அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்/L

L

L-head engine: (தானி. எந்.) “எல்’ வடிவத் தலை எஞ்சின்: தலைப் பகுதி ஆங்கில எழுத்து 'L' வடிவில் அமைந்துள்ள ஓர் எஞ்சின்.

Label: (க. க.) வடிதாரை: ஒரு சுவரிலுள்ள இடைவெளிக்கு மேலாக நீட்டிக்கொண்டிருக்கும் மழைத்துளிகளை அப்பால் விழச் செய்யும் கட்டமைவு.

Label Paper: குறிப்புச் சீட்டுத்தாள்: அடையாளத் துண்டுக் குறிப்புச் சீட்டுகள் தயாரிப்பதற்குப் போதிய வடிவளவில் வெட்டப்பட்ட தாள்.

Laboratory: ஆய்வுக் கூடம்: அறிவியல் ஆராய்ச்சிகள், பரிசோதனைகள், பகுப்பாய்வுகளைச் செய்வதற்கான செய்முறைச் சாலை.

Laboraory assistant: ஆய்வுக் கூட உதவியாளர்: ஆய்வுக்கூடத்தில் பொருள்களை வழக்கமான முறையில் சோதனை செய்யும் ஒர் இளநிலைப் பொறியாளர்.

Labor saving:(அச்சு.) உழைப்புச் சுருக்கப் பொருள்: உழைப்பினைச் சுருக்கி, கால விரயத்தைக் குறைக்கும் அச்சுப் பொருள்.

Lac: (மர. வே.) அரக்கு: அரக்குப் பூச்சியிலிருந்து சுரக்கும் பிசின் போன்ற ஒரு பொருள், இது அவலரக்கிலிருந்து வேறுபட்டது. அவலரக்கு என்பது அரக்கிலிருந்து தயாரிக்கப்படும் பொருள். விரைவாக உலரும் மரவண்ணப் பூச்சுப் பொருள்களையும் இது குறிக்கும்.

Lacewood: பட்டுக்கருவாலி: ஆஸ்திரேலியாவில் வளரும் ஒருவகை மரம். இது விலை மலிவானது; பட்டுப்போல் சீரான புள்ளிகள் உடையது. அலங்கார வேலைகளுக்கு ஏற்றது. சிறிய பரப்புகளிலும், உள் பதிவு வேலைகளிலும் பயன்படுகிறது.

Lacing: (பொறி.) இறுக்கு இழை வார்: எந்திர உறுப்புகளை இணைத்தியக்கும் தோல் பட்டை வாரின் முனைகளை இழைக்கச்சினால் இறுக்கிப்பிணைக்கும் தோல் வார். இப்போது இதற்கு உலோக இணைப்பிகள் பயன்படுகின்றன.

Lacquer: (உலோ.) உலோக மெருகு: வாயுமண்டலப் பாதிப்பினால் வண்ணங்கெடாமல் பாதுகாப்பதற்கு உலோக வேலைப்பாடுகளில் பூசப்படும் மெருகெண்ணெய்.

Lacquer work: மெருகுவேலை: வண்ணங்கெடாமல் தடுப்பதற்கு உலோக மெருகெண்ணெய் பூசப்பட்ட வேலைப்பாடு. இனாமல் போன்று உலோக மெருகு பூசப்பட்ட அலங்கார வேலைப்பாடு.

Lactose: (வேதி.) பால் வெல்லம்: (C12H22O11): பாலிலுள்ள சர்க்கரை, உறைபால் தெளிவினைச் செறிவாக்குதல், படிகமாக்குதல் மூலம் பெறப்படும் இனிப்பான, மிக நுண்ணிய வெண் பொடி.

Lacunar: (க.க.)பொட்டிப்பு முகடு: பொட்டிப்புகள் அல்லது உள் கண்ணறைகள் உடைய மேல் முகடு.

Ladder: (க.க.) ஏணி: ஏறுவதற்கு உதவும் சாதனம். இணையான இரு கோல்களை குறுக்குப் படிகளால் இணைத்து அமைக்கப்பட்ட படிமரம்.

Ladder back: ஏணி நாற்காலி: பல கிடை மட்ட மரச் சட்டங்கள் கொண்ட நாற்காலிச் சாய்பலகை.

Ladle: (வார்.) சட்டுவம்: இரும்பு வார்ப்படத் தொழிற்சாலை அடுப்பிலிருந்து உருகிய உலோகத்தைக் கோதி வார்ப்படத்தில் ஊற்றுவதற்குப் பயன்படும் கொள்கலம்: இது, 25-100டன் வரைக் கொள்ளக் கூடியதாகப் பல்வேறு வடிவளவுகளில் உண்டு.

La Farge cement: சுண்ணச் சிமென்ட்: சுண்ணாம்பை நீற்றும் போது துணைப் பொருளாக உண்டாகும் சிமென்ட். இது கறைபடாதது. இது போர்ட்லந்து சிமென்ட் போன்ற வலுவுடையது.

Lagging current: (மின்.) பின்னடைவு மின்னோட்டம்: ஒரு மின் சுற்று வழியிலுள்ள தூண்டலினால் மின்னோட்டம் பின்னடையும்படி செய்கிறது.

Lag screw: பின்னடைவுத் திருகு: சதுர வடிவத் தலையுடைய, கனமான மரத் திருகு. இதன் தலையில் இயைவுப்பள்ளம் இல்லாததால் இதனைத் திருக்குக் குறடு மூலம் இறுக்க வேண்டும்.

Laid paper: முகட்டுக் காகிதம்: கம்பிகளைப் பயன்படுத்திச் செய் யப்பட்டதால் வரிவரியான முகடுகளுள்ள காகிதம்.

Lake: (வேதி.) அரக்குச் சாயம்: அரக்கினால் செய்யப்பட்ட வண்ணப் பொருள்.

Lake copper: (உலோ.) ஏரிச்செம்பு: மிச்சிகன் ஏரி அருகே கிடைக்கும் தாதுப்பொருள்களிலிருந்து குளிர் செறிவாக்க முறைகள் மூலம் பெறப்படும் செம்பு.

Lambre quin: முகட்டுத்திரை: கதவின் அல்லது பலகணியின் அலங்கார முகட்டுத் திரை.

Laminar flow: (வானூ.) தடைபடாத் துகளியக்கம்: தடைபடாத் துகளணுக்களின் இயக்கம். திட எல்லைகள் அருகே பசைத் திரவம் பாய்வதை இது குறிக்கும்.

Laminate: தகட்டடுக்கு: மரப் பலகைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி ஒட்டுப் பலகை தயாரித்தல். மென்தாள் ஒட்டல்.

Laminated brush: (மின்.) மென்தகட்டுத் தொடுவி: செம்பு, வெண்கலம் போன்ற உலோகங் களின் மென் தகடுகளாலான

திசை மாற்றுத் தொடுவி.

Laminated construction :அடுக்குக் கட்டுமானம்: குறைந்த எடையில் உயர்ந்த அளவு வலிமை பெறுவதற்காக அடுக்குகள் அடுக்கி எழுப்பப்படும் கட்டுமானம்.

Laminated core:மென்தகட்டு உள்ளீடு : மின் காப்பிடப் பட்ட இரும்புத் தகடுகளின் அடுக்குகளினாலான ஒரு மின்னக உள்ளீடு. இது உலோகத்தில் சுழல் மின்னோட்டம் ஏற்படாமல் தடுக்கிறது.

Laminated liner:[தானி]அடுக்குக் காப்புறை: உந்து ஊர்திகளில் சுழற்றக் கூடிய பல அடுக்கு உள் வரி உலோகக் காப்புறை.

Laminated plastics : (குழை) அடுக்கு பிளாஸ்டிக்: கனமில்லாமல் வலுவாகவுள்ள பிளாஸ்டிக், கண்ணாடிப் பொருள்களை அடுக்கடுக்காக அமைத்துச் செறிவாக்குவதன் மூலம் போதிய வலிமையுள்ள பிளாஸ்டிக் கிடைக்கிறது. இவை தகடுகளாக அல்லது படகின் உடற்பகுதிக்கேற்ப வலுவாகத் தயாரிக்கப்படுகின்றன.

Lamp; (மின்.) விளக்கு: மின் இழை அல்லது சுடர் உள்ள ஒரு சாதனம், இது சூடாகும்போது சுடர்விட்டு ஒளியுண்டாக்குகிறது.

Lamp adapter: (மின்) விளக்குக் கிளைப்பான் : தொலைபேசித் தொடர்பாளரின் கவனத்தைக் கவர்வதற்காக தொலைபேசி, விசைப் பலகைகளில் பயன்படுத் தப்படும் வெண்சுடர் விளக்குகளைப் பயன்படுத்துவதற்கான ஒரு சாதனம்.

Lamp bank: (மின்) விளக்குப் பலகை: விளக்குகளுக்கான பல கொள்கலன்கள் பொருத்தப்பட்டுள்ள ஒரு பலகை. இந்த விளக்கு கள் கட்டுறுத்தும் கம்பங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

Lamp base: (மின்.) விளக்காதாரம்: ஒரு வெண்சுடர் விளக்கின் முனையுடன் இணைக்கப்பட்டுள்ள பித்தளைத் திருகு ஆதாரம், இது ஒரு குதை குழியுடன் விளக்கினை இணைப்பதற்கு இடமளிக்கும்.

Lamp cord: (மின்) விளக்குக் கட்டிழை: இரு சரங்களாக மின் காப்பிட்ட மின் கடத்திகளைக் கொண்ட நெகிழ்வுடைய கட்டிழை. இது பொதுவாக ஒரே உறையில் இருக்கும்.

Lamp efficiency; (மின்.) ஒளித் திறன்: ஒரு மெழுகுவர்த்தியின் ஒளித்திறனை உண்டாக்குவதற்குத் தேவைப்படும ஆற்றலின் அளவு. இது வாட்டுகளில் குறிப்பிடப்படும். இதனை வாட்/மெழுகு வர்த்தித் திறன் (W.P.C.) என்று குறிப்பிடுவர்.

Lamp socket: (மின்) விளக்குக் குதைகுழி: விளக்குக்கும் மின்சுற்று வழிக்குமிடையே இணைப்பு ஏற்படுத்துவதற்காக ஒரு விளக்கின் அடிப்பகுதியைப் பொருத்துவதற்குரிய கொள்கலன் .

Land: (பட்.) சால்வரி இடைவெளி: துரப்பணங்கள், குழாய்கள். துளைச் சீர்மிகள் போன்ற கருவிகளில் வடுப்பள்ளங்களுக்கிடையிலுள்ள இடைவெளி.

Landing: (வானூ.) தரையிறங்குதல்: பறக்கும் விமானம் பறக்கும் வேகத்தைக் குறைத்துக் கீழே இறங்கு தரையுடன் தொடர்பு கொண்டு இறுதியாக நின்று விடுதல்.

Landing angle: (வானூ .) தரை நிலைக்கோளம் : விமானம் தரை மட்டத்தில அதன் இயல்பான நிலையில் நிலையாக இருக்கும் போது அதன் உந்து கோட்டிற்கும் கிடைமட்டக் கோட்டிற்குமிடையிலான கூர்ங்கோணம்.

<b.Landing area floodlight : (வானூ.) தரையிறங்கு பகுதி ஒளிப் பெருக்கு : விமானம் தரையிறங்கும் பகுதியில் பல திசைகளிலிருந்து ஒளி வீசுவதற்கான சாதனம்,

Landing beam: (வானூ .) அலைக் கதிர்க்கற்றை: விமானம் தரையிறங்குவதற்கு வழி காட்டும் வானொலி அலைக்கதிர் கற்றை,

Landing Direction Light : (வானூ.) இறங்குதிசை விளக்கு : விமானம் எந்தத் திசையில் தரையிறங்க வேண்டும் என்பதைக் காட்டும் விளக்கு அல்லது விளக்கு களின் தொகுதி.

Landing field : (வானூ .) தரையிறங்கு தளம்: விமானம் தரையிறங்குவதற்கு ஏற்ற வடிவளவும் பரப்பளவும் கொண்ட ஒரு தளம். இது விமான நிலையத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம்; இல்லாமலுமிருக்கலாம்.

Landing flap: (வானூ .) தரையிறங்கு சிறகு: விமானத்தின் ஓர் இறகின் பின் முனையுடன் இணைக் கப்பட்டிருக்கும் ஓர்இணைப்பு தரையிறங்கும்போது இதைத் திருப்பும்போது இது காற்றுத் தடையாகச் செயற்படுகிறது.

Landing gear: (வானூ .) தரையிறங்கு பல்லிணை: விமானத்தின் அடியிலுள்ள ஒரு கட்டுமானம் தரையிறங்கும்போது ஏற்படும் அதிர்ச்சியைக் குறைக்கவும், தரையிலோ, நீரிலோ விமானம் இருக்கும்போது அதனைத் தாங்கிக் கொள்ளவும் இது பயன்படுகிறது.

Landing light : (வானூ.) தரையிறங்கு ஒளி: விமானம் தரையிறங்கும்போது ஒளியூட்டுவதற்காக விமானத்திலுள்ள ஒரு விளக்கு.

Landing mat: (வானூ) தரையிறங்கு தளப்பாய்: விமானம் தரையிறங்குவதற்கான ஒடுபாதையாக அமைக்கப்பட்டுள்ள உலோக வலைகள் அல்லது துவாரமுள்ள உலோகத் தகடுகள்.

Landing newel: (க.க.) தரையிறங்கு நடுத்தூண் : ஒரு படிக்கட்டின் தரையிறங்கு முனையில் அமைக்கப்பட்டுள்ள, படிக்கட்டுக் கைப்பிடி வரிசையின் அடிக் கம்பம்.

Landing speed:: (வானூ .) தரையிறங்கு வேகம்: விமான சமதளத்தில் பறந்துகொண்டு, போதிய அளவு கட்டுப்பாட்டில் நிலைத்து நிற்கக்கூடிய குறைந்த அளவு வேகம்.

Landing strip: (வானூ.) தரையிறங்கு நீள் தளம்: விமான நிலையத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள குறுகலான நீண்ட நிலப் பகுதி. இயல்பான சூழ்நிலைகளில் விமானம் தறையிறங்குவதற்கும், தரையில் ஒடிப் பறப்பதற்கும் இது பயன்படுகிறது.

Landing T: (வானூ.) தரையிறங்கு T: ஆங்கிலத்தில் 'T' எழுத்தின் வடிவிலுள்ள ஒரு பெரிய சைகை, இது, விமானம் தரையிறங்குவதற்கும், தரையில் ஒடி மேலே பறப்பதற்கும் வழி காட்டுவதற்காக தரையிறங்கு தளத்தில் அல்லது ஒர் உயரமான கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருக்கும்.

Landing tread: (க.க.) படிக்கால் மிதி கட்டை: படிக்கட்டின் தரையினைத் தொடும் மிதி கட்டை. பொதுவாக, இதன் முன்முனை ஒரு மிதிகட்டையின் கனத்தையும். பின் முனை தரைத்தளத்தின் கனத்தையும் கொண்டிருக்கும்.

Landing wire: (.வானூ) தரையிறங்கு கம்பி: விமானத்தை உயரே செலுத்துகிற இயல்பான திசைக்கு நேர் எதிர்த்திசையில் இயங்கும் விசைகளைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஒரு கம்பி, இது உறுப்புகள் அளவுக்கு மீறி இறுகி கட்டுமானத் திரிபடைந்து விடாமலும் காக்கிறது.

Landmark beacon; (வானூ).நில எல்லை அடையாள ஒளி: திட்டவட்டமான புவியியல் எல்லைகளைக் குறித்துக் காட்டுவதற்குப் பயன்படும் அடையாள ஒளி.இது விமான நிலைய அடையாள ஒளி. அல்லது ஓடுபாதை அடையாள ஒளியிலிருந்து வேறுபட்டது.

Land plane: (வானூ.) தரை விமானம்: தரையில் மட்டுமே இறங்கவும், தரையிலிருந்து மட்டுமே ஏறவும் கூடிய ஒரு விமானம்.

Landscape panel: இயற்கைக் காட்சிக் கரணை: கிடைமட்டக் கரணையுடைய பொட்டிப்பு.

Lap: (எந்.) மெருகிடு கருவி: உராய்வுப் பொருள் பூசிய மேற்பரப்பினையுடைய துல்லியமான கூர்மை கொண்ட ஒரு கருவி.

Lap joint; (மர.வே.)மடிப்புமூட்டு: தண்டவாளம், கம்பம் முதலியவற்றின் இரு விளிம்புகளையும் பருமனில் பாதியாக்கி இணைத்துப் பொருத்தும் முறை.

Lapping: (எந்.) மடிப்புறுத்துதல்: உட்புற அல்லது வெளிப்புறப் பரப்புகளை கையாலோ எந்திரத்தாலோ மடித்துச் சமனாக்குதல்.

Lap riveted joint: மடித்திறுக்கு மூட்டு; தகடுகளின் முனைகள் ஒன்றன் மேல் ஒன்று பொருந்துமாறு மடித்து இறுக்கிப் பிணைத்த மூட்டு.

Lap seam welding: மடிப்புப் பற்ற வைப்பு: விளிம்புகள் ஒன்றன் மேல் ஒன்று பொருந்துமாறு மடித்து வைத்துப் பற்ற வைக்கும் முறை.

Larch; (மர.வே.)ஊசியிலை மரம்: கற்பூரத் தைலம் தரும் ஊசியிலைக் கட்டுமான மரம். இது நடுததர வடிவளவுடையது: கூம்பு வடிவக் கனி தருவது; குறிப்பிட்ட பருவத்தில் இலையை உதிர்க்கக்கூடியது. இதன் மரம் கடினமானது. கனமானது. வலுவானது. இதன் மரம் தொலைபேசிக் கம்பங்களுக்கும் வேலிக் கம்பங்களுக்கும் கப்பல் கட்டுவதற்கும் பயன்படுகிறது.

Lard oil: (எந்.) பன்றிக் கொழுப்பு எண்ணெய்; பன்றிக் கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய். உலோக வெட்டுக் கருவிகளில் திறன்வாய்ந்த உயவுப் பொருளாகப் பயன்படுகிறது.

Large knot: பெருங்கணு; 4 செ.மீ.க்கு மேல் விட்டமுள்ள மரக்கனு.

Larry: கலவைக்கருவி: வளைவான எஃகு அலகுடைய ஒரு கருவி, இதன் கைபிடி 18 செ.மீ. அல்லது 20 செ.மீ. நீளமுடையதாக இருக்கும். இது கலவை செய்திடப் பயன்படுகிறது.

Last: மிதியடிப் படியுரு ; புதை மிதியடி செய்வதற்குரிய படியுருவக்கடை

Lastic (வேதி. குழைம.) ரப்பர் பிளாஸ்டிக்: ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் ரப்பரின் பண்புகளையுடைய ஒரு பிளாஸ்டிக் பொருள்.

Latent heat. உட்செறிவெப்பம் ; ஒரு பொருளின் வெப்பநிலையை மாற்றாமல் அப்பொருளின் இயற்பியல் நிலையை மாற்றுகிற வெப்பம், எடுத்துக்காட்டு: பனிக்கட்டியை நீராக மாற்றுவதற்குத் தேவை வெப்பம்; 32° ஃபாரன்ஹீட் நீரை நீராவியாக மாற்றுவதற்குத் தேவையான 212° ஃபாரன்ஹீட்.

Lateral: பக்கம் நோக்கிய: பக்கம் நோக்கிச் செல்கிற அல்லது நீள் வாக்கிற்குக் குறுக்காகச் செல்கிற,

Lateral motion: பக்கம் நோக்கிய இயக்கம்: பக்கம் நோக்கிய திசையில் இயங்குதல்,

Laterals; (பொறி) மூலை விட்டத் தளை இணைப்பு: விறைப்புத் தன்மையை அதிகரிப்பதற்காக எந்திரத்தின் இரு உறுப்புகளிடையே மூலை விட்டமாகத் தலைப்பட்டை களால் இணைத்தல்.

Lateral stability: (வானூ ) பக்க உறுதிப்பாடு: விமானத்தில் சுழற்சி விரிசல், பக்கத் தளர்வு போன்றவற்றால் சமநிலைச் சீர்குலைவு ஏற்படாமல் உறுதி நிலையை ஏற்படுத்துதல்.

Lateral strain: (பொறி ). பக்கவாட்டத் திரிவு: எந்திரக் கட்டமைப்புக்கு எதிராகப் பக்கவாட்டில் ஏற்படும் திரிவு. இதனைக் குறுக்குத திரிவு என்றும் கூறுவர்.

Lateral thrust: பக்க உந்து விசை : பக்கங்களை நோக்கி அளாவுகிற ஒரு பளுவின் அழுத்த விசை

Latex: ரப்பர்மரப்பால்: காகிதத்தை வலுப்படுத்துவதற்குப் பயன்படுத் தப்படும் ரப்பர் மரப்பால்.

Lath: (க.க)வரிச்சல்: சுவர், தளம், மச்சு ஆகியவற்றிற்குப் பாவப்படும் 1 1/2"x 3/8"x 4'அளவுள்ள மென் மரப்பட்டிகை.

Lathe: கடைசல் எந்திரம்: (எ ந்.) வட்ட வடிவப் பொருள்களைத் தயா ரிப்பதற்குப் பயன்படும் எந்திரம்.

Lathe bed (எந்.) கடைசல் எந்திரப் படுகை: கடைசல் பிடிக்கும் எந்திரத்தின் ஏற்பமைவு வாய்ப்புடைய அடிப்பணிச் சட்டம்.

Lathe center grinter: ( எந்.) கடைசல் மைய அரைப்பான்: ஒரு கடைசல் எந்திரத்துடன் இணைக்கப்படும் ஓர் அரைவைச் சாதனம். இது மையங்களை அராவுவதற்குப் பயன்படுகிறது.

Lathe chuck: (.எந்) கடைசல் கவ்வி: கடைசல் எந்திரத்தின் கதிர்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு கவ்வும் சாதனம். இது கடைசல் எந்திரம் இயங்கும்போது, அதில் வேலைப்பாடு செய்யப்படும் பொருளைக் கவ்விப் பிடித்துக் கொள்கிறது.

Lathe dog: (எந்); கடைசல் எந்திரக் குறடு: ஒரு கடைசல் எந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ள இடுக்குக் குறடு.

Lathe engine: (எந்.) எந்திரக் கடைசல் பொறி: திருகினைக்கொண்ட விசையினால் இயங்கும் கடைசல் எந்திரம்.

Lathe gap (எந்.) இடை வெளிக் கடைசல் பொறி : கடைசல் பொறி: எந்திரத்தால் இயங்கும் கடைசல் படுகை கொண்ட கடைசல் பொறி.

Lathe tool: (.எந்) கடைசல் கருவி ; கடைசல் எந்திரத்தில் வேலைப்பாடு செய்யப்பட்ட உலோகப் பொருளிலுள்ள பிசிறுகளை அகற்றுவதற்குப் பயன்படும் கருவி இதனை "வெட்டுக் கருவி' என்றும் கூறுவர்.

Lathe work: கடைசல் வேலைப்பாடு : கடைசல் எந்திரத்தில் செய்யப்படும் துளையிடுதல், நெளிவெடுத்தல் போன்ற அனைத்து வேலைப்பாடுகளையும் குறிக்கும்.

Latitude: அட்சரேகை: பூமியின் மேற்பரப்பில், பூமத்திய ரேகையிலிருந்து வடக்கே அல்லது தெற்கே உள்ள தொலைவு,

Lattice: (க. க.) பின்னல் தட்டி: வரிச்சல் அல்லது கம்பிகளின் பின்னால் அமைந்த பலகணி.

Lattice girder: (க. க. ) குறுக்குச் சட்ட உத்தரம்: இரும்பாலான பின்னற் சட்ட அமைப்போடு இணைக்கப்பட்ட பெரிய உத்தரம்.

Lattice work: பின்னல் வேலைப்பாடு: மரத்தினாலான அல்லது உலோகத்தினாலான பின்னல் வலை வேலைப்பாடு.

Laureling: புன்னையிலை வேலைப்பாடு: புன்னை இலைப் 'புடைப்புச் சித்திர வேலைப்பாடுகளைக் கொண்ட அலங்காரவேலைப்பாடு.

Lava: (வேதி.)எரிமலைக் குழம்பு: எரிமலை உருகிய பாறைக் குழம்பு

Lavatory: (க. க.) கழிப்பிடம்: கை கால் கழுவவும் துணி துவைக்கவும் சிறுநீர் கழிக்கவும் பயன்படும் அறை.

Lawn: சல்லடை : நார்த்துணி அல்லது பட்டாலான மென்மையான சல்லடை.

Layout: (அச்சு.) (1) அமைப்புத் திட்டம்: ஒரு பணியின் செயல் முறைத்திட்டம் அல்லது வரைபடம். (2) மனைத்திட்ட அமைப்பு: ஒரு வீட்டுமனையின் திட்ட அமைப்பு. (3) நிலத்திட்ட அமைப்பு: வீடுகள் கட்டுவதற்கான நிலத்தை மனைகளாகப் பகுத்துத் திட்ட அமைப்பு செய்தல்.

Layout bench or a table : விரிப்பு மேசை : வேலைப்பாடு செய்யப்பட வேண்டிய பொருளை விரித்து வைப்பதற்கான உலோகச் சமதளமுடைய மேசை.

Layout man: (அச்சு.) பக்க அமைப்பாளர்: அச்சுப்பணியில் பக்கங்கங்களை அமைப்பாக்கம் செய்பவர். இவரை 'அச்சுப்பக்க அமைப்பாளர்’ என்றும் கூறுவர்.

Layout paper: (அச்சு.) பக்க அமைப்புக் காகிதம்: அச்சுப் பக்க வடிவாக்கத்திற்குப் பயன்படும் காகிதம். இதில் அச்சுருப் படிவச்

சதுரங்கள் வரையப் பட்டிருக்கும். இதில் விளம்பரங்களும், மற்ற அச்சிடவேண்டிய பணிகளும் வடிவ மைக்கப்படும்.

Lazy tongs: பல் திசை விளைவு நெம்புகோல் : தூரத்திலுள்ள பொருட்களைப் பற்றியெடுப்பதற்குரிய பல் திசை வளைவுகளையுடைய நெம்பு கோல் அமைவு.

Leach: (குழை.) நீர்மக் கசிவு: ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளைக் கசிவூறல் மூலம் உள்மாசு வெளியேற்றுதல்.

Leaching cesspool: (கம்.) கசிவு வடிகுட்டை: நீர் கசியக்கூடிய ஒரு வடிகுட்டை.

Lead: (மின்) (1) தலைமை மின்னிணைப்புக்கம்பி: ஒரு மின் இணைப் புச் செய்யப்பட்டுள்ள மின் சாதனத்திலிருந்து வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் ஒரு மின் கடததி.

(2) முந்து நிலை அளவு: ஒரு நிமிர் வீத வளை கோட்டின் நீச முனையும் உச்ச முனையும் மற்றொரு வளை கோட்டின் மீதான அதே முனைக்கு முன்னேறி எட்டுகிற போது, அந்த வளைகோடு மற்ற வளைகோட்டிற்கு முந்து நிலையிலிருப்பதாகக் கூறப்படும்.

(3)திருகாணி இடைவெளி: ஒரு திரு காணியில் ஒரு முழுச்சுற்று முடிந்ததும் திருகாணி முன்னேறியிருக்கக் கூடிய தூரம்.

Lead: ஈயம்: பழுப்பு நீலநிற உலோகம்: மென்மையானது; கம்பியாக இழுத்து நீட்டத்தக்கது. தகடாகத்தக்கது வீத எடைமானம் 11.84; உருகுநிலை 327°C நைட்ரிக் அமிலத்தில் கரையக் கூடியது. பொதுவாக, கந்தகத்துடன் கலந்து ஈயச்சல்பைடு ஒர் காலினா என்ற தாதுவாகக் கிடைக்கிறது. தூய்மையாகவும், கூட்டுப்பொருளாகவும் பல்வேறு வகையில் பயன்படுகிறது.

Lead burning; (தானி.)ஈயப்பற்ற வைப்பு : ஈயத்தைப் பயன்படுத்திப் பற்றவைத்தல் சேமக்கலங்களில் முக்கியமாகப் பயன்படுகிறது.

Lead cutter: (அச்சு.) ஈய வெட்டுச் சாதனம்: ஈயத்தை வேண்டிய வடிவ ளவுகளில் வெட்டுவதற்குக் கையினால் இயக்கப்படும் ஒரு கருவி.

Leaded mater: (அச்சு.) ஈயஇடை வெளி: அச்சுப்பணியில் வரிகளுக் கிடையே ஈய இடைவரிக்கட்டைகள் இடப்பட்டு அமைக்கப்பட்ட அச்செழுத்துகள்.

Leader: இணைப்புத் திரைப்படச் சுருள்: திரைப்பட ஒளியுருப்படிவுக் கருவியில் இணைத்துத் தொடர்பு படுத்துவதற்குத் திரைப்படச் சுருளின் இரு முனையிலும் பயன்படுத்தப்படும் வெற்றுத் திரைப்படச் சுருள்.

Leaders: (அச்சு). வழி காட்டு வரை: விழிக்கு வழிகாட்டும் புள்ளி களால் அல்லது கோடுகளாலா வரை.

Lead hammer: (எந்.) ஈயச் சுத்தியல்: ஈயத்தாலான கொண்டையுடைய ஒரு சுத்தியல் உறுப்பு களில் சிராய்வு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக எஃகுச் சுத்தியலுக்குப் பதிலாகப் பயன்படுத்தப் படுகிறது.

Lead hole: (எந்.) முந்து துவாரம்: ஒருபெரியதுவாரத்தைத் துரப்பணம் செய்வதற்கு அல்லது ஒரு சாய்வு தளத்தின் மீது மையத் துவாரமிடுவதற்கு வசதியாக ஓர் உலோகத் துண்டில் துரப்பணம் செய்யப்படும் துவாரம்.

Leading: (அச்சு.) வரி விரிவாக்கல்: அச்சுப்பணியில் வரிகளின் இடை வெளியை அகலமாக்குவதற்கு ஈயத் தகட்டுப் பாலங்களிட்டு அகலமாக்குதல்,

Leading currents (மின்.) முந்து மின்னோட்டம்: மின்னோட்டத்தை உண்டாக்கும் மின்னியக்க ஆற்றலின் முன்னோடியான உச்ச நீச அளவுகளை எட்டுவதற்கான மாற்று மின்னோட்டம்.

Leading edge: (வானு .)முந்து முனை: விமானத்தின் முற்செலுத்தி அலகு முனை. இதனை 'நுழைவு முனை' என்றும் கூறுவர்.

Lead joint (கம்.) ஈய இணைப்பு: ஒரு மணிக்கும் மூடு குமிழுக்குமிடை யிலான வளையவடிவ'இடைவெளிக்குள் உருகிய ஈயத்தை ஊற்றி, பின் னர் கூர்முனையை இறுகப் பொருத்துவதன் மூலம் செய்யப்படும் இணைப்பு.

Lead monoxide: (வேதி.) ஈய மானக்சைடு (PbO): மஞ்சள் நிற மான அல்லது மஞ்சள் கலந்த சிவப்பு நிறமான தூள். ஈயத்தைக் காற்றில் சூடாக்குவதன் மூலம் பெறப்படுகிறது. ஈயக் கண்ணாடி, மட்பாண்ட மெருகுப் பொருள் தயாரிக்கப் பயன்படுகிறது. கசிவு மூட்டுகளை அடைக்க கிளிசரினுடன் கலந்து சாந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

Lead paint (வன்.) ஈய வண்ணச் சாயம்: சாதாரண வண்ணப் பொருள். இதில் வெள்ளை ஈயம் ஆதாரப் பொருளாகப் பயன்படுத் தப்படுவதால் இப்பெயர் பெற்றது.

Lead peroxide: (வேதி.மின்.) ஈயப்பெராக்சைடு : (Pb0) ஓர் ஈயக் கூட்டுப் பொருள் மின்சேமக்கலங்களின் நேர்மின் தகடுகள் இதி லிருந்து தயாரிக்கப்படுகின்றன.

Lead poisoning :ஈய நஞ்சு: வண்ணம் பூசுவோர். ஈயத்தில் அல்லது ஈயப் பொருள்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களைப் பாதிக்கும் ஒரு நோய்.

Leads : (அச்சு.) இடைவரிக் கட்டைகள் : அச்சு வேலையில் வரிகளின் இடைவெளியை அகலமாக்குவதற்கான உலோகத் தகடுகள். இவை அச்செழுத்து அலகுகளின் மடங்குகளில் தயாரிக்கப் பயன்படுகின்றன.

Lead screw : (எந்.)முன்னேற்றத் திருகு : திருகு வெட்டுக் கடைசல் எந்திரத்தின் படுகையின் முன் புறம் நீளவாக்கில் அமைந்துள்ள திருகு.

Lead sponge : (மின்.) ஈயப்பஞ்சு: ஒரு சேமக் கலத்திலுள்ள எதிர்மின் தகட்டிலுள்ள செயல் திறமுடைய தனிமம்.

Lead storage ceil : ஈயச் சேமக் கலம்:கந்தக அமிலத்தின் மின் பகுப்பா னிலுள்ள ஈயப் பெராக்சைடு, பஞ்சு ஈயம் இவற்றினாலான தகடுகளைக்கொண்ட சாதனம்.

Lead tetraethyl: (வேதி.) ஈய டெட்ரா எத்தில்: Pb (C2 H5)4 : உள்வெப்பாலை வெடிப்பைத் தடுக்கும் பொருளாகிய கேசோலின் ஒரு முக்கியமான அமைப்பான் .

Lead wool : (கம்.) ஈயக் கம்பளி : உருகிய ஈயத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் ஈய இழை குழாய் இணைப்புகளில் பயன்படுத் தப்படுகிறது.

Leaf : (அச்சு.) சுவடித்தாள்: மடிக்கப்படாத ஒரு தாள்; அல்லது ஒரு புத்தகத்தில் உள்ளது போன்று மடிக்கப்பட்ட தாளின் இரண்டு பக்கங்கள்.

Leaflet: (அச்சு.) துண்டு வெளியீடு : சில பக்கங்கள் மட்டுமே அச்சிடப்பட்ட சிறிய துண்டு வெளியீடு.

leaf spring :இலை விற்சுருள் : அடுக்கடுக்காக அமைந்த தட்டையான பல தகடுகளினாலான ஒரு விற்கருள். இது உந்து ஊர்திகளில் பயன்படுத்தப்படுகிறது.

Leef work: இலை வேலைப்பாடு: அறைகலன்களின் கால்களிலும் சாய்மானங்களிலும் இலைகளின் வடிவில் செய்யப்படும் நுட்பமான இலை வேலைப்பாடுகள்.

League: லீக்: ஏறத்தாழ மூன்று மைல் தொலைவு; 15, 880' நீளம்.

Lean mixture: (தானி.) செறி விலா எரிபொருள் கலவை:ஒருவகை எரிபொருள் கலவை. இதில் கேசோலினை விடக் காற்று அதிக விகிதத்தில் கலந்திருக்கும்.

Lease: பாவு நூல் பிரித்தல்: தறியில் பாவு நூலிழைகளை முனைகளில் பிரித்துவிட்டுத் தறிக்குத் தயாராக்குதல்.

Leather: பதனிட்ட தோல்: தோற் பொருட்கள் செய்வதற்காகப் பத னிடப்பட்ட தோல்,

Leather- board : தோல் அட்டை :பல்வேறு இழைப் பொருள்களை சீமைச் சுண்ணாம்பு அல்லது வெண்சுண்ணத்துடன் கலந்து தயாரிக்கப்படும் குழம்பினாலான அட்டை.

Leather-craft: தோல் வேலைப் பாடு: கருவிகளைக் கொண்டு தோலில் செய்யப்படும் அலங்கார வேலைப்பாடுகள்.

Leather-ette cover paper: போலித்தோல் உறைக் காகிதம்: தோல்போல் செய்யப்பட்ட தாளினாலான உறைக் காகிதம்.

Leather fillet; தோல் கச்சை: வார்ப்படத் தொழிலில் வார்ப்படங்களின் வலிமையை அதிகரிக்கவும், வார்ப்பட மணலில் கூர்முனைகளை நீக்கவும் பயன்படும் தோலினாலான பட்டை.

Leatheroid:செயற்கைத் தாள் தோல்: வேதியியல் முறையில் பாடம் செய்யப்பட்டுப் பச்சைத் தோல் போலிருக்கும் பருத்தித் தாள்.

Leclanche cell:(மின்.) லெக்லாஞ்சிக் கலம்: திறந்த மின் சுற்றுவழியுடைய ஒர் அடிப்படை மின்கலம். இதில் கார்பன், துத்தநாக மின் முனைகளும், நவச்சார மின் பகுப்பானும் மின்காந்த முனைப்பியக்க அகற்றியாக மாங்கனிஸ் டையாக் சைடும் பயன்படுத்தப்படுகின்றன.

Lectern: சாய்மேசை: படிப்பதற்குப் பயன்படும் சாய்வான மேசை.

Ledge: (க.க.) வரை, விளிம்பு: சுவர்ப் பக்கத்தை ஒட்டிய நீள் வரை விளிம்பு.

Ledger paper: பேரேட்டுத் தாள்: கணக்குப் பதிவுப் பேரேடுகள் தயா ரிப்பதற்கான கனமான தாள்.

Left hand engine:(வானூ)இடப் பக்க எஞ்சின்: விமானத்தின் முற் செலுத்தியைப் பார்த்துக் கொண்டிருப்பவருக்கு இடப்புறமாக இயங்கும் வகையில் உள்ள எஞ்சின்.

Left hand screw (எந்.) இடப் புறத் திருகு : வடமிருந்து இடமாகத் திருகும்போது முற்செல்லும் வகை யில் அமைந்த திருகாணி.

Left hand thread: (எந்.) இடப் புறத் திருகிழை: மரையாணி அல் லது திருகாணியை இறுக்குவதற்கு இடப்புறமாகத் திருகும் வகையில் அமைந்த திருகிழை.

Legend: நீளம்: பிழம்புருவின் மூவளவையில் கழிமிகையாள அளவைக் கூறு: ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு உள்ள தூரம், கால நீட்சியையும் குறிக்கும்.

Length: (அச்சு.) விளக்க வாசகம்: ஒரு படத்திற்கான விளக்க வாசகம்.

law: (மின்.) லென்ஸ் விதி: "ஒரு தூண்டு மின்னோட்டத்தின் திசையானது. எப்பொழுதும் அதன் காந்தப் புலன், தூண்டு மின்னியக்க விசையினை உருவாக்குகின்ற காந்தப் புலனின் வலிமையில் ஏற்படும் மாறுதலை எதிர்க்கும்’ என்பது லென்ஸ் விதியாகும்.

Leopard wood: வேங்கை மரம்: தென் அமெரிக்க மரம். இது கடினமானது; பல வண்ணப் புள்ளிகளுடையது. இது அலங்கார மேலொட்டுப் பலகையாகப் பயன்படுத்தப்படுகிறது.

Letter board: (அச்சு.) கடிதத்தாள் படிவம்: கடிதம் எழுதுவதற்கான நான்மடி உருவத்தாளின் தலைப்பில் அச்சடிக்கப்பட்டுள்ள படிவம். அச்சடிக்கப்பட்ட பின்னர் உள்ள தாளையும் குறிக்கும்.

Letter press; எழுத்து அச்சுப் பொறி: எழுத்துகளைப் படியெடுப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு சாதனம்.

Letter-press printing: (அச்சு.) அச்செழுத்தில் அச்சிடல்: அச்செழுத்துகளில் அல்லது புடைப்பெழுத்துகள் உள்ள தகடுகளில் அழுத்த அச்சிடுதல்.

Letter-size drills: (உலோ.வே.) எழுத்து வடிவத் துரப்பணங்கள்: இவை A முதல் Z வரையிலான எழுத்துகளின் வடிவில் அமைந்திருக்கும். A வடிவம் சுமார் 15/64" விட்டமுடையது. Z வடிவம் சுமார் 13/32" விட்டமுடையது.

Letter spacing: எழுத்து இடைவெளியாக்கம்: அச்சுப்பணியில் எழுத்துகளிடையே இடைவெளியை அதிகப்படுத்திச் சொற்களை விரிவுபடுத்துதல்.

Level: (1) கிடைமட்டம்: கிடை மட்டமான தளத்தில் கிடைமட்ட நிலை.

(2) மட்டக் கருவி: கிடைமட்டத்தைப் பார்ப்பதற்கான கருவி:

(3) ஒலியாற்றல்: தொலைக்காட்சியில் அனுப்பீடு செய்யப்படும் ஒலியின் ஆற்றல் அளவு. இது 'டெசிபல்' கணக்கில் அளவிடப்படும்.

Leveling instrument: (பொறி.) தளமட்டக் கருவி: ஒரு காட்சிக் குழாய் கொண்ட சாதனம். இந்தக் குழாயில் சாராயம் இருக்கும். இதில் குமிழ் மையக கோட்டில் இருக்கும் போது, காட்சிக்கோடு கிடைமட்டத்தில் இருக்கும் வகையில் இக் குழாய் பொருத்தப்பட்டிருக்கும். இதிலுள்ள அளவுக் குறியீடுகளு டைய வளைவரை, இக்கருவி ஊசலாடுவதற்கு இடமளிக்கிறது. அப்போது கிடைமட்டத் தளத்தின் கோணங்களை அளவிடலாம்.

Leveling rod: (எல் .) சமதளக் கோள்: இதில் இருவகைகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.

(1) இலக்குக் கோல்; (2) தானே அளவு காட்டும் கோல்.

இலக்குக் கோல் அளவுகளைக் கோல் அளவுக்காரர்களே படித்தறிய முடியும். தானே அளவு காட்டும் கோல்களில் அளவுகளைச் சமதள அளவாளர் நேரடியாகப் படித்தறியலாம்.

Level man: (எல்.) சமதள அளவாளர்: நில அனவையாளரின் சமதள மானியை இயக்குபவர்.

Lever (பொறி.) நெம்புகோல்: ஒர் ஆதாரத்தின் மீது இயங்கும் ஒரு விறைப்பான கோல்.

Leverage: (எந்) நெம்புகோலியக்கம்: ஓர் ஆதாரத்தின் மீது இயங்கும் நெம்புகோலின் இயக்கம்.

Lewis (க.க.) கல் தூக்குப் பொறி: கனமான கற்களைப் பற்றித் தூக்குவதற்கான இரும்புப் பொறியமைப்பு.

Lewis bolt: (க,க.) நங்கூர மரையாணி: கூர்மையான பல்வெட்டும். கூம்பான வாலும் உடைய ஒரு மரையாணி. இது கட்டுமானப் பணிகளில் பயன்படுகிறது.

Leyden jar (மின்.) லேடன் மின் கலம்: மிக எளிய வடிவ வடிகலம். இது உட்புறமும் வெளிப்புறமும் ஒரளவு உயரத்திற்கு வெள்ளியத் தகட்டுப் படலமிடப்பட்ட ஒரு கண்ணாடி ஜாடியைக்கொண்டிருக்கும். இதன் மரமூடியின் வழியே ஒரு பித்தளைக்கோல் உட்புறப் படலத்துடன் ஒரு சங்கிலி வழியாகத் தொடர்பு கொள்ளும்.

Lift: (வானூ.) தூக்காற்றல்: விமானத்தைச் சமதளத்திற்கு மேலே உயர்த்துவதற்கான காற்றின் மொத்த ஆற்றல் .

Lifting magnet: (மின்.) தூக்கு காந்தம்: பாரந்தூக்கிப் பொறியின் கொக்கியினால் தூக்கிச் செல்லப்படும் ஒரு மின்காந்தம். பெரும் பெரும் இரும்பு எஃகுக் கட்டிகளைத் தூக்குவதற்கு இது பயன் படுகிறது.

Ligature: (அச்சு.)எழுத்துஇணைப் புரு: அச்சில் 'ff','fi'போனறு இரு எழுத்தாக இணைத்து உருவாக்கபபட்ட எழுத்துகள்,

Light: (அச்சு.) ஒளிப்புழை; ஒளி வருவதற்கான புழை வழி ;பல கணிக் கண்ணாடிப் பாளம்.

Light bridge: ஒளிமேடை : ஒளிக்கட்டுப்பாட்டுக் கருவிகளும், சில சமயம் விளக்குகளும் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் ஒரு மேடை

Light cut: (பட்.) நுட்ப வெட்டுமானம்: உலோக வேலைப்பாடுகளில் குறுகலாகவும் நுண்ணியதாகவும் வெட்டி வேலைப்பாடு செய்தல்.

Light face: (அச்சு.) மென்முகப்பு: அச்சுக் கலையில் மென்மையான முகப்புடைய அச்செழுத்துகள்.

Light flare : வெண்புள்ளி : தொலைக்காட்சிப் படத்தில், மோசமான தள அல்லது குவி விளக்கு காரணமாக உண்டாகும் வெண் புள்ளிகள்.

Light level: ஒளி அளவு நிறை: ஒரு பொருளின் மீது அல்லது காட்சியின் செறிவளவு. இது மெழுகு விளக்கொளி அலகுகளில் அளவிடப்படும்.

Lightning arrester: (மின்.) இடி தாங்கி: மின்னலை வாங்கிப் பூமியில் செலுத்தும் ஒரு சாதனம், இதனால் மின்னியல் எந்திரங்கள் காக்கப் படுகின்றன.

Ligne; லிக்னே: கடிகாரம் செய்பவர்கள் பயன்படுத்தும் ஓர் அள வீட்டு அலகு. இது 6 செ.மீ. அளவுக்குச் சமமானது.

Lignite: பழுப்பு நிலக்கரி: பழுப்பு நிறமான, கெட்டியாகாத நிலக்கரி. இதில் பெருமளவு ஈரப்பதம் கலந்திருக்கும்.

Lignum vitae: புதர்ச் செடி மரம்: மத்திய அமெரிக்காவில் காணப் படும் நடுத்தர வடிவளவுடைய புதர்ச்செடி. இதன் மரம் மிகக் கடினமானது; கனமானது. இதன் ஒரு கன அடி 20 கி.கி. எடை யுள்ளது. தாங்கிகளும், செருகு வகைக் கப்பிகளும் செய்யப் பயன் படுகிறது.

Lime: (க. க.) சுண்ணாம்பு: சுண்ணாம்புக்கல், சிப்பிகள் போன்றவற்றின் மீது வெப்பம் செயற்படுவதால் கிடைக்கிறது. கட்டிடப்பணிகளில் பலவிதங்களில் பயன்படுகிறது. இதனைக் கால்சியம் ஆக் சைடு ((CaO) என்பர்.

Lime light: சுடரொளி : ஆச்சிஜனும், ஹைடிரஜனும் கலந்துருவான சுடரொளி. இதனை கால்சியம் ஒளி என்றும் கூறுவர். இது பிரகாசமான ஒளியைத் தரும். மேடை ஒளியமைப்புகளுக்குப் பயன்படுகிறது.

Lime stone: (க.க.) சுண்ணாம்புக்கல்: இதனைக் கால்சியம் கார்பனேட் (CaCO3): என்பர். கட்டுமான வேலைகளுக்குப் பயன்படும் கண்ணாம்பு தயாரிககப் பயன்படுகிறது.

Limiter வரம்புறுத்துக் கருவி: தொலைக்காட்சியில் ஒலி அல்லது அதிர்வு அலை வீச்சுத் திரிபினை நீக்குவதற்குப் பயன்படும் ஒரு மின்னணுவியல் வாயில்

Limit gauge : (எந்;பட்.) வரம்புறுத்து அளவி: ஒன்றுக்கொன்று மாறுவதை அனுமதிப்பதற்கென சரியான பரிமாண்த்தில் ஒவ்வொரு பக்கத்திலும் மாறுதல் வரம்பு ஒன்று அனுமதிக்கப்படுகிறது. இந்த வரம்புகளுக்கேற்ப அளவிகள் செய்யப் பட்டு, வேலைப்பாட்டினைச்' சோதனையிடுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

Limits of tolerance : (எந்.) தாங்கு திறன் வரம்புகள் : எந்திரங் களில் உறுப்புகளின் துல்லியம், கூடுதல் வடிவளவு குறைந்த வடிவளவு பற்றிய வரம்புகள்.

Limonite : லைமோனைட்- (CaCo2 Mĝ Co3 ) ஓர் இரும்பு ஹைடிராக் சைடு. இதனை 'பழுப்பு ஹேம டைட்' அல்லது "சதுப்பு இரும்பு' என்றும் கூறுவர்.

Linden : எலுமிச்சை இனமரம :அழகொப்பனைக்குரிய இருதய வடிவ இலைகளும், சிறு நறுமண இளமஞ்சள் வண்ண மலர்களும் உள்ள மரவகை.

Line: (மின்.) (1) மின் கம்பி: மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து அல்லது துணை மின் நிலையங்களிலிருந்து மின் மாற்றிகளுக்கு அல்லது கட்டிடங்களுக்கு நேரடியாக மின் விசையினைக் கொண்டு செல்லும் மின் கம்பி வழி.

(2) வரி: அச்சுக்கலையில் அச்சிட்ட சொற்கள் அல்லது இலக்கம் அடங்கிய வரி,

(3) பக்கக் கீற்றுவழி: தொலைக் காட்சியில் பக்கவாட்டில் கீற்றுக் கீற்றாக எழும் நிழற் காட்சிக் கூறுகளில் ஒன்று.

Lineal foot: நேர்க்கோட்டு அடி :நீளவாக்கிலான அடி அளவு. இது சதுர அடி அளவிலிருந்து வேறு பட்டது

Line amplifier : மின்வழி மிகைப்

பான்: தொலைபேசியில் மின் அனுப்பீட்டுக் கம்பிக்குச் சைகைகளை வழங்குகிற ஒரு மின் மிகைப்பான்.

Linear: நீட்டலளவை சார்ந்த: ஒரே அளவாக ஒடுங்கி நீண்ட கோடுகள் சார்ந்த,

Linear molecule:(குழை.) நெடிய மூலக்கூறு: மிக நீண்ட வடிவமுள்ள ஒரு மூலக்கூறு. பொதுவாக, இது நீண்ட சங்கிலி வடிவ மீச்சேர்மங்களைக் குறிக்கும். மீச்சேர்மங்கள் என்பவை. ஒரே வகைப்பட்ட செர்மங்களின் அணித் திரள்கள் இணைந்து வேதியியல் முறையில் மாறாமலேயே அணுத்திரள் எடை மானமும், இயற்பியல் பண்பும் மட்டும் கொண்ட மாறுபட்ட பிறிதுருச் சேர்மங்கள் ஆகும்.

Line cut : (அச்சு.) வரிவெட்டு: அச்சுக்கலையில், ஒளிச் செதுக்கு

முறையில் துத்தநாகத்தில் வரிகளை அல்லது பரப்புகளை செதுக்குதல்

Lined board: உட்பொதிவு அட்டை : மெல்லிய காகிதத்தினால் உட்பொதிவு செய்த அட்டை.

Line drop; (மின்.) மின்வழி அழுத்தம்: மின் கம்பிகள் வாயிலாக மின்னோ ட்டத்தைச் செலுத்தும்போது பயன்படுத்தப்படும் மின்னழுத்தம்,

Line engraving : (அச்சு) வரி உருவப்படம்: அச்சுப் பள்ளத்தில் செதுக்கு வரி வேலைப்பாடு மூலம் படங்களை அல்லது எழுத்துக் களை அச்சிடுதல்.

Line frequency :வரி அலை வெண் : தொலைக்காட்சியில் ஒரு வினாடியில் அலகிடும் வரிகளின் எண்ணிக்கை.

Line gauge; (அச்சு) வரி அளவி : அச்சுக் கலைஞர்கள் பயன்படுத்தும் ஓர் அளவுகோல், இதில் அளவுகள் பிக்கா, நான்பாரைல்ஸ் என்னும் அச்செழுத்து அளவு அலகுகளில் குறிக்கப்பட்டிருக்கும்.

Linen finish: (அச்சு) துணிக் காகிதம் : துணி போன்று இடிக்கத்தக்க முறையில் தயாரிக்கப்பட்ட காகிதம் அல்லது அட்டை.

Line scroll: (க.க.) நார்மடி அணி : கதவுகளை அழகு படுத்துவதற்கான நார்மடிச்சுருள் போன்ற அலங்கார வேலைப்பாடு,

Line of action : செயலியக்கக் கோடு: ஒரு விசையின் செயலியக்கக் கோடு என்பது, அந்த ஒரு பொருண்மையைப் புள்ளியின் மீது செயற்படும் திசை என்று பொருள் படும்.

Line pickup : தந்திவட இணைவு : தந்தி, தொலைபேசி அறி கு றியீடுகளு டன் தொலை நோக்கிக் குறியீடுகளை ஒருங்கே அனுப்பும்படி பொருந்திய தந்திவட இணைவு போன்ற உலோக மின் கடத்திகள் வாயிலாகச் சைகை களை அனுப்பீடு செய்தல்.

Line pipe: (கம்.) கூம்பு குழாய் : பின்னோக்கிச் சரிந்து கூம்பின் இழையுள்ள இணைப்புடைய தனி வகைக் குழாய். இது பொதுவாக அதிக நீளத் திருகிழையுடையதாக இருக்கும்.

Liner (எந்.) புறஉறை: ஓர் எஞ்சினின் நீள் உருளையின் உட்புறம் பொருந்தக்கூடிய ஒரு உறை. இதனை அகற்றி விடவும் முடியும், இது ஒரு தாங்கிக்குரிய சுழல் உருளையாகவும் செயற்படும்.

Line shaft : (எந்.) தொடர் சுழல் தண்டு: பல சுழல் தண்டுகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ள ஒரு தொடர். இது பிரதான சுழல் தண்டாக இருக்கலாம் அல்லது இல்லாதிருக்கலாம்.

Lines of force: (மின்.) விசைக் கோடுகள்: ஒரு காந்தவிசைக் கோடு, வடதிசை காட்டும் துருவம். அதைச் சுற்றியுள்ள மற்றத் துருவங்களின் பாதிப்பினால் காட்டுகின்ற திசையினைக் குறிப்பதாகும்.

Lining: (அச்சு.) வரிசையமைப்பு: அச்செழுத்து முகப்புகளை கிடை மட்டத்தில் துல்லியமாக வரிசைப்படுத்தி அமைத்தல்.

Link: (எந்,) கண்ணி: சங்கிலியின் ஒரு தனிவளையம்.

(2) பிணைப்புக் கருவி: எஞ்சின்களில் ஒரதர் இயக்கத்தைக் கட்டுப்படுத்து வதற்குரிய ஒரு பொறியமைவு.

Link motion: பிணைப்பு இயக்கம் : ஓர் உந்து ஊர்தியின் ஒரதர்களை இயக்குவதற்கான உறுப்புகளை ஒருங்கிணைத்தல்.

Linograph: (அச்சு.) வரி உருக்கச்சு: வரி உருக்கச்சுப் பொறி போன்றதான உருக்கச்சு எந்திரத்தில் கோத்து வரிப் பாளங்களை வார்த்தெடுக்கும் அச்சுக்கோப்பு எந்திரம்

Linotype: (அச்சு.) வரி உருக்கச்சுப் பொறி: அச்சுக்கோப்பு இல்லாமலே எழுத்துருக்களை வரிப்பாளங்களாக உருக்கி வார்த்து அடிக்கும் அச்சுப் பொறி.

Linseed oil : ஆளிவிதை எண்ணெய்: வண்ணங்கள் தயாரிப்புதற்கு முக்கியமாகப் பயன்படுத்தப்படும் ஆளிவிதையிலிருந்து வடித் தெடுக்கப்படும் எண்ணெய்.

Lintel: (க. க.) வாயில் மேற்கட்டை: வாயில், பலகணி ஆகியவற்றின் கிடைமட்ட மேற்கட்டை.

Linters: குற்றிழைப் பருத்தி: பருத்தி விதையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் குறுகிய இழைப் பருத்தி இது மெத்தை, திண்டு வேலைப்பாடுகளுக்குப் பயன்படுகிறது.

Lintless cotton: விதைப் பொதி விலாப் பருத்தி: நீண்ட இழைப் பருத்தி; இதில் பிற பருத்திகளில் உள்ளது போன்று விதைகள் பஞ்சில் பொதிந்திருக்காது.

Lip: (பட்.) வெட்டுமுனை: எந்திரப் பட்டறை வழக்கில் ஒரு கருவியின் வெட்டுமுனை.


Lique-faction: (இயற்.) திரவமாக்குதல் : கெட்டிப் பொருள் அல்லது வளிப் பொருளை திரவமாக்குதல்.

Liquid : (வேதி.) திரவம்: ஒரு பொருளின் திரவநிலை. இதற்குக் குறிப்பிட்ட கொள்ளளவு உண்டு. கொண்டிருக்கும் கலத்தின் வடிவத்தைப் பெற்றிருக்கும்.

Lipuid air (வேதி.)திரவக் காற்று: கடுங்குளிர்ச்சியினால் திரவமாக்கப் பட்ட காற்று. இது குளிர்ப்பதனப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

Litmus paper: லிட்மஸ் தாள்: வேதியியல் நிறமாற்ற வண்ணப் பொருள் தோய்ந்த நீலத்தாள்.

Live: நேரடி ஒளிபரப்பு: தொலைக் காட்சியில் ஒளிப்பதிவு மூலமாக அல்லாமல் நிகழ்ச்சிகளை நேரடியாகவே ஒளிபரப்புதல்.

Live axles: (தானி.) இயங்கு இருசுகள்: பாரமும்: விசைப்பயன் பாடும் அமைந்துள்ள இருசுகள். இவற்றில் பாதி மிதவை, முக்கால் மிதவை வகைகளும் அடங்கும்.

Live center: (பட்.) இயங்கு மையம்: கடைசல் எந்திரம் அல் லது அது போன்ற எந்திரத்தின் சுழலும் கதிரிலுள்ள மையம். வேலைப்பாடு செய்ய ப் படும் பொருள் திரிபான பாதையில் செல்லாமல் பார்த்துக்கொள்வதற்கு இது இன்றியமையாதது.

Live load: (பொறி.) இயங்கு பாரம்: இயங்குகின்ற அல்லது திரும்பத் திரும்ப வருகிற பாரம் இது அதன் இயைபில் மாறாமல் இருப்பதில்லை.

Live matter: (அச்சு ) அச்சு வாசகம்: அச்சிடவேண்டிய வாசகம்.

Live spindle: (எந்.) இயங்கு கதிர் ; ஒரு கடைசல் எந்திரத்தின் சுழலும் பகுதியின் உராய்வு தாங்கி உருளையிலுள்ள சுழலும் கதிர் இது வால் பகுதியிலுள்ள நிலையான கதிருக்கு நேர் எதிரானது,

Load: (மின்.) மின்னோட்ட அளவு: மின் விசை ஆக்கப் பொறியால் குறித்த காலத்தில் வெளியேற்றப் படும் மின்னோட்ட அளவு.

Loaded wheel: அரவைச் சக்கரம் : அரவை செய்யப்படும் பொருளின் துகளினால் மெருகிடப்பட்ட அல்லது தடங்கலிட்ட சக்கரம்.

Load factor: (வானு.) சுமைக் காரணி: ஒரு விமானத்தில் ஒர் உறுப்பின் மீதான குறிப்பிட்ட பாரத்திற்கும், நேரிணையான அடிப்படைப் பாரத்திற்குமிடையிலான விகிதம். இது பொதுவாக, முறிவுறுத்தும் பாரத்திற்கும் அடிப்படைப் பாரத்திற்குமிடையிலான விகிதமாகக் குறிக்கப்படும்.

Loading:காகித மெருகுப் பொருள்: காகிதத்தை வழுவழுப்பாக்குவ தற்கு அல்லது ஒளி புகாத படி

செய்வதற்குப் பயன்படுத்தப்படும் வண்ணப் பொருள் அல்லது கனிமப் பொருள்.

Loam : (வார்.) களிச்சேற்று வண்டல்: வார்ப்பட வேலையில் பயன்படும் மணலும் களிமண்ணும் கலந்த கலவை.

Loam molds: (வார்.) களிச் சேற்று வண்டல் வார்ப்படம்: செங்கற்களினால் உருவாக்கப்பட்டு களிச்சேற்று வண்டல் கொண்டு மேற்பூச்சு பூசப்பட்ட வடிவங்கள். இநத வார்ப் படங்கள் பெரும்பாலும் பெரிய வடிவங்களை வார்ப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

Lobby: (க. க.) முகப்பு அறை : ஒரு கட்டிடத்தில் முகப்பிலுள்ள ஒரு பெரிய அறை உணவகங்களில் உள்ளதுபோல் இதனை பொதுக்கூடமாகவும், புகுமுகக்கூடமாகவும் பயன்படுத்தலாம்.

Loblolly pine : (மர.) சிவப்புத் தேவதாரு : கரணையுடைய, மென் மையான இழை கொண்ட, மிகுந்த மென் மரமுள்ள ஒரு வகைத் தேவ தாரு மரம். அமெரிக்காவின் தென் பகுதியில் சட்டங்களுக்கு மிகுதியும் பயன்படுத்தப்படுகிறது.

Local action: (மின்.) உள்ளிட நிகழ்ச்சி: ஓர் அடிப்படை மின் கலத்தில், மின்பகுப்பானின் மேற்பரப்பின் கீழுள்ள நேர்மின் முனையில் (எதிர்ச் சேர்முனை) ஏற்படும் வேதியியல் வினை. local cuerrents: (மின்.) உள்ளிட மின்னோட்டங்கள்: இவற்றைச் சுழல் மின்னோட்டங்கள் அல்லது ஃபூர்க்கால்ட் மின்னோட்டங்கள் என்றும் கூறுவர்.

Local vent: (கம்.) உள்ளிடக் காலதர்: ஒர் அறையிலிருந்து மாச டைந்த காற்றினை வெளியேற்றுவதற்கான ஒரு குழாய் அல்லது கூண்டு.

Locate: இட அமைவு: ஒரு குறிப் பிட்ட இடத்தில் அல்லது இடச்சூழலில் அமைத்தல்; இடத்தைக் குறித்திடுதல் அல்லது எல்லைகளைக் குறித்தல்.

Lock: (மர.) பூட்டு: பூட்டு விசைத் தாழ்.

Locker: (க. க.) நிலைப்பெட்டி: சிறிய அடுக்குப் பெட்டி.

Leckin: (இயற்.) ஒலித்தெளிவு: தொலைக்காட்சியில் படம் நிலையாகவும் தெளிவாகவும் தெரிவதற்குரிய நிலை. தொலைக்காட்சியில் ஒளிபரப்புக் கருவியிலிருந்து வரும் ஒரு கணத்தொகை நிகழ்வுத் துடிப்புகளினால் அலைவீச்சுச் சுற்றுவழிகள் கட்டுப்படுத்தப்படும் போது இந்த ஒளித்தெளிவு நிலை ஏற்படுகிறது.

Locking bolts: (எந்.) பூட்டு மரையாணிகள்: எந்திர உறுப்புகளை அவற்றின் நிலைகளில் பொருத்திப் பூட்டுவதற்குரிய மரையாணிகள்.

Locking stile: (தச்சு.) பூட்டு நிலை வரிச்சட்டம்: பூட்டு இணைக் கப்பட்டுள்ள கதவின் பகுதி.

Lock nut: (எந்) பூட்டுச் சுரையாணிகள: பிரதானச் சுரையாணி பின்புறம் நழுவிவிடாமல் தடுப்பதற்காக மற்றொரு கரையாணியின் அடிப்புறம் திருகி இறுககப்படும் ஒரு மெல்லி மரையாணி.

Lock pin: (எந்.)பூட்டு முளை: எந்திரத்தின் உறுப்புகள் கழன்று விடாமலிருப்பதற்காக உறுப்பினுள் செருகப்படும் பிணைப்பூசி அல்லது முளை.

Lock stitch:பூட்டுத் தையல் : தையல் எந்திரங்களில் தைப்பது போன்ற ஈரிழைத் தையல்.

Lockup : (அச்சு) முடுக்கிப்பூட்டுதல் : அச்சு எந்திரத்தில் அச்சுப் பதிப்புச் சட்டங்களை முடுக்கிப் பூட்டுதல்.

Lock washer: பூட்டு வளையம்: அழுத்த விற்கருள்போல் வினை புரியும் பிளவு வளையம். ஒரு பூட்டு மரைபோல் செயற்படுகிறது.

Locust : இலவங்கமரம் : நடு நிலக்கடலக மரவகை, கடினமானது. நீண்டநாள் உழைக்கக் கூடியது. புற அலங்கார வேலைப் பாடுகளுக்கு ஏற்றது.

Lodestone , (க.க.) அயக்காந்தம் : இயற்கையான காந்தக்கல்: மாக்னட்டைட்.

Loess : (மண்) மஞ்சள் வண்டல்: ஆற்றுப்பள்ளத்தாக்குகளில் படியும் களிமண் கலந்த சாம்பல் மஞ்சள் நிறமான வண்டல் படிவு. மிசிசிபிப் பள்ளத்தாக்கிலும், சீனாவிலும் 5 அடி முதல் 1000 அடி ஆழத்தில் கிடைக்கிறது.

Loft dried paper: உயர்தள உள் காகிதம்: மேற்பரப்பு வடிவாக்கம் செய்யப்பட்ட பின்பு உயர்தளத்தில் உலர்த்தப்படும் காகிதம்.

Log : (கணி.) [1] மடக்கை: எண்ணுக்கு நிகரான மதிப்புடைய கட்டளை விசை எண்ணின் மடங்கெண்.

(2) மரக்கட்டை: வெட்டப்பட்ட மரத்துண்டு.

Logarithm: (கணி.) மடக்கை: எண்ணுக்கு நிகரான மதிப்புடைய கட்டளை விசை எண்ணின் மடங் கெண்,

Loggia: (க. க.) படிமேடை இருக்கை: திறந்த பக்கங்கள் உள்ள படிமேடை இருக்கை.

Logo-type: (அச்சு.) சொற்பாள வார்ப்பு: அச்சு முறையில் இணை யெழுத்து வார்ப்பு.

Logwood : (வேதி.) சாயமரம்: மத்திய அமெரிக்காவிலும், மேற்கிந்தியத் தீவுகளிலும் வளரும் ஒரு வகைச் சாயமரவகை சாயத் தொழிலிலும், மருந்துகளிலும் பெருமளவில் பயன்படுகிறது

Long: குழைமக் களிமண்: குழைம மாகவும் எளிதில் வேலைப்பாடு செய்வதற்கு ஏற்றதாகவும் உள்ள களிமண்.

: (வானூ.) நீள் உடற் பகுதி: விமானத்தின் நீட்டு வாட்டமான உடற்பகுதி.

Long fold: நீள் மடிப்பு: காகிதத்தினை நீளவாக்கில் மடித்தல். இது 'அகமடிப்பு'க்கு எதிர்மாறானது.

Longitude: தீர்க்கரேகை: இங்கிலாந்திலுள்ள கிரீன்விச் போன்ற ஒரு நடுவிடத்திலிருந்து கிழக்கில் அல்லது மேற்கில் உள்ள தூரம்.

Longitudinal dihedral angle : (வானூ.) நிரைகோட்டு இரு சமதள முகக்கோணம்: விமானத்தில் இறகுக்கும் சமநிலையமைவுக்குமிடையிலான கோணத்தில் வேறுபாடு. இறகு அமைவுக் கோணத்தைவிட சமநிலையமைவுக் கோணம் குறைவாக இருக்குமாயின், அந்தக் கோணம் நேரவையாகும்.

Longitudinal section. (பட்.)நீளப்பாங்கு வெட்டுவாய்: நீளவாக்கில் வெட்டப்பட்ட பகுதி.

Longitudinal stability:(வானூ.) நீளப்பாங்கு உறுதிப்பாடு: விமானத்தில் சமதளச் சீர்மையில் ஏற்படும் உலைவினைப் பொறுத்த உறுதிப்பாடு.

Long letter: (அச்சு.) நீள் எழுத்து: 'f' என்னும் ஆங்கில எழுத்தினைப் போன்று ஏறுமுக இறங்குமுக வரைவுடைய அச்செழுத்து.

Long screw: (கம்.) நீள் திருகு: சாதாரணத் திருகிழையைவிட அதிக் நீளமுடைய 6" நீளமுள்ள ஒரு கூர்ங்கருவி.

Long-shunt compound connection: (மின்.) நீள் இணைக்கூட்டுப் பிணைப்பு: மின்னகமும் தொடர் வரிசைக் களச் சுருணையும் இணைந்த சுருணையுடன் குறுக்காக இணைக்களச் சுருணையுடன் இணைக்கும்போது உண்டாகும் பிணைப்பு. இது குறுகிய இணைப் பிணைப்புக்கு மாறுபட்டது.

Long - stroke: (தானி.) நீள் உகைப்பு: துளையின் விட்டத்தை விடக் கணிசமான அளவு அதிக நீளம் உகைத்திடக் கூடியதான ஓர் எஞ்சின்.

Loom: (மின்.) நெகிழ் காப்புறை: மின் கடத்திகளைக் காப்பதற்குப் பயன்படுத்தப்படும் நெகிழ்திறனுடைய உலோகமல்லாத குழாய்.

Loop: (வானூ.) கரண் வளைவு: விமானம் செங்குத்தான மட்டத் தில் ஏறத்தாழ ஒரு வட்ட வளையமாகச் செல்லும் ஒரு கரண உத்தி.

Loop wiring: (மின்.) கண்ணிக் கம்பியிடல்: மின் சுற்று வழியில் மின் கடத்திகளைக் கண்ணிகள் போல் பிணைத்து அமைத்தல் .

Loose dowel:தளர் இணைப்பாணி: இறுக்கமாகப் பொறுத்தப் படாத இணைப்பாணி, இது வேண் டும்போது அகற்றுவதற்கு வசதியாக நகரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.

Loose pulley: (பட்.) தளர் கப்பி :எந்திரம் ஒடாதிருக்கும்போது அதை இயக்கும் வார்ப்பட்டை தளர்வாக ஒடுவதற்கான கப்பி.எந்திரம் இயங்கும்போது வார்ப்பட்டை தளர் கப்பியிலிருந்து விரைவாக இயங்கும் கப்பிக்கு மாற்றப்படும்.

Loper: சுழல் சக்கரம்: கயிறு திரிப்பதற்குப் பயன்படும் ஒரு சுழல் சக்கரம்.

Loss factor: (மின். குழை.) இழப்புக் காரணி: விசைக்காரணியையும் மின் காப்பு நிலை எண்ணையும் பெருக்குவதால் கிடைக்கும் தொகை .

Lost motion: (எந்.) இயக்க இழப்பு: இயக்க வேகத்திற்கும், இயக்கப்படும் உறுப்புகளின் வேகத்திற்குமிடையிலான வேறுபாடு. இது குறைபாடான இணைப்புகள், தளர்வுகள் காரணமாக ஏற்படலாம்.

Loud speaker: (மின்.) ஒலி பெருக்கி: அதிகத் தொலைவுக்கு ஒலி எட்டும் வகையில் ஒலியைப் பெருக்குவதற்கான ஒரு சாதனம்.

Louis xv, : லூயி xv பாணி: ஃரெஞ்சு அரசன் பதினைந்தாம் லூயி (1728-1774) காலத்திற்குரிய பாணியிலமைந்த அறைகலன் வடி வமைப்புகள் இந்த அறைகலன்கள், நேர்கோட்டு அமைப்புகளுடனும், மென்மையான முட்டை போன்ற நீளுருண்டை வடிவுடைய பட்டயத் தகடுகளுடனும் அமைந்திருக்கும். மரத்தாலான இந்த அறைகலன்களில் பெரும்பாலும் வெண்மையான வண்ணம் பூசப் பட்டிருக்கும்.

Louver: (க.க; எந்.) காற்றுக் கூம்பு: காற்று புகவிடுவதற்கான பலகை அல்லது கண்ணாடிப்பாளங்களின் மோட்டுக் கவிகையடுக்கு.

Lowboy: ஒப்பனை மேசை: ஆங்கில பாணி ஒப்பனை மேசை அல்லது பல இழுப்பறைகள் உள்ள சிறிய மேசை இது அதிக அளவு ¼8" உயரமுடையதாக இருக்கும்,

Low brass: (உலோ.) மந்தப் பித்தளை: 80% செம்பும், 20% துத்தநாகமும் கலந்த மஞ்சள் நிறமான பித்தளை உலோகக் கலவை. இது எளிதில் கம்பியாக இழுத்து நீட்டக்கூடியது.

Low carbon steels: (உலோ.) மந்தக்கார்பன் எஃகு: , 80%-க்கும் குறைவான கார்பன் கொண்ட எஃகு உலோகம். இத்தகைய எஃகு உலோகங்களைப் பரப்பில் கார்பனாக்குவதன் மூலம் கடும் பதப்படுத்தலாம்; ஆனால், செம் பதமாக்க இயலாது.

Low case: (அச்சு.) சிறு வடிவெழுத்து: ஆங்கில எழுத்து வடிவின் சிறிய பொது முறை உருவம்.

Lovver case: (அச்சு.) பொதுமுறை எழுத்து: ஆங்கில நெடுங் கணக்கில் முகட்டெழுத்துகள் அல் லாத சிறிய பொதுமுறை வடிவ எழுத்துகள் .

Low finish: பழுப்புக் காகிதம்: முட்டையின் வெண்தோடு,கன்றின், தோல் போன்றவற்றிலிருந்துசெய்யப்பட்ட பழுப்பு நிறக் காகிதம்.

Low gear: (தானி.) தாழ்விசை இணைப்புத்திறம்: மிகக் குறைந்த அளவு முன்னோக்கு இயக்க வேகம் உடையதாக இயக்குஉறுப்புகளை அமைத்தல்,

Low in line: (அச்சு.) தாழ்வுறு வரி: அடுத்துள்ள அச்செழுத்தினை அல்லது பொருளைவிடத் தாழ்வாக உள்ள அச்செழுத்து.

Low- pressure laminates : (குழை.) குறைவழுத்த மென்தகடுகள்: குறைந்த அழுத்த நிலையில் அல்லது அழுத்தம் இல்லாத நிலையில் அறை வெப்ப நிலையில் தயாரிக்கப்படும் மென்தகடுகள்.

Low relief : மென் புடைப்புச் சித்திரம் : மேற்பரப்பிலிருந்து சிறிதளவு புடைப்பாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட செதுக்கோவியம்.

Low tension : (தானி;மின்.) தாழ்நிலை மின்சுற்று வழி : முதல் நிலை மின் சுற்று வழி (6 வோல்ட்).

Löw wing-mono-plane:(வானூ.) தாழ்நிலை சிறகு ஒற்றைத்தட்டு விமானம்: விமான உடற் பகுதியின் அடிப்பகுதியில் சிறகுகள் பொருத்தப்பட்டுள்ள ஒற்றை,தொகுதி சிறகுகளையுடைய விமானம்.

Lozenge: வைர வடிவம்: வைரம் போன்று சாய்சதுர உருவம்.

Lozenge molding: ( க.க.) சாய்சதுர வார்ப்படம்: வைரம் போன்ற சாய் சதுர வடிவில் அமைந்த வார்ப்பட அலங்கார வேலைப் பாடும். நார்மானியக் கட்டிடக் கலையில் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது.

Lubricant: (பொறி.) மசகுப் பொருள்: உராய்வு காப்புப் பொருளாகப் பயன்படுத்தப்படும் எண்ணெய், கொழுப்பு, காரீயகம் போன்ற பொருள்கள். இது வெட்டு மானம் செய்யப்படும் கருவிகளைக் குளிர் விப்பதற்கும் பயன்படுகிறது.

Lubrication: (பொறி.) மசகிடல்: உராய்வைத் தடுப்பதற்காக மசகுப் பொருள்களைக் கொண்டு மசகிடுதல்,

Ludiow: (அச்சு) லட்லோ அச்சுப் பொறி: அச்சுக்கலையில், கரைகள் , வ ரிக்கோடுகள், அலங்கார வரிகள் முதலியவற்றை வார்ப்பதற்காகப் பயன்படுத்தப்படும் உருக்கச்சு வரிப்பாள எந்திரம்,

Lug:(எந்.) பிடிவளை: எந்திர வார்ப்புப் பகுதியின் பிடிப்புக்குமிழ்

Lumber: வெட்டுமரம்: விற்பனைக்கு ஏற்ற பலகைகள், துண் டுகள் போன்ற வடிவளவுகளில் கட்டைகளாக வெட்டப்பட்ட வெட்டுமரம்.

Lumber scale: வெட்டு மர அளவி : முரட்டுக் கட்டைகளாக வெட்ட மட்ட வெட்டு மரத்தில் பலகை அளவுகளை அளவிடுவதற்குப் பயன்படும் அளவுக் குறியிடப்பட்ட ஒரு சாதனம்

Lumen bronze: (உலோ.) லூமன் வெண்கலம்: 86% துத்தநாகம், 10% செம்பு, 4% அலுமினியம் கொண்ட ஓர் உலோகக் கலவை. மிகுவேகத் தாங்கிகள் தயாரிப்பதற்குக் குறிப்பாகப் பயன்படுகிறது.

Luminosity: ஒளிர்வுத் திறன்: சுடர் ஒளி வீசுகின்ற அல்லது மின்னிடுகின்ற திறன்.

Luminous: ஒளிர் திறனுடைய:சுடர் ஒளி வீசுகின்ற அல்லது மின்னிடு கின்ற திறனுடைய.

Luminous paint: ஒளிரும் வண்ணம்: இருளில் ஒளிவிடுகின்ற திறனுடைய வண்ணப்பூச்க.

Lump lime: கட்டிச் சுண்ணாம்பு : சுண்ணாம்புக் காளவாய்களில் எரிக்கப்பட்ட அல்லது புடமிடப்பட்ட சுண்ணாம்புக் கல்லிலிருந்து தயாரான கட்டிச் சுண்ணாம்பு.

Lunette: தொங்கணிச் சரவிளக்கு: கண்ணாடித் தொங்கணிகள் கொண்ட சரவிளக்கு.

Luster : (கனி.) பிறங்கொளி: ஒரு கனிமப் பொருளின் ஒளிப் பிரதி பலிப்புப் பண்பு காரணமாக பரப்பில் ஏற்படும் ஒளிர்வு.

Lute : கலமட்பூச்சு: காற்றுப் புகா மண்ணடைப் பூச்சு.

(2) சீலைமண்: காற்றுப் புகா மண்ணடைப் பூச்சுக்காகப் பயன்படும் பொருள்.

Lye: (வேதி.) கடுங்கார நீர்: மாசு போக்கும் ஆற்றல் வாய்ந்த கழுவு நீர்ம வகை. சோடியம் ஹைட்ராக் சைடு (NaOH), அல்லது பொட்டாசியம் ஹைட்ராக்சைடு (KOH) போன்றவை இவ்வகையின. காரப் பொருள் உள்ள பொருளிலிருந்து கரைசலாக அல்லது தூளாக இது எடுக்கப்படுகிறது. இது முக்கியமாக சோப்பு தயாரிக்கும் தொழிலில் பயன்படுத்தப்படுகிறது.