அறிவுக் கதைகள்/குளிர்காய நேரமில்லை
ஒரு பேராசை கொண்ட மன்னன் தன் நாட்டைவிட பிற நாடுகளையும் பிடித்து ஆளவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தான். அவன் நாள்தோறும் மாறுவேடம் கொண்டு காலை 4 மணிமுதல் 8 மணிவரை தன் நகரைச் சுற்றிப்பார்க்கும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தான்.
ஒருநாள் அதிகாலையில் சருகு அரித்துக் கொண்டிருந்த ஒரு கிழவியைக் கண்டு, “பாட்டி காட்டி! என்ன செய்கிறாய்” என்று கேட்டான் அரசன். கிழவி, குளிர் காய சருகு அரிக்கிறேன்” என்றாள். அதற்கு மன்னன் “இதுவரை எவ்வளவு சருகு அரித்திருக்கிறாய்? என்று கேட்டான். கிழவி இதுவரை “42 மூட்டை” என்றாள். மன்னன் “நானும் 20 நாட்களாகப் பார்க்கிறேன். காலமெல்லாம் நீ சருகு அரித்துக் கொண்டிருக்கிறாயே தவிர, ஒருநாளாகிலும் நீ குளிர்காய்வதை நான் பார்க்கவில்லையே!” என்றான். கிழவி, சருகு அரிக்கவே. எனக்கு நேரம் போதவில்லையே குளிர் காய்வதற்கு. எனக்கு ஏது நேரம்?” என்று கேட்டாள்.
மன்னன் சிந்திக்கத் தொடங்கினான். காலமெல்லாம் பொருளைத் தேடித் தேடி பொருளை சேர்த்து வைக்க மக்கள் முயற்சிக்கிறார்களே தவிர சேர்த்துவைத்த பொருளில் சிறிதுகூட அனுபவிக்காமல் மேலும் மேலும் சேர்த்துக்கொண்டே சாகிறார்களே என வருந்தினான். சருகு அரிக்க நேரமின்றி தீக்காய நேரமில்லாத் தன்மை தன்நாட்டு மக்களிடம் இருப்பது கண்டு மன்னன் மேலும் வருந்தினான். வருந்தி என்ன செய்ய? மன்னனின் கதையும் இதுதானே?
தன் ஆட்சியில் இருக்கும் நாட்டை செம்மைப்படுத்தி திருத்தி ஆளவேண்டும் என்று எண்ணாமல், மேலும், மேலும் நாடுபிடிக்க பேராசை கொண்டு முயல்வது. அவினாலும் அரிய முடிவதில்லை. இப்படித்தான் பலரும். இதுதான் உலகம்.