அறிவுக் கதைகள்/பனைமரமும் ஒணாங்கொடியும்

22. பனைமரமும் ஒணாங்கொடியும்

ஐப்பசி கார்த்திகை அடைமழை பெய்து ஒய்ந்தது. அடுந்து மார்கழியில், ஓணான் கொடி ஒன்று முளைத்த வேகத்தில் பக்கத்திலுள்ள பனைமரத்தின்மேல் பற்றிப் படர்ந்து வளைந்து வளைந்து மேலே சென்று ஓங்கிப் படர்ந்தது.

தை மாதத்தில், பனைமரத்து மட்டைகளையும் ஒரு சுற்றுச்சுற்றி மேலும் வளைந்து வளர்ந்து தொங்கியது. அப்போது அது பனைமரத்தைப் பார்த்து,

“ஏ—பனைமரமே! பனைபரமே 25 வருடமாக நீ என்ன வளர்ந்திருக்கிறாய்? என்னைப்பார். இருபத்தைந்து நாளிலேயே உனக்கு மேலே வளர்ந்துவிட்டேன்” என்று எக்காளமிட்டது.

ஒணாங் கொடியின் செருக்கைக் கண்ட பனைமரம், எதுவும் சொல்லாமல் மனத்திற்குள் சிரித்துக்கொண்டு சும்மாயிருந்துவிட்டது.

அடுத்து வந்த பங்குனி சித்திரை மாதங்களில் ஒணாங்கொடி வாடிப்போய்த் தலைசாய்ந்து கீழே விழத் தொடங்கியது. கடைசியில் பனைமரத்தை நிமிர்ந்து கூடப் பார்க்க முடியாமல், இருந்த இடம் தெரியாமல் அழிந்து போயிற்று.

இதைப்பற்றிச் சிறிதும் கவலையில்லாமல் முன் போலவே நிமிர்ந்து நின்றுகொண்டிருந்தது பனைமரம்.

“ஆற்றலும் அறிவும் உடையவர் எப்போதும் ஒரே தன்மையாக இருப்பர். மற்றவர் எப்படி விரைந்து வளர்கிறார்களோ, அப்படியே தளர்வர்” என்று எண்ணித் தான் பனைமரம் அப்போது மனதுக்குள் சிரித்ததோ?

இதிலிருந்து, அற்பர் வாழ்வு அவ்வளவுதான் என்று மட்டும் நமக்குப் புரிகிறது.