்புகளாலும், மான்கள் அதிகமாகும் பொழுது அவை சிங்கம் புலிகளாலும், உணவாகக் கொள்ளப்படுவதால், அதிகம் பெருகா வண்ணம் கட்டுப்படுத்தப்படுகின்றன. இது போன்று உயிர்களிடையே ஒத்தநிலை ஏற்படுவதற்கு இயற்கைச் சமநிலை என்று பெயர். (உயி)

natural classification - இயற்கைச வகைப்பாடு: ஏற்றுக்கொள்ளப்பட்ட வகைப்பாடு. தாவர உலகைச் சார்ந்தது. புவிஇயல், உருவியல், தாவரவேதிஇயல், நுண் உள்ளியல், உயிரணு மரபணுவியல் முதலிய துறைகளில் செய்த ஆய்வுகள் அடிப்படையில் வகுத்த வகைப்பாடு (உயி)

natural gas - இயற்கைவளி: வளிநிலை அய்டிரோகார்பன்கள் சேர்ந்த கலவை. படிவப்பாறைகளில் காணப்படுவது. பெட்ரோலியப் படிவுகளுடன் கலந்திருப்பது. முதன்மையாக மீத்தேன், ஈத்தேன், புரோபேன், பூட்டேன் ஆகிய வளிகளைக் கொண்டது. எரிபொருளாகவும் கரிக்கருமை செய்யவும் பயன்படுதல். (வேதி)

natural glass - இயற்கைக் கண்ணாடி: பளிங்கு போன்ற கணிப்பொருள். எரிமலைக் குழம்பிலிருந்து விரைவாகக் குளிர்ந்து படிகமாவது. (வேதி)

natural radio activity - இயற்கைக் கதிரியக்கம்: இயற்கை கதிரியக்கப் பொருள்களால் வெளிப்படுத்தப்படும் கதிரியக்கம். எ-டு. ரேடியம். (வேதி)

natural sciences - இயற்கை அறிவியல்கள்: எல்லா அறிவியல்களையும் உள்ளடக்கிய அறிவுத் துறை, அளந்தறியக் கூடிய நிகழ்ச்சிகள் அல்லது ஏற்பாடுகள் பற்றி ஆராய்பவை. இவை தாவரவியல், விலங்கியல், இயற்பியல், வேதியியல், கணக்கு ஆகிய அடிப்படை அறிவியல்களில் நிகழ்பவை. தந்தை அறிவியல் மெய்யறிவியல். தாய் அறிவியல் கணக்கு (ப.து)

natural selection - இயற்கை தேர்வு: வாழ்க்கைப் போராட்டம் என்று தார்வின் (1809-1882) கூறிய முறை. இதற்கேற்பத் தம் சூழ்நிலைக்குக் குறைந்த தகைவுள்ள உயிரிகள் அழியும். நிறைந்த தகைவுள்ளவை வாழும். தார்வின் கொள்கைப்படி வேறு  பட்ட மக்கள் தொகையில் இயற்கைத் தேர்வு தன் செயலாண்மையை நிகழ்த்தி உயிர் மலர்ச்சியை உருவாக்குகிறது. (உயி)

nature of sound waves - ஒலி அலையின் இயல்பு: தோன்றிய இடத்தில் வலிமை மிகுந்தும் பரவப்பரவ வலிமை குறைந்தும் காணப்படும். ஒலிக்கும்போது அலைகள் மட்டும் நகரும். ஊடகம் நகர்வதில்லை. (இய)

nature and nurture - இயற்கையும் செயற்கையும்: மரபுவழிச் செல்லும் காரணிகள் நடுநிலைக் காரணிகள் ஆகிய இரண்டிற்குமிடையே உள்ள வினை. ஒர் உயிரியின் உற்றுநோக்கப்பட்ட பண்புகளை உறுதி செய்யப் பயன்படுவது. (உயி)

nauplius - ஒற்றைக் கண் இளரி: ஒட்டிளரி. நண்டு வகை விலங்குகளின் இளம் உயிர் கண் ஒன்றும் ஒட்டுறுப்புகள் மூவிணையும் இருக்கும். (உயி)

nautical mile - கடல் தொலைவு: கடல் தொலைவை அளக்கப் பயன்படுவது. இங்கிலாந்தில் 6080 அடி அனைத்துலக இலக்கணம் 1852 மீட்டர். 1. அனைத்துலகக் கடல் தொலைவு 115078 நில மைல்கள் ஆகும்.

nebulae - புகைமங்கள்: புகைத் தோற்றமுடைய வானவெளிப் பொருள்கள். தொலைநோக்கி புனையப்பட்ட பின் கண்டுபிடிக்கப்பட்டவை. இவற்றிலிருந்து விண்மீன், முதலிய விண் பொருள்கள் தோன்றின என்பது ஒரு சாரார் கருத்து. (வானி)

neck - கழுத்து: மார்பையும் தலையையும் இணைக்கும் பகுதி. (உயி)

neck bone- கழுத்தெலும்பு: கழுத்திலுள்ள முள்எலும்புகள் (உயி)

necrosis - திசுநசிவு: திசுமடிதல்,(உயி)

nectar-பூத்தேன்: சர்க்கரைப்பாகு போன்ற நீர்மம். தேன் சுரப்பிகளால் சுரக்கப்படுவது. 60% சர்க்கரை உள்ளது. இச்சுரப்பிகள் பூச்சிகளைக் கவரும் தாவரங்களில் இருக்கும். (உயி)

neel point - இயல்புநிலை: காந்த ஏற்புத்திறன் இயல்பாகும் வெப்பநிலை. (இய)

Neemgold - வேம்புப்பொன்: நல்ல பயன்தரும் சூழ்நிலைத் தகவுள்ள தொற்றுக் கொல்லி, வேம்பு அடிப்படையில் உருவாக்கப்பட்டது. பேரா. கோவிந்தாசாரியாரும் அவர்தம் குழுவினரும் உருவாக்கியது. (1994).

NEERI, National Environmental Engineering lnstitute - நீரி: தேசியச் சூழ்நிலைப் பொறிஇயல் நிலையம். சூழ்நிலையைக் கண்காணிக்கும் அமைப்பு, சென்னையில் உள்ளது.

negative lens - எதிர்க்குறி வில்லை: எதிர்க்குறிக் குவியத் தொலைவுள்ள வில்லை. (இய)

negative pole - எதிர்முனை: காந்தத்தின் எதிர்முனை. (இய) nekton - நீந்துயிர்கள்: ஏரி, கடல், பெருங்கடல் ஆகியவற்றில் வீறுடன் நீந்தும் விலங்குகள். (உயி)

nemathelminthes, nematodes - இழைப்புழுக்கள்: துண்டங்கள் இல்லா விலங்குகள் பிரிவு 12,000 வகைகள். நீண்டதும் மெலிந்ததுமான உருளை வடிவ உடல், மூச்சுறுப்புகள் இல்லை. குருதிக் குழாய் மண்டலமும் இல்லை. எ-டு, நாக்குப்பூச்சி. (உயி)

nematicide - இழைப்புழுக் கொல்லி: உருளைப் புழுக்களைக் கொல்லும் மருந்து (உயி)

nematocyst - கொட்டுமணு: அய்ட்ரா, இழுதுமீன் முதலியவற்றிலுள்ள கொட்டும் உறுப்பு. (உயி)

nematology - உருளைப்புழுவியல்: உருளைப் புழுக்களை ஆராயுந்துறை. (உயி)

nematomorpha - குற்றிழைப் புழுக்கள்: உடல் மயிரிழை போன்றது. முன் முனை கூரற்றது. கரடு முரடான தோலி (குயூட்டிகள்) உண்டு. முதிரிகள் தடையின்றி நீந்துபவை. இளரிகள் பூச்சிகளில் ஒட்டுண்ணிகளாக வாழ்பவை. (உயி)

nemetaphore - இழைத்தாக்கி: வாயற்ற நீராம்பு (பாலிப்). உணவைத் தன் போலிக்கால்களால் பற்றுவது. (உயி)

neo-Darwinism - புதுத் தார்வினியம்: இயற்கைத் தேர்வு வழியமைந்த உயிர்மலர்ச்சி குறித்த தார்வின் கொள்கை. இமண்டல் ஆராய்ச்சியின் விளைவாக எழுந்த உண்மைகளால் திருத்தி அமைக்கப்பட்ட கொள்கை. தற்காலத் தொகுப்பு (உயி)

neodymium - நியோடைமியம்: Nd, மென்மையானதும் வெள்ளி போன்றதுமான உலோகம். மிஷ் உலோகக் கலவையில் பயன்படு வது. 1885இல் வான்வெல்ஷ்பாக் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. (வேதி)

neo-Lamarckism - புது லெமார்க்கியம்: உயிர்மலர்ச்சி பற்றி மாற்றங்கள் பெற்ற லெமார்க்கு கொள்கை. இயற்கைத் தேர்வுக் கருத்துக்களையும் சேர்ப்பது. பொதுவாக மரபுவழி மாற்றங்கள், குறிப்பட்ட சூழ்நிலைத் தாக்கத்திற்கு நேரிடையாகத் தொடர்புடையவை என்று இன்றும் வற்புறுத்துவது. பா. (உயி)

neon - நியான்: Ne செயலற்ற ஓரணுவளி நிறமற்றது. மனமற்றது. காற்றில் சிறிதளவே உள்ளது. நீர்மக்காற்றை வடித்துப் பகுக்கக் கிடைக்கும். நியான் குறிகளிலும் விளக்குளிலும் பயன்படல். (வேதி)

neoteny - பேரிளமை: மாறா இளமை. இளமைப் பண்புகள் இருக்கும்போதே ஒர் உயிரி இனப்பெருக்கம் முதலிய செயல்களைச் செய்தல். இது தற்காலிகமாகவும் நிலையாகவும் இருக்கலாம். விலங்கிற்கு ஆக்சோலாட்டிலும் தாவரத்திற்கு லெம்னாவும்

எடுத்துக்காட்டுகள். (உயி)

neotype - புதுவகை: மூலப்பொருள் அழிந்தாலோ இழக்கப்பட்டாலோ மாதிரிவகையாகப் பயன்படுமாறு வடிவமைக்கப்படும் மாதிரி. (உயி)

nephelometer - நிற ஒளி அளவுமானி: தொங்கல் கரைசல்களின் செறிவினை, ஒளிச்சிதறல் மூலம் அளக்குங்கருவி. அளக்கும் செயல் நிற ஒளி அளவியல் (நெப்லோமெட்ரி) (இய)

nephralgia - சிறுநீரக வலி: சிறு நீரகத்தில் ஏற்படும் இடர். (மரு)

nephridium - சிறுநீரகம்: பல முதுகெலும்பிகளின் குழாய் வடிவக் கழிவுறுப்பு. சிறுநீரைப் பிரித்தல் வேலையாகும். (உயி)

nephritis - சிறுநீரக அழற்சி: சிறுநீரக வீக்கம். (உயி)

nephron - சிறுநீர்ப்பிரித்தி: சிறு நீரகத்தின் அமைப்பலகும் வேலை அலகுமாகும். குழல், முடிச்சு ஆகிய இரு பகுதிகளாலானது. மனிதச் சிறுநீரகங்கள் ஒவ்வொன்றிலும் பத்து இலக்கப் பிரித்திகள் உள்ளன. ஒன்றின் குறுக்களவு 200 μm (உயி)

Neptune - நெப்டியூன்: கதிரவன் குடும்பத்தில் 8ஆவது வரிசையிலுள்ள கோள். 1846இல் கேல் என்பார் கண்டுபிடித்தது. இரு நிலாக்கள் உண்டு. (வானி)

neptunium - நெப்டூனியம்: Np. நச்சுத் தன்மையுள்ள தனிமம். யுரேனியத்தைக் காட்டிலும் அதிக அணு எண் கொண்டது. 1940இல் முதன்முதலில் தொகுக்கப்பட்டது. யுரேனியத் தாதுக்களில் சிறிதளவு உள்ளது. புளுட்டோனியம் 239 உற்பத்தியில் துணை வினைப் பொருளாகக்கிடைப்பது. (வேதி)

nerve - நரம்பு: 1. அச்சியன் (ஆக்சான்) திரள். ஓரலகாக இணைந்திருப்பது. 2 மையநரம்பு மண்டலத்திற்கு வெளியே அமைந்துள்ள நரம்பிழைத்திரள். 3. இலை நரம்பு: நரம்பிழை என்பது நரம்பனின் (நியூரான்) அச்சியன் (ஆக்சான்) ஆகும். (உயி)

nerve cell - நரம்பணு: நரம்பன். பா. neuron. (உயி)

nerve cord - நரம்பு வடம்: தண்டு வடம். பா. spinal cord (உயி)

nerve fibre - நரம்பிழை: நரம்பனின் அச்சிழை. பா. neuron (உயி)

nerve impulse - நரம்புத்துடிப்பு: நர்பணுக்கள் வழியாகச் செல்லும் குறிபாடு. எல்லா நரம்புத்துடிப்புகளும் வடிவத்திலும் வலுவிலும் ஒத்தநிலை உள்ளவை. (உயி)

nervous system - நரம்பு மண்டலம்: மூளையும் அதன் பகுதிகளும் அதனோடு தொடர் புடைய நரம்புகளும் அடங்கிய தொகுதி, உடலின் வேலைகள் யாவற்றையும் ஒருமுகப்படுத்திக் கட்டப்படுத்துவது. இதனைத் தொலைவரிக் கம்பி மண்டலத்திற்கு ஒப்பிடலாம். உடலிலுள்ள மண்டலங்களுக்கெல்லாம் தலையாய மண்டலம் (உயி)

Nesseler's solution - நெசலர் கரைசல்: பொட்டாசியம் அய்டிராக்சைடு கரைசலில் பொட்டாசியம் மெர்க்குரிக அயோடைடைச் சேர்த்துப் பெறலாம். அம்மோனியாவைக் கண்டறியும் பொருள். இவ்வளியுடன் சேர்த்து மாநிற (செம்பழுப்பு) வீழ்படிவைக் கொடுக்கும். (ஜீலியஸ் நெசலர்) (1827-1905) என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டது. (வேதி)

net - இணையம்: பா. internet

network - வலையமைவு: 1. கணிப்பொறி முனையங்கள் அமைந்த தொகுதி. தகவல் தொடர்பு வழங்குவது. 2. பொதுக் கட்டுப்பாட்டில் அமைந்த செய்தித் தொடர்பு முறை. 3. குறிப்பிட்ட வேலையுள்ள கலவைச்சுற்று. 4. ஒரே நிகழ்ச்சியைப் பரப்பும் வானொலி தொலைக்காட்சி நிலையங்களின் தொகுதி, 5. வலைப்பின்னல் அல்லது ஒருங்கமைவு.

network programme - ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி: தொலைக் காட்சி ஒருங்கிணைந்து வழங்கும் திகழ்ச்சி. (இய)

neural canal - தண்டுவடக்குழாய்: முதுகெலும்பிலுள்ளது. தண்டு வடம் செல்லும் வழி. (உயி)

neure lemma - நரம்புறை: நரம்பிழைகளின் நைவான வெளிப்படல உறை. (உயி)

neurocoel - நரம்புக்குழி: தண்டு வட உயிரிகளின் (கார்டேட்டா) மைய நரம்பு மண்டலத்திலுள்ள குழி. (உயி)

neurology - நரம்பியல்: நரம்பு மண்டலம், அதன் வேலைகள், கோளாறுகள் முதலியவற்றை ஆராயுந்துறை. (உயி)

neuron - நரம்பன்: நரம்பணுவும் அதன் கிளைகளும். நரம்புத் துடிப்புக்களைக் கடத்துவது. இதற்கு உடலும் அச்சியனும் கிளைகளும் உண்டு.

neuropathology - நரம்புநோய் இயல்: நரம்புமண்டலம் நோய்களை ஆராயுந்துறை. (உயி)

neurotoxin - நரம்பு நஞ்சு: மைய நரம்பு மண்டலத்தைத் தாக்கும் நச்சு (உயி)

neutral - நடுநிலை: 1. இரு எதிர்நிலைகளோடும் தொடர்பில்லாதது. 2. காடிநிலை காரநிலை 3. நேர்மின்னேற்றம்(+) எதிர் மின்னேற்றம்(-). 4. நடுநிலைச் சமநிலை. (இய)

neutralization - நடுநிலையாக்கல்: காடியுங் காரமும் ஒன்றை மற்றொன்று சிதைத்துக் கொள்ளும் வினை நடுநிலையாக்கல். இதனால் உண்டாவது உப்பு. ஆகவே, உப்பைப் பெறும் முறைகளில் இதுவும் ஒன்று.

காடி + காரம் → உப்பு + நீர்

H2SO4 + 2NA(OH) → NaSO4 + H2O

newton - நியூட்டன்: N. அலகு சொல் 1 கிலோகிராம் பொருண்மையுள்ள பொருளின் மீது, செயற்பட்டு அதில் ஒரு மீட்டர் வினாடி முடுக்கத்தை உண்டாக்கும் விசை. எம்.கே.எஸ் முறையில் விசையின் சார்பிலா அலகு. மதிப்பு மாறாதது. (இய)

new physics - புதிய இயற்பியல்: விண்ணகம், விண்வெளி நிகழ்ச்சிகள், விண்ணகவானியல், ஏவுகணைகள், செயற்கை நிலாக்கள் முதலியவை பற்றி ஆராயும் புதிய துறை. (இய)

Newton's law of cooling - நியூட்டன் குளிர்தல் விதி: ஒரு பொருளின் வெப்ப இழப்பு அளவு, அப்பொருளுக்கும் அதன் சூழ்நிலைக்குமிடையே உள்ள வெப்பநிலை வேறுபாட்டிற்கு நேர்வீதத்திலிருக்கும். அது பொருளின் இயல்பைப் பொறுத்ததன்று. (இய)

Newton's law of gravitation - நியூட்டன் ஈர்ப்பாற்றல் விதி: பருப்பொருள் ஒன்றின் ஒவ்வொரு பகுதியும் விண்ணகத்திலுள்ள பொருள் ஒன்றின் மற்றொரு பகுதியை ஈர்க்கும் விசை அதன் பொருண்மைக்கு நேர் வீதத்திலும், தொலைவின் வர்க்க மூலத்திற்கு எதிர்வீதத்திலும் இருக்கும். (இய)

Newton's laws of motion - நியூட்டன் இயக்கவிதிகள்: ஐசக்கு நியூட்டனின் (1642 - 1727) புகழ்பெற்ற இயக்கவிதிகளாவன: 1. ஒரு நேர்க்கோட்டில் ஒரு பொருள் தன் சீரான இயக்கத்திலோ அசைவற்ற நிலையிலோ தொடர்ந்திருக்கும். புற விசையினால் அந்நிலை மாற்றப்படாத வரை அது தொடர்ந்திருக்கும். 2. உந்தத்தின் மாறுமளவு அதன் மீது உண்டாகிய விசைக்கு நேர் வீதத்திலமைந்து விசைத்திசை நோக்கியே இருக்கும். 3. ஒவ்வொரு வினைக்கும் சமமானதும் எதிரானதுமான ஒரு வினை உண்டு. (இய)

new elements 104-109; 110 - 112:- புதிய தனிமங்கள் 104 109 110-112: கடந்த இருபது ஆண்டுகளில் இவை கண்டறியப் பட்டவை அல்லது உருவாக்கப்பட்டவை. உருவாக்கிய கருவி முடுக்கி, ஆய்வகம் உருவாக்கிய நாடுகள் அமெரிக்கா, உருசியா, ஜெர்மனி. இவற்றில் 110-112 என்பவை இன்னும் பெயரிடப்படவில்லை. 104-109 ஆகியவற்றின் பெயர்களாவன: 1. 104 ரூதர்போர்டியம் Rf. 2. 105 டப்னியம் Db, 3. 106 போர்கியம் Sg, 4. 107 போரியம் Bh, 5. 108 ஹேசியம் Hs, 6. 109 மெல்டர்னியம் Mt.

Newton’s rings - நியூட்டன் வளையங்கள்: மறிக்கும் பரப்பில் அதிக வளைவு ஆரங்கொண்ட வில்லையை வைத்து, மேலிருந்து ஒற்றைய நிற ஒளியால் ஒளிபெறச் செய்து உண்டாக்கப்படும் குறுக்கீட்டுக் கோலங்கள். இந்த ஏற்பாட்டை மேலிருந்து நுண்ணோக்கியால் பார்க்கத் தொடு புள்ளிக்குப் பொது மையமாக ஒளிர்வான வளையங்களும் கறுப்பு வளையங்களும், மையத்தில் கறுப்புப் புள்ளியும் தெரியும். (இய)

neutron - அல்லணு: பா. atom. (இய)

neutron number - அல்லணு எண்: பருப்பொருள் அணுக்கருவிலுள்ள அல்லணுக்களின் எண்ணிக்கை, (இய)

neutron star - அல்லணு விண்மீன்: தன் படிநிலை வளர்ச்சி முடிந்த விண்மீன். அதன் அணுக்கரு எரிபொருள் தீர்ந்த நிலை. (வானி)

NGO, non-government organization - என்ஜிஒ., அரசு சாரா அமைப்பு- எயிட்ஸ் ஒழிப்பு முதலிய சமூகப்பணிகளில் ஈடுபடுவது.

niche - வாழ்நிலைமை: தான் வாழும் கூட்டத்தில் ஒரு விலங்கு அல்லது தாவரத்தின் நிலையும் ஏனைய உறுப்பினிகளோடு அதன் உயிர்த் தொடர்பும் நாட்டத் தொடர்பும் வாழ் நிலைமையாகும். (உயி)

nichrome - நிக்ரோம்: நிக்கல், குரோமியம், இரும்பு சேர்ந்த உலோகக்கலவை. உயர்ந்த உருகு நிலையும் தடைத்திறனும் கொண்டது. மின்தடைகள் செய்ய. (வேதி)

nickel - நிக்கல்: Ni. வெள்ளி போன்ற வெண்ணிறக் காந்த உலோகம். தகடாக்கலாம். கம்பியாக்கலாம். காற்று, ஈரம் பாதிக்கா. மின்முலாம் பூசுவதிலும் கறுக்கா எஃகு செய்வதிலும் பயன்படல். (வேதி)

nickel acetate - நிக்கல் அசெடேட்டு: கரையக்கூடிய பசுமை நிறப்படிகம். நிக்கல் முலாம் பூச. (வேதி)

nickel carbonate - நிக்கல் கார்பனேட்டு: NiCO3, 6H2O. பசுமையான படிகம். நிக்கல் உப்புக்கரைசலில் சோடியம் இருகார்பனேட்டு கரைசலைச் சேர்த்துப் பெறலாம். நீரில் கரையாது. காடிகளில் கரையும். மின்முலாம் பூசவும் பீங்கான் தொழிலிலும் பயன்படல். (வேதி)

nickel plating - நிக்கல் முலாம் பூசுதல்: மின்னாற் பகுப்பு முறையில் ஒர் உலோகத்தின் மீது நிக்கல் உலோகத்தைப் படியச் செய்தல். (வேதி)

nickel silver - நிக்கல் வெள்ளி: ஜெர்மன் வெள்ளி, செம்பு நிக்கல் துத்தநாகம் சேர்ந்த கலவை. வெள்ளி முலாம் பூசுதலிலும் குரோமிய முலாம் பூசுதலிலும் பயன்படல். (வேதி)

nickel sulphate - நிக்கல் சல்பேட்டு: NiSO4 7H2O. பசும்படிகங்கள். நீர்த்த கந்தகக்காடியில் நிக்கல் கார்பனேட்டைக் கரைத்துப் பெறலாம். பீங்கான் தொழிலிலும் வண்ணத் தொழிலிலும், மெருகேற்றிகளிலும் பயன்படுதல். (வேதி)

nicol prism - நிக்கல் முப்பட்டகம்: கால்சைட்டுப் படிகத்திலிருந்து செய்த ஒளிக்கருவி. தளமுனைப் படு ஒளி பெறப் பயன்படுதல், (இய)

nicotine - நிக்கோட்டின்: C10H14N2 நிறமற்ற எண்ணெய் போன்ற நீர்மம், நீரில் எளிதில் கரையும். இதன் மணம் அருவருக்கத்தக்கது. புகையிலையிலிருந்து வேறுபட்டது. (வேதி)

nictitating membrane - கண்கொட்டிமை: மூன்றாங் கண்ணிமை. ஒளி புகக்கூடிய மெல்லிய படலம், தவளை, பறவை முதலிய விலங்குகளில் காணப்படுவது, விழிவெண் படலத்திற்குக் குறுக்கே பக்கவாட்டில் மூடித்திறப்பது. (உயி)

night temperature - இரவு வெப்ப நிலை: இருட்டுக்காலத்தில் உயிரிகளைச் சூழ்ந்துள்ள வெப்ப நிலை. இது பல தாவரங்களின் வளர்ச்சியைப் பாதிப்பது. குறைந்த இரவு வெப்பநிலை மூச்சுவிடும் அளவைக் குறைக்கவல்லது. (உய)

niobium - நியோபியம்: Nb. அரிய சாம்பல்நிற உலோகம், டேண்ட்லைட்டுக் கனிமத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. இதன் தொடக்க காலப்பெயர். கொலம்பியம். கறுக்கா எஃகில் சிறிதளவு அமைந்து. உயர்ந்த வெப்பநிலையில், அதன் அரிமானத் தடையைப் பாதுகாப்பது. (வேதி)

nipple - காம்பு: முலைக்காம்பு, மடிக்காம்பு. குழந்தை அல்லது கன்றுபால் குடிக்கும் காம்பு, பால் சுரப்பிகளின் முனையில் இருப்பது (உயி)

nit - நிட்: அலகுச்சொல். ஒளிர்வின் அலகு. ஒரு சதுரமீட்டருக்கு ஒரு கேண்டலா. (இய)

nitrate - நைட்ரேட்:நைட்டிரிக்காடி உப்பு. (வேதி)

nitrating acid - கரிம படுவினைக் காடி: நைட்ரிக்காடியும் கந்தகக் காடியும் சேர்ந்த கலவை. கரிம படுவினைக்குப் பயன்படல். (வேதி)

nitre, saltpetre - வெடியுப்பு: பொட்டாசியம் நைட்ரேட் (வேதி)

nitric acid - நைட்ரிகக்காடி: HNO3 புகையும் நிறமற்ற நீர்மம். முச்சுத் திணறும் மனம். நீரில் கரைவது. மருந்துகள், சாயங்கள், வெடி மருந்துகள் முதலியவை செய்யப் பயன்படுதல். (வேதி)

nitrile rubber - நைட்டிரைல் ரப்பர்: பூட்டாடைன் என்னும் வேதிப்பொருளின் உடன் பல்படி (கோபாலிமர்) ஆகும் வளையங்கள். நீர்ப்பாய்ச்சும் குழாய்கள் முதலியவை செய்யப்பயன்படுதல். (வேதி)

nitrobenzene - நைட்ரோ பென்சின்: C6H5NO2. வெளிறிய மஞ்சள்நிற நீர்மம். கசப்பு வாதுமை மணம். இதன் ஆவி நஞ்சு, பென்சினைக் கரிம  படுவினைக்கு உட்படுத்திப்பெறலாம். கரைப்பான். உயிர்வளிஏற்றி, அனிலைன், தரைமெருகேற்றிகள் முதலியவை செய்யப்பயன்படுதல். (வேதி)

nitrocellulose - நைட்ரோ செல்லுலோஸ்: பஞ்சு போன்ற திண்மம். 10-14% நைட்ரஜன் உண்டு. ஏவுகணை இயக்கி, வெடிமருந்துகள், விரைந்துலரும் கரைப்பான்கள் செய்யப்பயன்படுதல். (வேதி)

nitrogen - நைட்ரஜன், வெடிவளி (வெடியம்): N. நிறமற்றது. சுவையற்றது. மணமற்றது. வளி நிலையில் உள்ளது. தனி நிலை நைட்ரஜனாகக் காற்றில் நிரம்ப உள்ளது. (4000 மில்லியன் டன்கள்). தாவர விலங்கு வாழ்க்கைக்கு மிக இன்றியமையாதது. அம்மோனியா, நைட்டிரிகக்காடி, நைட்டிரைடுகள் முதலியவை உண்டாக்கப் பயன்படுதல். (வேதி)

nitrogen balance - நைட்ரஜன் சமநிலை: இதனை நைட்ரஜன் நடுநிலை என்றும் கூறலாம். ஒர் உயிரி நைட்ரஜனை உட்கொள்வதற்கும் வெளியேற்றுவதற்கும் இடையே உள்ள வேறுபாடு. வளருங் குழந்தைகளிடத்து இது நேர்க்குறி(+), நோயாளிகளிடத்து எதிர்க்குறி(-). (உயி)

nitrogen cycle - நைட்ரஜன் (வெடி வளிச்) சுழற்சி: இதனை நைட்ரஜன் வட்டம் என்றுங்கூறலாம். கனிமப் பொருள், கரிமப்பொருள் ஆகிய இரண்டின் வழியாக மட்டுமே நைட்ரஜன் உயிரிகளின் உடலுக்குள் செல்லக்கூடியது. நைட்ரஜனைத் தக்கவைக்கும் குச்சியங்கள் (பாக்டீரியா) காற்றுவெளி நைட்ரஜனை நிலைப் புடுத்துகின்றன. இந்த வளியைத் தாவரங்கள், உறிஞ்சிப் புரதம் தொகுக்கின்றன. இதை விலங்குகள் உட்கொள்ளும் பொழுது, அது விலங்குப் புரதமாகின்றது. இறுதியாகத் தாவரங்களும், விலங்குகளும் மடிகின்றபொழுது, அவை எளிய நைட்ரஜன் ஊட்டமுள்ள சேர்மங்களாகச் சிதைகின்றன. நிலக்கரி, மரம் ஆகியவை எரிக்கப்படும் போதும், நைட்ரஜன் காற்று வெளிக்குச் செல்கின்றது. ஆக, உயிர்த் தொகுதிகள் மூலம் நைட்ரஜன் மீண்டும் மீண்டும் சுழல்கிறது. இவ்வாறு பலநிலைகளில் தாவரங்களுக்குக் காற்று வெளி நைட்ரஜன் செல்லுதலும், தாவரங்கள் விலங்குகள் ஆகியவற்றிலிருந்து மீண்டும் நைட்ரஜன் காற்று வெளிக்குச் செல்லுதலுமே நைட்ரஜன் சுழற்சியாகும். இயற்கை நன்கொடைகளில் இதுவும் ஒன்று. (உயி)

nitrogen fixation - நைட்ரஜனை நிலைப்படுத்துதல்: நைட்ரஜன் சேர்மங்களாகக் காற்றுவெளி நைட்ரஜன் மாற்றப்படும் வினை. பா. nítrogen cycle. (வேதி)

nitroglycerine - நைட்ரோ கிளைசரின்: நிறமற்றது. நச்சுத் தன்மை யுள்ளது. எண்ணெய் போன்ற நீர்மம், அடர் நைட்டிரிகக் காடி, கந்தகக்காடி ஆகியவை சேர்ந்த குளிர்கலவையில் கிளைசராலை மெல்லியதாக ஒடச்செய்ய, இப்பொருள் கிடைக்கும். டைனமைட்டின் ஒரு பகுதிப் பொருள். (வேதி)

nitrometer - நைட்ரோமானி: நைட்ரஜனையும் அதன் சேர்மங்களையும் மதிப்பிடுங் கருவி. (வேதி)

Nobel prizes - நோபல் பரிசுகள்: ஸ்வீடிஷ்நாட்டு அறிவியலார் ஆல்பிரட்டு நோபல் (1833-96) என்பவரால் தொடங்கப்பட்டவை. வேதியியல், இலக்கியம், அமைதி, இயற்பியல், மருத்துவம் ஆகிய துறைகளில் தேர்ந்த அறிவியலாருக்கு அளிக்கப்படு பவை. 1969இல் பொருளியலும் சேர்க்கப்பட்டது. 1913இல் இலக்கியத்திற்குத் தாகூரும் 1930இல் இயற்பியலுக்கு சி.வி. இராமனும் 1968இல் அரிகோவிந்து கொரோனோ மருத்துவத்திற்கும் 1979இல் அன்னை தெரசா அமைதிக்கும் 1983இல் சுப்பிரமணியம் சந்திரசேகர் இயற்பியலுக்கும் அமர்த்தியா சென் பொருளியலுக்கும் நோபல்பரிசு பெற்ற இந்தியப் பெருமக்கள். (ப.து.)

nobellium - நோபலியம்: கதிரியக்க உலோகம். ஜிராசோ, சீபாக் ஆகிய இருவரும் 1966இல் இதை இனங் கண்டறிந்தனர். மாற்றுப் பெயர் உன்னில்பியம். புவியில் இயற்கையாகக் கிடைப்பதில்லை. குறுகிய நேரம் இருக்கக்கூடிய பல சேர்மங்கள் இதிலிருந்து தொகுக்கப்படுகின்றன. (வேதி)

noble gases - பெரும்பேற்று வளிகள்: ஒரணுவும் செயல் திறனும் கொண்டவை. எ-டு. ஆர்கன், ஈலியம், நியான், கிரிப்டான், செனான், ரேண்டன், சிறு அளவுகளில் காற்று வெளியில் உள்ளவை. (வேதி)

noble metals - பெரும்பேற்று உலோகங்கள்: பெரன், பிளாட்டினம், வெள்ளி ஆகியவை. இவை அரிமானத்திற்குட்படா, காற்றில் பளபளப்பு குறையா, நீரிலும் கரையா. காடிகளும் எளிதில் கரைக்க இயலா இவற்றை மேல் உலோகங்கள் என்றும் கூறலாம். இவற்றிற்கு நேர் எதிரானவை கீழ் அல்லது அடி (பேஸ்மெட்டல்ஸ்) உலோகங்கள் ஆகும். எ-டு. செம்பு, காரீயம், துத்தநாகம். (வேதி )

noctambulation - தூக்கத்தில் நடத்தல்: ஒர் உளவியல் குறைபாடு பா. somnambulism. (உயி)

nocturia - இரவு நீர்க்கழிவு நோய்: சிறுநீரக நோய். சிறுநீரக அதிகம் கழிவதால், இரவில் தூக்கம் வராதநிலை. (உயி)

node - கணு: 1. நிலையான அலைக் கோலத்தில் அதிர்வு குறைவாக இருக்கும் புள்ளி. ஒ. antinode. 2. தண்டில் இலை இணைந்துள்ள இடம், உப்பி இருக்கும். (ப.து) nodule - வேர்முண்டு: அவரைக் குடும்பத் தாவரங்களில் வேர் முண்டுகள் உண்டு. இவற்றில் குச்சியங்கள் வாழ்ந்து நைட்ரஜன் கூட்டுப் பொருளை உண்டாக்குகின்றன. தங்களுக்கு வேண்டிய மாப்பொருளைத் தாவரத்திலிருந்து பெறுகின்றன. எ-டு. ரைசாபியம் என்னும் குச்சியம். (உயி)

noise - ஓசை: ஒழுங்கற்றதும் சீரற்றதுமான அதிர்வுகளால் உண்டாவது, இதனை இரைச்சல் என்றுங் கூறலாம். (இய)

nomad - நாடோடி: தான் தோன்றுமிடத்திலிருந்து இடம் பெயரும் உயிரணு ஒரு திரிவி. எ-டு விழுங்கணுக்கள். (உயி)

non-aqueous solution - நீரற்றகரைசல்: கரைப்பான் நீராக இல்லாத கரைசல். இக்கரைப்பான் கனிமமாகவோ, கரிமமாகவோ முன்னணு சார்ந்ததாகவோ சாராததாகவோ இருக்கும். (வேதி)

non-linear material - நீளச் சார்பிலாப் பொருள்: நீளச் சார்பு நிகழ்ச்சி இல்லாத பொருள். எ-டு அரைக்கடத்திகள், கரிமத் திண்மங்கள்.

non-metllic elements - அலோகத் தனிமங்கள்: மின் எதிர்த் தனிமங்கள். இவற்றின் ஆக்சைடுகள் காடியைக் கொடுக்கும். இவை திண்மம் (கரி) நீர்மம் (புரோமின்) வளி (நைட்ரஜன்) என்னும் நிலகளில் இருக்கும். (வேதி)

non-polar compound - முனைபடாச் சேர்மம்: இருமுனைத் திருப்புத் திறன் இல்லாத சேர்மம். எ-டு. பென்சீன், கார்பன் நாற்குளோரைடு. (வேதி)

non-volatile oils - ஆவியாகா எண்ணெய்கள்: இவை ஆவியாகாதவை. தேங்காய் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் முதலியவை. ஒ. volatile oils. (உயி)

normality - இயல்மை: ஒரு லிட்டர் கரைசலில் உள்ள கிராம் சமான எடைகளின் எண்ணிக்கை. நார்மாலிட்டி = ஒரு லிட்டர் கரைசலில் கரை பொருள் எடை/கரைபொருளின் கிராம் சமான எடை (வேதி)

normal solution - இயல்புக்கரைசல்: ஒரு கிராம் சமான எடையுள்ள கரைபொருள் 1 லிட்டர் கரைப்பானில் கரைந் திருத்தல், (வேதி)

normal spectrum - இயல்புநிறமாலை: அலைநீள வேறுபாட்டிற் கேற்பக் கோணங்களில் பிரிக்கப் பட்ட நிறவரிகளைக் கொண்ட நிறமாலை. (இய)

nose - மூக்கு: முகத்தின் நீட்சி. மணமறியவும் மூச்சுவிடவும் பேசவும் பயன்படும் உறுப்பு. (உயி)

nostrils, nares - மூக்கத் துளைகள்: மூக்கக் குழியிலுள்ள இரு திறப்புகள். மனிதனுக்கு 2 உள் மூக்கத் துளைகளும் 2 வெளி மூக்குத் துளைகளும் உண்டு. (உயி)

note - இசைஒலி: குறிப்பிட்ட உரமுள்ள இசைக்குறிப்பு. (இய)

notochord - முதுகுத்தண்டு: உயிரனுக்களாலான தனிவடம். தண்டுவட முன்னோடி. முதுகெலும்பு தோன்றியதும் மறைவது. சில கீழின விலங்குகளில் வாழ்நாள் முழுதும் நிலைத்திருப்பது. (உயி)

NTP, normal temperature and pressure - இயல்பு வெப்பநிலையும் அழுத்தமும்: இயல்பு வெப்பநிலை 273° K அழுத்தம் 76 செ.மீ. (இய)

nucellus - சூல்திசு: சூலில் அமைத்துள்ள பஞ்சுத்திசு. உறையில் விதையுள்ள தாவரங்கள், உறையில் விதையில்லாத் தாவரங்கள் ஆகியவற்றின் பெருஞ்சிதலகமாக (மெகாஸ்போரியம்) இதனைக் கருதலாம். சூல்துளை வழியாக மகரந்தக் குழல் இத்திசுவிற்குச் செல்கிறது. (உயி)

nuclear battery - அணுக்கரு மின்கலம்: தனியாகவோ தொகுதியாகவோ உள்ளது. தனியாக இருந்தால் கலம். தொகுதியாக இருந்தால் அடுக்கு துகளாற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுவது. (இய)

nuclear energy - அணுக்கருவாற்றல்: அணுக்கருப்பிளவு அல்லது இணைவினால் பெறப்படும் அளப்பரிய ஆற்றல். (இய)

nuclear fission - அணுக்கரு பிளவு: உட்கருவினையில் கன அணுவுட்கரு (யுரேனியம்) இரு சமதுண்டுகளாகச் சிதைந்து அளப்பரிய ஆற்றலை அளிக்கிறது. (இய)

nuclear force - உட்கருவிசை: அணுக்கருவன்களுக்கிடையே (நியூக்ளியன்ஸ் உள்ள வலுவான கவர்ச்சி விசை. இத்துகள்கள் மிக நெருக்கமாக உள்ளவை. (1013m ஐக் காட்டிலும் நெருக்கமானது). (இய)

nuclear fuel - அணுக்கரு எரிபொருள்: பிளவுபடக்கூடிய அல்லது வளமிக்க ஒரிமம். நீண்ட அரைவாழ்வுக் காலங் கொண்டது. அணு உலையில் பிளவு அல்லது இணைவுக்குட்படுவது. (இய)

nuclear fusion - அணுக்கரு இணைவு: இவ்வினையில் இரு எடைக்குறைவான உட்கருக்கள் இணைந்து, கன உட்கருவை உண்டாக்குவதால், அளப்பரிய ஆற்றல் உண்டாகிறது. (இய)

nuclear physics - அணுக்கரு இயற்பியல்: இயற்பியலின் பிரிவு. உட்கரு அமைப்பு, அதன் இயல்புகள், வினை ஆகியவை பற்றி ஆராயுந்துறை. (இய)

nuclear power - அணுக்கருவாற்றல்: அணுவின் கருவிலிருந்து உண்டாவது. (இய).

nuclear reaction - அணுக்கரு வினை: அணுவின் உட்கருவில் ஏற்படும் மாற்றத்தால் உண்டாகும் விளைவு (இய)

nuclear reactor - அணுக்கரு உலை: அணு உலை. அணுக்கருப் பிளவு அல்லது தொடர்வினை நடைபெறும் கருவியமைப்பு. (இய)

nuclear weapon - அணுக்கருக் கருவி: போர்க்கருவி. (இய)

nucleic acids - உட்கருக்காடிகள்: கரிம அமிலங்கள். அவற்றின் மூலக்கூறுகளில் சர்க்கரை அலகுகளும் பாஸ்பேட் அலகுகளும் மாறிமாறி அமைந்திருக்கும். நைட்ரச காரங்கள் சர்க்கரை அலகுகளோடு சேர்ந்திருக்கும். எல்லா உயிரணுக்களிலும் உள்ளன. டிஎன்ஏவில் காணப்படும் சர்க்கரை டிஆக்சிரிபோஸ், ஆர்என்ஏவில் ரிபோஸ், பா. RNA DNA. (உயி)

nucleolus - நுண் (உட்)கரு: உட்கருவில் உள்ள கோளவடிவப் பொருள். ஆர்என்ஏ அடங்கியது. நிறப்புரி வழிப்பொருள். (உயி)

nucleons - உட்கருவன்கள்: முன்னணுக்களுக்கும் அல்லணுக்களுக்கும் பொதுவாக வழங்கும் பெயர். எல்லா அணுக்கருக்களிலும் உள்ளவை. (இய)

nucleon number - உட்கருவன் எண்: ஒர் அணுவின் உட்கருவிலுள்ள கருவன்களின் எண்ணிக்கை. (இய)

nucleoplasm - உட்கருக்கணியம்: நிறமியனைத் (குரோமேட்டின்) தவிர்த்த உட்கருவின் பொருள். டிஎன்ஏ பெருக்கத்திற்கும் ஆர்என்ஏ தொகுப்பிற்கும் தேவையான நொதிகளையும் கலவைகளையும் கொண்டது. (உயி)

nucleoprotein - உட்கருப்புரதம்: இது ஒர் அரிய கூட்டுப்பொருள். உட்கருவுள்ள புரதத்தைக் கொண்டது. எ-டு. நிறப்புரிகள், இஸ்டோன்கள், ரிபோசோம்கள். (உயி)

nucleosidase - நியூக்ளியோசிடேஸ்: நியூக்ளியோசைடுகளுடன் சேர்ந்து வினையாற்றிப் பெண்டோஸ் சர்க்கரையுடன் சேர்ந்துள்ள பியூரைன் அல்லது பிரிமிடைனுக்கு இடையே உள்ள பிணைப்பை நீக்கும் நொதி (உயி)

nucleoside - நியூக்ளியோசைடு: ஒர் அரிய மூலக்கூறு. பியூரின் அல்லது பிரிமிடின் மூலங்கொண்டது. இம்மூலம் ரிபோஸ் அல்லது டீஆக்சிரிபோஸ் சர்க்கரையோடு சேர்ந்திருக்கும். அடினோசைன், சைட்டோசைன், கானோசைன், தைமிடின், பியூரிடின் ஆகியவை பொதுவான எடுத்துக்காட்டுகள். (உயி)

nucleotide - நியூக்ளியோடைடு: ஒர் அரிய கூட்டுப்பொருள். ரிபோஸ் அல்லது டி ஆக்சிரிபோஸ் சர்க்கரையோடும் பாசுவரக் காடியோடும் நைட்ரசகாரமான பியுரின், பிரிமிடின் அல்லது பிரிடைன் சேர்ந்தது. குறுக்கமடைவதால் உண்டாவது. உடன் நொதிகளான என்ஏடி, எஃப்ஏடி என்பவை இரு நியூக்ளியோடைடுகள். (ஈரிணைப்பு நியூக்ளியோடைடுகள் உள்ளவை). உட்கருக்காடிகள் என்பவை பல நியூக்ளியோடைடுகள் (பல இணைப்பு நியூக்ளியோடைடுகள்) தொடர் கொண்டவை. (உயி)

nucleus - உட்கரு: 1. உயிரணுவின் முன் கணியத்திலுள்ள (புரோட்டோபிளாசம் வட்டப்பொருள். நிறமியனைக் கொண்டது. நொதிகளை உண்டாக்கிக் கண்ணறைக் கணியத்தின் (சைட்டோபிளாசம்) செயல்களை ஊக்குவிப்பது. 2. அணுக்கரு பருப்பொருள் அணுவிலுள்ள கரு. முன் அணு, நடுநிலை அணு மின்னணு ஆகியவற்றைக்கொண்டது. (ப.து.)

nuclide - வகைக்கரு: குறிப்பிட்ட கருவன்களைக் கொண்ட அணு வின் கரு. 016, 019 என்பவை வேறுபட்ட கருக்கள். (இய)

numerical taxonomy - எண்சார் வகைப்பாட்டியல்: உயிர்த் தொகுதியின் பல பண்புகளின் வேறுபாடுகளை எண்ணியல் பகுப்பு செய்து, அதன் அடிப்படையில் வகைப்பாடு மேற்கொளல். இதில் பண்புகள் முதலிடம் பெறுபவை. (உயி)

nurse tissue - செவிலித்திசு: வளரும் பாலணுக்களுடன் தொடர்பு கொண்டு, அதற்கு ஊட்டமளிக்குந் திசு. (உயி)

nut - கொட்டை: கனியில் ஒருவகை கடினமானது. உலர்ந்தது. வழக்கமாக ஒரு விதை உடையது. பிளவுபடாதது. இணை சூல்இலைச் சூலகப்பையிலிருந்து உண்டாவது. (உயி)

nutation - அசைவாக்கம்: 1. தன்னியக்க வளர்ச்சிவகை. இதில் தாவர உறுப்பின் முனை வளைந்து வளர்தல் 2. நீள்வட்ட முனையில், நிலவுலக முனையின் முன்னிகழ் இயக்கத்தில் ஏற்ற இறக்கம் 3. தலையாடல். (ப.து.)

nutrition - ஊட்டம் பெறல்: ஊட்டமளிப்பு. உயிரிகள் தாங்கள் உயிர்வாழ்வதற்குத் தேவையான பொருள்களிலிருந்து அவற்றைப் பெறும்முறை. வளர்வதற்கும் பழுது பார்ப்பதற்கும் இவ்வாற்றலைப் பயன்படுத்துகின்றன. பெறும் ஊட்டம் நிறைவூட்டமாக இருத்தல் நலம். நல்ல உடல் நலத்திற்கு நல்ல ஊட்டந்தேவை. (உயி)

nyctinasty - இரவியக்கம்: தாவரங்களின் தூக்க அசைவுகள். ஒளி, வெப்பநிலை ஆகியவற்றால் ஏற்படும் மாற்றங்களின் தொகுவிளைவு. எ-டு, பூக்கள் திறத்தல், மூடுதல் பா. nastic movement. (உயி)

nyctitropism - இரவுநாட்டம்: இரவில் தாவரங்கள் சில நிலைகளைக் கொண்டிருத்தல். (உயி)

Nylander reagent - நைலாந்தர் வினையாக்கி: பொட்டாசியம் சோடியம் டார்டரேட்டு, பொட்டாசியம் அய்டிராக்சைடு, பிஸ்மத் துணை நைட்ரேட்டு ஆகியவை கரைந்த கரைசல். சிறுநீரில் சர்க்கரை இருப்பதைக் கண்டறியப் பயன்படுதல். (வேதி)

nylon - நைலான்: தொகுப்புப் பலடிபயின் ஒருவகை. சிறந்த முதல் செயற்கை இழை. குதி குடை, துரிகை, கயிறு, நீச்சல் உடை முதலியவை செய்யப் பயன்படுதல். (வேதி)

nymph முழுஇளரி: வேற்றக உருமாற்றங் கொண்ட பூச்சிகளின் இளம்நிலை (உயி)

nymphomania - மீச்சிற்றின்ப வெறி: பெண்ணிடத்து ஏற்படும் மட்டுமீறிய கலவி விருப்பம். (உயி)

nystagus - தன்னிமைத்தல்: தாமாகக் கண்ணிமைகள் அசைதல் (உயி)

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவியல்_அகராதி/N&oldid=1040358" இலிருந்து மீள்விக்கப்பட்டது