அறிவுக் கதைகள்/நண்பனின் ஆலோசனை
ஒருவன், தன் நண்பன் ஒருவனிடம் சென்று “எனக்கு என் தாய்தந்தையர் இரண்டு பெண்களைப் பார்த்து முடிவுசெய்து, என் விருப்பத்தைக் கேட்கிறார்கள். அதில் ஒரு பெண் அழகு. படிப்பு சிறிது உண்டு. நல்ல குணம் உள்ள பெண். ஆனால் பரம ஏழை.
“மற்றொரு பெண் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண். அக்குடும்பத்தில் ஆண் குழந்தை இல்லாததால் அவ்வளவு சொத்தும் அந்தப் பெண்ணுக்குத் தான் சேரும். ஆனால் அழகு சிறிது குறைவு என்று கூறி என் விருப்பத்தைக் கேட்கிறார்கள். எனக்கு மூளை கலங்குகிறது. இந்த இரண்டு பெண்களில் நான் எந்தப் பெண்ணை மணக்கலாம்? ஒருநல்ல யோசனை சொல்” என்று கேட்டான்.
அதற்கு அவன் நண்பன் “பணம் இன்றைக்கு வரும் போகும். அது நிலைத்தது அல்ல. வாழ்நாள் முழுதும் வருகின்ற மனைவிதான் உனக்குத் துணையாக இருந்தாக வேண்டும். பெண் ஏழையாக இருந்தாலும் குணம், அழகு இருப்பதால் அப்பெண்ணையே மணந்துகொள்” என்று கூறினான்.
அவன் நண்பனுக்கு நன்றி சொல்லிவிட்டு. திரும்பும் பொது நண்பன் திரும்ப அவனை அழைத்து,
“ஏதோ ஒரு பணக்காரவீட்டுப் பெண் என்று சொன்னாயே! அந்தப் பெண்ணின் முகவரியை எனக்குக் கொடுத்துவிட்டுப் போ” என்றான்.
இப்படியும் சில நண்பர்கள் தன்னலங்கொண்டு, ஆலோசனை கூறுவதும் உண்டு என்பதை நாம் அறிந்து கொள்வது நல்லது.