அறிவுக் கதைகள்/மறதி
ஒரு பெரியவர் ரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்தார். பயணச்சீட்டு பரிசோதகர் எல்லோரிடமும் கேட்டு சரிபார்த்து விட்டு இவரிடமும் வந்து பயணச்சீட்டு கேட்டார்.
இவர் தன் சட்டைப்பையைப் பார்த்துவிட்டு பணப் பையையும் பார்த்துவிட்டு கைப்பையையும் பெட்டியையும் பார்த்துத் தேடிக் கொண்டே இருந்தார். பயணச்சீட்டை சரிபார்ப்பவர் இவரின் தோற்றத்தைப் பார்த்து, “பெரியவர் பயணச்சீட்டைக் கட்டாயம் வாங்கியிருப்பார். வைத்த இடம் தெரியாமல் தேடிக்கொண்டே இருக்கிறார் என்றெண்ணி “பெரியவரே, பரவாயில்லை; நீங்கள் துன்பப் படவேண்டாம், அமைதியாக இருங்கள்.” என்று சொல்லிவிட்டு அடுத்தப் பெட்டிக்குப் போய்விட்டார்.
சிறிதுநேரம் கழித்து பயணச்சீட்டை சரி பார்ப்பவர் அந்தவழியாக வரும்போது, பெரியவர் மறுபடியும் தேடிக் கொண்டிருப்பதைக் கண்டு, “பெரியவரே, நான் தான் துன்பப்படவேண்டாம் கம்மாயிருங்கள் என்று சொன்னேனே! மறுபடியும் ஏன் அச்சீட்டை தேடிக் கொண்டே யிருக்கிறீர்கள்” என்று கேட்டார். அதற்குப் பெரியவர்.
நான் எந்த ஊருக்குப் போகிறேன் என்பதை அந்தப் பயணச்சீட்டைப் பார்த்தால்தான் தெரிந்துகொள்ள முடியும் என்று கடுமையாகக் கூறினார்.
மறதி எல்லோருக்கும் இருக்கலாம். ஆனால் இவ்வளவு பெரிய மறதி எவருக்கும் இருத்தல் கூடாது.