அறிவியல் வினா விடை-வேதியியல்/இயற்பியல் வேதியியல்
1. பகுப்பு என்றால் என்ன?
- ஒரு மாதிரியின் பகுதிப்பொருள்களை உறுதி செய்யும் முறை.
2. இதன் வகைகள் யாவை?
- பருமனறி பகுப்பு - வினைபடு பொருள்களின் பருமன்களை அளத்தல்.
- அளவறிபகுப்பு - ஒரு சேர்மத்தில் இருக்கும் பல தனிமங்களின் அளவை மதிப்பிடுதல்.
3. அளவறிபகுப்பு என்றால் என்ன?
- தனிமங்களைக் கண்டறிந்த பின், ஒரு கரிமப் பொருளின் மூலக்கூறு அமைப்பை அறியும் அடுத்த நிலை. செயல் முறை வேதிஇயலின் ஒரு பிரிவு.
4. பண்பறிபகுப்பு என்றால் என்ன?
- செயல்முறை வேதிஇயலில் ஒரு பிரிவு. இதன் நோக்கம்
- ஒரு மாதிரியின் அதிக பகுதிகளை அடையாளங் கண்டறிதலாகும்.
5. தரம் பார்த்தல் என்றால் என்ன?
- பருமனறி நுணுக்கம். இதில் செறிவு தெரிந்த ஒரு கரைசல் செறிவு தெரியாத ஒரு கரைசலோடு முடிவு நிலை தெரியும் வரை சேர்க்கப்படுகிறது. இஃது இயற்பியல் வேதியியலில் ஒர் அடிப்படைச் செயல்முறை.
6. இயல்மை (நார்மாலிட்டி என்றால் என்ன?
- ஒரு லிட்டர் கரைசலில் உள்ள கிராம் சமான எடைகளின் எண்ணிக்கை.
- ஒரு லிட்டர் கரைசலில் கரை பொருளின் எடை
- கரைபொருளின் கிராம் சமான எடை
7. இயல்புக்கரைசல் என்றால் என்ன?
- ஒரு கிராம் சமான எடையுள்ள கரைபொருள் 1 லிட்டர் கரைப்பானில் கரைந்திருத்தல்.
8. கிராம் அயனி என்றால் என்ன?
- ஒர் அயனியிலுள்ள அணு எடைகளின் தொகை. கிராமில் கூறப்படுவது.
9. கிராம் மூலக்கூறு எடை என்றால் என்ன?
- ஒரு தனிமம் அல்லது சேர்மத்தின் மூலக்கூறு ஒன்றின் எடை, ஒரு அய்டிரஜன் அணுவின் எடையை விட எத்தனை மடங்கு கனமாக உள்ளதோ, அந்த எண்ணிக்கை அத்தனிமத்தின் அல்லது சேர்மத்தின் மூலக்கூறு எடை எனப்படும்.
மூலக்கூறு எடை = பொருளின் மூலக்கூறு ஒன்றின் எடை
அய்டிரஜன் அணு ஒன்றின் எடை
10. மோல் என்பதை வரையறு.
- தூய கார்பன்12 இன் 12 கிராம்களில் எத்தனை அணுக்கள் உள்ளனவோ அத்தனை அடிப்படைத் துகள்கள் உள்ள பொருளின் அளவு. இங்குத் துகள்கள் என்பவை அணு, அயனி, மூலக்கூறு, படிமூலி ஆகியவற்றைக் குறிக்கும். அதாவது, ஒரு மோல் 6.022045 x 1023 அடிப்படைத் துகள்களைக் கொண்டிருக்கும்.
11. மோலமை என்றால் என்ன?
ஒரு கிலோகிராம் தூய கரைப்பானிலுள்ள கரை பொருளின் மோல்களின் எண்ணிக்கை. மோலால் என்பது கரைபொருளின் எடையைக் குறிப்பது.
12. மோலாரிமை என்றால் என்ன?
ஒரு லிட்டர் கரைசலிலுள்ள கரைபொருளின் மோல்களின் எண்ணிக்கை. மோலார் என்பது கரைபொருளின் பருமனைக் குறிப்பது.
13. மோல் பின்னம் என்பது என்ன?
ஒரு கரைசலிலுள்ள ஒரு பொருளின் மோல்களின் எண்ணிக்கைக்கும் அக்கரைசலிலுள்ள அனைத்துப் பொருள்களின் மோல்களின் எண்ணிக்கைக்கும் உள்ள வீதம். இதற்கு அலகில்லை வெறும் எண்.
14. இணைதிறன் என்றால் என்ன?
ஓர் அணு மற்றொரு அணுவோடு சேருந்திறன் அல்லது மற்றொரு அணுவை விலக்குத் திறன். இத்திறன் அணுக்களுக்குத் தக்கவாறு வேறுபடும். இது ஒரு முழு எண்.
15. சில தனிமங்களின் இணைதிறன் யாது? அய்டிரஜன் 1, அக்சிஜன் 2, நைட்ரஜன் 3, கரி 4, பாசுவரம் 5, கந்தகம் 6
16. ஆவியடர்த்தி என்றால் என்ன?
ஒரே பருமனுள்ள அய்டிரஜன் நிறைக்கும் குறிப்பிட்ட பருமனுள்ள பொருளின் நிறைக்கும் உள்ள வீதம். ஒத்த வெப்பநிலையிலும் அழுத்தத்திலும் அளக்கப்படுவது. அய்டிரஜன் அடர்த்தியினை 1 என்று கொள்ள, வளியின் சார்பு மூலக்கூறு நிறையின் பாதிக்கு இவ்வீதம் சமமாகும். (1 : 1/2)
17. குறிப்பி என்றால் என்ன?
ஒரு வேதிச்செயலை ஆராயப் பயன்படும் கதிரியக்கக் கருவைடு என்னும் வேதிப் பொருள்.
18. குறியிட்ட சேர்மம் என்றால் என்ன? ஓர் அணுவின் கதிரியக்க ஓரிமத்தால் அதன் நிலையணு பெயர்க்கப்படும் சேர்மம்.
19. குறியிடல் என்றால் என்ன?
ஓரிமங்களைக் கொண்டு உயரிய வேதிவினைகளை ஆராயும் நுணுக்கம், காட்டாக, ஒரு கதிரியக்க ஓரிமத்தைக் கொண்டு அணுக்களைப் பதிலீடு செய்து ஒரு சேர்மத்தைத் தொகுக்க இயலும். பின் உண்டாகும் கதிரியக்கத்தைக் கொண்டு அச்சேர்மத்தில் நடைபெறும் வினைப்போக்கைப் பின்தொடரவும் இயலும்.
20. தொகை சார்பண்புகள் யாவை?
1. ஆவி அழுத்தத்தைக் குறைத்தல்
2. கொதிநிலையை உயர்த்துதல்.
3. உறைநிலையைத் தாழ்த்தல்.
4. ஊடுபரவழுத்தம்
21. மின்னிணை என்றால் என்ன?
இரு அணுக்களிடையே பகிர்ந்து கொள்ளப்படும் மின்னணுக்கள். இது ஒற்றை இணைப்பிணைப்பை உண்டாக்குவது.
22. பிரிகை, பிரிகை மாறிலி என்றால் என்ன?
ஒரு மூலக்கூறு இரு மூலக்கூறுகளாகிய அணுக்களாகவும் படிமூலிகளாகவும் பிரிதல். இவ்வினையின் நடுநிலை மாறி, பிரிகை மாறிலி எனப்படும்.
23. வீதமாறிலி என்றால் என்ன?
ஒப்பு வினைத்தகவு (K). ஒரு வேதிவினைக்குரிய வீத வெளிப்பாட்டின் வீதப் பொருத்த மாறிலி.
24. வினைவீதம் என்றால் என்ன?
ஓரலகு நேரத்தில் ஒரு வேதிவினையில் செலவழியும் வினைபடுபொருளின் அளவை.
25. மின்வேதி இணைமாற்று என்றால் என்ன?
ஒரு கூலும் மின்சாரத்தை மின்பகுளிக் கரைசல் வழியாகச் செலுத்தும்பொழுது, விடுபடும் தனிமத் தொகுதி. அல்லது தனிமக் கிராம்களின் எண்ணிக்கை அல்லது 1ஆம்பியர் மின்னோட்டத்தில் 1 வினாடியில் மின்னாற்பகுப்பு மூலம் வெளியேறும் உலோகத்தின் நிறை.
26. அணியமைவு (லேட்டெக்ஸ்) என்றால் என்ன?
புள்ளிகளின் முப்பரும ஒழுங்கமைவு. படிகத்திண்மத்திலுள்ள துகள்களின் (அணுக்கள், அயனிகள், மூலக்கூறுகள்) நிலைகளை விளக்க இது பயன்படுவது. எக்ஸ் கதிர் விளிம்பு விளைவு நுணுக்கங்களால் அணியமைவை ஆராயலாம்.
27. அணி அமைவு ஆற்றல் (லேட்டெக்ஸ் எனர்ஜி) என்றால் என்ன?
குறிப்பிட்ட படிகத்தின் ஒரு மோல் அளவை உண்டாக்க முடிவற்ற தொலைவலிருந்து எதிர்மின்னேற்றமுள்ள அயனிகளை ஒரு சேரக்கொண்டு வரும்பொழுது விடுவிக்கப்படும் ஆற்றல். ஒரு வளியிலுள்ள அயனிகளுக்குச் சார்பான நிலையில் ஒரு திண்மப் பொருளின் நிலைப்புத்திறனின் அளவே இவ்வாற்றல்.
28. அயல்வேற்றுருக்கள் என்றால் என்ன?
கெட்டிப் பொருள்களின் வேறுபட்ட இயல்பு வடிவங்கள். எ-டு. கரியின் வேற்றுருக்கள் வைரம், கிராபைட்
29. வேற்றுருமை என்றால் என்ன?
இயற்பண்புகளில் மாறுபட்டுப் பல வடிவங்களில் இருக்கும் ஒரு தனிமம் தன் வேதிப்பண்புகளிலும் மூல அமைப்பிலும் மாறாமல் இருக்கும் இயல்பு. புறவேற்றுமை என்றுங் கூறலாம். எ-டு. சாய்சதுரக்கந்தகம், ஊசி வடிவக்கந்தகம், களிக்கந்தகம்.
30. தொடுவேற்றுருமை என்றால் என்ன?
சில கூழ்மங்கள் பெற்றிருக்கும் பண்பு. குலுக்கும்பொழுது அவை நீர்மமாகும். குலுக்கல் நின்றபின், அவை மீண்டும் படியத் தொடங்கும். எ-டு வண்ணக்குழம்பு.
31. இயக்க அயல் வேற்றுருமை என்றால் என்ன? இதில் வேற்றுருக்கள் ஒன்றோடு மற்றொன்று இயக்கச் சமநிலையில் இருக்கும்.
32. எதிர்வேற்றுருமை என்றால் என்ன?
ஒரு தனிமத்தின் வேறுபட்ட நிலைத்த அயல் வேற்றுருக்கள் வேறுபட்ட வெப்பநிலைகளில் அமைந்திருத்தல்.எ-டு. கந்தகம். இதைப் புறவேற்றுமை என்றுங் கூறலாம்.
33. உலோகப்போலி என்றால் என்ன?
உலோகப் பண்பையும் அலோகப் பண்பையும் பெற்றிருப்பது.எ-டு. சவ்வீரம், அண்டிமனி.
34. உள்ளீட்டு வெப்பம் என்றால் என்ன?
H. ஒரு தொகுதியின் பருமன் (V) அழுத்தம் (P) ஆகிய இரண்டின் பெருக்குத் தொகையோடு அதன் உள்ளாற்றலை (V) சேர்க்க வரும் கூடுதல். H=U+ PV, சுருக்கமாக இதனை ஒரு பொருளின் வெப்ப அடக்கம் எனலாம்.
35. மாற்றீட்டு வெப்பம் என்றால் என்ன?
மீள்மாற்றம் பெறும் ஒரு தொகுதியில் மாறுவெப்பமடைதலின் வரையறை இதுவே. உறிஞ்சப்பட்ட வெப்பத்தை வெப்ப இயக்க வெப்பநிலையால் வகுத்துக் கிடைக்கும் ஈவாகும்.
36. மாற்றீட்டு வெப்பப்படம் என்றால் என்ன?
மாற்றீட்டு வெப்பங்களைக் காட்டும் படம்.
37. நிற வரைவியல் என்றால் என்ன?
பொருள்களைப் பகுத்துப் பார்க்கும் முறை. பல கூட்டுப் பொருள்களைத் தேர்வுமுறையில் பிரிந்து அவற்றை இனங்காணல்.
38. இதன் வகைகள் யாவை?
1. தாள் நிறவரைவியல். 2. மென்படல நிற வரைவியல், வளிநீர்ம வரைவியல். 4. பிரிப்பு நிற வரைவியல் எனப்பலவகை.
39. வேறுபடுவினை என்றால் என்ன?
ஒரே பொருளின் ஏற்றமும் இறக்கமும் ஒரே சமயம் நடைபெறும் வினை.
2CaCl + Cu+CuCl2
40. வினைப்படுத்தி என்றால் என்ன?
வினைநிகழ்த்தி. வேதிவினையில் ஈடுபடும் பொருள். எ-டு. கந்தகக்காடி
41. வினை என்றால் என்ன?
வேதிவினை. எ-டு. துருப்பிடித்தல்.
42. வினையாக்கிகள் என்றால் என்ன? குறிப்பிட்ட வேதிவினைகளை உண்டாக்கும் பொருள்கள். வேதியியல் ஆய்வுகளில் பயன்படுபவை. எ-டு. குளோரின்.
43. வினைமிகுபுலம் என்றால் என்ன?
வினையூக்கியில் மேற்பரப்பில் வினைநிகழுமிடம்.
44. பக்கவினை என்றால் என்ன?
முதன்மை வினைபோலவே வரையறுக்கப்பட்ட அளவுக்கு நடைபெறும் வேதிவினை.
45. இருநிலை விரும்பிகள் என்றால் என்ன?
நீர் வெறுப்பன, நீர் விரும்புவன என்னும் மூலக்கூறுகள்.
46. ஈரியல்பு ஆக்சைடு என்றால் என்ன?
காடியாகவும் உப்பு மூலியாகவும் வினையாற்றும் ஆக்சைடு எ-டு. துத்தநாக ஆக்சைடு.
47. கருவன்கள் (நியுகிளியான்கள்) என்றால் என்ன?
முன்னணுக்களுக்கும் அல்லணுக்களுக்கும் பொதுவாக வழங்கும் பெயர். எல்லா அணுக்கருக்களிலும் உள்ளவை.
48. கருவன் எண் (நியுகிளியான் எண்) என்றால் என்ன?
ஓர் அணுக்கருவிலுள்ள கருவன்களின் எண்ணிக்கை.
49. அயனிமுடமாதல் என்றால் என்ன?
ஒரு கரைசலிலுள்ள அயனியோடு அணைமம் (காம்ளக்ஸ்) தோன்றுவதால், அந்த அயனி தன் இயல்பான செயலை இழத்தல். அயனிமுடமாக்கிகள் தீங்கு நீக்கும் பொருள்கள்.
50. ஈந்தி (லிகண்ட்) என்றால் என்ன? ஈதல் மூலக்கூறு. ஓரிணை மின்னணுக்களை வழங்கி ஈதல் பிணைப்பை உண்டாக்கும் மூலக்கூறு அல்லது அயனி.
51. படிமூலி (ரேடிகல்) என்றால் என்ன?
ஒரு தனி அணுபோல் நடக்கும் அணுத்தொகுதி. ஒரு சேர்மத்திலிருந்து மற்றொரு சேர்மத்திற்குச் செல்லும்பொழுது மாறாதிருப்பது.
52. சிறுபடி (ஆலிகோமர்) என்றால் என்ன?
ஒப்பிடத்தக்க வகையில் ஒரு மூலக்கூறில் சிறிய ஒருபடி அலகுகளைக் கொண்டது.
53. கட்டவிழ்படிமூலி என்றால் என்ன?
ஒற்றை மின்னணுவுள்ள அணு அல்லது அணுத்தொகுதி.
54. ஈரயனி என்றால் என்ன?
இருமுனை அயனி. நேர்மின்னேற்றமும் எதிர்மின்னேற்றமுங் கொண்டது.
55. மூவணு என்றால் என்ன?
அணுக்கரு ஒரு முன்னணுவையும் இரு நடுநிலையணுக் களையுங் கொண்டது.
56. புறப்பெருக்கம் என்றால் என்ன?
ஒரு பொருள் புறச்சேர்ப்புப் பொருள்களால் அளவில் பருத்தல். எ-டு. படிகவளர்ச்சி.
57. வளியோட்டம் என்றால் என்ன?
ஒரு சிறுதுளை வழியே மூலக்கூறுகள் செல்லுதல்.
58. சீராக்கல் என்றால் என்ன?
நேர்த்தொடர் அய்டிரோகார்பன்களை வளையச் சேர்மமாக்குதல். வினையூக்கி பிளாட்டினம்.
59. வேதிப்போர் என்றால் என்ன?
போர் வினைகளில் வேதியாற்றலைப் பயன்படுத்துதல். எ-டு குளோரின். ஆனால், குண்டுகளில் இயல்பாற்றலே பயன்படுகிறது.
60. வேதி ஒளிர்வு என்றால் என்ன?
வெப்பநிலையில் எவ்வகைத் தோற்ற மாறுபாடுமில்லாமல், ஒரு வேதிவினையில் உமிழப்படும் ஒளி.இதில் சிறிது வெப்பம் உடனிகழ்ச்சியாக இருக்கும். எ-டு. மக்னீசியத்தைக் காற்றில் எரிக்கக் கண்தூசு ஒளி உண்டாகும்.
61. மீள்மாற்றம் என்றால் என்ன?
ஒரு தொகுதியின் அழுத்தம், பருமன் முதலிய பண்புகளில் ஏற்படும் மாற்றம். இதில் மாற்றம் முழுவதும் தொகுதியில் நடுநிலையில் இருக்கும்.
62. மீள்மாறுவினை என்றால் என்ன?
முதல் நிலையிலிருந்து மாறுநிலைக்கும் மாறுநிலையிலிருந்து முதல் நிலைக்கும் உட்படும் விதிவினை.
N2+ 3H2⇔ ZNH3
63. பசைத்தொங்கல் என்றால் என்ன?
சேறு. நீர்மத்தில் தொங்கும் திண்மத் துகள்களின் மெல்லிய பசை.
64. கூழ்மம் என்றால் என்ன? வகை எத்தனை?
இது ஒரு படித்தான தொகுதி. 1. திண்மம் -மணிகள். 2. நீர்மம் - தயிர். 3. வளி - புகை.
65. கூழ்மத்தின் பயன்கள் யாவை?
1. கூழ்மத்தங்கமும் கால்சியமும் ஊட்டமருந்துகள்.
2. கூழ்மவெள்ளி நுண்ணுயிர்க்கொல்லி.
3. மக்னீசியப் பால் வயிற்றுக்கோளாறுகளுக்கு மருந்து.
66. இடுக்கிணைப்பு என்றால் என்ன?
உலோக ஒருங்கிணை அசைவு. கொடுக்கிணைப்பு என்றுங் கூறலாம்.
67. ஓரகப்பண்புடைமை (ஒருபடித்தான) என்றால் என்ன?
ஓர் ஊடகத்தின் அளக்கப் பெற்ற இயல்பண்பு திசையைச் சாராதிருக்கும் பண்பு. இத்தகைய பொருள்கள் ஓரகப் பண்பிகள்.
68. மேல் ஒருபடிச் சீரியம் (ஐசோமெரிசம்) என்றால் என்ன?
ஒருபடிச் சீரியத்தின் ஒருவகை. இதில் மேல் ஒருபடிச்சீரிகள் ஓஎச் தொகுதி நிலைகளில் வேறுபடும். எ-டு. குளுகோசின் ஆல்பா பீட்டா வடிவங்கள்.69. ஓரகச் சீரியம் (ஐசோமெரிசம்) என்றால் என்ன?
மாற்றியம். கரிமச்சேர்மங்களின் சிறப்பியல்பு. ஒரே மூலக்கூறு வாய்பாடு வெவ்வேறு பண்புகளைக் கொண்டது. இரண்டிற்கு மேற்பட்ட சேர்மங்களைக் குறிப்பது. எ-டு: C2H4O.
70. ஓரகச்சீர்மங்கள் (ஐசோமெர்கள்) என்றால் என்ன? C2H4O என்னும் மூலக்கூறு வாய்பாடு எதில் ஆல்ககாலையும் இருமெதில் ஆல்ககாலையும் குறிக்கும். இத்தகைய சேர்மங்களில் ஒரகச் சேர்மங்கள் எனப்படும் கரியின் சேர்மங்கள் மிகுதியாக இருப்பதற்கு இவ்வியல்பே காரணமாகும்.