R

rabies, hydrophobia - வெறி நாய்க்கடி, நீரச்சம்: நச்சியத்தினால் (வைரஸ்) உண்டாகும் கொடிய நோய். மூளையைத் தாக்குவது. தகுந்த ஊசிமுறைப் பண்டுவம் (14ஊசி) இல்லை என்றால் இறப்பு நிகழும். இதற்குப் பண்டுவம் கண்டறிந்தவர் லூயி பாஸ்டர் (உயி)

rachis - (ரேகிஸ்)-காம்பு: 1. கூட்டிலையின் காம்பு, இதில் சிற்றிலைகள் இருக்கும். 2. கோதுமைப் பூக்கொத்தின் மையஅச்சு (உயி)

rad - ரேடு: அலகுச்சொல். திசு முதலியவற்றால் வெளியிடப்படும் கதிர்வீச்சிலிருந்து உண்டாகும் ஆற்றலை அளக்கும் அளவு. (இய)

radar, radio detection and ranging - ரேடார், வானொலி பால் இடமறிதலும் எல்லை காணலும்: இது ஒரு மின்னனுக் கருவியமைப்பு. வானவூர்தி, செயற்கை நிலாக்கள் முதலியவற்றின் இருப்பிடத்தை அறியவும், தொலைவு, நிலநேர்க்கோடு ஆகியவற்றை அளக்கவும் பயன்படுவது. வானொலி அதிர்வெண் ஆற்றலை அனுப்பி, எதிரொளிப்பதன் மூலம் இச்செயல்கள் நடைபெறுகின்றன. சோனார், இலேசர், மேசர் போன்று இது ஒரு தலைப்பெழுத்துச் சுருக்கம். (இய)

radial symmetry - ஆரச்சமச்சீர்: ஒரு பொதுமையத்தை சுற்றியமைந்துள்ள ஒத்த பகுதிகளை எச்செங்குத்துக் கோட்டில் வெட்டினாலும், அவற்றை இரு சம பகுதிகளாகப் பிரிக்கலாம். எ-டு செம்பருத்தி, நட்சத்திர மீன். பா. (உயி) radian - ரேடியன்: அலகுச்சொல். ஆர நீளத்திற்குச் சமமான நீளங்கொண்ட வட்டவில், வட்டமையத்தில் தாங்கும் கோணம். 2π/= ரேடியன்கள் 360°. ரேடியன் π180°. 1 ரேடியன் π57.296° (இய)

radiata - ஆரச்சமச்சீரிகள்: அடிப்படை ஆரச்சமச்சீருடைய விலங்குகள், எ-டு குழிக்குடலிகள், சில கடற்பஞ்சுகள், முட்தோலிகள். (உயி)

radiation - கதிர்வீச்சு: அலையாகவோ துகள்களாகவோ ஆற்றல் செல்லுதல். எ-டு ஒளி வீச்சு ஆல்பா கதிர்கள். பீட்டா கதிர்கள். பா. alpha.(இய)

radiation belts - கதிர்வீச்சு வளையங்கள்: புவியைச் சுற்றியமைந்துள்ள இரு வளையங்கள். பா. Van allen. radiation belts. (இய)

radiator - கதிர்வீச்சழுத்தம்: ஒரு பரப்பின் மீது மின்காந்தக் கதிர் வீச்சு விழும்பொழுது உண்டா கும் அழுத்தம். (இய)

radiator - குளிர்விப்பான்: உந்து (மோட்டார் எந்திரங்களில் இணைக்கப்பட்டிருக்கும் சிறிய தொட்டி போன்ற அமைப்பு. நீர் நிரப்பப்பட்டிருக்கும். சூடேறும் எந்திரத்தைக் குளிர்விக்கப் பயன்படுவது. (இய)

radical. படிமூலி: ஒரு தனி அணு போல் நடக்கும் அணுத் தொகுதி. ஒரு சேர்மத்திலிருந்து மற்றொரு சேர்மத்திற்குச் செல்லும்போது மாறாதிருப்பது. பா. face. (வேதி) 2. வேர்வரு இலை: தரைமட்ட இலையிலிருந்து கொத்தாக இலைகள் மேல் உண்டாதல். பார்ப்பதற்கு நேரடியாக வேரிலிருந்து வருவதுபோல் இருக்கும். எ-டு முள்ளங்கி, கத்தாழை, (உயி)

radicle - முளைவேர்: விதை முளைக் கருவின் பகுதி. விதை முளைக்கும்போது முதல் வேராகத் தரையில் வளர்வது. (உயி)

radio-1. வானொலி: கட்டுப்பாட்டு நிலையங்களிலிருந்து மின்காந்த அலைகளாக வரும் நிகழ்ச்சிகளைப் பெறும் கருவி அல்லது கருவித்தொகுதி. இதில் தொலை வரைவி. தொலைபேசி, தொலைக் காட்சி, ரேடார் ஆகியவை அடங்கும். 2. கதிர் அல்லது கதிர்வீச்சு (இய)

radioactivity - கதிரியக்கம்: சில தனிமங்கள் தாமாகச் சிதைந்து மின்னேற்றக் கதிர்களை வெளி விடுவதற்குக் கதிரியக்கம் என்று பெயர். ரேடியம், தோரியம், யுரேனியம் முதலியவை கதிரியக்கத் தனிமங்கள். இந்நிகழ்ச்சியைக் கண்டறிந்தவர் பெக்கரல். (இய)

radio carbon dating - கதிரியக்கக் கரிக்கணிப்பு: பா. carbon dating. (இய)

radio astronomy - கதிரியல் வானியல்: 1. விண்பொருள்கள் வெளிவிடும் மின்காந்தக் கதிர் வீச்சைப் பெற்றுப் பகுத்து ஆராயுந்துறை. 2. ரேடார் மூலம் நடைபெறும் வானியல் ஆராய்ச்சி. (இய)

radio beacon - கதிரியல் விளக்கம்: திசையறியப் பயன்படும் குறிபாடுகளைச் செலுத்துங்கருவி (இய)

radiobiology - கதிரியல் : உயிரிகளில் கதிர்வீச்சின் விளைவுகளை ஆராயுந்துறை. உயிரியலின் ஒரு பிரிவு. (உயி)

radio chemistry - கதிரியக்க வேதியியல்: கதிரியக்க ஓரிமங்களை (ஐசோடோப்புகளை) ஆராயுந்துறை. (வேதி)

radio compass - கதிரியல்காட்டி: கம்பியிலாத் தொடர்பை ஆராயுங் கருவி. (இய)

radio element - கதிரியல் தனிமம்: கதிர்வீச்சு ஓரிமம் (ரேடியோ ஐசோடோப்), எ-டு சோடியம் 24. அயோடின் 131. (இய)

radio frequency - வானொலி அதிர்வெண்: மின்காந்தக் கதிர்வீச்சு அதிர்வெண் எல்லை 10 கிலோ ஹெர்ட்ஸ் முதல் 100000 மெகா ஹெர்ட்ஸ் வரை (இய)

radio genetics - கதிரியல் மரபணுவியல், மரபியல்: கால் வழியில் கதிர்வீச்சு விளைவுகள் ஏற்படுத்தும் மாற்றங்களை ஆராயுந்துறை. உயிரியலின் ஒரு பிரிவு. (உயி)

radio isotope - கதிரியல் ஓரிமம்: நிலையான தனிமத்தின் ஓரிமம். (வேதி)

radiolaria - ஆரக்காலிகள்: காலி காலை உடையது. கடல்வாழ் முன்தோன்றிகள் வரிசை. ஆர முறையில் அமைந்த போலிக்கால்களைக் கொண்டவை. (உயி)

radiolocation - கதிரியக்க இடமறிதல்: தொலைவிலுள்ள பொருள்களை ரேடார்வழி அறிதல். (இய)

radiology- கதிரியல்: மருத்துவத்துறையில் பயன்படுமாறு கதிரியக்கத்தையும் கதிர்வீச்சையும் ஆராய்தல், (உயி)

radiolysis - கதிரியல் பகுப்பு: காமாகதிர்கள், எக்ஸ் கதிர்கள் முதலியவை அடங்கிய உயர் ஆற்றல் கதிர்வீச்சால் ஏற்படும் வேதிச்சிதைவு (இய)

radiometer - கதிரியல் மானி: வெளியாகும் கதிர்வீச்சாற்றலை அளக்கப் பயன்படுங்கருவி. (இய)

radiometric dating - கதிரியக்க காலக்கணிப்பு: பா. carbon dating (இய)

radiosonde - கதிர் அளவி: காற்று மேல்வெளியில் காற்று, ஈரநிலை, அழுத்தம், வெப்பநிலை ஆகியவற்றை அளக்கும் வானிலைக்கருவி. (இய)

radio surgery- கதிர் அறுவை: புதிய அறுவை நுணுக்கம். இதில் காமா கதிர் பயன்படுத்தப்படுகிறது. மூளை அறுவையில் பயன்படுவது. (மரு)

radiotelescope - கதிரியல் தொலைநோக்கி: வானொலி அதிர்வெண்களின் மின்காந்தக் கதிர்வீச்சை அளக்கவும் கண்டறியவும் பயன்படும் தொலை நோக்கி. (இய)

radiotherapy - கதிரியல் பண்டுவம்: எக்ஸ் கதிர் முதலியவை அடங்கிய கதிர்வீச்சினால் நோய்நீக்க, மருத்துவத்தில் பயன்படும் முறை. (உயி)

radio wave - வானொலி அலை: கதிரலை. ஒரு கடத்தியில் மின்னோட்டத்தைத் திருப்பி உண்டாக்கப் பயன்படும் மின்காந்த அலை. ஒலி பரப்பிலும் ஒளிபரப்பிலும் பயன்படுவது. ஒரு நொடியில் 300,000,000 மீட்டர் விரைவில் செல்வது (3 x 108 மீ) இதை அனுப்ப ஊடகம் தேவையில்லை. (இய)

radio window - கதிரியல் சாரணம்: வானொலி அதிர்வெண்ணிலுள்ள மின்காந்த நிறமாலைப் பகுதி. (இய)

radium - ரேடியம்: Ra. வெண்ணிறக் கதிரியக்கத்தனிமம். 1898இல் கியூரி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. காற்றுடன் விரைந்து உயிர்வளி ஏற்றம் அடைவது. நீருடன் சேர்ந்து நீர்வளியைக் கொடுப்பது. உலோகக் கலவைகள், வானொலிக் குழாய்கள், ஒளிமின்கலம் முதலியவை செய்யப் பயன்படுவது. (வேதி)

radius - ஆரம்: ஒரு வட்டத்தின் மையப்புள்ளிக்கும் அதன் வெளிக் கோட்டிற்குமுள்ள குறுகிய தொலைவு. 2. ஆர எலும்பு: முன் கையிலுள்ள இரு எலும்புகளில சிறியது. (ப.து)

radius of curvature - வளை வாரம்:பா. concave mirror. (இய)

radius of gyration - சுழற்சி ஆரம்: திண்பொருள் ஒரு நிலையான அச்சைப் பற்றிச் சுழலும்போது, சுழற்சி அச்சுக்கும் பொருளின் நிறைமுழுதும் செறிந்ததாகத் தோன்றும் புள்ளிக்கும் இடையே உள்ள தொலைவு சுழற்சி ஆரம் ஆகும். (இய)

radon -ரேடான்: Rn. சுழித் தொகுதியினைச் சார்ந்த கதிரியக்கத் தனிமம். நிறமற்ற ஓரணுவுள்ள (மானோ ஆட்டாமிக்) வளிநிறைத்தனிமம். ரேடியம் சிதைவதால் உண்டாவது. கதிர் வீச்சுப் பண்டுவத்தில் பயன்படுவது. (இய)

radula - அராவுநாக்கு: தோட்ட நத்தையின் நாக்கு. இதில் குறுக்கு வரிசைப் பற்கள் நிறைய உள்ளன. வாளமைப்பைக் கொடுப்பதால், இலைகளைத் தூள் செய்யப் பயன்படுதல். (உயி)

rainbow - வானவில்: நீர்த்துளிகளில் ஒளியின் முழுஅக மறிப்பினாலும் விலகலாலும் நிறப் பிரிகையாலும் கதிரவனுக்கு எதிராகக் காலை அல்லது மாலையில் விண்ணில் உண்டாகும் ஏழு வண்ண விளைவு அல்லது நிறமாலை. தரையிலிருந்து பார்க்கப் பெரிய அரை வட்டம். விண்ணிலிருந்து நோக்க முழுவட்டம்.

Raman effect - இராமன் விளைவு: ஓர் ஊடகத்தின் வழியாக ஒற்றைநிற ஒளி செல்லும்போது, அது தன் முதல் அலைநீளங்களாகவும் பெரிய அலைநீளங்களாகவும் (இராமன் வரிகள்) சிதறுதல். ஒரு நீர்மத்தின் மூலக்கூறு ஆற்றல் அளவை ஆராயப் பயன்படுவது. பல அறிவியல் துறைகளில் பயன்படுவது. இந்த விளைவைக் கண்டறிந்ததற்காக 1930இல் இராமனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1954இல் பாரத இரத்தினம் என்னும் மிக உயர்ந்த பட்டமும் அளிக்கப் பெற்றது. இவர் இந்திய அறிவியலின் தந்தை. (இய)

Ramanujam hypothesis - இராமானுஜம் கருதுகோள்: இது இராமானுஜம் டோ சார்பின் அளவைப் பற்றியது. இக்கருதுகோளை நிறுவியதற்காக 1978இல் பியரி டெலிக்னி என்பார் பீல்ட்ஸ் பதக்கம் பெற்றார். டோ என்பது கிரேக்க நெடுங்கணக்கில் 19ஆம் எழுத்து குறி. τ (1994)

random - வரம்பற்றது: இங்கொன்றும் அங்கொன்றுமாக. (இய)

randomization வரம்பற்ற தாக்கல்: ஓர் ஆய்வில் முழு வரம்பற்ற நிலைகளுக்கு ஆய்வு அலகுகளை ஒதுக்குதல். இயல்பாக வரம்பற்ற எண்களைப் பயன்படுத்தி இதனைச் செய்யலாம்.(இய)

Raouits law - ரெளலட்டு விதி: ஒரு கரைசலின் சார்பு ஆவியழுத்தக் குறைவு. அதில் கரைந்துள்ள கரைபொருளின் மோல் பின்னத்திற்குச் சமம். (வேதி)

raphe - விளிம்பு: 1. இணைந்த சூலிலிருந்து விதையுறையில் வளரும் செங்குத்துத் தழும்பு. ஆகவே விதை விளிம்பு 2. நகரக் கூடிய செம்பாதி உயிரிகளின் திறப்பிகளிலுள்ள பிளவு. (உயி)

raphides - ஊசி வடிவப் படிகங்கள்: சில தாவரங்களின் குழாய்த் திரள்களில் காணப்படும் கால்சிய ஆக்சலேட்டுப் படிகங்கள். தாவர உள்குடும்பங்களை வேறுபடுத்தி அறியப் பயன்படுபவை. ரூபையாய்டி குடும்ப இலைகளில் இப்படிகங்கள் உள்ளன. ஆகவே, ரூபியேசி குடும்பத்தின் மற்ற இரு உள் குடும்பங்களான சின்கோனாய்டி, கட்டர்டாய்டி ஆகியவற்றிலிருந்து இப்படிகங்களால் ரூபையாய்டி குடும்பம் வேறுபடுத்தி அறியப்படுகிறது. (உயி)

rare earths - அருமண்கள்: அரும் புவித்தனிம ஆக்சைடு (வேதி)

rarefactions - துகள் நெகிழ்வுகள்: ஓர் ஒலி அலையில் இம்மிகள் நெருக்கமில்லாமலிருக்கும் பகுதிகள். (இய)

rare gases - அருவளிகள்: வேறு பெயர்கள். வினைகுறைவளிகள், பெரும்பேற்று வளிகள். ஈலியம், நியான், ஆர்கன், கிரிப்டான் செனான், ரேடான். (வேதி)

rate constant - தகவு மாறிலி: நேர்விரைவு மாறிலி. ஒப்பு வினைத் தகவு (k). ஒரு வேதி வினைக்குரிய தகவு வெளிப்பாட்டின் தகவுப் பொருத்த மாறிலி. (இய)

rate of reaction - வினைத்தகவு: ஓரலகு நேரத்தில் ஒரு வேதி வினையில் செலவழியும் வினைப் படுபொருளின் அளவையாகும். (வேதி)

rating scale - மதிப்பீட்டளவு: ஒரு நேர்க்கோட்டில் உரிய இடத்தில் குறியிடல் மூலம், ஒரு பண்பு ஒருவரிடம் உள்ள அளவைக் காட்டும் முறை. (இய)

rational drug design - பகுத்தறி மருந்து வடிவமைப்பு: கூடுகை வேதிஇயல் சார்ந்தது. இதில் தேர்வு மூலக்கூறுகள் சமாளிக்கக் கூடிய அளவுக்குக் குறைக்கப்படும். இலக்கு மூலக்கூறு பொருத்தப்படும்.

rationalisation - ஏதுகாட்டல்: ஒன்றைச் செய்தபின், அதைச் சரி என நிலைநாட்ட காரணங்காட்டல். (உயிர்)

ray - கதிர்: 1. கதிர்வீச்சின் பகுதி. 2. கதிர்மீன்: தட்டை வடிவம். செவுள்களும் குருத்தெலும்புக் கூடும் உள்ளன. 3. மீன்களின் துடுப்புகளுக்கு வலுவூட்டும் ஆரக்கதிர்கள். (உயி)

rayon - ரேயான்: செயற்கைக் கதிர் இழை. மரக்கூழிலிருந்து தயாரிக்கப்படுவது. விஸ்கோஸ் ரேயான், அசெட்டேட் ரேயான் என இருவகைப்படும். விலை குறைவு. பளபளப்பு. ஆகவே, துணிகள் செய்யப் பயன்படுகிறது.

reactant - வினைப்படுத்தி: வேதி வினையில் ஈடுபடும் பொருள். எ-டு கந்தகக்காடி வினையூக்கி, (வேதி)

reaction - வினை: வேதிவினை. எ-டு மக்னீஷியம் காற்றில் எரிதல். (வேதி)

reaction time - வினைநேரம்: ஓர் உயிரியில் ஏற்படும் தூண்டலுக்கும் அத்துண்டலால் உண்டாகும் துலங்கலுக்கும் இடையே உள்ள நேரம். மறிவினை வில்கள் நேரத்தை சிறும அளவுக்குக் குறைப்பவை. மறிவினை இல்லாத் துண்டல்கள் மெதுவாக நடைபெறுபவை. துடிப்பு மெதுவாகச் செல்வதே இதற்குக் காரணம். (உயி)

reactor - அணுஉலை: தொடர் வினை நடைபெறும் கருவி யமைப்பு. (உயி)

reagents - வினையாக்கிகள்: குறிப்பிட்ட வேதிவினைகளை உண்டாக்கும் பொருள்கள். வேதியியல் ஆய்வுகளில் பயன்படுபவை. எ-டு குளோரின்.(வேதி)

real gas - மெய்வளி: திட்டமான அளவு மூலக்கூறுகளைக் கொண்ட வளி. (இய)

real image - மெய்யுரு: மெய்ப்பிம்பம். (இய) receptacle - பூத்தளம்: பா. thalamus. (உயி)

receptor - உணர்வாய்: தூண்டல்களைப் பெற உதவும் புலனுறுப்பு. ஒ. effector. (உயி)

recessive allele - ஒடுங்கிய இணைமாற்று: ஒத்த கருவணு நிலையில் (ஹோமோசைகஸ்) மட்டுமே வெளிப்படும் இணை மாற்று. வேற்றுக் கருவணு நிலையில் (ஹெட்டிரோசைகஸ்) மற்ற ஓங்கு இணைமாற்றினால், அதன் வெளிப்பாடு ஒடுக்கப்படுகிறது. 3. dominant (உயி)

recipient - பெறுநி: தருநியிடமிருந்து உடல் உறுப்பு அல்லது திசுக்களைப் பெறும் தனி உயிரி. (உயி)

reciprocal cross - பரிமாற்றக் கலப்பு: பெற்றோர்களின் பாலினால் குறிப்பிட்ட பண்பின் மரபுரிமை பாதிக்கப்படுகிறதா என்பதை ஆய்வது. இருவழிகளில் இக்கலப்பு செய்யப்படுவது. ஆய்வுக்குரிய பண்பு ஒரு கலப்பில் பெண்ணினாலும் இரண்டாங் கலப்பில் ஆணினாலும் நிறைவேற்றப்படுவது. இந்நடவடிக்கை, எப்பண்புகள் பாலினை மரபனுக்களால் கட்டுப்படுத்தப் படுகின்றன என்பதை விளக்கும். (உயி)

recoil-பின்னுந்தம்: இவ்விசையில் ஏவுகணை இயங்குகிறது. வெடி குழல் இயங்கும்போது அதை உதறச் செய்யும் விசையே பின்னுந்தம் ஆகும். இறுக மூடப்பட்ட அறையில் எரி கலவையை எரித்து, இதனை உண்டாக்கலாம். இஃது உந்தம் சார்ந்தது. நியூட்டன் 3ஆம் இயக்கவிதி அடிப்படையில் அமைந்தது. பா. rocket propulsion (இய)

rectal sac - கழிவாய்ப்பை: கழி குடலின் வரிந்த முன்பகுதி. (உயி)

recognition - நினைவுணரல்: இன்று நிகழ்ந்தவை முன்னரே நுகர்ந்தவை என்னும் உணர்வு. (க.உள)

recombinant DNA- மீள்கூடு டிஎன்ஏ: மரபாக்க நுணுக்கத்தால் வேறுபட்ட மூலங்களிலிருந்து சேர்க்கப்பட்ட மரபணுக்களைக் கொண்ட டிஎன்ஏ. (உயி)

recombination - மீள்கூடுகை: மரபணுக்கள் மீண்டும் தொகுதியாகப் பிரிதல். இந்நிகழ்ச்சி ஒழுங்காக குன்றல் பிரிவில் நடைபெறுவது. மாறுபாட்டைக் கால்வழியில் உண்டாக்க இது சிறந்த வழி. (உயி)

rectified spirit-தூய்மைப்படுத்திய ஸ்பிரிட்டு: எத்தனால். இது பெருமளவில் நொதித்தல் மூலம் உற்பத்தி செய்யப்படுவது. பகுத்து வடித்தல் மூலம் தூய்மை செய்யப்படுகிறது. இதனால் எத்தனாலும் நீரும் சேர்ந்த கலவை கிடைத்தல். இதில் 95%க்கு மேலும் எத்தனால் இருக்கும். (வேதி)

rectum - கழிக்குடல்: பெருங்குடலின் கழிவு தங்கும் முனைப்பகுதி. (உயி) red blood corpuscles, RBCS - சிவப்புக்குருதியணுக்கள்: மென்மையான மேற்பரப்பும் தட்டு வடிவமும் கொண்டவை. ஈமோகுளோபின் என்னும் இரும் பூட்டம் இதில் உள்ளது. குருதியில் ஒரு கனமில்லி மீட்டருக்கு 5 மில்லியன் உள்ளவை. உயிர் வளியைக் கொண்டு செல்பவை. (உயி)

rectifier - திருத்தி: ஒருதிசையில் மட்டுமே அதிக அளவு மின்னோட்டத்தைச் செல்லவிடும் கருவியமைப்பு. (இய)

red lead - ஈயச் செந்தூரம்: ஒளிர்வான மாநிறத்துள். கண்ணாடித் தொழிலில் நிறமியாகவும் உயிர்வளி ஏற்றம் செய்யும் பொருளாகவும் பயன்படுதல். (வேதி)

redox chain - ஏற்ற இறக்கத் தொடர்: உயிர்வளி ஏற்ற இறக்க முறை. (வேதி)

reducing agent - ஒடுக்கு காரணி: ஒடுக்கி. மற்ற பொருள்களில் ஒடுக்கலை உண்டாக்கும் பொருள். (வேதி)

reduction - ஒடுக்கல் , இறக்கம்: வறுக்கப்பட்ட தாது (துத்தநாக ஆக்சைடு) தூள் கல்கரியுடன் சேர்ந்து சூடாக்கப்படுகிறது. இப்போது கல்கரி துத்தநாக ஆக்சைடைத் துத்தமாகக் குறைக்கிறது. உயிர்வளி நீங்குகிறது. இங்குக் கல்கரி ஒடுக்கி.

துத்தநாக ஆக்சைடு + கரி

துத்தநாகம் + கார்பன் மோனாக்சைடு

ZnO + C
ZN + CO

பொதுவாக, இச்செயலில் ஒரு சேர்மத்திலிருந்து உயிர்வளி நீங்குகிறது அல்லது நீர்வளி அதனோடு சேர்கிறது. (வேதி)

reduction division - ஒடுங்கல் பிரிவு: குன்றல் பிரிவின் முதல் பிரிவு இதில் முதல் நிலை, நடுநிலை, பிரிநிலை ஆகியவை அடங்கும். இதனால் உட்கருக்கதிரின் ஒவ்வொரு முனையிலும் சேரும் நிறப்புரிகள் ஒருமயமாக (ஒற்றைப்படையாக) இருக்கும். (உயி)

refining - தூய்மையாக்கல்: 1. ஒரு பொருளிலிருந்து மாசுகளை நீக்கல் (உலோகப் பிரிப்பு 2. கலவையிலிருந்து ஒரு பொருளைப் பிரித்தல். (வேதி)

reflecting telescope - மறிப்புத் தொலைநோக்கி: தொலை நோக்கியில் ஒருவகை. (இய)

reflection, laws of - ஒளிமறித்தல் விதிகள்: படுகதிர் செங்குத்துக்கோடு மறிப்புக் கதி ஆகிய மூன்றும ஒரே சமதளத்தில இருக்கும். செங்குத்துக்கோட்டுக்கு எதிர்ப்புறத்தில் படுகதிரும் மறிப்புக் கதிரும் இருக்கும். 2. படுகோணம் மறிப்புக் கோணத்திற்குச் சமம். மறிப்பு எதிரொளிப்பு. (இய)

reflector - மறிப்பி: ஒளி, ஒலி முதலிய வீச்சாற்றலை மறிக்குங் கருவி. (இய) reflex - மறிவினை: இது தூண்டலுக்கேற்ற துலங்கல் உண்டாகும் வினை. பொதுவாக, முளையின் தலையீடு இல்லாமல் நடைபெறுவது. எ-டு உமிழ்நீர் சுரத்தல், கண்ணிமைத்தல்.

reforming - சீராக்கல்: நேர்த் தொடர் அய்டிரோ கார்பன்களை வளையச் சேர்மமாக்குதல். பிளாட்டின வினையூக்கியைப் பயன்படுத்தி அதிக அழுத்தத்தில் பண்படா எண்ணெயை வெப்பப்படுத்தி இவ்வினையை நிகழ்த்தலாம். எ-டு மீத்தைல் பென்சினை கெப்டேனிலிருந்து உற்பத்தி செய்தல், நீராவிச் சுழல் தோற்ற மும் (ஸ்டீம் ரிபார்மிங் உண்டு. (வேதி)

refracting telescope - ஒளிவிலகு தொலைநோக்கி: தொலைநோக்கியில் ஒருவகை.(இய)

refraction, laws of - ஒளிவிலகல் விதிகள்: 1. படுகதிர், செங்குத்துக் கோடு, விலகுகதிர் ஆகிய மூன்றும் ஒரே சமதளத்தில் இருக்கும். செங்குத்துக்கோட்டுக்கு எதிர்ப்புறத்தில் படுகதிரும் விலகுகதிரும் இருக்கும். 2. படு கோணத்தின் சைனும் விலகு கோணத்தின் சைனும் எப்பொழுதும் மாறாவீதத்திலிருக்கும். வீதம் ஊடகங்களின் ஒளி நிறத்தைப் பொறுத்தது. (இய)

refraction of sound - ஒலிவிலகல்: ஒலிஅலைகளின் முகப்பு வளைந்து செல்வதற்கு ஒலி விலகல் என்று பெயர். வெவ்வேறு அடர்த்தியுள்ள இரு ஊடகங்களைப் பிரிக்கும் தளத்தை ஒலி அலைகள் கடக்கும் போது, இவ்விலகல் ஏற்படுகிறது. இந்நிகழ்ச்சி ஏற்படக்காரணங்கள்: 1. ஒலி ஓர் ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்குச் செல்லுதல் 2. காற்றுவீசல் 3. வேறுபட்ட காற்றுவெப்பநிலை. (இய)

refraction index - ஒளிவிலகல் எண்: ஓர் ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்கு ஒளிக்கதிர் செல்லும்போது, படுகோணத்தின் சைனுக்கும் விலகுகோணத்தின் சைனுக்குமுள்ள வீதமே விலகல் எண். சில பொருள்களின் விலகல் எண்: கிரெளன் கண்ணாடி 153. பனிக்கட்டி 131. வைரம் 2.417. (இய)


refractivity - ஒளிவிலகுதிறன்: தன் மேற்பரப்பில் நுழையும் ஒளிக் கதிரைத் திரிபடையச் செய்யும் ஊடகத்தின் அளவு. (இய)

refractometer - ஒளிவிலகல் எண்மானி: ஒரு பொருளின் ஒளி விலகல் எண்ணைக் கண்டறியப் பயன்படுங் கருவி. (இய)

refractory - விலக்கி: 1. தூண்டல்,நோய் முதலியவற்றிற்குத் தடையாக இருப்பது. 2. உயர்வெப்ப நிலைக்குத் தடையாக இருக்கும் பொருள். உலைகளின் சுவர்கள் கட்டப் பயன்படுங் கற்கள் முதலியவை. எ-டு தீக்களிமண், டோலமைட்டு, பாக்சைட்டு. (ப.து)

refrigerant - குளிரூட்டி: குளிர் விக்கும் பொருள். எ-டு. நீர்ம உயிர்வளி, அம்மோனியா, கந்தக ஈராக்சைடு.(இய)

refrigeration - குளிராக்கல் : செம்பழுப்பாகக் காய்ச்சிய இரும்பை நீரில் அமிழ்த்துக. உடன் நீரின் வெப்பநிலை உயரும். இரும்பு வெப்பம் இழக்கும். இந்நெறி முறையின் அடிப்படையில் குளிராக்கல் நடைபெறுகிறது. குளிராக்கியிலுள்ள நீர்மம் தொடர்ந்து ஆவியாவதால், அதில் வெளியிலுள்ள வெப்ப நிலையை விட உள் வெப்பநிலை குறைவாக இருக்கும். நீர்மம் ஆவியாகும்பொழுது, சுற்றுப்புறத்திலுள்ள வெப்பத்தை இது உட்கவர்கிறது. (இய)

refrigerator - குளிராக்கி : குளிரூட்டி குறைந்த வெப்பநிலையினை உண்டாக்கி, அதனை நிலைக்க வைக்குங் கருவி. வீடுகளிலும் மருந்தகங்களிலும் பொருள்களைக் குளிர்ச்சியாக வைக்க உதவுவது. (இய)

regeneration - மீட்பாக்கம் : 1.மறுபிறப்பு 2. இழந்த பகுதிகளை மீட்டல். இது உயர்வகைத் தாவரங்களிலும் சில விலங்குகளிலும் காணப்படுவது. மரத்தில் கிளையை வெட்ட வெட்டிய இடத்திற்கருகில் துளிர் உண்டாகிக் கிளைக்கும். கடற்பஞ்சு, நீரி (அய்டிரா முதலிய விலங்குகளும் இவ்வாற்றல் கொண்டவை. (உயி)

relative - ஒப்பு - ஒப்படர்த்தி 2. சார் : சார்புக் கொள்கை, ஒ.absolute (இய)

relative density - ஒப்படர்த்தி, குறிப்பிட்ட வெப்பநிலையில், ஒரு பொருளின் அடர்த்திக்கும் நீரின் அடர்த்திக்குமுள்ள வீதம் அல்லது ஒரு க.செ.மீ. பொருளின் எடைக்கும் ஒரு க.செ.மீ. நீரின் எடைக்குமுள்ள வீதம். இது வெறும எண். எ.டு. நீரின் அடர்த்தி எண். 1. பாதரசம் 13.6 இது பொருள்களுக்கேற்ப மாறுபடுவது. ஒ.density (இய)

relative humidity - ஒப்பு ஈரநிலை : RH ஒரே வெப்பநிலையிலும் அழுத்தத்திலும், காற்றின் நிறைவான ஈரநிலைக்கும் காற்றிலுள்ள ஈர நிலைக்குமுள்ள வீதம். இது நூற்று விழுக்காட்டில் தெரிவிக்கப்படுவது. இதனைக் கண்டறியப் பயன்படுங் கருவி ஈரநிலைமானி. இதை ஆராயுந்துறை ஈரநிலை அளவியல். இதன் அடிப்படையில் பனி, மறைபனி, மூடுபனி, உறைபனி முதலியவை உண்டாதல் (இய)

relativity, theory of - சார்புக்கொள்கை : அழியாப்புகழ் பெற்ற இயற்பியல் கொள்கை, ஐன்ஸ்டின் உருவாக்கியது. நியூட்டன் விசை இயலின் திரிபுகளை விளக்க, இயக்கத் தொடர்பான பல கொள்கைகள், முன் மொழியப்பட்டன. அவை மீவுயர் சார்பு இயக்கம் பற்றியவை, அவற்றில் இரண்டு ஐன்ஸ்டின் உருவாக்கியது. 1905இல் சிறப்புக்கொள்கை உருவாக்கப்பட்டது. அது முடுக்கம் பெறாநிலைகளைச் சார்ந்தது.அதன் சுருக்கம். E=mc2 E-ஆற்றல்,m- பொருண்மை,C-ஒளிவிரைவு).1915இல் பொதுக்கொள்கை உருவாக்கப்பட்டது. இதில் முடுக்கம் பெற்ற தொகுதிகளைச் சேர்த்ததினால், ஈர்ப்பாற்றலை அவர் பகுத்தறிய முடிந்தது. அவர் விண்ணகத்தை நாற்பருமக் கால இடத் தொடர்ச்சியாகக் கருதுகிறார். இதில் ஈர்ப்புப் புலத்தை உண்டாக்குமளவுக்குப் பொருண்மை, இடத்தை வளைக்கிறது. நியூட்டனும் ஐன்ஸ்டினும் ஈர்ப்பாற்றலுக்குத் தந்துள்ள விளக்கங்களிலுள்ள சிறுவேறுபாடுகளும், அவர்தம் இரு கொள்கைகளையும் ஆய்ந்து பார்க்க அறவியலாருக்கு ஒரு வழிவகுத்தன. காட்டாக, நியூட்டன் விசை இயல்படி புதன் என்னும் கோளின் இயக்கம் முரண்பட்டது. ஆனால், இதை ஐன்ஸ்டின் சார்புக் கொள்கை தெளிவாக விளக்குகிறது. அவர் முன்னரே உணர்ந்தவாறு, கதிரவன் அருகே செல்லும் ஒளிக்கதிர்கள், அதன் ஈர்ப்புப் புலத்தால் வளைகின்றன என்பது ஆய்வினால் உறுதி செய்யப்பட்டுள்ளது. கதிரவன் மறைவின் போது செய்த ஆய்வுகள் இதைப் பண்பளவில் உறுதிசெய்துள்ளன. ஆகப் பொதுக்கொள்கை என்பது நடைமுறைக் கொள்கைகளில் ஒன்று. அந்நடைமுறைக் கொள்கைகளின் பலகருத்துக்கள் இக்கொள்கைக்குப் பொதுவாய் அமைந்துள்ளமை ஒரு தனிச் சிறப்பு. எவ்வகை ஆய்வுமின்றித் தம் உய்த்துணர்வினால் மட்டுமே இவர் இக்கொள்கையை உருவாக்கியது மேலும் ஒரு தனிச்சிறப்பு. அறிவியல் வரலாற்றில் இக்கொள்கை ஓர் எல்லைக்கல் ஆகும். (இய)

relay-இடைமாற்றீடு : வலுக்குறை மின்னோட்டத்தினால் வலுமிகு மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்துங்கருவி. தாமியங்கு கருவிகளிலும் உயர்த்திகளிலும் பயன்படுதல்.

rem-ரெம் : அலகுச்சொல். மனித உடலில் கதிரியக்க விளைவுகளை அளக்கும் அலகு (இய)

REM, rapid eye movement-ரெம் : விரைந்த கண் அசைவு, உறக்கத்தில் நடைபெறுவது.

REMS, rare earth magnets-ரெம்கள் : அரும் புவிக்காந்தங்கள். இவை மிகச் சிறியவை. ஆற்றல் உள்ளவை. பாதுகாப்புத் துறை, வானவெளித் துறை, மருத்துவம், உந்திகள், கொக்கிகள் ஆகியவற்றில் பயன்படுவது. ஜம்ஷெட்பூர் தேசிய உலோகவியல் ஆய்வகம் இவற்றைப் புதிய முறையில் உருவாக்க வழி கண்டுள்ளது. (1995) remote sensing-தொலையறிதல்: தொலையுணர்தல். இது ஒரு பயனுறு அறிவியல், பல நன்மைகளை மனித குலத்திற்கு அளித்து வருவது. அவை வானிலை முன்னறிவிப்பு, கனிவளங்காணல் முதலியவை ஆகும். செய்திகள் வானொலி அல்லது ரேடார் மூலம் திரட்டப்படுகிறது. (இய)

renal portal system-சிறுநீரக வாயில் மண்டலம்: இது சிரை வழியாகும். இதில சிறுநீரக வாயில் சிரைகள் அடங்கி உள்ளன. இச்சிரைகள் வாலிலுள்ள அல்லது பின்புறத்துறுப்புகளிலுள்ள தந்துகிகளிலிருந்து குருதியைச் சிறுநீரகத்திலுள்ள தந்துகிகளுக்கு எடுத்துச் செல்பவை. குருதி, பின், சிறுநீரகச் சிரைகள் வழியாகச் சிறுநீரகத்தை விட்டு இதயத்திற்கு வருகிறது. (உயி)

renewable energy-புதுப்பிக்கும் ஆற்றல்: இதில் காற்று, ஒளி, நீர், ஆகிய மூன்றும் அடங்கும். இவை நிலைத்த ஆற்றல் ஊற்றுகள். இவற்றோடு காடுகளும் தாவரங்களும் சேரும். இந்த ஆற்றலைப் பயன்படுத்தத் தற்பொழுது அதிக நாட்டம் செலுத்தப்பட்டு வருகிறது. எ-டு காற்றாலை, கதிரவன் ஆற்றல் மின்கலம்.

reniform-சிறுநீரக வடிவம், அவரைவிதை வடிவம்: இலைப் பரப்பு இவ்வடிவத்தில் இருத்தல். எ-டு செண்டிலா. (உயி)

repellant-விரட்டி: சுவையற்றதும் அருவருக்கத் தக்கதுமான வேதிப்பொருள். கொசு முதலிய நோய் நுண்ணங்களை விலக்கப் பயன்படுவது. (வேதி)

replacing bone-மாற்றீட்டு எலும்பு: குருத்தெலும்பு (உயி)

replica-மறுபகர்ப்பு: ஓர் உயிரியல் மாதிரியின் மெலிந்ததும் விளக்கமானதுமான நகல். பிளாஸ்டிக்கும் கரியும் சேர்ந்த படலத்தை மேற்பரப்பில் தெளித்துப் பெறலாம். இப்பகர்ப்புகள் மின்னணு நுண்ணோக்கிப் பணியில் பயன்படுவது. (உயி)

replication-மறுபகர்ப்பாக்கல்: நகலாக்கல். மரபணுப்பொருளின் துல்லியபடிகளை எடுக்கும் நுட்பம். இதைக் கொண்டு டிஎன்ஏ, ஆர்என்ஏ ஆகியவற்றின் நகல்களை எடுக்கலாம். (உயி)

repression-ஒடுக்கல்: ஒருவகை உளவியல் பாதுகாப்பு. தான் ஏற்க இயலாத எழுச்சிப் பட்டறிவுகள், நினைவுத் திரட்டுகள் ஆகியவற்றைத் தனியாள் நினைவுள்ளத்திலிருந்து நீக்கி, நனவிலி உள்ளத்திற்கு மாற்றுதல், கவலை, அச்சம் முதலிய வடிவங்களில் தனியாளினால் இச்செயல் உணரப்பட்டு நடத்தை மாற்றம் பெறும். (உயி)

reproduction-இனப்பெருக்கம்: ஆண் அணு, பெண் அணுவுடன் சேர்வதால் கருவணு உண்டாகி உயிர் தோன்றுதல். இது எல்லா உயிர்க்கும் பொதுவான ஓர் அடிப்படை முறை. பொதுவாக, இது இருவகைப்படும். 1.பாலினப்பெருக்கம்: கலவி இனப்பெருக்கம், 2. பாலிலா இனப்பெருக்கம்: கலவியிலா இனப்பெருக்கம்.

reptilia-ஊர்வன: நிலத்தில் வாழும் முதுகெலும்பிகள், மாறு வெப்பநிலை விலங்குகள். உடல் புறத்தோல் செதில்களால் மூடப்பட்டிருக்கும். ஊர்பவை. எ.டு பாம்பு, முதலை, ஆமை, ஓணான், பல்லி (உயி)

resin-பிசியன்: கூம்புத்தாவரங்கள் முதலியவற்றில் காணப்படும் காடிப்பொருள் தொகுதியில் ஒன்று. கற்பூரத்தைலம். (உயி)

resistance-தடுப்பாற்றல்: 1. நோய்த் தொற்றிகளுக்கும் ஒட்டுண்ணிகளுக்கும் எதிராக ஏற்படும் ஆற்றல். 2. நோய்க் கொல்லிகளின் நச்சு விளைவுகளைத் தாக்குப்பிடிக்கும் திறன். பா. (உயி)

resolution-பகுத்தல்: ஓரகச் சீரிகளாக (ஐசோமர்கள்) ஒளிகுறை சேர்மத்தைப் பிரித்தல். (வேதி)

resolving power-பகுப்புத்திறன்: அருகிலுள்ள பொருள்களின் தனித்தனி உருக்களைத் தோற்றுவிக்கும் ஒளிக்கருவியின் திறமையளவு (இய)

resonance and tuning - ஒத்ததிர்வும் அதிர்வியையும்: வானொலிச் செலுத்தி அல்லது பெறுவியைக் குறிப்பிட்ட அதிர்வெண்ணில் இயங்கச் செய்வதற்கு அதிர் வியைபு (டியூனிங்) என்று பெயர். அதாவது, அதற்குக் குறிப்பிட்ட அதிர்வெண்ணிற்கேற்ப , ஒத்ததிர்வு (ரெசொனன்ஸ்) ஏற்படுமாறு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வானொலிப் பெட்டியிலும் அதிர்வியைவுப் பகுதி ஒன்றுண்டு. இதற்கு மின்நிலைமமும் (இண்டக்டன்ஸ்) குறிப்பிட்ட அளவுண்டு. ஒரு மாறுமின்னேற்பி இதனோடு தொடராகவோ பக்கமாகவோ இணைக்கப்பட்டிருக்கும். கம்பிச்சுருளின் மின்நிலைமம் நிலையானது. மின்னேற்பியின் ஏற்புத்திறன் மாறக் கூடியது. தேவைப்படும் நிலையத்திலிருந்து வரும் அலைகளுக்கேற்ப, மின்னேற்பியில் தகுதி வாய்ந்த ஏற்புத்திறனை அடையும் பொழுது, மின்சார ஒத்ததிர்வு ஏற்படுகிறது. இவற்றை எல்லாம் ஒரு வாய்பாடு மூலம் குறிப்பிடலாம்.

f- அதிர்வெண் L-மின்நிலைமம், C - ஏற்புத்திறன்

பல்வேறு அலைகள், அலை வாங்கியை அடைந்து மின் தூண்டலை ஏற்படுத்தினாலும், நமக்கு வேண்டிய ஒரே ஒரு நிலையத்தின் அதிர்வை மட்டும் பெற இயலும். பின் இந்த அலையானது படிகத்தினால் திருத்தப்படுகிறது, கேட்கும் நிலை பெறுகிறது. (இய),

respiration-மூச்சுவிடுதல்: உயிரிக்கும் சூழ்நிலைக்குமிடையே உயிர்வளியும் கரி ஈராக்சைடும் பரிமாற்றம் செய்யப்படுகின்றன அல்லது குருதிக்கும் திசுக்களுக்குமிடையே நடைபெறும் வளிமாற்றம் குறிப்பாக, இது திசுக்களில் நடைபெறும் உயிர்வளி மாற்றம். இதில் உள்மூச்சு, வெளி மூச்சு என்னும் இரு செயல்கள் உள்ளன. (உயி)

respiratory organ-மூச்சுறுப்பு: நுரையீரல்.கரி ஈராக்சைடும் உயிர்வளியும் பரிமாற்றம் செய்யப்படும் இடம்

respiratory pigment-மூச்சுநொதி: உயிர்வளியுள்ள நிறக்கூட்டுப்பொருள். (உயி)

respiratory quotient-மூச்சுஈவு: மூச்சு விடுதலின் பொழுது செலவழிந்த உயிர்வளிப் பருமனுக்கும் உண்டாகும் கரி ஈராக்சைடு பருமனுக்குமுள்ள வீதம். இது வழக்கமாக 0.8 (உயி)

response-துலங்கல்: சூழ்நிலையில் ஏற்படும் மாற்றத்திற்கேற்பத் தூண்டலால் உண்டாகும் வினை. மறிவினை சார்ந்தது. தூண்டல் துலங்கல் இல்லையேல் உயிர் இயக்கம் இராது. வளர்சிதை மாற்றம், உயிர்த்தல் முதலியவை போன்று இதுவும் ஓர் அடிப்படைச் செயலே. (உயி)

rest-1.ஓய்வு: வேலையினால் உடல் தளர்ச்சி ஏற்படும் பொழுது, அதிலிருந்து நீங்கி இருத்தல். தளர்ச்சிக்குச் சிறந்த மருந்து ஓய்வே. ஆற்றல் செலவழிவதால் ஊட்டமுள்ள சுவைநீரும் அருந்தலாம். (உய) 2. அசையா நிலை: பொருளின் நிலைத்த நிலை. (இய)

retardation-எதிர்முடுக்கம்: இயங்குகின்ற பொருள் தடை ஏற்படும் பொழுது, விரைவுத் தளர்ச்சி அடைகிறது. புவியிலிருந்து மேல்நோக்கி எறியப்படும் எப்பொருளும் புவிஈர்ப்பு விசையினால் விரைவுத் தளர்ச்சி அடையும். இதை எதிர்முடுக்கம் என்கிறோம். ஒ. acceleration. (இய)

retention-நினைவிலிருத்தல்: நினைவுநிலை சார்ந்தது.பெற்ற செய்தியினை மறைநிலையில் நீண்ட காலம் இருத்தி வைத்தல், மீளாக்கம் (ரிபுரடக்ஷன்). நினைவுணரல், மீண்டும் மீண்டும் செய்தல் ஆகிய நினைவுக் குறிப்புகள் தொடர்பான செயல்களை உற்றுநோக்கியே இதனை மதிப்பிட வேண்டும். இது செறிவாக இருந்தால்தான், கற்றல் செம்மையாக அமையும். (க.உள)

reticulate-வலைப்பின்னல் நரம்பமைவு: மா முதலிய தாவரங்களில் நடுநரம்பு பல நரம்புகளை உண்டாக்குகிறது. இவை இலைப் பரப்பில் பலதிசைகளிலும் பரவி,வலைப்பின்னல் போல் அமைந்திருக்கும். பா. venation (உயி)

retina-விழித்திரை: விழியின் மூன்று திரைகளில் ஒன்று. உணர் கண்ணறைகள் கொண்டது. உரு உண்டாகும் நரம்புத்திரை. (உயி)

retort-வாலை: நீர்மத்தைக் காய்ச்சி வடிக்கும் கருவியமைப்பு. (வேதி)

retrogression-பின்னடைவு: ஒரு விலங்கு தன் வளர்ச்சியில் பின்னோக்கிச் செல்லுதல், (உயி)

reverberation-எதிர்முழக்கம்: ஓர் அறையில் உண்டாக்கப்படும் வன்னொலி அலைகள் சுவர்களில் மோதி மீண்டும் குறைந்த வீச்சுடைய அலைகளாக ஒன்றன் பின் ஒன்றாகக் கேட்போரின் காதை அடையும். இறுதியாக இவை வலுவிழந்து கேட்க இயலாத அளவுக்கு மாறும். இந்நிலையில் அறையில் பேசுவதைப் புரிந்து கொள்ள இயலாது. இதுவே எதிர்முழக்கம். இசையரங்குகளிலும திரையரங்குகளிலும் ஓரளவுக்கு இந்நிலை இருந்தால், ஒலி இனிமை இருக்கும். (இய)

reverberatory furnace-எதிர் வெப்ப உலை: தாதுவிலிருந்து உலோகத்தைப் பிரித்தெடுக்கும் உலை. வேதி)

reversible change-மீள்மாற்றம்: ஒரு தொகுதியின் அழுத்தம், பருமன் முதலிய பண்புகளில் ஏற்படும் மாற்றம். இதில் மாற்றம் முழுவதும் நடுநிலையில் தொகுதி இருக்கும். (வேதி)

reversible reaction-மீள்மாறுவினை: முதல்நிலையிலிருந்து மாறுநிலைக்கும் மாறுநிலையிலிருந்து முதல் நிலைக்கும் உட்படும் வேதிவினை. எ-டு நைட்ரஜன்+ அய்டிரஜன் → அம்மோனியா.

N2 + 3H2 → 2NH3 (வேதி)

reversion-மீள்தோன்றல்: பல தலைமுறைகளுக்குப் பின் மூதாதைப் பண்புகள் கால்வழியில் மீண்டும் ஏற்படுதல். (உயி)

rhenium-ரீனியம்: Re அரிய மாறுநிலை உலோகம். காற்றில் உயிர்வளி ஏற்றத்திற்குச் சிறிது தடை அளிப்பது. வெப்ப இரட்டைகள் செய்யப் பயன் படுதல். தவிர, உலோகக் கலவைகளிலும் பயன்படுவது.(வேதி)

rheostat-மின்தடைமாற்றி: இது மின்தடையின் அளவைத் தேவைக்கேற்ப மாற்றியமைக்குங் கருவி. மின் கடத்தாப் பொருளால் செய்யப்பட்ட ஓர் உருளையின் மீது மெல்லிய நிக்ரோம் கம்பி ஒழுங்காகச் சுற்றப்பட்டிருக்கும். ஒரு முனை நிலையான மின்தொடர்பு கொண்டது. கம்பிச் சுருளில் தேவையான இடத்தில் இணைப்பு கொள்ள வழுக்கி ஒன்றுள்ளது. ஆதலால், தடையாகப் பயன்படுத்தப்படும் கம்பியில் எவ்விடத்திலும் மற்றொரு இணைப்பை உருவாக்க இயலும். எனவே, தடை யின் அளவை மாற்ற இயலாது. (இய)

rheumatism - கீல்வாதம்,மூட்டுúபிடிப்பு: தசைகளிலும் மூட்டுகளிலும் வலியும் விறைப்பும் இருத்தல். (உயி)

Rh factor -ஆர்எச் காரணி: வழக்கமாக மனிதக் குருதியில் இருக்கும் எதிர்ப்பிகள். மகப்பேற்றின் போது தீய விளைவுகளை உண்டாக்குபவை. இக் காரணியைக் கொண்டவர்கள் ஆர்எச் நேரிடையானவர்கள். கொள்ளாதவர்கள் எதிரிடையானவர்கள். இந்தியாவில் 97% நேரிடையானவர்களும் 3% எதிரிடையானவர்களும் உள்ளனர். (உயி)

rhinoceros - ஒற்றைக்கொம்பன்: காண்டாமிருகம். தடித்த தோலுள்ள பெரிய விலங்கு. தாவரஉண்ணி, மூக்கிற்குமேல் நேரான கொம்பு. ஒன்றுண்டு சில சமயங்களில் இரண்டுமிருக்கும். இச்சொல் மறைமலையடிகளால் பயன்படுத்தப்படுவது. (உயி)

rhinoscope -மூக்கு நோக்கி: மூக்கை ஆராயுங் கருவி. (உயி)

rhizoid - வேரி: வேர் போன்றபகுதி. ஒற்றைக் கண்ணறையாலானது. தாவரத்திற்குத் தாங்குதல் அளிக்கவும் நீரையும் ஊட்டப்பொருளையும் உறிஞ்சவும் பயன்படுதல். பெரணியின் கருப்பயிர். பியுனேரியா (உயி)

rhizome - மட்டக்கிழங்கு: சில தாவரங்களில் தண்டு குறுகியும் தடித்தும் சதைப் பற்றுள்ளதாகவும இருக்கும். இது தரையில் கிடைமட்டமாகவே வளரும். எனவே, இதற்குக் கிடைமட்டத் தண்டு என்று பெயர். இது ஒரு தரை கீழ்த்தண்டாகும். எ-டு இஞ்சி, மஞ்சள், பெரணி (உயி)

rhodium - ரோடியம்: Rh.வெண்ணிற உலோகம். பிளாட்டினத்தோடு சேர்ந்து உலோகக் கலவையாகப் பயன்படுவது. அறிவியல் கருவிகள் செய்யவும் பயன்படுவது. (வேதி)

rib-விலா எலும்பு: வளைந்ததும் இரட்டை இரட்டையாக உள்ளது மான தொடர்வரிசை. மனிதனிடம் 12 இணைகள் உள்ளன.

riboflavin -ரிபோபிளேவின்: உயிரியன். பி2. நீரில் கரையக் கூடியது. உயிரணு வளி ஏற்றத்திற்குக் காரணமான உடன் நொதியின் ஒரு பகுதி. பி தொகுதியைச் சார்ந்தது.(உயி)

ribose - ரிபோஸ்: C5H10O5, ஒற்றைச் சர்க்கரைடு, ஆர்என்ஏ வின் பகுதி.(உயி)

ribosome - ரிபோசோம்: அதிக அளவில் எல்லாக் கண்ணறைகளிலுமுள்ள சிறிய உறுப்பு அல்லது நுண்ணுறுப்பு புரதத் தொகுப்பு நடைபெறும் இடம்.(உயி)

rickets - ரிக்கட்ஸ்: உயிரியன் டி குறைவினால் ஏற்படும் குறை நோய். (உயி) rigor mortis -இறப்பு விறைப்பு: மனிதன் இறந்தபின் தசைகள் விறைத்துக் கடினமாதலே இறப்பு விறைப்பு. இது நிகழ்ந்த பின் கைகால்களை மடக்க இயலாது. திறந்த வாயை மூட இயலாது. எனவேதான், மனிதன் இறந்த பின் கைக்கட்டு, கால்கட்டு வாய்க்கட்டு போடப்படுகிறான். தசை நார்களில் அடினோசைன் முப்பாஸ்பேட்டு தீர்வதால், இந்நிலை ஏற்படுதல். (உயி)

ring - வளையம்: ஒரு மூலக்கூறிலுள்ள அணுக்களின் மூடிய தொடர் (வேதி)

ring compound -வளையச்சேர்மம்: வேதிச்சேர்மத்தின் மூலக்கூறில் சில அல்லது எல்லா அணுக்களும் மூடிய வளையத்தோடு இணைந்திருக்கும். இத்தகைய சேர்மம் வளையச்சேர்மமாகும். (வேதி)

Rio-Earth Summit -ரியோ புவி உச்சி மாநாடு: 1992இல் உலக அளவில் ஐ.நா சார்பாகப் பிரேசிலில் நடந்த சூழ்நிலைப் பாதுகாப்பு மாநாடு.

ripple-1, அலை, 2 அலையாக்கி: அலைகளை உருவாக்குங் கருவி. (இய)

rivers-ஆறுகள்:ஓடும் நீரே ஆறு இவை வற்றும் ஆறுகள், வற்றாத ஆறுகள் என இருவகைப்படும். இவை இளநிலை, முதிர்நிலை, மூப்புநிலை என மூன்று நிலைகளைக் கொண்டவை. ஆற்று அரிப்பினால் பள்ளத்தாக்குகள்,நீர் வீழ்ச்சிகள் முதலியவை உண்டாகின்றன. (பு:அறி)

RNA, ribo nucleic acid - ஆர்என்ஏ, ரிபோ நியூக்கிளிகக் காடி: இஃது உட்கருக்காடிகளில் ஒன்று. ஒரு புரியில் உள்ளது. இதில் பெண்டோஸ் சர்க்கரை ரிபோஸ், பாசுவரிகக்காடி வேற்று வளைய நான்கு படி மூலிகள் ஆகிய பகுதிகள் உள்ளன. இது. முதன்மையாக, கண்ணறைக் கணியத்தில் காணப்படுவது. புரதத்தொகுப்பிற்குக் காரணமானது. டிஎன்ஏ கட்டுப்பாட்டில் வேலை செய்வது. இதன் மூன்று வகைகளாவன. 1. தூது ஆர்என்ஏ 2. ரிபோசோம் ஆர்என்ஏ 3. மாற்றும் ஆர்.என்.ஏ. பா. DNA (உயி)

roasting-வறுத்தல்: உலோகத்தைப் பிரித்தலுக்கு முன், தாது காற்றில் சூடாக்கப்படுதல். இதனால் அதிலுள்ள மாசுகள் நீங்குவதால், அடுத்தநிலையை மேற்கொள்ள எளிதாகும். ஆகவே, இது உலோகப்பிரிப்பு முறைகளில் ஒன்று. எ-டு இரும்பின் சல்பைடு. தாதுவை வறுக்க, அதிலுள்ள கந்தகம், கரி ஈராக்சைடு, சவ்வீரம் ஆகிய மாசுகள் ஆவியாகி நீங்கும். இதனால் அடுத்து ஒடுக்கல் எளிதாக நடைபெறும்.

துத்தசல்பைடு +ஆக்சிஜன் …Δ→ துத்த ஆக்சைடு + கந்தக ஈராக்சைடு ↑

2ZnS + 3O2Δ→2ZnO +2SO2துத்தக் கார்பனேட்டு ∆ துத்த ஆக்சைடு + கார்பன்டை ஆக்சைடு

ZnCO3 ZnO + CO2

Robert Huber, Dr. - டாக்டர் இராபர்ட் ஹூபர்: நோபல் பரிசு பெற்ற அறிவியலார். இவர் பேட்டர்சன் முறைகளை உருவாக்கக் காரணமாக இருந்தவர். உயிர் பெருமூலக் கூறுகளின் முப்பரும அமைப்பை ஆராய்வதற்குரிய கருவிகள் இம்முறைகள். ஒளிச்சேர்க்கை வினைமையத்தின் முப்பரும அமைப்பை இவர் விரிவாக விளக்கிப் புகழ்பெற்றவர். (உயி)

robot-தொலைஇயக்கி: கணிப் பொறியால் இயங்கும் எந்திரம். அலுப்பு சலிப்பு இல்லாமல் வேலைகளைத் திரும்பத் திரும்ப இதன் மூலம் செய்யலாம். தவிர, வண்ணத்தெளிப்பு பற்ற வைத்து இணைத்தல் முதலிய கடின வேலைகளும் இதன் மூலம் நடைபெறுபவை. 2. நிகழ்நிரல் அமைத்து எந்திரங்களைக் கட்டுப் படுத்துவது. 3 உற்பத்தித் துறையில் சரக்குகளையும் பொருள்களையும் கையாளுந் தானியங்கிக் கருவித் தொகுதி 4 ஒரு செயற்கைக்கோள். 5. நடக்கும் பேசும் கற்பனை எந்திர மனிதன். (தொது)

robotics-தொலை இயக்குவியல்: முன்னரே உறுதி செய்யப்பெற்ற செயல்களை நிறைவேற்றக் கணிப் பொறியால் கட்டுப்படுத்தப் பெறும் எந்திரங்களை ஆராயுந்துறை. உந்துவண்டியில் உலோகத்தைப் பற்றவைத்து இணைத்தல், கோளின் மண்ணியல்பைப் பகுத்துப் பார்த்தல், திங்களின் மண் நன்கு பகுத்துப் பார்க்கப் பெற்றுள்ளது. ஒ. cybernetics (தொது)

Rochelle salt - ராசல் உப்பு: (KNAC4H4O4) பொட்டாசியம் சோடியம் டார்ட்ரேட் வெண்ணிறப் படிகம். நீரில் கரைவது. மின்னழுத்தப் பண்புகள் உண்டு. ரொட்டித் தொழிலில் பயன்படுவது. (வேதி)

rod - கோல்: ஒளியுணர்வுடைய கண்ணறை வகை இரண்டில் ஒன்று. விழித்திரையில் காணப் படுவது. மங்கிய ஒளியில் பார்வை தெரிவதோடு தொடர்புடையது. பா. core. (உயி)

rocket - ஏவுகணை: அறிவியல் முறையில் நன்கு திருத்தி அமைக்கப்பட்ட வாணமே ஏவுகணை. தலை, உடல், வால் என்னும் முன்று பகுதிகளைக் கொண்டது. தலையில் முகப்பெடை இருக்கும். உடலின் மேல் பகுதியில் சுழலி முதலிய கட்டுப்பாட்டுக் கருவிகளும கீழ்ப்பகுதியில் எரி பொருள் தொட்டிகளும் இருக்கும். வாலில் மின் உந்தி, விசையாழி, நிலைப்புச் சிறகுகள், தகடுகள், பீறிடும் குழாய் முதலிய பகுதிகள் இருக்கும். முதன்மையாகச் செயற்கை நிலாக்களை ஏவவும் காற்று மேல் வெளி ஆராய்ச்சிக்கும் பயன்படுவது. (இய) rocket propulsion - ஏவுகணை முன்னியக்கம்: ஏவுகணையின் எரியறையில் பின்புறம் மட்டுமே பீச்சும் குழல் இருக்கும். இவ்வறையில் எரிபொருள் எரியும் பொழுது மீயழுத்தத்துடன் வளிகள் உண்டாகும். இவை குறுங்குழலின் வழியாக வெளியேறுவதால் உருவாகும் பின்னோக்கு இறுக்கு விசைக்கு இணையாக எதிர்த்திசையில் உண்டாகும். முன்னோக்கு இறுக்குவிசை அதை முன்நோக்கிச் செல்லுமாறு செய்யும். நியூட்டனின் மூன்றாம் இயக்க விதியின் அடிப்படையில் ஏவுகணை இயங்குவது. பா. recol (இய)

rodents - கொறிப்பிகள்: கொறிக்கும் விலங்குகள். பாலூட்டிகளுமாகும். தொடர்ந்து வளரக் கூடிய உளிபோன்ற சுரண்டும் பற்கள் 4 உண்டு. இவற்றில் 2 மேல்தாடையிலும் 2 கீழ்த்தாடையிலும் இருக்கும். எ-டு அணில், எலி, (உயி)

roe - மீன்முட்டை: கருப்பைப் படலத்தில் தொகுதியாக உள்ள மீன் முட்டைகள், 2. செம்மான் நன்றாக ஓடக் கூடிய அழகிய மான். (உயி)

Roentgen rays - ராண்ட்ஜன் கதிர்கள்: பா. x-rays. (இய)

roentgen - ராண்ட்ஜன்: R. அலகுச் சொல். அயனிவயமாகும் கதிர்வீச்சலகு. (இய)

Rohini-ரோகிணி: ஒர் உயராற்றல் அளவெடுப்பு இந்திய ஏவுகணை ஆர்எச் 560 எம்கே II. 9.4.97 அன்று ஷார் மையத்திலிருந்து ஏவப்பட்டது. ஆராய்ச்சி ஏவுகணை. முகப்பெடை 362 கி.கி. அடைந்த உயரம் 454 கி.மீ ரோகிணி வரிசையில் மிகப் பெரியது.

Rose's metal- ரோஸ் உலோகம்: உருகக் கூடிய உலோகக் கலவை. 50% பிஸ்மத், 28% காரீயம் மற்றும் வெள்ளியம் கொண்டது. குறைந்த உருகுநிலை 100 செ. தீப்பாதுகாப்புக் கருவிகளில் பயன்படுதல். (வேதி)

rotascope - சுழல்விரைவுநோக்கி: எந்திர விரைவு இயக்கத்தை உற்றுநோக்கப் பயன்படுங் கருவி. (இய)

rotation of crop - பயிற்சுழற்சி: மாற்றுப் பயிரிடல். ஒரே பயிரைச் சாகுபடி செய்வதால் நிலத்திலுள்ள உப்புகள் தீர்ந்து அதன் வளம் நீங்கும். இவ்வாறு வளம் நீங்கிய நிலம் களைத்த நிலமாகும். இதைப்போக்க மாற்றுப் பயிரிடல் சிறந்த முறை. நமது நிலத்தில் முதல் பருவம் ஒரு பயிரும் (கடலை அடுத்த பருவம் வேறு பயிரும் (பயிறு) சாகுபடி செய்தால் நல்ல பலன் கிடைக்கும். (உயி)

rotor சுழலி: மின்உந்தி (மோட்டார்), மின்இயக்கி (டையனமோ), மின்இயற்றி ஜெனரேட்டர்) ஆகியவற்றின் சுழலும் பகுதி. இது ஒரு கவரகமே (ஆர்மேச்சர்) ஒ.stator. (இய)

rubber - ரப்பர்: மரப்பாலிலிருந்து செய்யப்படும் கடின மீள் பொருள். இயற்கைப் பல்படிகளில் (பாலிமர்ஸ்) ஒன்று செயற்கையாகவும் பெறலாம். இதி லுள்ள மூலக்கூறுகள். மீட்சி உடையவை. தயோகால், நியோப்ரின் ப்யுட்டைல் ரப்பர், நைட்ரல் ரப்பர் முதலியவை செயற்கை ரப்பர்கள். (வேதி)

rubidium - ரூபிடியம்: Rb. காரக் குடும்பத்தைச் சேர்ந்த அரிய உலோகத் தனிமம். காரலைட்டில் பொட்டாசியத்தோடு சேர்ந்து காணப்படுவது. லிபிடோ லைட்டில் லித்தியத்தோடு சேர்ந்திருப்பது ஒளி மின்கலங்களிலும் வெற்றிடக் குழாய்களிலும் பயன்படுவது. (வேதி)

:ruby - சிவப்புக்கல்:Al2O3' விலை உயர்ந்த கல். நிறம் அதிலுள்ள குரோமியத்தினாலாகும். மணிக்கல்லாகவும் இலேசர்களிலும் பயன்படுதல். (வேதி)

rudiment(s) -1.வளர்ச்சியற்ற உறுப்பு 2 பயனற்ற உறுப்பு 3. தொடக்கப் பகுதி. 4. மூலக் கோட்பாடுகள்: (ப.து)

rumen - அசைபை: அசைபோடும் விலங்குகளின் முதல் இரைப்பை. இங்கு விழுங்கிய உணவு சேமித்து வைக்கப்படுகிறது. பின்பு அரைத்து விழுங்கப் படுகிறது (உயி)

ruminants-அசைபோடும் விலங்குகள்: குளம்பு, கொம்பு, அசைபை முதலிய உறுப்புகள் கொண்ட விலங்குகள். எ.டு. ஆடு, பசு. (உயி)

runner-ஓடி: மண்பரப்பு நெடுகக் கிடைமட்டமாக வளருந்தண்டு. புதிய தாவரங்களைக் கக்க மொட்டுகளிலிருந்தும் முனை மொட்டுகளிலிருந்தும் உண்டாக்குபவை. (உயி)

rusts - துருப்பூஞ்சை: பொருளாதாரச் சிறப்புடையவை: பக்கீனியா (உயி)

rusting - துருப்பிடித்தல்:இரும்பின் நீரேறிய ஆக்சைடு, Fe203.H2O. ஈரக்காற்றில் படும்போது இரும்பின் மேற்பரப்பில் உண்டாவது துரு. இதைத் தடுக்க வண்ணம் பூச வேண்டும். இது ஒரு வேதிச்செயல். (வேதி)

rut-பால்வேட்கை: ஆண் விலங்கு களில் ஏற்படும் பருவகாலப் பால்துண்டல். குறிப்பாகக் கலைமானில் ஏற்படுவது. (உயி)

ruthenium -ரூத்தினியம்: Ru. பிளாட்டினத் தொகுதியைச் சார்ந்த உலோகம், கடினமானது, நொறுங்கக் கூடியது. எளிதில் உருகாதது. மின்தொடர்புகளிலும் அணிகலன்களிலும் பயன்படுவது. வளிகளை உறிஞ்சும் வீறுள்ள வினையூக்கி (வேதி)

rutherford -ரூதர்போர்டு: rd. அலகுச்சொல். ருதர்போர்டு (1871-1937) பெயரால் அமைந்தது. கதிரியக்கச் சிதைவின் அலகு ஒரு வினாடிக்கு ஒரு மில்லியன் சிதைவுகள் உண்டாதல். (இய)

Rutherford theory - ரூதர்போர்டு கொள்கை: இக்கொள்கை அணு பற்றியது. அனுவின் நுண்ணிய அமைப்பைக் கண்டறிந்த பெருமை இவரையே சாரும். இவர் கொள்கைப்படி ஒவ்வொரு அணுவிலும் ஒரு கருவுண்டு. அது நேர்மின்னேற்ற முடையது. எதிர்மின்னேற்றமுடைய துகள்கள் மையமாகச் சுற்றிவருகின்றன. அணுவின் கருவிலுள்ள முன்னணுக்களின் (புரோட்டோன்ஸ்) நேர்மின்னேற்றமும் அதைச் சுற்றிவரும் துகள்களின் மின்னணுக்களின் (எலக்ட்ரான்ஸ்) எதிர்மின்னேற்றமும் சமம். எனவே, ஓர் அணு நடுநிலை மின்னேற்றம் பெற்றுள்ளது. அணுவின் நிறை முழுவதும் கருவினாலேயே ஏற்படுகிறது. இவர் முன்னணுக்கள், மின்னணுக்கள் பற்றி விளக்கினார். ஆனால், மின்னணுக்கள் அனுவில் அமைந்த இடங்களையோ அமைந்துள்ள வகைபற்றியோ நுட்பமாக விளக்கவில்லை . (இய)

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவியல்_அகராதி/R&oldid=1040365" இலிருந்து மீள்விக்கப்பட்டது