அறிவியல் வினா விடை-வேதியியல்/கரிம வேதியியல்

13. கரிம வேதியியல்

1. அய்டிரோகார்பன்கள் என்றால் என்ன?

அய்டிரஜனும் கார்பனும் கொண்ட சேர்மங்கள். ஒன்றிலிருந்து நான்கு கார்பன் அணுக்கள் வரை கொண்டவை வளிகள். 5லிருந்து 16 வரை கொண்டவை நீர்மங்கள். அதிகமூலக்கூறுப் பொருண்மை கொண்டவை திண்மங்கள்.

2. அய்டிரோகார்பன் வினை ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்? எப்பொழுது? பேரா. ஜார்ஜ் ஓலா, 1994.

2. இயற்கை வளி என்றால் என்ன?

வளிநிலை அய்டிரோ கார்பன் சேர்ந்த கலவை. முதன்மையாக, மீத்தேன், ஈத்தேன், புரோபேன், பூட்டேன் முதலிய வளிகளைக் கொண்டது. கரிக்கருமை செய்யப் பயன்படுவது.

3. அய்டிரோகார்பன்களின் வகைகள் யாவை?

1. நிறைவுற்றவை - ஈத்தேன், மீத்தேன்.

2. நிறைவற்றவை - ஈத்தீன், ஈத்தைன்.

3. நறுமணமுள்ளவை. வளைய அமைப்புள்ளவை. பென்சீன், நாப்தலீன்.

4. வளையச் சேர்ம வகைகள் யாவை?

அணுவளையங்களைக் கொண்ட கூட்டுப் பொருள். ஒருபடித்தான வளையச் சேர்மம், பலபடித்தான வளையச் சேர்மம் என இருவகை.

5. நறுமணச் சேர்மம் என்றால் என்ன?

தன் அமைப்பில் பென்சீன் வளையங்களைக் கொண்ட கரிமச் சேர்மம், எ-டு பென்சீன்.

6. வளையச் சேர்மம் என்றால் என்ன?

வேதிச்சேர்மத்தில் மூலக்கூறில் சில அல்லது எல்லா அணுக்களும் மூடிய வளையத்தோடு இணைந்திருப்பவை.

7. நாப்தா என்பது என்ன?

பலவீதங்களில அய்டிரோகார்பன்கள் சேர்ந்த கலவை. பாரபின் எண்ணெய், நிலக்கரித்தார் ஆகியவற்றிலிருந்து பெறப்படுவது.

8. நாப்தலீன் என்றால் என்ன?

நிறமற்ற பளபளப்பான பொருள். பூச்சிக்கொல்லி.

9. நெட்ரோபென்சீன் என்பது யாது?

வெளிறிய மஞ்சள் நிற நீர்மம். கரைப்பான், ஆக்சிஜன் ஏற்றி, அனிலைன் தரைமெருகேற்றிகள் முதலியவை செய்யப் பயன்படுகிறது.

10. நைட்ரோ செல்லுலோஸ் என்றால் என்ன?

பஞ்சுபோன்ற திண்மம். ஏவுகனை இயக்கி. வெடி மருந்துகள், விரைந்து உலரும் கரைப்பான்கள் செய்யப் பயன்படுவது.

11. எத்திலீன் என்றால் என்ன?

நிறமற்ற வளி, நீரில் அரிதாகக் கரையும். புகைகொண்ட ஒளிச்சுடருடன் காற்றில் எரியும். செயற்கையாகக் காய்களைப் பழுக்க வைக்கப் பயன்படுவது.

12. எத்தைன் என்றால் என்ன?

வேறுபெயர் அசெட்டலின். அசெட்டலின் சுடரிலும் செயற்கை ரப்பர் தயாரிப்பதிலும் பயன்படுவது.

13. டச்சு நீர்மம் என்றால் என்ன?

எத்திலீன் இரு குளோரைடு. டச்சு வேதியியலார் கண்டுபிடித்தது.

14. ஈதர் என்றால் என்ன? பயன் யாது?

மணமுள்ளதும் நிறமற்றதுமான ஒளிபுகும் நீர்மம். மயக்கமருந்து, கரைப்பான்.

15. எத்தியான் என்றால் என்ன? பயன் யாது?

கரிமப் பாஸ்பேட், உப்பு. சைலீன், மண்ணெண்ணெய் முதலியவற்றோடு கலக்கும் பூச்சிக்கொல்லி.

16. எஸ்தராக்குதல் என்றால் என்ன?

ஆல்ககாலுடன் அமிலம் சேர்ந்து எஸ்தரும் நீரும் உண்டாகும் வினை. எ-டு. அசெட்டிகக்காடி எத்தில் ஆல்ககாலோடு வினையாற்றி, எத்தைல் அசெட்டேட் எஸ்தரைக் கொடுக்கும்.

17. எத்தனால் என்றால் என்ன? இதன் பயன்கள் யாவை?

வேறுபெயர் எத்தைல் ஆல்ககால். எஸ்தர், குளோரபாம் முதலியவை தயாரிக்க. பிசுமங்கள், வண்ணங்கள் முதலியவற்றிற்குக் கரைப்பான்.

18. சதுப்புநில வளி என்றால் என்ன?

மீத்தேன் உள்ள வளி. சிதையும் தாவரப் பொருளிலிருந்து உண்டாவது.

19. மீத்தேனின் பயன்கள் யாவை?

நிறமற்றதும் மணமற்றதுமான வளி. அய்டிரஜன், மீத்தைல் குளோரைடு முதலிய பொருள்கள் உண்டாக்கப் பயன்படுவது.

20. நைட்ரோமீத்தேன் என்பது யாது?

எண்ணெய் போன்ற நீர்மம். கரைப்பான். கரிமத் தொகுப்பில் பயன்படுவது.

21. ஐசோடோன் என்றால் என்ன?

ஒரே எண்ணிக்கையுள்ள அல்லணுக்களையும் வேறுபட்ட அணு எண்ணையுங் கொண்ட கருவைடுகள்.

22. ஓரகச்சமச் செறிவுக் கரைசல் என்றால் என்ன?

ஒரே ஊடுபரவு அழுத்தத்தைக் கொண்ட இரு கரைசல்கள்.

23. அசெட்டிகக் காடி என்றால் என்ன?

காரமணமும் அரிப்புத்தன்மையும் கொண்டது. குறைந்த வெப்பநிலையில் தூய அசெட்டிகக்காடி

24. இதன் பயன் யாது?

2-5% புளிக்காடி (வீனிகர்) செய்ய.

25. அசெட்டோன் என்றால் என்ன?

நிறமற்ற எரியக்கூடிய நீர்மம். இனிய மணம்.

26. இதன் பயன் யாது?

கொழுப்புகளையும் ரெசின்களையுங் கரைக்க.

27. அசெட்டலின் என்றால் என்ன?

மிகுந்த வெள்ளை ஒளியுடன் எரியும் வளி.

28. இதன் பயன்கள் யாவை?

1. உலோகங்களைத் துண்டிக்க இணைக்க.
2. ஆக்சி-அசெட்டலின் ஊதுகுழாய்களில் பயன்படுவது.
3. பழங்களைச் செயற்கையாகப் பழுக்க வைக்க.

29. அசூலின் என்றால் என்ன?

நீலமும் ஊதாவும் சேர்ந்த படிகங்கள். ஒப்பனைப் பொருள்களில் பயன்படுதல்.

30. அசூரைட் என்றால் என்ன?

இயல்பான அடிப்படைச் செம்புக் கார்பனேட்டு. நீலநிறம். ஓவியர் நிறமாகப் பயன்படுதல்.

31. லேனோலின் என்றால் என்ன? பயன்கள் யாவை?

கம்பள மசகிலிருந்து கிடைக்கும் மெழுகு போன்ற பொருள். பூச்சி மருந்துகளிலும் ஒப்பனைப் பொருள்களிலும் பயன்படுவது.

32. அனிசோல் என்றால் என்ன?

நறுமணமும் நிறமற்றதுமான நீர்மம். நறுமணப் பொருள்களில் பயன்படுவது.

33. ஸ்கேட்டோலின் பயன் யாது?

கரையக் கூடிய வெண்ணிறப்படிகம். நறுமணப் பொருள்கள் செய்ய.

34. பயனுறுகொழுப்புக் காடிகள் என்றால் என்ன?

உணவில் இயல்பாக இருக்க வேண்டிய கொழுப்பு அமிலங்கள். எ-டு லியோலிகக்காடி.

35. கொழுப்புகள் என்றால் என்ன?

கரி, அய்டிரஜன், ஆக்சிஜன் ஆகிய மூன்று தனிமங்களையுங் கொண்ட சேர்மங்கள். எ-டு எண்ணெய், நெய். உடலுக்கு ஆற்றல் அளிப்பவை.

36. இவற்றின் வகைகள் யாவை? எவை அதிகம் பயன்படுகின்றன?

1. தாவரக் கொழுப்புகள் - தேங்காய் எண்ணெய். 2. விலங்குக் கொழுப்புகள் - நெய். தாவரக் கொழுப்புகள் அதிகம் பயன்படுகின்றன.

37. கொழுப்புக் காடிகள் என்பவை யாவை?

கரிமச் சேர்மங்கள். எ-டு பால்மாட்டிகக் காடி.

38. மெழுகு என்பது யாது?

கரையாத கொழுப்புவகை. உயிரியைப் பாதுகாக்கப் பயன்படுவது. எ-டு வெண்மெழுகு. வத்திகள் செய்யவும் கட்டு வேலையிலும் காலணித் தொழிலிலும் பயன்படுவது.

39. வெண்மெழுகு என்றால் என்ன?

தேன்மெழுகிற்கு மாற்றாக வண்ணங்களிலும் மெழுகுகளிலும் பயன்படுவது.

40. பயனுறு எண்ணெய் என்றால் என்ன?

மணமுள்ள இயற்கை எண்ணெய். எ-டு நாரத்தை எண்ணெய், பூசுஎண்ணெய்கள்.

41. ஆவியாகக் கூடிய எண்ணெய்கள் யாவை? பயனுறு எண்ணெய்கள். நீலகிரித் தைலம், கற்பூரத் தைலம்.

42. தாவர எண்ணெய்கள் யாவை?

பொதுவாக வித்துகளிலிருந்து பெறப்படுபவை. நல்லெண்ணெய் - எள். கடலை எண்ணெய் நிலக்கடலை. தேங்காய் எண்ணெய் - தேங்காய்.

43. பைனின் என்பது யாது? பயன் என்ன?

கற்பூரத்தைலத்தின் முதன்மையான பகுதி (டர்பீன்). ஏனைய பயனுறுஎண்ணெய்களிலும் காணப்படுவது. சூடம் செய்யப் பயன்படுவது.

44. கனிம எண்ணெய் என்றால் என்ன?

கனிமத் தோற்றத்தையும் அய்டிரோகார்பன் கலவையுங்கொண்ட எண்ணெய். எ-டு மண்ணெண்ணெய்.

45. கனிமவயமாதல் என்றால் என்ன?

மடகு என்பது நுண்ணுயிரிகளால் உண்டாக்கப்படும் கரிமப் பொருள்களைக் கொண்டது. இறுதியாக இவை எல்லாம் கரி இரு ஆக்சைடு, நீர், கனிமங்கள் என்னும் பகுதிகளாக மாற்றப்படுகின்றன. இந்நிகழ்ச்சியே கனிமவயமாதல்.

45. அரக்கெண்ணெய் என்றால் என்ன?

ஆல்ககால், அரக்கு ஆகியவற்றின் மெழுகு எண்ணெய்.

47. அமினோகாடிகள் என்பவை யாவை?

இவை இன்றியமையா வேதிப்பொருள்கள். கார்பாக்சிலிகக் காடிகளின் வழிப் பொருள்கள். உடல்வளர்ச்சிக்கு இன்றியமையாதவை.

48. இவற்றின் வகைகள் யாவை?

பயன்மிகுந்தவை - 10
பயன் குறைந்தவை - 10

49. இக்காடிகளின் பண்புகள் யாவை?

1. புரதத்தின் அடிப்படை அலகுகள்.
2. கார, காடித் தொகுதிகள் கொண்டவை. குறிப்பிட்ட பிஎச் மதிப்பு.

3. ஒளி இயக்கமுள்ளவை.

50. இருபது அமினோ காடிகள் யாவை?

1. அலனைன்
2. வேலைன்
3. லூசின்
4. ஐசோலூசின்
5. புரோலைன்
6. மெத்தியோனைன்
7. பினைலாலேனைன்
8. கிளைசின்
9. செரைன்
10. தெரியோனைன்
11. சிஸ்டைன்
12. அஸ்பர்ஜின்
13. குளுட்டாமின்
14. டையரோசின்
15. அஸ்பார்டிகக் காடி
16. குளூட்டாமிகக்காடி
17. லைசின்
18. அரிஜினைன்
19. இஸ்டிடைன்
20. டிரிப்டோபன்

51. பெரிடன் என்றால் என்ன?

பெரிய புரத மூலக்கூறு. இதன் மின்னணுக்கள் ஒளி ஊடுருவும் தன்மையற்றவை. ஆகவே, மின்னணு நுண்ணோக்கிகளில் குறியிடும் பொருள். மண்ணீரலில் இரும்புச் சேமிப்புப் புரதமாக உள்ளது.

52. ஆஸ்பர்டின் என்றால் என்ன?

செயற்கை இனிப்பு; சர்க்கரைக்கு மாற்று (1994).

53. டெக்ஸ்ரோஸ் என்றால் என்ன? பயன் யாது?

குளுகோஸ் அல்லது கொடிமுந்திரிச் சர்க்கரை. பழப் பாதுகாப்புப் பொருள். மருந்துகளில் இனிப்பாக்கி.

54. சார்பிடாலின் பயன்கள் யாவை?

வெண்ணிறப்படிகம். சர்க்கரைக்கு மாற்று. தொகுப்புப் பிசியன்கள் செய்ய.

55. சுக்ரோஸ் என்பது என்ன?

கரும்புச் சர்க்கரை, ஓர் இரட்டைச் சர்க்கரை. குளுகோஸ், பிரக்டோஸ் ஆகியவற்றிலிருந்து பெறப்படுவது.

56. சர்க்கரை என்றால் என்ன?

பொதுவாக இது கரும்புச்சர்க்கரை. இனிப்புச்சுவை. அதிகம் பயன்படுவது.

57. சர்க்கரைக் காடி என்றால் என்ன?

ஒற்றைச் சர்க்கரையிலிருந்து ஆக்சிஜன் ஏற்றத்தால் உண்டாகும் அமிலம்.

58. சர்க்கரைச் சாராயம் என்றால் என்ன?

ஒற்றைச் சர்க்கரையை ஒடுக்கிப் பெறுவது.

59. சேக்ரைன் என்றால் என்ன?

மிக இனிப்புள்ள வெண்ணிறப் படிகம். கலோரி மதிப்பில்லை. சர்க்கரைக்கு மாற்று.

60. சர்க்கரைச் செறிவுமானி என்றால் என்ன?

சர்க்கரைக் கரைசல்களின் செறிவினை அளக்குங் கருவி.

61. கேலக்டோஸ் என்றால் என்ன?

பால் சர்க்கரையை நீராற்பகுக்கக் கிடைப்பது. பன்மச் சர்க்கரைடாகக் கடற்பாசிகளிலும் கோந்துகளிலும் காணப்படுவது.

62. பழச்சர்க்கரை (பிரக்டோஸ்) என்றால் என்ன?

மிக இனிப்பான சர்க்கரை. தேனிலும் பழங்களிலும் உள்ளது. இனிப்பூட்டும் பொருள்கள் செய்யப்பயன்படுகிறது.

63. அகார்-அகார் என்றால் என்ன?

கடல்பாசிகளிலிருந்து பெறப்படும் பிசின் போன்ற பொருள்.

64. இதன் பயன்கள் யாவை?

வளர்ப்புக் கரைசலைக் கட்டியாக்கும், உணவுப் பண்டங்கள் செய்ய.

65. பைரிடினின் பயன்கள் யாவை?

அருவருக்கத்தக்க மணமுள்ளதும் நிறமற்றதுமான நீர்மம். கரைப்பான், வினையூக்கி, உப்பீனிஏற்றி.

66. பைரிமிடின் என்பது என்ன?

நைட்ரஜன் ஊட்டமுள்ள எளிய கரிமக்கூறு.

67. இதன் மூலங்கள் யாவை?

சைட்டோசின், தைமின், யூராசில், தயமின்.

68. இம்மூலங்கள் எவற்றின் இயைபுறுப்புகள்?

உட்கரு காடிகளின் இயைபுறுப்புகள்.

69. பியுரைன் என்பது யாது?

வெண்ணிறப்படிகம். அடினைன், குவானைன் முதலிய வேதிப்பொருள்கள் உண்டாகக் கருவாக இருப்பது.

70. பாதுகாப்புப் பொருள்கள் யாவை?

1. பார்மலின் - இறந்த தாவரங்களிலும் விலங்குகளையும் பாதுகாக்கும் நீர்மம்.
2. ஊறுகாய் - இதில் உப்பு, கடுகு எண்ணெய் பாதுகாப்புப் பொருள்கள்.

71. புளிங்காடி என்றால் என்ன?

வீனிகர். நீர்த்த பனி போன்ற அசெட்டிகக் காடி. ஊறுகாய்ப் பாதுகாப்புப் பொருள்.

72. வினைல் ஈத்தரின் பயன் யாது?

நன்கு எரியக் கூடிய நீர்மம், மயக்க மருந்து.

73. வைட்டமின் முன்பொருள் என்பது யாது?

வைட்டமினுக்கு முந்தியது. எ-டு பீட்டா கரோடின் வைட்டமின் ஏயைத் தருவது.

74. பைரிடாக்சின் என்பது என்ன?

வைட்டமின் பி.

75. பான்தோதெனிக்காடி என்றால் என்ன?

வைட்டமின் தொகுதியைச் சார்ந்தது (A). இது குறையுமானால் தோல் கோளாறு உணவு வழிக்கோளாறு ஆகியவை ஏற்படும்.

76. போலிகக்காடி என்றால் என்ன?

நீரில் கரையக்கூடிய வைட்டமின். பி- தொகுதியில் ஒன்று. பசுங்காய்கறிகளிலும் இலைகளிலும் உள்ளது. இது குறையுமானால் குருதிச்சோகை உண்டாகும்.

77. அடர்மின் என்றால் என்ன? பைரிடாக்சின்; வைட்டமின் B4

78. இதன் பயன் யாது?

பால்காடிக் குச்சி வடிவ உயிர்கள், சில பூஞ்சைகள், ஈஸ்டுகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு இது இன்றியமையாதது.

79. பயாட்டின் என்பது என்ன?

வைட்டமின் பி தொகுதியுள் ஒன்று. இதன் பெயர் வைட்டமின் எச்.

80. இனாசிடால் என்றால் என்ன?

ஒளி இயக்கமுள்ள வெண்ணிறப் படிகம். வைட்டமின் பி தொகுதியிலுள்ளது. விலங்குணவின் இன்றியமையாப் பகுதி.

81. சாயம் என்றால் என்ன?

தோல், துணி முதலியவற்றை நிறமாக்கும் பொருள். பெரும்பாலான சாயங்கள் தொகுப்புக் கரிமச்சாயங்கள்.

82. மாவே என்பது யாது? இதைத் தொகுத்தது யார்?

கரிமச் சாயங்களில் முதல் சாயம். இது 1856இல் அனிலைனிலிருந்து பெர்கின் என்பவரால் தொகுக்கப்பட்டது.

83. சாயத்தின் பலவகைகள் யாவை?

1. காடிச் சாயம்
2. காரச் சாயம்
3. தோய்சாயம்
4. நேரடிச் சாயம்
5. ஆசோ சாயம்

84. தொட்டிச் சாயங்கள் என்பவை யாவை?

இவை கரையாச் சாயங்கள். நீர்த்த காரத்தில் கரையும் வழிப்பொருள்களில் இவை சேர்ந்து முதலில் ஒடுக்கப் பெறும். இந்நிலைமையில் சில இழைகளில் ஏறும் (பருத்தி). கரைசல் சாயந்தோய்க்க வேண்டிய பொருளோடு சேர்க்கப்படும். கரையாச்சாயம் காற்றுவெளி ஆக்சிஜன் ஏற்றத்தால் இழைகளில் மீட்பாக்கம் பெறும்.

85. ஆசோ சாயங்கள் என்றால் என்ன?

வெடிவளிச் சாயங்கள். நைட்ரஜன் (வெடிவளி) இதன் கூட்டுப் பொருளில் உள்ளது. நிறம் மஞ்சள், சிவப்பு அல்லது செம்பழுப்பு.

86. காடிச் சாயங்கள் என்றால் என்ன?

கரிமக் காடிகளின் சோடிய உப்புகள். எ-டு ஈயோசின்.

87. இவற்றின் பயன் யாது?

பட்டு, கம்பளம் ஆகியவற்றைச் சாயம் தோய்க்க.

88. ஒளிர்வண்ணக்குழைவு என்றால் என்ன?

ஒளிர்வுள்ள கரிமச்சேர்மங்களிலிருந்து (கால்சியம் சல்பைடு) செய்யப்படும் பூச்சு. ஒளிபட ஒளிரும்.

89. அவுரி என்றால் என்ன? பயன் யாது?

கருநீலத்தூள். முதன்மைச் சாயம்.

90. அவுரிச் சிவப்பு என்றால் என்ன?

இயற்கை அவுரியிலிருந்து கிடைப்பது. இண்டிகோட்டின் என்னும் வேதிப்பொருளின் மாற்றியம்.

91. சைலீனின் பயன் யாது?

இது சைலால் என்னுங் கரிமப் பொருள். சாயங்கள் உண்டாக்கப் பயன்படுவது.

92. சைலிடைன் பயன் யாது?

ஒரு கரிமப் பொருள். சாயங்கள் உண்டு பண்ணப் பயன்படுவது.

93. அனிலைன் என்றால் என்ன?

எண்ணெய் போன்ற நீர்மம், நிறமற்றது, நச்சுத்தன்மையுள்ளது, அருவருக்கும் மணம்.

94. இதன் பயன்கள் யாவை?

சாயங்கள் மருந்துகள் செய்யப் பயன்படுவது.

95. கீல்காரை என்றால் என்ன?

ஒட்டக்கூடிய அரைகெட்டிப் பொருள். கரிய நிறம். வண்ணங்களிலும் பூசும் எண்ணெய்களிலும் பயன்படுவது.

96. நீலக்கீல் என்றால் என்ன?

இது எரியக்கூடிய பல கனிமப் பொருள்களைக் கொண்டது. அவையாவன: அஸ்பால்ட் நாப்தா, பெட்ரோலியம்.

97. ஆந்தரசீன் என்றால் என்ன?

பல வளைய மூலக்கூறுள்ளதும் வெண்ணி நிறப் படிகமாக உள்ளதுமான கரிம வேதிப்பொருள்.

98. இதன் பயன் யாது?

இது சாயங்களை அளிப்பது.

99. சாந்தீனின் பயன் யாது?

கரி, அய்டிரஜன், ஆக்சிஜன் ஆகியவற்றின் படிகம். சாயப்பொருள்.

100. பினாசைனின் பயன் யாது?

மஞ்சள் நிறப்படிகம். சாயங்கள் செய்ய.

101. பினாயில் என்பது என்ன? பயன்கள் யாவை?

கார்பாலிகக்காடி, நஞ்சு, தொற்றுநீக்கி, சாயங்களும் பிளாஸ்டிக்குகளும் செய்யப் பயன்படுவது.

102. பூசு எண்ணெய்கள் என்றால் என்ன?

மெருகெண்ணெய்கள். இவை நிறமற்றவை. கண்ணாடி போல ஒளிபுக விடும். பூச்சுடன் சாயம் சேர்த்தும் பூசலாம்.

103. இவற்றின் வகைகள் யாவை?

1. ஸ்பிரிட் பூசு எண்ணெய்கள் - ஆல்கஹால் சேர்க்கப்படும்.
2. எண்ணெய் வகைப் பூசு எண்ணெய். இதில் ஆளி விதை எண்ணெய் சேர்க்கப்படும்.

104. நிமிளை என்றால் என்ன?

மஞ்சள் நிற வடி. உயிர்ப் பிசின். அணிகலன்களில் பயன்படுவது.

105. டைனமைட் என்பது யாது?

ஆற்றல் வாய்ந்த வெடி பொருள். நைட்ரோ கிளிசரினிலிருந்து செய்யப் பயன்படுவது. இதிலுள்ள ஏனைய பகுதிகள் மரத்தூள், அம்மோனியம் நைட்ரேட்

106. இதன் சிறப்பு யாது?

இரண்டாம் உலகப் போரில் அதிகம் பயன்பட்டது.

இதைத் தொகுத்தவர் ஆல்பிரட் நோபல். இதன் வருவாயிலிருந்து இவர் நோபல் பரிசுகளை நிறுவினார்.

107. கார்டைட்டின் பயன் யாது?

இது ஒரு வெடிகலவை. மென்மையூட்டிகளும் நிலைப்படுத்திகளும் சேர்க்கப்பட்டிருக்கும். துப்பாக்கி வெடிமருந்து.

108. வெடிமருந்துகள் என்றால் என்ன?

விரைவான வேதிவினைக்குட்பட்டு வெப்பத்தையும் அதிக அழுத்தத்தையும் உண்டாக்கும். பொருள்கள் உண்டாக்கும் வளியின் பருமன், வெடிக்கும் மூலப் பொருளின் பருமனைவிட அதிகம். எ-டு. துப்பாக்கி மருந்து, செல்லுலோஸ் நைட்ரேட் நைட்ரோகிளைசரின், டிஎன்டி, ஆர்டிஎக்ஸ்.

109. பிளாஸ்டிக்குகள் என்பவை யாவை?

இவை பலபடியாக்கல் வினைகளில் உருவாகும் கரிமப்பிசின்கள்.

110. இவற்றின் வகைகள் யாவை?

1. வெப்பஇளகு பிளாஸ்டிக்குகள் - பாலிதீன், நைலான். 2. வெப்பஇறுகு பிளாஸ்டிக்குகள் - பேக்லைட்டுகள், பாலியஸ்டர்.

111. பிளாஸ்டிக்குகளின் பண்புகள் யாவை?

1. நெகிழ்வற்ற உறுதிப்பொருள்கள். 2. வெப்பத்தாலும் அழுத்தத்தாலும் ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் அச்சு வார்த்து எடுக்கலாம். 3. வெப்பத்தைத் தாங்கக் கூடியவை.

112. பிவிசி என்பது என்ன? அதன் பயன்கள் யாவை?

பாலிவினைல் குளோரைடு. இது பிளாஸ்டிக்கு வகையில் மிகப் பயனுள்ளது. குழாய்கள், கைப்பைகள், விளையாட்டுப் பொருள்கள், காலணிகள் முதலியவை செய்யப் பயன்படுவது.

113. மென்மையூட்டிகள் என்றால் என்ன?

வார்ப்பிகள். இவற்றைச் சேர்ப்பதால், ரப்பருக்கு நிலைப்புடைய அதிக வளைதலும் மீட்சியும் கிடைக்கும்.

114. வார்ப்பியத்திறன் என்றால் என்ன?

நெகிழ்திறன். அழுத்தத்தினால் தன் அளவு அல்லது வடிவத்தில் நிலையாக மாறும் பொருள்களின் பண்பு. இது பிளாஸ்டிக் என்னும் பொருளுக்குண்டு.

115. கிரிசாலின் பயன்கள் யாவை?

இது நிலக்கரித் தாரிலிருந்து கிடைப்பது. புரையத்தடுப்பி செய்யவும் சாயங்கள், வெடிமருந்துகள், பிளாஸ்டிக்குகள் செய்யவும் பயன்படுவது.

116. கிரியோசோட்டின் பயன் யாது?

நிலக்கரித் தாரிலிருந்து பெறப்படும் செம்பழுப்பு நிறமுள்ள நீர்மம். மரத்தைப் பாதுகாக்கப் பயன்படுவது.

117. பேக்லைட் என்றால் என்ன?

தொகுப்பு முறையில் செய்யப்பட்ட முதல் பிளாஸ்டிக் பொருள்களில் ஒன்று.

118. இதன் பயன்கள் யாவை?

தொலைபேசி, மின்சொடுக்கிகள், மின்காப்புப் பொருள்கள் செய்யப் பயன்படுவது.

119. அபைட்டிகக்காடி என்றால் என்ன?

உரோசினிலிருந்து பெறப்படுவது. முச்சுழல்காடி

120. இதன் பயன் யாது?

பிளாஸ்டிக் தொழிலிலும் எஸ்தர்கள் செய்யவும் பயன்படுவது.

121. ரப்பர் என்பது யாது?

மரப்பாலிலிருந்து செய்யப்படும் கடின மீள்பொருள். இயற்கைப் பலபடிச் சேர்மங்களில் ஒன்று.

122. ரப்பரின் வகைகள் யாவை?

1. இயற்கை ரப்பர், 2. செயற்கை ரப்பர்.

123. செயற்கை ரப்பரின் வகைகள் யாவை?

1. தயோகால் - எண்ணெய் எடுத்துச் செல்லும் குழாய் செய்ய. 2. நியோப்ரீன் - மீன் காப்புறைகள் செய்ய. 3. பியூட்டைல் ரப்பர் - பேருந்துப்பகுதிகள் செய்ய. 4. நைட்ரைல் ரப்பர் - குழாய்கள், வானூர்திப் பகுதிகள் செய்ய.

124. பூட்டேன் என்றால் என்ன?

மீத்தேன் வரிசை அய்டிரோகார்பன். எடுத்துச் செல்லக்கூடிய எரிபொருள்.

125. பூட்டைல் ரப்பர் என்றால் என்ன?

செயற்கை ரப்பர், டயர்கள், குழாய்கள், கொள்கலன் முதலியவை செய்யப் பயன்படுவது.

126. ஐசோபிரீனின் பயன் யாது?

செயற்கை ரப்பர் செய்ய.

127. பூட்டாடைன் என்றால் என்ன?

அய்டிரோகார்பன் வளி, செயற்கை ரப்பர் செய்யப் பயன்படுவது.

பூட்டானால் என்றால் என்ன?

எரியக் கூடிய நிறமற்ற நீர்மம். பிளாஸ்டிக் தொழிலிலும் ரப்பர் தொழிலிலும் பயன்படுவது.

128. பூட்டானன் என்றால் என்ன?

எரியக்கூடிய நீர்மம். பிளாஸ்டிக் தொழிலில் கரைப்பான்.

130. பெட்ரோலியம் என்பது என்ன?

பாறை எண்ணெய் அல்லது கல்லெண்ணெய்.

131. இது எவ்வாறு கிடைக்கிறது?

கடல் விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றிலிருந்து தோன்றிய அய்டிரோ கார்பன் கலவை. நிலத்திற்கடியில் பாறையடுக்குகளுக்கிடையில் காணப்படுவது. வேறு பெயர் பண்படா எண்ணெய்.

132. இதை வடித்துப் பகுக்கக் கிடைக்கும் பொருள்கள் யாவை?

டீசல், மண்ணெய்ணெய், கேசோலின், தூய்மையாக்கிய வளி, உயவிடு எண்ணெய்களும் வெண்மெழுகும் எஞ்சிய பொருளிலிருந்து கிடைக்கின்றன.

133. பெட்ரோலியத்திலிருந்து கிடைக்கும் கரும்பொருள் யாது?

நீலக்கீல்தார்.

134. பெட்ரோலியம் ஈதர் என்றால் என்ன?

ஆல்கேன் வரிசையைச் சார்ந்த கீழ்நிலை அய்டிரோ கார்பன் கலவை. முதன்மையாகப் பெண்டேன், கெக்சேன் ஆகியவற்றைக் கொண்டது.

135. பாறை எண்ணெய்ப் பொருள்கள் (பெட்ரோ வேதிப் பொருள்கள் என்றால் என்ன?

பெட்ரோலியம் அல்லது இயற்கை வளியிலிருந்து உண்டாகும் பொருள்கள்.

136. பெட்ரோல் என்பது என்ன? பயன் யாது?

ஆவியாகக் கூடிய அரிய கலவை. ஊர்தி எரிபொருள். ஒரு நாட்டின் அதிக பொருள்வளம் இதைச் சார்ந்ததே.

137. பெட்ரோலை எப்படிப் பெறலாம்?

பெட்ரோலியத்தை வடித்துப் பகுத்துப் பெறலாம்.

138. பெட்ரோலிலுள்ள கரிமப் பொருள்கள் யாவை?

இவை முதன்மையான அய்டிரோகார்பன்கள். கெப்டேன், கெக்சேன், அக்டேன்.

139. பெட்ரோலேட்டம் என்பது என்ன?

பெட்ரோலிய இழுது. தூய்மை செய்யப்பட்ட அய்டிரோகார்பன் கலவை. அரைக்கெட்டி நிலையிலுள்ள மஞ்சள்நிற பாரபின்.

140. டிரிப்டேனின் பயன் யாது?

வானப் போக்குவரவு எரிபொருள்.

141. லூசிஜன் என்பது யாது?

காற்றுடன் கலக்கப்பட்ட விளக்கு எரிஎண்ணெய்.

142. சாராயம் என்றால் என்ன?

ஈத்தேனிலிருந்து பெறப்படும் கரிமக்கூட்டுப் பொருள்.

143. இதன் பண்புகள் யாவை?

நீர்மநிலையில் உள்ளது. எளிதில் தீப்பிடிக்கும் ஆவியாகும். எரிச்சலைத் தரக்கூடிய சுவை. இனிய பழச்சாறு போன்ற மணம்.

144. இதன் பயன்கள் யாவை?

1. ஊக்கியாக இருப்பதால் குடிக்கப் பயன்படுவது. 2. அயோடின், கற்பூரம் முதலியவற்றைக் கரைப்பது. 3. எரிபொருள். 4. மயக்க மருந்து.

145. போர்னியால் சாராயம் என்றால் என்ன?

ஒளி ஊடுருவக் கூடிய வெண்ணிறத் திண்மம். செயற்கைச் சூடமும் நறுமணப் பொருளும் செய்யப் பயன்படுவது.

146. தூய்மைப்படுத்திய ஸ்பிரிட்டு என்றால் என்ன?

எத்தனால். இது பெருமளவில் நொதித்தல் மூலம் செய்யப்படுவது. இதில் 95% மேலும் எத்தனால் இருக்கும்.

147. ஆற்றல் ஆல்ககால் என்றால் என்ன?

ஆல்ககாலுடன் பெட்ரோலைச் சேர்த்துச் செய்யப்படும் கலவை. உந்துவண்டி எந்திரங்கள், ஏவுகணை எந்திரங்கள் ஆகியவற்றின் எரிபொருள்.

148. தனி ஆல்ககால் பயன்கள் யாவை?

இது எத்தைல் ஆல்ககால். கரைப்பான். பெட்ரோலுடன் சேர்த்துத் திறன் ஆல்ககால் செய்யவும் மருந்துகள் செய்யவும் பயன்படுவது.

149. ஸ்பிரிட் என்பது யாது?

இது மெத்தனால் கலந்தது. ஓர் ஆய்வக எரிபொருள்.

150. இதன் இருவகைகள் யாவை?

1. மெதிலேறு ஸ்பிரிட் 2. வடித்துப் பகுத்த ஸ்பிரிட்

151. தனி ஆல்ககாலைப் பெறுவது எவ்வாறு?

வடித்துப் பகுத்த ஸ்பிரிட்டு. 95% ஆல்ககால். இதைச் சுட்ட சுண்ணாம்புடன் சேர்த்து மேலும் வடித்துப் பகுக்கக் கிடைப்பதுவே தனி ஆல்ககால்.

152. மீத்தைல் ஆல்ககாலின் பயன்கள் யாவை?

வேறுபெயர் மெத்தனால், கரைப்பான். பிளாஸ்டிக் மற்றும் மருந்துகள் தயாரிக்க.

153. மெதிலேறு சாராயத்தின் பயன் யாது?

மெத்தனால் சேர்ந்த ஈத்தைல் ஆல்க்கால். எரிபொருள்.

154. மெத்திலின் நீலம் என்றால் என்ன?

கரையக்கூடிய ஆழ்ந்த நீலச்சாயம். ஆய்வகங்களில் சாயமேற்றிகள்.

155. இரு மீத்தைல் ஈதர் என்றால் என்ன? நீரில் அரிதில் கரையக் கூடிய வளி. குளிர்விக்கும் பொருளாகவும் குறைவெப்பநிலைக் கரைப்பானாகவும் பயன்படுவது.

156. மீத்தைல் ஐசோ சயனேட்டு என்றால் என்ன?

அதிக நச்சுள்ளதும் ஆவியாகக் கூடியதுமான வளி. கார்பனேட்டு நுண்கொல்லிகள் செய்யப் பயன்படுதல்.

157. போபால் துன்பநிகழ்ச்சி என்பது என்ன?

மீத்தைல் ஐசோ சயனேட்டு அது உண்டாகும் நிலையத்திலிருந்து கசிந்ததால் 1984 டிசம்பர் 2இல் போபாலில் 2000க்கு மேற்பட்டோர் இறந்தனர். இதுவே போபால் துன்பநிகழ்ச்சி.

158. மீத்தைல் கிச்சிலி என்றால் என்ன?

காடிச்சாயம். பட்டுச் சாயமேற்றவும் காடிகாரத் தகுதி பார்த்தலில் நிலைகாட்டியாகவும் பயன்படுதல்.

159. மீத்தைல் பாரதியான் என்றால் என்ன?

வெண்ணிறத் திண்மம் பூச்சிக்கொல்லி.

160. மீத்தைல் சிவப்பு என்றால் என்ன?

காடிச்சாயம்.காடி-காரத் தகுதி பார்த்தலில் நிலைகாட்டி

161. வெறியம் (லிக்கர்) என்றால் என்ன?

இனிப்பும் மணமும் ஊட்டப்பெற்ற ஆல்ககால் செய்பொருள். எ-டு. பிராந்தி, ஒயின்.

162. நெராலின் பயன் யாது?

நிறமற்ற நிறைவுறா ஆல்ககால். மணமூட்டும் பொருள்களில் பயன்படுவது.

163. சாண எரிவளி என்றால் என்ன?

சாணத்தை நொதிக்கச் செய்யும்பொழுது தோன்றும் வளி. அதிக அளவு மீத்தேன் சிறிதளவு ஈத்தேன் அடங்கியது. சிறந்த எரிபொருள்.

164. மண்ணெண்ணெயின் பயன் யாது?

ஒரு பாரபின் அய்டிரோகார்பன். நீர்ம எரிபொருள், கரைப்பான்.

165. எரிபொருள் என்றால் என்ன?

எரிக்கும்பொழுது வெப்ப ஆற்றலைத் தரும் கரிமப்பொருள். இது இயக்கியின் (புரபெல்லண்ட்) ஒரு பகுதி. மற்றொரு பகுதி ஆக்சிஜன் ஏற்றி. எரிபொருள். எரிய உதவும் பொருள் ஆகிய இரண்டினாலும் ஆனது இயக்கி, எ-டு. ஆக்சிஜன், ஆல்ககால். இவ்விரண்டில் முன்னது எரியவைக்கும் பொருள். பின்னது எரியும் பொருள். ஏவுகணை எரிபொருள்கள் இயக்கிகள் ஆகும்.

166. தொல்படிவ எரிபொருள் என்றால் என்ன?

நிலக்கரி, எண்ணெய் முதலியவை.

167. அய்டிராசின் என்றால் என்ன?

நிறமற்ற நீர்மமான ஆற்றல்வாய்ந்த ஒடுக்கி ஏவுகணை எரிபொருள்.

168. கேசோகால் என்பது என்ன?

கேசோலின். 10-50% எத்தைல் ஆல்ககால் சேர்ந்தது. அகக்கனற்சி எந்திர எரிபொருள்.

169. வளிச்சேமிப்புமானி என்றால் என்ன?

வளிதேக்கி வைக்கும் பெரிய தொட்டி

170. ஆஸ்பிரின் என்றால் என்ன?

அசெட்டைல் சாலிசிலிகக் காடி உடல் வலிநீக்கி.

171. அட்ரோபைன் என்றால் என்ன?

ஒரு காரத்தன்மையுள்ள பொருள். மருத்துவத்தில் கண்பார்வையை விரிவடையச் செய்யப் பயன்படுவது.

172. சல்பா மருந்துகள் யாவை?

சல்பனாமைடு தொகுதியுள்ள கரிமக் கூட்டுப் பொருள்கள் சேர்ந்த கலவை. நச்சுயிர் நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுபவை.

173. சல்பா கொனைடின் பயன் யாது?

சல்பனாமைடு, வயிற்றுப்போக்கை நீக்கும் மருந்து.

174. அபின் (ஓபியம்) என்பது யாது?

கசகசாச் செடியிலிருந்து பெறப்படும் போதைப்பொருள். கடத்தப்படும் பொருள்.

175. மெஸ்காலைனின் பயன் யாது?

வெண்ணிறத்தூள். மனமயக்க மருந்து.

176. நார்சைன் என்பது என்ன? அபினுள்ளது, வெண்ணிறப்படிகம். தசையைத் தளர்ச்சியாக்கப் பயன்படுவது.

177. மரமரப்பிகள் என்றால் என்ன?

வலியை நீக்கும் அல்லது தூக்கத்தை உண்டாக்கும் மருந்துகள்.

178. சினியோலின் பயன் யாது?

ஒரு கரிமப் பொருள். மருந்துகளிலும் நறுமணப் பொருள்களிலும் பயன்படுதல்.

179. குளோராபாம் என்பது யாது?

பழைய மயக்க மருந்து.

180. குளோரியமானி என்றால் என்ன?

சலவைத் தூளிலுள்ள குளோரினை அளக்கப் பயன்படுங் கருவி.

181. குளோரோமைசிட்டினின் பயன் யாது?

நச்சுக் காய்ச்சலுக்கும் அழற்சிக்குமுரிய மருந்து.

182. சைக்ளோபுரோப்பேன் என்றால் என்ன?

இனிய மணமுள்ள நிறமற்ற வளி. மயக்க மருந்து.

183. மார்பைன் என்றால் என்ன?

அபினில் முதன்மையாகவுள்ள காரமம். வலிநீக்கி.

184. மார்போலைன் என்றால் என்ன?

நிறமற்றது. நீர் ஈர்க்கும் நீர்மம். ரெசின்களையும் மெழுகுகளையும் கரைப்பது.

185. உயிரி எதிர்ப்பிகள் என்றால் என்ன?

இவை கரிமச் சேர்மத் தொகுதிகள். நுண்ணுயிரிகளால் உண்டாக்கப்படுபவை. நுண்ணுயிர்ச் செயல்களைத் தடைசெய்பவை. எ-டு பெனிசிலின், ஸ்டெப்டோமைசின், ஆரியோமைசின், டெட்ராமைசின்.

186. பென்சால்டிகைடு என்பது யாது?

வாதுமை மனங்கொண்ட மஞ்சள் நிறக்கரிம எண்ணெய். உணவுக்குச் சுவை சேர்க்கவும், சாயங்கள், உயிரி எதிர்ப்புப் பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுவது.

187. பென்சீன் என்பது என்ன?

மணமுள்ள அய்டிரோகார்பன். கொழுப்பைக் கரைக்கவும் உலர்சலவை செய்யவும் பயன்படுவது.

188. இதை யார் எப்பொழுது கண்டுபிடித்தார்?

பாரடே 1825இல் கண்டுபிடித்தார்.

189. பென்சாயின் என்பது யாது?

ஜாவா மரத்திலிருந்து எடுக்கப்படும் பிசின். மூச்சுக் கட்டை நீக்கப் பயன்படுவது.

190. ஆல்டிகார்ப் என்பது என்ன?

வெண்ணிறப் படிகம்; பூச்சிக்கொல்லி.

191. பென்சல் போதியான் என்றால் என்ன?

வெளிர்மஞ்சள் நிற நீர்மம். பெரும்பான்மையான கரிமக் கரைப்பான்களில் கரையும். பூச்சிக்கொல்லி.

192. மானோ குரோட்டாபாஸ் என்பது என்ன?

நிறமற்ற படிகங்கள். பூச்சிக்கொல்லி.

193. லிண்டேன் என்றால் என்ன?

வெண்ணிற நிறமற்ற படிகம். பூச்சிக்கொல்லி.

194. மெந்தாலின் பயன் யாது?

ஆவியாகக் கூடிய முப்பட்ட வடிவப் படிகம். புரைத்தடுப்பான்.

195. மியோபாலின் பயன் யாது?

வெண்ணிறப்படிகம். பூச்சிக்கொல்லி.

196. மீப்பாசபோலனின் பயன் யாது?

அரக்குநிறமுள்ள நச்சு நீர்மம். பூச்சிக்கொல்லி.

197. மாலதியானின் பயன் யாது?

ஆர்கனோபாஸ்பேட் உப்பு. பாதுகாப்பான பூச்சிக்கொல்லி.

198. மாலிக அய்டிரசீனின் பயன்கள் யாவை?

வளர்ச்சியைத் தடுப்பது, பயிர்க்கொல்லி.

199. ஆல்டிரின் என்பது என்ன?

இது ஒரு வேதிப்பொருள். கரையான் கொல்லி.

200. இதை உருவாக்கியது யார்?

ஜெர்மன் வேதியியலார் குர்ட் ஆல்டர்.

201. குயின் கைடிரோனின் பயன்கள் யாவை?

பசும்படிகம். ஒளிப்படக் கலையிலும் எதிர் ஆக்சிஜன் ஏற்றியாகவும் பயன்படுவது.

202. குயினைனின் பயன்கள் யாவை?

மிகக் கசப்பான படிகக் காரமம். சின்கோனா பட்டையிலிருந்து பெறப்படுவது. மலேரியாவிற்கு மருந்து.

203. குயினோலைனின் பயன்கள் யாவை?

உப்பைத் தருவது. நிலக்கரித்தாரில் உள்ளது. கரைப்பான். சாயங்கள் செய்யவும் பயன்படுதல்.

204. பிஎச்சி (BHC) என்றால் என்ன?

பென்சீன் அறுகுளோரைடு, உருவமற்றச் சாம்பல் நிறக் கெட்டிப்பொருள். ஆற்றல்மிக்க பூச்சிக்கொல்லி.

205. டீடீடி (DDT) என்றால் என்ன? அதன் பயன் யாது?

இரு குளோரோ இருபினைல் முக்குளோதீன் படிகமற்ற வெள்ளைத்துள். இரைப்பை நஞ்சு.

206. இதன் வரலாறு யாது?

1874இல் ஓத்தனர் செயில்டர் என்பவரால் தொகுக்கப்பட்டது. 1930இல் இதன் பூச்சிக்கொல்லிப் பண்புகளைப் பால் முல்லர் என்பவர் கண்டறிந்தார்.

207. எண்டோசல்பன் என்றால் என்ன?

மாநிறப்படிகம். நீரில் கரையாது, சைலீனில் கரையும். பூச்சிக்கொல்லி.

208. பார்மலின் என்றால் என்ன?

பார்மல் டிகைடும் (40%) மீத்தைல் ஆல்ககாலும் (8%) நீரும் (52%) சேர்ந்த கலவை. ஒடுக்கி, தொற்றுநீக்கி, பூஞ்சைக்கொல்லி. பாதுகாப்புப் பொருள்.

209. அழுக்குநீக்கி என்றால் என்ன?

நீரின் துப்புரவாக்கும் செயலை உயர்த்தும் பொருள். எ-டு. சவர்க்காரம்.

210. நீர்விரட்டிகள் என்பவை யாவை?

நீரில் படும்பொழுது நனையாமல் இருக்குமாறு செய்யத் தோல், தாள், துணி முதலியவற்றை வெப்பப்படுத்தப் பயன்படும் வேதிப்பொருள்கள். எ-டு. பலவகை ரெக்சின்கள் அலுமினியம் அசெட்டேட் சிர்கோனியம் அசெட்டேட் 

211. கிச்சிலிக்காரணி என்றால் என்ன?

சூழ்நிலைக் கொடுமையை உண்டாக்கும் நச்சுக்காரணிகளில் ஒன்று. வியட்நாம் போரில் அமெரிக்க அரசு இக்காரணி கொண்டு வடக்கு வியட்நாம் காட்டுநிலங்களை அழித்தது.

212. தேய்ப்புப் பொருள்கள் என்றால் என்ன?

மிகக் கடினத் தன்மையும் வலுவுங் கொண்ட பொருள்கள். எ-டு வைரம், படிகக்கல்.

213. இவற்றின் பயன்கள் யாவை?

1. பிற பொருள்களின் புறப்பரப்பைத் தேய்த்துக் குறைக்க. 2. பிற பொருள்களை வெட்ட கரைக்க, மென்மையாக்க.

214. இவற்றின் வகை யாது?

இயற்கை, செயற்கைத் தேய்ப்புப் பொருள்கள்.

215. நொதித்தல் என்றால் என்ன?

இது ஒரு வேதிச்செயல். குளுக்கோஸ் சர்க்கரைக் கரைசல் ஈஸ்ட்டு என்னும் நொதியினால் சாராயமாகவும் கரி இரு ஆக்சைடாகவும் மாறுதல்.

216. நொதித்தலியல் என்றால் என்ன?

நொதித்தல் என்னும் வேதிச்செயலை ஆராயுந் தொழில் நுணுக்கத் துறை.

217. நொதிமானி என்றால் என்ன?

நொதிஅளவை அளக்கப் பயன்படுங் கருவி.

218. நொதிகள் என்பவை யாவை?

இவை உயிரியல் வினையூக்கிகள்.எ-டு டயலின் அமிலேஸ்.

219. நொதிஇயல் என்றால் என்ன?

நொதிகளை ஆராயுந் துறை.

220. நொதித்தொழில்நுட்பவியல் என்றால் என்ன?

தொழிற்சாலை முறைகளில் பிரிக்கப்பட்டதும் துய்மையானதுமான நொதிகளின் வினையூக்கப் பயனை ஆராயுந்துறை.

221. டயஸ்டேஸ் என்றால் என்ன?

விதை முளைக்கும்பொழுது உண்டாகும் நொதி. மாவிலுள்ளது.


222. இதன் வேலை யாது?

1. ஸ்டார்ச்சை மால்டோசாகவும் மால்டோசை டெக்ஸ்ரோசாகவும் மாற்றுவது. 2. கணையநீரில் அமைந்து ஸ்டார்ச்சைச் சர்க்கரையாக்குவது. வேறுபெயர் அமிலேஸ்.

223. பிளத்தல் என்றால் என்ன?

கச்சா எண்ணெய் அல்லது அதிக மூலக்கூறு எடையும் உயர்கொதிநிலையும் கொண்ட பகுதிப் பொருள்களைச் சூடாக்கிக் குறைந்த மூலக்கூறு எடையும் கொதிநிலையுங் கொண்ட அய்டிரோகார்பன்களைச் சிதைக்கும் வினை.

224. இதன் வகைகள் யாவை?

1. வெப்பப்பிளத்தல். 2. வினையூக்கி வழிப்பிளத்தல்.

225. நிலக்கரி எவ்வாறு உண்டாகிறது?

நீண்ட காலத்திற்குமுன் புவிக்குக் கீழ் புதையுண்ட காடுகள் நாளடைவில் தம்மீது ஏற்பட்ட அழுத்தம், வெப்பம் ஆகிய காரணிகளால் நிலக்கரியாக மாறின. இது கருப்புத்தங்கம் எனப்படும்.

226. நிலக்கரியின் வகைகள் யாவை?

1. அனல்மிகு நிலக்கரி. 2. புகைமிகு நிலக்கரி. 3. பழுப்பு நிலக்கரி

227. நிலக்கரி வளி என்றால் என்ன?

நிலக்கரியைச் சிதைத்து வடிக்கக் கிடைக்கும் எரிபொருள்.

228. நிலக்கரித்தார் என்றால் என்ன?

நிலக்கரியைச் சிதைத்து வடிக்கக் கிடைப்பது. சாலை போடப் பயன்படுவது.

229. பழுப்பு நிலக்கரி தமிழ்நாட்டில் எங்குக் கிடைக்கிறது?

நெய்வேலியில் கிடைக்கிறது.

250. அனல்மிகு நிலக்கரி என்றால் என்ன?

தீச்சுடர் புகையின்றி எரியும் கரி. அதிக வெப்பத்தைத் தரும் எரிபொருள்.

231. மென்னிலக்கரி என்றால் என்ன?

சுடருடன் தடையில்லாமல் எரியும் நிலக்கரி. 232. நைலான் என்பது யாது? பயன் என்ன?

பலபடியின் ஒருவகை. சிறந்த முதல் செயற்கை இழை. குதிகுடை தூரிகை, கயிறு, நீச்சல்உடை முதலியவை செய்ய.

233. இழை அல்லது நார் என்றால் என்ன?

இது செயற்கை நார். ரேயான் முதன்முதலில் செய்யப்பட்ட நார். துணிகள் நெய்யப் பயன்படுவது. நைலான், டெரிலின் முதலியவை செயற்கை நார்கள்.

234. தாள் நிற வரைவியல் என்றால் என்ன?

கரிமச் சேர்மக்கலவைகளைப் பகுத்துப் பார்க்கப் பயன்படும் துணுக்கம். இதில் பிரிப்பு விதி பயன்படுகிறது.

235. தாள் செய்தல் என்றால் என்ன?

மூங்கில், வைக்கோல், புல் முதலியவற்றிலிருந்து தாள் கிடைக்கிறது. இவற்றிலிருந்து கிடைக்கும் கூழிலிருந்து தாள் செய்யப்படுகிறது.

236. மரக்கூழ் செய்யும் இரு முறைகள் யாவை?

1. சல்பைட்டு முறை. 2. சல்பேட்டு முறை.

237. தாள் எவ்வாறு செய்யப்படுகிறது?

வலையின் மீது செலுத்தப்படுகிறது. பின், அது சூடாக்கப்பட்ட இரும்பு உருளைகளைக்கிடையே செலுத்தப்படுகிறது. இதனால் கூழ் உலர்ந்து தாளாகிறது.

238. பசையூட்டல் என்றால் என்ன?

எழுதுவதற்குப் பயன்படும் தாள் நீர்மத்தை உறிஞ்சக் கூடியதாக இருக்கக்கூடாது. அதற்காக இதில் ஜெலாட்டின் என்னும் பசைப் பொருள் தாளில் துளைகளை அடைக்கப் பூசப்படுகிறது.

239. வண்ணக்குழைவுகள் அல்லது பூச்சுகள் என்பவை யாவை?

உலர் எண்ணெயில் நிறமிகளை இரண்டறக் கலந்து பெறப்படும் ஒருபடித்தான கலவை.

240. வண்ணக் குழைவிலுள்ள பொருள்கள் யாவை?

1. ஏற்றி (வெகிகள்) 2. உலர்த்தி. 3. நீர்ப்பி (தின்னர்). 4. உரித்தல் தடுப்பி, 5. இளக்கி, 6. நிரப்பி. 241. இப்பொருள்களின் பயன்கள் யாவை?

1. உலோகத்தின் மீதும் மரத்தின் மீதும் சூழ்நிலையைப் பாதிப்பைத் தடுப்பவை. 2. அரிமானத்தைத் தடுப்பவை.

242. உயவிடுதல் என்றால் என்ன?

உயவுப் பொருள்களைப் பயன்படுத்தி உராய்வைக் குறைத்தல்.

243. உயவுப் பொருள்கள் என்றால் என்ன?

இவை மசகுப் பொருள்கள். உராய்வைக் குறைக்கப் பயன்படுபவை.

244. இவற்றின் வகைகள் யாவை?

1. திண்ம உயவுப் பொருள்கள் - மசகு சவர்க்காரம். 2. நீர்ம உயவுப் பொருள்கள் - கனிம, கரிம எண்ணெய்.

245. இவற்றின் பயன்கள் யாவை?

1. உராய்வினால் ஏற்படும் ஆற்றலிழப்பைத் தடுப்பவை. 2. எந்திர வேலைத்திறன் உயர்தல். 3. துருப்பிடித்தல், அரிமானம் ஆகியவை தவிர்க்கப்படுதல்.

246. மசகு என்றால் என்ன?

அரைக்கெட்டி நிலையிலுள்ள உயவிடுபொருள். கூழ்மமாகிய பெட்ரோல் எண்ணெய்கள் கொண்டது. கரையக் கூடிய அய்டிரோகார்பன்களும் சவர்க்காரங்களும் இதிலுண்டு.

247. லிம்னோனின் பயன்கள் யாவை?

பயன்மிகு எண்ணெய், கரைப்பான், ரெசின்கள் செய்யப் பயன்படுவது.

248. லினன் என்பது யாது?

பஞ்சுத்துணியிலிருந்து உருவாக்கப்படுவது. இதிலிருந்து பருத்தி, ரேயான் முதலியவை செய்யப்படுபவை.

249. லினாலூலின் பயன் யாது?

பயனுள்ள எண்ணெயில் காணப்படும் டர்பீன். மணமூட்டும் பொருள்களில் பயன்படுவது.

250. மேனிடால் என்றால் என்ன? பயன்கள் யாவை?

வெண்ணிறப்படிகம். செயற்கை ரெசின்கள் செய்யவும் பிளாஸ்டிக்குகள் செய்யவும் பயன்படுவது. 251. கண்ணாடித்தாள் எவ்வாறு செய்யப்படுகிறது? இதன் பயன் யாது?

காடியுடன் செல்லுலோஸ் சாந்தேட்டுக் கரைசலைச் சேர்க்க இத்தாள் கிடைக்கும். பொருள்கள் மீது சுற்றப் பயன்படுதல்.

252. செல்லுலாய்டு என்றால் என்ன?

சூடத்திலிருந்தும் செல்லுலோஸ் நைட்ரேட்டிலிருந்தும் செய்யப்படும் வெப்பப் பிளாஸ்டிக் பொருள்.

253. செல்லுலோஸ் என்றால் என்ன?

பன்மச்சர்க்கரைடு. எல்லாத் தாவரக் கண்ணறைச் சுவர்களின் சட்டகம்.

254. துப்புரவாக்கிகள் என்றால் என்ன?

சவர்க்காரம், பெட்ரோல், ஆக்சாலிகக் காடி முதலியவை. துப்புரவாக்குவதில் கறைநீக்கமும் அடங்கும். மசகை பெட்ரோல் மூலமும் எண்ணெய் வண்ணக்குழைவைக் கற்பூரத்தைலம் மூலமும் மையை ஆக்சாலிகக் காடி மூலமும் போக்கலாம்.

255. கொலாஸ்டிரால் என்பது என்ன?

கொழுப்பிலிருந்து பெறப்படும் கரிமப்பொருள். பல உயிர்ப்புச் செயல்களுக்குக் காரணம். இது உடலில் அதிகமானால் மாரடைப்பு ஏற்படும்.

256. சிட்ரேட் என்றால் என்ன?

நாரத்தைக் காடி உப்பு.

257. நாரத்தைக் காடி என்பது என்ன?

வெண்ணிறப் படிகக் காடி நாரத்தைகளின் பண்புக்குக் காரணம்.

258. இதன் உப்பு சிட்ரேட் சிட்ராலின் பயன் யாது?

எலுமிச்சையிலிருந்து பெறப்படுவது. நறுமணமூட்டும் பொருள்.

259. கேஃபின் என்றால் என்ன?

காப்பி அவரையிலும் தேயிலையிலும் உள்ள பியூரின். இதயச் செயலை ஊக்குவிப்பது. பல மருந்துகளிலும் பயன்படுவது. 260. பெக்டிகக் காடி என்றால் என்ன?

கரையாப் பொருள். பெக்டின்களை நீராற்பகுக்கக் கிடைப்பது.

261. பெக்டின் என்றால் என்ன?

நீரில் கரையக் கூடிய மாப்பொருள் கலவை. ஜெல்லைக் கொடுப்பது.

262. கிளசரின் என்பது யாது?

நடுநிலையுள்ள மணமற்ற நீர்மம். மைஉருளை வச்சிரம் செய்வதிலும் அச்சகங்களில் ஒட்டுப்பொருளாகவும் பயன்படுவது. கரைப்பான்.

263. பால்மாட்டிக் அமிலத்தின் பயன்கள் யாவை?

மெழுகு போன்ற கொழுப்புக்காடி பனை எண்ணெயிலும் மற்றக் கொழுப்புகளிலும் முப்பால்மிடினாக உள்ளது. இதன் உப்புகள் சவர்க்காரம் உண்டாகக் காரணமாக உள்ளன.

264. ஆக்சி இரு அசெட்டிக அமிலம் என்றால் என்ன?

இருமூலக் கனிமக்காடி வெண்ணிறம். கரையக்கூடியது. பிளாஸ்டிக்குகள் செய்ய.

265. நிக்கோட்டின் என்றால் என்ன?

நிறமற்ற எண்ணெய் போன்ற நீர்மம். நீரில் எளிதில் கரையும். அருவருக்கத்தக்க மணம்.

266. ஆக்சாலிகக் காடி என்றால் என்ன? பயன்கள் யாவை?

நச்சுள்ள நிறமற்ற படிகம். மை செய்யவும் வைக்கோலை வெளுக்கவும் பயன்படுவது.

267. எரு என்றால் என்ன?

உழுநிலத்தை வளப்படுத்தச் சேர்க்கும் ஊட்டப்பொருள். சாணம், புண்ணாக்கு முதலியவை இயற்கை ஊட்டப்பொருள்.

268. யூரியா சுழற்சி என்றால் என்ன?

நொதிக்கட்டுப்பாட்டு வினைகளின் சீரொழுங்கு. அமினோ அமிலங்கள் சிதைவதால், இதில் யூரியா உண்டாகிறது.

269. நிரப்பி என்றால் என்ன? இது ஒரு திண்மப் பொருள். இயற்பண்பை மாற்றவல்லது, ரப்பர், பிளாஸ்டிக் முதலியவற்றோடு சேர்க்கப்படுவது. கண்ணாடி இழை, பருத்திக் கம்பளம், காக்கைப்பொன் முதலியவை நிரப்பிகள்.

270. சேஃப்ரோலின் பயன்கள் யாவை?

மஞ்சள் நிறப்படிகம். சவர்க்காரங்களிலும் மணமூட்டும் பொருள்களிலும் பயன்படுவது.

271. வன்மையாக்கல் என்றால் என்ன?

கடினமாக்கல். 1. நீர்மத்தாவர எண்ணெயைத் திண்மக் கொழுப்பாக மாற்றும் முறை. எ-டு. வனஸ்பதி.
2. உலோகவியலில் எஃகைப் பதப்படுத்தும் முறை.

272. கற்பூரத் தைலம் என்றால் என்ன?

பைன் மரங்களின் பிசுமத்தைக் காய்ச்சி வடிக்க இந்நீர்மம் கிடைக்கும். கரைப்பான்.

273. முக்குளோரோ எத்தனாலின் பயன் யாது?

குளோரால், வலிநீக்கி.

274. முக்குளோரோ எத்திலீன்களின் பயன்கள் யாவை?

நிறமற்ற நீர்மம். தொழிற்சாலைக் கரைப்பான். மயக்க மருந்து. உலர்சலவையில் பயன்படல்.

275. மும்மீத்தேனின் பயன் யாது?

நச்சுத்தடை

276. பார்பிடுரிகக்காடி என்றால் என்ன?

ஒரு வெண்ணிறப் படிகம். தணிப்பு மருந்துகளின் ஊற்றுவாய். பிளாஸ்டிக் தொழிலிலும் பயன்படுவது.

277. பார்பிடுரேட்டுகள் என்றால் என்ன?

பார்பிடுரிகக் காடி. உப்புகள். மருந்துத் தொகுதி. எ-டு. அலோனால், வெரோனால், லூமினஸ்.

278. பிக்ரேட் என்பது யாது?

பிக்கரிகக்காடி உப்பு. 2

79. பினால்ஃப்தலின் என்றால் என்ன?

நீரில் கரையா வெண்ணிறப் படிகம். ஆல்ககாலில் கரையும். காரங்களுடன் சேர்ந்து இளஞ்சிவப்பு நிறத்தைக் கொடுக்கும். காடியுடன் சேர்க்க இந்நிறம் நீங்கும்.

நிலைகாட்டி அல்லது நிறங்காட்டி.

280. பினைலித்தீனின் பயன்கள் யாவை?

இது ஒரு நிறமற்ற நீர்மம். செயற்கை ரப்பரும் பிளாஸ்டிக்குகளும் செய்யப் பயன்படுவது.

281. நிறமிகள் என்பவை யாவை?

வண்ணக் கூட்டுப் பொருள்கள்.

282. இவற்றின் வகைகள் யாவை?

1. உயிரியல் நிறமிகள் - பச்சையம், பசுங்கணிகம், நிறக்கணிகம் (ஒளிச்சேர்க்கை ).
2. வேதிநிறமிகள் - கருங்கரி, குரோமியம் ஆக்சைடு, பெரிக ஆக்சைடு. ரப்பருக்கு நிறம் தரும் பொருட்டும் அதன் பண்பை உயர்த்தும் பொருட்டும் சேர்க்கப்படுபவை.

283. ஃபுளோரோசின் என்றால் என்ன? பயன் யாது?

கறுப்புச் செந்நிறக் கரிமச் சேர்மம். தாதுக் கரைசலில் கரைந்து செறிவான பசிய ஒளிர்வைத் தரும் நீர்மத்தை அளிக்கும் சாயங்களில் நிலைக்காட்டி.

284. கேலிகக்காடி என்றால் என்ன?

ஒரு நீர்மூலக்கூறிலுள்ள நிறமற்ற படிகம். நொதித்தல் மூலம் டேனின்களிலிருந்து பெறப்படுவது. மைகள் செய்யப்பயன்படுவது.

285. நாற்றம் நீக்கிகள் என்றால் என்ன?

நாற்றத்தைப் போக்கும் வேதிப்பொருள்கள். எ-டு. பினாயில், பொட்டாசியம் பர்மாங்கனேட்டு.

286. உப்பு நீக்கல் என்றால் என்ன?

குடிநீர் பெற அல்லது சாகுபடி செய்யக் கடல்நீரிலிருந்து உப்பைப் போக்குதல்,

287. டோலுடைன் பயன் யாது?

சாயங்கள் செய்ய.

288. தையோமின் என்பது யாது?

கறுப்பு மாநிறத் தையமின் வழிப்பொருள். நுண்ணோக்கியில் கரைபொருள்.

289. ரசீமிகக்காடி எதில் உள்ளது. கொடிமுந்திரிப் பழத்தில் உள்ளது. இது தார்தாரிகக் காடியின் ஒளிக்குறை வடிவம்.

290. ஒளிக்குறை சேர்மமாக்கல் என்றால் என்ன?

ஒளிநிறை சேர்மத்தை ஒளிகுறை சேர்மம் ஆக்குதல். இச்செயல் வேதிமுறைகளால் நடைபெறுவது.

291. லைசர்ஜிக் காடி என்பது யாது?

நோய்க்கம்பிலிருந்து பெறப்படுவது. எல்எஸ்டி செய்யப் பயன்படுவது.

292. லைசால் என்றால் என்ன?

சவர்க்காரக் கரைசலும் ஓரகச் சீர் உருக்கிரிசோல்களும் சேர்ந்த கலவை. தொற்றுநீக்கி.

293. எழுகுளோர் என்றால் என்ன?

வெண்ணிறப் படிகம். பூச்சிக்கொல்லி.

294. ஹெக்சானியிகக்காடி என்றால் என்ன?

நிறமற்ற எண்ணெய் போன்ற நீர்மம். செயற்கை மணமூட்டப் பயன்படுவது.

295. ஹெக்சைல் ரெசார்சினால் என்றால் என்ன?

மஞ்சள் நிறப்படிகம். புரைநீக்கி, மருந்து.

296. இண்டோல் என்பதின் பயன் யாது?

மஞ்சள் நிறப்பொருள். நறுமணப்பொருள்களில் பயன்படுவது.

297. எல்எஸ்டி (LSD) என்றால் என்ன?

லைசர்சிக் காடி இரு எத்திலமைடு, உளக்கோளாறு உண்டாக்கும் மருந்து, மனமயக்கத்தையும் தடுமாற்றத்தையும் தருவது. இளைஞர்கள் இக்கொடிய பழக்கத்திற்கு அடிமைகள்.

298. ஷிஃப்காரம் என்பது என்ன?

நறுமண அமைனுக்கும் ஆல்டிகைடுக்கும் இடையே நடைபெறும் குறுக்கல் வினையில் தோன்றுங் கூட்டுப்பொருள்.

299. ஷிஃப் விளையாக்கி என்றால் என்ன?

ஆல்டிகைடுகளையும் கீட்டோன்களையும் கண்டறியப் பயன்படும் வேதிப்பொருள்.

300. பைரோகேலால் என்பது யாது? பயன்கள் யாவை? கரையக்கூடிய வெண்ணிறப்படிகம். வலுவுள்ள ஒடுக்கி. ஆக்சிஜனை உறிஞ்சுவது. புகைப்படக் கலையில் பெருக்கி, ஆக்சிஜனை மதிப்பிடப் பயன்படுவது.

301. ரேயானின் பயன்கள் யாவை?

மரக்கூழிலிருந்து பெறப்படும் செயற்கை இழை. துணிகள் செய்யப் பயன்படுவது.

302. இதன் வகைகள் யாவை?

1. விஸ்கோஸ் ரேயான்
2. அசெட்டேட் ரேயான்.

303. ரிசினோலெயிகக் காடியின் பயன் யாது?

மஞ்சள்நிற நீர்மம். சவர்க்காரம் செய்யப் பயன்படுவது.

304. கார்பாலிகக்காடி என்றால் என்ன?

பினாயில், தொற்றுநீக்கி.

305. வேம்புப்பொன் என்றால் என்ன?

நல்ல பயன்தரும் சூழ்நிலைத் தகவுள்ள தொற்றுக்கொல்லி. வேம்பு அடிப்படையில் உருவாக்கப்பட்டது. பேராசிரியர் கோவிந்தாச்சாரியாரும் அவர்தம் குழுவினரும் உருவாக்கினார்கள் (1994).