அறிவியல் வினா விடை-இயற்பியல்/அடிப்படைகள்

அறிவியல் வினா-விடை

இயற்பியல்

1. அடிப்படைகள்

1. இயற்பியல் என்றால் என்ன?

பருப்பொருள் இயல்பு மற்றும் ஆற்றல் பற்றி ஆராயுந்துறை இயற்பியலாகும்.

2.இயற்பியல் என்பது ஒர் அடிப்படை அறிவியல் எவ்வாறு?

பயன்பாட்டிற்குரிய நெறிமுறைகளைக் கூறுவதால் அது ஒர் அடிப்படை அறிவியல்.

3.இயற்பியலின் பழைய பிரிவுகள் யாவை?

ஒளி இயல், ஒலி இயல், வெப்பவியல், காந்தவியல், இயக்கவியல், எந்திரவியல், மின்னியல், மின்னணுவியல் முதலியவை ஆகும்.

4.இயற்பியலின் புதிய பிரிவுகள் யாவை?

அணு இயற்பியல், கணிம இயற்பியல், குளிரியல், துகள் இயற்பியல், உயிர் இயற்பியல், வானவெளி இயற்பியல், சிறு பொருள் (நுண்பொருள்) அறிவியல், புதிய இயற் பியல் எனப் பல வகை.

5.இயற்பியல் ஒரு பயன்படு கணிதமாகும்? எவ்வாறு?

இயற்பியல் சமன்பாடுகளை உருவாக்க விளக்கக் கணக்கு பயன்படுவதால், அது ஒரு பயன்படு கணிதமாகும்.

6.இயற்பியல் வழி அமையும் பயன்படு அறிவியல்கள் யாவை?

மருத்துவம், பொறி இயல் முதலிய தொழில்நுட்பத் துறைகள்.

7.இயற்பியலில் இரு அரும்பெரும் அறிஞர்கள் யாவர்?

நியூட்டன், ஐன்ஸ்டீன் (நோபல் பரிசு 1921).

8.இயற்பியலில் புகழ்பெற்ற நான்கு இந்திய விஞ்ஞானிகள் யாவர்?

சர்.சி.வி. இராமன் (நோபல் பரிசு 1930), சந்திரசேகர் (நோபல் பரிசு 1983), எஸ்.என். போஸ், ஹோமி பாபா

9. ஐன்ஸ்டீனின் சிறப்பு யாது?

தம் மூளையையே ஆய்வுக்களமாகக் கொண்டு உய்மானத்தின் மூலம் கணித அடிப்படையில் காலத்தால் அழியாத சார்புக் கொள்கையை வகுத்தவர்.

10. அலகு என்றால் என்ன?

ஒப்பீட்டு அளவு மதிப்பு அலகு. அதே அளவின் மற்ற மதிப்புகளைத் தெரிவிக்கப் பயன்படுவது. எ டு. வெப்ப அலகு கலோரி.

11. அலகின் இரு வகைகள் யாவை?

அடிப்படை அலகுகள், வழியலகுகள்.

12. அடிப்படை அலகுகள் என்றால் என்ன?

பெரும்பான்மை அலகு முறைகளின் அடிப்படையாக அமையும் நீளம், (செ.மீ), நிறை (கிராம்), காலம் (வினாடி) ஆகியவற்றின் அலகுகள்.

13. வழியலகுகள் யாவை?

அடிப்படை அலகுகளை ஒட்டி வரையறை செய்யப் படும் அலகு. எ- டு நியூட்டன் என்பது கிலோ கிராம் மீட்டர் வினாடி என வரையறுக்கப்படும்.

14. துணையலகுகள் என்றால் என்ன?

பருமனற்ற அலகுகள். அடிவழி அலகுகளுடன் வழியலகுகளை உருவாக்கப் பயன்படுபவை. எ-டு. ரேடியன்.

15. அறிவியலார் பெயர் தாங்கிய சில அலகுகள் யாவை?

ஆம்பியர், ஒம், ஜூல், நியூட்டன்.

16. அனைத்துலக அலகுகள் என்றால் என்ன?

அறிவியல் ஆய்வுகளுக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கும் அனைத்துலக அலகுகள். இதில் ஏழு அடிப்படை அலகுகள் உள்ளன. ஆம்பியர், காண்டலா, கெல்வின், கிலோகிராம், மீட்டர், மோல், வினாடி

17. எம்.கே.எஸ். முறை என்றால் என்ன?

மீட்டர் கிலோகிராம் வினாடி ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த அலகு முறை. எஸ்.ஐ. அலகுக்கு அடிப்படையாக அமைந்தது.

18. பரப்பு என்றால் என்ன?

நீளம் X அகலம் = பரப்பு.

19. பருமன்கள் (பரிமாணங்கள்) என்றால் என்ன?

இவை அடிப்படை அலகுகளான நிறை, நீளம், காலம் ஆகியவற்றின் அடுக்குக்குறிகளை எவ்வளவு உயர்த்துகிறோம் என்பதைக் குறிப்பது. எ டு. நீளம் x நீளம்xநீளம். பரும வாய்ப்பாடு நீளம் (v=LXLXL=L)

20. பருமன்களின் பயன்கள் யாவை?

1. ஒரு சமன்பாடு சரியா தவறா என்பதை அறியலாம். 2. ஒர் அலகு முறையில் அமைக்கப்படும் இயற்பியல் அளவினை மற்றோர் அலகு முறையில் மாற்ற இயலும். 3. கணக்கிடப்பட வேண்டிய இயற்பியல் அளவுகளுக் கிடையே உள்ள தொடர்பினைத் தரும் சமன்பாட்டை வருவிக்கலாம்.

21. பருமன் என்றால் என்ன?

இடத்தை அடைத்துக் கொள்வது பருமன். பருமன் = நிறைxஅடர்த்தி, V= md அல்லது நீளம்xஅகலம்xஉயரம்.

22. தனி என்றால் என்ன?

நிலைமைகள், வரம்புகள், தடைகள் முதலியவற்றில் இருந்து தனித்திருத்தல், எ-டு. தனிவெப்ப நிலை, தனிச் சாராயம்.

23. சார்பு என்றால் என்ன?

ஒன்றைச் சார்ந்து அமைவது. எ-டு. சார்புக் கொள்கை.

24. சமன்பாடு என்றால் என்ன?

ஒன்று மற்றொன்றுக்குச் சமன் என்னும் கூற்று. எ-டு. E = mc²

25. கோவை என்றால் என்ன?

குறிகள், எண்கள் முதலியவற்றைக் கொண்ட தொகுதி. எ-டு a = (V-u)t

26. வாய்பாடு என்றால் என்ன?

ஒரு பொது விதியைக் குறிகளால் குறிப்பது. எ- டு. A= r வட்டத்தின் பரப்பு.

27. மடக்கை என்றால் என்ன?

ஒரு எண்ணின் படிக்குறியாகத் தெரிவிக்கப்படும் எண். முழு எண், தசம எண் என இரு பகுதிகளைக் கொண்டது. அடிமானம் 10 உள்ள 210 இன் மடக்கை 2.3222. இதில் 2 சிறப்பு வரை. 0.3222 பின்னவரை.

28. செய்முறைவழி என்றால் என்ன?

இது விதிமுறைகள் வழிப்பட்ட நடைமுறை. சிக்கலுக்குத் தீர்வு காண உதவுவது.

29. இயல்நிகழ்ச்சி என்றால் என்ன?

இயற்கையில் காணப்படும் நிகழ்ச்சி. எ-டு. வானவில்.

30. அறிவியல் முறை என்றால் என்ன?

சிக்கலுக்குத் தீர்வு காணும் முறை. இதை நிறுவியவர் பிரான்சிஸ் பேகன். இம்முறையை மெய்ப்பித்தவர் கலிலியோ.

31. கணித மாதிரிகள் என்றால் என்ன?

உண்மைப் பட்டறிவு இல்லாமலே இயற்கை நிகழ்ச்சிகளின் நடத்தையை முன்னறிந்து கூற ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன்படும் மாதிரிகள். எ-டு. சார்புக் கொள்கை. ஐன்ஸ்டீன்.

32. வழிவரைபடம் என்றால் என்ன?

அம்புக்குறிகளால் இணைக்கப்பட்ட குறிகளைப் பயன்படுத்தும் விளக்கப்படம். சிக்கலுக்குத் தீர்வு காணப் பயன்படுவது.

33. திட்ட மாதிரி என்றால் என்ன?

ஒரு பொருளின் நிலையான வடிவம். எ-டு. கதிரவன் திட்ட மாதிரி.

34. பிரிட்டிஷ் அளவுமுறையை விட மெட்ரிக் அளவுமுறை சிறந்தது ஏன்?

மெட்ரிக் முறை தசம அளவில் உள்ளது. ஒரு மதிப்பை இன்னொரு மதிப்பாக எளிதில் மாற்றலாம். எ-டு: 3.145, 314.5

35. முதல் அறிவியல் கழகத்தைத் தனியாளாக நின்று நிறுவியவர் யார்?

இத்தாலிய இயற்பியலார் ஜியாம்பட்டிஷ்டா டெல்லா போர்ட்டா. நிறுவிய ஆண்டு 1560.

36. முதல் இயற்பியல் நோபல் பரிசைப் பெற்றவர் யார்?

ஜெர்மன் அறிவியலார் ராண்ட்ஜன், 1901.

37. கலிலியோ எவ்வாறு தற்பொழுது சிறப்பிக்கப்பட்டுள்ளார்?

இவர் பெயரில் விண்ணகத்தை ஆராய 1991இல் ஒரு விண்வெளிக்கலம் ஏவப்பட்டுள்ளது. இவர் தற்கால இயற்பியலின் தந்தை.

sI அலகு முறையில் பொருளின் அளவு