அறிவுக் கதைகள்/நரியும் பூனையும்
காட்டில் அலைந்து திரிகிறது நரி, ஒரு சமயம் நகரத்துக்கு வந்து, ஒரு பூனையைக் கண்டு அதனுடன் நட்புக் கொண்டது.
நட்பு முற்றவே ஒருநாள் நரி பூனையைக் காட்டுக்கு அழைத்து, முயல்கறி படைத்து விருந்து வைத்தது.
சுவையாக விருந்துண்ட மகிழ்ச்சியில் பூனை நரியைப் புகழ்ந்து ஆடிக் களிப்புற்றது.
மற்றொருநாள் பூனை நரியை நகரத்திற்குள் விருந்துக்கு அழைத்தது. நகரத்திற்குள் வர நரி முதலில் தயங்கினாலும், பூனை கூறிய ஆட்டு இறைச்சியைச் சுவைக்கும் ஆசையால் ஒப்புக்கொண்டது. பூனையும் நரியைத் தன்னுடன் மெத்தைக்கு மெத்தை தாவச் செய்து அழைத்துச் சென்று ஒரு வீட்டு மாடியில் விருந்து படைத்தது. வயிறார உண்ட நரி, முன்பு பூனை செய்ததைப் போல்பாட ஆரம்பித்தது.
அதைக்கண்டு பயந்த பூனை, “பாடாதே! பாடினால் நம் இருவருக்கும் ஆபத்து” என்று சொல்லியும் கேளாமல் நரி ஊளையிடவே, வீட்டுக்காரர் வந்து உலக்கையால் தாக்கி, நரியைக் கொன்று குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்தார். பூனை தப்பி ஓடிவிட்டது.
காட்டில் தம் நண்பனைக் காணாத நரிகள் ஒன்றுகூடி இந்த நரியைத் தேடி வந்தன. செய்தியைக் கேள்விப் பட்டுக் குப்பைத் தொட்டியில் கிடந்த நரியின் பிணத்தைக் கண்டு அழுதன: அலறின.
அவற்றுள் வயதான கிழ நரி ஒன்று, “நாம் இனி அழுது என்ன பயன்? இது எப்படி நடந்தது. என்று சிந்திக்க வேண்டாமா?” என்றது. அப்போது ஒரு நரி “ஆமாம், கூடாதாருடன் கூடலாமா?” என்றது. மற்றொரு நரி கேட்டது “கூடாதாருடன் கூடினாலும் கூடங்கள் மாடங்கள் ஏறலாமா?” என்று. மூன்றாவது நரி “கூடங்கள் மாடங்கள் ஏறினாலும் இராகங்கள் சங்கீதங்கள் இழுக்கலாமா” என்றது. கடைசியாகக் கிழநரி “ராகங்கள் சங்கீதங்கள் இழுத்ததனால்தான் தாளங்கள் தப்புகள் நடந்துள்ளன” என்று கூறியது.
இப்போது எல்லா நரிகளும் உண்மையை உணர்ந்து, “நாமும் இப்படிப் போனால் நம் கதியும் இப்படித்தான் முடியும்” என்று தமக்குள்ளேயே சொல்லிக்கொண்டு, காட்டை நோக்கி ஒட்டம் பிடித்தன.