அறிவியல் வினா விடை-இயற்பியல்/பொருளும் பொருளின் பண்புகளும்

2. பொருளும் பொருளின் பண்புகளும்

1. பொருள் என்றால் என்ன?

இடத்தை அடைத்துக் கொள்வதும் நிறை உள்ளதுமான பருப்பொருள். கண்ணால் பார்க்கவும் கூடியது. எ-டு. உலோகம்.

2. பொதுவாகப் பொருள் உள்ள மூன்று நிலைகள் யாவை?

திண்மம், நீர்மம், வளி.

3. பொருளின் நான்காம் நிலையாகக் கருதப்படுவது எது?

கணிம நிலை (பிளாஸ்மா).

4. கணிம நிலை என்றால் என்ன?

உயர் வெப்ப நிலையில் தடையிலா மின்னணுக்களும் அயனிகளும் உள்ள நிலை.

5. திண்மம் என்றால் என்ன?

கெட்டிப் பொருளே திண்மம்.

6. திண்மத்தின் பண்புகள் யாவை?

1. துகள்கள் நெருக்கமாக இருக்கும். 2. வடிவத்தை மாற்றுவதை எதிர்ப்பது.

7. பாய்மம் என்றால் என்ன?

வளியும் நீர்மம் சேர்ந்தது.

8. நீர்மம் என்றால் என்ன?

நீருக்கும் வளிக்கும் இடைப்பட்டது. எ-டு. எண்ணெய்.

9. நீர்மத்தின் பண்புகள் யாவை?

1. ஓடக்கூடியது. 2. தன் மட்டத்தை அடைவது.3. வடிவம்

கலத்தைப் பொறுத்தது. 4. ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறுவது.

10. நீர்மத்தைத் துல்லியமாக அளக்கும் கருவிகள் யாவை?

பூரட் பிப்பெட்

11. நீரியல் என்றால் என்ன?

நீரின் தோற்றம் பண்புகள் முதலியவற்றை ஆராயும் துறை.

12. நீராற்பகுப்பு என்றால் என்ன?

நீரைச்சேர்த்து அரிய பொருள்களை எளிய பொருள்களாகப் பிரித்தல்.

13. பர்னவுலி தேற்றம் என்றால் என்ன?

இயக்கத்திலுள்ள ஒரு நீர்மம் இயக்க ஆற்றல், நிலை ஆற்றல், அழுத்த ஆற்றல் ஆகிய மூன்றையும் பெற்றுள்ளது.

14. பர்னவுலி தவிர்ப்பு நெறிமுறை என்றால் என்ன?

நிலையாகவும் சுழற்சி இல்லாமலும் ஒரு நீர்மம் பாயும் பொழுது, அதன் வழியிலுள்ள ஒவ்வொரு புள்ளியிலும் அதன் மொத்த ஆற்றல் மாறாதது (1925).

15. ஆர்க்கிமெடிஸ் விதி யாது?

ஒரு பொருள் ஒரு பாய்மத்தில் அமிழ்வதால் ஏற்படும் தோற்ற எடை இழப்பு, அப்பொருளினால் விலக்கப்பட்ட நீர்மத்தின் எடைக்குச் சமம்.

16. மிதத்தல் விதிகள் யாவை?

1. ஒரு பொருளின் அடர்த்தி நீர்மத்தின் அடர்த்தியை விடக் குறைவானால், அப்பொருள் அந்நீர்மத்தில் மிதக்கும். 2. ஒரு பொருள் ஒரு நீர்மத்தில் மிதக்கும் பொழுது, மிதக்கும் பொருளின் நிறை, அதனால் விலக்கப்பட்ட நீர்மத்தின் எடைக்குச் சமம்.

17. மிதத்தல் விதியின் அடிப்படையில் அமைந்த கருவிகள் யாவை?

கப்பல், நீர்மூழ்கிக் கப்பல், நீர்மானி, பால்மானி.

18. நீர்மானி என்றால் என்ன?

நீர்மங்களின் ஒப்படர்த்தி காணப் பயன்படுவது.

19. பால்மானி என்றால் என்ன?

பாலின் துய்மையை அளக்கும் கருவி.

20. பாஸ்கல் விதியைக் கூறு.

அசைவற்று இருக்கும் ஒரு நீர்மத்தில் ஒரு புள்ளியில் ஏற்படும் அழுத்தம், அதன் ஏனைய புள்ளிகளுக்கும் சமமாகப் பரவும்.

21. பாஸ்கல் விதியின் அடிப்படையில் அமைந்த கருவிகள் யாவை?

நீரியல் தடுப்பான், நீரியல் தூக்கி, நீரியல் அழுத்தி.

22. நீர்மூழ்கிக்கப்பல் எவ்வாறு இயங்குகிறது?

இதிலுள்ள நிறைத் தொட்டியில் நீர் நிரப்ப, நீரினுள் செல்லும். தொட்டி நீரில் இறுகிய காற்றைச் செலுத்த, அது மீண்டும் நீரில் மேல் வரும்.

23. நீர்மூழ்கிக் கப்பல்களின் பயன்கள் யாவை?

புலனாய்வுக்கும் கடலாராய்ச்சிக்கும் பயன்படுபவை.

24. பிளிம்சால் கோடுகள் என்றால் என்ன?

வாணிகப் பொருள்களை ஏற்றிவரும் பெருங் கப்பல்களின் பக்கங்களில் வரையப்பட்டிருக்கும் கோடுகள். கடல்நீர் அடர்த்தி, இடத்திற்கிடமும் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்பவும் மாறும் என்பதை இவை குறிப்பவை.

25. இழுமம் (ஜெல்) என்றால் என்ன?

இழுது போன்று திண்ம வடிவத்தில் இருக்கும் கூழ்மக் கரைசல், எ-டு. நெய்.

26. பால்மம் என்றால் என்ன?

ஒரு நீர்மத்தில் மற்றொரு நீர்மத்தின் கூழ்மத் துகள்கள் விரவி இருத்தல். எ-டு. பால்.

27. கூழ்மம் என்றால் என்ன?

கரைசல் அல்லது தொங்கலிலுள்ள பொருள். இதன் துகள்கள் பெரியவை. ஆகவே அவை கரிமப் படலத்தின் வழியாகச் செல்லா. எ-டு. கூழ்.

28. கூழ்மத்தை வரையறை செய்தவர் யார்? எப்பொழுது?

தாமஸ் கிரகாம். 1861இல் கூழ்மத்தை வரையறை செய்தார்.

29. கூழ்மமுள்ள இரு நிலைகள் யாவை?

சிதறிய நிலை, தொடர் நிலை.

30.கரையம் (சால்) என்றால் என்ன?

நீர்மத்திலுள்ள கூழ்மத் தொங்கல். இதில் திண்மத் துகள்கள் தொடர்ச்சியாகச் சிதறிக் காணப்படும். இது இழுமமாக மாறுவது.

31. கூழ்மத்திற்கு எடுத்துக்காட்டுகளாய் இருப்பவை யாவை?

இழுமம், பால்மம், கரையம்.

32. நுண்புழைக் கவர்ச்சி என்றால் என்ன?

நுண்புழைத்திறன். புவிஈர்ப்பு விசைக்கு எதிராக நீர்மங்கள் தாமாகவே ஒடுங்கிய திறப்புகளில் உயரும் நிகழ்ச்சி. இம்முறையில் நீர்மங்கள் உயர்வது அவற்றின் அடர்த்தியையும் நுண்புழைத் திறனையும் பொறுத்தது.

33. இதன் பயன்கள் யாவை?

1. நிலத்தடி நீர் இத்திறனாலேயே மேலே உயருகிறது. 2. இந்நீரை அதிகம் உறிஞ்சித் தாவரங்கள் பயன்படுத்திக் கொள்பவை.

34. நுண்புழை நீர் என்றால் என்ன?

நுண்புழைக் கவர்ச்சியால் தாவரங்களில் ஏறும் நிலத்தடி நீர்.

35. இதன் பயன்கள் யாவை?

1. தாவரத் தண்டு வழியாக ஊட்டநீர் தாவரத்தில் மற்றப் பகுதிகளுக்குச் செல்லுதல்.
2. இந்நெறிமுறையில் தானே மைஉறிஞ்சும் பேனா, மை உறிஞ்சும் தாள், துவட்டும் பூத்துணித் துண்டுகள் எல்லாம் வேலை செய்கின்றன.

36. பரப்பு இழுவிசை என்றால் என்ன?

மூலக்கூறுகளுக்கிடையே உள்ள கவர்ச்சி.

37. இவ்விசைக்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.

நீர் மேல் குண்டுசி, பிளேடு மிதத்தல்.

38. இழுவிசையைக் குறைக்கும் பொருள் என்றால் என்ன?

மேற்பரப்பு இழுவிசையைத் தாழ்த்தும் பொருள். எ-டு. சவர்க்காரம்.
39. உட்கவரல் என்றால் என்ன?

நீர்மம் அல்லது கெட்டிப்பொருள் வளியை உறிஞ்சும் முறை.

40. உட்கவர்மானி என்றால் என்ன?

வளிக் கரைதிறனை நீர்மங்களில் உறுதி செய்யும் கருவி.

41. வெளிக்கவரல் என்றால் என்ன?

ஒரு நீர்மம் அல்லது திண்மத்தின் மேற்பரப்பில் மற்றொரு பொருளின் அணு அல்லது மூலக்கூறு படியும் முறை. பரப்பூன்றல் என்றும் கூறலாம்.

42. வெளிக்கவரி என்றால் என்ன?

வெளிக்கவரலை நிகழ்த்தும் பொருள்.

43. பாகியல் எண் என்றால் என்ன?

இயங்கு நீர்மத்தில் நேர்விரைவு வாட்டத்தை நிலை நிறுத்த, ஓரலகு பரப்பின் மீது செயல்பட வேண்டிய தொடு கோட்டுவிசை அந்நீர்மத்தின் பாகியல் எண் ஆகும்.

44. பாகுநிலைமானி என்றால் என்ன?

பாகுநிலையை அளக்கப் பயன்படும் கருவி.

45. அடர்த்தி என்றால் என்ன?

ஒரு கன செண்டிமீட்டர் பொருளின் நிறை. அலகுண்டு. பாதரசத்தின் அடர்த்தி 13.6 கி/க.செ.மீ

46. ஒப்படர்த்தி அல்லது அடர்த்தி எண் என்றால் என்ன?

ஒரு பொருளின் அடர்த்திக்கும் நீரின் அடர்த்திக்கும் உள்ள வீதம். அலகில்லை ஒரு எண். பாதரசத்தின் அடர்த்தி எண் 13.6.

47. ஒப்படர்த்திக்கு நீர் ஏன் ஒப்பீட்டுப் பொருளாகக் கொள்ளப் பட்டுள்ளது?

நீரின் அடர்த்தி எண் 1 அல்லது ஒரு கன செண்டி மீட்டர். நீரின் எடை ஒரு கிராம். எளிதில் கிடைப்பது.

48. ஒர் இரும்புத் துண்டு நீரில் அமிழ்கிறது. பாதரசத்தில் மிதக்கிறது. ஏன்?

இரும்புத்துண்டின் அடர்த்தி நீரின் அடர்த்தியை விட அதிகம். நீரில் மூழ்குகிறது. அது பாதரசத்தை விட அடர்த்தி குறைவாக இருப்பதால் அதில் மிதக்கிறது.
49. வளி என்றால் என்ன?

திட்டமான எல்லைகளோ பருமனோ இல்லாத காற்று போன்ற பொருள். எ-டு ஆக்சிஜன், அய்டிரஜன்.

50. கே லூசக் விதி யாது?

வளிகள் வினைப்படும் பொழுது, அவற்றின் பருமனும் வினையால் விளைந்த வளிப் பருமனும் ஒரே வெப்ப அழுத்த நிலைகளில் சிறிய முழுஎண் வீதத்தில் இருக்கும் (1804).

51. கிரகாம் விதி யாது?

வளியின் பரவு நேர் விரைவு, அதன் அடர்த்தியின் வர்க்கமூலத்திற்குத் தலைகீழ் வீதத்தில் உள்ளது. (1829)

52. இவ்விதியின் பயன் யாது?

விரவல் முறையில் ஓரிமத் தனிமங்களைப் பிரிக்கப் பயன்படுகிறது.

53. விரவல் என்றால் என்ன?

அணுத் துகள்கள் வெப்ப இயக்கத்தால் தம்மிடத்தை விட்டு நகர்தல். அணுக்கள் என்பவை வளி, நீர்மம், திண்மம் ஆகியவற்றைக் குறிக்கும்.

54. விரவலுக்கு ஒர் எடுத்துக்காட்டு தருக.

நீரில் ஒரு துளி மை மெதுவாகப் பரவுதல்.

55. விரவல் எக்கி என்றால் என்ன?

அழுத்தத்தைக் குறைக்கப் பயன்படும் வெற்றிட எக்கி.

56. வளி விதிகள் யாவை?

1. பாயில் விதி : நிலையான வெப்பநிலையில் ஒரு மாதிரியின் அழுத்தம் (P) அதன் பருமனுக்கு (V) எதிர்வீதத்தில் இருக்கும். PV = மாறிலி.
2. சார்லஸ் விதி : நிலையான அழுதத்தில் வெப்ப இயக்க வெப்பநிலைக்குப் (T) பருமன் (V) நேர்வீதத்தில் இருக்கும். V/T = மாறிலி.
3.அழுத்த விதி : நிலையான பருமனிலுள்ள ஒரு மாதிரியின் வெப்ப இயக்க வெப்பநிலைக்கு, அழுத்தம் நேர் வீதத்திலிருக்கும்.
இம்மூன்று விதிகளையும் அனைத்துச் சமன்பாட்டில் ஒன்றாக இணைக்கலாம்.

PV = nRT.
n = மாறிலியிலுள்ள வளியளவு. R = வளி மாறிலி.
P = அழுத்தம். T= வெப்பநிலை.

57. வளி இயக்க விதிகள் யாவை?

இவற்றின் அடிப்படைப் புனைவுகளாவன.
1. அனைத்து வளிகளும் மூலக்கூறுகள் என்னும் துகள்களால் ஆனவை.
2. வளிமூலக்கூறுகள் நிலையாக நில்லாமல் எல்லாத் திசைகளிலும் தொடர்ந்து முடிவின்றி ஒழுங்கற்ற முறையிலேயே இங்குமங்குமாக இயங்கும்.
3. வளிமூலக்கூறுகள் இயங்கும் பொழுது ஒன்றுடன் ஒன்றும் ஒன்றுடன் மற்றொன்றும் மோதிக் கொள்கின்றன. தவிரக் கலன்களின் சுவர்களிலும் மோதுகின்றன.
4. வளி மூலக்கூறுகள் மீள்தன்மை உடையவை. ஆகவே, மோதல் காரணமாக அவற்றில் இயக்க ஆற்றல் இழப்பில்லை.
5. வளிமூலக்கூறுகள் கலன் கவர்களில் விசையுடன் மோதுவதால் ஏற்படும் விளைவே வளியழுத்தமாகும்.
6. வளிமூலக் கூறுகளின் இயக்க ஆற்றல் வளி வெப்ப நிலையுடன் நேர்வீதத் தொடர்புடையது.
7. வளிநிலையில் மூலக்கூறுகளுக்கிடையே குறிப்பிடத் தக்க அளவு கவர்ச்சி இல்லை ஆதலால், மூலக்கூறுகள் கட்டுப்பாடின்றி இயங்குகின்றன.
8. வளியின் கலப்பருமனோடு ஒப்பிடும்போது, மூலக் கூறுகளின் பருமன் மிகக் குறைவு ஆதலால், அதைப் புறக்கணிக்கலாம்.

58. வளி இயக்க விதிகளை யார் வகுத்தது? எப்பொழுது?

இவ்விதிகளை ஜேம்ஸ் கிளார்க் 1860இல் வகுத்தார்.

59. நிறை என்றால் என்ன?

ஒரு பொருளிலுள்ள அணுக்களின் தொகுதி. எங்கும் ஒரே அளவாக இருக்கும்.

60. எடை என்றால் என்ன?

ஒரு பொருளில் ஏற்படும் புவிஈர்ப்பு விசையின் அளவு. இடத்திற்கிடம் மாறுபடுவது.

61. புவியிலுள்ள ஒரு பொருளின் எடை திங்களில் கூடுமா குறையுமா? ஏன்?

குறையும். புவியின் ஈர்ப்பைவிடத் திங்களின் ஈர்ப்பு குறைவு.

62. தராசு என்றால் என்ன?

ஆய்வகத்தில் ஒரு பொருளைத் துல்லியமாக நிறுக்கப் பயன்படும் கருவி.

63. தராசின் வகைகள் யாவை?

1. இயற்பியல் தராசு, 2. வேதியியல் தராசு.

64. வில் தராசு என்றால் என்ன?

ஹூக் விதியின் அடிப்படையில் அமைந்தது.

65. இதன் பயன்கள் யாவை?

1. பனிக்கட்டி, மூட்டைகள் முதலியவற்றை நிறுக்க,
2. ஒரு பொருளின் ஒப்படர்த்தி காண.

66. ஹூக் விதி யாது?

மீட்சி எல்லைக்குள் தகைவும் திரிபும் ஒன்றுக்கு மற்றொன்று நேர்வீதத்திலிருக்கும். இதுவே ஒரு மாறிலி.

67. யங் எண் என்றால் என்ன?

யங் குணகம். ஒரு பொருளின் தகைவிற்கும் அதனால் உண்டாக்கப்படும் திரிபிற்குமுள்ள வீதம். இது நீட்சி எண்.

68. தளமட்டமானி என்றால் என்ன?

கிடைமட்டக் கோணங்களையும் நேர் கோணங்களையும் அளக்கும் கருவி.

69. திருகுமானி என்றால் என்ன?

திருகு நெறிமுறையில் வேலை செய்யுங் கருவி.

70. இதன் பயன் யாது?

மெல்லிய கம்பி, ஈயக்குண்டுகள் முதலியவற்றின் குறுக் களவையும் மெல்லிய கண்ணாடியின் தடிமனையும் காணலாம்.

71. இதன் மீச்சிற்றளவை யாது?

மீச்சிற்றளவை = 1 புரியடைத் தொலைவு / தலைக்கோல் மொத்தப் பிரிவுகள்.

72. கோளமானி என்றால் என்ன?

ஒரு பரப்பின் வளைவைக் கண்டறியுங் கருவி.

73. வெர்னியர் என்றால் என்ன?

ஒரு பொருளின் நீளத்தைத் துல்லியமாக அளக்கும் கோல். பால் வெர்னியர் அமைத்தவர்.

74. இதன் மீச்சிற்றளவை என்றால் என்ன?

இதனால் அளவிடக் கூடிய மிகச் சிறிய நீளம். இதன் மதிப்பு ஒரு மூலக்கோல் பிரிவிற்கும் ஒரு வெர்னிர் பிரிவுக்கும் உள்ள வேறுபாடு.

75. இடமாறு தோற்றப் பிழை என்றால் என்ன?

அளவுகோல் கொண்டு சரியாக அளக்காத போது ஏற்படும் பிழை.

76. அழுத்தம் என்றால் என்ன?

ஒர் அலகுப் பரப்பின் மீது ஏற்படும் இறுக்கம். P=hd. P-அழுத்தம், h-உயரம், d- அடர்த்தி.

77. இறுக்கம் என்றால் என்ன?

1. மொத்தப் பரப்பின் மீது ஏற்படும் அழுத்தம் இறுக்கு விசை. T = PA T-இறுக்கம். P -அழுத்தம். A- பரப்பு.

2. ஏவுகணை உண்டாக்கும் முன்னியக்கு விசை.

78. அழுத்த அளவி என்றால் என்ன?

அழுத்தத்தை அளக்கும் கருவி.

79. முகப்பளவி என்றால் என்ன?

உயர் அழுத்தங்களை அளக்கப் பயன்படும் கருவி. வேறு பெயர் போர்டன் அளவி.

80. ஆவி என்றால் என்ன?

வளி நிலைப் பொருள். பனியாகவும் புகையாகவும் இருக்கும்.

81. ஆவியை எவ்வாறு நீர்மமாக்கலாம்?

வெப்பநிலை மாறாமல் அழுத்தத்தை அதிகமாக்கி இதை நீர்மமாக்கலாம்.

82. ஆவியாதல் என்றால் என்ன?

இம்முறையில் நீர்மம் அல்லது திண்மம் வெப்பத்தினால் வளி அல்லது ஆவிநிலைக்கு மாறுகிறது.

83. ஆவியாதல் நிகழ நிபந்தனைகள் என்ன?

பரப்பு அதிகமிருத்தல், நல்ல காற்றோட்டமிருத்தல், வெப்பநிலை சீராக இருத்தல்.

84. ஆவியழுத்தம் என்றால் என்ன?

நீர்மம் அல்லது திண்மத்தோடு சமநிலையிலிருக்கும் ஆவியின் அழுத்தம்.

85. டால்டன் ஆவியழுத்த விதிகளைக் கூறு.

1. ஒரு நீர்மத்தின் நிறையாவி அழுத்தம் பருமனைப் பொறுத்ததன்று. அதாவது, அது பாயில் விதிக்கு உட்பட்டதன்று.

2. ஓர் நீர்மத்தின் நிறையாவியழுத்தம் வெப்பநிலை உயர்வுக்கு நேர்வீதத்தில் இருக்கும்.

3. வேதிவினையாற்றாத வளிக்கலப்பினால் ஒரு நீர்மத்தின் நிறையாவி அழுத்தம் மாறுபடுவதில்லை.

4. பல நீர்மங்களால் ஏற்படும் நிறையாவி அழுத்தம் அவற்றின் தனித்தனி அழுத்தங்களின் கூடுதலாகும்.

5. வெவ்வேறு நீர்மங்களின் நிறையாவி அழுத்தம் வெவ்வேறு அளவுகளில் இருக்கும்.

86. பெர்சிலியஸ் கருதுகோள் என்றால் என்ன?

ஒரே வெப்ப அழுத்த நிலைகளில் பருமனளவுள்ள எல்லா வளிகளும் சம எண்ணிக்கையுள்ள அணுக்களைக் கொண்டிருக்கும். வளிகளின் பருமனளவுகளுக்கும் அவைகளிலுள்ள அணுக்களுக்குமுள்ள உரிய தொடர்பை இக்கருதுகோள் கூறுகிறது.