அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்/003-006


நூல் முகம்

‘ஒருமொழியே பலமொழிக்கும் இடங்கொ டுக்கும்;
         ஒருமொழியே மலம்ஒழிக்கும் ஒழிக்கும்’ என்ற
ஒருமொழியைக் கருத்தினிலே நிறுத்தும் வண்ணம்
         ஒருமொழி ‘ஓம் நமச்சிவாய’ என்பர்;
‘அரிஅரி’ என் றிடினும்அஃதே; ‘ராம ராம’
         ‘சிவசிவ’வென் றிட்டாலும் அஃதே யாகும்;
தெரிவுறவே ‘ஓம்சக்தி’ என்று மேலோர்
         செபம்புரிவது அப்பொருளின் பெயரே யாகும்![1]
                                                                                    – பாரதியார்

டாக்டர் எஸ். இராதாகிருட்டிணன் உயர்வுறு தத்துவ ஆய்வு நிறுவன இயக்குநர் டாக்டர் இரா. கோபாலகிருட்டிணன் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, நிமிஷகவி கே. சுப்பைய நாயுடு அறக்கட்டனைச் சொற்பொழிவுகள் - 1996-97 திட்டத்தில் (1) அறிவியல் நோக்கில் - தமிழ் இலக்கியம், (27-1-1997), (2) அறிவியல் நோக்கில் - சமயம், தத்துவம் (28-1-1997) என்னும் தலைப்புகளில் நிகழ்த்திய இரு சொற்பொழிவுகள் இப்போது அச்சேறி நூல் வடிவம் பெறுகின்றன.

இப்பொழிவுகளின் கைப்படியைப் ‘பழனியப்பா பிரதர்ஸ்’ நிறுவனத்தின் பங்காளர் திரு. செ. மெ. பழனியப்பச் செட்டியார் அவர்கள் அன்புடன் ஏற்று, அழகிய முறையில் அச்சிட்டு, நூல் வடிவமாக்கித் தமிழ்கூறு நல்லுலகில் உலவ விட்டமைக்கு அச்சான்றோருக்கு என் நன்றி கலந்த வணக்கங்கள் உரியன.

இந்த அரிய நூலுக்கு அழகியதோர் அணிந்துரை நல்கி நூலுக்குப் பொலிவும் சிறப்பும் பெருமையும் ஏற்படுத்திய பெரியார் நீதியரசர் என். கிருட்டிணசாமி ரெட்டியார், ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியாவார். அரசு வக்கீலாக இருந்தபோது நீதிக்கு வாதாடியவர். நீதிபதியான பின்னர் நீதி வழங்கியவர். எண்பது அகவையைக் கடந்து நிற்கும் இப்பெருமகனார் பதினைந்துக்கும் மேற்பட்ட கல்வி, மருத்துவ, சமூக, சமய நிறுவனங்களின் தலைமையாக இருந்து கொண்டு ஆற்றிவரும் தெய்வப்பணிகள் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பெறவேண்டியவை. இவற்றுள் குறிப்பிடத்தக்கவை சுமார் ஐம்பது கோடி மதிப்புடைய பதினைந்து உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளைக் கொண்ட விவேகாநந்த கல்வி நிறுவனம், தாம்பரம் இந்து மருத்துவப் பணி மன்றம், சங்கர நேத்திராலய நிறுவனம், காஞ்சி காமகோடி மடத்தைச் சார்ந்த இந்து சமயப் பணிமன்றம் ஆகியவை ஆகும். இத்தகைய நிறுவனங்களின் பணியைத் தம் இகவாழ்வுக் குறிக்கோளாய்க் கொண்டு பணிபுரியும் நீதி அரசரின் அணிந்துரை பெற்றது இந்த நூலின் பேறு; என் பேறுமாகும்; அணிந்துரை நல்கி ஆசி கூறிய பெருமகனாருக்கு என் நன்றி கலந்த வணக்கங்கள் உரியவை.

இந்த நிறுவனத்தின் முதல் இயக்குநர் திரு.T.M.P. மகாதேவன் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய அத்துணைத் தத்துவ நூல்களிலும் அடியேன் ஆழங்கால்பட்டு மிகுபயன் பெற்றவன். தத்துவத்தைத் தெளிவான எளிய ஆங்கில நடையில் எழுதிய மாபெரும் மேதை. அடியேன் திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் ஓய்வு பெற்று சென்னைக்கு வந்த அதே ஆண்டு (1978) அவர் இல்லத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டமொன்றில் சில ஆழ்வார் பாசுரங்களைக்கொண்டு அத்வைதத் தத்துவத்தை விளக்குமாறு பணித்தார். கடந்த இருபதாண்டு காலமாய் (1960-1980) ஆழ்வார் பாசுரங்களை விசிட்டாத்வைத நோக்கில் ஆய்ந்த அடியேனை இப்பணி திக்குமுக்காடச் செய்தது. பரம்பொருளின் அருளாலும் பணித்த பெருமகனாரின் ஆசியின் கனத்தாலும் நான்கைந்து பாசுரங்களைக்கொண்டு விளக்க முயன்றேன். என் பேச்சை உன்னிக் கவனித்த பெருமகனார் ‘நன்று நன்று’ என்று பாராட்டி ஆசி கூறினார்.

அப்பெருமகனார்பால் அடியேன் கொண்டிருக்கும் பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் அறிகுறியாய் இந்தப் பனுவலை அவருக்கு அன்புப் படையலாக்கிப் பெருமிதம் கொள்கின்றேன். முத்தியுலகில் இருக்கும் அவருடைய ஆன்மா அடியேனுக்குத் தொடர்த்து ஆசி கூறிக்கொண்டிருக்கும் என்பது அடியேனின் அதிராத நம்பிக்கை.

நூல் அச்சாகும்போது, மூலப்படியுடன் பார்வைப்படியை ஒப்பிட்டு நோக்கி உதவிய என் அபிமான புத்திரி டாக்டர் மு. ப. சியாமளாவுக்கு என் ஆசியுடன் கூடிய நன்றி.


இந்த நூலை உருவாக்கி வெளியிட என் இதய கமலத்தில் நிரந்தரமாய் அந்தர்யாமியாய் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் ஏழுமலையானின் இணைத்தாமரை அடிகளை வாழ்த்தி வணங்கி அமைகின்றேன்.

“புல்லும் பசுவிற்காம்; பூண்டும் மருந்திற்காம்;
கல்லும் திருக்கோயில் கட்டுதற்காம் - தொல்லுலகில்
ஏழை எளியேன் எதற்காவேன்? செந்திநகர்
வாழும் வடிவேல வா!”
                                                            – தேசிகவிநாயகம் பிள்ளை


‘வேங்கடம்’  – ந. சுப்பு ரெட்டியார்
AD-13, அண்ணா நகர்,
சென்னை - 40.
9-03-2001
தொ. பே. 6211583


2. தே.வி. மலரும் மாலையும் - முருகன் புகழ்மாலை - 1. அடியேனுக்கு எல்லாக் கடவுளரின் வடிவங்களும் பரப்பிரம்மமாகவே (பெரிய பொருளாகவே) காட்சியளிக்கும்.

இந்நூலாசிரியரைப்பற்றி .......

85 அகவையைக் கடக்கும் நிலையிலுள்ள இந்நூலாசிரியர் எம்.ஏ., பி.எஸ்சி., எல்.டி., வித்துவான், பிஎச்.டி. பட்டங்கள் பெற்றவர்.

ஒன்பதாண்டுகள் துறையூர் உயர்நிலைப் பள்ளி நிறுவனர் தலைமையாசிரியராகவும் (1941-50), காரைக்குடி அழகப்பா ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் - துறைத் தலைவராகவும் (1950-60), பதினேழு ஆண்டுகள் திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் நிறுவனர் பேராசிரியர் - துறைத்தலைவராகவும் (1960-77) பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

1978 சனவரி 14இல் சென்னையில் குடியேறிப் பதினைந்து மாதங்கள் (1978 பிப்பிரவரி -- ஜூன் 1979) தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் முதன்மைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றியவர். திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் மூன்று மாதங்கள் மதிப்பியல் பேராசிரியராகவும், 1989 மே முதல் 1990 அக்டோபர் முடிய 18 திங்கள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் - காஞ்சித் தத்துவ மையத்தில் தகைஞராகவும் பணியாற்றி 1200 பக்கத்தில் ‘வைணவச் செல்வம்’ என்ற ஒரு பெரிய ஆய்வு நூலை உருவாக்கி வழங்கியவர். முதற்பகுதி 1995இல் 575 பக்கத்தில் வெளிவந்துள்ளது. இரண்டாவது பகுதி அச்சேறும் நிலையில் உள்ளது. (த. ப. க. வெளியீடு) 1996-பிப்பிரவரி முதல் சென்னைப் பல்கலைக் கழகத் தெற்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மரபு வழிப் பண்பாட்டு நிறுவனத்தில் மதிப்பியல் இயக்குநராகவும் பணியாற்றுபவர். சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத்துறையில் மதிப்பியல் பேராசிரியராக (வாழ்நாள் வரை)வும் இருந்து வருபவர். ஆய்வு - மாணவர்கட்கு வழி காட்டியாகவும் இருப்பவர்.

நாலாயிரத்திவ்வியப் பிரபந்தத்தில் நம்மாழ்வார் தத்துவத்தை ஆய்ந்து டாக்டர் (பி.எச்.டி.) பட்டம் பெற்றவர். அந்த ஆய்வு நூல் ஆங்கிலத்தில் 940 பக்கங்களில் திருவேங்கடவன் பல்கலைக் கழக வெளியீடாய் வெளிவந்துள்ளது. எம்.ஃபில்., பிஎச்.டி. மாணக்கர்களை உருவாக்கியவர். தமிழிலும் ஆங்கிலத்தும் பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டவர். பெரும்பாலும் இவை நூல் வடிவம் பெற்றுள்ளன, பெற்றும் வருகின்றன. தவிர, ஆசிரியம், கல்வி உளவியல் (5), இலக்கியம் (22), சமயம், தத்துவம் (35), வாழ்க்கை வரலாறு, தன் - வரலாறு {13). திறனாய்வு {21), அறிவியல் (20), ஆராய்ச்சி (6) ஆசு 122 நூல்களை வெளியிட்டவர்.

இவர்தம் அறிவியல் நூல்களுள் மூன்றும், சமய நூல்களுள் நான்கும், தமிழக அரசுப் பரிசுகளையும், அறிவியல் நூல்களுள் ஒன்று சென்னைப் பல்கலைக் கழகப் பரிசினையும், அறிவியல் நூல்களுள் ஒன்று தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசினையும் ஆக 10 நூல்கள் பரிசுகள் பெற்றன.

இவர்தம், அறிவியல் நரல்களைப் பாராட்டிக் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் ‘அருங்கலைக்கோன்’ என்ற விருதினையும் (1968), வைணவ நூல்களைப் பாராட்டிப் பண்ணுருட்டி வைணவ மாநாடு ‘ஶ்ரீசடகோபன் பொன்னடி’ என்ற விருதினையும் (1987), தமிழ்ப்பணியைப் பாராட்டித் தமிழக அரசு திரு. வி. க. விருதினையும் (10,000 வெண்பொற் காசுகள் - 1987), இவர்தம் தமிழ்ப்பணியைப் பாராட்டி மதுரை காமராசர் பல்கலைக் கழகம் ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்ற விருதினையும் (1991). இராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் அறக்கட்டளை சுல்வி, இலக்கியம், அறிவியல் என்ற மூன்று துறைகளில் இவர்தம் பணியைப் பாராட்டி இராஜா சர் முத்தையாவேள் விருதினையும் (50,000 வெண் பொற்காசுகள் - 1994), இவர்தம் கம்பன் பணியைப் பாராட்டிச் சென்னைக் கம்பன் கழகம் பேராசிரியர் இராதாகிருஷ்ணன் விருதினையும் (1994 - 100 0 லெண்பொற்காசுகள்), சென்னை ஆழ்வார்கள் ஆய்வு மையம் இவர்தம் வைணவ வெளியீடுகளைச் சிறப்பிக்கும் முறையில் ஶ்ரீஇராமாநுஜர் விருதையும் (1996 - 25,000 வெண்பொற்காசுகளையும்) வழங்கிச் சிறப்பித்துள்ளன. 

அண்மையில் இவர்தம் இயற்றமிழ்ப் பணியைப் பாராட்டித் தமிழ் இயல் இசை நாடக மன்றம் (அரசு) ‘கலைமாமணி’ என்ற விருதினையும் (1999 - 3 சவரன் தங்கப் பதக்கம்). இவர்தம் தமிழ்ப்பணியைப் பாராட்டிச் சென்னை கோயம்பேடு மனிதநேய வைணவ இயக்கம் ‘வைணவ இலக்கிய மாமணி’ என்ற விருதினையும் (2001), மதுரை காமராசர் பல்கலைக்கழகம் டி.லிட் (கண்ணியம்) என்ற பட்டத்தையும் (1999), காஞ்சி காமகோடி பீட அறக்கட்டளை ‘சேவாரத்னா’ விருதினையும் (1000 வெண்பொற்காசுகள் - 1999 இவர்தம் வைணவப் பணியைப் பாராட்டி வழங்கிச் சிறப்பித்துள்ளன.

இனிமை, எளிமை, தெளிவு இவர்தம் நூல்களின் தனிச் சிறப்பியல்புகள் ஆகும்.

  1. பா. க. சுயசரிதை - 63