அறிவுக் கதைகள்/தென்னை மரத்தில் புல் பிடுங்கியது
ஒருவன் அயலான் வீட்டுத் தென்னந் தோப்பில் தேங்காய் பறிக்க ஏறிக்கொண்டிருந்தான். இதைத் தோப்புக்காரன் பார்த்துவிட்டான்.
தென்னைமரப் பக்கத்தில் தோப்புக்காரன் வருவதைக் கண்ட திருடன் தேங்காய் பறிக்காமல் கீழே இறங்கி விட்டான்.
தோப்புக்காரன் கேட்டான், “எதற்காக என் மரத்தின் மீது ஏறினாய்?” என்று.
திருடன் சொன்னான், “கன்றுக்குட்டிக்குப் புல் பிடுங்க.” என்று.
தென்னை மரத்திலா புல் இருக்கும்? என்று தோப்புக் காரன் கேட்டான்.
“இல்லாமல் இருப்பதைக் கண்டுதான் இறங்கி விட்டேனே” என்று பதில் சொல்லிப் போய்விட்டான். தென்னை மரத்தில் ஏறியவன்.
இப்படியும் சில திருடர்கள். அவர்கள் தங்கள் திறமையை செயலில் காட்டுவது மட்டுமல்ல; பேச்சிலும் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.