அறிவியல் வினா விடை-வேதியியல்/அலோகம்

12. அலோகம்

1. அலோகத் தனிமங்கள் யாவை?

மின் எதிர்த் தனிமங்கள். இவை கரி(திண்மம்), புரோமின் (நீர்மம்), நைட்ரஜன் (வளி) என்னும் நிலையில் இருக்கும்.

2. கனிமம் என்றால் என்ன?

இயற்கையில் கிடைக்கும் தாது. சிறப்பு வேதித்தன்மை கொண்டது. படிக அமைப்புள்ளது. எ-டு. இங்குலிகம்.

3. காக்கைப்பொன் என்பது என்ன? அப்பரகம். ஒரு கனிமம். மின்காப்புப் பொருள், கண்ணாடி மாற்றுப் பொருள்.

4. காக்கைப் பொன் உற்பத்தியில் முன்னணியிலுள்ள நாடு எது?

இந்தியா, பீகார், ஒரிசா, மகாராஷ்டிரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இது அதிகம் கிடைக்கிறது.

5. போரிகக் காடி என்றால் என்ன?

தொடுவதற்குச் சவர்க்காரம் போன்று மென்மையாக இருக்கும். வெண்ணிறப் படிகம். மித நச்சுத்தடை. மெழுகுப் பொருள் செய்வதில் பயன்படுவது.

6. கரி என்றால் என்ன?

மின்சாரத்தையும் வெப்பத்தையும் நன்கு கடத்துவது. மின்கலங்களின் நேர்மின் வாயான கரித்தண்டுகள் செய்யப் பயன்படுவது.

7. கரியாக்கஞ் செய்தல் என்றால் என்ன?

கார்பனேட்டுகள் என்னும் உப்புகள் உண்டாகக் கரியைக் கரி ஈராக்சைடுடன் சேர்த்தல்.

8. மரக்கரி என்பது யாது?

படிக வடிவமற்ற அடுப்புக் கரி. வளிகளை உறிஞ்சும் நீர்மங்களிலிருந்து மாசுகளை நீக்கப் பயன்படுவது.

9. கல்கரியின் பயன் யாது?

ஊதுலையில் இரும்பை அதன் தாதுவிலிருந்து பிரிப்பதில் ஒடுக்கியாகப் பயன்படுதல்.

10. புகைக்கரி என்றால் என்ன?

கரியின் வேற்றுரு. மூடிய தொகுதியில் குறைவான காற்றில் கன எண்ணெய்களை எரித்து இதனைப் பெறலாம். நிறமியாகப் பயன்படுவது.

11. பக்மினிஸ்டர் புல்லரின் என்றால் என்ன?

C60. கரியின் மூன்றாம் வேற்றுரு. அமெரிக்கப் புனைவாளர் பக்மின்ஸ்டர் புல்லர் அமைத்தது. இம் மூலக்கூறு 60 கரியணுக்களைக் கொண்டது. புகை போக்கிக் கரியின் ஒரு பகுதியாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அதிக அமைப்பு நிலைப்புத் திறன் கொண்டது.

12. வைரம் என்பது என்ன? பயன் யாது?  மிகக் கடினமான கரியின் புறவேற்றுரு. இதன் தூய்மை கேரட்டில் கூறப்படுவது. ஒர் எளிதில் கடத்தி. கண்ணாடியைத் துண்டிக்கவும் அணிகலன்களிலும் (வைரத்தோடு) பயன்படுவது.

13. கேரட்டு என்றால் என்ன?

பொன்னின் துய்மையளவையும் வைரத்தின் எடையளவையும் குறிக்கும் சொல். தூய பொன் 24 கேரட்டு பொன் ஆகும். 14 கேரட் பொன் என்பது அதன் 24 பகுதிகளில் 14 பகுதிகள் செம்பு என்பதும் பொருளாகும்.

14. கார்பரில் என்றால் என்ன?

இது பூச்சிக்கொல்லி ஆகும்.

15. கரி ஈராக்சைடு என்றால் என்ன?

1. இது கரைந்த நீர் சோடாநீர் ஆகும்.

2. தீயணைப்பான், சலவை சோடா செய்யப் பயன்படுவது.

16. கரி இரு சல்பைடு பயன் யாது?

இது அழுகிய முட்டையின் மணம். கரைப்பான், பூச்சிக்கொல்லி,

17. கரி ஓராக்சைடின் இயல்பும் பயனும் யாவை?

நச்சுத் தன்மையுள்ளது. எரிபொருள்.

18. கரி நாற்குளோரைடின் பயன்கள் யாவை?

தீயணைப்பான். கொழுப்பைக் கரைப்பது.

19. நைட்ரோசாக் என்பது என்ன?

கால்சியம் கார்பனேட்டு, அம்மோனியம் நைட்ரேட் சேர்ந்த கலவை. உரம்.

20. நைட்ரஜன் என்றால் என்ன?

ஒரு சிறப்புள்ள வளி. காற்றில் நிரம்ப உள்ளது. தாவரவிலங்கு வாழ்க்கைக்கு மிக இன்றியமையாதது. அம்மோனியம், நைட்டிரிகச் காடி, நைட்டிரைடுகள் முதலியவை உண்டாக்கப் பயன்படும்.

21. நைட்ரஜன் இரு ஆக்சைடின் பயன்கள் யாவை?

ஆக்சிஜன் ஏற்றி. கரிமபடுவினையில் பயன்படுவது.

22. நைட்ரோகிளசரின் பயன்கள் யாவை?

நச்சுத்தன்மையுள்ள எண்ணெய் போன்ற நீர்மம். டைனமைட் செய்யப் பயன்படுவது.

23. நைட்ரேட்டாதல் என்றால் என்ன?

அம்மோனியம் உப்புகளை நைட்ரைட்டு உப்புகளாக மாற்றுதல்.

24. நைட்ரச அமிலத்தின் பயன் யாது?

சாயங்கள் செய்யப் பயன்படுவது.

25. நைட்ரஸ் ஆக்சைடின் பயன்கள் யாவை?

தீப்பற்றாத நிறமற்ற வளி. மயக்க மருந்திலும் ஏரோசால்கள் செய்யவும் பயன்படுவது. வேறுபெயர் இரு நைட்ரஜன் ஆக்சைடு.

26. நைட்ரிக் ஆக்சைடு என்றால் என்ன?

நைட்ரஜன் மோனாக்சைடு, சிறப்புள்ள நிறமற்ற வளி.

27. இதன் தீமைகள் யாவை?

1. புற்றுநோயை ஊக்குவிப்பது. 2. காடிப்பொழிவின் முன்னோடி. 3. ஒசோன் வளையத்தை அழிக்கும் மாசு.

28. இதன் நன்மைகள் யாவை?

1. உயிரிப்படலத்தின் வழியாகச் செல்வது. 2. குருதியழுத்தத்தை நிலைநிறுத்த உதவுவது. 3. தடுப்பாற்றல் துலங்கலிலும் ஆண்குறியை விறைக்கச் செய்வதிலும் ஊக்கி.

29. இது எவ்வாறு சிறப்பிக்கப்பட்டுள்ளது?

அறிவியல் இதழ் சயன்ஸ் இதை 1992ஆம் ஆண்டின் மூலக்கூறு எனத் தேர்வு செய்து சிறப்பித்துள்ளது.

30. நைட்ரஜன் ஆக்சைடு என்றால் என்ன?

நைட்ரஸ் ஆக்சைடு என்னும் நிறமற்ற வளி. மயக்க மருந்து. சிரிக்க வைக்கும் வளி என்று பெயர்.

31. ஈராக்சைடு என்றால் என்ன?

இரு ஆக்சிஜன் அணுக்களைக் கொண்ட கூட்டுப்பொருள். எ-டு. கரி இரு ஆக்சைடு.

32. ரேடானின் பயன் யாது?

கதிரியக்கத் தனிமம். கதிர்வீச்சுப் பண்டுவத்தில் பயன்படுவது.

33. ஈலியம் என்றால் என்ன? இலேசான வளி, குமிழிகள், காற்றுக் கப்பல்கள் முதலியவற்றில் பயன்படுவது.

34. உப்பீனிகள் என்றால் என்ன?

இவை ஹேலஜன்கள் எனப்படும் உப்பைத் தரும் அலோகங்கள். அவையாவன: அஸ்டடைன், புரோமின், குளோரின், புளோரின், அயோடின். இவை சேர்ந்தது உப்பீனிக் குடும்பம் எனப்படும்.

35. உப்பீனியாக்கல் என்றால் என்ன?

கூடுதல், பதிலிடல் ஆகிய செயல்களினால் ஒரு கூட்டுப் பொருளில் உப்பீனி அணுக்களைச் சேர்த்தல்.

36. புளோரின் என்றால் என்ன? பயன் யாது?

வெளிறிய மஞ்சள் நிறமுள்ள வளி. பூச்சிக்கொல்லி.

37. வெடிப்புவளி என்றால் என்ன?

ஆக்சிஜனும் அய்டிரஜனும் 1:2 என்னும் வீதத்தில் சேர்ந்த கலவை. மின்னாற்பகுத்தலால் கிடைப்பது. இதை எரிக்க வலுவாக வெடித்து மீண்டும் நீராகும்.

38. ஆக்சிஜன் என்பது யாது?

உயிர்வளி. காற்றுவெளியில் இருந்து உயிர்வாழ உதவுவது. நீரில் கரைந்து நீர்வாழ் உயிர்கள் வாழவும் உதவி செய்வது. பொருள்கள் எரியவும் இன்றியமையாதது.

39. ஆக்சிஜன் செலுத்தல் என்றால் என்ன?

மூச்சுப்பரப்பில் ஈமோகுளோபினுடன் தற்காலிகமாக ஆக்சிஜனைச் சேர்த்தல்.

40. ஆக்சிஜன் ஏற்றித் தடுப்பிகள் என்றால் என்ன?

வண்ணங்கள், ரப்பர், பிளாஸ்டிக்குகள் ஆகியவற்றில் ஆக்சிஜன் ஏறுவதால் ஏற்படும் தீய விளைவுகளைத் தடுக்கும் பொருள்கள்.

41. பிறவிநிலை அய்டிரஜன் என்றால் என்ன?

புதிதாகத் தோன்றிய அய்டிரஜன். அதிக அளவு உள்ளாற்றல் பெற்றது. அண்டிமனி, சவ்வீரம், பாகவரம் ஆகியவற்றின் அய்டிரைடுகள் உண்டாக்கப் பயன்படுவது.  42. அய்டிரஜன் என்றால் என்ன? இதைக் கண்டறிந்தவர் யார்?

ஓர் அடிப்படை வளி. ஆக்சிஜனுடன் சேர்ந்து நீரைக் கொடுக்கும். 1766இல் கேவண்டிஷ் இதைக் கண்டறிந்தார்.

43. அய்டிரஜன் பெராக்சைடின் பயன்கள் யாவை?

ஆக்சிஜன் ஏற்றி, புரைத்தடுப்பான், புழுக்கொல்லி, வெளுப்பி.

44. அய்ப்போ என்பது யாது? பயன் யாது?

சோடியம் தயோ சல்பேட் புகைப்படக் கலையில் பயன்படுதல்.

45. அய்ப்போகுளோரைட்டின் பயன்கள் யாவை?

சோடியம் அய்ப்போ குளோரைட் காயமாற்றி, தொற்றுநீக்கி.

46. நீர்வழிப் பிளப்பு என்றால் என்ன?

அய்டிரஜனுடன் தகுந்த வினையூக்கியைச் சேர்த்துப் பெட்ரோலியத்தையும் அதன் வழிப்பொருள்களையும் சிதைத்தல்.

47. நீரால் வடித்தல் என்றால் என்ன?

தாவரத்திலிருந்து பயன்மிகு எண்ணெய்களைப் பிரித்தல்.

48. மந்த வளிகள் யாவை?

வினை குறைவுள்ள வளிகளான ஈலியம், நியான், ஆர்கான், கிரிப்டான், செனான் மற்றும் ரேடான். வேறு பெயர் பெரும்பேற்று வளிகள்.

49. ஆர்கான் என்னும் மந்த வளி எப்பொழுது யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?

1804இல் இரலே, இராம்சே ஆகிய இருவரால் கண்டு பிடிக்கப்பட்டது. மின்குமிழ்களிலும் ஒளிவிளக்குகளிலும் நிரப்பப் பயன்படுவது.

50. நியான் என்பது என்ன?

மந்த ஒரணு வளி. நியான் குறிகளிலும் விளக்குகளிலும் பயன்படுவது.

51. கிரிப்டான் என்றால் என்ன? இதைக் கண்டறிந்தது யார்? பயன் யாது? ஓரணு அரிய வளி, நிறமற்றது. 1898இல் இராம்சே கண்டறிந்தது. மின்குமிழ்களிலும் ஒளிவிளக்குகளிலும் பயன்படுவது.

52.கூப்பர் நிக்கல் என்பது யாது?

இயற்கை நிக்கல் அர்சனைடு நிக்கலின் முக்கியத் தாது.

53. செனாளின் பயன்கள் யாவை?

நிறமற்ற ஒற்றையணு வளி, வெப்பத் திறப்பிகள், குமிழ்கள், ஒளிர்விளக்குகள் ஆகியவற்றில் பயன்படும் மந்தவளி.

54. அம்மோனியா என்றால் என்ன?

காரமணமும் அரிப்புத் தன்மையும் கொண்ட நச்சிலா வளி.

55. இதன் பயன்கள் யாவை?

வெடிமருந்துகள் செய்யவும் உரங்கள் செய்யவும் பயன்படுவது.

56. அம்மோனியம் நைட்ரேட் என்றால் என்ன?

நீர் ஈர்க்கும் உப்பு, நிறமற்றது, படிகமற்றது. நீரில் கரையும்.

57. இதன் பயன்கள் யாவை?

வெடிமருந்து, உரம்.

58. அம்மோனியம் சல்பேட் என்றால் என்ன?

வெண்ணிறப்படிகம். உரம்.

59. அம்மோனியம் பை கார்பனேட் என்றால் என்ன?

வெண்ணிறப்படிகம், சமையல் தூள்.

60. அம்மோனியம் கார்பனேட் என்றால் என்ன?

அம்மோனிய நெடியுள்ள வெண்ணிறப் படிகம். நீரில் கரைவது.

61. இதன் பயன்கள் யாவை?

முகரும் உப்பு. ரொட்டித் தொழிலிலும் சாயத் தொழிலிலும் பயன்படுவது.

62. புரோமின் என்றால் என்ன?

நீர்மநிலையிலுள்ள ஒரே உலோகம். தொற்றுநீக்கி மற்றும் சாயங்கள், புரோமைடுகள் செய்யப் பயன்படுவது. 63. குளோரினாக்கல் என்றால் என்ன?

குளோரினை நீருடன் சேர்த்து, அதிலுள்ள நோய் நுண்ணங்களைக் கொல்லுதல். தங்கத்தை அதன் தாதுவிலிருந்து பிரிக்கப் பயன்படுவது.

64. குளோரின் பயன்கள் யாவை?

வெளுக்கவும், நோய் நுண்ண நீக்கியாகவும் பயன்படுவது.

65. குளோரின் இரு ஆக்சைடின் பயன்கள் யாவை?

வெளுக்கவும் நீரைத் துய்மை செய்யவும் பயன்படுதல்.

66. குளோரைட் என்றால் என்ன?

குளோரசச் காடி உப்பு.

67. குரோமிகக் காடியின் பயன்கள் யாவை?

வெளுக்கவும் சாயம் ஏற்றவும் பயன்படுவது.

68. குரோமியத்தின் பயன்கள் யாவை?

இந்த உலோகம் தட்டுகளுக்கு முலாம் பூசவும் எஃகு செய்யவும் பயன்படுவது.

69. ஓசோன் வளியின் நன்மை யாது?

இந்த வளி கதிரவன் புற ஊதாக்கதிர்களை உறிஞ்சி, உயராற்றல் கதிர்வீச்சு நிலவுலகை அடையாவண்ணம் தடுக்கிறது.

70. ஓசோனாற் பகுப்பு என்றால் என்ன? பயன் யாது?

நிறைவுறா அய்டிரோ கார்பனோடு ஒசோனைச் சேர்த்தல். இதனால் ஒசோன் பிரியும்.

71. ஓசோனைடு நீராற்பகுக்கக் கிடைப்பது என்ன?

அய்டிரஜன் பெராக்சைடு, கார்போனைல் சேர்மம்.

72. ஓசோன் வெளி என்பது யாது?

காற்று மேல்வெளியடுக்கு. இங்கு ஒசோன் செறிவு அதிகம்.

73. ஓசோன் என்பது யாது? பயன்கள் யாவை?

மிகு வேதிவினையுள்ள நீலநிறவளி. புழுக்கொல்லி, காற்றையும் நீரையும் துய்மை செய்வது.

74. ஓசோனாக்கல் என்றால் என்ன?

ஓசோன் வளியோடு ஒரு பொருளைச் சேர்க்கும் முறை.

75. ஓசோனாக்கி என்றால் என்ன?  ஆக்சிஜனை ஒசோனாக மாற்றுங் கருவி.

76. ஓசோனை அழிக்கும் தனிமங்கள் யாவை?

குளோரின், புரோமின்.

77. ஓசோனடுக்கில் துளைகள் இருப்பது எப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டது? எவ்வாறு?

அண்டார்க்ட்டிக் வழியாகச் செயற்கை நிலா சென்றபொழுது 1985இல் கண்டுபிடிக்கப்பட்டது.

78. செப்டம்பர் 16இன் சிறப்பு என்ன?

இந்நாள் ஒசோன் அனைத்துலக நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதன் முதல் ஆண்டு 1995இல் கொண்டாடப்பட்டது.

79. டாப்சன் என்பது என்ன?

ஓசோனை அளக்கும் அலகு. டாப்சன் என்பவர் பெயரால் அமைந்தது. இவர் காற்றுவெளி ஓசோனை ஆராய்ந்த முன்னோடி.

80. ஓசோன் குறையும் கொள்கையை முன்மொழிந்தவர் யார்?

அமெரிக்க அறிவியலார் மெரியோ மோலினோ, ஷர்வுட் ரோலண்ட் ஆகிய இருவரும் 1974இல் கண்டறிந்தனர்.

81. ஓசோன் ஆராய்ச்சிக்கான நோபல் பரிசைப் பெற்றவர்கள் யார்?

பேரா. பால் கிரட்சன், ஜெர்மனி, பேரா. மெரியோ மொலினா, அமெரிக்கா, 1995.

82. கண்ணாடி என்பது என்ன? பயன் யாது?

படிகமில்லாத திண்மம். மீக்குளிர்ச்சியடைந்த நீர்மங்களே கண்ணாடிகள். சோடா கண்ணாடி சீசாக்கள் செய்யவும், பொரோ சிலிகேட் கண்ணாடிகள் சமையல் பாண்டங்கள் ஆய்கருவிகள் செய்யவும் பயன்படுபவை.

83. கண்ணாடிக் கம்பளம் என்றால் என்ன?

பஞ்சுக் கம்பளத்தைப் போன்ற செயற்கைப் பொருள். ஆனால் மிக நுண்ணிய கண்ணாடியாலானது. அரிக்குந் தன்மையுள்ள நீர்மங்களை உறிஞ்சவும் வடிகட்டவும் பயன்படுவது.

84. வெண்ணாடி என்றால் என்ன? வெண்ணிற உப்பு. தீப்பிடிக்காத துணிகள், தாள், சிமெண்டு முதலியவை செய்யப் பயன்படுவது.

85. நீர்க்கண்ணாடி என்பது என்ன?

சோடியம் சிலிகேட்டை நீரில் கரைக்கக் கிடைப்பது. பளிங்கு போன்ற கூழ்மக்கரைசல், சிலிகா இழுது தயாரிக்கவும் பாதுகாப்புப் பொருளாகவும் பயன்படுவது.

86. இயற்கைக் கண்ணாடி என்றால் என்ன?

பளிங்கு போன்ற கணிப்பொருள். எரிமலைக் குழம்பிலிருந்து விரைவாகக் குளிர்ந்து படிகமாவது.

87. விட்டா கண்ணாடி என்றால் என்ன?

புற ஊதாக் கதிர்களைச் செலுத்தும் ஒருவகைக் கண்ணாடி.

88. வைக்கார் கண்ணாடி என்றால் என்ன?

தூய சிலிகாகண்ணாடி சோடியம் போராக்சைடிலிருந்து பெறப்படுவது.

89. வன் கண்ணாடி என்றால் என்ன?

பொட்டாசியம் சிலிகா அதிக அளவு கொண்ட கண்ணாடி. கண்ணாடிக் கலன்கள் செய்யப் பயன்படுவது. கடினக் கண்ணாடி என்றுங் கூறலாம்.

90. தேய்ப்புக்கல் என்றால் என்ன?

இயற்கையில் கிடைப்பதும் கடினமானதுமான சிலிகான் அற்றதுமான பொருள். சானை உருளைகளில் பயன்படுவது.

91. அராபினோஸ் என்றால் என்ன?

நீரில் கரையக்கூடிய வெண்ணிறப் படிகம். குச்சி வடிவ உயிர்களை வளர்க்கப் பயன்படும் கரைசலில் பயன்படுவது.

92. செயற்கைப் பொன் என்றால் என்ன?

நீரில் கரையா மஞ்சள் நிற மாநிறத் தூள். போலிப் பொன் முலாம் பூசப் பயன்படுவது.

93. பாஸ்பைன் என்பது யாது? பயன்கள் யாவை?

அதிக நச்சுத்தன்மை வாய்ந்த வளி. புகைத்திரை செய்யவும் கப்பல்களுக்குக் கோல்கம் குறிகாட்டவும் பயன்படுவது.

94. பாஸ்பீனிகக்காடி என்றால் என்ன?

நிறமற்ற படிகம். இதன் உப்புகளில் சில நரம்பு மருந்துகள்.

95. பாஸ்பைட் என்பது என்ன?

பாசுவரிசக் காடி உப்பு.

96. பாஸ்பமிடான் என்பது என்ன? பயன் யாது?

அர்கனோ பாஸ்பேட் உப்பு. பூச்சிக் கொல்லி.

97. இதைத் தொகுத்தவர் யார்?

1955இல் பெரிகர் என்பவர் முதன்முதலில் தொகுத்தார்.

98. பாஸ்பைடு என்றால் என்ன?

பாசுவர கூட்டுப் பொருள். எ-டு. கால்சியம் பாஸ்பைடு.

99. பாஸ்போனிகக்காடி என்றால் என்ன?

பாசுவரசக்காடி பாஸ்பைட்டு உப்பைக் கொடுப்பது.

100. நின்றொளிர்தல் என்றால் என்ன?

கால்சியம் பேரியம் சல்பைடுகளின் மீது சிறிது நேரம் ஒளியூட்டிப் பின் அவற்றை இருட்டில் வை. அவை சிறிது நேரம் ஒளிரும்.

101. நின்றொளிரும் உப்புகள் யாவை?

கார வகை உலோக உப்புகள். அலுமினியச் சேர்மங்கள், யுரேனியம், பிளாட்டினம் உப்புகள்.

102? நின்றொளிர்தலின் இயல்பு யாது?

பொருள் சிறியதாக இருந்தால் அதில் முழுதும் நின்றொளரிர்தல் நிகழும். ஒளிச்செறிவையும் அலை நீளத்தையும் பொறுத்து அது அமையும்.

103. இந்த ஒளிர்தலின் பயன் யாது?

புறச்சிவப்பு நிற ஒளி இதை அழிக்கும். இப்பண்பு புறச் சிவப்பு நிற ஒளியை அறியப் பயன்படுவது.

104. பால்மெயின் ஒளிருங் குழம்பு என்றால் என்ன?

ஒளிர்வான கதிரவன் ஒளியினால் இருட்டில் பல மணி நேரம் நின்றொளிர்வது இது. இதில் கால்சியம், பேரியம், ஸ்டிரான்ஷியம் சல்பைடுகள் கலந்துள்ளன.

105. பாசுவரிக அமிலம் என்பது யாது? வெண்ணிறத் திண்மம். இதன் உப்பு பாஸ்பேட் நீரை மென்மையாக்கவும் உரமாகவும் பயன்படுவது.

106. பாஸ்போரஜன் என்றால் என்ன?

இது மற்றொரு பொருளில் நின்றொளிர்தலை உண்டாக்கும் பொருள். துத்தநாகச் சல்பைடில் மாங்கனீஸ் இரு சல்பைடு இதை உண்டாக்கும்.

107. பாசுவரிகக்காடிப் பகுப்பு என்றால் என்ன?

பாசுவரிகக் காடியின் தனிமங்களைப் பகுத்து ஒரு சேர்மத்தின் மூலக்கூறில் சேர்த்தல்.

108. பாசுவரச் சேர்மமாக்கல் என்றால் என்ன?

சர்க்கரையைப் பாகவரத்தின் கூட்டுப் பொருள் ஆக்கும் முறை. இக்கூட்டுப் பொருளைப் பிரிக்க உயிர்ச் செயல்களுக்கு வேண்டிய ஆற்றல் கிடைக்கும்.

109. பாசுவரம் என்பது யாது?

ஓர் அலோகத்தனிமம், கெட்டிநிலையில் உள்ளது.

110. இதன் பண்புகள் யாவை?

1. புற வேற்றுமை உண்டு. வெண்பாசுவரம், சிவப்புப் பாசுவரம். 2. வெண்பாசுவரம் இருட்டில் ஒளிரும் காற்றில் எரியும்.

111. பாசுவரத்தின் பயன்கள் யாவை?

வெண்பாசுவரம் புகைத்திரைகள், வெடிகுண்டுகள் செய்யப் பயன்படுவது. சிவப்புப் பாசுவரம் தீப்பெட்டிகள் செய்யப் பயன்படுவது.

112.எலிநச்சாகப் பயன்படுவது எது?

வெண்பாசுவரம்.

113. பாசுவர காந்தி என்றால் என்ன?

பாசுவரம் இருட்டில் ஒளிர்வதற்குப் பாசுவர காந்தி என்று பெயர்

114. வெண்பாசுவரம் ஏன் நீரில் வைக்கப்பட்டுள்ளது?

அது அறைவெப்ப நிலையில் காற்றில் எரிவது. ஆகவே, நீரில் வைக்கப்பட்டுள்ளது.

115. சூப்பர் பாஸ்பேட் என்பது என்ன?

கால்சியம் அய்டிரஜன் பாஸ்பேட் சிறந்த உரம். 115. வெண்சவ்வீரம் என்றால் என்ன?

வெண்ணிறப்படிகம். நச்சுத்துண்டில்களில் பயன்படுவது.

116. கந்தகத்தின் சிறப்பு யாது?

குறைந்த உருகுநிலை கொண்ட அலோகம்.

117. இதன் மூன்று வேற்றுருக்கள் யாவை?

1.சாய்சதுரக் கந்தகம்.2. பட்டைக்கந்தகம்.3 களிக்கந்தகம்.

118. காந்தகத்தின் பயன்கள் யாவை?

தொற்றுநீக்கி, பூச்சிக் கொல்லி, கந்தக மருந்துகள் செய்வதில் பயன்படுதல்.

119. கந்தகமாக்கல் என்றால் என்ன?

ஒரு தனிமம் அல்லது கூட்டுப் பொருளைக் கந்தகத்தோடு சேர்த்தல்.

120. கந்தகக் காடியின் சிறப்பென்ன?

கனிமக் காடிகளில் மிகச் சிறந்தது. ஒரு நாட்டின் தொழில் வளத்தைக் காட்டுவது.

122. இது எம்முறையில் பெரிய அளவில் உண்டாக்கப்படுகிறது?

தொடுமுறையில்.

123. இதன் பயன்கள் யாவை?

நீர்நீக்கி ஆக்சிஜன் ஏற்றி உரங்கள் செய்யப் பயன்படுவது.

124. கந்தசக் காடியை எவ்வாறு பெறலாம்?

கந்தக மூவாக்சைடை நீரில் கரைத்துப் பெறலாம். ஒடுக்கி.

125. கந்தக மூவாக்சைடின் பயன்கள் யாவை?

கந்தகக்காடி தயாரிக்கவும் வளிகளை உலர்த்தவும் பயன்படுவது.

126. அயோடினின் பயன்கள் யாவை?

கருநிற ஊதாப்படிகம். வேதிப்பகுப்பிலும் மருத்துவத்திலும் பயன்படுவது. உணவில் அயோடின் ஊட்டங் குறையுமானால் தொண்டைக் கழலை உண்டாகும்.

127. அயோடோபென்பாசின் பயன் யாது?

சீரான மணமுள்ள நிறமற்ற படிகம். பூச்சிக்கொல்லி.

128. அயோடபாமின் பயன் யாது?

அயோடின் சேர்மம். குங்கும மனம். புரைத்தடுப்பான்.

129. களிமண் என்றால் என்ன? பிளாஸ்டிக் தன்மை, ஈரநிலையில் ஊடுருவாமை. உலர்ந்தால் வெடித்தல் ஆகியவை இதன் பண்புகள். களிக் கனிமங்களாலானவை.

130. களிமண் கனிமங்கள் என்றால் என்ன?

மிகச்சிறிய துகள்கள்; அலுமினிய நீர்ச் சிலிகேட்டுகளாலானது. அடுக்கு அமைப்பும் படிகத்தன்மையும் கொண்டவை.

131. இதன் முக்கியத் தொகுதிகள் யாவை?

1. சேயோலினடை. 2. கேலாய்சைட் 3. இலைட் 4. மாண்ட்மாரிலோனைட் 5. வெர்மாகுலைட்

132. பொரான் கார்பைடு என்றால் என்ன?

மிகக் கடியதும் கரியதுமான படிகச் சேர்மம். அணுஉலையில் சீராக்கி, தேய்ப்புப் பொருள்.

133. பொரான் நைட்ரைடு என்றால் என்ன?

வழுக்கும் வெண்ணிறப் பொருள். உயவிடு பொருள், மின்தடைப் பொருள்.

134. வெண்காரம் என்றால் என்ன?

பெரானின் முதன்மையான தாது. மஞ்சளும் நீலமும் கலந்த நிறமும் சேர்ந்த கனிமம். வெண்ணிறப்படிகம் நச்சுத்தடை, துப்புரவுப்பொருள்.

135. பொரான் என்றால் என்ன?

அலோக மஞ்சள் நிறப்படிகம். போரிகக்காடியாகவும் வெண்காரமாகவும் உள்ளது. இரும்பு வார்ப்பதிலும் எஃகைக் கடினப்படுத்துவதிலும் பயன்படுவது.

136. பிஸ்மத்தின் பயன்கள் யாவை?

இது உலோகக் கலவை செய்யவும் இதன் கூட்டுப் பொருள்கள் ஒப்பனைப் பொருள்களிலும் மருந்துகளிலும் பயன்படுகின்றன.

137. பதமாக்கல் என்றால் என்ன?

சிமெண்டு இறுகும்பொழுது வெடிக்காமல் இருக்க, அதன்மீது தொடர்ந்து நீரை ஊற்றுதல். பூச்சுவேலை நடந்த மறுநாள் இது நிகழும்.

138. சிமெண்டு என்றால் என்ன? இது ஒரு கட்டுமானப் பொருள். இது 1824இல் ஆங்கில நாட்டைச் சார்ந்த கொத்தனார் ஜோசப் ஆஸ்பிடின் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இக்காரை கால்சியம் சிலிகேட், கால்சியம் அலுமினேட் ஆகியவற்றின் கலவை. இதில் சிறிது ஜிப்சமும் உண்டு.

139. சிமெண்டு இறுகுதல் என்றால் என்ன?

சிமெண்டு என்னும் படிகாரை நீரை உட்கவர்ந்து கெட்டிப்பொருள் ஆதல். இக்காரையிலுள்ள சேர்மங்களின் நீரேற்ற வினையும் இவ்வினையைத் தொடர்ந்து கால்சியம் சிலிகேட் சேர்மங்கள் சிதைவடைவதும் இதற்குக் காரணங்கள் ஆகும்.

140. வனைபொருள்கள் என்றால் என்ன?

அதிக உருகுநிலையிலுள்ள கனிமங்கள், பயனுள்ளவை. எ-டு மட்பாண்டம், பீங்கான்.

141. கொழுமண் என்றால் என்ன?

காரை அல்லது களிமண் துளைப்பகுதியின் மீது பூசப் பயன்படுவது. இதனால் காற்று அல்லது நீர் உள்ளே செல்ல இயலாது.

142. வெளுப்பிகள் என்றால் என்ன?

நிறம் நீக்க அல்லது வெளுக்கப் பயன்படும் வேதிப் பொருள்கள். எ-டு குளோரின், கந்தக இரு ஆக்சைடு.

143. வெளுக்கும் தூள் என்றால் என்ன?

சலவைத்துள். வெண்ணிறத்தூள். கால்சியம் ஆக்சி குளோரைடு. நீரிலுள்ள நோய் நுண்ணங்களைக் கொல்லப் பயன்படுவது.

144. எபோனைட் என்றால் என்ன?

வல்கனைட் ரப்பருடன் கந்தகத்தைச் சேர்த்துக் கெட்டியாக்கிச் செய்யப்படும் கடினமான கரிய காப்புப் பொருள்.

145. நிலைவளி என்றால் என்ன?

அழுத்தத்தால் மட்டுமே நீர்மமாக்க இயலாத வளி. தன்மாறுநிலை வெப்பநிலைக்கு மேலுள்ளது.

146. வளித்துப்புரவு என்றால் என்ன? வளிகளிலுள்ள மாசுகளையும் கறைகளையும் நீக்கும் செயல்.

147. வளி ஏற்பி என்றால் என்ன?

தாரிலிருந்து நிலக்கரி வளியை நீக்குங் கருவி.

148. வளி உருளி என்றால் என்ன?

வேதிப்பொருள்கள் நிரப்பப் பயன்படும் கண்ணாடிக் கலன். ஆக்சிஜன், அய்டிரஜன் ஆகியவற்றைத் தயாரித்து நிரப்பப் பயன்படுவது.

149. வளி ஒளி என்றால் என்ன?

வளி எரிவதால் உண்டாகும் வெளிச்சம்.

150. வளிநீர்மம் என்றால் என்ன?

வளியாக்கத்தில் பெறப்படும் அம்மோனியாவும் அம்மோனியம் உப்புகளும் சேர்ந்த கலவை.

151. வளிமானி என்றால் என்ன?

செலவாகும் வளியை அளக்கும் கருவி.

152. புகைவளி என்றால் என்ன?

கொதிகல உலையிலிருந்து அகக்கனற்சியால் உண்டாகும் வளிப்பொருள். கரி இரு ஆக்சைடு, கரி ஓர் ஆக்சைடு ஆக்சிஜன், நைட்ரஜன், நீராவி ஆகியவை அடங்கியது.

153. தீவளி என்றால் என்ன?

மீத்தேனும் காற்றும் சேர்ந்த வெடிகலவை. நிலக்கரிச் சுரங்கங்களில் உண்டாவது.

154. தீயணைப்பான் என்றால் என்ன?

தீயை அணைக்க வேதிப்பொருளைப் பீச்சுங்கருவி அமைப்பு. பீச்சுபொருள் கரி இரு ஆக்சைடு,

155. ஈரவளி என்பது யாது?

இயற்கைவளி, நீர்ம ஹைட்ரோகார்பன்களைக் கொண்டது.

156. ஈரமாக்கி என்றால் என்ன?

நீர்ம மேற்பரப்பு இழுவிசையினைக் குறைக்கும் பொருள்.

157. சுமப்புவளி என்றால் என்ன?

வளி நிறவரைவியலில் பயன்படுவது.

158. நீர்மமாகிய வளி என்றால் என்ன? குளிர்ச்சியினால் வளி நீர்மமாதல். எ-டு. நீர்மமாகிய பெட்ரோலிய வளி.

159. எல்என்ஜி என்றால் என்ன?

நீர்மமாகிய இயற்கை வளி.

160. எல்பிஜி என்றால் என்ன?

நீர்மமாகிய பெட்ரோலிய வளி. இண்டேன் வளி இவ்வகை சார்ந்ததே.

161. புகையாவி (ஒலியம்) என்றால் என்ன?

புகையும் நிறமற்ற நீர்மம். கந்தக இரு ஆக்சைடை அடர்கந்தகக் காடியில் கரைத்துப் பெறலாம்.

162. சேர்க்கை வளி என்றால் என்ன?

தொகுப்பு வளி. அய்டிரஜனும் கரி ஓராக்சைடும் சேர்ந்த கலவை.

163. மெய்வளி என்றால் என்ன?

திட்டமான அளவு மூலக்கூறுகளைக் கொண்ட வளி.

164. எச்ச நீக்கி என்றால் என்ன?

வளிகளிலிருந்து எஞ்சிய பொருளை நீக்கும் வேதிப்பொருள்.

165. தீக்கல் என்றால் என்ன?

மாசுள்ள இயற்கைச் சிலிகான். விளக்கேற்றிகளில் பயன்படும் தீக்கற்கள். செரியமும் இரும்பும் சேர்ந்த உலோகக் கலவைகளிலிருந்து செய்யப்படுவது.

166. சிலிகேட் கனிமங்கள் யாவை?

பாறை தோற்றுவிக்கும் கனிமத் தொகுதி. புவி வெளிப்புற ஒட்டில் அதிகமுள்ளது. எல்லாக் கனிமங்களிலும் மூன்றில் ஒரு பங்குள்ளது. ஆறுதொகுதிகள். எ-டு. காக்கைப்பொன், களிமண் கனிமங்கள்.

167. சிலிகன் என்பதென்ன?

அதிகம் கிடைக்கும் அலோகம். இரு வேற்றுருக்களில் உள்ளது. உருவமற்றது, படிகமுள்ளது.

168. இதன் பயன்கள் யாவை?

அரிமான எஃகு, கண்ணாடி, காந்தங்கள், ஆக்சிஜன் நீக்கி ஆகியவை செய்யப் பயன்படுவது. 169. சிலிகா என்பதென்ன?

கடினக் கண்ணாடி போன்ற கனிமம். பல வடிவங்களில் உள்ளது.

170. சிலிகா இழுமம் (ஜெல்) என்றால் என்ன?

இது ஒளிபுகக் கூடிய நுண்துளைப் பொருள். நாற்றம் நீக்கி, வளிஉறிஞ்சி.

171. சிலிகேட் என்றால் என்ன?

உலோக அயனியையும் அரிய சிலிகான் - ஆக்சிஜன் கூட்டுப் பொருளையும் கொண்ட வேதிப்பொருள். எ-டு. அலுமினியம் சிலிகேட்

172. சிலிகன் கார்பைடின் பயன்கள் யாவை?

வயிரத்திற்கடுத்த கடினத்தன்மை. துப்புரவுத் தேய்ப்புப் பொருள். உலோகப் பரப்புகளுக்கு மெருகேற்றப் பயன்படுவது.

173. சிலிகோன் என்பது யாது?

கரிமச் சிலிகன் சேர்மங்களில் ஒன்று. வெப்பத்திற்கும் நீருக்கும் தடையளிப்பது. உயிவிடுபொருள், மெருகுப் பொருள்.

174. சிலிகன் ஆக்சைடின் பயன்கள் யாவை?

படிகமுள்ளது, படிகமற்றது. கண்ணாடி செய்யவும் சிமெண்டு செய்யவும் பயன்படுவது.

175. சிலிகன் எஃகு என்றால் என்ன?

குறிப்பிட்ட அளவு சிலிகன் கொண்ட எஃகு மின்மாற்றிச் சுருள்கள் செய்யப் பயன்படுவது.

176. கூரைவிழுதுகளும் தரைவிழுதுகளும் என்பவை யாவை?

கார்பனேட் படிகங்களான கல் விழுதுகள் கூரையில் தொங்கியும் தரையில் நிலைத்தும் காணப்படும். இக்காட்சி சுண்ணாம்புக் கல்குகையில் காணப்படும்.

177. நவச்சாரம் என்பது என்ன?

அம்மோனியம் குளோரைடு ஈயம்பூசவும் சாயத் தொழிலிலும் பயன்படுவது.

178. சேர்க்கை இழைகள் என்பவை யாவை?

தொகுப்பிழைகள். எ-டு நைலான், பிவிசி. 178. பச்சை மாணிக்கம் என்றால் என்ன?

கடினமான உயர்ந்த வகைக்கல்.

180. ஜேவிலி நீரின் பயன்கள் யாவை?

பொட்டாசியம் அய்ப்போகுளோரைடு சேர்ந்த கரைசல். வெளுக்கவும் தொற்றுநீக்கியாகவும் பயன்படுவது.

181. நீலமணிக்கல் என்பது யாது?

நீலகுருந்தக்கல், ஒளி ஊடுருவக் கூடியது. விலை உயர்ந்த கல்.

182. மாணிக்கக்கல் (கார்னட்) என்பது யாது? பயன் யாது?

இயற்கையில் கிடைப்பது, மென்மையானது, சிலிக்கன் உள்ளது. தேய்ப்புப் பொருள். கண்ணாடித் தட்டுகளை மெருகேற்றப் பயன்படுவது.

183. ஜெர்மானியம் என்றால் என்ன? பயன் யாது?

சிலிகனை விட வீறுள்ள அரிய உலோகம். உலோகக் கலவைகள், கண்ணாடி, அரைகுறைக் கடத்திகள் ஆகியவற்றில் பயன்படுவது.

184. லூயிசைட் என்பது என்ன? பயன் யாது?

யூ.எஸ். லூயி அமெரிக்க வேதியியலர். இவர் பெயரால் அமைந்தது இந்த லூயிசைட் கொப்புள வடிவ நீர்மம். ஆர்சைன் வழிப்பொருள். வேதிப் போரில் பயன்படுவது.

185. விலங்குக்கரி என்றால் என்ன?

கரியும் (10%) கனிம உப்பும் (90%) சேர்ந்தது. நிறம்நீக்கி.

186. அனிசல்டிகைடு என்றால் என்ன?

எண்ணெய் போன்ற நீர்மம். நிறமற்றது.

187. இதன் பயன்கள் யாவை?

ஒப்பனைப் பொருள்களிலும் நறுமணப் பொருள்களிலும் பயன்படுவது.

188. கேசியஸ் ஊதா என்றால் என்ன?

வெள்ளியம் (II) குளோரைடு கரைசலுடன் பொன் (I) குளோரைடு கரைசலைச் சேர்க்கப் பொன் ஒடுக்கமடைந்து ஆழ்ந்த ஊதா நிறத்தில் கூழ்மப் பொன்னும் வெள்ளிய (IV) ஆக்சைடு கூழ்மமும் சேர்ந்த கலவை கிடைக்கும். இதுவே கேசியஸ் ஊதா. 189. இதன் பயன்கள் யாவை?

1. கருஞ்சிவப்புக் கண்ணாடிகள் செய்ய.

2. உயர்வகைப் பீங்கான் பாண்டங்கள் செய்ய.

190. உலோகத்திற்கும் அலோகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?

பாதரசத்தைத் தவிர ஏனைய எல்லா உலோகங்களும் திண்மப் பொருள்களே. அலோகங்கள் திண்ம, நீர்ம, வளி நிலைகளில் உள்ளன. உலோகங்கள் மின்கடத்திகள். அலோகங்களில் கரி, கிராபைட் மட்டுமே மின்சாரத்தைக் கடத்தும். முன்னவை நேரயனிகளையும், பின்னவை எதிரயனிகளையும் உண்டாக்குபவை.

191. நைட்ரிக் ஆக்சைடு ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

டாக்டர் பர்ச்காட் அமெரிக்கா, டாக்டர் இக்னாரோ, லாஸ்ஏஞ்சல்ஸ்; டாக்டர் பெரிட்முராட், அமெரிக்கா: 1998.

192. புத்தெஃகு என்றால் என்ன?

புதிய எஃகு, புதிய தலைமுறையைச் சார்ந்தது. மீஉயர் வலுவுள்ளது. நிக்கல் அடிப்படையில் அமைந்தது. கரி மிகக் குறைவு. ஏவுகனை உயர்த்தி உந்திகளை இலேசாக்கும். குறிப்பாக, ஏவுகணை உந்தி உறைகள் செய்யப் பயன்படுவது.