அறிவியல் வினா விடை-வேதியியல்/உலோகம்

10. உலோகம்

1. தனிம வரிசை அட்டவணை என்றால் என்ன?

தனிம வரிசை விதிப்படி அமைந்த அட்டவணை. பழைய பெயர் ஆவர்த்தன அட்டவணை.

2. இவ்வட்டவணையின் சிறப்பு யாது?

இதில் 9 தொகுதிகள் உள்ளன. இது தனிமப் பண்புகளை நன்கு விளக்குவது. கனிம வேதியியல் ஆராய்ச்சிக்கும் பெரிதும் பயன்படுவது. இதன் நீள்வடிவத் தனிம வரிசை அட்டவணை, வேதியியலில் ஒரு விவிலிய நூல் ஆகும்.

3. தாதுக்கூளம் என்றால் என்ன?

மண், பாறை முதலிய பயனற்ற பொருள்கள் அடங்கிய தாதுக்கள்.

4. தாது என்றால் என்ன?

ஒரு வேதித் தனிமத்தின் கனிமமூலம். எ-டு பாக்சைட் அலுமினியத் தாது.

5. மீ அணுவெண் தனிமங்கள் யாவை?

கதிரியக்க வரிசைத் தனிமங்கள். யுரேனியத்தைக் காட்டிலும் உயர்ந்த அணுவெண்களைக் கொண்டவை. எ-டு. நெப்டுனியம், புளுட்டோனியம். 6. கார உலோகங்கள் என்பவை யாவை?

தனிம வரிசை அட்டவணையிலுள்ள முதல்தொகுதித் தனிமங்கள் - இலித்தியம், சோடியம்.

7. காரமண் என்றால் என்ன?

காரப்புவி உலோக ஆக்சைடு, காரமண் உலோகம்.

8. காரப்புவி உலோகங்கள் என்றால் என்ன?

தனிம வரிசை அட்டவணையில் இரண்டாந் தொகுதித் தனிமங்கள் - கால்சியம், பேரியம்.

9. அருமண்கள் என்றால் என்ன?

அரும்புவித்தனிம ஆக்சைடு, M2O3,

10. அரும்புவித் தனிமங்கள் யாவை?

ஒத்த வேதிப்பண்புகளைக் கொண்ட உலோகத் தனிமத் தொகுதிகள். எ-டு லாந்தனைடு தனிமங்கள், ஸ்கேண்டியம், யெட்ரியம்.

11. நாணய உலோகங்கள் என்பவை யாவை?

செம்பு, வெள்ளி, பொன் ஆகியவை.

12. பெரும்பேற்று உலோகங்கள் யாவை?

பொன், பிளாட்டினம், வெள்ளி ஆகியவை.

13. இவற்றின் பண்புகள் யாவை?

1. அரிமானத்திற்கு உட்படா. 2. காற்றில் பளபளப்பு குறையாது. 3. நீரிலும் காடிகளிலும் கரையாது.

13. அடி உலோகங்கள் யாவை?

மட்ட உலோகங்கள். இரும்பு, காரீயம் முதலியவை.

14. உலோக அரிமானம் என்றால் என்ன?

உலோகம் அல்லது உலோகக்கலவை சுற்றுப்புறத்துடன் வேதிவினை புரிந்து அழிதல். உலோக மேற்பரப்பில் நிகழ்வது.

15. இதைத் துண்டுங் காரணிகள் யாவை?

1. வெப்பநிலை 2. புறப்பரப்பின் தன்மை. 3. காற்றோட்ட வேறுபாடு. 4. நீர் மற்றும் அமிலம். 5. இரும்பில் துத்தநாகமும் செம்பும் இருத்தல்.

16. இதன் வகைகள் யாவை?

1. வேதிவினை அரிமானம், 2. மின்வேதி வினை அரிமானம்.

17. இதன் விளைவுகள் யாவை?

1. உலோகம் எடை குறைதல். 2. வலிமையும் பளபளப்பும் நீங்கல். 3. கட்டுமானப் பணிக்குப் பயன்படாமை. 4. பலகோடி பொருள் இழப்பு.

18. இதை எவ்வாறு கட்டப்படுத்துவது?

1. தார் பூசுதல். 2. மின்னாற்படியன்வத்தல். 3. நாகமுலாம் பூசுதல். 4. வண்ணம் பூசுதல்.

19. மாற்றுத் தனிமமாக்கல் என்றால் என்ன?

அணுக்கருக்களைத் துகள்களில் தகர்ப்பதாலோ கதிரியக்கச் சிதைவினாலோ ஒரு தனிமத்தை மற்றொரு தனிமமாக மாற்றுதல்.

20. பெர்மியம் என்றால் என்ன?

புவியில் இயற்கையாகக் கிடைக்காத கதிரியக்கத் தனிமம். குறுகிய பல ஓரிமங்கள் இதிலிருந்து தொகுக்கப்படுகின்றன.

21. பெரைட் என்றால் என்ன? இரும்புக் காந்தமுள்ள வனைபொருள்கள். மின்கடத்திகள் அல்ல. ஆகவே, உயர் அதிர்வெண்ணுள்ள சுற்றுகளின் காப்பு உள்ளகப் பொருளாகப் பயன்படுவது.

22. லேந்தனத்தின் பயன்கள் யாவை? வெண்ணிறத் தனிமம். எண்ணெய்ப்பிளப்பில் வினையூக்கி. வெப்ப உலோகக் கலவைகளில் பயன்படுவது.

23. ஸ்கேண்டியத்தின் பயன் யாது?

இலேசான எடையுள்ள தனிமம். மீச்செறிவு ஒளிகளில் பயன்படுவது.

24. செலீனியத்தின் பயன்கள் யாவை?

கண்ணாடித் தொழிலில் நிறம் நீக்கியாகவும் வினையூக்கியாகவும் பயன்படுதல். ஒளிமின் கருவிகளிலும் பயன்படுவது.

25. இந்த உலோகத்தின் நான்கு வேற்றுருக்கள் யாவை? 1. உருவமற்ற செந்நிறத்திரள்.

2. உருவமற்ற கறுப்புநிறக் கண்ணாடி போன்ற திரள்.

3. கிச்சிலி சிவப்பு நிறமுள்ள படிகங்கள்.

4. சாம்பல் நிறப் படிகங்கள்.

26. புரோமைடுதாள் என்றால் என்ன?

ஒளிப்படத்தாள். ஒருபக்கம் வெள்ளிப்புரோமைடு பூசப்பட்டு உணர்பகுதியாக இருக்கும். மூலங்களிலிருந்து படி எடுக்கப் பயன்படுகிறது.

27. வெள்ளியின் பயன்கள் யாவை?

பளபளப்பான வெண்ணிற உலோகம், நாணயங்கள், பாண்டங்கள், அணிகலன் முதலியவை செய்யப் பயன்படுவது.

28. வெளிப்புரோமைடின் பயன் யாது?

வெளிறிய மஞ்சள் நிற வீழ்படிவு. ஒளிப்படத்தொழிலில் பயன்படுவது.

29. வெள்ளிநைட்ரேட்டின் பயன்கள் யாவை?

சாய்சதுரப்படிகம். சலவையகத்தில் துணிமணிகளுக்குக் குறியிடவும் மயிர்ச்சாயமாகவும் பயன்படுதல்.

30. செதில் வடிவப் பொன் என்றால் என்ன?

படிக வெள்ளியச் சல்பைடு. பளபளக்கும் பொன்னிறச் செதில்களைக் கொண்டது.

31. ஸ்ட்ரான்ஷியத்தின் பயன்கள் யாவை? வெண்ணிற உலோகம். மத்தாப்புத் தொழிலிலும் சர்க்கரையைத் துய்மைப்படுத்தவும் பயன்படுவது.

32. ஆரிகக்குளோரைடு என்றால் என்ன? பொன் (III) குளோரைடு. மின்முலாம் பூசுவதிலும் ஒளிப்படக் கலையிலும் பயன்படுவது.

33. செதில் படிதல் என்றால் என்ன?

கொதிகலன்களில் நீரிலுள்ள கரைந்த கார்பனேட் கரையாத கார்பனேட்டாக கொதிகலன்களில் அடியில் சேறுபோல் படிதல்.

34. இதன் தீமைகள் யாவை? 1. செதில் ஒர் அரிதில் கடத்தி. ஆகவே, எரிபொருள் செலவு 2. கலன் உருகல், 3. கலனைச் செதில் அரித்தல்.

35. இவற்றை எவ்வாறு போக்கலாம்? கடினநீரைத் தகுந்த வழியில் மாற்றுதல்.

36. செரியத்தின் பயன் யாது?

இத்தனிமம் உலோகக் கலவைகளிலும் கண்ணாடித் தொழிலிலும் பயன்படுகிறது.

37. தாமிரத்தின் பயன்கள் யாவை. அதிகம் பயன்படும் உலோகம். உலோகக்கலவைகள் செய்ய, மின்கலன்கள் அணிகலன்கள் செய்ய, வீட்டுப்பாண்டங்கள் செய்ய.

38. உருக்கு என்றால் என்ன?

தாமிரத் தாதுக்களை உருக்கும்பொழுது இடைநிலையில் கிடைக்கும் பொருள். இரும்பு, செம்பு ஆகியவற்றின் சல்பைடுகள் சேர்ந்த கலவை.

39. தாமிரச் சல்பேட்டின் பயன்கள் யாவை?

பொதுப்பெயர் நீலத்துத்தம். சாயத்தொழிலிலும் மின்முலாம் பூசுதலிலும் மருந்துகள் செய்வதிலும் பயன்படுவது.

40. மயில்துத்தம் என்றால் என்ன?

படிகவடிவச் செம்புச் சல்பேட்டு, பூஞ்சைக்கொல்லி, செம்புமுலாம் பூசப்பயன்படுவது.

41. போர்டோ கலவை என்றால் என்ன? செம்புச் சல்பேட்டும். கால்சியம் ஆக்சைடும் சேர்ந்த கலவை. பூச்சிக்கொல்லி.

42. பேரியம் கார்பனேட்டு என்பது என்ன?

கரையாத வெண்ணிற உப்பு. எலிநஞ்சு.

42. பேரியம் குளோரைடு என்பது என்ன? வெண்ணிறத் திண்ம எலிநஞ்சு, தோல் தொழிலிலும் பயன்படுவது.

43. பேரியம் உணவு என்றால் என்ன?

வாய்வழியாகப் பேரியம் சல்பேட்டை உட்கொளல். இதனால் மேல் இரைப்பை - சிறுகுடல் வழி ஆய்வுக்கு ஏற்றதாகிறது. வேறு பெயர் பேரியக் குடல்கழுவல். 45. பேரியம் சல்பேட்டு என்றால் என்ன?

வெண்ணிறத் திண்மம். மேற்பரப்புப் பூச்சுகளில் நிறமி விரிவாக்கி. மற்றும் கண்ணாடித் தொழிலிலும் பயன்படுவது.

46. பொட்டாசியத்தின் பயன்கள் யாவை?

இது ஒரு கார உலோகம். எல்லா உயிர்ப் பொருள்களிலும் உள்ளது. உலோகக் கலவைகள் செய்யவும், ஒளிமின்கலங்கள் செய்யவும் பயன்படுவது. இதன் உப்புகள் உரங்கள்.

46(அ) பொட்டாசியம் புரோமைடின் பயன்கள் யாவை?

வெண்ணிறப் படிகம். வலித்தணிப்பி, புகைப்படக் கலையில் பயன்படுவது.

46(ஆ) பொட்டாசியம் குளோரேட்டின் பயன்கள் யாவை?

நேர்த்தியான வெண்ணிறக் குச்சிகள். ஆக்சிஜன் ஏற்றி. தீப்பெட்டிகள் செய்யவும் வாணவேடிக்கைப் பொருள்களிலும் பயன்படுவது.

47. பொட்டாசியம் சயனைடின் சிறப்பென்ன?

வெண்ணிறப் படிகம், கொடிய நஞ்சு, மின்முலாம் பூசவும் பொன்னையும் வெள்ளியையும் பிரிக்கவும் பயன்படுவது.

48. பொட்டாசியம் இரு குரோமேட்டின் பயன்கள் யாவை?

கிச்சிலி சிவப்புநிறப் படிகம். ஆக்சிஜன் ஏற்றி, சாயத் தொழில் உற்பத்தியிலும் கண்ணாடித் தொழிலிலும் பயன்படுவது.

49. பொட்டாசியம் அய்டிராக்சைடின் பயன் யாது?

எரிபொட்டாஷ் மென்குளியல் சவர்க்காரங்கள் செய்யப் பயன்படுவது.

50. பொட்டாசியம் அயோடைடின் பயன் யாது?

வெண்ணிறப்படிகம். புகைப்படக் கலையில் பயன்படுவது.

51. பொட்டாசியம் பர்மாங்கனேட்டின் பயன்கள் யாவை?

கரிய ஊதா நிற ஊசிவடிவப் படிகம். தொற்றுநீக்கி. ஆக்சிஜன் ஏற்றி. கரிமவேதிஇயலில் பேயர்ஸ் வினையாக்கி.

52. பொட்டாசியம் நைட்ரேட்டின் பயன்கள் யாவை?

வெடியுப்பு. ஊசிபோன்ற படிகம். வெடிகுழல்துாள், நைட்டிரிகக்காடி, வாணவேடிக்கைப் பொருள்கள் ஆகியவை செய்யப் பயன்படுகிறது.

53. பொட்டாசியம் சோடியம் நைட்ரேட்டின் பயன் யாது?

வெண்ணிறப் படிகம். ரொட்டித்துள் செய்யப் பயன்படுவது.

54. பொட்டாசியம் தயோசைனேட்டின் பயன் யாது?

மருந்துகளும் சாயங்களும் செய்யப் பயன்படுவது. நிறமற்ற நீர்கொள் பொருள்.

55. பொட்டாஷ் என்பது எவற்றைக் குறிக்கும்?

பொட்டாசியம் அய்டிராக்சைடு, பொட்டாசியம் கார்பனேட்

56. பொட்டாஷ் படிகாரம் என்பது என்ன?

அலுமினியம் பொட்டாசியம் சல்பேட்

57. பொட்டாஷ் காக்கைப் பொன்னின் பயன்கள் யாவை?

இது வெண்காக்கைப் பொன். மின்பொருள் உற்பத்தியில் பயன்படுவது. தவிர, வண்ணக்குழைவில் நிரப்பியாகப் பயன்படுவது.

58. குறால் உப்பு என்றால் என்ன?

சோடியம் மெட்டா பாஸ்பேட்டின் படிகம். உருகுநிலை 550°.

59. பிரிசியோடைமியத்தின் பயன்கள் யாவை?

வெள்ளிநிற உலோகம். கண்ணாடித்தொழில், கரிப்பிறைத் துருவு விளக்குகள், உலோகக் கலவைகள் ஆகியவற்றில் பயன்படுதல்.

60. காரீயத்தின் பயன்கள் யாவை?

இது வெண்ணிற உலோகம். மின்கல அடுக்குகள், கம்பிகள், நிறமிகள் முதலியவை செய்யப் பயன்படுவது. இது பல உப்புகளையுங் கொடுக்கவல்லது.

61. லூயிசைட்டு என்றால் என்ன?

யூ.ஜே. லூயி என்பார் ஆங்கிலக் கனிமவியலார். இவர் பெயரால் அமைந்தது லூயிசைட் ஆகும். மஞ்சள்நிறக் கனசதுரக் கனிமம். கால்சியம் டிட்டோனியம் ஆண்டிமொனேட்டு என்பது வேதிப்பெயர்.

62. லாரென்சியம் என்றால் என்ன?

மீ அணுஎண் கொண்ட கதிரியக்கத் தனிமம். புவியில் இயற்கையாகக் கிடைப்பதில்லை. குறுகிய நேரமே இருக்கக்கூடிய பல ஒரிமங்கள் இதிலிருந்து தொகுக்கப்படுகின்றன.

63. இது எதிலிருந்து பெறப்படுகிறது?

கலிபோர்னியத்தைச் சிதைத்துப் பெறப்படுவது.

64. வெண்துத்தம் என்றால் என்ன?

துத்தநாகச் சல்பேட்

65.சீனவெள்ளை என்றால் என்ன? பயன்கள் யாவை?

முத்துவெள்ளை. துத்தநாக ஆக்சைடு. வண்ணக் குழைவிலும் பூசுமருந்திலும் பயன்படுவது.

66. துத்தநாகப் புளோரோ சிலிகேட்டின் பயன்கள் யாவை?

மரப்பாதுகாப்புப் பொருள். பூஞ்சைக்கொல்லி.

67. துத்தநாக ஆக்சைடின் பயன்கள் யாவை?

வெண்ணிற நார்ப்பொருள். மட்பாண்டங்களுக்கு மெருகேற்ற, சீனவெள்ளை துத்தநாகக் களிம்புகளில் புரைஎதிர்ப்பி.

68. இதன் பழைய பெயர் என்ன?

மெய்யறிவாளர் சம்பளம்.

69. துத்தச்சல்பேட்டின் பயன்கள் யாவை?

நீரில் கரையா வெண்ணிறப் படிகம். மின்முலாம் பூசுவதிலும் வெள்ளை வண்ணக் குழம்பிலும் பயன்படுவது.

70. துத்தநாகத்தின் பயன்கள் யாவை?

கடின உலோகம். நாகமுலாம் பூசவும் வெண்கலம் செய்யவும் பயன்படுவது.

71. துத்தநாகத்தின் முதன்மையான தாது எது?

சிங்க பிளண்டு, துத்தநாகச் சல்பைடு.

72. துத்தநாகக் கார்பனேட்டின் பயன் யாது? மென்மையான வெண்ணிறத்துள். காலமைன்கரைசலில் பயன்படுவது. தோல்நோய் மருந்து.

73. துத்தநாகக் குளோரைடின் பயன்கள் யாவை?

அதிகம் நீர் இருக்கும் வெண்ணிறப் பொருள். நீர் நீக்கும் பொருள். மரத்தைப் பாதுகாப்பது. துத்தநாக ஆக்சைடுடன் சேர்ந்த பசை பற்காரையாகப் பயன்படுவது.

74. துத்தச் சல்பைடின் பயன் யாது?

வெண்ணிறப் பொருள். வண்ணக் குழைவுகளில் நிறமி.

75. சிர்கோனியத்தின் பயன்கள் யாவை?

அரிய உலோகம். உலோகக் கலவைகள் செய்யவும் தீச்சுடர்த் தடைச் சேர்மங்கள் செய்யவும் பயன்படுவது.

76. சிர்கோனியம் சிலிகேட்டின் என்றால் என்ன?

சிறிது மஞ்சள் நிறமுள்ளது. நீரில் கரையாது. வெள்ளையாக இருப்பின் மாணிக்கம். நிறமாக இருப்பின் உருகாப் பொருள்.

77. எட்டர்பியத்தின் பயன் யாது?

வெள்ளி போன்ற உலோகம்.எஃகின் பண்பை உயர்த்தப் பயன்படுவது.

78. எட்டிரியத்தின் பயன் யாது?

வெண்ணிற உலோகம். உலோகக் கலவைகள் செய்ய.

79. சீயோலைட்டின் பயன்கள் யாவை?

நீரேற்றிய அலுமினோ சிலிகேட் தொகுதியில் ஒன்று. இயற்கையாகக் கிடைப்பது. சர்க்கரையைத் துய்மைப்படுத்தவும் கடின நீரை மென்னிராக்கவும் பயன்படுவது.

80. வெண்ணியத்தின் பயன்கள் யாவை?

காரீய (H) கார்பனேட்டு அய்டிராக்சைடு. வெள்ளை வண்ணக் குழைவிலும் வண்ணக் குழைவிலும் இதன் நிறமி பயன்படுவது.

81. வெனாடியத்தின் பயன்கள் யாவை?

கடினமும் உறுதியும் வாய்ந்த உலோகம். இது வெனாடியம் எஃகுவும் அதன் சேர்மங்களும் செய்யப் பயன்படுவது.

82. பாரிஸ் சாந்து என்பது யாது? பயன்கள் யாவை?

துாள்நிலைக் கால்சியம் சல்பேட்டு. வார்ப்பு அச்சுகள் செய்யவும் முறிந்த எலும்புகளுக்குக் கட்டுப்போடவும் பயன்படுவது.

83. நீற்றின சுண்ணாம்பின் வேதிப்பெயர் என்ன?

கால்சியம் அய்டிராக்சைடு.

84. சுட்ட சுண்ணாம்பின் வேதிப்பெயர் என்ன?

கால்சியம் ஆக்சைடு.

85. சுட்ட சுண்ணாம்பின் பயன் யாது?

நீரை உறிஞ்சுவது.

86. சலவைத்துள் என்றால் என்ன?

வெண்ணிறத்துரள், CaOCl2, தொற்று நீக்கி.

87. நீற்றின சுண்ணாம்பின் வேதிப்பயன் என்ன?

கால்சியம் அய்டிராக்சைடு, வெற்றிலைப் பாக்குப் போடுவதில் பயன் படுவது.

88. நீரழுத்தச் சுண்ணாம்பு என்றால் என்ன?

சூடாக்கிய சுண்ணாம்புக்கல்லைப் பொடியாக்க, அது பருக்காமல் நீரை உறிஞ்சி சிமெண்டைக் கொடுக்கும்.

89. சுண்ணாம்புக் கல்லின் வேதிப்பெயர் என்ன?

கால்சியம் ஆக்சைடு.

90. பூச்சுச்சுண்ணாம்பு என்றால் என்ன?

சுட்ட சுண்ணாம்பை நீரில் கரைத்துப் பெறுவது. வெள்ளையடிக்கப் பயன்படுவது.

91. சுண்ணாம்புநீர் என்றால் என்ன?

நீரில் கால்சியம் அய்டிராக்சைடு சேர்ந்த கரைசல்.

92. சுண்ணாம்பு சேர்த்தல் என்றால் என்ன?

கடினத் தன்மையை நீக்க மண்ணிற்குச் சுண்ணாம்பு (கால்சியம் அய்டிராக்சைடு) சேர்த்தல்.

93. சுதையமாக்கல் (கால்சினேஷன்) என்றால் என்ன?

தாதுவை வெப்பப்படுத்தி அதிலிருந்து ஆக்சைடைப் பெறுதல்.

94. கால்சியம் கார்பைடின் சிறப்பு யாது? இது ஓர் உரம்.

95. கால்சியம் சயனைடின் சிறப்பு யாது?

இதிலிருந்து யூரியா உரம் கிடைக்கிறது.

96. கால்சியம் அய்டிராக்சைடின் சிறப்பு யாது?

இது சிமெண்டு தொழிலில் பயன்படுவது.

97. கால்சியம் ஆக்சைடின் சிறப்பு யாது?

இது சுட்ட சுண்ணாம்பு. சிமெண்ட் செய்யப் பயன்படுவது.

98. சாக்கட்டி என்றால் என்ன?

சுண்ணாம்புக்கட்டி கால்சியம் கார்பனேட்டு.

99. இரசகற்பூரத்தின் பயன் யாது?

பூஞ்சைக்கொல்லி.

100. சூடத்தின் பயன் யாது?

ஓர் ஊக்கி. வயிற்று உப்புசம் நீக்கவும் செல்லுலாய்டு செய்யவும் பயன்படுவது.

101. லித்தியம் என்பது யாது?

வலுக்குறைந்த வெண்ணிறக் காரஉலோகம். உலோகக் கலவைகள் செய்யவும் அணு வெப்ப ஆற்றலை உண்டாக்கவும் பயன்படுவது.

102. லித்தியம் குளோரைடின் பயன்கள் யாவை?

வெண்ணிறத்திண்மம். காற்று மட்டாக்கிகளிலும் காற்றின் ஈரப்பதத்தை ஒழுங்குபடுத்தவும் பயன்படுவது.

103. லித்தியம் புளோரைடின் பயன்கள் யாவை?

அரிதாகக் கரையும் உப்பு. மட்பாண்டங்களுக்கு மெருகேற்றவும் காடித்தடைப் பூச்சாகவும் பயன்படுவது.

104. லித்தியம் அய்டிரஜன் கார்பனேட்டின் பயன் யாது?

கரைசலாகவே அறியப்படும் சேர்மம். முடக்குவாதம் நீக்கும் மருந்துகளில் பயன்படுவது.

105. கேட்மியத்தின் சிறப்பு யாது?

வெண்ணிற உலோகம். அல்லணுக்களை உறிஞ்சுவது. அணு உலைகளில் கட்டுப்பாட்டுக் கோல்கள்.

106. சீசியத்தின் சிறப்பு யாது?

இந்த மென்மையான உலோகம் வானொலிக் குழாய்களிலும், ஒளிமின்கலமும் செய்யப் பயன்படுவது.

107. சீசியக் கடிகாரம் என்றால் என்ன?

ஆற்றல் வேறுபாட்டு அடிப்படையில் வேலை செய்யும் அணுக்கடிகாரம். இதில் சீசியம் 133 பயன்படுகிறது.

108. காலமைன் என்றால் என்ன?

துத்தநாகக் கனிமம். தோல்மருந்துகள் செய்யப் பயன்படுவது.

109. நொபிலியத்தின் பயன் யாது?

கதிரியக்க உலோகம். புவியில் இயற்கையாகக் கிடைப்பதிலலை. குறுகிய நேரம் இருக்கக்கூடிய பல சேர்மங்கள் இதிலிருந்து தொகுக்கப்படுகின்றன.

110. இதை இனங்கண்டறிந்தவர் யாவர்?

ஜிராசோ, சீபாக் ஆகிய இருவரும் 1966இல் இதை இனங்கண்டனர்.

111. மாலிப்டினத்தின் பயன்கள் யாவை?

கடின வெண்ணிற உலோகம். உலோகக் கலவைகள் செய்யவும் மின்விளக்கு இழைகள் செய்யவும் பயன்படுவது.

112. மினியம் என்றால் என்ன? பயன் யாது?

சிவப்புக் காரீய (IV) ஆக்சைடு, கண்ணாடி செய்வதிலும் வண்ணநிறமி உண்டாக்குவதிலும் பயன்படுவது. அரிமானத்தைத் தடுப்பது.

113. நியோடைமியம் என்றால் என்ன?

வெள்ளி போன்ற உலோகம். மிஷ் உலோகக் கலவையில் பயன்படுவது.

114. நெப்டூனியம் எப்பொழுது தொகுக்கப்பட்டது?

1940இல் தொகுக்கப்பட்டது.

115. தகடாக்கல் என்றால் என்ன?

உலோகத்தைத் தகடுகளாகஅடித்தல். உலோகப் பண்பு களில் ஒன்று. கம்பியாக்கலும் இதுபோன்ற ஒரு பண்பே.

116. கொபால்ட்டின் பயன்கள் யாவை?

உலோகக் கலவைகள் செய்யவும் மின்முலாம் பூசவும் வெட்டுங்கருவிகளிலும் பயன்படுவது. 17. சோடியம் தயோ சல்பேட்டின் பயன் யாது?

வெண்ணிறத்திண்மம் ஒளிப்படத் தொழிலில் நிறம் நிறுத்தி.

118. சிலி வெடியுப்பு என்றால் என்ன? பயன்கள் யாவை?

சோடியம் நைட்ரேட் உரம். நைட்ரேட்டுகள் நைட்டிரிகக்காடி ஆகியவற்றின் ஊற்று.

119. ரோசல் உப்பு என்றால் என்ன? அதன் பயன் யாது?

பொட்டாசியம் சோடியம் டார்ட்ரேட் வெண்ணிறப் படிகம். ரொட்டித் தொழிலில் பயன்படுவது.

120. குளுடாமிகக் காடி என்பது யாது?

நிறமற்ற படிக அமினோக்காடி சோடிய உப்பு வடிவத்தில் மணமூட்டும் பொருள்.

121. ஜிப்சம் என்றால் என்ன?

கால்சியம் சல்பேட். இதிலிருந்து நீர் நீக்கப்படும் பொழுது, பாரிஸ் சாந்து ஆகும். வனை பொருள் தொழில், வண்ணஞ் செய்தல், தாள்செய்தல் முதலிய தொழில்களில் பயன்படுவது. எலும்பு முறிவுக்குக் கட்டுப்போடவும் பயன்படுவது.

122. காண்டியின் பாய்மம் என்றால் என்ன?

கால்சியம் பர்மாங்கனேட், பொட்டாசியம் பர்மாங்கனேட் சேர்ந்த கலவை. புரையத் தடுப்பி.

123. பசுந்துத்தம் என்றால் என்ன?

பெரஸ்-சல்பேட்டுப் படிகம்.

124. சோடா என்பது யாது?

ஒரு வேதிப்பொருள். இருவகை. சோடியம் கார்பனேட்சமையல் சோடா. சோடியம் இரு கார்பனேட்.

125. சோடா என்னும் சொல் வேறு எவற்றைக் குறிக்கிறது?

சோடியம் ஆக்சைடு, சோடியம் அய்டிராக்சைடு.

126. சோடா சாம்பல் என்பது யாது?

நிறமற்ற சோடியம் கார்பனேட்.

127. சலவைச் சோடாவின் வேதிப்பெயர் என்ன?

சோடியம் கார்பனேட் எரி சோடா, கண்ணாடி, சவர்க்காரம் முதலியவை செய்யப் பயன்படுகிறது.  128. அமெரிக்க வயிரம் என்றால் என்ன?

சிர்கோனியம் ஆக்சைடு, செயற்கைக் கல்.

129. சவர்க்காரம் செய்யும் முறைகள் யாவை?

1. கொதித்தல் முறை. 2. குளிர்முறை.

130. மென்சவர்க்காரம் என்றால் என்ன?

மூவகைக் காடிகளின் பொட்டாசிய உப்புக் கலவை. அக்காடிகளாவன: ஸ்டீரிகக்காடி, பால்மாடிகக் காடி, ஒலிகக்காடி.

131. சவர்க்காரமாதல் என்றால் என்ன?

இது ஒரு வேதிவினை. இதில் எஸ்தர் நீராற்பகுக்கப்பட்டு அய்டிராக்சைடாக மாறுகிறது.

132. பற்றாசு என்றால் என்ன?

உலோகப் பரப்புகளை இணைக்கப் பயன்படும் உலோகக் கலவை.

133. இதன் வகைகள் யாவை?

மென்பற்றாக, கடினப்பற்றாசு, பற்றவைப்புப் பற்றாசு.

134. பற்றாசுக் கோல் என்றால் என்ன?

பற்ற வைக்கும் கருவி.

135. மாங்கனீசின் பயன் யாது?

சாம்பல்நிற வெண்ணிற உலோகம். உலோகக் கலவை செய்ய.

136. மாங்கனீஸ் இரு ஆக்சைடின் பயன்கள் யாவை?

நீரில் கரையாக் கறுப்புத்துள். வினையூக்கி, மின்கலத்தில் துருவத்துவம்நீக்கி, சுண்ணாம்புத் தொழிலில் நிறம் நீக்கி.

137. ரூபிடியத்தின் பயன்கள் யாவை?

காரக் குடும்ப அரிய உலோகத்தனிமம். ஒளிமின்கலங்களிலும் வெற்றிடக் குழாய்களிலும் பயன்படுவது.

138. ருத்தினியத்தின் பயன் யாது?

பிளாட்டினத் தொகுதியைச் சேர்ந்த உலோகம். மின் தொடர்புகளிலும் அணிகலன்களிலும் பயன்படுவது. வளிகளை உறிஞ்சும் வீறுள்ள வினையூக்கி.

139. டெக்டினிடியம் என்பதின் பண்புகள் யாவை? மாறுநிலைத் தனிமம். அல்லணுக்களால் தகர்க்கச் செயற்கையாகக் கிடைப்பது. யுரேனியத்தைப் பிளந்தும் பெறலாம். கதிரியக்கத் தன்மையுள்ளது.

140. டெல்லூரியத்தின் சிறப்பென்ன?

நொறுங்கக்கூடிய உலோகப் போலி. கறுக்கா எஃகிலும் பிற உலோகங்களிலும் பயன்படுவது.

141. டெர்பியத்தின் சிறப்பென்ன?

மென்மையான வெள்ளிநிறத்தனிமம். இலாந்தனாய்டுகளுடன் சேர்ந்துள்ள திண்ம நிலைக் கருவிகளில் மாசுப் பொருளாகப் பயன்படுவது.

142. ஆக்டினியம் என்றால் என்ன?

நச்சுத் தன்மையுள்ள கதிரியக்கத் தனிமம். ஆல்பா துகள்களின் ஊற்றுவாய்.

143. கடற்பஞ்சு நிக்கலின் பயன் யாது?

இது சோடியம்.அய்டிராக்சைடு சேர்ந்த நிக்கல். வினையூக்கி.

144. ஈயச் செந்தூரத்தின் பயன்கள் யாவை?

ஒளிர்வான மாநிறத்தாள். கண்ணாடி தொழிலில் நிறமி. ஆக்சிஜன் ஏற்றி.

145. ரேடியத்தின் பயன் யாது?

வெண்ணிற உலோகம். பிளாட்டினத்துடன் சேர்ந்து உலோகக் கலவையாகப் பயன்படுவது. அறிவியல்கருவிகள் செய்யப் பயன்படுவது.

146. மேசையுப்பு என்பது யாது?

சோடியம் குளோரைடு.

147. பாறைப்படிகம் என்பது என்ன?

சிலிகாவின் தூய இயற்கைப் படிக வடிவம்.

148. பாறையுப்பின் வேறு பெயர் என்ன?

இந்துப்பு. சோடியம் குளோரைடின் கனிம வடிவம் இயற்கையாகத் தோன்றுவது.

149. கிளாபர் உப்பு என்றால் என்ன?

மிரபிலைட் என்று பெயர் பெறுவது. நீரேறிய சோடியம் சல்பேட்டு. உப்பு ஏரிகளிலும் கடல்நீரிலும் காணப்படுவது.

150. சமையல் சோடா என்பது எது?

சோடியம் அய்டிரஜன் கார்பனேட்

151. அடிப்படை விசைகள் யாவை?

ஈர்ப்பு, காந்தம், மின்சாரம் முதலியவை.

152. சால்சோடா என்பது என்ன?

சலவைச் சோடா. சோடியம் கார்பனேட் டெக்கா ஹைடிரேட்.

153. சோடாநீர் என்பது என்ன?

கரி இரு ஆக்சைடு அழுத்தத்தில் கரைந்த நீர். திறப்பதின் மூலம் அழுத்தத்தை நீக்க, வளியின் கரைதிறன் குறைவதால், நுரை வழிகிறது.

154. சோடியத்தின் பயன்கள் யாவை?

வெள்ளி போன்ற வெண்ணிற உலோகம். ஒடுக்கி, வினையூக்கி.

155. சோடியம் அலுமினியத்தின் பயன்கள் யாவை?

வெண்ணிறத் திண்மம். நிறம் நிறுத்தி. கண்ணாடி உற்பத்தியில் பயன்படுவது.

156. எரிகாரம் என்றால் என்ன?

சோடியம் அல்லது பொட்டாசியம் அய்டிராக்சைடு.

157. எரிபொட்டாஷ் என்றால் என்ன?

பொட்டாசிய அய்டிராக்சைடு.

158. எரிசோடா என்றால் என்ன?

சோடியம் அய்டிராக்சைடு.

159. படிகாரம் என்றால் என்ன?

இணைதிறன் மூன்றுள்ள அலுமினியக் குரோமியம், இணைதிறன் ஒன்றுள்ள பொட்டாசியம், சோடியம் முதலிய தனிமங்களின் இரட்டைச் சல்பேட்டு. எ-டு. பொட்டாஷ் படிகாரம்.

160. படிகாரத்தின் பயன்கள் யாவை?

சாயத் தொழிலில் நிறம் நிறுத்தி, தோலைப் பதனிடவும் நீரைத் துப்புரவு செய்யவும் பயன்படுவது.

161. வெடியுப்பின் வேதிப் பெயர் என்ன? பொட்டாசியம் நைட்ரேட்

162. சோடாலைமின் பயன்கள் யாவை?

மாநிறத் திண்மம். உலர்த்தி, உறிஞ்சி.(CO2)

163. சோடியம் அலுமினேட்டின் பயன்கள் யாவை?

வெண்ணிறத் திண்மம். நிறம்நிறுத்தி, கண்ணாடி உற்பத்தியில் பயன்படுதல்.

164. சோடாமைடின் பயன்கள் யாவை?

மெழுகு போன்ற பொருள். காஸ்டனர் கெல்னர் முறையிலும் வெடிமருந்து செய்வதிலும் பயன்படுவது.

165. சோடியம் குளோரைடின் சாதாரணப் பெயர் என்ன?

உப்பு

166. இதன் பயன்கள் யாவை?

உணவின் இன்றியமையாப் பகுதிப் பொருள். எரிசோடா, குளோரின், சோடியம் கார்பனேட்டு முதலிய பொருள்கள் செய்யப் பயன்படுவது.

167. சோடியம் சைனைடின் பயன்கள் யாவை?

நிறமற்ற திண்மம். வெள்ளி, பொன் ஆகியவற்றைப் பிரித்தெடுக்கவும், செம்புமுலாம், பொன்முலாம், வெள்ளிமுலாம் பூசவும் பயன்படுதல்.

168. சோடியம் அய்டிராக்சைடின் பயன்கள் யாவை?

எரிசோடா. சாயங்கள், சவர்க்காரங்கள், மருந்துகள் முதலியவை செய்ய.

169. சோடியம் அய்போகுளோரைட்டின் பயன்கள் யாவை?

நிலைப்பிலாப் வெண்ணிறப்படிகம். நீர்க்கரைசலாக வைக்கப்பட்டுள்ளது. நச்சுத்தடை ஆக்சிஜன் ஏற்றி.

170. சோடியம் நைட்ரேட்டின் பயன்கள் யாவை?

வெடியுப்பு. வெண்ணிறக் கனசதுரப்படிகம். உரம். நைட்ரேட்டுகள் நைட்டிரிகக்காடி ஆகியவற்றிற்கு ஊற்று.

171. சோடியம் பர்பொரேட்டின் பயன்கள் யாவை?

கரையக்கூடிய வெண்ணிறப் படிகம். வெளுப்பி, தொற்றுநீக்கி.

172. சோடியம் பெராக்சைடின் பயன்கள் யாவை?

வெளிறிய மஞ்சள் நிறத் திண்மம். வெளுப்பி. 173. சோடியம் பைரோபொரேட்டின் பயன்கள் யாவை?

கரையக்கூடிய வெண்ணிறப் படிகம். நச்சுத்தடை. கண்ணாடி, பீங்கான் முதலியவை செய்ய.

174. சோடியம் சல்பேட்டின் பயன்கள் யாவை?

வெண்ணிறப்படிகம். கண்ணாடி, தாள் முதலியவை செய்ய.

175. சோடியம் சல்பைடின் பயன்கள் யாவை?

மஞ்சள் சிவப்பு நிறத்திண்மம். சாயங்கள் உண்டாக்கவும் தோலைப் பதப்படுத்தவும் பயன்படுவது.

176. சோடியம் சல்பைட்டின் பயன்கள் யாவை?

வெண்ணிறப் படிகம். உணவுப் பாதுகாப்புப் பொருள். ஒளிப்படத் தொழிலில் பயன்படுவது.

177. அலுமினியத்தின் பயன்கள் யாவை?

1. வானூர்தித் தொழில், தானியங்கி தொழிலிலும் முதன்மையாகப் பயன்படுவது.

2. ஒளிப்படப் பொருள்களையும் மருந்துப் பொருள்களையும் பொட்டலங்களாக அடைக்கப் பயன்படுவது.

3. செப்புக் கம்பிகளுக்குப் பதிலாகப் பயன்படுவது. இது ஓர் உலோகமாகும்.

178. அலுமினா என்றால் என்ன?

அலுமினியம் ஆக்சைடு. வடிவமற்ற வெண்ணிறப் பொருள். இயற்கையில் குருந்தக்கல்லாகக் கிடைப்பது.

179. இதன் பயன்கள் யாவை?

உலைகளுக்குக் கரைகள் அமைக்கவும் உருகாக்கற்கள் செய்யவும் பயன்படுவது.

180. அலுமினிய வண்ணக் குழைவு என்றால் என்ன?

அலுமினிய நிறமியைப் பூசும் எண்ணெயில் கலந்து செய்யப்படும் பசை.

181. இதன் பயன் யாது?

கதிர்வீச்சை மறித்து வெப்பக் காற்றிலும் வெந்நீர்க் குழாயிலும் தொட்டியிலும் வெப்பத்தை நிலைநிறுத்துவது.

அலுமினியப் பசை என்றால் என்ன? நன்கு நுணுக்கிய அலுமினியத் துளை எண்ணெயில் கலந்து செய்யப்படுவது. அலுமினிய வண்ணங்களில் பயன்படுவது.

183. அலுமினியச் சவர்க்காரம் என்றால் என்ன?

உயர் கார்பாக்சிலிகக் காடி அலுமினியம் ஆகியவற்றின் உப்பு. நீரில் கரையாது. எண்ணெயில் கரையும்.

184. இதன் பயன் யாது?

பூசும் எண்ணெய்களிலும் வண்ணங்களிலும் பயன்படுவது.

185. இழையுப்பு என்றால் என்ன?

இயற்கை அலுமினியம் சல்பேட்

186. சீனக் களிமண் என்பது யாது?

கேயோலின். இயற்கை அலுமினியம் சிலிகேட். வாய்வழி உட்கொள்ள நச்சுப்பொருள்களை உறிஞ்சும். ஆகவே, வயிற்றுப்போக்கு, குடல்அழற்சி, உணவு நச்சுக்கலப்பு ஆகியவற்றைக் குணப்படுத்தப் பயன்படுவது.

187. அமெரிசியத்தின் பயன் யாது?

அமெரிசியம் 241 காமா கதிர்வரைவியலில் பயன்படுவது.

188. பைரைட் என்பது யாது?

இரும்புத்தாது. எ-டு இரும்புச்சல்பைடு.

189. இரும்பின் மூன்று வகைகள் யாவை?

1. காமா இரும்பு. 2. ஆல்பா இரும்பு. 3. டெல்டா இரும்பு.

190. பெரிக்குளோரைடின் பயன்கள் யாவை?

மாநிற மஞ்சள் நிறப் படிகம். மருந்துகளில் பயன்படுவது. ஆய்வக வினையாக்கி.

191. பெரிக் ஆக்சைடின் பயன் யாது?

சிவந்த மாநிறம். நிறமி, நிலைநிறுத்தி. இயற்கையில் ஹேமடைட் தாது.

192. பெரிக் சல்பேட்டின் பயன் யாது?

பருமனறிபகுப்பில் பயன்படுவது.

193. பெரசச் சல்பேட்டின் பயன்கள் யாவை?

பசுந்துத்தம். தோல் பதனிடல், சாயத்தொழில் ஆகியவற்றில் பயன்படுவது. பருமனறி பகுப்பில் வினையாக்கி.

194. உயர்விரைவு எஃகு என்றால் என்ன?

உயர்விரைவு கடைசல் எந்திரங்களில் கருவிகளை வெட்டப் பயன்படும் எஃகு.

195. வார்ப்பிரும்பு என்றால் என்ன?

இரும்பு உலோகக் கலவை. 2-5% கரியும் மற்ற மாசுகளும் உள்ளன. இதிலிருந்து எஃகு கிடைப்பது. இது குழாய்கள், அடுப்புகள், விளையாட்டுப் பொருள்கள் முதலியவை செய்யப் பயன்படுவது.

196. மென்னிரும்பு என்றால் என்ன? பயன் யாது?

ஆல்பா இரும்பு. கரி குறைவாக உள்ளது. காந்த ஆற்றல் நிலைத்திராது. வரிச்சுற்றுகளில் பயன்படுவது.

197. தேனிரும்பின் பயன்கள் யாவை?

மிகத்துய இரும்பு. கரி இல்லாதது. வார்ப்பிலிருந்து பெறப்படுவது. சங்கிலிகள், கம்பி, ஆணிகள் செய்யப் பயன்படுவது. தகடாக்கலாம், கம்பியாக்கலாம்.

198. கசடு என்றால் என்ன?

உலோகத் தாதுக்களைப் பிரிக்கும்பொழுது உண்டாகும் கழிவு. இளக்கியினால் உண்டாவது. மிதப்பதால் எளிதில் வெளியேறக் கூடியது.

199. யூரப்பியம் என்றால் என்ன?

வெள்ளிநிற உலோகத் தனிமம். எட்ரிய யூரேப்பிய ஆக்சைடு கலவையில் முதன்மையாகப் பயன்படுவது. இந்த ஆக்சைடுகள் தொலைக்காட்சித் திரைகளில் சிவப்புப் பாசுவரமாகப் பயன்படுவது.

200. சமாரியம் என்பது என்ன? அதன் பயன் யாது?

வெள்ளிநிறத் தனிமம். உலோகவியல், கண்ணாடித் தொழில், அணுத்தொழில் ஆகியவற்றில் பயன்படுவது.

201. சோடியம் அசைடின் பயன் யாது?

நிறமற்ற படிகம். வெடிமருந்துகளில் பயன்படுவது.

202. சோடியம் பெனிசோயேட்டின் பயன்கள் யாவை?

நீரில் கரையும் வெண்ணிறத்தூள். உணவுப் பாதுகாப்புப்  பொருள். நச்சுத்தடை

203. சோடியம் இருகார்பனேட்டின் பயன்கள் யாவை?

வெண்ணிறத் திண்மம். ஆப்பச்சோடா. அமிலம் நீக்கி. நுரைக்கும் பானங்களில் பயன்படுதல்.

204. சோடியம் கார்பனேட்டின் பயன்கள் யாவை?

சலவைச்சோடா. வெண்ணிறப் பொருள் எரிசோடா, கண்ணாடி, சவர்க்காரம் ஆகியவை செய்யப் பயன்படுவது.

205. எம்முறையில் இது பெரிய அளவில் செய்யப்படுகிறது?

சால்வே முறையில்.

206. சோடியம் குளோரேட்டின் பயன்கள் யாவை?

நிறமற்ற கரையும் படிகம். நச்சுத்தடை ஆக்சிஜன் ஏற்றி. வெடிமருந்துகளில் பயன்படுவது.

207. எப்சம் உப்பு என்றால் என்ன?

மக்னீசியம் சல்பேட் பேதிமருந்து, நிறம் நிறுத்தி.

208. தேலியத்தின் பயன்கள் யாவை?

மென்மையான சாம்பல் நிற உலோகம். நச்சுத்தன்மையுள்ளது. ஒளிமின்கலங்கள், அகச்சிவப்பு உணர்கருவிகள், குறைந்த உருகுநிலைக் கண்ணாடிகள் முதலியவற்றில் பயன்படுகின்றது.

209. வெள்ளியக் குளோரைடின் பயன்கள் யாவை?

ஒளிபுகும் திண்மம், ஒடுக்கி, நிறம் நிறுத்தி.

210. வெள்ளிய ஆக்சைடின் பயன்கள் யாவை?

வெள்ளியச் சாம்பல். ஒடுகள், கண்ணாடிகள், உலோகம் ஆகியவற்றிற்கு மெருகேற்றப் பயன்படுவது.

211. வெள்ளியச் சல்பைடின் பயன் யாது?

பொன்னிற வண்ணக் குழைவு செய்யப் பயன்படுவது.

212. இதன் சிறப்புப் பெயர் என்ன?

ஓவியப் பொன். நீரில் கரையா மஞ்சள்தூள். வேறு பெயர் செதில் வடிவப் பொன்.

213. டைடேனியத்தின் பயன்கள் யாவை?

சாம்பல்நிற மாறுநிலைத்தனிமம். கப்பல்கள், வானவூர்திகள் முதலியவை செய்யப் பயன்படுவது.  214. டைடாட்டினியம் ஈராக்சைடின் பயன்கள் யாவை?

நீரில் கரையா வெண்ணிறத்துள். பீங்கான் பொருள்களுக்கு வெண்மெருகேற்றவும், தாள் தொழிலிலும் நெசவுத் தொழிலிலும் பயன்படுவது.

215. டங்ஸ்டனின் பயன்கள் யாவை?

அரிய மாறுநிலை உலோகம். ஒளிர் விளக்குகள் இழைகள் செய்யவும், உயர்விரைவு எஃகு செய்யவும் பயன்படுவது.

216. டங்ஸ்டன் கார்பைடின் பயன்கள் யாவை?

சாம்பல் நிறத்துள். வைரத்தைப் போன்ற கடினம். தேய்ப்புப் பொருள்கள், கருவிகள் ஆகியவை செய்வதில் பயன்படுபவை.

217. கேலியத்தின் பயன் யாது?

வெண்ணிற உலோகம். நிறமாலை நோக்கிப் பகுப்பு விளக்குகளில் பயன்படுவது.

218. எர்பியம் என்பது யாது?

மென்மையான உலோகம். தகடாக்கலாம். உலோகவியல், கண்ணாடித் தொழில் ஆகியவற்றில் பயன்படுவது.

219. இண்டியம் என்பது யாது?

வெண்ணிற உலோகம். பல்லில் பயன்படும் உலோகக் கலவையிலும் மின்முலாம் பூசுவதிலும் பயன்படுவது.

220. ஐஎன்பி படிகம் என்றால் என்ன?

இண்டியம் பாஸ்பேட் படிகம். கணிப்பொறி முதலிய மின்னணுக் கருவியமைப்புகளில் சிலிகனுக்கு மாற்றாக அமைந்து புரட்சியை உண்டுபண்ண இருப்பது. செயல்திறத்தில் சிலிகானைவிடப் பன்மடங்கு உயர்ந்தது. இந்தியா இதனை உருவாக்கிய எட்டாவது நாடு. சென்னை அண்ணா பல்கலைக்கழகப் படிகவளர்ச்சி தேசிய மையம் இதனை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

221. இரிடியத்தின் பயன்கள் யாவை?

அரிய உலோகம். மூசைகள் செய்யவும், பேனா முட்கள் செய்யவும் பயன்படுவது. 222. பொலோனியத்தின் சிறப்பென்ன?

யுரேனியத் தாதுக்களில் சிறிதளவுள்ள கதிரியக்கத்தனிமம். இதற்கு 30க்கு மேற்பட்ட ஒரிமங்கள் உண்டு. எல்லாம் ஆல்பா துகள்களை உமிழ்பவை. செயற்கை நிலாக்களில் மின் வெப்ப ஆற்றல் ஊற்றாக பொ210 பயன்படுகிறது.

223. புளுட்டோனியத்தின் சிறப்பென்ன?

அதிக நச்சுள்ள கதிரியக்கத் தனிமம். யுரேனிய தாதுக்களில் சிறிதளவுள்ளது.

224. இது எவ்வாறு பெறப்படுகிறது? பயன் யாது?

இயற்கை யுரேனியத்தை அல்லணுவினால் குண்டாகக்கொண்டு பிளக்க பு-239 கிடைக்கும். இது எளிதில் பிளவுபடுவதால் அணுக்கரு எரிபொருள்; அணுக்கரு வெடிபொருள்.

225. டிஸ்புரோசியம் என்பது யாது?

அரிய புவித்தனிமங்களில் ஒன்று. அணு உலையில் உறிஞ்சியாகப் பயன்படுவது.

226. கேடோலியம் என்பது என்ன?

வெண்ணிற உலோகம். கம்பியும் தகடுமாக்கலாம். உலோகக் கலவைகள் செய்யவும் மின்னணுத் தொழிலிலும் பயன்படுவது.

227. அண்டிமனி என்றால் என்ன?

நொறுங்கக் கூடிய வெள்ளிநிற உலோகம். அரிதில்கடத்தி. அச்சுஉலோகம் செய்யப் பயன்படுவது

228. அண்டமணி ஐங்குளோரைடு என்றால் என்ன?

நிறமற்ற நீர்மம். வலுவான குளோரின் ஏற்றும் பொருள்.

229. அண்டிமனி சல்பேட் என்றால் என்ன?

கரையா வெண்ணிறப் படிகம். வெடிமருந்தில் பயன்படுவது.

230. அண்டிமனி ஐஞ்சல்பைடு என்றால் என்ன?

நீரில் கரையா மஞ்சள் நிறத்துாள். ரப்பரை வன்கந்தகமாக்கப் பயன்படுவது.

231. அண்டிமனி முக்குளோரைடு என்றால் என்ன? நீர் உறிஞ்சும் வெண்ணிறமானதும் மென்மையானதுமான திண்மம். மருந்துப் பொருளாகவும், குழல்களைத் துப்புரவு செய்யவும் பயன்படுவது.

232. இங்குலிகம் என்றால் என்ன?

பாதரசத்தின் முதன்மையான தாது.

233. பாதரச மரம் என்றால் என்ன?

சிறிது பாதரசத்தை வெள்ளி நைட்ரேட்டுக் கரைசலோடு சேர். மரவளர்ச்சி ஒத்த வெள்ளி இரசக்கலவை உண்டாகும். இதற்குப் பாதரச மரம் என்று பெயர்.

234. இரசக்கலவை என்றால் என்ன?

இரும்பு தவிர்த்த ஏனைய உலோகங்களோடு பாதரசம் சேரும்பொழுது உண்டாகும் கலவை.

235. மெர்க்குரிக அயோடைடின் பயன் யாது?

செந்நிற வீழ்படிவு. தோல் நோய் மருந்துகளில் பயன்படுவது.

236. மெர்க்குரிக ஆக்சைடின் பயன் யாது?

மஞ்சள் நிறத் திண்மம். கண்ணழற்சி மருந்து.

237. பாதரசத்தின் பயன்கள் யாவை?

நீர்மநிலையிலுள்ள உலோகம். வெப்பநிலைமானிகளில் நிரப்பும் நீர்மம். பல் மருத்துவத்தில் பயன்படுவது. புறஊதாக் கதிர்களின் மூலம்.

238. பாதரச் பல்மினேட்டு என்பது என்ன?

இது ஒரு வெடிபொருள். நைட்டிரிகக் காடியில் பாதரசத்தைக் கரைத்து, அதனுடன் ஆல்ககாலையும் சேர்க்க இப்பல்மினேட்டு கிடைக்கும்.

239. பொன் என்றால் என்ன? பயன் யாது?

தங்கம். ஒளிர்வான மஞ்சள் நிற உலோகம். அரசநீர்மத்தில் மட்டுமே கரையும். பல்கட்டவும் உலோகக் கலவை செய்யவும் அணிகலன்கள் செய்யவும் பயன்படுவது.

240. ரேடியத்தின் பயன்கள் யாவை?

இது ஒரு கதிரியக்கத் தனிமம். புற்றுநோய் மருத்துவத்திலும் ஒளிமின்கலம் செய்வதிலும் வானொலிக் குழாய்கள் செய்வதிலும் பயன்படுவது.

241. மக்னீசியத்தின் பயன்கள் யாவை?

வெண்ணிறக் காரமண் உலோகம். கூசொளி குமிழ்களிலும் பல கரிமச் சேர்மங்கள் செய்யவும் சிலிக்கனைப் பிரிக்கவும் பயன்படுவது.

242. மக்னீசியம் கார்பனேட்டின் பயன் யாது?

வெண்ணிறத்துள். மருந்துகளில் கடினத்தன்மையைப் போக்கப் பயன்படுவது.

243. மக்னீசியம் குளோரைடு என்றால் என்ன?

நீரற்ற உப்பு. நெசவுத்தொழிலில் பயன்படுவது.

244. மக்னீசியம் அய்டிராக்சைடின் பயன் யாது?

வெண்ணிறத்துள. கழிவுப் பாகிலிருந்து சர்க்கரையைப் பிரிக்கப் பயன்படுவது.

245. மக்னீசியம் ஆக்சைடின் பயன்கள் யாவை? வெண்ணிறத்தூள். காடித்தன்மையைத் திருத்தும் மருந்துகள் செய்யவும் உலைகளில் வெப்பத்தடைக் கரைகள் அமைக்கவும் பயன்படுவது.

246. மக்னீசியம் சல்பேட்டின் பயன்கள் யாவை?

திட்டமான ஒளிபுகும் படிகம். பேதிமருந்து. நிறம் நிறுத்தி.

247. பல்லாடியம் என்பது யாது? பயன்கள் யாவை?

மாறுநிலை வெண்ணிற உலோகம். அய்டிரஜன் செலுத்தும் வினைகளில் ஊக்கி. அணிகலன்கள் செய்யவும் உலோகக் கலவைகள் செய்யவும் பயன்படுவது.

248. நியோபியம் என்பது யாது?

சாம்பல் நிற உலோகம். அரிமானத் தடையைத் தடுப்பது.

249. நிக்கல் என்றால் என்ன?

வெள்ளிபோன்ற வெண்ணிறக் காந்த உலோகம். மின்முலாம் பூசுவதிலும் கறுக்கா எஃகு செய்வதிலும் பயன்படுவது.

250. நிக்கல் அசெட்டேட்டின் பயன் யாது?

கரையக் கூடிய பசுமை நிறப்படிகம். நிக்கல் முலாம் பூசுவதில் பயன்படுவது.

251. நிக்கல் கார்பனேட்டு என்றால் என்ன?

பசுமையான படிகம். மின்முலாம் பூசவும் பீங்கான் தொழிலிலும் பயன்படுவது.

252. நிக்கல் சல்பேட்டு என்றால் என்ன?

பசும்படிகம். பீங்கான் தொழிலிலும் மெருகேற்றவும் பயன்படுவது.

253. நிக்கல் முலாம் பூசுதல் என்றால் என்ன?

மின்னாற்பகுப்பு முறையில் ஒர் உலோகத்தின் மீது நிக்கல் உலோகத்தைப் படியச் செய்தல்.

254. நிக்கல் வெள்ளி என்றால் என்ன?

ஜெர்மன் வெள்ளி. வெள்ளி, செம்பு, நிக்கல், துத்தநாகம் ஆகியவை சேர்ந்த கலவை. வெள்ளி முலாம் பூசுதலிலும் குரோமிய முலாம் பூசுதலிலும் பயன்படுவது.

255. தோரியத்தின் சிறப்பென்ன?

மென்மையான கதிரியக்கத் தனிமம். காற்றில் படக் கறுக்கும்.

256. வெள்ளியத்தின் சிறப்பென்ன?

எளிதில் உருகக் கூடியது. புறவேற்றுமை கொண்டது.

257. இதன் இரு புறவேற்றுருக்கள் யாவை?

வெண்ணிய வெள்ளியம், சாம்பல் நிற வெள்ளியம்.

258. இதன் பயன்கள் யாவை?

வீட்டுப் பாண்டங்கள் செய்யவும் தகடுகள் செய்யவும் பயன்படுதல்.

259. யுரேனியத்தைக் கண்டறிந்தவர் யார்? எப்பொழுது?

1789இல் கிளாப்ராத்து என்பார் கண்டறிந்தார்.

260. இதன் கதிரியக்கம் பண்பைக் கண்டறிந்தவர் யார்?

முதன்முதலில் பெக்கரல் 1895இல் கண்டறிந்தார்.

261. இதன் சிறப்பென்ன?

கதிரியக்கத்தனிமம் யுரேனிய ஆக்சைடாகக் கிடைக்கிறது. அனுப்பிளவில் அளப்பரிய ஆற்றலை வெளிப்படுத்துவது. குறைந்த அளவே உலகில் உள்ளது.

262. பிளாட்டினத்தின் சிறப்பென்ன? மாறுநிலை அரச உலோகம். விலை மதிப்புள்ளது. ஆஸ்வால்டு முறையில் வினையூக்கி. விலையுயர்ந்த அணிகலன்களில் உலோகக் கலவையாகப் பயன்படுவது.

263. பிளாட்டினக் கறுப்பு என்றால் என்ன?

பிளாட்டினம் கருந்தூளாக்கப்பட்ட நிலை. உறிஞ்சிகளாகவும் வினையூக்கியாகவும் பயன்படுவது.

264. இளக்கி என்றால் என்ன?

1. பற்ற வைப்பில் உலோகப்பரப்புகளை ஆக்சைடு அண்டாமல் இருக்கச் செய்யும் பொருள்.

2. உலோகங்களை அவற்றின் தாதுக்களிலிருந்து பிரிக்கப் பயன்படும் பொருள். எ-டு. இரும்பைப் பிரிப்பதில் சுண்ணாம்புக்கல் இளக்கி.

265. நிறம்நிறுத்தி என்றால் என்ன?

சாயந் தோய்க்கப் பயன்படும் கனிமப்பொருள். எ-டு. அலுமினியம் அய்டிராக்சைடு.

266. உலர்த்திகள் என்றால் என்ன?

வளிகள் முதலிய செய்பொருள்களிலுள்ள ஈரத்தை உறிஞ்சப் பயன்படும் வேதிப்பொருள்கள். எ-டு. அடர்கந்தகக் காடி, கால்சியம் ஆக்சைடு.

267. தொற்றுநீக்கி என்றால் என்ன?

நோய் நுண்ணங்களை நீக்கும் வேதிப்பொருள். எ-டு. சலவைத்துள்.

268. புகையூட்டி என்றால் என்ன?

புகையூட்ட வளிநிலையில் பயன்படும் வேதிப்பொருள். ஆவியாக்கக் கூடியது. எ-டு. கார்பன் இரு சல்பைடு, எத்திலின். தொற்றுநீக்கி. இம்முறையில் ஆவியைச் செலுத்துவதற்குப் புகையூட்டல் என்று பெயர்.