அறிவியல் வினா விடை-இயற்பியல்/கதிர்வீச்சு



9. கதிர்வீச்சு

1. கதிர் வீச்சு என்றால் என்ன?

அலையாகவோ துகளாகவோ ஆற்றல் செல்லுதல். எ-டு. ஒளி வீச்சு, ஆல்பா கதிர்கள், பீட்டா கதிர்கள்.

2. கதிர்வீச்சின் பல வகைகள் யாவை?

அகச் சிவப்புக் கதிர்வீச்சு, விண்கதிர் வீச்சு, வன் கதிர் வீச்சு, புற ஊதாக் கதிர்வீச்சு எனப் பலவகை.

3. கதிர்வீச்சின் பயன்கள் யாவை?

1. நோய்களைக் குணப்படுத்த 2 அடிப்படை ஆய்வுகளில் பயன்படுதல். 3. தொல்பொருள்கள் வயதை உறுதி செய்ய.

4. கதிர்வீச்சு வேதிஇயல் என்றால் என்ன?

கதிர்வீச்சால் தூண்டிய விளைவுகளை ஆராயுந்துறை. எ-டு. வேதிச்சிதைவு, பலபடியாக்கல்.

5. கதிர்வீச்சு எண்ணி என்றால் என்ன?

அணு இயற்பியலில் ஒளியன்களின் தனித்துகள்களைப் பிரித்தறியும் கருவி.

6. கதிரியக்கம் என்றால் என்ன?

சில தனிமங்கள் தாமாகச் சிதைந்து மின்னேற்றக் கதிர்களை வெளிவிடும். இந்நிகழ்ச்சி கதிரியக்கம் ஆகும்.

6.(அ) கதிரியக்கம் என்னும் சொல்லைப் பயன்படுத்தியவர் யார்?

மேரி கியூரி, 1898

7. கதிரியக்க வகைகளையும் அவற்றைக் கண்டுபிடித்தவர் களையும் கூறுக?

1. இயற்கைக் கதிரியக்கம் -பெக்கரல் 1896 2. செயற்கைக் கதிரியக்கம் - ஐரின், பிரடெரிக் ஜூலியன் கியூரி.

8. கதிரியக்கத் தனிமங்கள் யாவை?

ரேடியம், தோரியம், யுரேனியம்.

9. கதிரியல் என்றால் என்ன?

மருத்துவத் துறையில் பயன்படுமாறு கதிரியக்கத்தையும் கதிர்வீச்சையும் ஆராய்தல்.

10. கதிரியல் பகுப்பு என்றால் என்ன? 

காமா கதிர்கள், எக்ஸ் கதிர்கள் முதலியவை அடங்கிய உயர் ஆற்றல் கதிர்வீச்சால் ஏற்படும் வேதிச் சிதைவு.

11. கதிரியல்மானி என்றால் என்ன?

வெளியாகும் கதிர்வீச்சாற்றலை அளக்கப் பயன்படும் கருவி.

12. கதிரியல் தொலைநோக்கி என்றால் என்ன?

வானொலி அதிர்வெண்களின் மின்காந்த கதிர் வீச்சை அளக்கவும் கண்டறியவும் பயன்படுதல்.

13. கதிரியல் பண்டுவம் என்றால் என்ன?

எக்ஸ் கதிர்கள், கதிரியக்கம் முதலியவை அடங்கிய கதிர்வீச்சினைப் புற்றுநோய், தோல் நோய் முதலிய வற்றை நீக்கப் பயன்படும் பண்டுவம்.

14. கதிரியல் சாளரம் என்றால் என்ன?

வானொலி அதிர்வெண்ணிலுள்ள மின்காந்த நிறமாலைப் பகுதி.

15. அயனியாக்கும் கதிர்வீச்சு என்றால் என்ன?

ஒரு தொகுதியில் அயனிகளை உண்டாக்கவும் அயனியாக்கவும் தேவைப்படும் ஆற்றலைக் கொண்ட கதிர்வீச்சு.

16. அகச்சிவப்புக் கதிர்வீச்சு யாவை?

மின்காந்தக் கதிர்வீச்சு. கண்ணிற்குப் புலப்படாதது. நிற மாலையில் நிறத்திற்கு அப்பால் இருப்பது.

17. இதைக் கண்டறிந்தவர் யார்?

வில்லியம் ஹர்ஷல், 1800.

18. இதன் பயன் யாது?

வானிலை ஆராய்ச்சியிலும் வானவெளி ஆராய்ச்சியிலும் பயன்படுவது.

19. ஆல்பா கதிர்கள் என்றால் என்ன?

இவை விரைந்து செல்லும் ஆல்பா துகள்களாலானவை.

20. ஆல்பா துகள் என்றால் என்ன?

பல கதிரியக்கத் தனிமங்களால் உமிழப்படும் இம்மி, (4) ஈலியக் கருவோடு ஒத்தமையும் இரு அல்லணுக்கள் இரு முன்னணுக்கள் ஆகியவற்றாலானது. 

21. ஆல்பா, பீட்டா கதிர்களுக்கு அப்பெயரிட்டவர் யார்?

ரூதர்போர்டு.

22. ஆல்பா சிதைவு என்றால் என்ன?

கதிரியக்கச் சிதைவு. இதில் அணுக்கரு தானாக ஆல்பா துகள்களை உமிழும்.

23. பீட்டா கதிர்கள் என்றால் என்ன?

அதிக ஊடுருவும் ஆற்றலுள்ள பீட்டா துகள்களின் சுழற்சியாகும்.

24. பீட்டா சிதைவு என்றால் என்ன?

பீட்டா துகள் வெளிப்படுத்தும் கதிரியக்கச் சிதைவு.

25. காமாகதிர்கள் என்பவை யாவை?

இவை மிகக் குறுகிய அலை நீளமும் உயர் ஆற்றலும் கொண்டவை. மின் காந்தக் கதிர்வீச்சு. ஊடுருவும் தன்மை அதிகம்.

26. மின் காந்த நிறமாலை என்றால் என்ன?

மின் காந்தக் கதிர்வீச்சின் அதிர்வெண்கள் அல்லது நீளங்களின் மொத்த எல்லை.

27. இந்நிறமாலையில் அடங்குபவை யாவை?

எக்ஸ் கதிர்கள், புற ஊதாக் கதிர்கள், அகச் சிவப்புக் கதிர்கள், வானொலி அலைகள்.

28. எக்ஸ் கதிர் (ஊடுகதிர்) என்றால் என்ன?

மிகக் குறுகிய அலை நீளமுள்ள கதிர். ஒளிக்கதிர் புகாப் பொருள்களிலும் ஊடுருவது. எலும்பில் ஊடுருவாது.

29. இதைக் கண்டறிந்தவர் யார்?

இராண்டஜன், 1895.

30. எக்ஸ்.கதிர் வானியல் என்றால் என்ன?

புவிக் காற்று வெளியிலுள்ள எக்ஸ் கதிர் மூலங்களை ஏவுகணைகள் விண்குமிழிகள் வாயிலாகவும் அதற்கு அப்பால் உள்ளவற்றைச் செயற்கை நிலாக்கள் மூலமாகவும் ஆராய்தல்.

31. இத்துறை எப்பொழுது உருவாகியது?

1962இல் நடைபெற்ற ஏவுகனைப் பறப்பில் முதல் கதிரவன் சாரா எக்ஸ் கதிர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதிலிருந்து இப்புதுத்துறை உருவாகி வளர்ந்து வருகிறது.

32. எக்ஸ் கதிர்வீச்சு என்றால் என்ன?

ஊடுருவும் மின்காந்தக் கதிர்வீச்சு புற ஊதாக் கதிர்வீச்சு அதிர்வெண்களுக்கும் காமா கதிர் வீச்சு அதிர்வெண்களுக்கும் இடைப்பட்டது.

33. எக்ஸ் கதிர்ப்படிக வரைவியல் என்றால் என்ன?

படிகங்கள் மூலம் செங்கதிர் விளிம்பு விளைவுகளைப் பயன்படுத்தல்.

34. இதன் பயன் யாது?

பெரிய மூலக்கூறுகளான டிஎன்ஏ, ஆர்என்ஏ ஆகிய வற்றின் அமைப்பை உறுதி செய்யப் பயன்படுவது.

35. எக்ஸ் கதிர்மூலங்கள் என்பவை யாவை?

எக்ஸ் கதிர் தலைவாய்கள். கதிரவன் குடும்பத்திற்குப் புறத்தே உள்ளவை.

36. விண்மீன் கூட்டத்தில் உள்ள எக்ஸ் கதிர் மூலங்கள் எத்தனை?

100க்கு மேற்பட்ட மூலங்கள் உள்ளன.

37. புற ஊதாக்கதிர்வீச்சு என்றால் என்ன?

இது மின்காந்தக் கதிர்வீச்சு. நிறமாலையில் ஊதா நிறத்திற்கு அப்பால் தெரிவ. கண்ணுக்குப் புலப்படாதது. இதைக் கண்டறிந்தவர் ஜொகான் ரிட்டர், 1801.

38. இதன் பயன் யாது?

மருத்துவத் துறையிலும் உணவுத் துறையிலும் பயன்படுவது.

39. மீஊதாக்கதிர் நுண்ணோக்கி என்றால் என்ன?

ஒளியூட்டலுக்கு மீஊதாக்கதிர்வீச்சைப் பயன்படுத்தும் நுண்ணோக்கி.

40. இதிலுள்ள இரு வில்லைகள் யாவை?

கல்ம (குவார்டஸ்) வில்லைகள், நுண்வில்லைகள்.

41. விண்கதிர்கள் என்றால் என்ன?

விண்வெளியிலிருந்து தோன்றுங் கதிர்கள்; குறிப்பிடத் தக்க மாற்றங்களை உண்டாக்குபவை. இவை வானவெளிப் பயணத்திற்குத் தடையாக இருப்பவை. இவற்றைச் செயற்கை நிலாக்கள் பல ஆராய்ந்த வண்ணம் 

உள்ளன. இன்னும் இவை முழுமையாக ஆராயப்படாத கதிர்களே.

42. விண் பின்னணிக் கதிர்வீச்சை ஆராய அனுப்பப்பட்ட செயற்கைநிலா யாது?

விண்பின்னணி ஆராய்வி (COBE). 1980இல் ஏவப்பட்டது இக்கதிர்வீச்சில் அலைகள் உள்ளன, 1992.

43. ஹபிள் வானத்தொலைநோக்கி எப்பொழுது ஏவப்பட்டது? ஏன்?

விண்ணகத்தை விரிவாக ஆராய 1990இல் ஏவப்பட்டது.

44. வன்கதிர்வீச்சு என்றால் என்ன?

மீயாற்றல் ஒளியன்களைக் கொண்ட கதிர்வீச்சு. ஒளித்துகள்களே ஒளியன்கள் ஆகும். உலோகங்கள் உள்ளிட்ட எல்லாப் பொருள்களிலும் ஊடுருவ வல்லவை.

45. ஆற்றல் வளங்கள் யாவை?

நிலக்கரி, மின்சாரம் முதலியவை. இவை பெருந்தொழில் வளங்களாகும்.

46. செந்தழல்மானி என்றால் என்ன?

கதிர்வீச்சு விதிகளைப் பயன்படுத்தித் தொலைவிலுள்ள மீவெப்பநிலைகளைப் பதிவு செய்யும் கருவி.

47. செந்தழல் அளவை என்றால் என்ன?

செந்தழல் மானியைக் கொண்டு கதிர்வீச்சு உமிழும் உயர்வெப்பநிலைகளை அளப்பது.

48. செந்தழல் நோக்கி என்றால் என்ன?

கதிர்வீச்சு வெப்பத்தின் செறிவை அளக்கப் பயன்படுங் கருவி.

49. செந்தழல் மின்விளைவு என்றால் என்ன?

சில படிகங்களைச் சமமற்ற நிலையில் சூடாக்கும் பொழுது அல்லது குளிர்விக்கும்பொழுது மின்னேற்றங்களை உண்டாக்குதல்.

50. கரும்பொருள் என்றால் என்ன?

எல்லாப் படுகதிர்வீச்சுகளையும் உறிஞ்சும் பொருள்.

51. கரும்பொருள் கதிர்வீச்சு என்றால் என்ன?  கரும்பொருளிலிருந்து குறிப்பிட்ட வெப்பநிலையில் வெளியேறும் கதிர்வீச்சு.

52. கருவொளி என்றால் என்ன?

ஒளிர்பொருள்களில் விழும் புறஊதாக் கதிர்கள். இவை புலப்படா ஒளியாகும்.

53. கரிக்காலக் கணிப்பு என்றால் என்ன?

தொல்பொருள்களின் வயதைக் கரி-14ன் அடிப்படையில் உறுதிசெய்தல்.

54. காலக்கணிப்பு நுட்பங்கள் யாவை?

தொல்லுயிர்ப்படிவங்கள், தொல்பொருள் படிவங்கள், பாறைகள் ஆகியவற்றின் வயதை உறுதி செய்யும் முறைகள். இதை உருவாக்கியவர் பிராங்க் லிபி, 1947.

55. இம்முறையின் இருவகைகள் யாவை?

1. சார்புக் காலமறி நுணுக்கம் - மற்ற மாதிரிகளோடு ஒப்பிட்டு ஒரு மாதிரியின் வயதை உறுதிசெய்தல்.

2. சார்பிலாக் காலமறி நுணுக்கம் - நம்புமையுள்ள கால அளவைக் கொண்டு வயதை உறுதி செய்தல்.